Header Ads Widget

Welcome You all to Ruthitha's KKR family

Kanavu Kadhali's World

To share your valuable comments : kanavukadhali@gmail.com

அன்பே நீ யாரோடா??-7

 


அத்தியாயம்-7

ராமை திமிராய் பார்த்தபடியே, “ஹ்ஹ்ம்.. காதலிக்குறது பெரிசில்ல மவனே.. காதலிய ஆசையாவும் பாத்துக்கிட தெரியணும்ல அருளு..” என பக்கத்தில் நின்றவனின் கன்னம் கிள்ளினான் செல்வா..

“எப்படி காதலிக்குறவனை விரட்டிவிட்டுட்டு அவன் காதலியை நீ ஆசையா பார்த்துக்கிட்டே மாதிரியா?? என்னை ஏம்ல முறைக்குற.. உண்மைய த்தானே சொன்னேன்..” என அருள் கேட்டிட,

“அவனுக்கு முன்னாடி எனக்கு காதலி.. எல்லா உரிமையும் எனக்கு தான் இருக்கு.. அன்னைக்கு மாடியில நின்னு குளிர குளிர கொஞ்சும் போது எனக்கு எரிஞ்சிதுல்ல.. இப்போ அவனுக்கு பத்தி தான் எரியட்டுமே..” என கெத்தலாக கூறியவனோ, “ம்மோவ் அடுப்புல என்ன கொதிக்குது..”என அடுப்பாங்கரையை நோக்கி சென்று விட்டான்..

ராமிற்கு கோபம் கோபமாக வந்தது.. செல்வாவின் விளையாட்டு தான் என்று தெரிந்தாலும் கட்டாயப்படுத்தி செய்திருந்தால் அவள் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என நினைக்கையில் வித்யாவை பார்க்க வேண்டும் என மனது துடித்தது..

“போவும் போது வெறுந்தலையா போனவ இப்போ தலை நிறைய பூவா வார.. அதுவும் மொட்டு மல்லியா இருக்கு.. இவ்ளோ பூவு ஏது??” வாசலிலேயே விசாரணையை தொடங்கிய பார்வதி,

“பூக்கடை பாட்டி..” என்பதற்குள், “அந்த வாயாடி வந்தா.. அவுக புளியந்தோப்புல வேலை நடக்காம்.. கணக்கு வழக்கு பாக்க ஒத்தாசைக்கு கூப்பிட்டா.. போயிட்டு வந்துரு..” என அனுப்பி வைத்தார்..

தோப்பை நெருங்கும் போதே தூரத்தில் ஜோதியோடு ராமும் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டாள். நடையில் வேகத்தை கூட்ட, அதை விட அதிவேகத்தில் வலிய கரமொன்று அவளை பிடித்து இழுத்தது..

“பார்டா.. பூவை வச்சதுக்கு பிறவு தான் ஆளு ஜம்முன்னு இருக்க.. பாக்கும் போது அப்படியே தூக்கிட்டு போயி..” என நெருங்கிய செல்வாவை, “ஏய்..” என ஒற்றை முறைப்பில் நிறுத்தினாள்..

“தூக்கிட்டு போயி தாலி கட்டுவேன்னு சொன்னேன்டி.. செல்வான்னாலே சேட்டைக்கார பையன்னு பதிஞ்சு போயி கிடக்கோ..” என தலையில் மெலிதாய் தட்ட, “ஆமா இவரு பெரிய சொப்பனசுந்தரன்.. இவர பத்திலாம் யோசிச்சிட்டே திரியிறாங்களாம்.. வழிய விட்டு நில்லு.. ஜோதிய பாக்க போகணும்..”

“அத்தான் நினைப்பு தூங்க விடாம பண்ண போயி தான தேடி ஓடியாந்துருக்க.. பாரு.. வச்ச பூவுல ஈரம் கூட போவல..” என செல்ல முற்பட்டவளை கரம் பிடித்து இழுத்து நிறுத்தினான்..

“என் கையை விடு..” விடுவிக்க முயன்று கொண்டிருக்க, “அன்னைக்கு உன் காலையே பிடிக்கும் போது சும்மா தானடி இருந்த.. இப்போ கையை பிடிச்சதும் சுடுதோ..” என்றவனை விலுக்கென நிமிர்ந்து பார்த்த வித்யா ஏதும் பேசாமல் கையை உதறி விட்டு நடந்தாள்.

