“மச்சான்... உனக்கு சரண்யாவை பிடிக்கும்ல... ஸ்கூல் டேஸ்ல
இருந்தே அவமேல ஒரு கிரஷ் இருக்குதுதானே?!” என குறுகுறுப்புடன் கேட்ட தனது தோழனை
சற்றும் அதிராமல் நோக்கினான் அவன்.
“நீ பெருசா ஷாக்காகாம பார்க்குற பார்வையே பதிலை சொல்லுது....”
என தோழன் தீர்க்கமாக பேசிக்கொண்டிருக்க, அவனோ அன்று காலையில் நிகழ்ந்தவற்றை மனதிற்குள் மீட்டலானான்.
“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா,
கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்...”
“கெட்டிமேளம்... கெட்டிமேளம்....” என்னும் புரோகிதரின் குரலுடன்
மங்கலவாத்தியங்களும் முழங்க, தனது மணிக்கழுத்தில் முடிச்சிடப்பட்ட மங்கலநாணை அதிர்ச்சியுடன்
உற்றுநோக்கியவாறே கண்களை இறுக மூடிக்கொண்டாள் அவள்.
“முருகா... நீதான் என் பொண்ணோட
வாழ்க்கையை சந்தோஷமா அமைச்சுத் தரணும்...” என அவளது அன்னை நன்றியுடன் கைகளைக்
கூப்பி, இறைவனை
நோக்கி ஆனந்தக் கண்ணீர் உகுக்க, “சகுந்தலா... வாங்க... வந்து பசங்களை ஆசீர்வாதம்
பண்ணுங்க...” என அழைத்தார் மணமகனின் அன்னை.
அவரது விளிப்பில் விழிகளைத் திறந்த
சகுந்தலா, “அகல்யா
மேடம்... நான் எப்படி?” என சற்றே தயங்க, “அட! என்ன நீங்க? இன்னமும் பத்தாம்பசலி மாதிரி
யோசிக்கறீங்க! நல்ல மனசோட யார் ஆசீர்வாதம் பண்ணினாலும் அது பசங்களை நல்லா
வச்சிக்கும்... வாங்க...” என வற்புறுத்தி அழைத்த மணமகனின் அன்னையான அகல்யா
சகுந்தலாவை இழுத்துச் சென்று தங்களருகே நிற்க வைத்துக் கொண்டார்.
“சரண்... எழுந்துக்கோப்பா... மருமக
கையைப் பிடிச்சுக்கோ...” என அவனது தந்தை அறிவுறுத்த, சற்று தயக்கத்துடனே அவளது கையைப்
பிடிக்க எத்தனித்தான் அவன். அவளோ அவனுக்கு மட்டும் புரியும்வண்ணம் தனது அதிருப்தியை
வெளிப்படுத்த, “இங்கே
யாரும் உன்னை கம்பெல் பண்ணலை... கேட்கும் போதே வேணாம்ன்னு சொல்லியிருக்கலாம்ல... சும்மா
தியாகி மாதிரி சம்மதிச்சிட்டு, இப்போ வந்து ஸீன் போடவேண்டியது...” என தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டவன், அவளது அனுமதியை எதிர்பாராது
வலக்கரத்தை இறுக்கமாகப் பற்ற, அவளோ எரித்துவிடுவதைப் போல முறைத்தாள்.
“விருப்பமில்லைன்னா வெளிப்படையா
எல்லாருக்கும் தெரியுற மாதிரியே சொல்லு... ‘கையை விடுடா’ன்னு சத்தமாவே கத்து...
எனக்கு எந்த ஆட்சேபனையுமில்ல...” என அவளுக்கு மட்டும் கேட்கும்வண்ணம் கிசுகிசுத்தவன்
பெரியவர்களிடம் மண்டியிட்டு ஆசிபெறலானான். வேறுவழியின்றி அவளுடன் அவனுடன் இணைந்து
ஆசிபெற, அவளை
அணைத்துக் கொண்டு கண்ணீர் உகுத்தார் அவளது அன்னை.
“ரொம்ப சந்தோசம் சாரு! உங்கப்பா
மட்டும் இப்போ இருந்திருந்தா மனநிறைவா ஃபீல் பண்ணியிருப்பாரு... நல்லா இருங்கப்பா!
