நான் மௌன அலை... நீ இசைக்கரை... - 3
இதுவரை...
கமலேஷ் – கரோலின், ஐசக் – ரெபேக்காவின் ஊடல்...
இனி...
ஐசக்தான் அவளது மனகிலேசத்திற்கு காரணம் என ரெபேக்கா
தெரிவிக்க, அவன் முழுவதும்
கேட்பதற்குள் அவளது அலைபேசி அணைந்துவிட்டிருந்தது.
இதுகாறும் அவளிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தவன், அவளது அழைப்பு துண்டிக்கப்பட்டு, அலைபேசி அணைக்கப்பட்டிருக்கிறது என அறிந்ததும் சற்றே பதற்றமானான்.
“வேணும்ன்னே கட் பண்ணிட்டு ஆஃப் பண்ணிட்டாளா இல்ல வேற
எதுவும் பிரச்சனையா?” என குழம்பித் தவித்தவன், பணிநேரம் முடிந்ததும் நேராக அவளது
இல்லம் நோக்கிப் புறப்பட்டுவிட்டான்.
செல்லும் வழிநெடுக அவனுக்குள் பலவாறான சிந்தனைகள்
வியாபித்துக் கிடந்தன. “ரொம்ப ஓவரா பேசிட்டேனோ? அவ என்னைக்குமோ என்னோட ப்ரொஃபஷன்
பத்தியோ ஃபிஸிக்கல் அப்பியரன்ஸ் பத்தியோ கமென்ட் பண்ணினதே இல்லையே! அப்புறம் ஏன் அறிவில்லாம
அவகிட்டே கத்தினேன்? வேற ஏதோ டென்ஷன்ல இருந்திருக்கலாம்ல? நேர்ல போய் பொறுமையா
கேட்க வேண்டிய விஷயத்தை கத்தி,
பெரிய இஷ்யூவா ஆக்கிட்டேனே! நோகடிச்சிட்டேனோ? அவளோட கேரக்டரையே சிதைச்ச மாதிரி
பேசிட்டேனே! ஹர்ட் ஆகியிருப்பாளோ? அழுதிருப்பாளோ? ச்சே... நானெல்லாம் என்ன ஆளு?”
என தன்னைத்தான் திட்டியவாறே வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான்.
அவளோ தனது அலைபேசி அணைந்து போய்விட, “சம்பந்தமேயில்லாம என்னை ப்ளேம் பண்றார்?
அவ பேசினதுக்கு பதில் நான்தான் சொல்லிட்டேன்ல... அப்புறமும் என்னவாம்? தப்பு
பண்ணினது அவர்; இதிலே அமைதியா விசாரிக்காம என்கிட்டே கத்தறார்?” என தனக்குள்
ஆதங்கப்பட்டாள் ரெபேக்கா.
அவளது இல்லத்தின் வாசலை அடைந்தவன், அழைப்பு மணியை அழுத்த, கதவைத் திறந்தார் அவளது அன்னை. “வாங்க தம்பி... இந்நேரம்
வந்திருக்கிறீங்க? உக்காருங்க... டீ போடறேன்... டின்னர் முடிச்சிட்டுத்தான்
போகணும்...” என உரிமையுடன் வரவேற்றவர், அமருமாறு பணிக்க,
ஏதும் பேசாமல் அமர்ந்தான்.
வழக்கத்திற்கு மாறான அவனது அமைதியைக் கண்ணுற்றவர், “ஏதாவது பிரச்சனையா ஐசக்?” என அவனருகே அமர, “ஏதோவொரு டென்ஷன்ல அவளைக் கத்திட்டேன் அத்தை... ஹர்ட் ஆகிட்டான்னு
நினைக்கிறேன்.. ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்.. உண்மையாவே கோபமாத்தான் இருக்கிறாளா இல்ல வேற
எதுவும் பிரச்சனையான்னு ரொம்ப பயந்துட்டேன்... அதான் நேர்ல பார்த்துட்டு
போகலாம்ன்னு வந்தேன்...” என்றான் கலங்கிய விழிகளுடன்.
அவனது கூற்றில் பெருமிதமடைந்தார் அவனது வருங்கால மாமியார். “சண்டை
போட்டுட்டு எனக்கென்னன்னு விடாம நேர்ல வர்ற அளவுக்கு ஒருத்தரை என் பொண்ணு
கண்டுபிடிச்சிருக்கிறான்னு ரொம்ப சந்தோஷமா இருக்குது ஐசக்... நீங்க கவலைப்படாதீங்க!
