Header Ads Widget

Welcome You all to Ruthitha's KKR family

Kanavu Kadhali's World

To share your valuable comments : kanavukadhali@gmail.com

க்

க் 


19/08/2021

இன்று காலையிலேயே முகநூல் உள்பெட்டியில் அன்பிற்கினிய அம்மா ஒருவர் ஒரு கேள்வியை கேட்டிருந்தார். உங்களது பெயர் "கனவுக் காதலி" என வைத்திருக்காமல் ஏன் "கனவு காதலி" என வைத்திருக்கிறீர்கள்?? தமிழ் இலக்கியத்திற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள், ஆனாலும் ஏன் மாற்றிக் கொள்ளவில்லை?? இதற்கு பின்னே ஏதேனும் காரணங்கள் உள்ளனவா?? என. 

உங்களில் பலருக்கும் இதே கேள்விகள் எழுந்திருக்கலாம்... 

அப்போதுதான் பழைய நினைவுகள் மனதிற்குள் நீந்தத் தொடங்கின. 

நான் சட்டக்கல்லூரியில் பி.ஏ.,பி.எல் படித்துக் கொண்டிருந்த சமயம் அது. எங்கள் வகுப்பில் புதிதாக வந்து சேர்ந்தாள் ஒருத்தி. பெரிதாக அனைவரிடமும் பேசுபவளல்ல அவள். ஆயினும் நான் அவளை விடாமல் நொய் நொய் என அரித்து எப்படியோ பேச வைத்துவிட்டேன்.

ஆயினும் எவருடனும் அதிகம் பேச மாட்டாள். ஜஸ்ட் ஒரு ஹாய் பை மட்டும்தான். அப்போது ஆண்ட்ராய்ட் போன்கள் எல்லாம் பெரிதாக புழக்கத்திற்கு வந்திருக்கவில்லை. பட்டன் வைத்த மொபைல்கள்தான். ரேட் கட்டர், மெசேஜ் பூஸ்டர்கள் போடுவதற்காக நான் ஜூனியராக ப்ராக்டீஸ் போய்க்கொண்டிருந்தேன்...

ஒரு நாளைக்கு நூறு மெசேஜ் என்பதால் எப்படியாவது காலி செய்தே தீர வேண்டுமென அனைவருக்கும் குட் மார்னிங், குட் நைட் அனுப்புவேன்... சட்டக்கல்லூரியில் ஆங்கில வழிக்கல்வி, தமிழ்வழிக்கல்வி என இரண்டு பிரிவுகள் உண்டு...

எங்கள் ஆங்கில வழி வகுப்பில் பலருக்கு தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாது. ஏதேனும் சுற்றறிக்கை வந்தால் என்னைத்தான் வாசிக்குமாறு கூறுவர். மேலும் ஏதேனும் தமிழ் பேச்சுப்போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றால் வகுப்பின் சார்பாக நான் தான் கலந்துகொள்வேன்..

இப்படியிருக்கையில் எனக்குள் தோன்றிய நம்பிக்கையால் நாளைடைவில் மனதில் தோன்றிய ஏதோ ஒன்றை தத்துவம் என்னும் பெயரில் தட்டச்சு செய்து குட் நைட் டெம்ப்ளேட் சேர்த்து அனுப்புவேன்..

அப்போது அவள் சொல்லிக் கொண்டே இருப்பாள்.. "டி நீ நல்லா கவித எழுதுற டி..." என.. நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.. ஒரு கட்டத்தில் அவளுக்கு என் எழுத்துகள் பிடித்துப் போய்விட, அதற்காகவென தனியே ஒரு நோட்டுப் புத்தகம் வைத்து அதில் ஒவ்வொரு வரியையும் எழுதி பத்திரப்படுத்தத் தொடங்கினாள்.

எனது பெயருக்குக் கீழே "கனவு காதலி" என எழுதி வைத்திருந்தாள். "சொந்தப் பெயரைவிட புனைபெயர் தான் நல்லா இருக்கும்.. நான் உனக்கு வச்சிருக்கிற பெயர் இதுதான்... உன் அம்மா அப்பா வச்ச பெயர் சொந்தப் பெயர் அதுவே இருக்கட்டும்... உன்னோட ரசிகையான நான் உனக்கு சூட்டின பெயரை இதுவாவே வச்சிட்டு கண்டினியூ பண்ணேன்.. ப்ளீஸ்..." என கண்களைக் குறுக்கிக் கொண்டு கெஞ்ச, நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டேன்.

அவள் ஆங்கில வழியில் பயின்றதால் அவளுக்கு "கனவுக் காதலி" என எழுத வேண்டும் எனத் தெரிந்திருக்கவில்லை. ஒவ்வொரு நாளும் அவளது நோட்டை எடுத்து "கனவு காதலி இல்லடி... கனவுக் காதலி" என திருத்துவதே என் வேலை. அதன் பின்னர் நாட்கள் நகர்ந்தது. நான் திருநெல்வேலி வந்துவிட்டேன்... அவள் அங்கேயே தங்கியிருந்து, படிப்பை தொடர்ந்தாள்.

தினமும் மணிக்கணக்கில் குருஞ்செய்தியிலும் அழைப்பிலும் உரையாடுவது வழக்கம். அன்றும் அப்படித்தான் எனக்கு அழைத்தாள். எனக்கு ஒரு கெட்டப்பழக்கம் இருக்கிறது. ஏதேனும் ஒரு காரியத்தை மும்முரமாக செய்துகொண்டிருக்கையில் சுற்றி என்ன நிகழ்கிறது என்பதையெல்லாம் கவனிக்கமாட்டேன்.. எவரது அழைப்பையும் ஏற்க மாட்டேன்.

