பூமி காணா தேவன் நீ... – 5
“மிசஸ்.ரவீனா வாங்க...” என மகப்பேறு மருத்துவமனையின்
காத்திருப்போர் அறையில் செவிலியின் கட்டளை பிறக்க, மென்மையாக தன் மேடிட்ட வயிற்றைப் பிடித்தவாறே எழுந்து
சென்றாள் அவள்.
அவளை பரிசோதித்த மருத்துவர், “ரவீனா... இருபத்தியொரு வாரத்துக்கு தேவையான வளர்ச்சி
பேபிகிட்டே இருக்குது... ரொம்ப ஹெல்த்தியா இருக்கிறாங்க... இப்போ கடைபிடிக்கிற
முறைகளையே கடைபிடியுங்க... அதுதான் ரெண்டு பேருக்குமே நல்லது...” என புன்னகையுடன்
தெரிவிக்க, “எல்லா விஷயத்தையும் பார்த்து பார்த்துதான்
பண்றேன் டாக்டர்... முடிஞ்ச அளவுக்கு ஃப்ரூட்ஸ், ஜூஸ்ன்னு
அதிகமாவே எடுத்துக்கறேன்... நடக்கறேன், எக்ஸர்சைஸ் பண்றேன், மியூஸிக் கேக்கறேன்... நெகட்டிவ் தாட்ஸ் அண்டவே விடுறதில்ல... என்
குழந்தை ஹாப்பியா இருக்கணும்... அதுதான் எனக்கு வேணும்...” என்றாள் ரவீனா.
“இந்த குழந்தையோட நலனில் எவ்ளோ அக்கறை காட்டுறீங்கன்னு
புரியுதும்மா... அவங்க அப்பாவும் கூட இருந்திருந்தா இன்னும் நல்லா
இருந்திருக்கும்... கடவுள் நல்லவங்களைத்தான் சீக்கிரமா அழைச்சுக்குவார் போல...” என
அவர் தன் ஆதங்கத்தை உதிர்க்க,
“டாக்டர்...” என கண்களை உருட்டினாள் கண்டிக்கும் தொனியில்.
“அவர் செத்துட்டார், இந்த உலகத்தை விட்டுப் போயிட்டாருன்னு சொல்லாதீங்கன்னு எத்தனையோ தடவை
சொல்லிட்டேன்... அவர் இங்கேதான் இருக்கிறார், என்னோடவேதான்
இருக்கிறார்...” என தீர்க்கமாக உரைத்தவள், “நெகட்டிவ்வான
விஷயங்களை யோசிக்காதீங்கன்னு சொல்லிட்டு நீங்களே நெகட்டிவா பேசினா என்ன
சொல்றதுன்னு தெரியல டாக்டர்...” என அங்கலாய்ப்புடன் எழுந்துவிட்டாள்.
“இல்லம்மா... அதுவந்து... சாரி...” என அவர் வருத்தத்துடன்
பேச, “இட்ஸ் ஓகே டாக்டர்... இனியாவது மனசிலே
பதிய வச்சுக்கோங்க... அவர் என்னோடதான் இருக்கிறார்... I am always there for youன்னு கொடுத்த வாக்கைமீறி எங்கேயும்
போய்டமாட்டார்...” என்றவள் அவ்விடம்விட்டு புறப்பட்டாள்.
அடுத்தடுத்த தினங்களில் அலுவலக வேலைகள் அவளை ஆக்கிரமித்துக்
கொள்ள, ஒருபுறம் பணிகளை கவனித்துக் கொள்வது
மறுபுறம் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான ஆகாரங்களை சரிவர எடுத்துக் கொள்வது
என அவளது வாழ்க்கையோட்டம் அமைந்துபோனது.
இதற்கு நேர்மாறாக சுரேஷோ ரவீனாவை குறித்ததான நினைவுகளில்
சிக்கித்தவித்தான். “ச்சே... ரவீ எவ்ளோ நல்ல பொண்ணு... யாருக்கும் எந்த கெடுதலும்
நினைக்காதவ.. அவளுக்குப் போய் இப்படியொரு நிலைமை ஆகிடுச்சே!” என்னும் நினைவே அவனது
இரவுகளின் உறக்கத்தைக் காவுவாங்கியிருந்தது.
