Header Ads Widget

Welcome You all to Ruthitha's KKR family

Kanavu Kadhali's World

To share your valuable comments : kanavukadhali@gmail.com

திட்டமிடாத திருமலைக்கோவில் பயணம்...

 


திட்டமிடாத திருமலைக்கோவில் பயணம்...

(அந்த இடத்தோடு ஒன்றிப் போன உணர்வைத் தரவேண்டும் என்பதற்காக பேச்சுவழக்கில் எழுதப்பட்டுள்ளது.)

“சூரியன் மேற்கிலே உதிக்காது...” என்பது எவ்வளவு உண்மையோ “புலி பசித்தாலும் புல்லை தின்னாது...” என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை “நண்பர்களோட போகணும்ன்னு பிளான் பண்ணுன எந்த ட்ரிப்பும் நடக்காது” என்பது.

 தலைவர் சொல்லுற மாதிரி “எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணி பண்ணனும்”ன்னு ஆசை தான். ஆனா பிரெண்ட்ஸ் கூட போற அவுட்டிங்கை கடைசி வரை பிளான் மட்டும் தான் பண்ணமுடியும்னு நமக்கு மட்டும் தான் தெரியும். இதை ‘ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டின மாதிரி’ அப்டின்னு கூட சொல்லிக்கலாம்.

 இருந்தாலும் நாம பிளான் பண்றதை நிறுத்தமாட்டோம். அதிலேயும் “மச்சி.. இந்த வீக்எண்டு அங்க போகலாமா?? இங்க போகலாமா??” இந்த டயலாக் “மச்சி... அவ என்னை விட்டுட்டு போய்ட்டா மச்சி...” இந்த டயலாக்கை விட அதிகமா பேச்சிலர் ரூம்ல கேக்கும்.

 வேலைக்கு போனதுக்கு அப்புறமா ட்ரிப் எல்லாம் போகுறதுக்கு காசு இருக்கும்; ஆனா நேரம் தான் இருக்காது. எக்கச்சக்க கமிட்மெண்ட்ஸ் வந்துடும். படிக்கிற காலத்துல எல்லாமே இருக்கும் ஆனா போதுமான அளவுக்கு காசு இருக்காது. அப்படியே சேர்த்து வச்ச பணத்துல எங்கேயாவது போகலாம்னு பிளான் பண்ணினா கூட வீட்டில பெர்மிஷன் வாங்குறதுக்குள்ள “கண்டிப்பா போயே ஆகணுமா??” அப்படிங்கிற நிலைமைக்கு தள்ளப்பட்டுடுவோம். பசங்க வீட்ல எப்படின்னு தெரியல ஆனா பொண்ணுங்க வீட்ல இது நடக்கும். அதிலேயும் மிடில் க்ளாஸ் குடும்பத்துல பொண்ணை ஒரு நாள் பிக்னிக் அனுப்புறதுக்கு அவ அப்பா ஆயிரம் விஷயத்தை யோசிப்பாரு.

 சரி சரி... அதெல்லாம் விடுங்க. நான் பிஜி (PG) படிக்கறப்போ போன ஒரு ட்ரிப் அதுவும் என் வாழ்க்கையில மறக்க முடியாத ட்ரிப் பத்தி இங்க ஷேர் பண்ணிக்கப் போறேன். இந்த கதையில ஷாலினியா நான் ட்ராவெல் பண்ணப் போறேன்.

 முதுகலை பட்டப்படிப்பின் இரண்டாவது ஆண்டில் இறுதியில் நடந்த கூத்து இது...

 “மச்சி... இந்த வீக் எண்டு எங்கயாவது வெளியே போகலாமா??” என ஆயிரத்தி முந்நூறாவது தடவையாக இந்த கேள்வியை ஜான்சியிடம் கேட்டேன்.

 “செருப்பால அடிப்பேன் டி...” என முறைத்தாள்.

 பாவம் அவ... 600 கிலோமீட்டர் தாண்டி வந்து இங்க தங்கி படிக்கிறவளுக்கு இந்த ஊரையும் சுத்தி பாக்கணும்னு ஆசை இருக்காதா?? இருந்தாலும் வீட்டு சூழ்நிலை காரணமா நான் ஆசை காட்டி மோசம் பண்ணிட்டு இருந்தேன்.

 இந்த தடவை எனக்கே குற்ற உணர்ச்சி தோன்ற, “மச்சி.. வீக் எண்டு வெளியே போனா தானே பிரச்சனை... பேசாம காலேஜ் கட் அடிச்சிட்டு போய்ட்டா என்ன??” என்றேன்.

 அதற்குள் என் தலையில் தட்டியவாறே அருகில் வந்தமர்ந்த என் ஆருயிர் தோழி பாகீரதி “யாரு... நீங்க... கிளாஸ் கட் அடிச்சிட்டு... வெளியே போக போறீங்க... இதை நாங்க நம்பணும்...” என கேலியாக சிரித்தாள். அவளுக்கு தெரியும் நான் ஒரு பயந்தாங்குளி என்று. அதைவிட நான் பேராசிரியர்களுக்கு பயந்து போய்  ஃப்ரீ பீரியடில் கூட வகுப்பைவிட்டு எங்கும் செல்ல மாட்டேன் என்று அவள் நன்கு அறிவாள். ஒழுக்கம், கண்ணியம் என்னும் பெயரில் நான் செய்யும் அட்டூழியங்களை(!!) இரண்டு வருடமாக பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள்.

 எனக்குள் தூங்கி கொண்டிருந்த தன்மானசிங்கம் விழித்து கொள்வதற்குள் ஜான்சி நான் கூறிய வார்த்தைகளை பிடித்துக்  கொண்டாள். “போகலாம் டி... செகண்ட் இயர் முடியப் போகுது... இந்த ரெண்டு வருஷத்துல திருநெல்வேலியில எந்த இடத்தையுமே சுத்தி பாக்கல. அந்த போத்தீஸ், சரவணா ஸ்டோர்ஸ், ஆரெம்கேவி தவிர வேற எதுவும் தெரியாது டி...” என பாவமாக மூஞ்சியை வைத்து கொண்டு கேட்கவும், எனக்கு தர்மசங்கடமாகி விட்டது.

 “என்ன பண்றது??” என யோசிக்கும் போது தான் மண்டையில் பல்பு எரிந்தது... “மச்சி... நாளைக்கு நமக்கு ரெண்டே ரெண்டு அவர்(hour) தான். அதிலயும் ஏ.ஆர் சார் வரமாட்டாரு... தினேஷ் சார் மட்டும் தான்... அவருக்கும் நாளைக்கு பர்த்டே... கண்டிப்பா அவர் பேமிலி கூட வெளியே போய்டுவாரு... சோ நம்ம நாளைக்கு அவுட்டிங் போறோம்...” என்றேன்.

 “குண்டம்மா... உன்னை கொல்ல போறேன். ஒவ்வொரு தடவையும் நீ இப்டி தான் இந்த பிள்ளையை ஏமாத்திட்டே இருக்கிற...” என என்னை சீனி திட்ட “போடா புஷ்பா புருஷா... நாளைக்கு நாங்க அவுட்டிங் போறோம்... பாரு... உன் மூஞ்சியில கரியை பூசுறோம்...” என சூளுரைத்த சைக்கிள் கேப்பில் எங்கே செல்வது என யோசித்தேன்.

 “இவ்ளோ பேசுறல்ல நீ... எங்க போறீங்கன்னு சொல்லு பாப்போம்...” என தன் தோழனுக்கு துணைக்கு வந்தான் காளி.

 “அ... அதெல்லாம் பிளான் பண்ணியாச்சு...” என நான் சுதாரிக்க, “சொல்லு மேன்... எங்க போறீங்கன்னு...” என என்னை சீண்டினாள் பாகீரதி.

