Header Ads Widget

Welcome You all to Ruthitha's KKR family

Kanavu Kadhali's World

To share your valuable comments : kanavukadhali@gmail.com

பூமி காணா தேவன் நீ... – 7

முந்தைய அத்தியாயம்  

பூமி காணா தேவன் நீ... – 7



பின்வந்த நாட்களில் ரவீனாவின் பெற்றோர் தாங்கள் பிரயாசப்பட்டதைப் போலவே தங்களது மகளுக்கு முடிந்தளவுக்கு விமரிசையாக வளைகாப்பு நிகழ்வை நடத்துவதற்காக உறவினர்கள் அனைவரையும் அவளது இல்லத்திற்கு வரவழைத்துவிட்டனர். அவர்கள் எவ்வளவு எடுத்துக் கூறியும் கேட்காமல் அவர்கள் அனைவருக்கும் பயணச்சீட்டை தனது செலவிலேயே ஏற்பாடு செய்திருந்தாள் அவள்.

ஏறத்தாழ உறவினர்கள் இருபது பேர் அவ்விடம் வந்திருக்க, அனைவரும் தங்குவதற்கு சவுகரியமானதாகவே இருந்தது அவ்வீடு.

“பரவாயில்லையே! நல்ல பெரிய வீடாத்தான் கட்டியிருக்கிறாங்க...” என உறவினர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொள்ள, ரவீனாவால் அதை தெளிவாக உணரமுடிந்தது.

அவர்கள் வருகைதர, மனதிலிருந்த வெறுப்பு எதையும் காட்டிக்கொள்ளாமல் புன்னகையுடன், “வாங்க...” என்பதோடு நிறுத்திக் கொண்டாள். “எப்படி இருக்கிற?” என்னும் கேள்விக்கும், “நல்லா இருக்கிறேன்...” என்றவள் பதிலுக்காகக்கூட “நீங்க எப்படி இருக்கிறீங்க?” என்னும் கேள்வியை கேட்பதைத் தவிர்த்துவிட்டிருந்தாள்.

“ரவீ... எல்லாரும் வந்திருக்கிறாங்க.. உன்பாட்டுக்கு ரூமுக்குள்ள வந்து உக்கார்ந்துக்கிட்டா என்ன அர்த்தம்?” என அவளது அன்னை சற்றே உரிமையுடன் ஆதங்கப்பட, “வேற என்ன செய்யணும்ன்னு சொல்றீங்கம்மா? உங்க விருப்பத்துக்காக அவங்களை இங்கே வரவச்சிட்டேன், தங்குறதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு, இதோ தேவையான எல்லா பொருளையும் டெலிவரி பண்ண சொல்லிட்டேன்... இதுக்குமேல என்ன பண்ணனும்ன்னு எதிர்பார்க்கிறீங்க?” என சற்று காட்டமாகவே கேட்டாள்.

“வந்து அவங்களோட உக்கார்ந்து என்ன, ஏதுன்னு பேசினாத்தானே அவங்களுக்கும் நல்லாயிருக்கும்.. உன் வளைகாப்புக்காகத்தானே அவ்ளோ தூரம் ட்ராவல் பண்ணி வந்திருக்கிறாங்க...”

“பாருங்கம்மா.. உங்களோட திருப்திக்காக இந்த ஏற்பாடு... சோ அவங்க என்மேல இருக்கிற பாசத்திலே வரலை, உங்களோட உறவுக்காக வந்திருக்கிறாங்க... அவ்ளோதான் என்னோட மனசுல இருக்குது.. சொந்தங்கள் எல்லாரையும்விட்டு மனசளவுல தூரமாகி ரொம்ப நாள் ஆச்சுது..”

“அப்போ நாங்க?”

“சொந்தம்ங்கறதுல நீங்களும் சேர்த்திதான்ம்மா... நேரடியா சொல்லி காயப்படுத்த விரும்பலை... இதுக்குமேல எதுவும் கேக்காதீங்க ப்ளீஸ்...” என முடித்துவிட்டாள் ரவீனா.