கண்களின் கீழே கருவளையம் படருமளவிற்கு தூக்கத்தைத்
தொலைத்துவிட்டிருந்தவன்,
பெயரளவுக்காவது அவளுக்கு ஆறுதல் மொழிந்துவிடும் நோக்கத்தோடு கடந்த முறை அழைத்த
அவளது எண்ணை அலைபேசியில் தேடி அவளுக்கு அழைத்தான்.
பணியில் மூழ்கியிருந்தவள் அவனது அழைப்பை ஏற்கவில்லை.
“ஒருவேளை என்னை அவாய்ட் பண்றாளோ? என்னைப்
பத்தின உண்மை தெரிஞ்சதால குற்ற உணர்ச்சியில இருக்கிறாளோ??” என
பலவாறாக சிந்தனை சுரேஷிற்குள் சிறகடித்தது.
மீண்டுமொரு முறை அழைத்துப் பார்க்கலாமா என்னும் யோசனையுடன்
அவளது எண்ணிற்கு தயக்கத்துடன் அழைத்தான்.
அழைப்பை நிராகரித்தவள், “அத்தான்... கொஞ்சம் வேலையா இருக்கிறேன்.. வில் டெக்ஸ்ட் யூ லேட்டர்...”
என அனுப்பிய பின்னர்தான் சற்றே ஆசுவாசமாக உணர்ந்தான் சுரேஷ்.
அவள் மாலையில் அழைக்கும்வரை சற்றே பரிதவிப்பாக இருந்தது
அவனுக்கு. “எப்போ கால் பண்ணுவா?? என்னன்னு இதை ஆரம்பிக்கிறது? எடுத்த எடுப்பிலேயே
கேட்டா என்ன நினைப்பா??” என சிந்தனையுடன் நகத்தைக்
கடித்தவாறே அமர்ந்திருந்தவன், “ரவீ காலிங்” என்னும்
அதிர்வில் உயிர்ப்படைந்தான்.
இதயம் ஒருகணம் படபடவென அடித்துக் கொள்ள, கண்களைமூடி தன்னை நிலைப்படுத்திய பின்னர்
அழைப்பை ஏற்றான், “ஹலோ ரவீ...” என.
“ஹான் அத்தான்... சொல்லுங்க... நீங்க கால் பண்றப்போ அவசரமா
ஒரு ரிப்போர்ட் ரெடிபண்ணிட்டு இருந்தேன்...” வெகுசாதாரணமாக ஒலித்தது அவளது குரல்.
இயல்பாகப் பேசியவளை உடைக்க விருப்பமில்லை அவனுக்கு.
கேட்கவந்த வார்த்தைகள் தொண்டைக்குழியிலேயே புதைந்து போயின. “அது வந்தும்மா...” என
சற்றே தடுமாறினான்.
அவளோ இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், “அந்நேரம் ஞாபகம் இருந்திருக்கும், கால் பண்ணியிருப்பீங்க... இப்போ மறந்திருக்கும்.. ஐ கேன்
அண்டர்ஸ்டாண்ட்... நினைவுவர்றப்போ சொல்லுங்க...” என்றுவிட்டாள்.
எதிர்முனையில் சுரேஷ் அமைதியாக இருக்க, ரவீனாதான் தொடர்ந்தாள்.
“இன்னைக்கு எப்படி போச்சுது அத்தான்? ரூமுக்கு வந்தாச்சா?
என்ன டின்னர்?” என அவளாகவே விசாரிக்க,
“இப்போதான்ம்மா வந்தேன்.. இனிதான் வெளியே போய் சாப்பிடணும்...” என்றான் மெலிதான
குரலில்.
“வெளியேபோய் சாப்பிடப் போறீங்களா? ரூம்ல குக் பண்ணலையா?”