 ஜான்சி என்னை பார்த்து பாவமாய் விழிக்க “ஷாலினி யை நம்பினோர் கைவிடப்படார்...” என அவளுக்கு தைரியமளித்துவிட்டு “நாங்க திருச்செந்தூர் போக போறோம்... காலைல ட்ரெயின்ல போவோம்... ட்ரெயின் டிக்கெட் பதினஞ்சு ரூபா தானே... போக போக பேசிட்டே ஜாலியா இருப்போம்... அதுக்கு அப்புறம் முருகன் கோவிலுக்கு போயிட்டு, பீச்ல விளையாடிட்டு திரும்பி வந்துடுவோம்... சுத்தி பார்த்த மாதிரியும் ஆச்சுது, என்ஜாய் பண்ணின மாதிரியும் ஆச்சுது, சாமி கும்புட்ட மாதிரியும் ஆச்சுது...” என நான் ஏதோ பெரிய மாஸ்டர் பிளான் மல்லிகா லெவலுக்கு பேசி கொண்டிருக்க, ஜான்சியின் முகத்தில் சந்தோஷ அலைகள்!!

இப்போ தான் பிரென்ட்ஸ் கூட அவுட்டிங், பார்ட்டி, லாங் ட்ரைவ் மத்தபடி காஸ்டிலியான விஷயங்கள் எல்லாம். ஆனா எங்களை மாதிரி பர்ஸ்ட் பெஞ்ச் ஸ்டுடென்ட்ஸ்க்கு காலேஜ் படிக்கறப்போ சின்னதா கிளாஸ் பிரேக்ல கேன்டீன் போயிட்டு வந்தா கூட அதுவே பெரிய மெமரீஸ் தானே!!

 “சோ... ஷாலினி, ரதி, ஜான்சி, சீனி, காளி அஞ்சு பேரும் நாளைக்கு திருச்செந்தூர் போறோம்... மாஸ் காட்டுறோம்...” என மிஷன் பிளான் செய்தாயிற்று. நாங்களும் கொஞ்சம் கெத்து என காட்டுவதற்கான மானப்பிரச்சனையாகவே இதை நான் எடுத்து கொண்டேன்...

 அப்போதெல்லாம் வகுப்பில் ரூல்ஸ் பாலோ பண்றவங்க தான் எல்லாருக்கும் எதிரி. ஏன்னா எல்லாரும் சேர்ந்து ஒரு விஷயத்தை பிளான் பண்ணி செய்யாம இருக்கும் போது, நாங்க மட்டும் ஒழுங்கா அதை செஞ்சிட்டு வந்து நிப்போம். க்ளாஸ் மொத்தமும் சேர்ந்து காலேஜ் பங்க் பண்றப்போ நாங்க முதல் ஆளா வந்து அட்டெண்டன்ஸ் போட்டு எல்லாத்தையும் மாட்டி விட்டிருப்போம். இதெல்லாம் அறியாமையில செஞ்சிருந்தாலும் எங்களை சுத்தி கண்ணுக்கு தெரியாத பகைவர்கள் உருவாகியிருந்தாங்க. சோ எங்களோட கெத்தை(!) காட்ட முடிவு பண்ணியாச்சு.

 அன்றைக்கு சாயங்காலமே நாங்க அஞ்சு பேரும் ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் போய் டிராவலுக்கு தேவையான எல்லா பொருளையும் வாங்கியாச்சு. இதுல குறிப்பிட வேண்டிய விஷயம் என்னன்னா திருநெல்வேலி - திருச்செந்தூர் ட்ராவல் டைம் வெறும் ஒன்றரை மணி நேரம் தான். அந்த டிராவல்க்காக(!) நாங்க முந்தின நாளே பர்ச்சேஸ் போயிருந்தோம்.

 வாழ்க்கையில எப்பவுமே முதல் இடத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் உண்டு. உதாரணத்துக்கு முதல் காதல், முதல் முத்தம் என சொல்லிட்டே போகலாம். ஜான்சிக்கு இது 'முதல் ட்ரிப் இன் திருநெல்வேலி' என்பதால் இரவு உறக்கம் வரவில்லை போலும். இரவு பத்து மணிக்கு ஃபோன் செய்து “ஏய்... ஷாலினி ... நெஜமா போறோம் தானே... இந்த தடவையும் ஏமாத்திட மாட்ட தானே...” என பாவமாக அவள் கேட்கவும், “கண்டிப்பா போகலாம் பேபி...” என தைரியமளித்து விட்டு கான்பரன்ஸ் காலில் இதர ட்ரிப் பாட்னர்களை இணைக்க சீனி எருமை தூக்கி போட்டான் பாருங்க குண்டை... “ஷாலினி ... கண்டிப்பா போகணுமா??? திருச்செந்தூர்ல இப்போ போனா வெயிலா இருக்கும்... 11 மணிக்கு அங்க போயிட்டு சாமியையும் கும்புட முடியாது.. பீச்லயும் விளையாட முடியாது..” என...

 “சீனி... வாய மூடு... அவளே இப்போ தான் ஓகே சொல்லியிருக்கிறா... நீ அதையும் கெடுத்துடுவ போல...” என குமுறினாள் ஜான்சி. “இப்போ போறோமா இல்லையா??” என பொறுமையிழந்தவளாய் ரதி கேட்க “போலாம் ரதி... குற்றாலம் போகலாமா? இப்போ தண்ணி விழுதுன்னு எங்க அப்பா சொன்னாரு... அங்க போகலாம்..” என முன்மொழிந்தான் காளி...

 “ஏய்... ஷாலினி... ஷாலினி.. குற்றாலம் போகலாம் டி... எனக்கு குற்றாலம் போகணும்னு ஆசையா இருக்குது...” என தன் அடுத்த பாடலை பாடத் தொடங்கினாள் ஜான்சி..

 “சரி.. சரி... பேசாம ஒண்ணு பண்ணலாம்... திருமலைக்கோவில் போகலாம்... அப்டியே பார்டர்ல புரோட்டா சாப்டுட்டு வரலாம்..” என சீனி தன் கருத்தை கூற, ஒட்டுமொத்தமாக அவன் கூற்று ஆமோதிக்கப்பட்டு மறுநாள் ட்ரிப் பிளான் செய்யப்பட்டது...

 அங்கே ஜான்சி கனவில் மூழ்கியிருக்க; எனக்கோ “இதுவும் வழக்கம் போல கடைசியில கேன்சல் ஆக தானே போகுது... கடைசி நேரத்துல எவளாவது வரமாட்டேன்னு தான் சொல்ல போறா...” என்கிற எண்ணம். அசட்டு நம்பிக்கையில் இரவு முழுவதும் தூங்காமல் அமர்ந்து யூடியூபில் “கல்யாணம் முதல் காதல் வரை...” சீரியல் பார்த்துவிட்டு தூங்க செல்லும் போது அதிகாலை 4 மணி...

 அதுவும் ஃபோன் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆஃப் ஆகவே, வேறு வழியின்றி சார்ஜை ஆன் செய்துவிட்டு, கண்களை மூடிக்கொண்டேன். “யோவ்... ஷாலினி .. எழுந்திரியும்ய்யா... உம்ம ஃபிரெண்ட்ஸ் காலைல இருந்து போன் போட்டுட்டு இருக்கிறாளுங்க... நீர் பாட்டுக்கு இழுத்து போர்த்திக்கிட்டு உறங்கிக்கிட்டு இருக்கிறீரு...” என எங்கள் அறைக்கே உரித்தான சிக்னேச்சர் மொழியில் மலைப்பாம்பு @ பட்டு என் தூக்கத்தை கலைத்து, கையில் ஃபோனை திணித்தாள்...

 கண்களை திறக்காமல் “ஹலோ...” என்றேன் எதிர்முனையில் பேசுவது யாரென தெரிந்து கொள்ளாமலே... “ஷாலினி ... கிளம்பிட்டியா?? நான் வண்ணாரப்பேட்டை வந்துட்டேன்... இன்னும் பத்து நிமிஷத்துல ரயில்வே ஸ்டேஷன் வந்துடுவேன்... ரதி கிளம்பிட்டேன்னு சொன்னா... நீ எங்க இருக்கிற?? பஸ் ஏறிட்டியா??” என விடாமல் கேள்விகளை அடுக்கிக்கொண்டிருக்கும் போதே அறிந்து கொண்டேன் அது ஜான்சி தான் என...

 “அடப்பாவிகளா... அப்போ நெஜமாவே போறோமா???” என பதறியடித்து கொண்டு விடுதி குளியலறைக்கு ஓடினேன்... என் நேரத்திற்கு அங்கே கூட்டம் நிரம்பி வழிந்தது... 

