பூமி காணா தேவன் நீ... – 3
ரவீனா தெரிவித்த முகவரிக்குச் சென்றவன், அழைப்பு மணியை அழுத்தினான். கதவைத் திறந்த
சரஸ்வதி, “நீங்க கம்ப்யூட்டர் ரிப்பேர் பார்க்க
வந்திருக்கிறீங்களா? நீங்கதான் அந்த கம்பெனி ஆளுன்னு நான்
எப்படி நம்புறது? ஐடி கார்டு ஏதாவது வச்சிருக்கிறீங்களா?
கம்பெனியில இருந்து கொடுத்துவிட்ட ஆர்டர் ஏதாவது இருக்குதா??”
என வாசலிலேயே நிற்கவைத்து கேள்விகளால் துளைத்தெடுத்துக்
கொண்டிருந்தார்.
“மேம்... மிஸ்டர்.ஜோதிலிங்கம் வீடுதானே!? அவரோட பெயர்லதான் ஹார்ட் டிஸ்க் ஆர்டர்
பண்ணியிருக்கிறாங்க... கொஞ்சம் லேப்டாப் எடுத்துட்டு வந்தீங்கன்னா நான் என்னோட
வேலையை முடிச்சு கொடுத்துட்டு கிளம்பிடுவேன்...” என அவன் சற்றே எரிச்சலுடன் பேச, “தம்பி... எந்த ப்ரூஃபும் இல்லாம எப்படி உள்ளே விடுறது? நீங்க பாட்டுக்கு என் கழுத்தை அறுத்து போட்டுட்டு எல்லாத்தையும்
அள்ளிக்கிட்டு போய்ட்டா என்ன பண்றது?” என மீண்டும்
கேள்விக்கணைகளைத் தொடுத்தார் சரஸ்வதி.
“ப்ச்...” என சலித்துக் கொண்டவன், ரவீனாவின் எண்ணிற்கு அழைத்தான். “மேம்..
உங்க வீட்டுக்கு வந்துட்டேன்... ஆனா இங்கே இருக்கிற லேடி என்னை உள்ளே அலோவ்
பண்ணமாட்டிக்கிறாங்க...” என அவன் புகாரளிக்க, “ஒரு டூ
மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க சார்... வீட்டுக்குத்தான் வந்துட்டு இருக்கிறேன், பக்கத்திலே வந்துட்டேன்...” என்றவள், இரண்டொரு
நிமிடத்தில் வந்து சேர்ந்துவிட்டாள்.
அவளைப் பார்த்தமாத்திரத்தில், “வீணாம்மா... ஆஸ்பத்திரிக்குப் போகலையா??” என சரஸ்வதி விசாரிக்க, “ஒரு மெயில் அனுப்ப
மறந்துட்டேன்க்கா..” என்றவாறே ரவீனா உள்ளே வர, பரிச்சயமான
குரலாக இருக்கவே, திரும்பிப் பார்த்தான் அவன்.
மறக்கத்தக்க குரலா அது? எத்தனை இரவுகளில் அந்தக் குரல் அவனுக்கு துக்கத்தை நிவர்த்தி செய்து
தூக்கத்தை வாரிவழங்கியிருக்கிறது! தனிமையிலும் சோர்விலும் வாடுகையில் அவனைத்
தேற்றி அரவணைத்த குரலல்லவா அது! விதவிதமான சிரிப்புகளை அவனை கேட்கச் செய்து, குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த குரலல்லவா அது!
“ரவீ....” என ஆச்சரியத்துடன் அவன் திரும்பிப் பார்க்க, “அத்தான்...” என்றவளின் விழிகள் மகிழ்வில்
விரிந்தன.
“ரவீ... எப்படி இருக்கிற?? நீதான் ஹார்ட் டிஸ்க் ஆர்டர் போட்டதா?” என அவன் விசாரிக்க, “ஹான்... ஆமா அத்தான்...”
என்றவள், “உள்ளே வாங்க...” என கதவைத் திறந்தாள்.
சரஸ்வதியிடம் திரும்பியவள், “அக்கா... இவர் சுரேஷ்... என் அன்னலட்சுமி அத்தையோட மகன்...”
என அறிமுகம் செய்துவைக்க, “சாரி வீணாம்மா... இவர் உங்க
சொந்தக்காரப் பையன்னு தெரியாது...” என்றார் வருத்தத்துடன்.
“அட! எதுக்கு சாரிலாம்? நீங்க செஞ்சதும் ஒருவகையில் முன்னெச்சரிக்கையில் சேர்த்திதான்...”
