பூமி காணா தேவன் நீ... – 6
“ச்சே... நான் என்ன அபத்தமா யோசிச்சிட்டு இருக்கிறேன்? அவரவர் தங்களுக்கான வாழ்க்கையில போயிட்டு
இருக்கிறப்போ எப்படி இதெல்லாம் யோசிப்பாங்க? இதெல்லாம்
சரிப்பட்டு வராதுன்னு சுரேஷுக்கு தெரியாதா என்ன?” என
விக்னேஷ் தற்காலிகமாக தன்னை சமாதானம் செய்துகொண்டாலும் ஏனோ மனதிற்குள் சுரேஷின்
கேள்வி அரித்துக் கொண்டேயிருந்தது.
“பெத்தவங்களே அடுத்தது என்னன்னு தெரியாம முடங்கிப்
போயிருக்கும்போது இவன்மட்டும் ஏன் எதிர்காலம் எதிர்காலம்ன்னு வாழ்க்கைத் துணையையே
அழுத்தி சொன்னான்?” என
தணியாமல் தகித்துக் கொண்டிருந்த வினாவை அடுத்த வாரத்தின் இறுதியில் சொந்த ஊரில் சந்திக்கையில்
கேட்டுவிட்டான் சுரேஷிடம்.
கோவில் திருவிழாவிற்காக அனைவரும் அவ்விடம் குழுமியிருக்க, இருவரும் தனித்திருந்த சமயத்தில், “ஏன் சுரேஷ்... ஏன் நீ அன்னைக்கு ரவீனாவோட எதிர்காலத்தைப் பத்தி
திரும்பத் திரும்ப ஸ்ட்ரெஸ் பண்ணுன?? அவமேல உனக்கு என்னடா
அவ்ளோ அக்கறை? ஒருவேளை உடைஞ்சிருக்கிற ரெண்டு பேரையும்
ஒட்டவைக்கிற மாதிரி ஒரு பந்தத்தை எதிர்பார்க்கிறியா?” என்னும்
விக்னேஷின் கேள்வியை சுரேஷ் எதிர்பார்த்திருக்கவில்லை.
அதிர்ச்சியில் கண்களை அகலவிரித்தவன் திகைத்து நோக்க, இதைக் கேட்டுவிட்டிருந்தார் விக்னேஷின்
தந்தை.
ஆத்திரத்துடன் அவ்விடம் வந்தவர், “டேய்... என்னடா பேசுற? கல்யாணமான ஆம்பளையும் பொம்பளையும் சேர்த்து கேக்க வேண்டிய கேள்வியாடா இது??
எங்கே இருந்துடா இப்படியொரு வக்கிரமான புத்தி வந்துச்சு உனக்கு?
அவ வாழ்க்கை இப்படியாகிப் போச்சுதுன்னு எல்லாருமே உடைஞ்சு
போயிருக்கிறோம்... நீ இப்படி அசிங்கம் பண்ணிட்டு இருக்கிற?” என
அவனது சட்டையைப் பிடித்து உலுக்கத் தொடங்க, அங்கிருந்தவர்கள்
அவ்விடம் குழுமிவிட்டனர்.
“ராஜேந்திரா விடு...” என விக்னேஷின் தாத்தா தன் மகனை விலக்க
எத்தனிக்க, “விடுங்கப்பா
என்னை... இவன் என்ன வார்த்தை பேசினான்னு தெரிஞ்சா நீங்க இப்படி சப்போர்ட்டுக்கு
வரமாட்டீங்க...” என கர்ஜித்தார் அவர்.
“அப்படி என்னடா பேசிட்டான்?? வயசுப்பசங்க தங்களுக்குள்ள எதையோ பேசிட்டு இருக்கிறாங்கன்னு
விடவேண்டியதுதானே?! அசிங்கமா அதைப்போய் ஒட்டுக்கேட்டுட்டு
அடிக்கிறதுக்கு பாயுற?” என அனைவரும் விக்னேஷின் தந்தையை
கடிந்துரைக்க, அவரோ தனது மகனை எரித்து விடுவதைப்போல
பார்த்தார்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையே உருவான பிணக்கில் நடுநாயகமாக
நிற்க நினைத்த அவனது தாயார்,
“விக்கி... அப்பா கோபப்படுற அளவுக்கு நீ என்னடா கேட்ட இவன்கிட்டே?” என அவனிடம் வினவ, அவனோ மௌனமாகத் தலைகுனிந்தான்.