 “போச்சா... இன்னைக்கு ட்ரிப் போன மாதிரி தான்...” என நினைத்துக் கொண்டிருக்கும் போதே ஒரு தெய்வம் குளித்துவிட்டு வெளியே வர, அவளுக்கு அடுத்த தெய்வம் வருவதற்குள் உள்ளே புகுந்துவிட்டது இந்த பூதம் (உள்ளே புகுந்தது நான் தான்ங்க...)

 அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் குளித்துவிட்டு வந்த என்னை ஒருமாதிரியாக பார்த்தனர் அறைத்தோழிகள் மலபம்ஸ்(மலைப்பாம்பு), கரிஞ்சப்பல்லி, கௌளிபள்ளி, பல்பெட்ஸ்(பல்லாப்பெட்டி), சோமுசூரி(சோமசுந்தரி), ரேட்குஞ்(எலிக்குஞ்சு)., இவையெல்லாம் எங்கள் அறைத்தோழிகளுக்கான எங்களது அறைக்குள் மட்டும் அழைப்பதற்காக காப்பிரைட்ஸ் வாங்கப்பட்ட செல்லப்பெயர்கள்.. 

 “யோவ்.. மலைக்கரடி... (இது எனது செல்லப்பெயர்...) எனக்கு இன்னைக்கு லேப் இருக்குது... நீ பாட்டுக்கு என் பாத்ரூமுக்குள்ள போயிட்ட...” என கௌளிபல்லி @ ராஜி கத்த “ஹலோ... நாங்க ட்ரிப் போறோம்...” என கெத்தாக சொன்னேன் நான்...

 “ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம்... ஒம்போது பொண்டாட்டி கேக்குற மாதிரி இந்த மேடம் கான்டீனுக்கு வர்றதுக்கே அவ்ளோ பில்டப் குடுக்கும்.. இதுல இவுங்க பிக்குனிக்கு போறாங்களாம்... பிக்குனிக்கு...” என இந்து@கரிஞ்சபல்லியும், பட்டு@மலபம்ஸ்ம் கெக்கரிக்க “பேசுங்க டி... பேசுங்க... போய்ட்டு வந்து உங்க எல்லாரையும் கவனிச்சுக்கிறேன்...” என மனதுக்குள் கருவிக்கொண்டே தயாரானேன் நான்...

 பக்கத்து அறைத்தோழியிடம் கெஞ்சி, கூத்தாடி, கூந்தலை  வாரிக்கொண்டு வேகமாக அறைக்கு வந்து பவுடர் பூசிக்கொண்டிருக்க “பட்டு... நம்ம ரூம்ல கொஞ்சம் சுண்ணாம்பு பொடி வாங்கி வைக்கணும்... இல்லைன்னா இந்த மலைக்கரடி எல்லாத்தையும் காலி பண்ணிடும்...” என சுசி@ரேட்குஞ் கூற “எல்லாருக்கும் இருக்கு டி...” என கூறிவிட்டு அறையைவிட்டு வெளியே வர, எதிரே வார்டன் வந்துவிட்டார்...

 “அய்யயோ... நம்ம மூஞ்சி வேற அடுத்தது காட்டும் பளிங்கு மாதிரி பண்ற தப்பை அப்டியே காட்டி குடுத்துடுமே... என்ன பண்றது??” என உள்ளுக்குள் மருகிக்கொண்டே, “சரி சமாளிப்போம்..” என்கிற ரீதியில் முகத்தை வைத்துக்கொண்டு “குட் மார்னிங் மேம்...” என்றேன்... 

 அவரும் பதிலுக்கு புன்னகைத்துவிட்டு “என்ன இவ்ளோ சீக்கிரமா காலேஜ்க்கு கிளம்பிட்ட??” என கேட்க “லேப் இருக்குது மேடம்...” என கூறிவிட்டு வேகமாக நகர்ந்தேன்... அப்புறம் “மேத்ஸ் டிபார்ட்மென்ட்க்கு என்ன லேப் ஒர்க் இருக்குது??” என கேட்டால் என்ன பதில் சொல்வதாம்?

 நான் நல்ல பொண்ணு தான்... முறைப்படி அவுட்பாஸ் வாங்கிட்டு போகலாம் தான்... இருந்தாலும் இது கடைசி வருஷம்... இதுக்கு அப்புறம் படிப்போமோ படிக்கமாட்டோமோ.. ஒரே ஒரு தடவை ஜாலியா இருந்து பார்த்தா தான் என்ன?? என்கிற மனநிலையில் கல்லூரி வாசலுக்கு சென்றதும் என் தோழர்களுக்கு ஃபோன் செய்தேன்... 

 எ(னத)ருமை தம்பிகள் சீனி @ சீனிவாசனும் காளி@காளிராஜூம் விடுதியில் தங்கியிருப்பதால் அவர்களுடன் சென்றுவிடலாம் என்னும் நோக்கில் சீனிக்கு ஃபோன் செய்தேன்.. அந்த அறிவாளி கோவிலுக்கு செல்லும்முன்னரே என்னை பலி கொடுக்கும் திட்டத்தில் இருந்திருப்பான் போல.. “ஏய்... என்ன சொல்ற ஷாலினி ?? நம்ம நெஜமாவே போறோமா?” என அவன் கேட்டதுமே நெஞ்சுவலி வராத குறை தான்... “ஷாலினி ... போச்சு போ... இன்னைக்கு ஜான்சி உன்னை சாவடிக்க போறா...” என உள்ளுக்குள் மரணஓலம் கேட்க, சற்றே சுதாரித்துக்கொண்டு “டேய்... ஸீன் போடாத... நீ கிளம்பிட்டன்னு தெரியும்... காலேஜ் முன்னாடி இருக்கிற பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்றேன்... மூடிட்டு வந்து சேரு...” என கூறிவிட்டு, அவன் பதிலை கூட கேட்காமல் போனை வைத்துவிட்டேன்...

 வைத்துவிட்டு அங்கே இருந்த பெஞ்சில் அமர்ந்தேன்... உள்ளுக்குள் சற்றே உதறல் எடுத்தது... “இவன் வருவானா மாட்டானா?? நேரம் வேற போயிட்டே இருக்குதே... கடவுளே நீ தான் காப்பாத்தணும்...” என மணியை பார்த்தவாறே அமர்ந்திருந்தேன்... “டக்.. டக்...” என கடிகார முள் நகரும் ஓசையும் “லப்... டப்...” என என் இதயம் துடிக்கும் ஓசையும் ஒருசேர கேட்க பதட்டத்தில் நெற்றியில் வழிந்த நீரை துடைத்து கொண்டேன்... 

 “ஒருவேளை ஹார்ட் அட்டாக் வந்து அல்பாயுசுல போய்டுவேனோ? இந்த லூசுங்க கூட கூட்டு சேர்ந்ததுக்கு இது ஒண்ணு தான் மிச்சம்...” என எனக்கு நானே சுய மருத்துவப்பரிசோதனை செய்து கொண்டிருக்கும் போதே சீனியும் காளியும் வந்துவிட்டனர்... 

 “டேய்... வாங்கடா நல்லவனுங்களா...” என இரண்டு எருமைகளையும் கூட்டிக்கொண்டு பேருந்தில் ஏறி, திருநெல்வேலி பழைய பேருந்து நிலையத்தில் , ரயில் நிலையத்திற்கு நடந்து செல்வதற்குள் ஜான்சியும் ரதியும் பத்துமுறைக்கு மேல் ஃபோன் செய்துவிட்டனர்... அவர்களுக்கு ஆறுதல் கூறி, ஓட்டமும் நடையுமாக உள்ளே சென்று நாங்க செல்ல வேண்டிய பிளாட்ஃபார்ம் அருகில் செல்லும் போது ஜான்சி ஒரு ராணுவ ரகசியத்தை கூறுகிறாள்... அதாவது இன்னும் டிக்கெட் எடுக்கவில்லை என... 

 “அடப்பாவி... இதை ட்ரெயின் கிளம்புனதுக்கு அப்புறம் சொல்லியிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்...” என திட்டிக்கொண்டே வேகமாக ஓடிச்சென்று ஐந்து பயணச்சீட்டுக்கள் வாங்கிவந்தான் காளி...

