Header Ads Widget

Welcome You all to Ruthitha's KKR family

Kanavu Kadhali's World

To share your valuable comments : kanavukadhali@gmail.com

அன்பே நீ யாரோடா -8

 


அத்தியாயம்-8

“எல்லாம் கடகடன்னு நடந்துட்டு விது.. யாருமே எதிர்பார்க்கல.. இப்படி ஆகும்னு..” கோவிலில் உக்கார்ந்திருந்த ராம் கூற, “அப்பா அம்மா எப்படி இருக்குறாங்க??” என விசாரித்தாள் வித்யா..

“இருக்காங்க.. ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் கோபத்தை காட்டிக்கிட்டு.. பூகம்பம் வந்துட்டு போன மாதிரி வீடே அமைதியாயிட்டு.. மூத்த புள்ளையா இருந்தும் என்னால எதுவும் பண்ண முடியல..”

“எல்லாத்தையும் பண்ணுததுக்கு முன்னாடி அவன் தான் யோசிச்சிருக்கணும்.. அதுக்கு நீ என்ன பண்ணுவ??” வித்யா சமாதானம் செய்ய முற்பட, “அவன் புத்தி தெரிஞ்ச நாம கொஞ்சம் பொறுமையா இருந்துருக்கணும்.. வெறுப்பேத்தி பாக்க தான் பண்ணுதான்னு தெரிஞ்சும் சின்ன விஷயத்த பெருசாக்கிட்டோம்..” பக்கத்து தூணில் அடித்துக்கொண்டான்..

“நான் அப்பா கிட்ட அவசரப்பட்டு சொல்லிட்டேன்னு நினைக்குறியா ராம்??”

“தெரியல விது.. வீட்டுக்கு போகவே ஒரு மாதிரியா இருக்கு.. பேசாம வேலை எதையாவது வாங்கிட்டு பிறவு வரலாம்னு இருக்கேன்..” அவளின் பதிலை எதிர்பாராமல் எழுந்து சென்றான்.. சென்றவனின் முதுகையே வெறித்து கொண்டிருந்தவளின் கண்கள் கலங்கின..

சம்பவம் நடந்து நான்கு நாட்களை கடந்திருந்தது.. வேலை தேடுவதற்காக ராம் வீட்டை விட்டு கிளம்பியிருந்தான்.. இதற்கிடையில் தர்மா தன் கௌரவத்தை நிலைநிறுத்த வித்யாவை வீட்டிற்குள்ளேயே முடங்க விடாமல் வெளியே சென்று வர வைத்தார்..

ராமை காண முடியாத வருத்தத்திலேயே திரிந்த வித்யாவிற்கு வாயை திறந்து பேசுவதற்கு கூட தோழி இல்லை.. செல்வா வாங்கிய அடியை நேரில் கண்ட ஜோதிக்கு இவள் மேல் வருத்தம்.. “என்ன இருந்தாலும் நீ இப்பிடி பண்ணுவன்னு நினைக்கல..” என்ற ஜோதி சற்று விலகியே நடந்தாள்..

இவளே முறைத்தாலும் “ன்ன தங்கச்சி..” என பாசமாக அழைக்கும் அருள் கூட இவளின் முகத்தை பார்க்காமல் நடந்தான்.. இதில் செல்வாவை சொல்லவே வேண்டாம்.. இவள் மூச்சு காற்று படும் திசையில் கூட நடக்கவில்லை..

இப்படி ஒரேடியாய் எல்லாருமாய் சேர்ந்து ஒதுக்குமளவிற்கு அப்படி என்ன தவறு செய்து விட்டாள்?? முடியாது என கூறினாலும் பின்னாலேயே வந்தது அவன் தவறு தானே.. தொல்லை தாங்காமல் வீட்டில் கூறியது ஒரு தவறா??

கோவிலில் அம்மன் சன்னதியில் மெளனமாக அமர்ந்திருந்தாள் வித்யா.. கண்கள் கருவறையில் இருந்த அம்மனையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது.. நேற்று இரவு ஜாதகத்தை எடுத்து பார்த்துக்கொண்டிருந்த அப்பாவை நினைத்தால் பயமாய் இருந்தது..

அவள் காதலை பற்றி சொல்வதற்கு இது சரியான நேரமும் இல்லை.. தர்மா மகளை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடி கொண்டிருந்தார்.. கல்யாணம் குறித்து பேசுவதற்கு ராமை தொடர்பு கொள்ள வழியும் கிட்டவில்லை..