நான் அவகிட்டே பேசறேன்..” என அவர் முன்வர, “வேணாம் அத்தை... நான் ஜஸ்ட் அவ சேஃபா இருக்கிறாளான்னு பார்த்துட்டு
கிளம்புறேன்... தப்பு பண்ணினது நான்... சோ அவ என்ன தண்டனை கொடுத்தாலும்
ஏத்துக்கறேன்.. அவளாவே நார்மலாகட்டும்... தேவையில்லாம யாரும் தலையிட வேணாம்ன்னு
பாக்கறேன்..” என நாகரீகமாக தவிர்த்தான்.
“புரியுதுப்பா... நீங்க வந்திருக்கிறீங்கன்னு அவகிட்டே
சொல்லவா? வேணாமா?” என அவர் கேள்வியாக நோக்க, நெற்றியைத் தேய்த்தவாறே யோசித்தான் ஐசக்.
அதற்குள் அவளே தனது அறையிலிருந்து கூடத்திற்கு
வந்திருந்தாள். “என்ன?” என்கிற ரீதியில் அவனை உறுத்து விழிக்க, சற்றும் தாமதியாமல் அவளது கைகளைப்
பிடித்துக் கொண்டான்.
“சாரி அம்மு... நீ அப்செட்டா இருந்ததை தாங்கிக்க முடியாம
அப்படி பேசிட்டேன்... நிச்சயமா என்னோட மனசிலே அப்படியொரு சந்தேகம் இல்லவேயில்ல...
எனக்கு உன்னைப் பத்தி நல்லாவே தெரியும்... கோபத்துல வார்த்தையை விட்டுட்டேன்...
இன்னொரு தடவை நிச்சயமா இப்படி நடக்காது... சாரி... சாரி... சாரி...” என கலங்கிய
விழிகளுடன் உரைக்க, அவளது
கோபம் அனைத்தும் பனியாகக் கரைந்து போனது.
பதிலுரைக்காமல் திகைக்க, அவளது தோளில் கைவைத்தார் அவளது அன்னை. “அடுத்த வாரம் நிச்சயத்தை
வச்சிக்கிட்டு சண்டை போட்டுட்டு இருக்கிறியே! இவ்ளோதூரம் இறங்கி வந்திருக்கிறார்
பாரு...” என அவர் அவனுக்காகப் பரிந்துபேச, “ம்மா... அவர் ஏதோ
கோபத்திலே பேச, நானும் பதிலுக்குப் பேசிட்டேன்... மத்தபடி
எதுவுமில்ல..” என்றாள்.
ஏனோ அவனைக் கண்ட மாத்திரத்தில் அவன் மீதிருந்த வருத்தங்கள்
காணாமல் போய்விட்டிருந்தன. அவனது செயல் உள்ளுக்குள் நெருஞ்சியாகத் தைத்தாலும் நேரடியாகக்
கேட்டு அவனை வதைத்துவிட தைரியம் வரவில்லை தையலுக்கு.
“சாரி அம்மு... சாரி...” என அவன் மீண்டுமொருமுறை உரைக்க, “டீ குடிச்சீங்களா?” எனக் கேட்டாள்
இயல்பாக. “ப்ச் இல்ல... உன் ஃபோன் ஆஃப் ஆனதும் கோபத்துல இருக்கிறியா இல்ல
பிரச்சனையில இருக்கிறியான்னு தெரியாம பதறியடிச்சிட்டு ஓடிவந்தேன்...” என்றான்
மெய்யான வருத்தத்துடன்.
தன் அன்னையைப் பார்த்தவள், “ம்மா... நானும் இவரும் வெளியே போயிட்டு வரவா? ஒரு மணி நேரம்?” என கண்களைக் குறுக்கிக்கொண்டு கேட்க, “பார்த்து போயிட்டு வாங்கடா...” என அனுப்பி வைத்தார்.
“உங்க பைக் இங்கே இருக்கட்டும்... நாம கார்ல போகலாம்..” என
கார் சாவியை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தவள், முன்னிருக்கையில் ஏறிக்கொள்ள, மிதவேகத்தில் காரைச்
செலுத்தினான் அவன்.
அவனது இடது கரத்தை தன் வலது கரத்தோடு இறுகப்
பிணைத்துக்கொள்ள,
மெலிதாகப் புன்னகைத்தான் ஐசக்.
“லவ் யூடா...” என அவள் கூற, “பாருடா... இவ்ளோ நேரம் அப்செட் பண்ணி விட்டதுக்கு தாஜாவா?”
எனக் கேலியாகப் பார்த்தவன், “உன்னால எனக்கு ரெண்டு மணிநேரம் டென்ஷன்...
