ரெட்டை நிலவு - விமர்சனம்

ரெட்டை நிலவு - விமர்சனம் 



நான் இளங்கலை கணிதவியல் படிப்பை மகளிர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம் அது. பதின்மூன்று வருடங்கள் இருபாலரும் பயிலும் நிறுவனங்களில் பயின்றுவிட்டு முதன்முறையாக மகளிர் கல்லூரியில் சேர்ந்திருந்தேன். விடுதியிலும் தங்க அனுமதிக்கப்பட்டேன்.

எங்கள் விடுதியில் ஒரு விசித்திர பழக்கம் இருந்தது. (பல விடுதிகளிலும் இப்படியொரு பழக்கம் இருந்திருக்கிறது. இதொரு விதமான டிபிக்கல் யுனிவர்சல் ஹாப்பனிங் போல. இதுகுறித்து மேலும் ஆராய வேண்டிய அவசியமன்று)

அஃது என்னவெனில் விடுதியில் தங்கியிருக்கும் இரண்டு பெண்கள் சற்றே நெருக்கமாக பழகி வந்தால், அவர்களை “லெஸ்பியன்” எனக் கேலி செய்வர். மெய்யாகவே அப்போதெல்லாம் அதற்கான அர்த்தமோ, அதிலிருந்த நடைமுறை சிக்கல்களோ உணர்வு சிதைவுகளோ எங்களுக்குப் புரியாது, தெரியாது. சிலர் அவ்வாறு அவர்களை டீஸ் செய்கையில் நாங்களும் என்ன ஏதென விசாரியாமல் சிரித்துவிட்டுக் கடந்து விடுவோம்.

“செக்ஸ்” என்பதற்கான சரியான புரிதலே இல்லாத பதின்பருவம் அது. பதினெட்டு வயதில் வெறுமனே இரண்டு பெண்கள் தங்களுக்குள் சிரித்துப் பேசிக்கொண்டால், தனிமையில் அமர்ந்து மணிக்கணக்கில் கதைத்துக் கொண்டால்  அதை “லெஸ்பியன்” என்னும் பெயருடன் பரப்புவதற்கு சொல்லித் தந்தது நாங்கள் வாழ்ந்த சூழ்நிலை. உண்மையை சொல்லப் போனால் “செக்ஸ்” என்பதற்கு கூட சரியான விளக்கம் கூட அப்போது எங்களுக்குத் தெரியாது. . எவரேனும் சும்மா இரண்டு மூன்று நெருக்கமான காட்சிகளையோ, பார்ன் காட்சிகளையோ அரைகுறையாக பார்த்து விட்டு அரைகுறையாக எதையாவது உளறி வைக்க, நாங்களும் “அய்ய.. ச்சீ...” காதைப் பொத்திக் கொண்டே அரைகுறையாக கேட்டுக் கொண்டு எங்களுக்குத் தெரிந்த வகையில ஏதோ ஒன்றை மனதிற்குள் செருகி வைத்துக் கொண்டோம்.

இப்படியான சூழலில் இந்த “இரு பெண்களுக்கு இடையேயான நெருக்கம்” என்பது அவர்கள் கற்றுக் கொடுத்த அரைகுறை வரையறைக்குள் வந்தது. நாங்கள் எல்லாம்  நல்ல புள்ளைங்க வேஷம் போட்டுக் கொண்டு சுத்தும்  ஆளுங்க என்பதால் இது பற்றியெல்லாம் மற்றவர்களுடன் விவாதிக்கவே கூச்சப்படும் ரகம். நம் சமூகமே அப்படித் தானே. இதுபற்றி எந்த விழிப்புணர்வையும் கற்பிக்கவில்லையே. திரைப்படத்தில் நாகன் – நாயகி நெருக்கமான காட்சிகள் வந்தால் பிள்ளைகளின் கண்ணை மூடும் அதே பெற்றோர் தான் திருமணத்திற்கு முந்தைய நாட்களில் அனைத்தையும் விளக்குவதற்கு ஆவன செய்கிறார்கள். இங்கே செக்ஸ் என்பது திருமணத்தின் பொருட்டு கிடைக்கும் ஒரு சலுகை திட்டம் அவ்வளவுதான். அதைக் குறித்ததான பெரிதான தெளிவுகள் விழிப்புணர்வுகள்  எல்லாம் கிட்டவில்லை. அதிலும் பெண்கள் வெளிப்படையாக பேசுவது எழுதுவது எல்லாம் அவளது ஒழுக்கத்தையே விமர்சனத்துக்கு உள்ளாக்கும் தகையவை. சரி அதுகுறித்து இப்போது விவாதிக்கத் தேவையில்லை. விஷயத்துக்கு வரலாம்.