இவர்களுடன் சுரேஷின் அன்னை அன்னலட்சுமியும் வந்திருக்க, ரவீனாவுடன் சற்று கரிசனையுடன் நடந்துகொள்ள முற்பட்டார்.

சிறுவயதிலிருந்தே அவர்மீது தனிப்பாசம் ரவீனாவுக்கு. சில மாதங்களுக்கு முன்னர் நிகழ்ந்த சம்பவங்கள் பெருமளவில் அவளுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க, ஏனோ அவரிடமும் ஒட்டுதல் ஏற்பட மறுத்தது. “நீங்க ரெஸ்ட் எடுங்க அத்தை... வேலையை முடிச்சிட்டு வந்து அப்புறமா பேசறேன்..” என்பதோடு நிறுத்திக் கொண்டாள்.

‘தன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்திருக்கிறார்கள்’ என அறிந்த சுரேஷ் பணிகளை ஒத்திவைத்துவிட்டு ரவீனாவின் இல்லம்நோக்கி விரைந்தான்.

கூடத்தில் அமர்ந்து மதிய உணவுக்காக காய்கனிகளை நறுக்கிக் கொண்டிருந்தவர்கள் சுரேஷை கண்டதும், “வாடா சுரேஷ்... எப்படி இருக்கிற?” என விசாரிக்க, “நல்லா இருக்கிறேன் சித்தி.. நல்லா இருக்கிறேன் அத்தை...” என்றவாறே உள்ளே வந்தான்.

“வேலையெல்லாம் எப்படி போகுது? பெங்களூர்லதான் இருக்கிறேன்னு சொல்லவேயில்லையே!” என அவர்கள் விசாரிக்க, “திடீர்ன்னு வரவேண்டியதா போச்சுது..” என பதிலளித்தவன் அங்கிருந்த சோஃபாவில் அமரும்போதே, “ரவீ எங்கே??” என கேட்டான்.

“அவ ஏதோ வேலை இருக்குதுன்னு சொன்னாப்பா...” என அவளது அன்னை தெரிவிக்க, “சரி அத்தை... நான் போய் பார்க்கிறேன்...” என அவளது அறைக்குச் செல்ல எத்தனிக்கையில், “வேண்டாம் சுரேஷ்.. அவ எல்லார்மேலேயும் இன்னும் வெறுப்பாத்தான் இருக்கிறா... கோபத்துல ஏதாவது பேசிடப் போறா...” என தடுத்தார் அவளது அன்னை.

“கோபமா?? எதுக்கு அத்தை?” என அவன் புரியாமல் வினவ, “ஹ..வந்து... சுரேஷுக்கு எதுவும் தெரியாது சித்தி.. மாலதி விஷயத்துல டிஸ்டர்ப்டா இருந்ததால அவன்கிட்டே சொல்லலை...” என குறுக்கிட்டான் விக்னேஷ்.

“அப்படியா?” என்கிற ரீதியில் பார்த்தவர், “எங்க எல்லாரையும் மீறித்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டா... அவ வீட்டுக்காரர் இறந்ததும் குழந்தையை கலைச்சிட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோன்னு சொந்தக்காரங்க சொன்னது அவளுக்கு ரொம்ப வெறுப்பாகிடுச்சு... அடியோட வேணாம்ன்னு முடிவுபண்ணிட்டா...” என பெருமூச்சுவிட்டார்.

“என்ன இருந்தாலும் நீங்க பேசினது தப்பு சித்தி... உண்மையா நேசிச்சவங்க விட்டுட்டுப் போயிட்டா அவங்க ஞாபகமா இருக்கிற எல்லாத்தையும் அழிச்சிட்டு புதுசா ஒரு வாழ்க்கையை தேடிக்கணுமா என்ன??” என விக்னேஷ் பேச, “இவங்க பேசினது தப்பாவே இருந்தாலும் அதுக்கு பின்னாடி அவளோட நிம்மதின்னு ஒண்ணு இருக்குதுல்ல விக்கி.. இந்த சொஸைட்டியில அவ எப்படி எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணுவா? அவளுக்குன்னு ஒரு துணை வேணாமா??” என இடைமறித்தான் சுரேஷ்.