இப்போது வரை அந்த முட்டாள்தனத்தை செய்து வருகிறேன் தான். இரண்டு முறை எனக்கு அழைத்திருக்கிறாள். நான் ஏற்கவில்லை. பேசத் தொடங்கினால் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக பேச வேண்டியது இருக்கும். இந்த வேலையை முடித்துவிட்டு இரவு சாவகாசமாக பேசலாம் என இருந்துவிட்டேன்.

சற்று நேரத்திற்கெல்லாம் வேலையை முடித்துவிட்டு அவளுக்கு அழைக்க, அழைப்ப்பு ஏற்கப்படவில்லை. ஏதேனும் வேலையாக இருப்பாள், அப்புறம் பேசிக் கொள்ளலாம் என விட்டுவிட்டேன். இரண்டு மணி நேரம் கழித்து மற்றொரு தோழி அழைத்து விஷயத்தை தெரிவிக்கிறாள், "அவ திடீரென மயங்கி விழுந்துட்டா... மூச்சு பேச்சே இல்ல.. அப்பா அம்மா வெளியே போயிருந்திருக்க்றாங்க போல... வந்து பார்த்தா இப்படி இருந்திருக்கிறா... ஹாஸ்பிடல்ல போய் பார்த்தா ப்ரெய்ன் டியூமர்..."ன்னு...

உண்மையில் ஆடிப்போய்விட்டேன்... என்னுடன் இருக்கையில் அடிக்கடி தலை வலிக்கிறது என "FENAK PLUS" மாத்திரை எடுத்துக் கொள்வாள். அப்போது பதினெட்டு வயதேயான எங்களுக்கு அப்போது இருந்த மெச்சூரிட்டியில் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றெல்லாம் அறிவு இருக்கவில்லை.

தலை வலிக்குது என அவள் கூறினால் தூங்குறியா, டீ வாங்கிட்டு வரவா?? என்று கேட்போம். நைட் சரியா தூங்குடி... என்போம்.. அவ்வளவுதான்... எனக்குள் ஒரு குற்ற உணர்வு... எங்களோடு இருக்கையில் அவளை நன்றாக கவனித்திருந்திருக்கலாமோ?? இல்லை அவள் அழைக்கும் போது அழைப்பை ஏற்றிருக்கலாமோ என. அழைப்பை ஏற்றிருந்தால் இறுதியாக ஒரு முறையாவது அவளது குரலைக் கேட்டிருப்பேனே....!

கோமாவிற்கு சென்றவள் அதன் பின்னர் எழுந்து கொள்ளவில்லை. திருவனந்தபுரத்திற்கு கொண்டு சென்றால் குணமாக்கி விடலாம் என எவரோ ஒருவர் கூற, அங்கே இருபது நாட்கள் வைத்திருந்தார்கள். நாங்கள் சென்று மூன்று நாள் தங்கிவிட்டு வந்தோம்..

ஒருநாள் அவளது அம்மாவும் அக்காவும் உள்ளே சென்று கதறி அழுதபோது லேசாக அசைவு வந்தது என்றார்கள். எங்களுக்கும் சற்றே நம்பிக்கை பிறந்தது. ஆனால் மறுநாள் அதிகாலை மூன்று மணி இருபத்தி ஆறு நிமிடத்திற்கு எனக்கு அழைப்பு வந்தது. என் தோழி இறந்து விட்டாள் என.

உயிரற்ற அவளது சடலத்தைக் கூட காணவில்லை. வெளியே அமர்ந்து அழுதுவிட்டு வந்துவிட்டேன்.. அதன் பின்னர் நான் அடைந்த துயரத்திற்கு அளவில்லை. தோழி இல்லை என்பதைக் காட்டிலும் குற்ற உணர்வு என்னை வெகுவாக வருத்தியது. ஆனாலும் எப்போதும் போல எல்லாரிடமும் சிரித்துக் கொண்டே இருப்பேன்.

உள்ளுக்குள் ஒவ்வொரு முறையும் அவள் என்னிடம் கேள்விகளால் துளைப்பது போல இருக்கும். இப்படி இருக்கையில் தான் எதேச்சையாக எழுதத் தொடங்கினேன். அவள் எனக்கு வைத்த பெயரையே புனைபெயராக கொண்டு எழுதினேன்... அவளது பெயர் வைஷாலி...

இப்போதும் எனது மூன்று கதைகளின் நாயகிகளின் பெயர் வைஷாலிதான்.. கதைகளின் வாயிலாக அவள் என்னுடன் வாழ்வது போன்ற உணர்வு... என் சுயசரிதை போன்றதான "வாழ்வளித்த வள்ளல்" கதையில் கூட நாயகியின் பெயர் வைஷாலிதான். அவ்வவ்போது இதே பெயரையே வேறொரு கோணங்களில் இணைப்பேன். ஷாலினி, ஷைலு என...

குடும்ப பட்ஜெட்டில் கூட அவள் பயன்படுத்தும் மாத்திரையை சும்மாவாவது வாங்கிக் கொண்டு வந்துவிடுவேன்.  அவளுக்கு பிடிக்காத சில உணவுகளை உண்பதையே தவிர்த்து விட்டேன்..

ஒரு 'க்'கிற்கு பின்னர் இத்தனை பெரிய கதையா என யோசிக்கலாம்... ஆனால் அந்த க் என் வைஷாலி என்னிடத்தில் விட்டுச் சென்ற பொக்கிஷம்.. அவளின் நினைவாகத்தான் இப்போது வரை அந்த 'க்' இட்டுக் கொள்ளவில்லை

Post a Comment

1 Comments