பூமி காணா தேவன் நீ... – 1
“மேம்... இன்னைக்கு ஈவ்னிங் எட்டு மணிக்குள்ள ரிப்போர்ட்
அனுப்பணும்ன்னு டியூ சொல்லியிருக்கிறாங்க.. அதுக்கு முன்னாடி முடிச்சிடுவீங்க தானே?! தனியாவே முடிச்சிடுவீங்களா? இல்லை அசிஸ்டன்ஸ்க்கு யாரையாவது அலாட் பண்ணனுமா?” என
இத்துடன் மூன்றாவது முறையாக வினவிய அந்த நிறுவனத்தின் மேலதிகாரியை நினைக்கையில்
எரிச்சலாக வந்தது ரவீனாவுக்கு.
“இந்த மனுஷன் ஏன் இப்படி இருக்கிறாரு? கொஞ்சங்கூட என்னை நம்பவே மாட்டாரா? இதுவரைக்கும் எத்தனை ப்ராஜக்டை சக்ஸஸ்ஃபுல்லா முடிச்சு
கொடுத்திருக்கிறேன்... என்னோட அனலைசிஸ்ல யாராவது ஒரு தப்பு சொல்ல முடியுமா?
அவ்ளோ அக்யூரேட்டா ரிசல்ட்ஸ் அண்ட் இன்டர்ப்ரடேஷன் கொடுக்கிறேன்...
ஆனாலும் நம்பிக்கை வரலைன்னா என்ன பண்றது? இப்படி
நம்பிக்கையில்லாதவர்கிட்டே எத்தனை நாள் வேலை செய்யுறது?” என
புலம்பியவாறே மடிக்கணினியில் இருகரங்களையும் கதக்களியாட அனுமதித்தாள் அவள்.
அதற்குள்,
“கார்த்திக் காலிங்...” என அலைபேசித் திரை ஒளிர, “இதோ.. இதோ
கால் பண்ணிட்டாருல்ல... டவுட்டிங் தாமஸ்...” என தனக்குள் முணுமுணுத்தவாறே அழைப்பை
ஏற்றவள், “எஸ் கார்த்திக்...” என்றாள் கடுப்பை மறைத்த கனிவான
குரலில்.
“ரவி... எல்லாம் ஓகே தானே?! ஈவ்னிங்குள்ள ரெடியாகிடும்ல...” என உறுதிசெய்து கொள்வதற்காக
மீண்டுமொரு முறை கேட்டான் அவன்.
“ஆல்மோஸ்ட் ரெடிதான் கார்த்திக்... t-டெஸ்ட், Chi-square எல்லாம் போட்டாச்சு... ANOVAவோட ரிசல்ட்ஸ்
இன்டர்பிரட் பண்ணிட்டா எல்லாம் முடிஞ்சது.. முடிச்சிட்டு என்னோட ரிசல்ட்ஸ்
டெம்ப்ளேட்ல ஃபிட் பண்ணி ஐ’ல் சென்ட் யூ பை மெயில்...” என அவள் சற்றே தன்மையாகக்
கூற, “ஆர் யூ ஷ்யூர்?” என மீண்டுமொரு
முறை கேட்டான்.
அவன் அவ்வாறு கேட்கவும், “இவனுக்கெல்லாம் அனலைஸ் போட்டுத் தர்றேன்னு ஏன்தான் ஒத்துக்கிட்டோமோ?” என்றிருந்தது ரவீனாவுக்கு.
“இனி இவனை மாதிரி ஆளுங்ககிட்டேயெல்லாம் வேலைக்கு கமிட்டாகக்
கூடாது...” என இன்ஸ்டன்டாக உறுதிமொழியொன்றை சுயமுன்மொழிவு செய்து கொள்ள
சித்தம்கொண்ட ரவீனா பெங்களூரின் பிரபலமான நிறுவனமொன்றில் டேட்டா சயின்டிஸ்டாக
பணிபுரிகிறாள். காலத்தை வீணடிப்பது என்பது அவளுக்கு ஒவ்வாமையைத் தருமொன்று.