“உனக்கு பூ வச்ச மேட்டர் கட்அவுட் அடிக்காத குறையா தெரிஞ்சு போச்சு.. ராம் பாக்கணும்னு சொன்னதால தான் வர சொன்னேன்..” என ஜோதி முன்னெச்சரித்து விட்டு செல்ல, “ராம்..” என அழைத்தாள்..

“கயல் சொன்னதெல்லாம் உண்மையா விது..” வருத்தமாய் கேட்டான்..

“அது வந்து..” அவளின் தயக்கமே உண்மையை கூறியது..

“என்ன விது இது??” அவனின் குரலில் வருத்தம் மேலிட, “நான் எதிர்பார்க்காத நேரத்துல வச்சிட்டான்.. அதிர்ச்சியில என்ன பண்றதுன்னு தெரியல.. நடந்ததை உன்கிட்ட சொல்லலாம்னா உன்னை எப்படி பாக்குறது??” என்றாள்..

“இதுக்காக தான் விது சொன்னேன்.. ஊருக்கு வர வேணாம்னு.. இப்படி ஏதாவது ஒன்னு செஞ்சிட்டே தான் இருப்பான்..”

“இனி இப்படி நடக்காது ராம்.. நான் இந்த தடவை அப்பா கிட்ட சொல்ல தான் போறேன்.. பாவம்னு ஒவ்வொரு தடவையும் மன்னிச்சு விட விட ஓவரா போறான்.. பெரியவங்க யார்கிட்டயாவது சொன்னா தான் சரியா வருவான்..”

“என்னவோ செய் விது.. அவன் தொல்லை இல்லாம இருந்தா சரி தான்..” அரை மனதோடு கூறிவிட்டு சென்றான்..

“என்னலே இப்படி சொல்லிட்டு அந்த புள்ள.. அவுக அப்பன்கிட்ட போட்டு குடுத்தா உன்னோட சேத்து கூட சுத்துன பாவத்துக்கு என் காதுலயும் ரெண்டு ஓட்டைய போட்டு தூக்கிப்புடுவாரே..” புளியமரத்திற்கு பின்னே நின்று ஒட்டுக்கேட்ட அருள் புலம்ப “அதெல்லாம் பண்ண மாட்டா..”  என்றதில் குழம்பி தலையை சொரிந்தான்..

“ஒரு நேரம் நான் அடி வாங்குனதை பாத்தே செத்துட்டா.. இன்னொரு தடவை அடி வாங்க விட மாட்டா..” என்ற செல்வாவின் உறுதியை உடைத்து தான் பார்த்தாள்..

வீட்டில் தர்மா இருப்பதை தெரிந்து கொண்டு ஓடி சென்று பார்வதியை கட்டிக்கொண்ட வித்யா, “ம்மா, நான் திரும்பவும் ஊருக்கே போயிடுறேன்..” குலுங்க தொடங்கினாள்.. “இப்போ என்ன நடந்துச்சுன்னு ஊரை கூட்டுற அளவுக்கு ஒப்பாரி வச்சு ஊருக்கு போறேங்குற.. இப்பிடி அழுததுக்கு தான் அங்கருந்து கிளம்பி வந்தியாக்கும்.. என்னன்னு சொல்லிட்டு தான் அழுது தொலையேன்..” என பார்வதி கடிந்திட,

“அந்த செல்வா இருக்கான்ல..” என்றதும் தான் தாமதம்.. உட்கார்ந்த இடத்தில் ஷாக் வைத்தது போல பட்டென எழுந்து கொண்டார் தர்மா..

“எங்க போனாலும் பின்னாடியே வந்து தொந்தரவு பண்ணிட்டேன் இருக்கான்ப்பா.. இன்னைக்கு கோவிலுக்கும் வந்துட்டான்.. அங்க இருந்த பூக்கார பாட்டிலாம் என்னை ஒரு மாதிரி பாக்குறாங்க ப்பா..” என தர்மாவை கட்டிக்கொண்டவள்,

“எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலப்பா.. நான் ஊருக்கே போறேன்..” என்றிட, “ஒரு பக்கமும் போக்கூடாது.. இங்கயே இரு.. வெளிய போயிட்டு வாரேன்..” என்ற தர்மா வேட்டியை தூக்கி கட்டிய வேகமே நிச்சயம் பஞ்சாயத்து இருக்கிறது என்றுரைத்தது..

இருட்ட போகும் நேரத்தில் முற்றத்தில் கயிற்று கட்டிலை போட்டு மகனுக்கு காப்பி ஊற்றி கொண்டிருந்தார் கனகம்.. சரட்டென வந்து நின்ற புல்லட்டிலிருந்து இரங்கிய தர்மா நேரே வந்து செல்வாவின் சட்டையை பிடித்து தூக்கினார்..