“இவனோட நடவடிக்கையிலேயே தெரியலையா சபையில சொல்லக்கூடாத
கேள்வியை கேட்டிருக்கிறான்னு...” என்ற அவனது தந்தை அனைவரது முன்னிலையிலும் அவனை
அடிக்கத் தொடங்க,
“ஏய்... என்னப்பா நீ இவ்ளோ பெரிய பையனை போட்டு எல்லார் முன்னாடியும் அடிக்கிற? இவன் வயசுல இருக்கிற பசங்களுக்கு கல்யாணமாகிருச்சு... இதுவே இவனுக்கும்
கல்யாணமாகி பொண்டாட்டின்னு ஒருத்தி வந்திருந்தா இதெல்லாம் பார்த்துட்டு சும்மாவா
இருந்திருப்பா?” என தடுத்தார் ரவீனாவின் தந்தை.
“தெய்வேந்திரா... நீ உன் சோலியை மட்டும் பாரு... இவன் என்ன
வார்த்தை பேசினான்னு எனக்கு மட்டும்தான் தெரியும்... பொதுவுல சொல்லி
அசிங்கப்படுத்தக்கூடாதுன்னு அமைதியா இருக்கிறேன்...” என பற்களை நறநறவென கடித்தவர், அமைதியாகச் சென்றுவிட, அனைவரும் அவ்விடம்விட்டு கலைந்து சென்றனர்.
அனைவரும் சென்றபின்னர் தன் மகனிடம் வந்த அவனது அன்னை, “விக்கி... சுரேஷ்கிட்டே என்னடா கேட்ட?”
என தண்மையாக வினவ, அவனோ மெளனமாக
அமர்ந்திருந்தான்.
“உன்கிட்டதான்டா கேக்கறேன்...” என அவர் சற்றே கறாராகக்
கேட்க, “ரவீயை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறியான்னு
கேட்டேன்மா..” என்றான் தரையை வெறித்தவாறே.
“டேய்....” என அதிருப்தியில் கண்களை அகலவிரித்தவர், “பைத்தியமாடா உனக்கு??” எனக் கேட்க, “ம்மா... இதுக்கு பின்னாடி இருக்கிற
காரணத்தை சொல்ற சூழ்நிலையில நான் இல்ல...” என முடித்துவிட்டான்.
“ரவீ உன்னோட தங்கச்சி... அதை மறந்துட்டியா?”
“அந்த உணர்வுகூட இல்லாதவனில்லம்மா உங்க மகன்...
எல்லாத்தையும் யோசிச்சுத்தான் கேட்டேன்... என்னளவில் நான் கேட்டது சரிதான்...”
“சரிதானா?? என்ன சொல்ற விக்கி?”
“ம்மா... என்கிட்டே காரணம் எதையும் கேக்காதீங்க... சில
விஷயங்களை ஆழமா போகாம மேம்போக்கா கடந்துடறது பெட்டர்... எல்லாத்தையும்
தெரிஞ்சதாலதான் இப்படியொரு இக்கட்டான சூழல்ல நிக்கறேன்...” என பட்டும்படாமல்
உரைத்தவன் எழுந்து சென்றுவிட,
குழப்பத்துடன் நோக்கினார் அவனது அன்னை.
ரவீனாவின் அத்தையும் சுரேஷின் அன்னையுமான அன்னலட்சுமி இதை
கேட்டுவிட்டிருந்தாலும் வெளிப்படையாக எவரிடமும் காட்டிக்கொள்ளாமல் இந்த காரியங்களை
மனதிற்குள் வைத்து சிந்தனைபண்ணிக் கொண்டிருந்தார்.
வாரங்கள் சில கழிந்துவிட, ரவீனாவின் கர்ப்பக்காலத்தின் ஏழாவது மாதமும் இனிதே கனிந்தது.
இடையில் வாந்தி, தலைசுற்றல், மனச்சமநிலையின்மை
என பலவாறாக அவதியுற்றாலும் அனைத்தையும் தனியாகவே எதிர்கொண்டாள்.
