Header Ads Widget

Welcome You all to Ruthitha's KKR family

Kanavu Kadhali's World

To share your valuable comments : kanavukadhali@gmail.com

அன்பே நீ யாரோடா-6



 அத்தியாயம்-6

“பாக்கதுக்கு தான் அவன் மேல அக்கறையே இல்லன்னு இருக்க.. ஆனா உள்ளுக்குள்ள எல்லாம் இருக்கு போல..” என ஜோதி இடிக்க, “கோவில் தெப்பக்குளத்துல இருந்துட்டு மீனுக்கு போட வேண்டிய மொத்த பொறியையும் வாயில போடுறதோட நிறுத்திக்கோ.. மனிதாபமானத்துல உங்க நொண்ணனுக்கு பாவம் பாத்தேன் பாரு.. என்னை சொல்லணும்....” என தலையில் அடித்துக்கொண்டாள் வித்யா.

“பாசம் இல்லாமையா அம்புட்டு மாத்திர மருந்தை அள்ளி குடுத்த??”

“ஆமா, ராமோட தம்பியா போயிட்டானே.. இவனுக்கு வலி தீரலைன்னா அவங்க அம்மா கண்ணை கசக்கும்.. உடனே ராம்க்கு நெஞ்சுல இரத்த கண்ணீரே வடியும்.. தேவையா?? ஊர்ல இருக்குற வரைக்கும் இவனால ராம்க்கு எந்த சங்கடமும் வரக்கூடாது..” வித்யாவின் கண்களில் உறுதி தெரிந்தது..

“அப்போ அண்ணனுக்காக தம்பியை குணப்படுத்திருவ.. உன் மண்டைய பேர்த்து வச்சதும் அவன் தான்றதை மறந்து மருந்து குடுத்துருவ.. அப்பிடி தானே”

“எங்க கிளாஸ்ல பர்ஸ்ட் ரூல் என்ன தெரியுமா?? ஒரு பேஷன்ட் உதவின்னு வந்து நிக்குறப்போ மருந்து குடுக்குறது தான் தர்மம்.. அந்த நேரத்துல அவங்களோட நமக்கு இருக்குற உறவையோ பகையையோ நினைக்கவே கூடாது..”

“போம்மா.. பாசத்தை பத்தி கேட்டா கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு அண்ணாச்சி மாதிரி வசனம் பேசுறா.. ம்க்கும்..” என நொடித்துக்கொண்டு எழுந்தவள், “உனக்கெல்லாம் சாவே கிடையாது.. நூறு ஆயுசுக்கும் நல்லா இருந்துட்டு போ..” என்றுவிட்டு சென்றாள்..

யாரை பார்த்து பேசுகிறாள் என புரியாது திரும்பிய வித்யா ராமை கண்டதும் சிறு புன்னகை ஒன்றை சிந்தினாள்..

“அவனுக்கெல்லாம் ஏன் விது வைத்தியம் பாக்குற??” என்றபடி அருகே அமர்ந்தவனை “ஏன் உனக்கு தெரியாதா??” என்பது போல பார்த்து வைத்தாள்..

“எல்லாம் எனக்காகன்னு தான் சொல்ல போறன்னு தெரிஞ்சும் கேக்குறேன் பாரு...”

“தெரிஞ்சா சரி தான்.. இல்லைன்னா அவனுக்கெல்லாம் யாரு வைத்தியம் பாக்குறது..”

“எனக்காகன்னு சொல்லி அவனுக்கு எந்த பாவமும் பாக்காத விது.. கடைசில நம்மளையே சாப்ட்ருவான்..”

“ம்ம்.. அது சரி.. வேலைக்கு கேட்டு வச்சிருந்த இடம் என்னாச்சு??”

“ப்ச்.. வழக்கம் போல தான்.. அந்த இடத்துக்கு காசு வச்சு ஆளை போட்டுட்டாங்களாம்.. நேத்து தான் போன் வந்துச்சு..”

“அச்சச்சோ..” என குளத்தையே வேடிக்கை பார்த்தவள் “சரி.. பாத்துக்கலாம்.. நானும் வேலைக்கு போறேன்னு அப்பா கிட்ட ஒரு வருஷம் டைம் கேக்குறேன்.. இந்த ஊரை விட்டு போன மாதிரியும் ஆச்சு.. நமக்கும் கொஞ்சம் டைம் கிடைச்சா மாதிரியும் ஆச்சு..” என்று நிமிர்ந்தாள்..