 ரயிலில் ஐந்து பேரும் ஒன்றாக அமருவதற்கு ஏதுவாக இருக்கையைத் தேடி பேசிக்கொண்டே நடந்து செல்ல, ஐவரும் ரயிலில் இன்ஜினை அடைந்திருந்தோம்...

 “இப்படி நடந்தே  தென்காசி போய்டலாம்ன்னா டிக்கெட் எதுக்குடா எரும?? அப்பவே ஒரு கம்பார்ட்மெண்ட்ல ஃபிரீயா தான் இருந்துச்சு... நீ தான் வேற இடம் பார்க்கலாம்னு இங்க வரைக்கும் கூட்டிட்டு வந்துட்ட...” என நான் புலம்பத் தொடங்க “சரி சரி.. பாடாத...” என்னை சமாதானம் செய்து, அழைத்து சென்று ஐவருக்கும் சற்றே சவுகரியமான இருக்கையில் அமர்ந்தோம்... 

 இருக்கையில் அமர்ந்ததுமே ஜான்சி குஷியாகிவிட்டாள்... “யாஹூ.. நம்ம ட்ரிப் போறோம்... ஊஊ...” என கூச்சலிட தொடங்கிவிட்டாள்... 

 சீனி ஒருபடி மேலே போய், “ஜிச்சிஜிச்சுச்சு டோரா.... ஜிச்சிஜிச்சுச்சு டோரா....” என பாடத் தொடங்கிவிட்டான்... 

 “வாங்க நண்பர்களே... எல்லாரும் ஒண்ணா போலாம்... முயற்சி திருவினையாக்கும்... முயன்றால் சாதிக்க முடியும்... நம்ம எங்க போறோம்??” என அவன் கேட்க, “திருமலைக்கோவிலுக்கு...” என கூச்சலிட்டனர் காளியும் ஜான்சியும்... 

 எங்கள் இருக்கையை கடந்து சென்றவர்கள் அனைவரும் எங்களை ஒருமாதிரியாக பார்த்து செல்ல, “டேய்... எல்லாரும் பாக்குறாங்க டா..” என நான் கூற, “ஏய்... சும்மா இரு லூசு... நம்ம என்ன எல்லா நாளுமா போறோம்?? ஒரு நாள் தானே... பார்த்தா பார்த்துட்டு போகட்டும்..” எனத் தேற்றினான் சீனி...

 “டேய்... ட்ரெயினுக்கு வெளியே உக்கார்ந்து எல்லாரும் ஒரு போட்டோ எடுத்துக்கலாம்டா...” என ஜான்சி அல்பத்தனமாய் கேட்க, நாங்கள் இறங்கப்போக, அதற்குள் தொடர்வண்டி நகர்ந்துவிட்டது... 

 போட்டோ எடுப்பதற்காக வெளியே போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்த நாங்கள் அனைவரும் “துண்டை காணோம்... துணியை காணோம்...” என பதறியடித்துக் கொண்டு, வேகமாக உள்ளே ஏறி அமர்ந்தோம்... 

 உள்ளே அமர்ந்து மூச்சு வாங்கிய ஒருவர் முகத்தை பார்த்து மற்றவருக்கு பரிதாபத்துக்கு பதிலாக சிரிப்பு வர, “கெக்கேபெக்கே...” என சத்தமாக சிரித்து வைத்தோம்... 

 தொடர்வண்டி நகரத் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் எனக்கு சற்றே பசியெடுக்க, “டேய் சாப்பிடலாமா?? பசிக்குது...” என மெதுவாக பேச்சை ஆரம்பித்தேன்... 

 என் ஆருயிர் தம்பி சீனியும் அதை ஆமோதிக்க, “ஓகே... சாப்பிடலாம்...” என பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது...

 எங்கள் விடுதி மெஸ்ஸில் இருந்து என் விடுதி தோழிகள் எனக்கு திருடித்தந்த வெண்பொங்கலை பிரித்து பார்க்க; அது சிமெண்டிலும் உறுதியாய் இறுகிப் போயிருந்தது... கடப்பாரையை எடுத்து (அதுதாங்க கரண்டியை எடுத்து) அந்த வெண்பொங்கலால் ஆன மலையைக் குடைந்து, சாம்பார் ஊற்றி கரைத்து, என் தோழிகளுக்கு ஊட்ட முனைகையில் படுபாவி சீனி தன் பங்குக்கு விடுதியில் இருந்து திருடிக் கொண்டு வந்திருந்த தோசைக் குவியலை நீட்டினான்...

 இங்கு குவியல் என நான் குறிப்பிடக் காரணம் அவன் கொஞ்சமாய் கொண்டு வந்திருந்த தோசைகளின் எண்ணிக்கை சுமார் நாற்பது.... என் பொங்கலை மூடிவைத்துவிட்டு அவனது தோசைகளை உண்ணத் தொடங்க, முதலில் தோசையை எடுத்து வைத்து சாம்பாரை ஊற்றி அனைவருக்கும் ஊட்டினான்...

 “அச்சோ... நெறய சாம்பார் ஊத்திட்டேன் போல...” என மீந்திருந்த சாம்பாருக்காக தோசையை எடுத்து வைத்தான்... “ச்சே... இந்த சாம்பார் பத்தாது போலயே...” என கொஞ்சம் சாம்பாரை ஊற்றினான்... தோசை காலியாகிவிட மீண்டும்... (இந்த பத்தியின் முதலில் இருந்து தொடங்கவும்...)

 இவ்வாறாக ஐந்து பேரும் நாற்பது தோசையையும் உண்டு முடித்துவிட்டோம்... (அடப்பாவிகளா ஆளுக்கு எட்டு தோசையா சாப்பிட்டீங்க என கண்ணு வைக்காதீங்க... ஊர் சுத்த வலு வேணாமா?) 

 “ஹப்ப்பாடா... சாப்பிட்டு முடிச்சாச்சு...” என ஏப்பம் விட அடுத்ததாக பையில் இருந்து மாதுளம் பழத்தை எடுத்தான் என் தம்பி... “டேய்... இது என்னடா??” என நாங்கள் நால்வரும் பதற, “சாப்பிட்டு முடிச்சதும் ஃப்ரூட்ஸ் சாப்பிட்டா நல்லதுன்னு எங்க அம்மா சொல்லியிருக்கிறாங்க...”  என அனைவர் வாயிலும் திணித்தான்... 

 வழிநெடுக கேலியும் கிண்டலுமாக தென்காசியை சென்றடைந்தோம்... தென்காசி ரயில் நிலையத்தில் இறங்கியதுமே எங்களது டூரிஸ்ட் கைட் திரு.சீனிவாசன் அவர்கள் எல்லாம் தெரிந்த ஞானி போல, “ஏய்... இங்க இருந்து புது பஸ் ஸ்டான்ட் பக்கம் தான்... அங்கே போனா திருமலைக்கோவில் போறதுக்கு அஞ்சு நிமிசத்துக்கு ஒரு பஸ் இருக்குது... வாங்க...” என முன்னால் நடந்தான்...

 “எப்பவும் செங்கோட்டை வழியா போறதுக்கு பழைய பஸ் ஸ்டாண்டுல தான் பஸ் வரும்...” என என் தந்தை என்றோ கூறியது நினைவு வர, “டேய்... பழைய பஸ் ஸ்டாண்ட் போகணும்டா...” என்றேன்...

 திரு.சீனிவாசன் அவர்கள் சற்றே கர்வத்துடன் “இது உங்க ஊரா இல்ல எங்க ஊரா?? இந்த தென்காசி என்னோட கோட்டை... இங்க இருக்கிற எல்லா சந்து பொந்தும் இந்த சீனிவாசனுக்கு அத்துப்படி...” என பஞ்ச் டயலாக் அடித்துவிட்டு நடந்தான்...

 “பாரு.. அங்கே போய்ட்டு திரும்ப வரப்போறோம் பாரு... எங்க அப்பா எப்பவும் சரியா தான் சொல்லுவாங்க...” என நான் புலம்பிக்கொண்டே வருவதை பார்த்த என் தோழிகள்; காளியிடம் ஏதாவது செய்யுமாறு கூற அவன் அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் அண்ணாவிடம் கேட்க, அவரோ “நீங்க திருமலைக்கோவில் போவணும்ன்னா பழைய பஸ் ஸ்டாண்டுக்கு தான் தம்பி போணும்...” எனக் கூற, சீனியை எரித்துவிடுவதைப்  போல முறைத்தாள் ஜான்சி... 