எப்பவும் இணைபிரியாம இருக்கணும்....” என வாழ்த்தியவாறே தனது புடவை தலைப்பால் கண்களைத்
துடைத்துக் கொண்ட சகுந்தலா, மணமக்களுக்கு திருநீறை நெற்றியில் பூசினார்.
எஞ்சியவர்களிடம் ஆசிபெற்ற மணமக்கள்
இருவரும் உணவருந்துவதற்காக அழைத்துச் செல்லப்பட, ராஜாங்கம் – அகல்யா இருவரும் தம்பதிகள்
சகிதம் சகுந்தலாவிடம் வந்தனர்.
“ரொம்ப நன்றிம்மா! தக்க சமயத்திலே
எங்க குடும்பத்தோட மரியாதையையும் என் பையனோட வாழ்க்கையையும் காப்பாத்திட்டீங்க!”
என ராஜாங்கம் கைகளைக் கூப்பி, நன்றிதெரிவிக்க முற்பட, “ஐயோ அண்ணா! என்ன நீங்க? நன்றின்னு பெரிய பெரிய வார்த்தையெல்லாம்
பேசிக்கிட்டு... நீங்க எங்களுக்கு செஞ்சதுக்கு முன்னாடி இதெல்லாம் பெரிய
விஷயமேயில்ல.. நன்றி சொல்றதுன்னா என் பொண்ணு சாருவுக்குத்தான் சொல்லணும்... பெருசா
கன்வின்ஸ் பண்ணாமலேயே அவளாவே கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கிறா...” என
பெருந்தன்மையாகப் பேசினார் சகுந்தலா.
“என்ன இருந்தாலும் குணவதியான
பொண்ணை பெத்து,
வளர்த்ததுக்கு உங்களுக்கு நன்றி சொல்லணும், அகல்யா...” என அவனது அன்னை மீண்டும்
பேச, சற்றே தர்மசங்கடமாக இருந்தது
அவருக்கு.
“மேடைவரைக்கும் வந்து கல்யாணம்
நின்னுபோனா அந்த குடும்பமே ஸ்தம்பிச்சு போய்டும்... அடுத்ததா
ஒவ்வொருத்தர்கிட்டேயும் கெஞ்சிட்டு இருக்கணும்... இல்லைன்னா யாராவது ஒருத்தரோட
பொண்ணை ப்ளாக்மெயில் பண்ணுற சூழ்நிலையாகிடும்... ஆனா நிலைமையை புரிஞ்சிக்கிட்டு
எல்லாத்தையும் தாங்கிப் பிடிச்சிருக்கிறா, என் மருமக...” என ராஜாங்கம்
புகழ்ந்துரைக்க,
மகிழ்வுடன் புன்னகைத்தார் சகுந்தலா.
இவ்வாறாக நிகழ்ந்தவற்றை மீட்டி, சிந்தனையில் மூழ்கியிருந்த தனது தோழன் சரண்ராஜை உலுக்கிய ராஜேஷ், “சூழ்நிலையையும் தாண்டி மனசிலே தனிப்பட்ட விருப்பமில்லாம எந்த பொண்ணும் இப்படிப்பட்ட இக்கட்டான சூழலிலே முடிவெடுத்திருக்கமாட்டா... இன்னொருத்திக்கு புருஷனாகுறதுக்கு மேடை வரைக்கும் வந்து, கல்யாணம் நின்னுபோய், என்ன செய்யறதுன்னு தெரியாம திகைச்சு நிக்கிற ஒருத்தனை கட்டிக்கிறதுக்கு சரண்யா மாதிரி சுயமா யோசிக்கிற ஒரு பொண்ணு முடிவெடுத்திருக்கிறான்னா அதுக்குப் பின்னாடி இருக்கிறது நிச்சயமா நேசமாத்தான் இருக்கும்...” என தன்போக்கில் பேசிக்கொண்டே போக, அவனது முதுகில் அடித்தான் சரண்.
