முதல் அத்தியாயத்திலிருந்து வாசிக்க...
பூமி காணா தேவன் நீ... – 8
சீர்வரிசைத் தட்டுகளை தட்டிவிட்டவாறே எழுந்தவள், “என்ன சொன்னீங்க? புருஷனை
பறிகொடுத்துட்டேனா? நான் அப்படி உங்ககிட்டே சொன்னேனா?
இல்ல வளைகாப்பு செய்யுங்கன்னு கேட்டேனா? அம்மா
அப்பாவுக்காக சம்மதிச்சா நீங்க ஓவரா பேசுறீங்க.. ஏற்கனவே குழந்தையை கலைச்சிடுன்னு
நீங்க எல்லாரும் சொன்னதாலதான் உங்க சகவாசமே வேணாம்ன்னு வாந்தி, தலைசுத்தல்ன்னு எத்தனை வந்தாலும் இங்கேயே ஒத்தையா கிடந்து
சங்கடப்பட்டுட்டு இருக்கிறேன்... இதிலே திரும்பத்திரும்ப அதையே சொல்றீங்க! என்
புருஷன் செத்துப்போயிட்டாருன்னு நீங்க பார்த்தீங்களா? இல்ல
நான் சொன்னேனா? அவர் ஒண்ணும் சாகலை... என்னோடதான்
இருக்கிறார்... எப்பவும் என்னோடவும் என் குழந்தையோடவும் இருப்பார்...” என
கத்தத்தொடங்க, அவளைத் தாங்கிப்பிடித்துக் கொண்டனர் சுரேஷும்
விக்னேஷும்.
“ரவீ.. ஏன் இப்படி நடந்துக்கற? எல்லா சமயத்திலேயும் பொறுமையா இருக்கிறவ
இப்படி கத்தலாமா? அதுவும் வயித்திலே குழந்தை
இருக்கிறப்போ...” என விக்னேஷ் ஆற்றாமையுடன் அவளைப் பார்க்க,
“இவங்க மட்டும் அப்படி பேசலாமா? செத்துப்போயிட்டார்
செத்துப்போயிட்டார்ன்னு முட்டாள் மாதிரி பேசிட்டு இருக்கிறாங்க...” என்றாள்
இயலாமையுடன்.
“யாரு? நான்
முட்டாளா? நீதான் உன் புருஷன் செத்ததுல பைத்தியமாகிட்ட...”
என அவர் குரலையுயர்த்த, “சித்தி... கொஞ்சம் அமைதியா
இருங்க... அவதான் ஏதோ எமோஷனலா பேசுறான்னா பெரியவங்க நீங்களும் அப்படியே
நடந்துக்கிட்டா எப்படி??” என அவரை அமைதிப்படுத்த முயன்றான்
சுரேஷ்.
“அவன் செத்துட்டான்னு இந்த உலகமே அக்செப்ட் பண்ணிக்குது...
இவளுக்கு என்ன? பைத்தியங்கள்தான்
ரியாலிட்டியை புரிஞ்சிக்காம அங்கேயே தேங்கி நிப்பாங்க...” என அவர் மென்மேலும் பேச, “வள்ளி... கொஞ்சம் அமைதியா இரும்மா... பொண்ணுக்கு ஒரு நல்லது
பண்ணிப்பார்க்கணும்ன்னுதான் இவ்ளோ ரிஸ்க் எடுத்து எல்லாரையும் அழைச்சிட்டு
வந்திருக்கிறோம்.. வந்த இடத்திலே மனஸ்தாபங்கள் வேண்டாமே!” என குறுக்கிட்டார் அவளது
தந்தை தெய்வேந்திரன்.
“அதை உங்க மககிட்டே சொல்லுங்கண்ணே...” என அவர் தெரிவிக்க, “இதுக்குத்தான் இதெல்லாம் வேணாம்ன்னு
சொன்னேன்...” என்கிறரீதியில் இருந்தது ரவீனாவின் பார்வை.
“ரவீ... ப்ளீஸ்ம்மா...” என கண்களால் அவளிடம் கெஞ்ச, “ச்சே...” என சலித்தவாறே இருக்கையில்
அமர்ந்தாள் அவள். வளையல் அணிவித்துவிட்டவர்கள் அடுத்தடுத்த சடங்குகளை நிறைவேற்ற, வள்ளி என்னும் அவர்களது உறவுக்காரப் பெண் பொறுமையாகப் பேசத்தொடங்கினார்.