 “சரி... சரி... பஸ் ஸ்டாண்டுக்கு போகணும்... அது புது பஸ் ஸ்டாண்டா இருந்தா என்ன பழைய பஸ் ஸ்டாண்டா இருந்தா என்ன??” என சமாளித்து கொண்டு எங்கள் கைகளில் சிக்காமல் முன்னால் நடந்தான் சீனி... 

 “மவனே.. கிளாசுக்கு வா... எல்லாரும் சேர்ந்து உன்னை கவனிச்சுக்கிறோம்...” என மனதிற்குள் கருவிக்கொண்டு பின்னால் நடந்தோம் நாங்கள்...

 பழைய பேருந்து நிலையத்தை அடையும் போது நேரம் சரியாக காலை 11 மணி... பேருந்து நிலையத்தில் பழக்கடை வைத்திருந்த ஒரு அண்ணாவிடம் விசாரிக்க, “திருமலைக்கோவில் போறதுக்கு பஸ் 12 மணிக்கு மேல தான் வரும் தம்பி...” என்றுவிட்டார்... 

 “போச்சா... இன்னும் ஒரு மணி நேரம் இங்க வெறுமனே என்ன செய்யுறது?? வெயில் வேற மண்டையை பொளக்குதே...” என புலம்பத் தொடங்கியிருந்தாள் ரதி... 

 ரதியின் புலம்பலை பொறுக்கமாட்டாமல் “மச்சி... இங்க பக்கத்துல தான் உலகம்மன் கோவில் இருக்குது... போகலாமா??” என நான் கேட்க, “ஏய்... ஷாலினி ... லூசு மாதிரி பேசாத.. அங்க போனா திரும்ப இங்க வர்றதுக்கு கஷ்டம்...” என முட்டுக்கட்டை போட்டான் சீனி..

 “இங்க இருந்து நடந்து போறதுக்கு ஜஸ்ட் ஒரு அஞ்சு நிமிஷம் ஆகுமா?? போகலாம் டா... ப்ளீஸ்...” என நான் சற்றே கெஞ்சும் தொனியில் கேட்க “சரி... போ.. போய் தொலைவோம்....” என வேண்டாவெறுப்பாக சம்மதித்தான் சீனி... 

 இங்கு உலகம்மன் கோவில் என நான் குறிப்பிட்ட காசி விஸ்வநாதர் கோவில் தென்காசியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலம் உலகம்மன் கோயில் என்றும், தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப்பெறுகிறது.

 இத்தலத்தின் மூலவர் காசிவிசுவநாதர், தாயார் உலகம்மை.

 இந்த கோவிலுக்கு ஒரு அழகான கதை உள்ளது... அது என்னவென்றால் முன்னொரு காலத்தில் செண்பகப்பொழிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராக்கிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி, பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம் செண்பக வனத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தைக் காணலாம் என்றும் அதற்கு கோயில் கட்டுமாறும் கூறினார். அதன் காரணம்  “தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டு...” என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று பெயர்பெற்றதாக வரலாறுகள் கூறுகின்றன... 

 கோவில் கட்டப்பட்டதற்கான வரலாற்றை நான் கூறிமுடிக்கும் போதே கோவில் வாசலை அடைந்திருந்தோம்... 175 அடி உயரமும், வடக்கு  தெற்காக 110 அடி நீளமும், கிழக்கு மேற்காக 84 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்டமான கோவிலை பார்க்கையில் ப்ரம்மிப்பாக இருந்தது... 

 "ஏய்... ரொம்ப சூப்பரா இருக்குது சீனி உங்க ஊரு... அதிலயும் இந்த கோபுரம் ப்ரம்மாண்டமா இருக்குது...” என ஜான்சி தனது போனில் கோபுரத்தை புகைப்படம் எடுக்க முயற்சித்துக்கொண்டிருக்க, “மச்சி... இந்த கோபுரம் கட்டிமுடிக்கிறதுக்கு மட்டும் ஆறு வருஷம் ஆச்சுதாம்... கூகிள் பண்ணுனேன்...” என பொது அறிவு தகவலை அள்ளித் தெறித்தாள் ரதி...

  ”யம்மா... கோவில் நடையை சாத்த போறாங்க... போகணும்னா போய் சாமி கும்புடுங்க...” என அங்கே பூ கட்டிக்கொண்டிருந்த ஒரு அக்கா கூற, பதறியடித்துக்கொண்டு செருப்பை கழற்றிவிட்டு வேகமாக உள்ளே ஓடினோம்... 

 கோபுரத்தினுள் நுழையும் போது கோவிலுக்குள்ளிருந்தும் பாதி பகுதி நுழைந்தபின் முதுகுக்குப் பின்னிருந்தும் (கோவிலுக்கு வெளியிலிருந்தும்) தென்றல் காற்று வீச, லயித்து போய் நின்றோம்... “ஏய்... ஷாலினி ... இந்த மாதிரி உள்ளே இருந்து பாதி, வெளியே இருந்து பாதின்னு காத்து எங்கேயும் வீசாது.. இது இந்த கோவிலோட சிறப்பு” என ஐயா சீனிவாசன் கூறிக்கொண்டிருக்கும் போதே கோவில் நடை சாத்தப்பட்டுவிட்டது... 

 “போச்சா... எல்லாம் உன்னால தான்...” என நான் சீனியை குற்றம்சாட்ட, “எல்லாம் உன்னால தான் லூசு.. எங்களை இவ்ளோ தூரம் நடக்க வச்சு கூட்டிட்டு வந்து இப்படி ஆகிருச்சு...” என அவனும் பதிலுக்கு என்னை குற்றம்சாட்டினான்... 

 “இதுங்க வேற நேரம் காலம் புரியாம சண்டை போட்டுக்கிட்டு...” என மூவரும் எங்களைப் பார்த்து முறைக்க, “ஏய்... சாமியை பார்க்க முடியலைன்னா என்ன? இங்க சுத்தி பிள்ளையார் கோவில், மடமெல்லாம் இருக்குது... நல்லா இருக்கும் வாங்க...” என கோவில் வளாகத்தில் அமைந்திருந்த எட்டு விநாயகர் கோவில்களையும், எட்டு மடங்களையும் சுற்றிக்காட்டினான் சீனி... எட்டு திசைகளிலும் எட்டு பெயர்களில் வீற்றிருந்தார் விநாயகர்... மங்கலம் பயில, வேதம் ஓத, யோகம் பயில, உபதேசம் பெற ஒவ்வொரு தேவைக்கும் தனித்தனியே அமைக்கப்பட்டிருந்த மடங்களை பார்த்து பாண்டியர் காலத்து வாழ்க்கை முறைகளை அறிந்து வியந்தவாறே நடந்தோம் நாங்கள்... நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட ரதிதேவி, மன்மதனின் சிலைகளையும் பார்த்து “அந்தக்காலத்துல எப்படிலாம் நம்ம ஆளுங்க ரசனையோட இருந்திருக்கிறாங்க பாரு...” என பேசிக்கொண்டோம்...

 கோவில் வளாகத்தை ஒருமுறை சுற்றிவிட்டு மீண்டும் கோவில் முகப்பு பகுதிக்கு வர, அங்கே இருந்த பிரசாத ஸ்டாலில் சில பொருட்களை வாங்கிக்கொண்டோம்... 

 “ஏய்... மணி 12 ஆக போகுது... பஸ் வந்துடும்...” என ஜான்சி நினைவுபடுத்த, வேகமாக நடந்து பேருந்து நிலையத்தை அடைய, வெயிலின் தாக்கம் சற்றே அதிகரித்திருந்தது... 

 விரைவாக நடந்து வந்ததில் அனைவருக்கும் தாகம் ஏற்பட, கொண்டு வந்திருந்த மூன்று பாட்டில் நீரும் காலியாகியிருந்தது... 