தோழிகளுடன் உரையாடுவதைக் கூட அட்டவணை போட்டு நிறைவேற்றுபவள் அவள். இப்படியான
திறத்தவள் ஓய்வு நேரத்திலும் ஓய்ந்திருப்பளோ? ஃப்ரீலான்ஸ் டேட்டா அனாலிஸ்டாக தன் பணியைத் தொடர்கிறாள். அப்படியாக டேட்டா
அனாலிசிஸ் செய்கிறேன் என ஒப்புக் கொண்டதில்தான் கார்த்திக்கிடம் மாட்டிக்கொண்டு
கடந்த மூன்று தினங்களாக அல்லாடுகிறாள்.
மிகச்சரியாக ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை அழைத்து விடுபவன், “ரவி... உங்களால முடியுமா? வேணும்ன்னா துணைக்கு ஆளுங்களை அரேன்ஜ் பண்றேன்...” என அவளது
தன்னம்பிக்கையை குறைக்கும் வகையில் பேசப்பேச, எரிச்சல்
மண்டியது. இருப்பினும், “ஐ கேன் டூ இட்... ஐ வில் ப்ரூவ்
மைசெல்ஃப்...” என தன்னைத்தான் சுயதேற்றுதல் செய்து கொண்டு, இந்த
வேலையை முன்னெடுத்தாள்.
அவன் குறிப்பிட்ட அத்தனையையும் செய்து முடித்தவள், தனக்கே தனக்காக வைத்திருக்கும்
டெம்ப்ளேட்டிற்கு மாற்றி, “சேவ்” பொத்தானை அழுத்துவதற்குள்
கணினித்திரையின் வண்ணம் மாறியது.
வெள்ளையாக இருந்த மைக்ரோசாஃப்ட் வேர்ட் டாகுமென்ட்
பல்வர்ணம் கொண்டு காட்சியளித்ததைப் பார்க்கையில் ஒருவித கிலி தொற்றிக் கொண்டது
ரவீனாவிற்கு.
“அச்சோ.. கடவுளே! என்னதிது சோதனை? இவன் முடியுமா முடியுமான்னு சந்தேகத்தோட
கேட்டது உண்மையாகிடும் போலவே!” என தனக்குள் பதறியவள்,
தன்னால் இயன்ற மட்டும், “என்டர், எஸ்கேப்
மற்றும் ஸ்பேஸ்” பொத்தான்களை அழுத்தி
நிலைமையை சரிசெய்ய முயன்றாள்.
ஆனால் அவளது முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிய, சற்றே சோர்ந்தாள். “ரீஸ்டார்டிங்...” என
திரை ஒளிர, சற்றே ஆசுவாசமடைந்தவள், “ஹப்பாடா...”
என உற்றுநோக்கத் தொடங்கிவிட்டாள்.
சோதனை என்னவெனில் பத்து நிமிடத்திற்கும் மேலாக எவ்வித
முன்னேற்றமும் ஏற்படவில்லை. “ரீஸ்டார்டிங்”கிலேயே உறைந்து நின்றது கணினித்திரை.
“அப்பனே முருகா! ஏன் இப்படி சோதிக்கிற? சேவ் பட்டனை அழுத்துற வரைக்கும் ஒரு ரெண்டு
செகன்ட் பொறுத்திருக்கக் கூடாதா? ஒன் டிரைவ்லயாவது ரெகவர்
பண்ணியிருப்பேனே! அட்லீஸ்ட் ஹார்ட் டிஸ்க்ல இருந்தாவது பேக்அப் எடுத்திருப்பேன்..
இப்படி முட்டுசந்துல முட்டிட்டு நிக்கிறது மாதிரி ஆகிருச்சே!” என புலம்பியவாறே
தனது அலைபேசியை எடுத்தவள், “ரீஸ்டார்டிங்கில் உறைந்து
நிற்கும் மடிக்கணினியை இயல்பு நிலைக்கு மீட்பது எப்படி?”, “மடிக்கணினி
அப்படியே நின்றுவிட்டால் எவ்வாறு சரிசெய்வது?” என தனக்குள்
தோன்றிய அத்தனை சிந்தனைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து யூடியூபிடம் இறைஞ்சி
நின்றாள்.
