பூமி காணா தேவன் நீ... – 2
“வீணாம்மா...” என வாசலில் நின்று தட்டிய சரஸ்வதியின்
அழைப்பிற்கிணங்கி எழுந்து சென்று கதவைத் திறக்கக்கூட இயலாத அளவிற்கு சோர்ந்து
படுத்திருந்தாள் ரவீனா.
நல்லவேளையாக முன்னெச்சரிக்கையுடன் வீட்டின் முன்வாசல்
மாற்றுச்சாவியொன்றை அவரிடம் தந்திருந்தாள் அவள். மறவாமல் அதைத் தன்னுடன் எடுத்து
வந்திருந்தவர், “பரவாயில்ல
வீணாம்மா... நான் பார்த்துக்கறேன்... இன்னொரு சாவி இருக்குது...” என்றவாறே கதவைத்
திறந்துகொண்டு உள்ளே வந்தார்.
சமையலறை மற்றும் கூடத்தின் கதவு திறந்தேயிருக்க, “இப்படி தனியா இருந்து கஷ்டப்பட வேணாம்ன்னு
சொல்லத்தான் முடியும்... நாமளா தூக்கிட்டுப்போய் ஊருல விடமுடியும்? எழுந்துக்கக்கூட முடியாத நிலைமையில இவ்ளோ பிடிவாதமும் பிரயத்தனமும்
தேவையா? நாம சொன்னா எங்கே கேக்கப் போறாங்க, பெத்தவங்க சொல்லியே கேக்கலை...” எனப் புலம்பியவாறே உள்ளே நுழைந்த சரஸ்வதி
அவளுக்காக தான் எடுத்து வந்திருந்த கஞ்சியை ஒரு பாத்திரத்தில் ஊற்றினார்.
எஞ்சியதை மற்றொரு பானையில் ஊற்றி, அடுப்பில் வைத்தவர்,
“வீணாம்மா... கொஞ்சம் முயற்சிபண்ணி எழுந்து கதவைத் திறங்களேன்... எதுவுமே
சாப்பிடாம படுத்திருக்கிறீங்க... உங்களுக்காக இல்லைன்னாலும் குழந்தைக்காகவாவது...”
என கெஞ்சும் தொனியில் அவள் படுத்திருந்த அறைக்கதவைத் தட்ட,
“வர்றேன்க்கா...” என தலையைப் பிடித்துக்கொண்டு எழுந்தவள் ஓரடிகூட நகர இயலாமல்
கட்டிலிலேயே அமர்ந்துவிட்டாள்.
“தனியா இருக்கிறப்போ ஏன்ம்மா கதவை பூட்டறீங்க? ஏதோ ஒண்ணுன்னா நாங்க எப்படி வந்து பார்க்க
முடியும்??” என சரஸ்வதி சற்றே உரிமையுடன் கடிந்துகொள்ள, பல்லைக் கடித்தவாறே வெகுசிரமப்பட்டு எழுந்தவள்,
கதவைத் திறப்பதற்குள் தள்ளாடினாள்.
அவள் விழாதவண்ணம் பிடித்துக்கொண்ட சரஸ்வதி கைத்தாங்கலாக
அழைத்துவந்து கட்டிலில் அமரவைத்து, தான் கொண்டுவந்திருந்த கஞ்சியை அவளிடம் நீட்டினார்.
“சாப்பிடுங்கம்மா... உளுந்தக்கஞ்சியும் மல்லித்துவையலும்
இருக்குது...” என்றவர்,
“கஞ்சியை பானையில ஊத்தி சூடு பண்ணி வைக்கறேன், துவையலை
ஃப்ரிட்ஜ்ல வச்சிடறேன்... தேவைப்படுறப்போ எடுத்து சாப்பிடுங்க... ஜூஸும் பிழிஞ்சு
வைக்கறேன்... நேரத்துக்கு குடிச்சிடுங்கம்மா...” என எழுந்து வெளியே சென்றார்.
“சரிக்கா...” என்றவள் ஒரு
தேக்கரண்டி உண்பதற்குள் குமட்டிக்கொண்டு வந்தது. கழிப்பறைக்கு எழுந்து
செல்வதற்குக்கூட உடலில் தெம்பில்லை. அதிலும் குறிப்பிடத்தக்க காரியம் என்னவென்றால்
அவள் வயிற்றிலும் பெரிதாக எதுவுமில்லை. ஆகவே, இது ஒருவகை இல்லூஷன்தான் எனத்
நினைத்தவள் தன் குழந்தையின் நலனை கருத்தில்கொண்டு உணவை உண்ணலானாள்.