“எனக்காக நீ ரொம்ப கஷ்டப்படுறல்ல விது..” அவளின் கரம் பற்றினான்..

“ச்சே.. அப்பிடிலாம் இல்ல ராம்.. அப்பா கிட்ட சொன்னா உனக்கு ஒரு வேலை ஏற்பாடு பண்ணி தந்துருவாங்க.. நம்ம கையிலயும் ஒரு வேலை இருந்தா தைரியமா போய் அப்பா கிட்ட நம்மளை பத்தி பேசலாம்.. இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை.. விஷயத்தை சொன்னா உடனே சரின்னு தான் சொல்லுவாங்க.. நீ தான் வேணாம்ங்கற.. வேற என்ன பண்ண??.. வேலை கிடைக்குற வரைக்கும் நேரத்தை கடத்த வேண்டியது தான்..” அவனுக்காக எதையும் செய்ய தயாராகியிருந்தாள்

“இல்ல விது.. அது நல்லா இருக்காது.. வேலையோட போய் நின்னா தான் மரியாதை.. படிக்க வச்சு வேலையும் வாங்கி தர்றவர் கிட்ட போய் உங்க பொண்ணை லவ் பண்றேன்.. கல்யாணம் பண்ணி தாங்கன்னு கேட்டா எப்படி இருக்கும்.. ஐயாவோட நம்பிக்கையை உடைச்ச மாதிரி இருக்காதா?? இல்ல ஊர் தான் ஐயாவை பத்தி என்ன பேசும்??” இவளுக்காக அவன் யோசித்தான்..

“சும்மா அதையே சொல்லாத ராம்.. அப்பாவோட சுயநலத்துக்காக உன்னை யூஸ் பண்ணுனதா கோள் பேசுறவங்களுக்கு என்ன சொன்னாலும் புரிய போறதில்ல.. அப்புறம் ஏன் புரிய வச்சுக்கிட்டு.. பேசுறவங்க பேசிட்டு போகட்டும்..”

“எனக்கு அவனை நினச்சாலும் பயமாவே இருக்கு விது..” மெல்ல தொடங்கினான் ராம்..

அவன் பக்கமாய் நகர்ந்து அமர்ந்தவள், “அவனெல்லாம் ஒரு ஆளே கிடையாது.. கல்யாணம் ஆனதும் இங்க இருந்து கிளம்ப போறோம்.. வெளியூர்ல நமக்குன்னு ஒரு வேலை.. நமக்குன்னு ஒரு குடும்பம்.. அது போதும்.. அப்பா அம்மாவுக்கு பாக்கணும்னு தோணுனா வந்துட்டு போகட்டும்.. கல்யாணம் ஆகுற வரைக்கும் தான ஆடுவான்.. ஆடிட்டு போகட்டும்..” நம்பிக்கையாய் கையை பிடித்தாள்..

“ம்க்கும்..” என்ற செருமலில் இருவரும் திடுக்கிட்டு திரும்ப, கைலியை தூக்கி பிடித்துக்கொண்டு ருத்ரமூர்த்தியாய் நின்றான் செல்வா.. அவனை கண்டதும் கீ கொடுத்த பொம்மையாய் எழுந்து கொள்ள, “லேய், செவ்வாய் கிழமைக்கு பிரசாதம் சீக்கிரம் தீர்ந்துரும்னு சொன்னா கேக்கியா?? பாயாசம் அண்டா சட்டி பல்லிளிக்கு.. அதை பாக்கத்தான் கூட்டியாந்தியா??” வெள்ளேந்தியாய் பேசிக்கொண்டு வந்த அருளின் செவிடு கிழியுமளவிற்கு அறை விழுந்தது..

“அங்கன சீமையில இல்லாத புத்திரன் வந்துருக்கான்னு படிக்க பிள்ளைய கெடுத்து பூண்டு உரிக்க வச்சு கறி விருந்து ஏற்பாடு பண்ணிட்டு கிடக்கு.. வாத்தியாருக்கு காதல் கத்தரிக்கா கேக்குதோ..” என செல்வா காட்டிரைச்ச்சலாக இரைய, வாங்கிய அடியில் அருளுக்கு காது கொய்யென்றது..