 “அண்ணா... மணி பன்னிரண்டு ஆச்சுது... பஸ் இன்னும் வரலியா? இல்லை போய்டுச்சா??” என அதே பழக்கடை அண்ணாவிடம் விசாரிக்க, “பன்னிரண்டு மணின்னா சரியா பன்னிரண்டு மணிக்கு வராதும்மா... கொஞ்சம் முன்னபின்ன ஆகும்...” என அசால்டாக கூறிவிட்டு எலுமிச்சை பழச்சாறு பிழிவதில் பிஸியாகிவிட்டார் அவர்...

 அனைவரும் கோரஸாக எங்கள் டூரிஸ்ட் கைட் அண்ணன் சீனி அவர்களை முறைக்க, பேருந்து ஓட்டுநர் புண்ணியவான் என்றைக்கும் இல்லாமல் அன்று சீக்கிரமே வந்துவிட்டார்... 

 “அப்பனே முருகா... நல்லவேளை உன்னை பாக்கறதுக்கு நீயே சீக்கிரமா பஸ் அனுப்பி வச்சிட்ட...” என மனதிற்குள் முருகனுக்கு நன்றி நவில்ந்து விட்டு பேருந்தில் ஏறி அமர்ந்தோம். ரதியும் காளியும் ஒரு இருக்கையில் அமர, ஜான்சியும் சீனியும் ஒரு இருக்கையில் அமர்ந்துவிட்டு என்னையும் அழைத்தனர்... 

 “நான் வரல... நீங்க உக்காருங்க...” என தனியே ஒரு இருக்கையில் சென்று அமர்ந்து, ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்... தென்காசியைக் கடந்ததுமே சற்றே குளிர்ந்த காற்று வீசத் தொடங்கிவிட்டது... செங்கோட்டை என்பது கிட்டத்தட்ட கேரளாவின் அருகே இருக்கும் ஊர் அல்லவா?? கேரளாவின் வாசம் சற்றே வீசிக்கொண்டிருந்தது... அப்படியே மழைச்சாரலும் தான்... அந்த சாரல் முகத்தில் பட, கிறக்கத்தில் கண்களை மூடியவள் தான்... “ஏய்... எருமை.. கோவில் வந்துருச்சு... எழுந்திரிச்சி வரப்போறியா இல்ல திரும்ப தென்காசிக்கே போகப்போறியா??” என்ற ஜான்சியின் அதட்டலில் தான் விழித்துக்கொண்டேன்... நல்லவேளையாக தூங்கிவிட்டேன்... இல்லையென்றால் வழிநெடுக இந்த அறிவுஜீவிகள் பேசிக்கொண்டதையெல்லாம் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்... 

 திருமலைக்கோவில் முருகன் வீற்றிருக்கும் திருத்தலமாகும்... இது பண்பொழியில் உள்ளது... இங்கு இருக்கும் முருகருக்கு குமாரசுவாமி என்னும் சிறப்புப்பெயர் உள்ளது.. இந்த கோவிலின் சிறப்பு என்னவெனில் இது விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நட்சத்திர ஆலயமாகும்... 

 மலையின் உச்சியில் தான் வீற்றிருந்தார் எம்பெருமான் முருகன்... மலையடிவாரத்தில் அடர்த்தியான ஆலமரம் இருக்க, சிலுசிலுவென காற்று வீசிக்கொண்டிருந்தது... 

 அந்த காற்றை நான் அனுபவித்துக்கொண்டிருக்கும் போதே கரடி காளி, “ஷாலினி ... நீங்க இங்க நின்னு காற்றை ரசிச்சிட்டு இரு... சரியா? நாங்க மட்டும் மேலே போய் சாமி கும்பிட்டுவிட்டு வர்றோம்...” என என் ரசனையை தடைசெய்தான்... 

 அங்கே இருந்த ஆட்டோக்காரர், “தம்பி... மலைக்கு மேலே போறதுக்கு ஒரு ஆளுக்கு முப்பது ரூபா... போகலாமா??” என கேட்க , “அஞ்சு பேர் வந்திருக்கிறோம்... அப்போ நூத்தைம்பது ரூபா... எதுக்கு அவ்ளோ செலவு பண்ணனும்?? நடந்தே போவோம்... காசு மிச்சம்...” என மனதிற்குள் கணக்கு பார்த்த சீனி, காளி ஆகிய இரண்டு கருப்பு ஆடுகளும், “ஆட்டோ எல்லாம் வயசானவங்களுக்கு தான்ப்பா... நாம வயசு பசங்க தானே... நடந்து போகலாம்.. அப்போ தான் முருகர் நம்ம வேண்டுதலை ஏத்துப்பாரு...” என எங்களை சமாதானம் செய்து, மதியம் 1 மணிக்கு உச்சிவெயிலில் பாதயாத்திரைக்கு தயார் செய்தனர்... 

 நாங்களும் சுற்றி பார்க்கும் ஆர்வத்தில் மலையை ஏறிட்டு பார்க்க, தூரமாக இருந்து முருகப் பெருமான் அழைப்பது போல தோன்ற, செருப்பை கழற்றி மலையடிவாரத்தில் பத்திரப்படுத்திவிட்டு ஏறத தொடங்கினோம்... 

 பத்துப்படிகள் ஏறியபிறகுதான் வெயிலின் தாக்கம் பாதத்தில் உரைக்கத் தொடங்கியது... “டேய்... முடியல டா... கீழே போய் ஆட்டோல போவோம்...” என நான் பின்வாங்க, “இப்போ நீ நடந்து வந்தா தான் உனக்கு நல்ல புருஷன் கிடைப்பான்...” என என்னை மிரட்டி அழைத்து சென்றனர் என் ஆருயிர் தோழமைகள்... 

 நல்லவேளை கோவிலை மலை உச்சியில் அமைத்த புண்ணியவான்கள் படிக்கட்டுகளின் ஊடே ஆங்காங்கே ஓய்வுக்கூடங்களை அமைத்து வைத்திருந்தனர்... “முருகா... உன் பெருமையே பெருமை...” என மனதிற்குள் நினைத்துக்கொண்டு படிகளில் அடியெடுத்து வைத்தேன் நான்... 

 முதல் ஓய்வுக்கூடத்தில் அமர்ந்து ஓய்வெடுக்கும் போதே அடுத்த ஓய்வுக்கூடத்தை அடைவதற்கு எத்தனை படிகள் என எண்ணிவைத்துவிடுவேன் நான்... அங்கிருந்து கிளம்பியதும் கடகடவென கண்களை மூடிக்கொண்டு படியேறி கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்த ஓய்வு கூடத்தை அடைந்துவிடுவேன்... 

 இந்த ஓய்வு கூடங்கள் பற்றி நான் சொல்லியே ஆகவேண்டும்.. ஓய்வு கூடங்கள் வெறும் கூடங்களாக  மட்டுமல்லாமல் ஒவ்வொரு கூடத்திலும் ஒரு தெய்வத்தை வைத்திருந்தனர்... எனவே எந்த இடத்திலும் எந்த தவறும் நிகழாது என்கிற நோக்கத்தில்... ஆனாலும் நம்ம ஊர் அறிவாளிகள் அந்த கூடத்தின் சுவர்களிலும் “கார்த்திக் லவ் ஸ்ருதி...” “பாலா லவ் மோனிஷா...” “ராஜ் லவ் ராஜி...” என கிறுக்க மறக்கவில்லை... பாடத்தை படிச்சு பரீட்சை எழுத சொன்னா நம்ம மக்கள் என்ன பண்ணிட்டு இருக்கிறாங்கன்னு பாருங்க என நினைத்துக்கொண்டேன்...

 மொத்தம் 624 படிக்கட்டுகள்.. போகப் போக படிக்கட்டின் உயரம் அதிகரிக்க என்னால் நடக்க முடியவில்லை... வயிற்றில் ஒரு பிரச்சனைக்காக ட்ரீட்மெண்ட்க்கு சென்று கொண்டிருந்ததை காரணம் காட்டி கோவிலை அடைவதற்கு முந்தைய ஓய்வுகூடத்திலேயே சாய்ந்து அமர்ந்துவிட்டேன்... அவர்கள் நால்வரும் என்னை அழைக்க, “இல்ல... நீங்க போய் எனக்கும் சேர்த்து வேண்டிக்கோங்க...” என கூறிவிட்டேன்...