“இல்லம்மா... டேர்ன்வச்சு சமைச்சா சண்டை வந்துடும்ன்னு
அவரவருக்கு ஏத்த வகையில் ஆஃபீஸ் கேன்டீன்லேயோ பக்கத்து மெஸ்லேயோ
சாப்பிட்டுப்போம்...”
“ச்சே... இட்ஸ் டூ பேட்... முன்னாடி நீங்க ஸ்டே
பண்ணியிருந்த ரூம்ல டேர்ன் வச்சுத்தானே சமைச்சு சாப்பிடுவீங்க?”
சில வருடங்களுக்கு முந்தைய காரியங்களை அவள் நினைவில்வைத்து
விசாரிக்க, சற்றே தடுமாறினான்
சுரேஷ்.
“அங்கே சூழ்நிலை வேற, இங்கே வேற... கவலைப்படாதேம்மா.. பக்கத்துல இருக்கிற மெஸ்ல வீட்டுல
கிடைக்கிற மாதிரியே ஹைஜீனிக் சாப்பாடு கிடைக்கும்...” என அவன் சுதாரித்துக்கொண்டு
உரைக்க, “கவலைப்படறேனா?? நான் ஏன்
அத்தான் கவலைப்படப் போறேன்?” எனக் கேட்டவள், “உடம்பை பார்த்துக்கோங்க... சொல்லவந்த விஷயம் ஞாபகம் வந்தா சொல்லுங்க...”
என அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.
“ச்சே... ஏன் பேசவேண்டியதை பேசாமலேயே வச்சிட்டேன்? கவலைப்படாதேன்னு எந்த விஷயத்துக்கு
சொல்லணுமோ அதை சொல்லாம லூசுமாதிரி பேசிட்டேன்! இப்போ திரும்ப கால் பண்ணினாலும்
என்னன்னு பேசறது?” என தனக்குள் யோசித்துக் குழம்பிப் போனவன்,
“எதையும் வெளியே காட்டிக்காம ஹாப்பியா இருக்கிறவளை கசப்பான
கடந்தகாலத்தைப் பேசி கலங்க வைக்கக்கூடாது..” என முடிவுசெய்தான்.
அழைப்பைத் துண்டித்தவள், “அவங்களுக்குள்ள ஏதோ டேர்ம்ஸ் சரியில்லைன்னு பிரிஞ்சிட்டாங்க... அதை
கேட்கிறது அநாகரீகம்... ஒருவேளை இவர்கிட்டே நான் நல்லா பேசினா இதையும் ஒரு ஸீனா
க்ரியேட்பண்ணி என்னையே அக்யூஸ் பண்ணுவாங்க மாலதி... சோ வேணாம்.. இப்படியே
டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணிடலாம்... அவசியமான காரியங்கள் தவிர்த்து அவர்கிட்டே
எதுவும் பேசக்கூடாது...” என்பதாக தனக்கு எல்லையை வகுத்தாள்.
அந்த வாரத்தின் இறுதியில் சென்னை சென்ற சுரேஷ் எதேச்சையாக
தன் நண்பனும் ரவீனாவின் பெரியப்பா மகனுமான விக்னேஷை சந்திக்க நேரிட்டது. ஏனோ
அவனைப் பார்த்த மாத்திரத்தில் ரவீனாவின் நினைவுவந்து அவன்மீது கோபம் ஊற்றெடுத்தது
சுரேஷிற்கு.
“மச்சான்... எப்படி இருக்கிற?” என விக்னேஷ் இயல்பாக விசாரிக்க,
“பேசாதேடா...” என்றான் சுரேஷ்.
“என்னாச்சு?” என அவன் புரியாமல் விழிக்க, “நீயெல்லாம் நிஜமாவே என்
ஃப்ரென்ட்தானா? இதுல சொந்தக்காரன் வேற...” என
சலித்துக்கொண்டவன், “ரவீனாவை பார்த்தேன்டா...” என்றான்
உடைந்த குரலில்.