அவளுக்கான அனைத்தையும் தயாரித்து
பதப்படுத்திவிட்டு மீண்டும் அறைக்குள் வந்த சரஸ்வதி, “வீட்டுக்கு பேசினீங்களாம்மா??” என விசாரித்தவாறே அமர்ந்தார்.
“இல்லக்கா... பிஸியா இருக்கிறேன், டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னு
சொன்னதால கால் பண்ணலை...” என பதிலளித்தவள், “அக்கா... இந்த பாத்திரத்தை
எடுத்துட்டுப் போய் சிங்க்ல போட்டுடறீங்களா?? அப்புறம் நார்மலானதும்
கழுவிக்கறேன்...” என சங்கடத்துடன் கண்களை குறுக்கிக்கொண்டு வேண்ட, “என்னம்மா நீங்க... என்கிட்டே
சொன்னா நான் கழுவிவச்சிட்டு போகமாட்டேனா? இந்த மாதிரி நேரத்துல ஏன் கஷ்டப்படுறீங்க??” என்றார் அவர்.
“இல்லக்கா... நான் சாப்பிட்டதை
நான்தானே கிளீன் பண்ணனும்!” என அவள் தயங்க, “அதெல்லாம் எதுவுமில்ல... நீங்க
ரெஸ்ட் எடுங்க...” என்றவர், “ஒண்ணு சொல்லுவேன், தப்பா எடுத்துக்க மாட்டீங்களா?” என பீடிகை போட்டார்.
“ஊருக்குப் போ, அப்பா அம்மாவை இங்கே வந்து
தங்கிக்க சொல்லுங்கிறதை தவிர வேற என்ன சொன்னாலும் கேக்கறேன்க்கா...” என அவள்
தீர்க்கமாகத் தெரிவிக்க, “அப்போ வேணாம்மா... நான் அதுபத்திதான் பேச நினைச்சேன்... ஊர்ல அவ்ளோ சொந்தம்
இருந்தும் இங்கே இப்படி தனியா கஷ்டப்படுறது என்னளவில் தன்னம்பிக்கையா
தெரியலம்மா... முட்டாள்தனமா தெரியுது...” என அவள் முகம் பார்த்தார்.
அவரது கூற்றில் விரக்தியாகப்
புன்னகைத்தவள்,
“அவரவருக்கு அவரவர் நியாயங்கள்க்கா... வெளியே இருந்து பார்க்கிற உங்களோட
கண்ணோட்டம் வேற,
அனுபவிக்கிற என்னோட கண்ணோட்டம் வேற... இதுக்குமேல என்னை கம்பெல் பண்ணாதீங்கக்கா...
இந்த வீடுதான் எனக்கு எல்லாமே! இங்கேதான் நான் சந்தோஷமா இருக்கிறேன்....” என
முடித்துவிட்டாள்.
“அதுக்குமேல உங்க இஷ்டம்மா...
உங்களுக்கு என்ன தேவைன்னாலும் என்னை கூப்பிடுங்க... உடனே வந்து செஞ்சு தர்றேன்...”
எனக் கூறிவிட்டு அவர் எழுந்து கொள்ள, “அக்கா.. அந்த கப்போர்டை திறந்து, ரெண்டாவது ஷெல்ஃப்ல ஒரு பிங்க் கலர் பர்ஸ் இருக்கும்.. அதை எடுங்க...” என
வேண்டினாள் ரவீனா.
“என்னம்மா?? காசு தரப்போறீங்களா?? காசுக்காக செய்யறதா இருந்தா
வீட்டுலேயே அரைகுறையா எல்லாத்தையும் தயார்பண்ணி எடுத்துட்டு வந்து இங்கே வீசிட்டு
பணத்தை மட்டும் வாங்கிட்டுப் போயிருப்பேன்... இப்போ உங்களுக்கு செய்யறதெல்லாம்
பணத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்... அன்பினாலே மட்டும்தான்ம்மா எல்லாத்தையும்
செஞ்சிட்டு, உங்களோட உக்கார்ந்து ஆதரவா பேசிட்டு
இருக்கிறேன்...” என சரஸ்வதி சற்று வருத்தம் கலந்த கண்டிப்புடன் தன்னிலையை உரைக்க, “ஹையோ அக்கா... பணத்தை கொடுத்து உங்க அன்பை கொச்சைப்படுத்த நினைக்கலை...