Paid Advertisement
“ஏதாவது நாவல் படிச்சியா இல்ல
வெப்சீரிஸ் பார்த்தியா? நீயா பக்கம் பக்கமா ஸ்க்ரிப்ட் எழுதிட்டு இருக்கிற?” என
ராஜேஷை முறைத்த சரண், “கையை பிடிக்கிறதுக்கே அந்த முறைமுறைக்கிறா...” என்றான்.
“முறைச்சாளா? அப்புறம் எப்படி
கல்யாணத்துக்கு சம்மதிச்சா?” என அவன் புரியாமல் பார்க்க, “எங்கப்பா அவங்க குடும்பத்துக்கு
செஞ்ச நன்றிக்கடன் அதுஇதுன்னு எதையாவது யோசிச்சு சம்மதிச்சிருப்பா...” என தானாகவே
முடிவுரை எழுத முயற்சித்தான் சரண்.
“இல்லடா... இயல்பாவே சரண்யா
உன்கிட்டே அப்படித்தானே நடந்துக்குவா.. ஸ்கூல்டேஸ்ல இருந்தே படிப்புல யார் முதல்ல
வர்றதுன்னு உங்களுக்குள்ள போட்டி இருக்கும்ல... அதுவே அப்படியே பழகிருச்சுன்னு
நினைக்கிறேன்...” என்ற ராஜேஷ் தனது தோழனை சமாதானம் செய்ய முற்பட, “என்னவோ போ...” என சலித்துக்
கொண்டவாறே மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்துகொண்டான் அவன்.
“சரண்...” என அழைத்தவாறே அறைக்குள்
வந்த அவனது தந்தையைக் கண்டதும் புன்னகைத்த ராஜேஷ், “குளிச்சிட்டு ட்ரெஸ் சேன்ஜ்
பண்ணப் போயிருக்கிறான்ப்பா...” என பதில்தந்தான்.
“ரிசப்ஷனுக்குன்னு கீர்த்தனாவுக்கு
வாங்கின லெஹங்காவை சரண்யா போடவேணாம்ன்னு சரணோட அம்மா சொல்லிட்டாப்பா... கடைசி
வரைக்கும் அமுக்குனியா இருந்துட்டு, தாலிகட்டப் போற சமயத்திலே கம்பிநீட்டின அவளுக்கான எதையும்
சரண்யா தொடவேணாம்ன்னு உறுதியா இருக்கிறா... அதனால அகல்யாவும் அவளோட தங்கச்சியும்
பக்கத்திலே கடைக்குப்போய் சாரீயும் அதுக்கு மேட்சாகுற மாதிரி ரெடிமேட் ஆரி
ப்ளவுஸும் வாங்கிட்டு வந்திருக்கிறாங்க... அதை சொல்றதுக்குத்தான் வந்தேன்...”
என்றவாறே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவர், “சரணுக்கு சாருவை கல்யாணம்
பண்ணினதிலே எந்த ஆட்சேபனையும் இல்லைதானே?! சந்தர்ப்பத்துக்காக சம்மதிச்சானா?” என
சற்றே தணிந்த குரலில் பதைபதைப்புடன் வினவினார்.
அவரது கேள்விக்கு புன்னகையை
பதிலாகத் தந்தவன், தொடர்ந்தான்.
“ரெண்டு பேரும் சின்ன வயசிலே இருந்து ஒண்ணா படிச்சாலும் எதிரும் புதிருமாத்தான்
இருப்பாங்கன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்... ஆனா அதே சமயத்திலே எதிரெதிர்
துருவங்கள் ஒண்ணை ஒண்ணு ஈர்க்கும்ங்கறதை நாம ஞாபகத்திலே வச்சுக்கணும்...” என அவன்
பீடிகையுடன் பேச, அவருக்கோ
ஒன்றும் புரியவில்லை.
“என்னடா சொல்ற?” என புருவங்களை
நெரிக்க, “சரண்ராஜுக்கு
சரண்யாவைப் பிடிக்கும்ன்னு சொல்றேன்...” என்றான் தீர்க்கமாக.
