அநீதனின் யவ்வனா – 1
“இனி... இன்னைக்கு அவன் வெயிட் பண்ணின மாதிரி தெரியல... புறப்பட்டு
வா...” என தனது தோழி லவுட் ஸ்பீக்கரில் கத்திக் கொண்டிருக்க, தனது இறுதிநிமிட ஒப்பனையில் தீவிரமாக
இருந்தாள் மானினி @ இனி.
எதிர்முனையில் பதிலேதும் கிட்டாததால், “அடியேய்... நான் பேசுறது கேக்குதா?” என அவளது
தோழியான ஆனந்தி சற்றே அழுத்த, “கேக்குதுடி... கத்தாதே!” என்றாள் பெரிதான அலட்டலின்றி.
“அப்போ ஊம் ஊஹும்ன்னு எதையாவது
ரெஸ்பான்ஸ் பண்ண வேண்டியதுதானே!” என அவள் சலித்துக்கொள்ள, “நீ சொல்றது சரியா இருந்தா
ரெஸ்பான்ஸ் பண்ணலாம்.. உன்னோட கணிப்புதான் தினமும் பொய்யாகிடுதே!” என்றாள் மானினி.
“அவன்தான் தினமும் காலையில எட்டு
மணியானா ‘உள்ளேன் அம்மா’ன்னு ஆஜர் ஆகிடறானே! நான் என்ன சொல்றது? ஆனா இன்னைக்கு
என்னவோ வரமாட்டான்னு தோணுது...” என ஆனந்தி முடிக்கும் முன்னரே, “ஒரு நாள்கூட லீவ் போடாத ஸ்டூடன்ட்
மாதிரின்னு சொல்லிட்டு, இன்னைக்கு வரமாட்டான்னு சொன்னா லாஜிக் இடிக்குதே!” என்றவள், “எங்கேயாவது ஒளிஞ்சு நிற்பான்...
நான் வந்ததும் டான்னு வந்து என்ட்ரி கொடுப்பான்... இதெல்லாம் பார்த்து, அலுத்துப் போச்சுதுடி...” எனப்
பேசியவாறே லவுட் ஸ்பீக்கரில் இருந்த அலைபேசியை அணைத்து காதில் பத்திரப்படுத்திக்
கொண்டு,
கல்லூரிப் பையை தோளில் மாட்டிக் கொண்டாள்.
“இனி... சாப்பிட்டியா??”
“இவன்கிட்டே மல்லுக்கட்டவே எனக்கு எக்ஸ்ட்ரா
நாலு டம்ளர் பால் வேணும்டி.. அதனால இப்போல்லாம் ப்ரேக்ஃபாஸ்ட் ஸ்கிப் பண்றதில்ல...”
எனப் பேசியவாறே மானினி படிகளில் இறங்கிவர, “ஏய்... சாமி கும்பிட்டுட்டு
விபூதி வச்சிட்டுப் போடி...” என சமையலறையில் இருந்தவாறே குரல் கொடுத்தார் அவளது
அன்னை விமலா.
“ம்க்கும்... அது ஒண்ணுதான்
கொறச்சல்...” என தனக்குள் முணுமுணுத்தவள், “என்னைக்கு அவன் என் வாழ்க்கையில
வந்தானோ அன்னைக்கே சாமி கும்பிடுறதை நிறுத்திட்டேன்!” என எரிச்சலுடன்
உரைத்துவிட்டு செருப்பை மாட்டிக்கொண்டு வாசலுக்கு வந்தாள்.
அரண்மனை போல விரிந்திருந்த தனது
மாளிகையின் வளாகத்தில் நான்கு மகிழுந்துகள் நிறுத்தப்பட்டிருக்க, அவற்றைப் பார்த்து பெருமூச்சொன்றை
உதிர்த்தாள். “பைத்தியக்காரன்... சொகுசா வாழ்ந்துட்டு இருந்தவளை பப்ளிக்
ட்ரான்ஸ்போர்ட்ல ட்ராவல் பண்ண வச்சிட்டான்...” எனத் திட்டியவாறே அவர்களது தெருமுனையில்
அமைந்திருந்த பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்கலானாள்.