ஆளுக்கு ஒன்றாக தங்களுக்குத் தெரிந்தவற்றை காணொளிகளாக
பதிவுசெய்து பதிவேற்றியிருக்க,
“ஷப்பா.. இதிலே எது ஒர்க்அவுட் ஆகும்ன்னு எப்படி தெரிஞ்சிக்கிறது?” என மலைத்தாள் மடவரல்.
ஒவ்வொரு காணொளியின் கீழும் பதிவிடப்பட்டிருந்த கமெண்டுகளில்
கண்களை மேயவிட்டவள், “எனக்கு
இது சரியாக ஒர்க்அவுட் ஆகியது...” என்கிற ரீதியில் எவரேனும் பதிவிட்டிருக்கின்றனரா
என ஆராய்ந்தாள்.
இறுதியாக அப்படியொன்றை கண்டுபிடித்தவள், அதில் கூறியவற்றை அப்படியே செய்யலானாள்.
“முதலில் உங்களது மடிக்கணினியின் பவர் பட்டனை பத்து நொடிகளுக்கு இறுக அழுத்தியவாறே
நிலைத்திருக்கவும்” என கட்டளை பிறக்க, அதை நிறைவேற்றினாள்.
“சில நிமிட இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் பவர் பட்டனை
அழுத்தவும்.. இப்போது உங்கள் லேப்டாப்பின் லோகோ ஒளிரும்.. அந்த சமயத்தில் எஃப்12
பொத்தானை அழுத்தவும்...”
“இம்முறை உங்களது ஹார்ட்வேர் அனைத்தும் சரியாக இருக்கிறதா
என உறுதி செய்து கொள்ளும் பொருட்டு டயக்னாஸ்டிக் என்னும் ஆப்ஷனை தொடவும்...” என
அவர்களது கட்டளையை ஏற்று அழுத்தியதுதான் தாமதம், “பீஈஈஈஈஈஈப்...” என கூவத் தொடங்கிவிட்டது மடிக்கணினி.
“அச்சோ... இது வேற உசுரை வாங்குதே! இருக்கிற டென்ஷன்ல
இதுவும் சேர்ந்தாச்சு..” என நொந்துகொண்டவாறே குறிப்பிட்ட அறையை விட்டு வெளியே
வந்தாள்.
மெலிதாக மேடுதட்டியிருந்த தன் சூல்வயிற்றைத் தடவியவள், “ஒண்ணுமில்ல... ஒண்ணுமில்ல ராஜா... அம்மா
லேப்டாப்பிலே ஹார்ட்வேர் போச்சுதாம்... அதான் இப்படி கூப்பாடு போடுது... நீ
பயப்படாதே... சரியா? நீ ரொம்ப போல்ட் தானே?!” என சிசுவிடம் பேசினாள்.
“இப்போ என்னதான் செய்யுறது? அந்த கார்த்திக்ன்றவன் ஏற்கனவே பொண்ணுங்களை மதிக்க
மாட்டான்... இப்போ என்னோட பிரக்னன்சியை வீக்னெஸ்ஸா போட்ரே பண்ணுவானே!” என தனக்குள்
மருகியவள், குளியலறைக்குச் சென்று முகத்தைக் கழுவினாள்.
அங்கிருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்தவள், “ரவீனா... நீ ஸ்ட்ராங் இனாஃப் தானே?! உனக்கு உன்மேல நம்பிக்கை இருக்குதுதானே?! கமான்...
கமான்... இன்னும் ஏழுமணி நேரம்தான்... ஓடு... ஓடு...” எனப் பேசினாள்.
அதில் ஓரளவு நம்பிக்கை பிறக்கவே, விரைந்து வெளியே வந்தவள் தனது டெஸ்க்டாப்பை
ஆன் செய்தாள். “நல்லவேளையா அந்த டேட்டாவை ஒரு காப்பி மெயில்ல வச்சேன்...” என
பெருமூச்சு விட்டவள், தனது மின்னஞ்சல் முகவரியைத் திறந்து
குறிப்பிட்ட தரவை பதிவிறக்கம் செய்தாள்.