“ஆனா எப்படி?” என அவள் குழம்பிய
பார்வையுடன் நோக்க, “உலகத்திலேயே
தாலிகட்டி மருமகளாக்கின பின்னாடி மகனுக்குப் பிடிச்சிருக்குதான்னு கேக்கற முதல்
தகப்பன் நீங்கதான்ப்பா...” என சற்றே கேலியுடன் அவரைப் பார்த்தவன், “ஃபர்ஸ்ட் ரேங்க், ஃபர்ஸ்ட் ப்ரைஸ்ன்னு
எல்லாத்துக்கும் முட்டிக்கிட்டாலும் இவனுக்கு அவளைப் பிடிக்கும்... எதையும்
யோசிக்காம டக்குன்னு ஓகே சொல்லியிருக்கிறான்னா அவளுக்கும் இவனைப்
பிடிக்கும்ன்னுதான் அர்த்தம்... நீங்க எதையும் குழப்பிக்காம அடுத்தடுத்த
காரியங்களைப் பாருங்க...” எனத் தேற்றி அனுப்பி வைத்தான்.
குளித்துவிட்டு வந்த சரண், “அப்பாவா
வந்தாரு? என்ன சொன்னாரு?” என விசாரிக்க, “ஆமாடா... சந்தர்ப்ப சூழ்நிலையில கல்யாணத்தை நடத்த
வேண்டியதாப்போச்சுது... ஒருவேளை சரணுக்கு விருப்பமில்லைன்னா டைவ....” என ராஜேஷ்
முடிப்பதற்குள் அவனது வாயை தனது கையால் இறுக்கமாக மூடினான்.
“தெய்வமே! முதலிலேயே வாயை
வைக்காதே! எப்படியும் அவ இதைத்தான் கேட்பான்னு தெரியும்... அதை அப்போ
பார்த்துக்கலாம்... இப்போ எனக்கு ரெடி ஆகுறதுக்கு ஹெல்ப் பண்ணு...” என சரண்
கெஞ்சத் தொடங்க, “இவ்ளோ
ஆசையை மனசிலே வச்சிருக்கிறவன், ஏன்டா இன்னொருத்தியை கட்டிக்க சம்மதிச்ச?” எனக் கடிந்து கொண்டவாறே உதவத்
தொடங்கினான்.
“சரண்யாமேல காதலெல்லாம்
கிடையாது... ஜஸ்ட் பிடிக்கும், கிரஷ்... அவ்ளோதான்... ஆனா கீர்த்தனாவை கட்டிக்கிறதுக்கு முழுமனசோடத்தான்
சம்மதிச்சேன்... அவ இப்படி பண்ணுவான்னு நினைச்சுக்கூட பார்க்கலை.. ஒரு மாதிரி
மனசுக்குள்ள வெறுமையா இருந்துச்சு... அதே சமயத்திலே சாரு என்னை கல்யாணம்
பண்ணிக்கிறதுக்கு சம்மதம் சொன்னதும் என்னையுமறியாம நிம்மதி! ஒருவேளை இதுதான்
விதிபோல...” என அவன் தனது மனதில் தோன்றியவற்றை வெளிப்படையாகத் தெரிவிக்க, “சரி, விடு... பார்த்துக்கலாம்...”
என்றுவிட்டான் ராஜேஷ்.
வரவேற்பிற்காக சரண்யாவும் சரண்ராஜும்
தத்தமது உடைகளை அணிந்து, அதற்கேற்ற ஒப்பனையுடன் மேடையேற, அனைவரும் மகிழ்வுடன் நோக்கினர்.
“பொருத்தம் நல்லா இருக்குதுல்ல...
பேசாம இந்த பொண்ணையே நிச்சயம் பண்ணியிருக்கலாம்... சாதிசனம், அந்தஸ்துன்னு இவங்க வீட்டுல
சம்பந்தம் வச்சுக்கக்கூடாதுன்னு மாப்பிள்ளை வீட்டிலே நினைச்சிருப்பாங்க... ஆனா
ஆண்டவன் போட்ட கணக்கை யாரால மாத்தமுடியும்? இவனுக்கு இவதான்னு எழுதி வச்சிருந்திருக்கும், அதான் இப்போ நடந்திருக்குது...”
என கூட்டத்திலிருப்போர் தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்க, சரண்யாவின் தாயான சகுந்தலாவிடம்
வந்தனர் சரண்ராஜின் பெற்றோரான அகல்யாவும் ராஜாங்கமும்.