“உன் மகளை தினமும்தானே பார்க்கிற??” என விக்னேஷ் வேண்டுமென்றே புரியாதவன்போல
கேட்க, “ஓவர் ஸ்மார்ட்டா ஆக்ட் பண்ணாதே விக்கி! நான் எந்த
ரவீனாவை பத்தி சொல்றேன்னு உனக்கு தெரியாதா?” என புருவத்தை
நெரித்தான் சுரேஷ்.
“தெரியலையேடா...” என அவன் மீண்டும் தனது நடிப்பைத் தொடர, “ரவீ...” என அழுத்தம்தந்தான் அவனது தோழன்.
“ஓ... ரவீ... என் சித்தப்பா பொண்ணு.. அவளை பார்த்தியா??” என இழுத்தவன்,
“என்ன சொன்னா? எப்படி இருக்கிறா?” என
புதிதாக கேட்பதைப்போல விசாரித்தான்.
“எல்லாம் வெட்டவெளிச்சத்துக்கு வந்ததுக்கு அப்புறம்
நடிக்கவேண்டாம் விக்கி...” என முகத்தில் அதிருப்தியை வெளிப்படுத்திய சுரேஷ், “ஏன்டா என்கிட்டே சொல்லலை??” என ஆதங்கப்பட்டான்.
“சொல்லியிருந்தா மட்டும்??” என்ற விக்னேஷின் கிடுக்கிப்பிடி கேள்வியில் சுரேஷ்
அமைதியாகிவிட, “அவ பெத்தவங்களாலேயே எந்த ஆக்ஷனும் எடுக்க
முடியலடா.. இதிலே நாமெல்லாம் எம்மாத்திரம்??” என வெறுமையான
குரலில் தரையை வெறித்தான் விக்னேஷ்.
“அப்போ அவ்ளோதானாடா?” என சுரேஷின் குரல் சற்றே கம்ம, “அவ்ளோதான்னா??
நீ என்ன கேக்கறன்னு புரியலடா.. புருஷன் செத்துட்டா எல்லாமே
முடிஞ்சதா என்ன? அதைத்தாண்டியும் நிறைய விஷயங்கள்
இருக்குதுடா.. ரவீ ரொம்பவே போல்ட்... எல்லாத்தையும் கடந்து வந்துடுவா.. முக்கியமான
விஷயம் என்னன்னா அவ புருஷன் செத்துட்டான்னு அவ நினைக்கவேயில்லையே!” என அவன்முகம்
நோக்கினான் விக்னேஷ்.
“விக்கி... நான் ஒண்ணு சொல்றேன்... தப்பா நினைச்சுக்காதே!
எனக்கு என்னவோ ரவீயோட போல்ட்நெஸ் ஒருவகை மனப்பிறழ்வா தோணுது... ஐ மீன் அவ மென்டலி
நார்மலா இல்லை... தனக்குள்ள இருக்கிற கவலையை மறைச்சிட்டு வெளியே இயல்பா இருக்கிறதா
காட்டிக்கிறான்னு நினைக்கிறேன்...”
“அப்போ... அவளை பைத்தியம்ன்னு சொல்றியா சுரேஷ்?” அடிக்குரலில் சீறினான்.
“அப்பட்டமா சொல்லலைன்னாலும் இதே நிலை தொடர்ந்தா அவ
அப்படியாகிடுவான்னுதான் தோணுது..”
“பாரு சுரேஷ்.. என் தங்கச்சி ஒண்ணும் எமோஷனலி வீக்
கிடையாது... எல்லாத்தையும் பக்குவமா அப்ரோச் பண்ணி, அக்செப்ட் பண்ணிக்கிற அளவுக்கு பிராட் மைன்டட் கேர்ள்...
உன்னையே உருகி உருகி காதலிச்சவ நீ இன்னொருத்தியை காதலிக்கிறேன்னு தெரிஞ்சதும்
ரொம்ப கேஷுவலா எடுத்துக்கிட்டு விலகிடலையா?? அந்த தடமே
இல்லாத மாதிரிதானே உன்கிட்டே பழகினா??”