 தண்ணீர் குடித்துவிட்டு சுற்றும் முற்றும் பார்க்க எனக்கே பரவசம் தாங்கவில்லை... ஏனென்றால் நான் நிற்பது மலை உச்சியில்... சிலுசிலுவென காற்று வீசிக்கொண்டிருந்தது... ஒருபுறம் சாரை சாரையாக வாழை மரங்கள் தெரிய, மறுபுறம் தென்னைமரங்கள் கூட்டமாக தெரிந்தது... கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பச்சையாக நெற்பயிர்கள் தெரிய, “யாஹூ...” என கூச்சலிட்டேன்... பச்சை வயலை தாண்டி தூரத்தில் காற்றாலைகள் தெரிய “வாவ்... சூப்பர்... இவ்ளோ அழகா இருக்குது...” என நான் கண்ட காட்சியை கேமராவில் பதிவு செய்துகொண்டேன்.. 

 நான் அந்த காட்சியை ரசித்து கொண்டிருந்ததை கவனித்த எதிரில் அமர்ந்திருந்த இளம் தம்பதி “என்னம்மா... இப்போ தான் முதல் முதலா இங்க வர்றியா??” எனக் கேட்டனர்... 

 “ஆ... ஆமா...” என நான் உற்சாகமாக பதிலளிக்க “இவ்ளோ தூரம் வந்துட்ட.. மேலே போய் முருகரை பார்த்திட்டு வரலாம்ல...” என அந்த ஆண் கூற, “இல்ல அண்ணா... ரொம்ப கால் வலிக்குது... பரவால்ல....” என சமாளித்தேன் நான்... 

 “எல்லாரும் முருகரை பாக்கறதுக்கு ஆசைப்படுவாங்க...” என்ற அந்த பெண்; “கிறிஸ்டியனா நீ??” என கேட்டார்... “ஆமா...” என நான் மெல்ல தயங்கியவாறே கூற, அவர்கள் இருவரும் நமட்டுச்சிரிப்பு சிரித்தனர்... 

 “எ... என்ன?? எதுக்காக சிரிக்குறீங்க??” என புரியாமல் விழித்தேன் நான்... 

 “அதுவா? இவங்களும் கிறிஸ்டியன் தான்...” என அந்த அண்ணா தனது மனைவியை சுட்டிக்காட்டி கூற, “ஓஹோ....” என நானும் பதிலுக்கு சிரித்தேன்... 

 “பெயர் என்ன??” என அந்த அக்கா கேட்க “ஷாலினி ..” என நான் கூறியதும் இருவரும் மீண்டும் சிரித்தனர்... 

 நான் ஒருமாதிரியாக பார்த்ததும், சிரிப்பை நிறுத்திவிட்டு “இவங்க பெயரும் ஷாலினி தான்...” என அந்த அண்ணா கூறவும் அதிர்ச்சியாக இருந்தது... 

 சுதாரித்துக்கொண்டு, “உங்க பெயர் என்ன அண்ணா??” என நான் கேட்க, அவர் கூறியதைக் கேட்டதும் எனக்கு அதிர்ச்சி!! ஆச்சரியத்தில் நெஞ்சே வெடித்துவிடும் போல இருந்தது... ஒருகையால் நெஞ்சை பிடித்துக்கொண்டு ஒரு கையால் வாயை பொத்திக்கொண்டேன்... உண்மையில் அந்த அண்ணாவின் பெயரும் என்னவரின் பெயரும் ஒன்று தான்.. 

 “என்னம்மா?? என்ன ஆச்சுது??” என அவர்கள் பதற, நான் உண்மையைக் கூற, இருவரும் புன்னகைத்தனர்... “நாங்களும் லவ் மேரேஜ் தான்... வேற வேற மதம்ன்னு வீட்டுல ஒத்துக்க மாட்டாங்கன்னு தான் நெனச்சோம்.... ஆனா ரெண்டு பேர் வீட்டிலேயும் பரிபூரண சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.. எல்லாம் முருகன் அருளாலே தான்...” என அவர்கள் கூற, “அப்பனே முருகா... கொஞ்சம் நமக்கும் கருணை காட்டுப்பா...” என சைலண்டாக ரெக்வஸ்ட் அனுப்பி வைத்தேன்...

 அதற்குள் முருகனை தரிசிக்க சென்ற எனது தோழர் மக்கள் வந்துவிட, அவர்களுடன் அமர்ந்து பேசத் தொடங்கினேன்.. அந்த அண்ணாவும் அக்காவும், “ஆல் தி பெஸ்ட்...” கூறிவிட்டு விடைபெற, சிநேகமாக புன்னகைத்துவைத்தேன்...

 மலை உச்சியில் இருந்த ஓய்வுக்கூடம் சிலுசிலுவென வீசிய தென்றல் காற்றால் சற்றே குளிர்ச்சியாக இருக்க, ஐவரும் தரையில் அமர்ந்தோம்... ரதி கொண்டு வந்திருந்த புளி சாதத்தை ஆளுக்கொரு உருண்டையாக உருட்டி உண்டு முடித்ததும், “ஏ... இந்த இடத்துல காத்து நல்லா வீசுதுப்பா... அப்டியே ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு போகலாம்ப்பா...” என நான் கூற “கொன்னுபுடுவேன் டி... ஒழுங்கா கிளம்பு... இப்பவே மணி ரெண்டாச்சுது... உங்க ஹாஸ்டலுக்கு ஆறு மணிக்குள்ள போகணும்... ஞாபகம் இருக்குதா??” என என் மகிழ்ச்சிக்கு தடைபோட்டாள் ரதி... 

 “ஏய்... ரதி... இப்போ தான் சாப்பிட்டிருக்கிறோம்... அதுக்குள்ள எப்படி நடக்க முடியும்?? கொஞ்ச நேரம் இருந்துட்டு போகலாம் டி...” என ஜான்சி கூற, அனைவரும் அமர்ந்தனர்... நால்வரும் ஏதேதோ பேசி கொண்டிருக்க, எனக்கு போர் அடித்தது.. “பேசாம கனவு உலகத்துக்கு போய் நம்ம ஆளுகூட டூயட் பாடுவோம்... ஆனா தூங்குனா தானே கனவு வரும்.. இந்த எருமைங்க தூங்க விடாதுங்களே...” என நான் திருதிருவென விழித்து கொண்டிருக்க, நால்வரும் தரையில் அமர்ந்து ஜனவரி, பிப்ரவரி விளையாடத்  தொடங்கியிருந்தனர்... 

 “ஐ... இது நல்லா இருக்குதே...” என நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன்... இந்த உலகத்துலேயே க்ளாஸ் கட் அடிச்சிட்டு, ஹாஸ்டல்ல இருந்து திருட்டுத்தனமா கிளம்பி வந்து, செலவு பண்ணி, கஷ்டப்பட்டு மலையேறி வந்து ஜனவரி பிப்ரவரி விளையாடுற முதல் கும்பல் நம்ம கும்பல் தான் டா...” என சுய கேலி செய்துகொண்டே விளையாடி முடித்தோம்... அடுத்ததாக “அத்தைக்கா புதைக்கா தாம்பாளம்...”, “ஓரமா கடைக்கு போனா... ஒரு டஜன் மிட்டாய் வாங்குனா, குடு குடு ராஜா..” என விளையாடிவிட்டு, இறங்க தயாரானோம்.. 

 ஏறுவது கடினம் ஆனால் இறங்குவது எளிதாகையால் வேகமாக மலையிருந்து இறங்கிவிட்டோம்.. இப்போது பேருந்திற்கு காத்திருப்பது பெரிய முட்டாள்தனம் என்பதை உணர்ந்து ஆட்டோவில் செங்கோட்டையை அடைந்தோம்.. 

 ஆட்டோவில் பயணித்த நேரத்தில் ஒரே கேலியும் கிண்டலும் தான்... ரஹ்மத் பரோட்டா ஸ்டாலை அடைந்ததும் உள்ளே சென்று அமர்ந்தோம்.. 