“யய்யா.. யய்யா.. என்ன பண்ணுதீயரு..” பெத்த மனம் பதற, கைப்பிடியில் நின்றவனோ, “என்ன வாத்தியாரே, உம்ம பக்கம் பஞ்சாயத்துக்கு வர மாட்டேன்னு சொன்னேம்ல.. இப்பிடி வீட்டுக்கு வந்து எற்குமாறு பண்ணுனா என்ன அர்த்தமாம்..” என திமிராகவே கேட்டான்..

இருந்த ஆத்திரத்தில் செவிட்டிலேயே பொட்டென அறைய, தர்மாவின் முறுக்கேறிய உடற்கட்டின் வலிமையில் கட்டில் காலில் சென்று விழுந்தான் செல்வா.. காட்டு வேலையை முடித்து விட்டு திரும்பிய லிங்கம் வீட்டின் முன் கூடியிருந்த கூட்டத்தை கண்டு வேகமாக வர, கீழே விழுந்தவனை தாங்கி கொண்டிருந்தார் கனகம்..

“யம்மா, என் புள்ளைய இந்த அடி அடிக்கும் போது ஊரு சனம் வேடிக்கை பாத்துட்டு கிடக்கே.. என்னன்னு கேக்க நாதியில்லாம போயிட்டோமே.. பாதி உயிரா வந்து கிடந்தவன் இன்னைக்கு காலையில தான திடமா எந்திரிச்சு நடந்தான்.. நான் பெத்த ராசாக்கு தெம்பு வந்துருச்சுன்னு சந்தோசப்பட்டது உனக்கு பொறுக்கலியா மாரியம்மா.. என் புள்ளைய என் கண்ணு முன்னாடியே நாயடி பேயடி வாங்க வச்சு பாக்குறியே..” தர்மாவை எதிர்க்கும் திராணியற்று வாய்ப்பேச்சில் புலம்பிய கனகத்தை, “ம்மா, நீ ச்சும்மா இரு.. நான் பாத்துக்கிடுதேன்..” என ஒதுக்கி விட்டு எழுந்து நின்றான்..

“என்னத்தலே பாப்ப.. வயலுக்கு போன மனுஷன் வந்தா என்னையல்ல பிடிச்சு எகுருவாரு..”

“ம்மோவ்.. செத்த நேரம் வாய மூடிட்டு நில்லு.. இப்பிடி தான் உங்க வீரத்த காட்டிட்டா இந்த வீரா பயந்து அடங்கி ஒடுங்கி நடந்துருவானா என்ன??” என்ற செல்வா அடுத்த அடிக்கு அவரின் கையையே பிடித்திருந்தான்..

அதற்குள் குறுக்கே வந்த லிங்கம், “லேய், கையை விடு.. பெரியவுகளை எதுக்குற அளவுக்கு துணிஞ்சிட்டியோ..” செல்வாவின் கையை தட்டிவிட்டு, “ஐயா, அவன் வெளாட்டுபய.. வயசு கோளாறுல பந்தா பண்ணுதேன்னு ஊருக்குள்ள சுத்திட்டு திரியுதான்.. விஷமம் புடிச்ச பய தான்.. விவகாரமா ஏதும் பண்ணிருக்க மாட்டான்..” என லிங்கம் மகனுக்காக பரிந்து பேசினார்..

செல்வாவும் கனகமும் “பேசுறது நம்ம அப்பாவா??” என்கிற தொனியில் ஒருவரை ஒருவர் ஆச்சரியமாய் பார்த்துக்கொண்டிருக்க, “என் மவ விவகாரத்துல தலையிட கூடாதுன்னு இவனுக்கு சொல்லிருக்கோமா இல்லியா??” கோபமாக கொப்பளித்தார் தர்மா..

அவ்வளவு தான்.. இவ்வளவு நேரம் மகனுக்கு குடைபிடித்த தந்தையின் முகம் அவமானத்தில் அப்படியே கவிழ்ந்து போனது.. “எந்த காலத்துலயும் இவன் கண்ணுல பட்டுற கூடாதுன்னு தான் ஊரை விட்டு தூரமா அனுப்பி வச்சேன்.. ஊர்ல இருந்து வர சொல்லுததுக்கு முன்னாடி ஆயிரந்தடவ உன்கிட்ட கேட்டேன் லிங்கம்.. பிரச்சனை பண்ணுவானான்னு.. என் மவ இருக்க திசை பக்கமே வர விடமாட்டேன்னு நீ வாக்கு குடுத்தா இவன் நிழலாட்டம் பின்னாடியே சுத்திட்டு திரியுதான்..” என தர்மா பேச பேச, லிங்கத்திற்கு சுருக்கென தைத்தது..