“எல்லாரும் பேசுறதைக் கேட்டீங்களா சகுந்தலா?
அப்படி எதுவும் கிடையாது... வழக்கமா பார்க்கிற மாதிரி தரகர்கிட்டே பையனோட
ஃபோட்டோவையும் ஜாதகத்தையும் கொடுத்தோம்... சில இடங்கள் தட்டிப்போன பின்னாடி
கீர்த்தனாவோட ஜாதகம் வந்துச்சு... அவளோட அப்பாவும் ரிட்டையர்ட் பேங்க் மேனேஜர்...
அதனால மேற்கொண்டு பேசினோம்... எல்லாம் சரியா வந்துச்சு... மத்தபடி உலகப்பிரகாரமா ஜாதி, அந்தஸ்துன்னு எதையும்
பார்க்கலைம்மா...” என தங்களால் இயன்றமட்டும் அவர்கள் தங்களது தரப்பை எடுத்துரைக்க
முற்பட,
புன்னகையுடன் நோக்கினார் சகுந்தலா.
“எனக்கு உங்க குடும்பத்தை ரொம்ப
வருஷமா தெரியும்... மேனேஜரா இருந்தும் சாதாரண கிளார்க்கான என்னோட வீட்டுக்காரரை
எவ்ளோ மரியாதையா நடத்துவீங்கன்னு அவர் என்கிட்டே சொல்லியிருக்கிறார்... அவர்
போனதுக்கு அப்புறமும் எங்களுக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணியிருக்கிறீங்கன்னு வார்த்தையில
சொல்லிட முடியாது... அப்படியிருக்கிறப்போ நான் எப்படி இதெல்லாம் யோசிப்பேன்?
பேசுறவங்க பேசிட்டுப் போகட்டும்.. பார்த்துக்கலாம்...” என்றுவிட்டார் இயல்பாக.
அகல்யா – ராஜாங்கம் இருவரும்
நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்தவர்கள். உடல்நலக்குறைவால்
ராஜாங்கம் விருப்பஓய்வு பெற்றுவிட, அகல்யா மட்டும் பணியிலிருக்கிறார். இருவர் பணிபுரியும் கிளையிலும்
அடுத்தடுத்த காலகட்டங்களில் குமாஸ்தாவாகப் பணியாற்றியவர் சகுந்தலாவின் கணவர் கிருஷ்ணன்.
பொறுப்புடன் பணியாற்றும் திறம், அனைவரையும் புன்னகையுடன் அரவணைத்துச்
செல்லும் பாங்கு என அவரது பணியைக் கண்டு, இருவருக்கும் அவர்மீது மரியாதை உண்டு.
அவரும் இவர்கள் மீதிருக்கும் மரியாதையால் உறவினரைப் போல உரிமையுடன் பழகுவார்.
எதிர்பாராதவிதமாக மாரடைப்பால்
கிருஷ்ணன் காலமாகிவிட, இரு
குழந்தைகளுடன் செய்வதறியாது திகைத்து நின்றார் சகுந்தலா. கண்டுகொள்ளாமல் சென்ற
உறவினர்களைப் போல அகல்யா தம்பதியினரால் இருக்க முடியவில்லை.
அவர்களுக்குத் தேவையான பொருளாதார
உதவிகளைச் செய்தவர்கள், தங்களது முயற்சியால் சகுந்தலாவிற்கு நிரந்தரமான வருமானம்
ஈட்டித்தரும் பணியை வாங்கித்தர முற்பட்டனர்.
பத்தாம் வகுப்புவரை மட்டுமே
படித்திருந்த சகுந்தலாவிற்கு தங்களது அதிதீவிர முயற்சியால் வங்கி உதவியாளர்
பணியைப் பெற்றுத் தந்ததோடு மட்டுமல்லாமல் முறையே பதினொன்று, எட்டாம் வகுப்பு படித்துக்
கொண்டிருந்த சரண்யா மற்றும் அவளது தமையன் சதீஷிற்கும் தங்களது செலவில் டியூஷன்
ஏற்பாடு செய்து தந்தனர்.