வழியும் கண்ணீரை கூட துடைக்க மனமின்றி அமர்ந்திருந்தவளை கலைத்தது அந்த குரல்.. “ன்ன பேச்சு பேசுதியரு.. பக்கத்தூர் காரன் வந்து கேக்கும் போது அப்பிடியே தூக்கி குடுக்க தெரியுதுல்ல.. இந்தூர்க்காரன் கேட்டா கசக்கோ?? இந்த வாட்டி திருவிழாக்கு போட்டி நடத்தி தான் ஆவணும்.. அது அந்த இடத்துல தான் நடத்தணும்.. எவன் வந்து கோணகாலை நீட்டுதான்னு பாக்கேன்..”

கடவுள் சன்னதி என்றும் பாராமல் மடித்து கட்டிய கைலியை இறக்காமல் பூசாரியிடம் கத்தி கொண்டிருந்தான் செல்வா.. “சொலுதத கேளு ப்பா.. கோயிலுக்கு வடக்க கிடக்க நிலம் ரெண்டூர்ர் காரனுக்கும் பாத்தியப்பட்டது.. உன்ன மாதிரி ஒரு இளவட்டம் ஒருத்தன் பண்ணுன சம்பவத்துல நம்மூர் காரனுவளுக்கு அதுல உரிம கெடயாதுன்னு பஞ்சாயத்து முடிவு பண்ணிட்டாக ப்பா.. நீ இல்ல.. உன் பூட்டன் வந்து சண்டை போட்டாலும் அங்க போட்டிய நடத்த முடியாது.. மொதல்ல போட்டி உண்டான்னு தெரியுமா??”

பூசாரி இப்படி சொல்லவும் காட்டு புதராய் வளர்ந்து நின்ற தாடியை அழுத்தமாய் தேய்த்து விட்டு, “அப்போம் இந்த நெனப்புல தான் ஒரு பயலும் போட்டிய பத்தியே பேசலியோ.. வரட்டும்.. வருஷம் பூராம் ரெடியாவுற நாங்கல்லாம் மயிருன்னு நினைச்சிட்டானுவளோ..” மீண்டும் ஒருமுறை கைலியை அவிழ்த்து கட்டினான்..

“லேய்.. கோயில் திருவிழா நடத்துததே பெருசுன்னு பால் பெரியப்பா புலம்பிட்டு கெடந்தாரு.. இதுல போட்டிய எங்கலே நடத்துவானுவ.. பொங்கலுக்கு பாத்துகிடுவோம்.. அதுவரைக்கும் சும்மா கெடயேன்..” என்ற அருளின் பேச்சை கேளாமல், “எப்பிடி முடியாதுங்க்றான்ன்னு நானும் பாக்கேன்..” என காலரை இழுத்துக்கொண்டு நடந்தான் செல்வா..

“இப்போ எங்க போயி சண்டை போட போறியாம்??” கேட்டபடியே அவன் பின்னால் நடந்த அருள் தூணுக்கு அருகில் அமர்ந்திருந்த வித்யாவை பார்த்து விட்டான்.. “நாயி வாலை நிமித்த முடியுமா??” வாய்க்குள்ளே முனங்கியபடியே, “ன்னத்தா.. இங்க வந்து உக்காந்துட்ட.. பக்கத்துல உக்காரலாமா?? இல்ல இதுக்கும் உங்க அய்யா அய்யனார் சாமிக்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவியா??” என்றபடியே அமர்ந்தான்..

“நீயும் என்னை அப்பிடி நினைச்சிட்டல்ல..”

“இல்லியே.. நீ போயி சொல்ல மாட்டன்னுல்லா நினைச்சேன்.. நம்ப வேற செஞ்சேன்.. ஆனா ஒன்னு தாயி.. வர வர உன்கிட்ட வரவும் பயமாத்தான் இருக்கு.. அவந்தான் கிறுக்கேன்.. எப்போ என்ன செய்வான்னே தெரியாது.. இப்போ நீயும் அப்பிடி ஆயிட்ட.. சேர்க்க சரியில்ல..” சூழ்நிலையை சாதாரணமாக்க முயன்றான்..