ராமும் வித்யாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, “அப்பிடியே உருகுதோ...” பல்லை கடித்த செல்வாவை கண்டுகொள்ளாமல் வித்யாவை பார்த்தான் ராம்.. சற்று முன்பு அருள் வாங்கிய அடி ராமிற்கு விழ வேண்டியது என்பதை புரிந்து கொண்டவளாக கண்ணசைக்க, எதுவும் பேசாமல் ராம் நடந்தான் வீட்டை நோக்கி..

கோவில் வாசலில் செருப்பை மாட்டிக்கொண்டிருந்தவனை முறைத்துக்கொண்டிருந்த செல்வா, வித்யாவின் பக்கம் திரும்பினான்..

“ஏண்டி, நான் கட்டிக்குறேன்னு சொன்னதுக்கு எங்க அப்பா வைவாரு.. பெருக்குததுக்கு சீமாருன்னு கதை கதையா கட்டுன.. இப்போ இவனை கட்டுததுக்கு மட்டும் தேனா இனிக்குதோ..” என்று இரைய, “கோவில்ல வச்சு அசிங்கமா பேசுற உன்கிட்ட பேசுறதுல பிரயோஜனமே இல்ல..” அர்ச்சனை தட்டை தூக்கி கொண்டு நடந்தாள்..

“அசிங்கமா பேசுதேனா?? உங்கொப்பன் மவளே.. உண்மையிலேயே அசிங்கமா பேசுனா தெரியும்..” என கைலியை தூக்கி கட்டிக்கொண்டு பின்னாலேயே நடக்க, கோவிலில் சம்பவமாகிட கூடாது என்பதற்காக அருளும் ஓட்டமும் நடையுமாய் பின்தொடர்ந்தான்..

ஒவ்வொரு பிரகாரமாய் சுற்றி கொண்டிருந்தவளிடம், “நான் என்ன தப்பா கேட்டுட்டேன்.. என்ன விட அவன் என்னாத்துல உசத்தின்னு அவன் கூட சேரனும்னு அப்பிடியே துடிக்குற..” என வம்புக்கு நிற்க, “யாரு உசத்தியோ அவனை தான் கட்டிக்கணும்னு இல்ல..” என்றாள் சாந்தமாக..

“சரி.. இந்த அத்தானை கட்டிக்கோ.. யாரு உசத்தின்னு கேக்கவே மாட்டேன்..” மறுநிமிடமே பனிகூழாய் சிரிக்க,

“ஆனா நான் கேப்பேன்.. நீ அவன்ல இருந்து எதுல உசத்தின்னு.. அவன்ல இருந்துன்னு இல்ல.. உன்ன கட்டிக்க ஒரு சதமாவது நல்ல விஷயம் வச்சிருக்கியா மொதல்ல..” உஷ்ணப்படுத்தி பார்த்தாள் வித்யா..

“இங்கேரு.. பொறுமையா பேசுதேன்னு மனுஷனை சீண்டி பாக்காத.. ஒரு வார்த்தை ஒழுங்கா பேசுனா இன்னொரு வார்த்தை கோவத்த கிளப்புற மாதிரியே பேசணும்னு கங்கணம் கட்டிருக்கியோ..”

“உன்கிட்ட பேசவே விரும்பல போதுமா??” என்றுவிட்டு ஆலமரத்தை சுற்ற சென்றாள்..