 நீங்கள் உங்கள் வாழ்வில் குற்றாலத்திற்கு சென்றிருந்தால் கண்டிப்பாக செங்கோட்டை சென்று பார்டர் பரோட்டாவை ருசி பார்க்காமல் வந்திருக்க வாய்ப்பே இல்லை... செல்லாதவர்களுக்கு ஒரு ஃப்ரீ அட்வைஸ்.. வாழ்க்கையை வாழணும்னு நெனச்சா தயவு செஞ்சு ஒரு தடவையாவது அங்கே போய் பரோட்டா சாப்பிட்டுவிட்டு வந்துடுங்க... இதை நான் ஏன் சொல்றேன்னா அங்கே பரோட்டா சாப்பிட்டதுக்கு அப்புறமா எப்படி டா இவ்ளோ நாள் இதை மிஸ் பண்ணினோம்னு பீல் பண்ணுனேன்...

 ஒரு சாதாரண பரோட்டாவுக்காகவா இவ்ளோ ஃபீல் பண்ற அப்படின்னு நீங்க கேக்காதீங்க... ஏன்னா நானும் அப்படி நெறய பேர்கிட்டே கேட்டிருக்கிறேன்... ஆனா அந்த பரோட்டா மாதிரி ஒரு பரோட்டாவை என் வாழ்க்கையில சாப்பிட்டதே இல்ல... அப்படி ஒரு ருசி!! அதிலேயும் தொட்டுக்க வச்சிருந்த குருமா வேற லெவல்!!

 “ஷாலினி ... உனக்கு ஒரு ஆம்லெட்??” என சீனி கேட்க, தலையாட்டிவைத்தேன்... வாழ்க்கையில் அப்படி ஒரு ஆம்லெட் நான் சாப்பிட்டதே இல்ல... ஒரு ஆம்லெட் கூட இவ்ளோ ருசியா போட முடியும்னு அப்போதான் தெரிஞ்சிகிட்டேன்... “ஷாலினி ... கலக்கி??” என காளிராஜ் கேட்க “எதைடா கலக்க போற??” என நான் பேக்கு மாதிரி கேட்க, பக்கத்து டேபிளில் இருந்த பையன் ஒருமாதிரியாக பார்த்தான்... 

 “ஏய்.. லூசு... கலக்கின்னா தெரியாதா?? அதுவும் முட்டையோட ஒரு டிஷ் தான்...” என சீனி கூற “அது எப்படி பண்ணுவாங்க??” என ஆர்வமாக கேட்டேன் நான்... “அதாவது முட்டையை நல்லா அடிச்சு, அதோட கொஞ்சமா வெங்காயம், கரம் மசாலா சேர்த்து நல்லா அடிச்சு கல்லுல ஊத்தி சுத்தி இருக்கிறதையெல்லாம் உள்ளே இழுத்து மேலே போட்டு தருவாங்க... கொஞ்சம் அவிஞ்சும், கொஞ்சம் அவியாமலும்... டேஸ்ட் பண்ணு.... நல்லா இருக்கும்...” என கலக்கி வாங்கி கொடுத்தான்... 

 அட அட அட... அப்படி ஒரு சுவை!! உண்மையில் அப்படி ஒரு சுவை!! அதை நினைத்தால் இப்பொழுதுகூட நாக்குல எச்சி ஊறுது... இது நடந்து வருஷங்கள் ஆகுது ஆனாலும் ஒவ்வொரு தடவை நினைக்கும் போதும் அதே பீல் வருது... 

 அடுத்ததா ஒரு மசால் கலக்கி வாங்கி தர, அதுவும் வேற லெவல்!! பெப்பர் சிக்கன் ஆர்டர் செய்தான் காளி... அதை சொல்லி என்னோடு சேர்த்து, உங்கள் பசியையும் தூண்ட நான் தயாராக இல்லை... 

 இவ்வாறு செங்கோட்டை பார்டர் பரோட்டா ஸ்டாலில் இருந்து வயிறும், மனமும் நிறைய வெளியே வந்து பேருந்தில் தென்காசி புதிய பேருந்து நிலையத்தை அடைந்தோம்... 

 திருநெல்வேலி செல்லும் பேருந்தின் கடைசி இருக்கையில் காளிராஜ், பாகீரதி, ஜான்சிராணி, சீனிவாசன், ஷாலினி  என வரிசையாக அமர்ந்துகொண்டோம்... கடைசி இருக்கையில் அமர்ந்தால் பிரயாணத்தில் தூக்கிப்போடும் போது ஜாலியாக இருக்கும் என நினைத்து அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டி அமர்ந்தோம்...

 அமர்ந்த சில நிமிடங்களிலேயே பேருந்து கிளம்பிவிட்டது.. பேருந்து கிளம்பியது தான் தாமதம்... சீனி ஹைப்பர் ஆகிவிட்டான்... எப்போதும் சீனி ஹைப்பர் ஆகிவிட்டால் அவனை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது சிரமம்... அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமும் இல்ல... ஏன்னா அவன் செய்யுற ஒவ்வொரு விஷயமும் ரொம்ப காமெடியா இருக்கும்... எங்களோட ஸ்ட்ரெஸ் பஸ்டர் அவன் தான்... 

 பேருந்து கிளம்பிய அடுத்த நொடியே குரலை மாற்றி பெண்குரலில் “அடி ஆத்தாடி...” என பாடத் தொடங்கினான்... அனைவரும் பின்னால் திரும்பி பார்க்க, சீட்டுக்கு பின்னால் மறைந்துகொண்டான்.. அவர்கள் அனைவரும் அனைவருக்கும் தெரியும் வகையில் அமர்ந்திருந்த காளியை பார்த்து முறைக்க, அவனோ பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்தான்..

 அனைவரும் முன்னால் திரும்பிக்கொள்ள, அடுத்த வரியை பாடத் தொடங்கினான் சீனி.. மீண்டும் அவர்கள் திரும்பி பார்க்க கண்ணாமூச்சி ஆட்டத்தைத் தொடர்ந்தான் சீனி... 

 “முழுசா நனைஞ்ச அப்புறம் முக்காடு எதுக்கு??” என்கிற எண்ணத்தில் காளியும், “கொட்டப்பாக்கு... கொழுந்து வெத்தலை...” பாடலை குரலைமாற்றி பாட, எங்கள் மூவருக்கும் சிரித்து சிரித்து வயிறு வலி வந்தது தான் மிச்சம்...

 அடுத்ததாக சீனி என்னும் குரங்கு முன் சீட்டில்  அமர்ந்திருந்த இரண்டு வழுக்கை விழுந்த அங்கிள்கள் தலையிலும் வெற்று பாட்டிலால் அடித்து இசையெழுப்புவது போல பாவனை செய்ய, அதில் ஒரு அங்கிள் திரும்பிவிட, வழக்கம் போல குனிந்து கொண்டான்... 

 அவர் என்னை பார்த்து முறைக்க, இரண்டு தம்பிகளும் வழிநெடுக குறும்பு செய்ய, அவர்கள் குறும்புகளை ரசித்தவாறே கல்லூரியை அடைந்தோம் நாங்கள்... 

 அப்புறம் என்ன?? விடுதிக்கு சென்று வெறுப்பேற்றும் படலம் தான்... சம்பவம் முடிந்து இரண்டு மாதம் ஆனபிறகும் அதையே சொல்லி சொல்லி சாவடித்துக் கொண்டிருந்தேன்... போதாக்குறைக்கு என் குடும்பத்தில் இருப்போரையும் கடுப்பேற்றினேன்... 

 இன்று எத்தனையோ தூரமான பிரதேசங்களுக்கு முறைப்படி திட்டமிட்டு சென்று, எவ்வளவு விலை உயர்ந்த பொருள்களை வாங்கினாலும் அன்று திட்டமிடாமல் சொற்ப பணத்தில் சென்று வந்த பயணத்தில் கிடைத்த மனநிறைவு கிட்டுவதில்லை... 

 இப்போதும் எங்காவது சுற்றுலா சென்றுவிட்டு வந்த பின்னர் “ட்ரிப் எப்படி?? சூப்பரா?? ஹாப்பியா??” என யாரேனும் கேட்கையில் “ஹாப்பி தான்... பட் திருமலைக்கோவில் ட்ரிப்பை விட கம்மி தான்...” என்பதே எனது பதில்... என்றும் எனது பேவரைட் ட்ரிப் “திட்டமிடாத திருமலைக்கோவில்” ட்ரிப் தான்...

Post a Comment

0 Comments