உடலாலும் மனதாலும் சோர்ந்து துவண்டு போகையில் எல்லாம்
அவளளவில் அரூபியாக அவளுடன் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் அவனை மனத்திரையில்
நிறுத்தி மௌனமாக கண்ணீர் உகுப்பாள். பின் தன்னைத்தானே தைரியப்படுத்திக் கொண்டு
ஓட்டத்தை தொடர்வாள்.
“உங்க பொண்டாட்டி ரொம்ப போல்டுதான்.. எல்லாத்தையும் தனியாவே
சமாளிக்கிறாளே!” என அவ்வவ்போது அலைபேசியில் வைத்திருக்கும் அவனது புகைப்படத்தைப்
பார்த்து பேசிக்கொள்வாள்.
இவ்வாறானதொரு காலைப் பொழுதில் வீட்டிலிருந்தே பணிபுரிய
அனுமதியளிக்கப்பட்டிருந்தாலும் அலுவலகம் சென்று பிறருடன் சஞ்சரித்தால் சற்றே
இலகுவான மனநிலை ஏற்படும் என்னும் முனைப்போடு பரபரப்பாகத் தயாராகிக் கொண்டிருந்தாள்
ரவீனா.
வாசலில் அழைப்பு மணி ஒலிக்க, சரஸ்வதிதான் வந்திருக்கிறார் என நினைத்தவள், “அக்கா... ரெடியாகிட்டு இருக்கிறேன்... கீ இருக்குதுதானே! உள்ளே
வாங்க...” என உள்ளிருந்தவாறே குரல்கொடுக்க, அழைப்புமணியோ
தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.
“நான் பேசுறது கேக்கலையா இல்ல வந்திருக்கிறது சரஸ்வதி அக்கா
இல்லையா?” என்னும் சந்தேகத்துடனே மெல்ல அடியெடுத்து
நடந்து வந்தவள், கதவைத் திறக்க,
எதிரில் அவளது பெற்றோர் நின்றிருந்தனர்.
அவர்களை அவ்விடம் எதிர்பார்த்திராதவள் முதலில்
அதிர்ந்தாலும்,
வலியப்புன்னகையொன்றை வரவழைத்துக் கொண்டு, “வாங்கம்மா...
வாங்கப்பா...” என வரவேற்க, அமைதியாக உள்ளே வந்தனர் இருவரும்.
“என்னம்மா... வந்ததும் வராததுமா வெளியே போங்கன்னு கத்தி
கலாட்டா பண்ணுவன்னு எதிர்பார்த்தோம்.. இப்படி அமைதியா இருக்கிற?” என வினவியவாறே அவளது அன்னை அங்கிருந்த
சோஃபாவில் அமர, “ஆஃபீஸ்க்கு கிளம்பிட்டு இருக்கிறேன்ம்மா..
ஈவ்னிங் வந்து பேசறேன்... பஸ்ல வந்தீங்களா இல்ல ட்ரெயினா?? சாப்பிட்டீங்களா??
குளிச்சிட்டு ஃப்ரெஷ்ஷாகிக்கோங்க... சரஸ்வதியக்காவை வந்து குக்
பண்ணித்தர சொல்றேன்...” என்றாள் தனது பையைத் தயார் செய்தவாறே.
“ரவீ... என்ன பேசுற நீ? ஆஃபீஸ் போறியா? இது உனக்கு ஏழாவது மாதம்...” என
அவளது அன்னை சற்றே கண்டிப்புடன் பேச, “நீங்களே ஞாபகம்
வச்சிருக்கும்போது எனக்கு ஞாபகம் இருக்காதா??” என
பதிலுக்குக் கேட்டவள் அவரது முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள்.
“எடுத்ததுக்கெல்லாம் ஏட்டிக்குப் போட்டியா பேசாதே ரவீ.. இது
பிடிவாதம் பிடிக்கவேண்டிய நேரமுமில்ல, இடமுமில்ல...” என அவளது தந்தை பேச, “அப்பா... இது
ஏழாவது மாதம்தானே?! நான் வயித்துல இருந்தப்போ அம்மா முந்தின
நாள் வரைக்கும் வேலைக்குப் போனதா சொல்லுவீங்களே! மறந்துட்டீங்களா??” என அவரையும் மடக்கினாள் ரவீனா.