அந்த காலணாவுக்கும் பெறாத வரையறைகளைக் கொண்டு  அந்த இரு பெண்களுக்கு இடையேயான உறவை நாங்களே தீர்மானித்து விடுவோம்.

நான் பொதுவாக மற்றவர்களைக் குறித்து உறுதியாகத் தெரியாத விஷயங்களை எவரிடமும் பகிர மாட்டேன். ஆனால் சில ஆர்வக் கோளாறுகள் அந்த பெண்கள் பயிலும் துறையில் இருக்கும் டேஸ்காலர் தோழிகளிடம் சென்று, “அவ ஒரு 377 “ என சொல்லி வைக்கும்ங்கள்.. அப்போது தான் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சட்டத் திருத்தம் அந்த பிரிவில் வந்திருந்தது.

சிலபேர் அதற்கும் ஒருபடி மேலே போய், “எப.. அவளுக ரெண்டு பேரும் கிஸ் பண்ணிட்டு இருந்தாங்க... நான் பார்த்தேன்...”, “அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தத பார்த்தா என் ரூம்மெட் சொன்னா...” என தங்களது விருப்பம் போல பரப்பி விட்டுவிடுவர்.

உண்மையில் வீட்டைப் பிரிந்து, குடும்பத்தினர் எவருடனும் ஒரு மாத காலமளவும் உரையாடாமல் ஒரு மாதத்தை கடக்க வேண்டும் என்னும் நிர்பந்திக்கப்பட்ட எங்களைப் போன்றோருக்கு இதற்குப் பின்னதான காரியங்கள் எதுவும் கண்ணுக்குத் தென்பட்டதில்லை. எங்களைப் பொருத்த வரையில் “நேரப் போக்குக்கு வாய்க்கு மெல்லுற ஒரு அவல்” அவ்வளவுதான், அவ்வளவே அவ்வளவு தான்.

இந்த விஷயங்கள் க்ளாஸ் அட்வைசர் மேமுக்கு தெரிய வந்து, அதன் பிற்பாடு டிபார்ட்மெண்ட்டில் அரசல்புரசலாக பேசப்பட்டு பிரின்சிபால் மேம் காதிற்குச் சென்றுவிடும். விடுதிக்கு துணைக் காப்பாளர் இருந்தும் முதன்மை காப்பாளர் கல்லூரியின் முதல்வர் தான். ஆகவே அந்த இரண்டு பெண்களையும் அழைத்து, ஏதேதோ திட்டி, அவர்தம் பெற்றோரையும் அழைத்து விஷயத்தை தெரிவித்து.. இன்னும் என்னன்னவோ அடுத்தடுத்து நிகழும்.. அடுத்ததாக அடுத்த இரண்டாவது மாதத்தில் இருவரில் யாரோ ஒருவருக்கோ இல்லை ரெண்டு பேருக்குமோ அவசரகதியில் திருமணம் நடந்திருக்கும்.

இதையெல்லாம் மூன்றாவது நபராகப் பார்ப்பவர்களுக்கு (இதில் நானும் அடக்கம்) பெரிதாக எதுவும் தெரியாது. வெறுமனே அவர்கள் இருவரும் ஓரினச் சேர்க்கையாளராக இருந்தார்கள், மற்றவர்களுக்கு இது தெரிய வந்தது, பேராசிரியர்களுக்கு தெரிந்தது, பெற்றோருக்கு தெரியப்படுத்தப் பட்டது, திருமணம் செய்து வைத்தார்கள் எங்களைப் பொருத்த வரையில் நிகழ்ந்தவை இவ்வளவு தான். இவ்வளவே இவ்வளவு தான்.

ஆனால் இதற்குப் பின்னதாக இருக்கும் உணர்வுப் பூர்வமான காரியங்கள் குறித்து எவரும் அறிவதில், ஆய்வுசெய்யவும் முன்வருவதில்லை.