“இவன் ஏன் திரும்பத்திரும்ப துணைங்கற விஷயத்திலேயே வந்து நிக்கறான்?” என சந்தேகமாகப் பார்த்தவன், “துணையில்லாமலேயே எல்லாத்தையும் கடந்துவர்ற பக்குவம் என் தங்கச்சிக்கு இருக்குதுடா...” என்றான் கறாராக.

“வேணாம் விக்கி.. இதுபத்தி பேசி தேவையில்லாத விவாதம் பண்ணவேணாம்...” என தவிர்த்த சுரேஷ், “அத்தை... ரவீயை பார்க்கலாமா?” என அனுமதி கோரினான்.

“கோபமா பேசினாலும் தாங்கிக்கிறதுக்கு மனசுல தைரியம் இருக்குதுன்னா தாராளமா போய் பாருப்பா...” என அவர் கையைவிரித்துவிட, “ரவீ என்னைக்கும் என்கிட்டே கோபப்படமாட்டா...” என்னும் நம்பிக்கையுடன் எழுந்தான் அவன்.

இதைக் கவனித்த விக்னேஷ் விழித்துக் கொண்டான். “என்ன நடக்குதுன்னு பார்ப்போம்..” என்கிற ரீதியில் எதேச்சையாக அவனைப் பின்தொடர்ந்தான்.

ரவீனாவின் அறைக்கதவைத் தட்டிய சுரேஷ், “ரவீ.. பிஸியா? உள்ளே வரலாமா??” என தண்மையான குரலில் கேட்டான்.

“அத்தான்...” என பதிலிறுத்தவள், சிலநிமிட யோசனைக்குப் பின்னர், “வாங்க...” என்றவாறே கதவைத் திறக்க, ஒருகணம் திகைத்தான் விக்னேஷ்.

“எல்லார்கிட்டேயும் கோபப்படுறவ இவன்கிட்டே கேஷுவலா பேசுறா... எப்படி?” என்னும் கேள்வியெழ, அவ்விடம் நிகழ்வதை அவதானிக்கத் தொடங்கிவிட்டான்.

உள்ளே சென்றவன் அமைதியாக அவளுக்கு எதிரே போடப்பட்டிருந்த சோஃபாவில் அமர, “எப்போ வந்தீங்க?” எனக் கேட்டாள் அமைதியாக.

“ரவீயா இது?” என ஆச்சரியமடைந்தான் விக்னேஷ்.

“இப்போதான்ம்மா... எல்லாரும் வந்திருக்கிறதா அம்மா சொன்னாங்க... பக்கத்திலேதானே இருக்கிறேன்னு வந்தேன்...” என்றவன், “நீ ஏன் ரூமுக்குள்ள உக்கார்ந்துட்ட? வேலை இருக்குதா?” என விசாரித்தான்.

“ஆமா...” என்றவள், கட்டிலில் சற்றே சாய்ந்தமர, “டயர்டா இருக்குதா? ஜூஸ் எடுத்துட்டு வரவா?” என அக்கறையுடன் விசாரித்தான்.

“பரவாயில்ல... இதெல்லாம் சகஜம்தான்...” என தவிர்த்தவள், “மாலதியைக் குறித்து வினவவா வேண்டாமா??” என சிந்தித்துக் கொண்டிருக்க, “அப்பா...” என்றவாறே ஓடிவந்து மடியில் அமர்ந்தாள் அவனது மகள்.

“ரவீ... முழிச்சிட்டியா தங்கம்?” என தன் மகளது இரு கன்னங்களிலும் மாறிமாறி முத்தமிட, அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள் ரவீனா.