“நான் வேற என்ன பண்ணட்டும்.. இவனும் சும்மா இருக்க மாட்டேங்குறான்.. இத சொன்னா அவனும் நம்ப மாட்டேங்குறான்.. வீட்லையும் எங்க போனாலும் பின்னாடியே வர்றான்னு மட்டும் தான் சொன்னேன்.. வேற எதையுமே சொல்லல.. இதுல நான் செய்யட்டும்னு நீயே சொல்லு.. மூச்சுக்கு முன்னூறு நேரம் தங்கச்சின்னு கூப்டுதல்ல...” பிரச்சனையை அவனிடமே ஒப்படைக்க,

“இது நல்ல கதையா இருக்கே.. நீங்க காதல் பண்ணுததுக்கு நான் காவாகாணுமா??” என நீட்டி முழக்கியவன், “இருந்தாலும் நீ இப்பிடி பண்ணுவன்னு நினைக்கல..” வாயை பொத்தி சிரிக்கவும் தோள்களிலே குத்திய வித்யா, “வழிய சொல்லுடான்னா வலிய ஊதி பெருசாக்கிக்கிட்டு இருக்க..” என்றாள்..

“நல்லா பேசுனாலும் யமத்து.. சண்டைய போட்டாலும் யமத்து.. சரி இப்போ என்னயணும்ங்கற?? இனி அவனை மாதிரி கேட்டா தான் லாயக்கு படும்..”

“உன் மாப்ளைய மாட்டிவிட்டதுல என்ன தப்பிருக்கு..”

“ன்ன தப்பிருக்கா.. எவளாவது காதலிச்சவனை மாட்டி விடுவாளா??”

“நான் ஒன்னும் அவனை காதலிக்கல..”

“ஆமா ஒரு நாளும் அவனை காதலிக்கவே இல்ல பாரு.. சரி.. சரி முறைக்காத.. பழசு எதையும் பேசல.. புதுசுக்கு வருவோம்.. தங்கச்சிக்கு மாப்ள மேல எந்த அக்கறையும் இல்லன்னாலும் என் மாப்ளைக்கு இன்னும் காதல் இருக்கு.. வயசு கோளாறுல பண்ணுன கழுதய இன்னும் விடாம பிடிச்சுட்டு தொங்குனான்.. நீ கயித்த வெட்டி விட்டுட்ட.. என்னைக்கும் இல்லாத அறிவா அவனே உன் பின்னாடி வரமாட்டேன்னு சொல்லிட்டான்.. இது தான் சான்ஸு.. இப்பிடியே கழுதய கண்டுக்காம விட்டன்னா திருந்திருவான்னு நினைக்கேன்..” என அருள் முடிக்கும் போது வித்யாவின் கண்களில் பிரகாசம் மின்னியது..

“உண்மையாவா சொல்லுத??” நம்ப முடியாமல் கேட்க, “இது என் தொங்கச்சி ஜோதி மேல சத்தியம்..” என தலையிலே அடித்தான்.. இதை கேட்டதும் மின்னலாய் வீட்டுக்கு பறந்த வித்யா, “போனவாட்டி பக்கத்தூர் காரன் பண்ணுன மாதிரி இல்ல.. எந்த வாட்டியும் இல்லாத ஒழுக்கத்தோட போட்டி நடக்கும்.. அது எம் பொறுப்பு..” என்ற செல்வாவின் குரலில் ப்ரேக் அடித்தாள்.. 

தயங்கி தயங்கி வீட்டிற்குள் நுழைந்தவளை, “பாப்பா, எல்லாருக்கும் டீ குடு..” என தர்மா இயல்பாய் காட்டிக்கொள்ள முற்பட, “லேய்.. குடிச்சுட்டு வாங்க.. நான் வெளிய நிக்கேன்.. நான் வாரேன் வாத்தியாரே..” என நிமிர்வாய் வெளியேறினான் செல்வா..

தர்மா பார்வதிக்கு காட்ட, அவரும் குறித்துக்கொண்டார்.. வந்தவர்களுக்கு டீயை கொடுத்துவிட்டு கிளாசை கழுவ போட வித்யா மூச்சு விடும் தூரத்தில் வந்து நின்ற செல்வாவை கண்டு திடுக்கிட்டாள்..

“இப்போ நீ கத்தி ஊரை கூட்டுன.. எனக்கில்ல உங்கப்பனுக்கு தான் அசிங்கம்.. ஒழுங்கு மரியாதையா பொத்திட்டு நில்லு..” வார்த்தை நாகரீகமே அவனின் கோபத்தை பறைசாற்றியது..