ஆட்டுமந்தைகளுள் ஒருத்தியாக இவ்வாறாக பிதற்றித் திரிந்த எனக்கு எப்போது ஞானம் வந்ததென்றால்...

நான் இளங்கலை மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்தேன். என் வீட்டில் எனக்குத் திருமண ஏற்பாடுகள் செய்வது குறித்ததான ஆலோசனைகளும் தாய் தந்தையருக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளால் விளைந்த சண்டைகளும் உச்சத்தில் இருந்த சமயம் அது. அப்போதுதான் விடுதிக்குப் புதிதாக வந்தாள் இரண்டாமாண்டு மாணவி ஒருத்தி.

பொதுவாக எனது தனிப்பட்ட விஷயங்களை எவருடனும் மனம்விட்டுப் பேசும், பகிர்ந்து கொள்ளும் நபரல்ல நான். அனைவரிடமும் கலகலப்பாக பேசுவேன், சிரிப்பேன். அத்துடன் கடந்துவிடுவேன்.

அவள் வந்ததும் எனக்கு உற்ற தோழியைப் போலானாள். உடன்பிறந்த தங்கையைப் போன்றதொரு உரிமையான உணர்வு அவளிடம் ஏற்படவே அனைத்தையும் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினேன். அவளும் அவ்வவ்போது தன் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளைக் குறிப்பிடுவாள். இவ்வாறு வீட்டை விட்டுப் பிரிந்து விடுதில் தங்கியிருந்த இருவருக்கும் ஒருவருக்கு ஒருவர் மனத்தாங்கலாக ஆறுதலாக இருக்கையில் தான் ஒரு விஷயம் தெரிய வந்தது. நாங்கள் இருவரும் “லெஸ்பியன்”ஆக சித்தரிக்கப்பட்டிருக்கிறோம் என.

“தனக்கு வந்தால் தான் தலைவலியும் காய்ச்சலும்” எனபதிப் போல சம்மட்டியால் அடித்தது போல உரைத்தது எனக்கு. மற்றவர்களையும் இவ்வாறாக சித்தரிக்கையில் இப்படித் தானே வலித்திருக்கும் என. அன்றிலிருந்து எவரேனும் அந்த வார்த்தையைப் பிரயோகித்தால் அவர்களிடம் சண்டையிடுவேன்.

இங்கே அந்த நெருக்கமாகப் பழகி வந்த இருவரும் ஓரினச் சேர்க்கையாளராக இருப்பது என்பது அவரவரது விருப்பம். இதை எவராலும் தடை செய்யவோ இப்படித்தான் இருக்க வேண்டும் எனவோ நிர்பந்திக்க இயலாது. ஏனெனில் உணர்வுகள் என்பவை எவராலும் கட்டுப்படுத்த இயலாதவை.

ஒருவேளை அந்த இரு பெண்களும் ஒருவித பாதுகாப்பான உணர்வை உணர்ந்ததாலேயே ஆத்மார்த்தமான நட்புடன் பழகி வந்திருக்கலாம்.. ஆனால் அவர்களை தவறாக சித்தரித்து நோகடித்து விட்டனர். இங்கே அனைவரது பேரிலும் தவறு உள்ளது. கல்லூரி முதல்வர் உட்பட. அவருக்கும் இதுகுறித்து சரியான புரிதல் இல்லை என்றே உரைப்பேன் நான்.

ஒருவேளை அவர்கள் இருவரும் அனைவரும் கூறுவதைப் போலவே ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு கொண்டவராக இருந்திருப்பினும் அவர்கள் பேரில் தவறென்ன?? பாவத்தை செய்து விட்டனர் என்பதைப் போல அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்தி அவர்தம் உணர்வுகளை சிதைத்து திருமணமென்னும் பந்தத்தில் வேறொரு பாலினருடன் வாழ நிர்பந்திப்பதேல்லாம் எந்த வகையில் நியாயமென்ன புரியவில்லை.

இங்கே நான் ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கிறேன் என நீங்கள் புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

மேலே கூறிய விஷயங்கள் அனைத்தும் இன்றைய தினத்தில் Min Mini அவரது “ரெட்டை நிலவு” கதையைப் படித்த போதில் எனக்குள் தோன்றிய நினைவுகள் மற்றும் கருத்துகள். எவரையும் அவரது நிலையை சரிவர புரிந்து கொள்ளாமல் நம் அனுமானத்தின் அடிப்படையில் வர்ணிப்பது தவறு எனப் புரிந்து கொண்ட நான் இக்கதையின் மூலம் பல விஷயங்களை அறிந்து கொண்டேன்.