“இனியாம்மா... பேக்கை என்கிட்டே
கொடுங்கம்மா... நான் கொண்டு வந்து தர்றேன்...” என அவர்களது இல்லத்தில் பணிபுரியும்
ஊழியர் ஒருவர் உதவிக்கு வர, “பரவாயில்ல அங்கிள்.. அன்புக்கு நன்றி! உங்களுக்கு
உண்மையாவே என்மேல அக்கறை இருந்தா உங்க முதலாளிகிட்டே போய் சொல்லுங்க.. சின்னம்மா
ரொம்ப கஷ்டப்படுறாங்க, தண்டனை காலத்தை சீக்கிரமா முடிச்சு விடுங்கன்னு...” என
சற்று காட்டமாகவே உரைத்துவிட்டு நடையின் வேகத்தைக் கூட்டினாள். பின்னே வழக்கமாகச்
செல்லும் 27E
பேருந்தைத் தவறவிட்டுவிட்டால் அடுத்த பேருந்திற்காக அரைமணி நேரத்திற்கும் மேலாக
காத்திருக்க வேண்டுமே! அந்த அரைமணி நேரத்திற்குள் அவன் அரைடஜன் மீட்டர்
நீளத்திற்குள் சினிமாவை எடுத்துவிடுவானே என்னும் பதற்றம் அவளுக்கு!
இவ்விடம் தீரஜ் என குறிப்பிடப்பட்டவன்
மானினியை காதலிக்கும் உரிமையை அதிகாரப்பூர்வமாக அவளது தந்தையிடமிருந்து
பெற்றிருந்தான். ஒரு வருடத்திற்கு அவனுக்கு அவ்வுரிமம் அவனுக்கு வழங்கப்பட, இவளோ கடந்த மூன்று மாதமாக வெகுவாக
நொந்து போயிருந்தாள்.
முதுகலை கணினி அறிவியியல் இரண்டாமாண்டு
படித்துக் கொண்டிருக்கும் மானினியை திருமணம் செய்து கொள்ளப்போகும் தர்ஷனைக்கூட
அனுமதியாமல் காதலித்து தொந்தரவு செய்யும் உரிமை அவனுடையது.
நடுத்தரத்திற்கும் சற்றே குறைவான பொருளாதார
நிலையிலிருந்த குடும்பத்தைச் சேர்ந்தவனான தீரஜ் மிகச்சரியான சந்தர்ப்பத்தில் இவளது
தந்தை சந்திரசேகரிடமிருந்து இச்சலுகையை பெற்றிருந்தான். இவனது சலுகைக்கு நகரின்
பாதி பேர் சாட்சிகளாக மாறியிருக்க, இவளது சலுகைகள் முற்றிலுமாக பறிக்கப்பட்டிருந்தது.
அவளது விருப்பமின்றி தினமொரு
முறையாவது அவளைப் பார்த்துவிடுவான் அவன். தனக்கு சகல உரிமைகள்
கொடுக்கப்பட்டிருந்தாலும் தூரமாக இருந்து அவளைக் கண்களுக்குள் நிரப்பிவிட்டு
அமைதியாகச் சென்றுவிடுவபவன், அவளை எவரேனும் சீண்டினால் சினமுறுவான்.
அவன் எதிரில் வந்தாலே மானினிக்கு
எரிச்சல் மேலிடும்; “இடியட்... பொறுக்கி...” என வாயில் தோன்றிய அத்தனை
வார்த்தைகளாலும் அர்ச்சிப்பாள். அத்தனையும் அவனுக்குத் தெரிந்தாலும் தனது
கொள்கையிலிருந்து விலகாமலும் இவளது தரிசனத்தைப் பெற்றுவிடுவான்.