கருமமே கண்ணாக அமர்ந்திருந்தவளுக்கு சில மணிநேரங்கள்
கழித்தே தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்பதும் தனக்கு மட்டுமின்றி தன் சேய்க்கும்
சேர்த்து தானே உணவுண்ண வேண்டும் என்பதும் நினைவுக்கு வந்தது.
தாமதமின்றி குறிப்பிட்ட கோப்பை சேமித்தவள், கணினியை உறங்க வைத்துவிட்டு (Sleep Mode) எழுந்து கொண்டாள்.
குளிர்பதன பெட்டியை திறந்து, கண்களை மேலிருந்து கீழாக நகர்த்த, சில
பழக்குவியல்கள் கண்ணில் தென்பட்டன. “தேங்க் காட்...” என்றவள் சில ஆரஞ்சுப்
பழங்களையும் இரண்டு ஆப்பிளையும் வெளியே எடுத்தாள்.
ஆரஞ்சுப் பழங்களை இரண்டாக அரிந்து, ஜூசரில் இடுகையில்தான், “பழத்தை முழுசா தின்னுறதுல தான் ஒட்டுமொத்த சத்தும் இருக்குது.. அடிச்சு,
பிழிஞ்சு குடிக்கிறதுல என்ன சத்து கிடைச்சிடப் போகுது?” என தனது தாயார் அடிக்கடி அறிவுறுத்துவது சிந்தையில் உரைத்தது.
“இப்போதைக்கு இந்த ஜூஸை குடிக்கலைன்னா மயங்கித்தான்
விழணும்...” என தன்னைத்தான் சமாதானம் செய்து கொண்டவள், ஆப்பிளை துண்டுதுண்டாக வெட்டி ஒரு தட்டில்
எடுத்துக்கொண்டு கணினியின் முன்சென்று அமர்ந்தாள்.
ஒரு சிப் பழரசம், ஒரு துண்டு ஆப்பிள், ஒரு கையில் வேலை என
அமர்ந்தவளுக்கு வேலை நிறைவுறுவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. முதுகுவலி
ஒருபுறம் என்றால் கர்ப்பத்தின் நிமித்தம் வரும் வாந்தி ஒருபுறம் என வதைத்தது.
சோர்வைப் புறந்தள்ளி வைத்துவிட்டு வேலையை முடித்து, கார்த்திக்கிற்கு மின்னஞ்சல் அனுப்பியவள்,
“முடிச்சிட்டேன் கார்த்திக்... உங்களோட நம்பிக்கைக்கும்
கரிசனத்துக்கும் ரொம்ப நன்றி! இனியாவது வேலை செய்யுறவங்களை இன்டிபன்டன்டா செய்ய
விடுங்க... எப்ப பாரு கால் பண்ணி தொந்தரவு பண்ணிட்டு இருக்காதீங்க! அவரவருக்கு
தெரியும் குறிப்பிட்ட டைமுக்குள்ள வேலையை முடிக்கலைன்னா அவங்கமேல வச்சிருக்கிற
நம்பிக்கை பறிபோய்டும்ன்னு... அண்ட் ஒன் மோர் திங்... என்னைக்குமே பீரியட்ஸும்
பிரகனன்சியும் சாதிக்கிறதுக்கு தடையே கிடையாது... அதை புரிஞ்சிக்கோங்க முதல்ல...”
என கடுப்புடன் தெரிவித்துவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.
“ச்சே...” என சோர்வாக படுக்கையில் சாய்ந்தவள், “இந்த ஹார்டுவேர் பிரச்சனை என்னன்னு
பார்த்து சால்வ் பண்ணனும்.. நிறைய இம்பார்ட்டன்ட் ஃபைல்ஸ் இன்னும் பேக்அப்
எடுக்கவேயில்ல...” என தனக்குத்தான் பேசியவாறே, ஆன்லைனில்
மடிக்கணினி வாங்கிய ரசீதை எடுத்துப் பார்த்தாள்.
அதில் வாரன்ட்டி காலம் முடிவதற்கு இன்னும் இருபது நாட்கள்
இருக்கிறது எனக் காட்ட,
“அதுக்குள்ள எப்படி ஹார்ட்வேர் ப்ராப்ளம் வரும்? ஹார்ட்
டிஸ்க்ல பிரச்சனை வர்ற அளவுக்கு நான் என்ன பண்ணிட்டேன்?” என
சிந்திக்கலானாள்.