இந்த பணம் ஏதாவது ஒருவகையில உங்க குடும்பத்தோட அத்தியாவசிய செலவுகளுக்கு உபயோகமா
இருக்குமேன்னுதான் கொடுக்க நினைச்சேன்... வேலை எல்லாத்தையும் விட்டுட்டு எனக்காக
மெனக்கெட்டு வந்திருக்கிறீங்களே! உங்க வீட்டுக்காரருக்கும் இந்த லாக்டவுன்ல சரியான
வேலையில்ல... பையன், பொண்ணுன்னு எல்லாரும் வீட்டுக்கு
வந்துட்டாங்க... செலவை சமாளிக்கணும்ல...” எனப் பதறினாள் அவள்.
“அதெல்லாம் எக்கச்சக்கமா பணம் சேர்த்து வச்சிருக்கிறேன்னு
பொய் சொல்லமாட்டேன்ம்மா... முழுசா ஊரடங்கு முடிஞ்சு, ஓரளவு தளர்வு கொடுத்துட்டாங்கள்ல.. இப்போதைக்கு சின்ன சின்ன
வேலைகள் செஞ்சு வயித்துப்பாட்டை கழிக்கறோம்... என்னைக்காவது முடியாத சூழ்நிலை
வர்றப்போ உரிமையா உங்ககிட்டே கடன் கேட்டு வாங்கிக்கறேன்...” என உரைத்த சரஸ்வதி, “வீணாம்மா... படுத்து ரெஸ்ட் எடுங்க... எந்த வேலையா இருந்தாலும் நாளைக்கு
பார்த்துக்கலாம்.. மெயின் டோரை லாக் பண்ணிட்டுப் போறேன்,
மத்த எந்த டோரையும் லாக் பண்ணாதீங்க... முடிஞ்சா சாயந்தரம் வர்றேன், இல்லைன்னா நாளைக்கு வர்றேன்... வேற ஏதாவது வேணும்ன்னா சொல்லுங்க...
வாங்கிட்டு வர்றேன்...” என ரவீனாவிடம் வினவ, “தேவைன்னா கால்
பண்றேன்க்கா...” என்றாள்.
“சரிம்மா... அப்போ நான் வர்றேன்...” என அவர் விடைபெற, அப்படியே கட்டிலில் சாய்ந்து
படுத்துவிட்டாள் ரவீனா.
அசதியில் உறங்கிவிட்டவள், விழித்துப் பார்க்கையில் நேரம் இரவு ஒன்பதரையைக் காட்டியது.
“லைட்கூட போடாம தூங்கியிருக்கிறேன்... இந்த வாந்தி,
மயக்கமெல்லாம் பிரக்னன்சி சமயத்திலே நார்மல்தான்னாலும் இவ்ளோ டயர்டாக்குது...
கைனகாலஜிஸ்டை பார்க்கணும்...” என தனக்குள் பேசியவாறே எழுந்து சென்று விளக்குகளை
ஒளிரவிட்டவள், சரஸ்வதி எடுத்துவந்திருந்த கஞ்சியை அடுப்பில்
வைத்து மீண்டுமொருமுறை காய்ச்சி, துவையலுடன் சேர்த்து
உண்டாள்.
“எப்பவும் படுத்தே இருந்தா உடம்புக்கு என்னாகும்? நார்மல் டெலிவரியாகணும்ன்னா ஆக்டிவா
இருக்கணும்...” என செவிகளில் ஒருகுரல் ஒலிக்க, புன்னகையுடன்
எழுந்து கொண்டவள், வீட்டை சுத்தம்செய்ய தலைப்பட்டாள்.
“லைட்டு போட்டதுக்கு அப்புறம் வீட்டை பெருக்கக்கூடாதுன்னு
ஞாபகம் இல்லையா?” என தன் தாயின்
அறிவுறுத்தல் நினைவில்வர, “இது ஒண்ணும் சாயந்தரம் இல்லையே!