கதையின் பெயர் : ரெட்டை நிலவு @ தேன் நிலா

ஆசிரியர் : மின்மினி

பலர் என்னிடம் தனிப்பட்ட முறையில் இந்தக் கதையைப் படித்து விமர்சிக்குமாறு கூறினர். இப்போது தான் நேரம் கிடைத்தது.

கதைக்கரு என்னவெனில் முன்னரே குறிப்பிட்டதைப் போல ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றியது. அப்படியானால் சமூகத்திற்கு ஏற்றதாக இல்லாத வகையில் காட்சிகள், வசனங்கள் அமைக்கப்பட்டிருக்கும் எனத் தவறாக எண்ண வேண்டாம்.

மிகவும் நாகரீகமாக அமீக்கா, தன்வி இருவரின் உறவையும், அதன் பின்னதான ஈர்ப்பையும் படிப்படியாக விளக்கிய விதம் அருமை.

எதிர்பாலினத்தினர் மீது ஈர்ப்பில்லாதவரை இன்னொரு உறவிற்குள் நுழைய நிர்பந்திப்பது தவறு எனக் குறிப்பிட்டவர் அவ்வாறே ஓரினச் சேர்க்கையாளர்கள் செய்வது சரிதான் என வலியுறுத்தாமல் அதன் போக்கிலேயே விட்டு விட்டது சமயோஜிதமான முடிவு.

ஆனால் இடையிடையே குறிப்பிட்ட விஷயங்கள் உண்மையிலேயே பதைபதைக்க வைத்தது. ஆதிகாலம் தொட்டு இதுபோன்ற உ(றவு)ணர்வு சிக்கல்கள் இருந்தே வந்திருக்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான சிக்கல்கள். இப்போதிருக்கும் கால கட்டத்தில் இது சரி, தவறு என்பதைத் தாண்டி அவர்களது உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கலாம், தவறில்லை எனவே எனக்குத் தோன்றுகிறது.

அப்படியானால் சமுதாயம், பெற்றோர் ஆகியோரின் நிலை, கலாச்சார சமநிலை குறித்து கேள்விகள் எழலாம், அதுகுறித்து நான் எதையும் கூறப் போவதில்லை.

ஏனென்றால் இன்றளவும் சமுதாயத்தில் ஏற்கப்படாத கலாச்சாரத்தில் ஒன்றுதான் இது. சரி தவறு என எதையும் தீர்க்காமல், அதற்கு ஆதரவும் அளிக்காமல் இப்படியும் ஒரு பிரிவினர் உணர்வுகளுக்குள் சிக்கித் தவிக்கின்றனர், அவர்களது வாழ்வியல் இது, நடைமுறைச் சிக்கல்கள் இது எனப் பதிவு செய்த என் தோழிக்குப் பாராட்டுகள்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் கதையினூடே கொடுக்கப்பட்ட கருத்துகளும் தகவல்களும் அவரது உழைப்பை எடுத்துக் காட்டுகின்றன.

அமீக்காவின் கதாப்பாத்திரத்தை இறுதி வரை அந்த கட்டமைப்பு மாறாமல் கொண்டு வந்திருந்தது சிறப்பு!! பத்ரி ஷ்ரவன் இருவரில் ஷ்ரவனை மிகவும் பிடித்திருந்தது..வாசு, குகன், நிர்மலா அனைவரும் எதார்த்தத்தின் நகல்கள்.

வருங்காலத்தில் இதுபோன்ற உறவுகள் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் படலாம், இல்லாமலும் போகலாம்.

என்னைப் பொருத்த வரையில் இது கான்ட்ரோவர்சியல் கான்செப்ட் என்பதை விடுத்து ஒரு வித்தியாசமான வாழ்வியலைப் பதிவு செய்யும் முயற்சி எனலாம். அதற்காக எனது வாழ்த்துகளும் வணக்கங்களும். இதுபோன்ற பல கதைகளைப் படைக்க வாழ்த்துகள். 

Reactions

Post a Comment

0 Comments