“நீ சொல்றது வாஸ்தவம்தான் மச்சான்.. ஆனா ஒருதலைக்காதல்
தோல்விக்கு கணவனோட இறப்புக்கும் வித்தியாசம் இருக்குதுல்ல...”
“என்னளவில் ரெண்டுமே ஒண்ணுதான் சுரேஷ்... எல்லாமே நேசம்தானே?! காதலன்னதும் ஒரு ரேஷியோ, கணவன்னதும் ஒரு ரேஷியோன்னா அன்பைக் காட்டுறாங்க? இல்லையே!
தன்னோட வாழ்க்கையில வர்ற ஆண்மகன்மேலே எல்லா பொண்ணுங்களும் முழுமனசோடதான் அன்பைக்
கொட்டுவாங்க.. இதிலே ரவீயும் விதிவிலக்கில்ல...”
“இப்போ என்னதான் சொல்ல வர்ற விக்கி? ரவீனா போல்ட்,
எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணிக்குவான்னு சொல்றியா? ஓகே, ஃபேஸ் பண்ணிடுவாதான்... அவளோட எதிர்காலம்???”
“என்னடா பைத்தியம் மாதிரி அங்கேயே சுத்தி சுத்தி வர்ற? அவ புருஷன் வர்றதுக்கு முன்னாடி என்ன
குறிக்கோளோட ஓடிட்டு இருந்தாளோ அதே குறிக்கோளோடதான் இப்பவும் ஓடிட்டு இருக்கிறா...
என்ன, கொஞ்ச நாள் துணையா கைகோர்த்துட்டு கூடவே அவன்
வந்தான்.. ஆயுசுக்கும் வருவான்னு எதிர்பார்த்தவன் பாதியிலேயே விதிமுடிஞ்சு
போயிட்டான்.. அதிலே இவளோட தப்பு என்ன இருக்குது? இல்ல இவ
நினைச்சிருந்தா விதியை மாத்தி எழுதியிருக்கத்தான் முடியுமா?? அதையே யோசிச்சு நீயும் குழம்பி, மத்தவங்களையும்
குழப்பாதேடா.. அவ சந்தோஷமாத்தான் இருக்கிறா... நீ உன்னோட பொழைப்பை பாரு...” என
முடித்துவிட்டாலும் விக்னேஷின் மனதில் சுரேஷின் கேள்விகளும் நடவடிக்கைகளும்
தொண்டையில் மீன்முள்ளாக உறுத்தியவாறே இருந்தன.
அவன் ஏன் மீண்டும் மீண்டும் அவளுக்கான எதிர்காலத்தைக்
குறித்து சிந்திக்கிறான், ‘ஏன்
அவள்மீது இத்தனை அக்கறை அவளுக்கு?’ என்னும் கேள்விகளுடன்
உழன்றவனுக்கு இருவருக்கும் இடையிலான பந்தம் நினைவில் வந்துபோனது. ரவீனா சுரேஷை
ஆத்மார்த்தமாக நேசித்ததும் அதை அவன் நிராகரித்ததும் பின்னர் அவனுக்கும்
மாலதிக்குமான நேசத்தை அறிந்தவள் அவனுக்குப் பலவிதங்களில் உதவியதும் நினைவடுக்கில்
உணர்த்த, “ஒருவேளை சுரேஷ் அதையெல்லாம் யோசிச்சிருப்பானோ?
மாலதியோட தனக்கு ஏற்பட்ட வாழ்க்கை சரியா அமையல, ரவீனாவும் வாழ்க்கையை இழந்துட்டு நிக்கிறா... ரெண்டு பேரும் ஏன்
ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல துணையா இருக்கக் கூடாதுன்னு அவனுக்குள்ள எதுவும்
தோணியிருக்குமோ?” என்னும் கேள்வி தொக்கி நின்றது.
தேவன் வருவான்...
2 Comments
Intresting sis ❤️❤️❤️❤️
ReplyDeleteNice ud baby
ReplyDelete