நள்ளிரவு ஆகப்போகுது... ஆல்மோஸ்ட் அடுத்த நாளின் தொடக்கம்...” என தனக்குத்தானே
நியாயம் கூறிக்கொண்டு தான் தங்கியிருந்த அறையை மட்டும் சுத்தம் செய்தாள்.
“ஒரே நாள்ல எல்லாத்தையும் செய்ய நினைச்சா அவ்ளோதான்.. டப்பா
டான்ஸ் ஆடிடும்... எல்லாத்தையும் அளவா செய்யணும்...” என்றவள், தொலைக்காட்சியை உயிர்ப்பித்து, பாடல்கள் மட்டுமே பிரத்தியேகமாக ஒளிபரப்பு செய்யப்படும் சேனலுக்கு
மாற்றினாள்.
“திருமண மலர்கள் தருவாயா? தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே!” பாடலில், “பாவாடை அவிழும் வயதில் கயிறுகட்டி விட்டவன் எவனோ தாலிகட்ட வந்தவன் அவனே
உறவானவன்....” என்னும் வரிகளை கேட்கையில் அவளையுமறியாமல் இதழ்கள் புன்னகையில்
விரிந்தது.
அடுத்த சேனலுக்கு மாற்றியவள், “தங்கத்தாமரை மகளே!” பாடலைக் கேட்டதும் உற்சாகமாகிவிட்டாள்.
ரிமோட்டை அங்கிருந்த மேஜையில் வைத்தவள் சற்று தொலைவில் வந்து நின்று, தன்னால் இயன்றமட்டும் கைகால்களை அசைத்து நடனத்தினூடாக உடற்பயிற்சிகளை
செய்து கலோரிகளை சமன்செய்ய முற்பட்டாள்.
ஓரளவு சமநிலையை அடைந்த பின்னர் பழரசத்தை அருந்தியவள், “பாப்பா... தூங்கப் போகலாமாடா??” என தன் வயிற்றில் வீற்றிருந்த குழந்தையிடம் பேசியவாறே கட்டிலில் சென்று
அமர்ந்தாள்.
“இப்போ அம்மா தூங்கப் போறேனாம்... நாளைக்கு காலையிலேயும்
இதே மாதிரி ஃப்ரெஷ்ஷா எழுந்து வேலைகளை பார்க்கிறதுக்கு பாப்பா ஒத்துழைப்பு
கொடுப்பீங்களாம்...” என வயிற்றை நீவியவாறே படுக்கையில் சாய்ந்தவள், மறுநாள் காலையில் புத்துணர்ச்சியுடனே
விழித்தாள்.
தன்னால் இயன்றமட்டும் இயல்பாக அனைத்து காரியங்களையும் செய்ய
முடியும் என நம்பவைத்துக் கொண்டவள், தானே காலை மற்றும் மதிய உணவைத் தயார்செய்து உண்டாள்; மொட்டை மாடியில் சில நிமிடங்கள் நடந்தவாறே பாடல் கேட்டாள்; சிற்சில எளிய உடற்பயிற்சிகளை செய்தாள்.
இவ்வாறாக அவள் நேரத்தை நெட்டித்தள்ளியதற்கான காரணமெல்லாம்
“எப்போதடா திங்கள்கிழமை வரும்? SELL கம்பெனிக்கு அழைத்து உதவி கோருவோம்?” என்பதற்காகத்
தான். ஏனென்றால் மடிக்கணினி என்பது அவளது மூன்றாவது கைபோன்றது. உறங்கும் வேளை,
உண்ணும் வேளை, குளிக்கும் வேளையைத் தவிர
எப்போதும் அவளிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் அது.
என்னதான் PC
எனப்படும் கணினியில் பணிசெய்தாலும் இருந்த இடத்திலிருந்தே இஷ்டப்படி உறவாட
மடிக்கணினியால் மட்டுமே சாத்தியமானது. ஆகவேதான், தனது
மடிக்கணினியை உயிருக்கு நிகராக போற்றிப் பாதுகாத்து வந்தாள் ரவீனா. “டோரா...” என
அதற்கு செல்லப்பெயர் வேறு.
“என்னடா இது லேப்டாப்புக்கு டோரான்னு பெயர் வச்சிருக்கிற?” என எவரேனும் கேட்க நேர்ந்தாலும், “ம்ம்க்கும்... என் லேப்ட்டாப்பும் மொபைலும் என்னோட பசங்களாக்கும்...