“இங்கே பாரு ரவீ... உன் புருஷனை குத்திக்காட்டிப்
பேசணும்ங்கறது என்னோட நோக்கமில்ல... உனக்கு ஒரு துணை வேணும்ங்கற அக்கறையில்தான்
சொன்னேன்... என்னதான் போல்டா இருக்கிறேன், தனியா சமாளிச்சிடுவேன்னு சொன்னாலும் உன் குழந்தைக்கு அப்பான்னு ஒருத்தர்
வேணும்ல... தாயாவும் தகப்பனாவும் உன்னால பார்த்துக்கமுடியும்தான்.. இல்லைன்னு
சொல்லலை.. ஆனா நாளைக்கே ஸ்கூல்ல எல்லாருக்கும் அப்பா இருக்கிறாங்க, என் அப்பா எங்கேம்மான்னு குழந்தைகேட்டா என்ன சொல்லுவ? அப்பா நம்மோடவேதான் இருக்கிறாங்கன்னு சொல்லி கன்வின்ஸ் பண்ணுவியா? என்ன சமாதானம் சொன்னாலும் அது என்னைக்குமே வெற்றிடம்தானே! சுரேஷும்
நிம்மதியில்லாம சுத்துறான்... தத்தெடுத்தாலும் அந்த பெண்குழந்தைக்கும் தாய்ப்பாசம்
வேணும்ல.. என் அக்கா மகன் இப்படி இருக்கிறது ரொம்ப வருத்தமா இருக்குதும்மா... வேற
யாரோ ரெண்டுபேரா இருந்திருந்தா இதை சொல்லியிருக்கமாட்டேன்.. நீங்க சொந்தம்ங்கறதால
சொல்றேன்.. உன் குழந்தைக்கு அப்பா வேணும், அவன் குழந்தைக்கு
அம்மா வேணும்.. அதுக்குத்தான் இந்த பந்தத்தை ஏற்படுத்திக்க சொல்றேன்... இதுக்கு
பின்னாடி எனக்கு எந்த நோக்கமுமில்ல...”
அவர் தீர்க்கமாகப் பேசிமுடிக்க, ரவீனாவோ ஒவ்வாமையில் முகத்தை சுளித்தாள்.
தெய்வேந்திரன் மற்றும் அவரது இல்லத்தரசியின் முகத்தில் குழப்பத்தின் ரேகைகள்.
அன்னலட்சுமியின் மனதில் நிம்மதியா இல்லை வெறுப்பா என பிரித்தறியவியலாதொரு உணர்வு!
சிலநிமிட அமைதிக்குப் பின்னர் ரவீனாதான் பேசத்தொடங்கினாள்.
“நீங்க சொல்ற பாயின்ட் எனக்குப் புரியுது அத்தை... மே பீ ஹார்ஷா
சொல்லியிருந்தாலும் அக்கறையோடதான் சொல்றீங்க... ஆனா என்னோட வாழ்க்கையில அவரைத்தவிர
வேற ஒருத்தருக்கு இடமில்ல.. அந்த வெற்றிடம் வெற்றிடமா இருந்தாத்தானே! அவர் அந்த
இடத்திலேதானே இருக்கிறார்.. அப்புறம் எப்படி அந்த இடத்திலே இன்னொருத்தரை கொண்டுவர
முடியும்?” என அவள் கேட்க,
“உன்னோட மனசிலேயும் வாழ்க்கையிலேயும் அவருக்கான இடம் காலியா இல்ல... ஆனா உன்
குழந்தையோட உலகத்திலே? தந்தைங்கறவர் அரூபமா சஞ்சரிச்சிட்டு இருக்கணுமா?”
என குறுக்கிட்டார் மற்றொரு உறவினர்.
“நீ பேசுறது ரொம்ப அபத்தமா இருக்குது ரவீ... நாங்க உன்னை
ரெண்டாவது கல்யாணத்துக்கு வற்புறுத்துறதா நினைக்காதே! உன்னோட நல்லதுக்குத்தான்
பேசறோம்.. எங்ககிட்டே சொல்ற மாதிரி புருஷன் என்னோடதான் இருக்கிறார்ன்னு சொன்னா
இந்த உலகம் உன்னை வேறமாதிரிதான் பார்க்கும்.. மனநலம் பாதிக்கப்பட்டவளா
சித்தரிக்கிறதுக்கு ரொம்ப நேரமாகாது... நீயா உனக்குன்னு உருவாக்கின கூட்டுக்குள்ள
இருந்து வெளியே வா... ரியாலிட்டியை அக்செப்ட் பண்ணிக்க ட்ரை பண்ணு... உடனே
கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லலை... சுரேஷ் உன்னோட ஃப்ரென்ட்தானே?! துயர்துடைக்கிறதுதானே நட்பு! அப்படின்னா
ஒருத்தருக்கு ஒருத்தர் தோள் கொடுத்து உதவிசெய்யக் கூடாதான்னு கேக்கறேன்... இந்த
காதல் இதெல்லாம் தூக்கிப்போடு... ஒரு நிம்மதியான வாழ்க்கை ரெண்டு பேருக்கும்
அறுதியா கிடைக்கும்.. அதனாலதான் சொல்றேன்...” என அவர் பேசிமுடிக்க, உணர்வுகளை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அமர்ந்திருந்தாள் ரவீனா.
ஏனோ அவர்களது பேச்சில் சுரேஷிற்குள் அடர்ந்திருந்த சோகமேகம்
மெல்ல விலகி, வாழ்க்கையை
எதிர்கொள்ள வேண்டுமென்கிற ஆவல் துளிர்த்திருந்தது. இதை கவனித்துவிட்டாலும்
அமைதியாக இருந்தான் விக்னேஷ்.