சோ மினிமமா 200 முத்தமாவது தரணும்...” என்றான் குறும்புடன்.
“ஆஹான்...” என்றவள், “சண்டையே போட மாட்டிக்கிறீங்கன்னு சண்டை போட்டதுக்கு இன்னைக்கு சண்டை
போட்டாச்சு..” என தோளைக் குலுக்கியவள், “தோசை சாப்பிடலாமா?” எனக் கேட்டாள்.
“சாப்பிடலாமே!” என்றவன் அருகிலிருந்த உணவகத்திற்கு
வண்டியைச் செலுத்தினான். “நீ போயிட்டு இருடா... காரை பார்க் பண்ணிட்டு வர்றேன்...”
என அவளை இறங்கிக் கொள்ளுமாறு கூற,
காரைவிட்டு இறங்கியவள், சில அடிகள் நடந்த பின்னர் சற்றே
துணுக்குற்றாள்.
திரும்பிப் பார்க்க, காரைத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு அவன் இறங்குகையில் யாசகம் கேட்கும்
சிறுமியொருத்தி அருகில் வந்தாள். “அண்ணா... பசிக்குதுண்ணா... ஏதாவது கொடுங்கண்ணா...”
என அவள் பேச, அவனது அலைபேசி சிணுங்கியது.
முக்கியமான அழைப்பாக இருக்கவே, ஏற்று காதில் வைத்தவன்
பேசத்தொடங்க, அந்த சிறுமி
அவளையுமறியாமல் அவனது கையைத் தொட்டுவிட்டாள்.
அவளது தோற்றமே சற்று அசௌகரியத்தைத் தோற்றுவிக்கும் வகையில்
அமைந்திருக்க, உன்னிப்பாகக்
கவனிக்கத் தொடங்கினாள் ரெபேக்கா.
சாதாரணமான பிரஜைகள் யாசகர்கள் தங்களைத் தொட்டுவிட்டால் முகத்தை
அஷ்டகோணத்தில் சுளித்து தங்களால் இயன்ற மட்டும் அவர்களை சொல்லாலும் செயலாலும்
வதைத்துவிடுவர். ரெபேக்காவும் அத்தகையதொரு எதிர்வினையை தன்னவனிடமிருந்து எதிர்பார்த்திருக்க, அவனோ, “என்னப்பா?”
எனக் கேட்டான்.
அந்த சிறுமி பதிலுக்கு ஏதோவொன்றைக் கேட்க, அவளிடம் சில நிமிடங்கள் உரையாடிவிட்டு
இருக்கையில் வந்தமர்ந்தான் அவன்.
“அண்ணி சொன்ன மாதிரி நாமதான் தப்பா புரிஞ்சிக்கிட்டோமோ?
நேத்து மாதிரி இன்னைக்கும் இருட்டுதான்... ஆனா இயல்பாதானே நடந்துக்கறார்?” என
தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டவள், “அண்ணா... எனக்கு மசால் தோசை...” என ஆர்டர் செய்தாள்.
“என்னங்க... உங்களுக்கு?” என அவன் முகம் பார்க்க, “எனக்கு 3 இட்லி போதும்...” என்றவன், “அப்புறம்... 20 இட்லி பார்சல்... நாலு நாலு இட்லியா 5 பார்சல்
பண்ணிடுங்க...” என ஆர்டர் செய்ய புருவத்தை நெரித்தாள்.
“வெளியே ஒரு சின்னப் பொண்ணுப்பா... பசிக்குது, ஏதாவது கொடுங்கன்னு கேட்டா... எனக்கு காசு
கொடுக்க மனசு வரலை... அதான் டின்னர் வாங்கித் தர்றேன்... நாளைக்கு நம்ம அசோக்கோட அங்கிள்
ஸ்கூலுக்கு வான்னு சொன்னேன்... அவ ஃப்ரெண்ட்ஸ் அஞ்சு பேர் இருக்கிறாங்களாம்...
அவங்களுக்கும் சாப்பாடு வாங்கித் தர்றேன், அவங்களையும்
கூட்டிட்டு வான்னு சொல்லியிருக்கிறேன்... போகும் போது சாப்பாட்டைக் கொடுத்துட்டு, அவ ரெடியாகுறதுக்கு திங்க்ஸ் அண்ட் ட்ரெஸ் வாங்கித் தந்துட்டுப்
போகணும்...” என்றவன் உணவில் கவனத்தைப் பதிக்க, காதலுடன் நோக்கினாள் ரெபேக்கா.