“நல்லா பேசக்கத்துக்கிட்ட ரவீ.. அது வேற, இது வேற... நாங்க சின்னப் பசங்களா
இருந்தப்போ கம்பஞ்சோறு, கேப்பைக்களி, சோளச்சோறுன்னு
சாப்பிட்டு வளர்ந்தோம், அதனால எங்க உடம்பு எல்லாத்தையும்
தாங்கிச்சு... ஆனா உங்க ஜெனரேஷன் அப்படியில்லையே! அதுவுமில்லாம எத்தனை
பிரச்சனைகளுக்கு அப்புறம் இந்த குழந்தை உன்னோட வயித்துல தங்கியிருக்குது...
மறந்துட்டியா??” என அவளது அன்னை அக்கறையுடன் பேச, “அழிச்சிடுன்னு சொன்னவங்களுக்கு எப்படி திடீர்ன்னு இவ்ளோ அக்கறை??”
என எரிச்சலுடன் கேட்டாள்.
அவளது கேள்வியில் பெற்றோரின் முகம் கறுத்துப்போய்விட்டது.
சிலநிமிட மௌனத்திற்குப் பின்னர் அவளே தொடர்ந்தாள். “சரிம்மா... நடந்ததை
மறந்துடலாம்.. அது ஏதோவொரு மனவருத்தத்தில் பேசியிருக்கலாம்... அதைவிடுங்க... இப்போ
ஏன் வந்திருக்கிறீங்க? இன்னும்
கொரோனா முழுசா போகல... இந்த மாதிரி சமயத்துல இவ்ளோதூரம் ட்ராவல்
பண்ணியிருக்கிறீங்க?” என அவளும் ஆதங்கப்பட, “எங்க நலன்ல இவ்ளோ அக்கறை காட்டுற நீ உன்னோட நலனைப் பத்தி யோசிச்சியா?
ரெண்டு உயிரா இருக்கிறவ இவ்ளோ அஜாக்கிரதையா ஆஃபீஸ் போறேன்னு
சொல்லிட்டு இருக்கிற.. அதான் எல்லாருக்கும் ஒர்க் ஃப்ரம் ஹோம்
கொடுத்திருக்கிறாங்களே௧” என வினவினார் அவளது தந்தை.
“வீட்டுல இருந்தே ஒர்க் பண்ணலாம்தான்... ஆனா இப்படி நாலு
சுவத்துக்குள்ளேயே அடைஞ்சிருக்கிறது ஏதோ மனசை நெருக்குற ஃபீல்... அதான் வெளியே
போனா ஒரு நாலுபேரை பார்த்து கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கலாமேன்னு...” என அவள்
முடிக்கும் முன்னரே,
“அதுக்குத்தான் ஊருக்கு வா, எங்களோட இருன்னு சொல்றோம்...” என
குறுக்கிட்டார் அவளது அன்னை.
“ம்மா... இப்பவரைக்கும் நான் என்ன சொல்ல வர்றேன்னே
உங்களுக்குப் புரியமாட்டிக்குது... எனக்கு ஊருக்கு வர்றதுல எந்த பிரச்சனையுமில்ல..
இந்த வீட்டைவிட்டு எங்கேயும் வரவிருப்பமில்ல... காடுமேடுன்னு எங்கே சுத்தி
திரிஞ்சாலும் கடைசியா என்னோட புகலிடம் இந்த வீடுதான்... என்னோட உடலும் மனமும்
இளைப்பாருறது இங்கேமட்டும்தான்... இதுக்கான காரணம் என்னன்னு பலதடவை உங்ககிட்டே
சொல்லி, சொல்லி சலிச்சிட்டேன்... இதுக்குமேல
சொல்றதுக்கு எதுவுமில்ல..” என உணர்ச்சிபொங்க பேசியவளுக்கு சற்றே தலைசுற்றுவது
போலிருக்க, தடுமாறினாள்.