“என்னடி முழிக்க?? நீ பெரிய புடுங்கியா இருந்துருந்தன்னா நடந்த எல்லாத்தையும் சொல்லிருப்ப.. என்னாத்துக்கு ஒளிச்சு மறைச்சு சொல்லுத.. ஆன்.. மொத்தமா சொல்ல வேண்டிய தான.. என் பின்னாடி வந்தான்.. கைய பிடிச்சி இழுத்தான்.. பூ வச்சான்.. என் முன்னாடி சட்டை இல்லாம நின்னன்னு..” என பேசிக்கொண்டிருக்கும் போதே, “ச்சீய்..” முகத்தை சுழித்தாள்..

“கேக்க சகிக்கலைல்ல.. நான் உனக்கு செஞ்சது.. நீ எனக்காவ செஞ்சது.. எதையும் வெளிய சொல்ல முடியாது.. எதையும்.. சொல்லுததா இருந்தா முழுசா சொல்லி பழகு.. உன் லட்சணம் என்னன்னு உன் அப்பன் ஆத்தாவும் தெரிஞ்சிகிடட்டும்..” அவன் கூறவும் சட்டென, “என்ன என் லட்சணம்?? நீ பாத்தியோ?? என்னை பத்தி பேச உனக்கென்ன தகுதி இருக்கு??” என எகிறினாள்..

எந்த பெண்ணுக்குமே அவளின் குணம் பற்றி பேசினால் பத்திக்கொண்டு தானே வரும்.. வித்யாவும் உச்சக்கட்ட எரிச்சலில் கேட்டாள்..

“யே, வாய மூடு.. பல்ல கில்லலாம் கழத்திருவேன் பாத்துக்க.. உன் லட்சணத்தை என்னை விட வேற எவன்டி பாப்பான்.. நான் தான் பாக்கணும்.. ன்ன புள்ளடி நீயு.. ச்சைக்.. கண்ட காரனத்துக்காவவும் என்னை காதலிக்குறதை ஒளிச்சு மறைச்சிட்டு கண்டவன் கூடவும் சுத்துற உன்ன விட காதலிச்சேன்னு தெம்பா நெஞ்சை நிமிர்த்திட்டு நிக்க நான் உசத்தி தான்..”

“நான் ஒன்னும் உன்ன காதலிக்கல.. நானும் நெஞ்ச நிமித்தி சொல்லுவேன்.. நான் ராம..” என்பதற்குள் குரல்வளையை பிடித்திருந்தான்.. “அடுத்த வார்த்த பேசுன.. நாக்க அறுத்து போட்டுட்டு போயிருவேன்.. கழுத்துக்கு கீழ துடிக்கே ஒன்னு.. அதுவே காறி துப்பும் உன் பொய்யை.. மனசாட்சிய கொன்னுட்டு வாழுத உன்ன போய் உருகி உருகி காதலிச்சேன்னு நினைக்கும் போது கூசுது..

நீயெல்லாம் பொம்பளையே இல்ல.. இதுல எங்க எனக்கு தேவதையா இருக்க.. தோ, பாரு.. அப்பயே சொன்னேன்.. காதலிச்சேன்னு.. இப்போ காதலிக்கல.. நீ எக்கேடு கெட்டு போனாலும் எனக்கு கவல இல்ல.. ஆனா ஒன்னு அந்த நாய கட்டிட்டு என் வீட்டுக்குள்ள காலெடுத்து வைக்கலாம்னு பாக்காத.. உடம்புல உசுர உருவிருவேன்.. ஜாக்கிரதை..” ஒவ்வொரு வார்த்தைக்கும் இறுகிய பிடியை மூச்சு விட முடியாமல் தவித்த பின்னே விடுவித்தான்..

“என் மூஞ்சில முழிச்சிராத.. பாக்க இடத்துலே கண்டதுண்டமா வெட்டிருவேன்.. அந்த நாய மாதிரி எங்கனயாவது கண் காணாத இடத்துக்கு ஓடிரு.. வீணா கொலைகாரனாக்காத..” என எச்சரித்து விட்டு சென்றவனின் பேச்சில் வெறுப்பு மட்டுமே பிரதிபலித்தது..

Post a Comment

1 Comments

  1. Semaya poguthuleee... enna aka poguthoooo....

    ReplyDelete