மகளைக் கொஞ்சிக் களைத்தவன், நிமிர்ந்து ரவீனாவை பார்க்க, அவளோ புருவத்தை நெரித்தாள். அதன் அர்த்தம் புரியாமல் தடுமாறியவன், “என் பொண்ணு... இவ பெயரும் ரவீனாதான்...” என உரைக்க, “சோ... மாலதி அக்காவை பிரிஞ்சதாலதான் தைரியமா ரவீனான்னு வச்சிருக்கிறீங்க.. இல்லையா அத்தான்?” என நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல கேட்டுவிட்டாள்.

கேள்வியை எதிர்பார்த்திராதவன் முதலில் தடுமாறினாலும் பின் சுதாரித்துக்கொண்டு, “உனக்கே தெரியும்... ரவீனாங்கற பெயர் சின்னவயசுல இருந்தே எனக்கு ரொம்பப்பிடிக்கும்ன்னு...” என அவள்முகம் பார்க்க, விரக்தியாக இதழ்வளைத்தவள், “ரொம்பப்பிடிச்ச விஷயத்தைக்கூட பிடிக்காதவளோட பெயர்ங்கறதால உங்களுக்கு பிடிச்சவங்களுக்காக தள்ளிவச்சிட்டீங்க... ரைட்?” என்றாள் குதர்க்கமாக.

தன் தோல்வியை ஒப்புக்கொள்ளும் மனநிலையில் அமர்ந்திருந்தவன், “மாலதி விட்டுட்டுப் போயிட்டாங்கறதுக்காக அவளை பிடிக்காதுன்னு ஆகிடாதுல்ல...” என மெல்லிய குரலில் உரைக்க, “அவங்களை உங்களுக்கு பிடிக்கக்கூடாதுன்னு நான் சொல்லவேயில்லையே அத்தான்... மோர்ஓவர் அதை சொல்றதுக்கு எனக்கு எந்த ரைட்ஸுமில்ல...” என்றாள் அவளும் காட்டமாக.

அவளுக்கு பதில்மொழி பேசாதவன் அடுத்த பதிலுக்குத் தாவினான், “அதேமாதிரி உன்னையும் பிடிக்காதுன்னு இல்ல...” என. இதைக் கேட்டு புன்னகைபூத்தவள், “பிடிக்காதுன்னு சொல்லக்கூடாதா?? அப்போ வேண்டாதவன்னு வச்சிக்கலாமா?? எது எப்படியிருந்தாலும் ஐ வோன்ட் பாதர்...” என்றாள்.

“ஓ..” என சுரத்தேயில்லாமல் உரைத்தவன், “ஜூஸ் எடுத்துட்டு வர்றேன்...” என எழுந்துகொள்ள முற்பட, “ப்பா.. இவங்க யாரு??” எனக் கேட்டாள் அவனது மகள்.

“இவங்க ரவீனா சித்தி....” என அவன் கூற எத்தனிக்க, “செல்லம்... என் பெயரும் ரவீனாதான்டா... சேம் பின்ச்... நீ என்னை ரவீன்னு கூப்பிடு, நானும் உன்னை ரவீன்னு கூப்பிடறேன்...” என குறுக்கிட்டவள், கலகலவென சிரித்தாள்.

அவள் சிரிக்குமோசையைக் கேட்ட விக்னேஷ், “என்னோட அனுமானம் தப்போ? ஒருவேளை ரவீனாவுக்குள்ளேயும் அந்த பழையநேசம் மண்மூடிக் கிடக்குமோ?” என ஐயமுற்றான்.

“ச்சே... என்னதிது? இடியட் மாதிரி என் தங்கச்சியவே சந்தேகப்பட்டுட்டு இருக்கிறேன்! அவ ரொம்பத் தெளிவான பொண்ணு.. எது செய்யறதா இருந்தாலும் நல்லா யோசிச்சுதான் முடிவுபண்ணுவா.. நான் பெருசா ஓரிபண்ணிக்கத் தேவையில்ல...” என தானாகவே சமாதானம் கூறிக்கொண்டு, அவ்விடமிருந்து நகர்ந்தான்.