“லேய், மாப்ள.. அதான் அந்த புள்ள பேசவே புடிக்கலைன்துல்ல.. நாளைக்காச்சும் பேசிக்கலாம்.. இன்னும் கொஞ்ச நேரத்துல சனக்கூட்டம் வர ஆரம்பிச்சிரும்.. அன்னைக்காவது உங்க வீட்டு தூண்ல கட்டி வச்சு அடிச்சாரு வாத்தியாரு.. இன்னைக்கு கூட்டம் சேர்ந்துச்சு.. கோயிலு வாசல்லையே கும்பாபிசேகம் நடத்திருவான்வலே.. சொன்னா கேளு.. பெறவு பாத்துக்கலாம்..” என அருள் கெஞ்ச,

“உடம்புல ஊக்கம் இல்லாதவனாட்டம் பொலம்பிட்டு கிடக்காத.. கோயிலுக்குள்ள வந்து எந்த கூறுகெட்டவன்டா கலவரம் பண்ணுவான் கூவ பயலே.. இன்னைக்கு இவள கவனிக்கல.. கொழுப்பு கூடிரும்..” சட்டையை முறுக்கி கொண்டு முன்னேற,

“கூறு கெட்டவன் பண்ண மாட்டான்.. உன்ன மாதிரி புத்தி கெட்டவன் பண்ணுவான்.. அய்யயோ.. இவன் இன்னைக்கு சமாதி கெட்டாம போமாட்டான் போலேயே..” பின்னாலேயே ஓடினான் அருளும்..

“வேணும் வேணும்னு பின்னாலேயே நாய் மாதிரி சுத்துதவனை வேணும்ங்க அளவுக்கு அசிங்க படுத்தி பாக்குற.. கடைசியா கேக்கேன்.. அவனை விட்டுட்டு என்னை கட்டிப்பியா?? மாட்டியா??” என்று கேட்டவனை சற்றும் சட்டை செய்யாமல் அரசமர நிழலில் இருந்த சாமிக்கு விளக்கு போட்டுக் கொண்டிருக்க, “உன்ட்ட தான பேசிட்டு இருக்கேன்.. பெரிய இவளாட்டம் ரொம்ப சிலுப்புற..” அவளை பிடித்து இழுத்திருந்தான்..

விளக்கிலிருந்த எண்ணெய் அவன் சட்டையில் கொட்டிட சூடு தாங்காமல் அவன் முகம் சுருங்கியது.. “அச்சச்சோ..” என பதற்றத்தில் அவன் பக்கமாய் சென்ற வித்யா, “கண்ணை என்ன பெறடியிலையா வச்சிருக்க.. விளக்கு வச்சிட்டு இருக்கேன்லா.. வச்சு முடிக்குற வரைக்கும் பேச மாட்டேன்னு உனக்கு தெரியாதோ.. பெரிய இவனாட்டம் உன் வீரத்த காட்டுத.. பின்னாடியும் வீங்கி முன்னாடியும் அவிஞ்சிட்டு.. கொஞ்சமாட்டும் மண்டையில புத்தி இருந்தா தான..” சட்டையிலிருந்த எண்ணெயை தட்டிவிட முயன்றாள்..

“எனக்கு அவிஞ்சா உனக்கு என்னடி?? அதான் மூஞ்சுக்கு முன்னாடியே கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டல்ல.. இருந்தா என்ன செத்தா என்ன.. ய்யே.. தள்ளு..” கைகளை உதற, “உன் புத்தி தெரிஞ்சும் துடைக்க வந்தா.. மனசாட்சியே இல்லாம பேசுற.. கட்டிப்பேன்னு சொன்னா தான் பக்கத்துல வரணும்னு ஒரு சட்டமும் இல்ல.. நான் தானே கொட்டுனேன்.. நானே பாக்குறேன்..” தாவணியை கொண்டு துடைத்து விட்டு முகத்தை எறிடாமல் நகர்ந்தாள்..

பின்னாலேயே வந்து மறித்து நின்ற செல்வாவை, “இப்போ என்ன பிரச்சனை?? எண்ணெய கொட்டுனதுக்கு பழி வாங்க போற அதான..” புருவம் சுருக்கி முறைத்தாள் வித்யா..

“எனக்கு தான் புத்தியில்ல.. உனக்கு கொஞ்சமாச்சும் கூறு இருக்காடி.. கோயிலுக்கு வந்துருக்கோம்.. வெறுந்தலையா இருக்கன்றதே தெரியாம அலையுற..” என பேசிக்கொண்டிருந்தவன் பின்னலில் மல்லிகை சரத்தை கோர்க்க, கையிலிருந்த எண்ணெயோடு தடுக்க முடியாமல் நின்றிருந்தாள்..