அவ்வவ்போது சோர்வில் மடிக்கணினியை அணைக்காமல் அப்படியே
உறங்கிவிடுவதும் வாந்தி வருகையில் ஓடிச்செல்பவள் குளியலறை முன்னரே
அமர்ந்துவிடுவதும் நினைவுக்கு வர,
“ஒரு மனுஷிக்கு வாழ்க்கையில சோதனை வரலாம்... சோதனையே வாழ்க்கையா இருந்தா?” என சலிப்பு மேலிட்டது.
“இப்போ கம்பெனிக்கு கால் பண்ணி வேற ஹார்ட் டிஸ்க் ஆர்டர்
பண்ணனும்...” என நினைத்தவள், “SELL” நிறுவனத்தின் டோல்ஃப்ரீ எண்ணுக்கு அழைக்க, “SELL நிறுவனத்தை அழைத்தமைக்கு நன்றி! எங்களது வேலை நேரத்தில் உங்களுக்கு
பதிலளிக்கிறோம்.. எங்களது வேலை நேரம் திங்கள் முதல் வெள்ளி, காலை
பத்து மணிமுதல் மாலை ஆறுமணி வரை... நன்றி!” என பதிவுசெய்து வைக்கப்பட்ட
தானியங்கிக் குரல் ஒலித்தது.
“இன்னைக்கு சனிக்கிழமை... அப்போ மன்டே வரைக்கும் வெயிட்
பண்ணனுமா?” என்றவள் சோர்வின் மிகுதியால் அப்படியே
உறங்கிப் போனாள். மறுநாள் காலையில் கண்விழித்துப் பார்க்கையில் கண்கள் இருட்டிக்
கொண்டு வந்தது; கீழே இறங்க எத்தனித்தால் கால்கள் தடுமாறி, தலைசுற்றியது.
“இதுக்குத்தான் எங்களோட வந்து தங்குன்னு சொல்றோம் ரவீனா...
தனியா அங்கேயிருந்து என்னத்தை சாதிக்கப் போற? துணைக்குன்னு யாரும் இல்லாத ஊர்ல ஒரு பிரச்சனைன்னா யாரு வருவா?” என்ற தன் தாயின் கடுமையான வார்த்தைகள் காதுக்குள் ஒலிக்க, கைகள் அனிச்சையாக அலைபேசியை துழாவியது.
கைரேகை மூலம் திரையைத் திறந்தவள், “ஹே கூகிள்... கால் சரஸ்வதி அக்கா...” என
கரகரத்தக் குரலில் பேச, “சரஸ்வதி அக்காவிற்கு”
அழைத்திருந்தார் கூகிள் உதவியாளர்.
“வீணாம்மா...”
“சரஸ்வதி அக்கா... வேலையா இருக்கிறீங்களா? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?”
“ச்சே... ச்சே... அதெல்லாம் எதுவுமில்லைம்மா... சொல்லுங்க..
ஏதாவது வேணுமா? வாங்கிட்டு வந்து
தரவா?”
“நேத்து ரொம்ப நேரம் உக்கார்ந்தே வேலை செய்யததுல
எழுந்துக்கவே முடியலைக்கா.. தலைசுத்திட்டு வாந்தி பண்ற மாதிரி இருக்குது...
கொஞ்சம் கஞ்சி வச்சி எடுத்துட்டு வந்து தர்றீங்களா ப்ளீஸ்... அப்படியே இங்கே வந்து
ஜூஸ் மட்டும் ரெடி பண்ணி ஃபிரிட்ஜ்ல வச்சிடுங்களேன்...”
“எதுக்கும்மா ப்ளீஸ்லாம்.. இதோ.. இப்பவே பதினைஞ்சு நிமிஷத்துல ரெடி பண்ணி எடுத்துட்டு வர்றேன்...” என அழைப்பைத் துண்டித்தவர் மளமளவென அவளுக்குத் தேவையான சத்து ஆகாரங்களைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார்.
தேவன் வருவான்...
1 Comments
Welcome sis missed u alot
ReplyDelete