அதுங்க இல்லாம என்னால இருக்க முடியாது... அதனால்தான் லேப்டாப்பை ‘டோரா’, மொபைலை ‘புஜ்ஜி’ என்பாள். அவர்கள் இவளை விசித்திர ஜந்துவைப்போல
பார்த்துவிட்டு கடந்துவிடுவர்.
ஒருவாறாக திங்கள்கிழமை காலை இனிதாகப் புலர, தத்கல் முறையில் பயணச்சீட்டு பெறுவதற்காக
ஐஆர்சிடிசி சர்வருக்குள் நுழையும் நபர்களைப் போல மிகச்சரியாக பத்து மணிக்கெல்லாம்
குறிப்பிட்ட நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைத்துவிட்டாள் ரவீனா.
அங்கே பணிபுரிவர்கள் அப்போதுதான் நிறுவனத்தை திறந்து, தத்தமது இருக்கையில் அமர
எத்தனித்திருப்பர். இவளது அழைப்பைக் கேட்டதுமே, “எவன்டா அது?
காலங்காத்தாலேயே உசுரை வாங்குறது?” என
நிச்சயம் சலித்துக் கொண்டிருப்பர். ஆனால், இவளுக்கு
அதுகுறித்தெல்லாம் கவலையில்லை. “என் லேப்டாப் சரியாகணும்...” அதுதான் ரவீனாவின்
தலையாய விருப்பமாக இருந்தது.
“ஆங்கிலத்திற்கு எண் ஒன்றை அழுத்தவும்... லேப்டாப் குறித்த
சந்தேகங்களுக்கு ஐந்தை அழுத்தவும்... டெக்னிக்கல் இஷ்யூஸ் குறித்த தெளிவுகளுக்கு
எண் நான்கை அழுத்தவும்... எங்களது சேவைமைய அதிகாரியுடன் பேச ஒன்பதை அழுத்தவும்...”
என பல படிநிலைகள் ஆங்கிலத்திலேயே ஒலித்து, ஐந்து நிமிடத்திற்கு மேலாக அலைக்கழிக்கப்பட,
அயர்ச்சியடைந்தவள் ஒருவாறாக வாடிக்கையாளர் சேவைமைய அதிகாரியை அழைப்பில்
பிடித்துவிட்டாள்.
“வணக்கம்... இது SELL வாடிக்கையாளர் சேவைமையம்... அழைத்தமைக்கு நன்றி! சொல்லுங்க...” என அவர்
ஆங்கிலத்தில் கேட்க, “குட் மார்னிங் சார்... ஐ ஆம் ரவீனா...
ஐ பாட் அ லேப்டாப் அன் இயர் பிஃபோர்...” எனத் தொடங்கி, தன்
பிரச்சனைகளை விவரித்து, தீர்வு வேண்டி தெளிவாக ஆங்கிலத்தில்
உரைத்து முடித்திருந்தாள் ரவீனா.
“உங்களது மடிக்கணினியில் ஏதேனும்
குறைபாடுகள் உள்ளதா என பரிசோதித்தீர்களா?” என்னும் கேள்வி எழுப்பப்பட, “ஆமா சார்... ஹார்ட் டிஸ்க்
போச்சுது...” என தானாகவே ஒப்புக்கொண்டவள், “வாரன்டி இருக்குது சார்...
கொஞ்சம் மாத்திக் கொடுக்க முடியுமா??” என வேண்டிக்கொண்டாள்.
“சாரி மேடம்... வாரன்டியில இது
சேராது... நீங்க ஹார்ட் டிஸ்க் தனியா பர்ச்சேஸ் பண்ணித்தான் ஆகணும்... உங்களோட
வாரன்டி இன்னும் இருபது நாளிலே முடிவடையுது.. அதை எக்ஸ்டென்ட் பண்ணினா ஃபிஸிக்கல் டேமேஜஸ் எதுவந்தாலும் அதிலே கவராகிடும்...” என
அவர் தெரிவிக்க, “எவ்ளோ செலவாகும்??”
என விசாரித்தாள் அவள்.