“அத்தை... உங்க அக்கறை, ரியாலிட்டி எல்லாமே எனக்குப் புரியுது... ஆனா என்னால இன்னொரு வாழ்க்கையை
ஏத்துக்கமுடியாது...” என அவள் இயலாமையுடன் உரைக்க, “உண்மையா
நேசிச்சா அவங்களை மறக்குறது கஷ்டம்தான்னு தெரியுதும்மா.. ஆனா எங்களுக்காக இந்த
விஷயத்துக்கு சம்மதிக்கலாமே!” என ஏறத்தாழ இறைஞ்சும்தொனியில் வேண்டினார்
தெய்வேந்திரன்.
“அப்பா... ப்ளீஸ்.. என்னை தர்மசங்கடத்துக்கு ஆளாக்காதீங்க!
என்னோட உணர்வுகளை யாரும் புரிஞ்சுக்கமாட்டிக்கறீங்க.. ரொம்ப ஆத்மார்த்தமா ஒருத்தரை
நேசிச்சு, அதிபரிசுத்தமான இல்லறத்தை
வாழ்ந்திருக்கிறேன் நான்.. பெயருக்காகக்கூட அதை கலைச்சு இன்னொரு பந்தத்தை
ஏற்படுத்திக்க நினைக்கலை...” என தீர்க்கமாக மறுத்தாள் அவள்.
“நீ சொல்றதைப் பார்த்தா ஏதோ இந்த உலகத்திலே நீ மட்டும்தான்
உண்மையா நேசிச்ச மாதிரி இருக்குது... பூனை கண்ணை மூடிக்கிட்டா உலகமே இருண்டு
போச்சுதுன்னு அர்த்தமில்ல...” என வேறொருவர் பேச, “கொஞ்சம் என்னைத் தனியா விடறீங்களா ப்ளீஸ்...” என உள்ளே
எழுந்து சென்றுவிட்டாள். பதிலில்லா கேள்விகளுக்கு பின்வாங்குதல் ஒன்றே சிறந்த
தீர்வென தெளிந்திருப்பாள் போலும்.
அனைவரும் அரைமனத்துடன் உணவருந்தி முடித்தபின்னர் புறப்பட
எத்தனிக்க,
மரியாதையினிமித்தமாக அவர்களை வழியனுப்புவதற்காக வெளியே வந்தாள் ரவீனா.
“எல்லாரும் இங்கே வந்ததுல ரொம்ப சந்தோஷம்... எனக்காக உங்க
வேலைகளையெல்லாம் விட்டுட்டு வந்திருக்கிறீங்க... அதுக்காக ரொம்ப தேங்க்ஸ்... ஆனா
என்னோட மெல்லிய உணர்வுகளை காயப்படுத்தாத அந்த கசப்பான நிகழ்வு மட்டும் நடக்காம
இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்... எல்லாம் சீக்கிரமே மாறும்ன்னு
நம்புறேன்..” என்றவாறே அவர்களுக்கு விடைகொடுக்க முற்பட, “அப்பா... நான் பாட்டியோட போகமாட்டேன்..
உங்களோடவே இருக்கிறேன்...” என தன் தந்தையின் தோளிலிருந்து இறங்க மறுத்தாள் ஜூனியர்
ரவீனா.
“ரவீ... நல்ல புள்ளல்ல... அப்பா பகல்ல வேலைக்குப்
போய்டுவான்ம்ம்மா... அப்போ நீ வீட்டுல தனியாத்தான் இருக்கணும்... பூச்சாண்டிவந்து
பிடிச்சிட்டு போய்டுவான்...” என அன்னலட்சுமி அவளை சமாதானம்செய்ய முற்பட, அவளோ “நானும் அப்பாவோட வேலைக்குப் போறேன்
பாட்டி...” என பிடிவாதம்பிடித்தாள்.
“இன்னும் கொஞ்ச நாள்தான் ரவீ... அப்புறம் பாப்பாவை ஸ்கூல்ல
சேர்த்துட்டு அப்பா ஊருக்கே வந்துடுவான்...” என அவர் தன்னால் இயன்றமட்டும் அவளைத்
தேற்ற முற்பட, அவ்ளோ
முரண்டுபிடித்தாள்.
ஒருகட்டத்தில் அழத்தொடங்கிவிட, சீனியர் ரவீனாவுக்கு சற்றே வருத்தமாக
இருந்தது. இருபத்து ஒன்பது வயதிலும் தாய் தந்தையரைப் பிரிந்திருக்கையில் அவர்களது
நினைவால் வாடுபவளால் ஐந்தே வயதான அந்தக் குழவியின் நிலையை உணரமுடிந்தது.
“அத்தை... அவளை என்கிட்டே விட்டுட்டுப் போங்க... பகல்ல நான்
பார்த்துக்கறேன்.. அத்தான் வேலை முடிச்சிட்டு வர்றப்போ ஈவ்னிங் கூட்டிட்டுப்
போய்க்கட்டும்... நான் ஒர்க் ஃப்ரம் ஹோம் தானே பாக்கறேன்..
தேவன் வருவான்...
0 Comments