“இந்த பார்வையை உன்கிட்டே மீட்டெடுக்க முழுசா
இருபத்துநான்கு மணி நேரம் ஆகியிருக்குது...” என்றவனுக்கு உதட்டைக் குவித்து காற்றில்
முத்தத்தை அனுப்பினாள் அவன் காதல் காரிகை.
“என்னங்க... நாம எத்தனை குழந்தை பெத்துக்கலாம்?” என்றவளின்
கேள்வியில் கண்களை அகலவிரித்தான் ஐசக். “ஹே... நாம இதுவரைக்கும் இதுபத்தி
பேசினதேயில்லையே!” என அவன் வினவ, “அதான்
என்கேஜ்மென்ட் ஆகப் போகுதுல்ல..” என்றாள் அசால்ட்டாக.
“இவ்ளோ நேரம் அந்நியன் மோடுல இருந்தவ இப்போ ரெமோ மோடுக்குப்
போயிட்டியா? உன்னோட ரொம்ப கஷ்டம்டா...” என புன்னகையுடன் எழுந்து சென்று கையை
சுத்தம் செய்துகொண்டு வந்தவன், தான்
ஆர்டர் செய்தவற்றை வாங்கிக்கொண்டு வந்தான்.
அதை அந்த சிறுமியிடம் கொடுத்தவன், அருகிலிருந்த கடைக்கு அழைத்துச் சென்று
தேவையான உடை மற்றும் இதர பொருள்களை வாங்கிக்கொடுத்துவிட்டு அவளது இல்லம் நோக்கி பயணிக்கலானான்.
சில நிமிடங்கள் இருவருக்குமிடையில் அமைதியே ஆளுகை செய்ய
அவள்தான் தொடங்கினாள். “ஆக்சுவலி உங்களோட அசம்ஷன் கரெக்ட்தான் ஐசக்... எல்லாரும்
சந்தோஷமா போயிட்டு வர்றப்போ முகம்வாடியிருந்தா பல எண்ணங்கள் தோணும்தான்.. ஐ
அக்ரி... அதுக்கான காரணம் என்னன்னா நேத்து சர்ச் காம்பவுன்ட்ல ஒரு பெக்கர்மேனை
நீங்க அடிக்கற மாதிரி ஒரு பிரம்மை எனக்கு... அதை பார்த்ததும் ஷாக்காகிட்டேன்...
நீங்க அப்படிப்பட்டவர் கிடையாதுன்னு எனக்குத் தெரியும்.. ஆனாலும் ஒரு செகன்ட்
தடுமாறிட்டேன்... எந்தளவுக்கு தடுமாறிட்டேன்னா கல்யாணமே வேணாம்ன்னு அண்ணிக்கு கால்
பண்ணி நிறுத்துற அளவுக்கு...” என அவள் தானாகவே பேசிக்கொண்டு போக, அதிர்ச்சியில் கண்களை அகலவிரித்தான் அவன்.
“அண்ணிதான் சொன்னாங்க, ஏதாவது மிஸ்அன்டர்ஸ்டான்டிங்கா இருக்கும்.. அவன்கிட்டே பேசி சரி பண்ணுன்னு...
இதோ இந்த பொண்ணு அவ்ளோ அக்லியா உங்களைத் தொட்டும் நீங்க ரொம்ப பரிவா அவளுக்கு
இவ்ளோ தூரம் பண்ணியிருக்கிறீங்க! இப்போ நம்புறேன்... என் ஐசக் ஜெம்தான்னு...
சாரிப்பா... அந்த சமயத்திலே லூஸு மாதிரி யோசிச்சிட்டேன்... நல்ல வேளையா கரோலின்
அண்ணிக்கு கால் பண்ணி பேசினேன்.. இல்லைன்னா என்னவாகியிருக்கும்ன்னு யோசிச்சுப்
பார்க்கவே பயமா இருக்குது..” என அவள் பேச, “அப்போ.. விட்டுட்டுப்
போய்டலாம்ன்னு ஈஸியா முடிவெடுத்திருக்கிற...” என்றான் கலங்கிய விழிகளுடன்.
“அச்சோ.. இல்லப்பா.. அந்த சமயத்திலே அப்படி யோசிச்சேன்னுதான்
சொன்னேன்... அது என்னோட முடிவில்ல.. ஜஸ்ட் அந்த நேரத்து மூட்ஸ்விங்ஸ்...
அவ்ளோதான்... என்ன கோபமிருந்தாலும் உங்களைப் பார்த்தா அஞ்சு நிமிஷத்துக்கு மேல
என்னால ஹோல்ட் பண்ணிக்க முடியாது...” என அவள் பதற, அவனோ அமைதியாக வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான்.
“ஐசக்... சாரி ஐசக்... நான் பண்ணினது தப்புத்தான்...