வெளியேவந்த சுரேஷ் அவளுக்காக பழரசத்தை ஒரு தம்ளரில் ஊற்றிக்கொண்டிருக்க, “ஜூஸ் யாருக்குப்பா??” எனக் கேட்டார் அவனது அன்னை அன்னலட்சுமி.

“ரவீனாவுக்கும்மா...” என அவன் பதிலிறுக்க, “ஃபிரிட்ஜ்ல வச்சதை அவளுக்கு கொடுக்காதேப்பா... போனவாரம் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுட்டு நைட் முழுக்க தூங்காம இருமிக்கிட்டே இருந்தா...” என்றார் தன் பேத்தியைக் குறித்ததான முன்னெச்சரிக்கையுடன்.

அவரது பதிலில் மெலிதாகப் புன்னகைத்தவன், “இது சீனியர் ரவீனாவுக்கும்மா..” என தெளிவுபடுத்திவிட்டுச் செல்ல, விக்னேஷும் அவனும் முன்னொரு நாள் சண்டையிட்டுக்கொண்டது அவரது நினைவில் வந்துபோனது.

“என்னதான் நடக்குது இவங்களுக்குள்ள? சுரேஷ் ஏன் இவ்ளோ கேர் பண்றான்? எல்லார்கிட்டேயும் ஒட்டாதவ இவன்கிட்டே இயல்பா நடந்துக்கறா?” என அவருக்குள் கேள்வி உதித்தது.

உள்ளே சென்றவனை உறவினர்கள் அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர். “என்னப்பா தெய்வேந்திரன்.. உன் மக எங்க யார்கிட்டேயும் முகம்கொடுத்தே பேசலை.. இப்போ அன்னம் மகனை பார்த்ததுமே இவ்ளோ அமைதியாகிட்டா...” என ஒருவர் வாயைத்திறந்து கேட்டுவிட, அதன் அர்த்தம் தவறான சித்தரிப்புடன் முற்றுப்பெற்றுவிடக் கூடாது என்பதற்காகப் பதறிய விக்னேஷ், “இதிலே என்ன இருக்குது அத்தை! ரவீயும் சுரேஷும் சின்ன வயசுல இருந்தே க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்தானே?! நம்ம எல்லாரையும்விட அவனும் அவளும்தானே க்ளோஸ்...” என உரைத்தான்.

“நான் தப்பா எதுவும் சொல்லலைப்பா... இப்படி நடந்துக்கறாளேன்னு சொன்னேன்...” என அவர் சுதாரிக்க, “நானும் நீங்க தப்பா சொன்னீங்கன்னு சொல்லலை.. இதுதான் காரணம்ன்னு சொன்னேன்..” என்றான் அவனும் சளைக்காமல்.

அடுத்தடுத்து தண்ணீர், உணவு என அனைத்தையும் சுரேஷே அவளது அறைக்கு எடுத்துச் செல்ல, அவதானித்துக் கொண்டிருந்தவர்களின் அனுமானங்கள் அனைத்தும் வெளிப்பட்டது மறுநாளின் வளைகாப்பு நிகழ்வில்.

மிதமான ஒப்பனையுடன் சாதாரண புடவையணிந்து தயாராகி வந்தவள் தனியாக நாற்காலியில் அமர முற்பட, “ஏன் அன்னம்.. எனக்கு ஒண்ணு தோணுது... சொல்லவா?? சுரேஷும் வாழ்க்கையை இழந்துட்டு நிக்கறான்... இவளும் புருஷனை பறிகொடுத்துட்டா... இந்த சின்னவயசிலேயே இவங்களுக்கு இப்படியொரு கஷ்டம் தேவையா?? பேசாம ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிவச்சிட்டா என்ன? அதுக்கு ஆதாரமா சுரேஷை இவபக்கத்திலே உக்காரவச்சு வளைகாப்பு நடத்திடலாம்ல...” என ஒருவர் முடிப்பதற்குள் வெகுண்டெழுந்துவிட்டாள் ரவீனா.

தேவன் வருவான்...

அடுத்த அத்தியாயம்

Post a Comment

2 Comments