இன்றும் அதுபோல பேருந்து
நிறுத்தத்திற்கு வந்தவள், சுற்றும் முற்றும் கண்களைச் சுழலவிட, அவன் அவ்விடம் இருப்பதற்கான
தடயமேதும் தென்படவில்லை.
“நான்தான் சொன்னேன்ல.. அவன்
வரலைன்னு...” என ஆனந்தி முடிப்பதற்குள், எதிரில் அமைந்திருந்த கடையில் அமர்ந்திருந்தான் அவன்.
“ச்சே... சொல்லி வாயை
மூடுறதுக்குள்ள வந்துடறான்டி.. ஒருவேளை என் பேக்ல எதுவும் ட்ராக்கர் ஃபிக்ஸ்
பண்ணியிருப்பானோ?” என கேள்வியாகப் பார்த்த ஆனந்தியின் தலையில் தட்டிய மானினி
எரிச்சலுடன் அங்கிருந்த இருக்கையில் அமர, அவளைப் பார்த்தவாறே இருந்தவன் மெலிதாகப் புன்னகைத்தான்.
“இவன் சிரிக்கலைன்னு யார் அழுதா?
என் சிரிப்பை மொத்தமா களவாடிட்டான்... திருடன்...” என அவன் பார்க்கும்விதமாகவே
பேசினாள் இவள்.
இவளது உதட்டசைவை கவனித்துவிட்டவன், கையில் வைத்திருந்த தேநீர் டம்ளரை படாரென
தரையில் வீசிவிட்டு ஆவேசத்துடன் எழுந்துவிட்டான்.
“ஏய்... வார்த்தையைப் பார்த்துப்
பேசுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்... இப்போ பாரு.. வேகமா நம்மை நோக்கி வர்றான்டி...
போச்சு.. போச்சு... கண்டிப்பா பிரச்சனை பண்ணப் போறான்... அன்னைக்கே எங்கம்மா
சொன்னாங்க... மானினியோட பேசாத, தேவையில்லாத பிரச்சனைன்னு...” என ஆனந்தி
பதட்டத்தில் புலம்பித் தள்ள, “ஆத்தா! கொஞ்ச நேரம் அமைதியா இரு... அவன் உன்னை எதுவும்
பண்ணமாட்டான்... நான் பார்த்துக்கறேன்...” என அவளை அடக்கிவிட்டு திடமாக நின்றாள்
மானினி.
விரைந்து அருகே வந்தவன், “ஹே... என்ன சொன்ன? திரும்ப
சொல்லு..” என சற்றே சீற்றத்துடன் வினவ, இவளோ பதில் மொழியாமல் முகத்தைத் திருப்பினாள்.
“உன்னைத்தான் கேக்கறேன்.. சொல்லு அம்மு...”
என அவன் பேச,
நெருப்பில் நிற்பதைப் போல உணர்ந்தாள் அவள்.
“அம்முன்னு சொல்லாதே! இர்ரிடேட்
ஆகுது... உன்னைப் பார்க்கவே பிடிக்கலை, இதிலே நீ வைக்கிற நிக்நேம் வேற...” எனக் கத்திவிட உதடுதுடித்தது.
இருப்பினும் அவனிடம் வாக்குவாதம் செய்ய விரும்பாதவள் அமைதியாக வேறுபுறம்
பார்த்தவாறே நின்றிருந்தாள்.
“சிஸ்டர்...” என ஆனந்தியை விளிக்க,
“ஹையோ நானில்ல...” என இரண்டு இருக்கைகள் நகர்ந்து அமர்ந்துவிட்டாள் ஆனந்தி.