“வாரன்டி எக்ஸ்டென்ட் பண்றதுக்கு நாலாயிரம் ரூபாய் +
ஜிஎஸ்டி... 2 TB ஹார்ட் டிஸ்க்
ஐயாயிரத்து ஐந்நூறு ரூபாய் + ஜிஎஸ்டி... பிஸிக்கல் பார்ட்ஸ் அண்ட் ஆக்சிடென்டல்
ப்ரொடக்ஷன், வாட்டர் ப்ரூஃப் இன்க்லூட் பண்ணின வாரன்டி
எக்ஸ்டென்ஷன் வேணும்ன்னா எட்டாயிரம் ரூபாய் ஆகும் மேம்...” என அவர்கள் வரிசையாக
அடுக்க, “அதுக்கு புது லேப்டாப்பே வாங்கிடலாமே!” என
சலித்துக் கொண்டவள், “நாலாயிரம் ரூபாய்க்கு வாரன்டி
எக்ஸ்டென்ட் பண்ணிக்கறேன், ஹார்ட் டிஸ்க் ஆல்ஸோ வேணும்...”
என தெரிவித்தாள்.
அதற்கான பணத்தை ஆன்லைனில் செலுத்தி, ரசீதை குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு
அனுப்பி வைத்த பின்னர் அந்த ஒரு வாரத்தில் ஒரு லட்சம் முறையாவது தனது மின்னஞ்சலைத்
திறந்து, “உங்களது ப்ராடெக்ட் ஷிப் செய்யப்பட்டுவிட்டது...
எங்களது பிரதிநிதி நாளை உங்களை சந்திப்பார்...” என்னும் செய்தி
அனுப்பப்பட்டிருக்கிறதா என பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒருவாறாக மறுவாரத்தின் திங்களன்று பிரதிநிதி அவளது
இல்லத்திற்கு வருகைபுரிந்து,
தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு ஹார்ட் டிஸ்க்கை மாற்றித் தருவார் என மின்னஞ்சல்
கிடைக்கப்பெற, ‘ஹப்பாடா...’ என பெருமூச்சுவிட்டாள் அவள்.
ஆனால் அந்த தினம் மருத்துவரிடம் பரிசோதனைக்கான நாளாக
குறிக்கப்பட்டிருக்க,
சரஸ்வதிக்கு அழைத்தவள், “அக்கா... ஹார்ட் டிஸ்க்
மாத்துறதுக்கு வருவாங்க... நீங்க அவங்களை ஹால்ல உக்கார வச்சிட்டு, கூடவே உக்காருங்க... கதவைத் திறந்து போட்டுட்டே வேலை பார்க்க
சொல்லுங்க... தண்ணீ எல்லாம் முன்னாடியே எடுத்துட்டு வந்து பக்கத்திலேயே
வச்சுக்கோங்க... தண்ணீ கேக்கற சாக்குல ஏதாவது செஞ்சிடப் போறாங்க... இப்போல்லாம்
யாரை நம்புறதுன்னே தெரியல...” என தெரிவித்துவிட்டுச் சென்றாள்.
காரில் அவர்களது இல்லத்திலிருந்து புறப்பட்டு, சற்று தொலைவு கடந்திருக்க, குறிப்பிட்ட பிரதிநிதி அழைத்துவிட்டான்.
“ஹலோ மேடம்... SELLல்ல ஹார்ட் டிஸ்க் ஆர்டர் போட்டிருந்தீங்க... உங்க வீடு எங்கே இருக்குது??”
என சற்றே உடைந்த ஆங்கிலத்தில் பேசினான் எதிர்முனையில்.
“ஹான்... நீங்க எக்ஸாக்டா இப்போ எங்கே இருக்கிறீங்க??” என இவளும் ஆங்கிலத்தில் வினவ, “நான் ஊருக்குப் புதுசு...” என மெல்லிய குரலில் தனக்குள் தமிழில்
பேசியவன், “மேடம்... நீங்க சொன்ன ஸ்ட்ரீட்க்கு
வந்துட்டேன்...” என்றான் ஆங்கிலத்தில்.
“நீங்க தமிழா??” எனக் கேட்டவள், “தமிழிலேயே பேசுங்க... லெஃப்ட்
ஹான்ட் சைடுல சான்டல் கலர் பில்டிங்... அங்கே ஆள் இருக்கிறாங்க... சரிபண்ணி
கொடுத்துடுங்க...” எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.
தேவன் வருவான்...
1 Comments
Superb sis 😍😍😍
ReplyDelete