“அந்த வீணா போனவன் கூட என்னமும் பண்ணிட்டு போ.. ஆனா கோயிலுக்கு வரும்போது பூவோட வா..” என உரிமையாய் கண்டிக்க, “நான் எப்பிடி வந்தா உனக்கென்னவாம்?? அதான் இருந்தா என்ன செத்தா என்னன்னு கேட்டல்ல.. அப்பிடியே போவ வேண்டியது தான..” முகத்தை திருப்பினாள்..

“அப்பிடி தான்டி வருவேன்.. என்ன பண்ணுவ.. நல்ல தாவணிய நீ எண்ணெய்யை துடைச்சு வீணாக்குனல்ல.. நானும் வந்துட்டே தான் இருப்பேன்..” கண்ணடித்து விட்டு கடக்க, “உங்க ரெண்டு பேரையும் புரிஞ்சிக்க இன்னொரு ஜென்மம் தான் எடுத்துட்டு வரணும் போல,..” என முனங்கியபடியே அருளும் இறங்கினான்..

ஊரணிக்கு தண்ணீர் எடுக்க சென்ற கயல் வீட்டுக்கு செல்லாது நேரே லிங்கத்தின் வீட்டில் தான் நின்றாள்.. “அத்தயோவ்..” என ஏலமிட்டு கொண்டே இடுப்பிலிருந்த குடத்தை திண்ணையிலே இறக்கி வைத்தாள்..

“அடியேண்டி.. நான் உன் அத்தைக்காரி தான்.. ஊருக்கே கத்தி தண்டோரா போட்டா தான் தெரியுமா??” மூச்சு வாங்கி நின்றவளை பீடியை உருட்டிக்கொண்டே கனகம் நோக்க, “இப்போவே சொல்லி வச்சா தான ஆச்சு.. நாளைக்கு கல்யாணம் காட்சி பண்ணுதப்போ என்னை ஏமாத்திட்டியன்னா..” என கேட்டாள்..

“நல்லா கேட்ட போ.. தொட்டில்ல கினுகினுன்னு ஆடிட்டு கெடந்த காலத்துலேயே என் மருமவன்னு சொன்னவ நான்.. நான் ஏண்டி உன்னை ஏமாத்தனும்..”

“இந்த தொட்டில் கதையெல்லாம் தொளதொலன்னு சதை தொங்குன வயசுலயும் உங்களுக்கு நியாவம் இருந்தா போதுமா?? இருக்க வேண்டியவங்களுக்கு இல்லையே..” என்றவளின் கழுத்து அனிச்சையாக ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தது..

“அந்த பயவுள்ளைகளுக்கு நியாவம் இருந்தா என்ன?? இல்லாட்டி என்ன?? ஊரை சுத்திட்டு கெடக்க கிறுக்கு பயலை காலை கையை ஓடிச்சாவது கட்டிக்கோடான்னு சொல்லிற மாட்டேன்.. என் தங்கம்ல.. பித்தளை குடத்தை தொப்புன்னு திண்ணையிலே போடுதியே குடம் என்னாவுறது..” கயலின் நாடியை பிடித்து கொஞ்சிய கனகத்தை பார்த்ததும் கொஞ்சமாய் இறங்கினாள்..

“அது கெடக்கு.. உங்க நொண்ணன் கிட்ட சொல்லுங்க.. மூணு வருஷ படிப்பு முடிய போவுது.. சீக்கிரம் கட்டிக்குடுக்க ஏற்பாடு பண்ணுன்னு.. சரி, இன்னைக்கு என்ன குழம்பு வச்சிருக்கிய??” என கேட்டபடியே உள்ளே நுழைந்தாள்..

அடுப்பாங்கரைக்கு சென்ற கால்கள் கட்டிலில் படுத்து கிடந்த ராமை கண்டதும் தடம் மாறியது.. கதவில் தேய்ந்துக்கொண்டு நின்ற கயலின் கொலுசில் கவனித்து விட்ட ராம் தலையை திருப்பாமலேயே, “என்னவாம்??” என கேட்டான்..

கையில் வைத்திருந்த புத்தகத்தை பார்த்த கயல், “இது அவ வாங்கி குடுத்தது தான..” என கேட்க, “ம்ம்ம் என்ன இப்போ..” என்ற பதில் மட்டுமே கிடைத்தது..