வீட்டில் மின்தடை ஏற்படும்
சமயங்களில் தங்களது இல்லத்திற்கு வந்து படிக்கலாம் எனவும் படிப்பிற்கு ஏதேனும் தேவைகள்
ஏற்படின் தயங்காமல் தங்களிடம் கேட்கலாம் எனவும் சுதந்திரமளித்தனர்.
தனது பெற்றோருக்கு ஒரே மகனாக
செல்வச்செழிப்புடன் வளர்ந்துவந்த சரண்ராஜுக்கு அவர்களது இந்த நடவடிக்கைகள்
சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஏனென்றால் தனது வகுப்பில் முதலிடத்திற்காக எப்போதும்
தன்னுடன் போட்டியிடும் ஒருத்தியை தனது பெற்றோர் ஆதரிப்பதில் சினம்கொண்டான்.
முதலில் அதை வெளிப்படுத்தினாலும் பின்னாளில் அதுவே பழகிவிட்டது.
பன்னிரெண்டாம் வகுப்பு வரை
இவர்களது உதவியுடன் படித்துவந்த சரண்யா, கல்லூரியில் சேர்ந்த பிற்பாடு வெகுமுனைப்புடன் படிக்கத்
தொடங்க, அவளது
கல்லூரி நிர்வாகமே அவளது படிப்புச் செலவை ஏற்றுக்கொண்டது. சதீஷும் தன்னால்
இயன்றமட்டும் நன்றாகப் படித்து, அயல்நாடு சென்று மேற்படிப்பைத் தொடருமளவிற்கு முன்னேறினான்.
அனைத்திற்கும் வித்திட்ட
தம்பதிகளின் மகனது திருமணத்தில் அன்னையும் மகளும் பெருமகிழ்வுடன் கலந்துகொள்ள, நிலைமையோ தலைகீழாகிவிட்டிருந்தது.
முந்தைய நாளின் மாலை வரை
சரண்ராஜிடம் அலைபேசியில் இயல்பாக உரையாடிக் கொண்டிருந்த மணமகளான கீர்த்தனா, அதிகாலையில் மாயமாகி, கம்பிநீட்டிவிடுவாள் என்பதை
எவருமே எதிர்பார்த்திருக்கவில்லை.
அனைவரும் செய்வதறியாது திகைத்து
நின்றபொழுதில், உறவுக்கார
பெண்களில் எவரேனும் திருமணம் செய்து கொள்ள முன்வருகின்றனரா என வினவுமாறு ஒருவர்
தெரிவிக்க, வேறு
வழியின்றி சிந்திக்கலாயினர் அவனது பெற்றோர்.
திடீரென சிந்தையில் சரண்யாவின்
நினைவு தோன்றினாலும் தாங்கள் உதவிசெய்ததற்கு பிரதியுபகாரமாக அவளது வாழ்வை தியாகம்
செய்யப் பணித்ததைப் போலாகிவிடும் என அவர்கள் தயங்கி நிற்க, உதவிசெய்ய மனமிருந்தும்
உலகப்பிரகாரமான ஏற்றத்தாழ்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளை நினைத்து தயங்கி நின்றார்
அவளது அன்னை.
“புளியங்கொம்பா பிடிச்சிட்டா,
பெரிய இடத்தை வளைச்சிப் போட்டுட்டான்னு எல்லாரோட வாயிலேயும் அவலா
மென்னுடுவாங்க...” என அவர் கலக்கத்துடன் பின்வாங்க, “சரண்யாகிட்டே ஒரு வார்த்தை
கேட்கலாம்ல...” என முன்மொழிந்திருந்தார் அவனது உறவினர்களுள் ஒருவர்.
“ஆனா... நாங்க எப்படி?” என
சகுந்தலா தயங்க,
“மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு யோசிக்காதீங்க! அவ என்ன நினைக்கிறான்னு
கேளுங்க...” என்றவர், அதே
வீரியத்தில் சரண்யாவிடம் கேட்டுவிட, அவளோ பெரிதாக அதிராமல் சிலநிமிடங்கள் சிந்தித்தாள்.
காதல் செலவு தொடரும்...



0 Comments