சாரி...” என அவள் மெய்யான வருத்தத்துடன் பேச, “உனக்கு வேணும்ன்னா வேணாம்ன்னு ப்ரேக் அப் பண்றது ஈஸியா இருக்கலாம்...
ஆனா என்கிட்டே இருந்து உன்னைப் பிரிக்கிறது என் உயிரோட பாதியைப் பிரிக்கிற
மாதிரி... அவ்ளோ பாசம் வச்சிருக்கிறேன் உன்மேல.. நீயில்லாத எதிர்காலத்தை என்னால
யோசிச்சுப் பார்க்கவே பதறுது...” என்றவனின் கண்களில் கீற்றாகக் கண்ணீர்!
அதில் பதறிப் போனாள் ரெபேக்கா. “என்னங்க...” என அவனது
தோளில் கைவைக்க, காரை ஓரமாக
நிறுத்தியவனது கண்களிலிருந்து நீர் விடாமல் வழியத் தொடங்கியிருந்தது.
ஆண் அழுவதே அபூர்வம், அதிலும் தான் நேசிப்பவளுக்காக கண்ணீர் உகுப்பது அபூர்வத்திலும் அபூர்வம்.
அத்தகைய காதலை அடைந்ததை எண்ணிப் பேருவகை கொண்டாள் ரெபேக்கா.
தனது காதலையும் அதைத் தொடர்ந்த பலவீனத்தையும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, நிராயுதபாணியாக நிற்கும் அவனுக்கு தனது காதலை ஆயுதமாக அளிக்க நினைத்தவள், முகத்தை நிமிர்த்தி இதழில் முத்தமிட்டாள்.
சில ஆண்டுகளாகக் காதலித்தாலும் முத்தப் பரிமாற்றமென்பது
இருவருக்கும் காகித அளவிலேயே இருந்தது. பக்குவமாகவும் சுயக்கட்டுப்பாட்டுடனும்
தங்களது காதலை காத்து வந்தனர் இருவரும்.
முதல் முத்தம் இதழ் முத்தமாக எதிர்பார்த்திருக்கவில்லை அவன்; விழிகளை அகலவிரிக்க,
அதிர்ச்சியை சமன்செய்ய வேண்டிய தானாகவே மீண்டும் முத்தமிட்டாள். இம்முறை இலாவகமாக
வாய்ப்பைக் கைப்பற்றிவிட்டான் ஐசக்.
நெடுநேர இதழ் ஒருமைப்பாட்டிற்குப் பின்னர் விலகியவன், “இனி எல்லாம் கல்யாணத்துக்கு
அப்புறம்தான்... தினமும் வேணும்ன்னு அடம்பண்ணக் கூடாது...” என அவளைக் குறுகுறுப்புடன்
பார்க்க, “ஆஹான்... அப்போ தினமும் கேக்கற ஆசைவேற இருக்குதா
ஐயாவுக்கு?” என கன்னத்தில் இடித்தாள் அவள்.
“ஹே... சும்மா டீஸ் பண்ணினேன் அம்மு... கூல்...” என்றவன்
அவளது இல்லத்தில் அவளை விட்டுவிட்டு தான் தங்கியிருக்கும் PG நோக்கி விரைந்தான்.
வேகமாகக் கழிவறைக்குச் சென்றவன், தனது அலைபேசியின் hidden folderல் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தைத்
திறந்தான்.
“எவ்ளோ தைரியமிருந்தா திரும்பவும் என்னோட கண்ணு முன்னாடி
வந்து நிற்ப? நேத்து யாரும் வராம இருந்திருந்தா நேத்தே உன் கதை
முடிஞ்சிருக்கும்... நீ எங்கேயிருந்தாலும் சரி, உன்னைக் கண்டுபிடிச்சு அணுஅணுவா சிதைக்காம விடமாட்டேன்...” என கண்களில்
வன்மம் தெறிக்கப் பேசினான்.
யார் அவனோ? காண்போம் அடுத்தடுத்த அத்தியாயங்களில்...
இசை ஒலிக்கும்...
கிட்டத்தட்ட ரெண்டு வருஷத்துக்கு அப்புறமா கதை எழுதத்
தொடங்கியிருக்கிறேன் மக்களே! எப்படி வரப்போகுதுன்னு தெரியல... வழக்கம்போல உங்க
கருத்துகள் மற்றும் அன்பால தொடர்ந்து ஊக்குவிக்குமாறு கேட்டுக்கறேன்.. முடிஞ்ச
அளவு தினமும் எபிசொட் தர ட்ரை பண்றேன்... நன்றி!

0 Comments