“பாரு அம்மு... என்னை என்ன
வேணும்ன்னாலும் சொல்லி திட்டு... திருடன்னு சொல்லி திட்டாதே! ஆத்திரமா வருது! நம்ம
கல்யாணத்துக்கு அப்புறமா திட்டிக்கலாம், ஏன்னா நான்தான் அப்போ உன்னோட மனசைத் திருடிடுவேனே!” என
அவன் முடிப்பதற்குள் சிரிப்பை அடக்கமாட்டாமல் சத்தமாக சிரித்துவிட்டாள் இவள்.
அவனது ஆத்மார்த்தமான கூற்றைக்
கேலிசெய்த மாத்திரத்தில் அவனுக்கு சற்றே எரிச்சல் மண்டியது. “எனக்கும் மத்தவங்க
மாதிரி டார்ச்சர் பண்ணி, டாக்ஸிக்கா நடந்துக்க தெரியும்... குறிப்பிட்ட ஸ்பேஸ் கொடுத்து, டீசன்டா நடந்துக்கறேன்னா அதுக்கான
மரியாதையை காப்பாத்திக்கோ! நான் இறங்கினா நீ தாங்கமாட்ட!” என எச்சரிக்கும்
தொனியில் பேசிவிட்டு தீரஜ் எழுந்து சென்றுவிட, கேலியாக இதழ்வளைத்தவாறே
பெருமூச்சுவிட்டாள் மானினி.
“மனசிலே ரொமான்டிக் ஹீரோன்னு
நெனைப்பு.. மனசைத் திருடுவாராம்... இடியட்...” என நொடித்துக் கொண்டவள், “உண்மையான நண்பனை ஆபத்தில் அறி!’ன்னு
சொன்னது சரியாத்தான் இருக்குது...” என ஆனந்தியை முறைத்தாள்.
“இல்லடி... எனக்கு டக்குன்னு பயம்
வந்துடுச்சு...” என அவள் ஏதோ கூற முற்பட, “நீ ஒண்ணும் சொல்ல வேணாம் ஆத்தா... பஸ் வருது..
புறப்படலாம்...” என பையைத் தூக்கிக் கொண்டு எழுந்தாள்.
வகுப்பறையில் அவளது முகம் சற்றே
கறுத்திருப்பதைக் கண்ணுற்ற அவளது சீனியரும் கல்லூரியின் பேராசிரியருமான தீபன்
அவளைத் தனியே அழைத்தான்.
“இனி... அவன் ரொம்ப டார்ச்சர்
பண்றானா? போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ண வேண்டியதுதானே?! என் ஃபேமிலி ஃப்ரென்ட்
ஒருத்தர் எஸ்ஐயா இருக்கிறார்.. அவர்கிட்டே சொல்லுவோமா? இல்லைன்னா லீகலா வேற ஏதாவது
மூவ் பண்ணுவோமா?” என அக்கறையுடன் விசாரிக்க, “இரணியன் வாங்கின வரம் மாதிரி இவன்தான்
தனக்கு சேதாரம் இல்லாம எல்லாத்தையும் சேர்த்துட்டானே!” என அங்கலாய்த்தாள் மானினி.
“அதுக்காக அப்படியே விட்டுடப்
போறியா? இதெல்லாம் சட்டப்படி தப்பு தெரியுமா? விருப்பமில்லாத பொண்ணை டார்ச்சர் பண்றான்...
ஒரு பொண்ணை பதினாலு நிமிஷத்துக்கு மேல பார்த்தாலே அது தப்புன்னு ஒரு அறிவிப்பு
வந்துச்சு... மறந்துட்டியா?” என அவன்
கேட்க, “இன்னும் ஒன்பது மாதம்தானே?! கண்ணை மூடித் திறக்கிறதுக்குள்ள
முடிஞ்சிடும்... விட்டுத் தொலைங்க... அதுக்கு அப்புறம் நான் இருக்கிற திசை பக்கம்கூட
தலை வச்சுப் படுக்க மாட்டான்...” என்றாள் உறுதியாக.