மாட்டை கட்டுவதற்காக வைத்திருந்த நைலான் கயிற்றை எடுத்து மகனை வெளுக்க தொடங்கி விட்டார்.. ஒவ்வொரு அடியும் சாட்டையாய் சுழன்று அவனை பதம் பார்த்தது.. தடுக்க முடியாமல் கனகம் தரையில் புரண்டு கதற, சுற்றி நின்ற ஐந்தாறு குடும்பமும் பரிதாபத்தோடு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது..

மூச்சு வாங்க அடித்து முடித்த லிங்கம், “பெத்த புள்ளைய அடக்க தெரியாத நானெல்லாம் வாக்கு குடுத்துருக்க கூடாது.. என்ன மன்னிச்சிருங்க ய்யா” என கையெடுத்து கும்பிட, தர்மா அங்கிருந்து கிளம்பினார்..

ஒரே இரவில் அந்த குடும்பம் மொத்தமாய் உடைந்திருந்தது.. களைத்து போன லிங்கம் திண்ணையிலேயே அமர்ந்து விட கண்ணில் இரண்டு துளி கண்ணீர் சிந்தி கிடந்தது.. மகனை விளாசிய கரங்கள் இன்னும் நடுங்கி கொண்டிருந்தது..

வேலை விஷயமாக தபால் கொடுப்பதற்காக பட்டணம் வரை சென்ற ராம் விஷயம் கேள்விப்பட்டு வீட்டிற்கு சைக்கிளை வேகமாய் அழுத்தினான்.. தோப்பில் மூட்டை கணக்கை முடித்துவிட்டு வந்த அருள் கிழிந்த கோலமாய் கிடந்த வீட்டை கண்டு பதறி போனான்..

அத்தனை அடியையும் வாங்கிக்கொண்டு வெளியேற துடித்த கண்ணீரை விடாபிடியாய் பிடித்து வைத்துக்கொண்டிருந்த செல்வாவின் கைகளை பார்த்து பரிதவித்தான்.. “பெரியம்மா, டப்பால இருக்க மருந்த எடுத்தாங்க.. நேரமாச்சுன்னா காந்தல் கூடும்..” என சட்டையை கழற்ற முற்பட, “ம்ஹும்..” என அடங்கா காளையாக தான் முறுக்கி கொண்டு நின்றான் செல்வா.. அவனுக்குள் வேறேதோ ஓடிக்கொண்டிருந்தது..

இடிந்து போயிருந்த அப்பாவின் அருகே சென்ற ராம், “என்னாச்சுப்பா??” என உடைந்த குரலில் கேட்க, “நீ எங்கேய்யிருந்து ய்யா வார??” என கேட்டார்.. விஷயத்தை கூறவும், “நீயாவது உங்கப்பன் மானத்த காப்பாத்து ராசா.. நாலு பேரு முன்னாடி மரியாதையா நிறுத்து.. இந்த பாவி அத மட்டுந்தாய்யா உன்கிட்ட எதிர்பாத்து கிடக்கேன்.. எப்பாடோ பட்டு உன்ன ஆளாக்கிட்டேன்.. சந்தோசம் ய்யா..” என ஏதேதோ கூறினார் லிங்கம்..

“ப்பா, ஏம்ப்பா இப்படிலாம் பேசுறீங்க??”

“உங்க அப்பனுக்கு வாக்கு குடுக்க தகுதியில்லாம ஆக்கிட்டாங்கய்யா..” லிங்கம் உடைந்து அழுதார் மகனின் கையை பிடித்துக்கொண்டு.. படித்ததில்லை.. பெரிய சம்பாத்தியக்காரருமில்லை.. ஆனால் இதுவரை ஊருக்குள் ஒருத்தர் கூட லிங்கத்தை குற்றம் சொன்னதில்லை.. மற்றவர்கள் முன் பணிந்திருப்பார்.. தலை குனிந்ததில்லை..

சாமான்யன் தான்.. அவருக்கென ஒரு மரியாதை இருந்தது.. அதை தான் தெருவில் போட்டு கொளுத்தியிருந்தான் செல்வா.. “அவமானப்பட்ட இதே இடத்துல தலை நிமிந்து நிப்போம் ப்பா.. அதுக்கு நான் பொறுப்பு..” தவபுதல்வனாய் பொறுப்பேற்ற ராம் செல்வாவின் முகத்தை காணவில்லை..