“ஒரு பக்கம் வாங்கவும் இன்னொரு பக்கம் குடுக்கவுமா நல்லா வாழுறா.. எப்பிடி தான் அண்ணனும் தம்பியும் அங்கனையே போய் விழுதியளோ தெரியல..”

“இங்க பாரு.. நீ வந்தியா என்னை பத்தி பேசுனியா போனியான்னு இரு.. அவளை பத்தி ஒரு வார்த்தை பேசுன.. அவ்ளோ தான் சொல்லிட்டேன்..” ராமின் பேச்சில் மிரட்டல் தொனிக்க, “பேசுனா என்னவாம்.. அந்த கேவலமானவளை பத்தி பேசுனா தான் என்னவாம்.. தம்பிக்காரன் கிட்ட வாங்குதா.. அண்ணன்க்காரனுக்கு குடுக்கா..” எனும் போதே ராம் விருட்டென எழுந்து அமர்ந்தான்..

“ச்சைக்.. எப்பிடி தான் முடியுதோ.. ஒரே நேரத்துல ரெண்டு பேரையும் மயக்குததுக்கு.. எல்லாத்தையும் பண்ணிட்டு உத்தமியாட்டம் ஊர்ல போய் உக்காந்துக்கிடுதா.. திரும்பி வந்ததுக்கு பிறவாவது திருந்துதாளா??” என பேசிக்கொண்டே போனவளை, “கயலேய்..” என்ற ராமின் கோபம் நிறுத்தியது..

கண்கள் சிவக்க நின்றவன், “உனக்கு அவ்ளோ தான் சொல்லிட்டேன் புள்ள.. இன்னொரு தடவை அவளை பத்தி பேசுன.. மாமன் மவன்னு பாக்க மாட்டேன்.. கோவத்துல ஏதாவது பேசுததுக்கு முன்ன இங்க இருந்து போயிரு..” என கத்தினான்..

அவன் அதட்டலில் நடுங்கி போன கிராமத்து அழகியின் கண்களில் நீர் கோர்க்க, வெளியே ஓடி வந்தாள்.. ஏக குஷியோடு வந்த செல்வா, “யே புள்ள.. வீட்டு பக்கம் போற சோலியே இல்லியோ.. இங்கனக்குள்ளேயே சுத்திட்டு கெடக்க?? என்ன அத்தானை கட்டுததுக்கு அம்புட்டு ஆர்வமா?? சொல்லு.. இன்னைக்கே கட்டிபுடுதேன்..” கயலை இழுத்து விட்டான்..

மேலும் கீழுமாய் முறைத்தவளோ, “ஒழுங்கா போயிரு.. சொல்லிட்டேன்.. இருக்க கோவத்துக்கு கடிச்சு தின்னுற போறேன்.. உன்னல்லாம் மனுஷி கட்டுவாளா?? அதான் பாத்தேனே.. கோயில்ல.. பூ வச்சத.. அவ புருஷன் கூட இவ்ளோ அழகா பூ வச்சு விட்ருக்க மாட்டான்.. எம்புட்டு ரசனை.. ச்சை.. நீ ல்லாம் பேசாத..” என்றாள்..

“கோவமா இருக்கியோ கயலேய்..” அருகில் நின்ற அருள் நலம் விசாரிக்க போய், “இல்ல கல்லா இருக்கேன்.. தம்பிக்காரன் பூ வைக்கான்.. அவ அண்ணன் காரனுக்கு புக்கை வாங்கி குடுக்கா.. கடைசில மொத்த பேர் காதுலயும் பூவை சுத்திட்டு போவா.. உக்காந்து வேடிக்கை பாருங்க.. எனக்கென்ன வந்துச்சு..” பொங்கி வழிந்த கண்ணீரை துடைத்தபடியே சென்றாள்..

அவசரத்தில் கடுகடுவென பேசி விட்ட வருத்தத்தில் வெளியில் வந்த ராமின் காதில் தெளிவாக விழுந்தது..

Post a Comment

1 Comments

  1. Enna da nadakuthu Inka nanum kayal mind set la than iruken... but unna Nampa mudiyathu mini... enna panni vaikka porama.. ore confusion ah irukku da

    ReplyDelete