“நினைப்பதால் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை” என எவரோ ஒருவரது அலைபேசியில் பாடல் ஒலிக்க, அதைப்
பொருட்படுத்தாமல் வகுப்பிற்குச் சென்றவள், கல்லூரி முடித்து பேருந்து
நிறுத்தத்திற்கு வர, அங்கே
அவளுக்காகக் காத்திருந்தான் தீரஜ்.
தோழிகளுடன் தூரத்தில் வருகையிலே
அவனைக் கவனித்துவிட்டனர் அவளது தோழிகள். “இனி... இனி நீ செத்த!” என அவர்கள் கோரஸ்
பாட, “என்னடி?” என சற்றே எரிச்சலுற்றாள்
மங்கையவள்.
“அங்கே பாரு... ஹீரோ சாரு உனக்காக
பைக்ல வெயிட்டிங்... அவுட்டிங் அழைச்சிட்டுப் போறேன்னு அடம்பிடிச்சாலும்
ஆச்சரியப்படுறதுக்கில்ல...” என அவர்கள் தங்களது போக்கில் காற்றில் கதையெழுதத்
தொடங்க, சற்றே
அவமானமாக உணர்ந்தவள், வேகமாக
அவனிடம் வந்தாள்.
“பொறுக்கி... அதான் இன்னைக்கு
ஒருதடவை பார்த்துட்டியே! அப்புறம் என்ன? நான் நிம்மதியாவே இருக்கக் கூடாதுல்ல...
எப்படியாவது என் கண்ணு முன்னாடி வந்து உயிரை வாங்கணும்...” என இவள்
மூக்குவிடைக்கப் பேச, அவனோ இவளது
சிவந்த நாசியை ரசனையுடன் பார்த்தவாறே தனது பையிலிருந்த மல்லிகைப்பூவை எடுத்து
நீட்டினான்.
“யூ ப்ளடி...” என கண்கள் சிவக்கப்
பேச, “காலையில கொஞ்சம் கோபமா
நடந்துக்கிட்டேன்... மனசே கேக்கல... அதான் உன்னைப் பார்த்து சாரி சொல்லிட்டு, இதைக் கொடுத்துட்டுப் போகலாம்ன்னு
வந்தேன் அம்மு.. சாரி கோபப்பட்டதுக்கு...” என தண்மையாக உரைத்தவன் அவளது கரத்தில்
பூவை திணித்துவிட்டுச் செல்ல, “என்னடி... உன் வீட்டுக்காரரு காலையில போட்ட சண்டையை
சாயந்தரம் சரி பண்றதுக்கு பூவெல்லாம் வாங்கிட்டு வந்து தந்துட்டுப் போறாரு...
அதுவும் மல்லிகைப் பூ...” என எள்ளலுடன் சூழ்ந்து கொண்டனர் தோழியர்.
அதே எரிச்சலுடன் வீட்டிற்குள்
வந்தவள், வாசலில்
செருப்பை வீசிவிட்டு உள்ளே வந்து, “அப்பாஆஆ...” என உச்சஸ்தாயியில் கத்தினாள்.
அநீதி செய்வான்(ள்)...
ரொம்ப நாள் கழிச்சு ஆன்லைனில் ஆன்கோயிங்
கதை எழுதறேன் மக்களே... எப்படி இருக்குதுன்னு சொன்னா தொடர்ந்து பதிவிட ஊக்கமா
இருக்கும்...
தீரஜ் யாரு, எதுக்காக மானினியை டார்ச்சர்
பண்றான், இவ எதுக்காக இவனை இவ்ளோ வெறுக்கறான்னு போகப் போக தெரிஞ்சிக்கலாம்... கீப்
சப்போர்ட்டிங்... குட் நைட்...
2 Comments
Interesting
ReplyDeleteEnna da ithu oru Varshi thuku love panna allowed aarambam yae ivolo different ah iruku
ReplyDelete