“நான் போறேன் ம்மா.. ஊருக்கே.. நீங்க இல்லாம சந்தோசமே இல்ல.. ஆனா நிம்மதியா தான் ம்மா இருந்தேன்.. ஆனா இங்க எப்போ பிரச்சனை பண்ணுவான்னு பயந்துட்டே இருக்க வேண்டியதா இருக்கு..” என நடந்த அனைத்தையும் சொல்லி அழுது கொண்டிருந்தாள் வித்யா..

“இதுக்கு தான் தாயி சொல்லுத பேச்ச கேக்கணும்.. பெத்தவ புள்ள கெட்டு போகணும்னா சொல்லுவா.. எல்லாம் நல்லதுக்கு தான் சொல்லுவா.. இனி வெளிய எங்கேயும் போவாத.. வெளிய பாத்தா தான வழிய மறிப்பான்.. உனக்கு என்ன தேவையோ சொல்லு.. உங்கப்பா வாங்கி கொண்டாந்து போடுவாரு.. அத வுட்டுட்டு ஊரை பாக்கேன் தெருவ பாக்கேன்னு போனா பொறுக்கி பின்னாடி தான் வருவான்..” என பார்வதி அறிவுரை வழங்கி கொண்டிருந்தார்..

“எப்பிடி.. மூட்ட பூச்சிக்கு பயந்துக்கிட்டு வீட்ட கொளுத்து கதையா?? என் புள்ள ஏன் வெளிய போவ கூடாது?? இதென்ன ஜெயிலா?? ஒரு தெருவுன்னு வந்தா நாலு வெறி நாயி சுத்த தான் செய்யும்.. அதுக்குன்னு வீட்டுக்குள்ளேயே கிடக்க சொல்லுதியோ... ச்சீ ப்பேன்னு விரட்டிட்டு போறதில்லையா?? கண்ட நாயிக்கும் பயந்துக்கிட்டு என் புள்ளைய வீட்டுக்குள்ள அடைக்க மாட்டேன்..” என்றபடியே வந்த தர்மா மகளை தன் பக்கமாய் அழைத்தார்..

“இங்கேரு பாப்பா, நீ எங்கேயும் போவேனாம்.. அவனை வீட்ல சொல்லி கவனிக்க வேண்டிய விதத்துல கவனிச்சிட்டேன்.. இனி உன் பக்கம் வர மாட்டான்.. மீறி வந்தான்னா பாத்த இடத்துலே கால்ல கிடக்கத கழத்தி சப்புன்னு ஒன்னு வையி.. இன்னும் எத்தன நாளைக்கு பயந்து ஒடுவ.. நின்னு எதுத்து பழகு..” என தந்தையாய் தைரியம் கற்பித்தார்..

அழுத்தமாய் உட்கார்ந்திருந்த செல்வா திடீரென எழுந்து லிங்கத்தின் முன்னே சென்று நின்றான்.. ஆறுதலாய் ராம் அவரின் கையை பிடித்திருக்க, “இப்போ என்ன?? அவரு மவ பின்னாடி போனேன்னு தான வீட்டுக்கு வந்து அசிங்கப்படுத்திட்டு போனாரு.. அதே மவளால அவரு அசிங்கப்பட்டு நிக்கத நான் பாக்கத்தான் போறேன்..” என்றான்..

“லேய்.. இம்புட்டு நடந்துருக்கு.. மறுவடியும் அந்தாளு கிட்டயே போற..” என அருள் உள்ளே நுழைய, “நான் இன்னும் சொல்லி முடிக்கல.. ப்போய், இதுவரைக்கு நீ சப்போர்ட் பண்ணி பேசுனதில்ல.. நானும் உனக்காவன்னு எந்த வம்பையும் செய்யாம விட்டதில்ல.. அந்தாளு முன்னாடி ரெண்டு நிமிஷம் எனக்காவ பேசுனல்ல.. அதுக்காவ சொல்லுதேன்.. இனி அவ பின்னாடி நான் போமாட்டேன்.. இது என் மேல சத்தியம்..” தலையில் அடித்து சத்தியம் செய்தவனின் உறுதி கண்டு மொத்த குடும்பமும் ஆவென வாயை பிளக்க, விஷயமறிந்து ஓடி வந்த கயலின் உதட்டோரத்தில் புன்னகை பூத்தது..   

Post a Comment

1 Comments

  1. Ivan enna ippudi maridan... oru vela ram matterah vachi eathavathu panniruvanooooo

    ReplyDelete