அவளது கையைப்பிடித்து அமரவைத்த அவளது அன்னை, “சரிம்மா... உன்னோட உணர்வுகளை நாங்க
மதிக்கறோம்.. வழக்கமான முறைப்படி ஏழாவது மாதத்திலே வளைகாப்பு நடத்தி ஊருக்கு
கூட்டிட்டுப் போவாங்களே! அந்த மாதிரி ஒரு சம்பிரதாயத்துக்காகவாவது ஊருக்கு
வரலாம்ல.. பெத்தவங்கன்னு நாங்க எதுக்கு இருக்கிறோம்? ஏற்கனவே
எங்க பொண்ணோட வாழ்க்கை இப்படி ஆகிடுச்சேன்னு நினைச்சு ஒவ்வொரு நிமிஷமும் உயிரோட
செத்துட்டு இருக்கிறோம்... தனியா கஷ்டப்பட்டு நீ அந்த மனவேதனையை
அதிகமாக்கிக்கிட்டு இருக்கிற... பிரசவ சமயத்தில ஒருவிஷயம் நெகட்டிவா நடந்து
போச்சுதுன்னாகூட அந்த குற்றஉணர்ச்சி நாங்க சாகுற வரைக்கும் மாறாது... அதுக்கு
அப்புறம் நாங்க உயிரோட இருக்கிறதுல எந்த பயனுமில்ல...” என சோகம் தோய்ந்த குரலில்
உரைத்தாள்.
அவரது பேச்சில் சற்றே மனமிரங்கினாலும் அதை வெளிப்படையாக
ஒப்புக்கொள்ள மனமில்லாதவள்,
“நீங்க சொல்ற மாதிரி வளைகாப்பு, சடங்கு, சம்பிரதாயம்ன்னு என்ன வேணாலும் செய்யுங்க.. ஆனா அது முடிஞ்சதும் நான்
உங்களோட வரமாட்டேன்... நீங்க இங்கே வந்து தங்குங்க.. உங்களுக்கு மனதிருப்தி
ஏற்பட்ட மாதிரியும் ஆச்சுது, எனக்கு ஆத்மார்த்தமான நிம்மதியை
தக்கவச்சிக்கிட்ட மாதிரியும் ஆச்சுது...” என வெகுதீர்க்கமாகப் பேச, இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“இவ்வளவாவது இறங்கி வந்தியே!” என்னும் மனநிலையில் இருந்த
இருவரும், “நீ சொல்ற மாதிரியே செஞ்சிடலாம்மா... இந்த
மாதிரி பேன்டமிக் சமயத்திலே பெரிய அளவுல ட்ராவல் பண்றதுக்கு அனுமதி கிடையாது...
அதனால நெருங்கின சொந்தங்களை மட்டும் பாஸ் வாங்கிட்டு வரசொல்றோம்... விருப்பமும்
வாய்ப்பும் இருக்கிறவங்க வரட்டும்...” என ஒப்புக்கொண்டனர்.
“பெரிய அளவுல கூட்டத்தை கூட்ட வேண்டாம்.. அது ரூல்ஸ் ப்ரேக்
பண்ற மாதிரியாகிடும்... யாரெல்லாம் அத்தியாவசியம், நமக்கு நல்லது நடந்தா ஜெனியூனா சந்தோஷப்படுவாங்கன்னு
உங்களுக்கு தோணுதோ அவங்களுக்கு மட்டும் இன்வைட் பண்ணுங்க.. அவங்க கன்ஃபார்மா
வர்றாங்களான்னு தெளிவா டீடெயில் கேட்டுட்டு சொல்லுங்க... தேவையான ஏற்பாடுகளை நான்
பண்ணிடறேன்... நீங்க எதுவும் செலவு பண்ணவேணாம்.. ஃபங்க்ஷனுக்கு மட்டும் ஏற்பாடு
பண்ணினா போதும்...” எனக் கூறிவிட்டு நிறுத்தியவள்,
“அப்புறம்.. வர்ற எல்லார்கிட்டேயும் ஸ்ட்ரிக்டா சொல்லிடுங்க.. அவர் இருந்திருந்தா
நல்லாயிருக்கும், அவர் சின்ன வயசிலேயே போய்
சேர்ந்துட்டார்ன்னு வாய்க்கு வந்ததெல்லாம் பேசக்கூடாதுன்னு... அவர் எங்கேயும் போகல, என்னோடவும் என் குழந்தையோடவும்தான் இருக்கிறார்...” என தெளிவாகப்
பேசிவிட்டு அறைக்குச் சென்றுவிட்டாள்.
தேவன் வருவான்...
அடுத்த அத்தியாயம் - நாளை..
1 Comments
Super Sis❤️❤️❤️
ReplyDelete