என்றவாறே உள்ளே நுழைந்தவள், “உக்காருங்க அத்தான்...” என
புன்னகையுடன் தெரிவித்தாள்.
புன்முறுவல் பூத்தவாறே அமர்ந்தவன், “ரவீ... லேப்டாப்??” என
தன் பைக்குள் துழாவி ஹார்ட் டிஸ்கை எடுக்க, “ஏன் அத்தான்??
அடுத்து வேற எங்கேயாவது அவசரமா போகவேண்டியது இருக்குதா??” என வினவினாள் ரவீனா.
“இல்லம்மா... வந்த வேலையை பார்க்கலாமேன்னு...” என அவன்
இழுக்க, “பொறுமையா பார்க்கலாம் அத்தான்...
முதல்தடவையா வீட்டுக்கு வந்திருக்கிறீங்க... ஏதாவது சாப்பிடுங்க...” என்றவள், “அக்கா... ஆரஞ்சு ஜூஸ் பிழிஞ்சிட்டீங்கதானே!?” என
உறுதிசெய்து கொள்வதற்காகக் கேட்டாள்.
“ஹான்.. அப்பவே ஃபிரிட்ஜ்ல வச்சிட்டேன்ம்மா... எடுத்துட்டு
வரவா??” என அவர் கேட்க,
“நீங்க உக்காருங்கக்கா... நான் பார்த்துக்கறேன்...” என தானே சமையலறைக்குச் சென்று
ஒரு குடுவையில் அவனுக்கு பழரசமும் சில துண்டு ஆப்பிளும் எடுத்து வந்தாள்.
“குடிங்க அத்தான்... வெயில்ல வந்திருப்பீங்க...” என அவன்
முன்னால் வைத்தவள்,
“எப்படி இருக்கிறீங்க?? மாலதி அக்கா எப்படி இருக்கிறாங்க??”
என விசாரித்தாள்.
“எல்லாரும் நல்லா இருக்கிறோம்மா...” என்றவன், “நீ எப்படி இருக்கிற? எங்கே ஒர்க் பண்ற?” என பதிலுக்கு கேட்டான்.
“இங்கேதான்... ஸ்பார்க்ல டேட்டா சயின்டிஸ்டா
இருக்கிறேன்...” என புன்னகைத்தவள், “நீங்க எப்போ SELLல்ல சேர்ந்தீங்க??” என வினவினாள்.
“இப்போதான்ம்மா ரெண்டு வாரம் ஆச்சுது...”
“எங்கே தங்கியிருக்கிறீங்க??”
“ஃப்ரெண்ட்ஸ்கூட ரூம்ல தங்கியிருக்கிறேன்ம்மா...”
“அக்காவை கூட்டிட்டு வந்து குடும்பத்தோட தங்கலாமே! ஒருவேளை
டேரிஃப் அதிகம்ன்னு யோசிக்கறீங்களோ? வேற ஏதாவது உங்க கோர் ரிலேட்டட் கம்பெனியில சேர்ந்திருக்கலாம்ல..”
ரவீனாவின் இந்தக் கேள்வியில் சுரேஷின் முகம் கருத்தது.
இருப்பினும் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாதவன் புன்னகையுடன் தொடர்ந்தான்.
“சில தவிர்க்க முடியாத காரணங்கள்... சோ கிடைச்ச வேலையில
சேர்ந்துட்டேன்...”
“ஓ... சரி சரி... உங்களுக்கு எத்தனை பசங்க??”
இவ்வாறு அவள் விசாரிக்க, “எத்தனை பசங்கன்னு விசாரிச்சு தெரிஞ்சிக்க வேண்டிய நிலைமைக்கு
ஆளாகிட்டோம்...” என விரக்தியில் அவனது இதழ்கள் வளைந்தது.
“ஒரு பொண்ணு இருக்கிறாம்மா...”
“பெயர் என்ன??”
“வந்து.... ரவீனா...”
“ஹஹா... என்னோட பெயர்தானா?? சூப்பர்...” கண்கள் பிரகாசிக்க சிரித்தாள் அவள்.
“உனக்கு எத்தனை மாசம் ரவீ??” என சுரேஷ் கனிவுடன் விசாரிக்க,
“அஞ்சாவது மாசம்...” என்றாள் கண்களை சிமிட்டியவாறே.
“உன் வீட்டுக்காரர் எங்கே?? ஆஃபீஸ் போயிருக்கிறாரா??”
“ஆஃபீஸா? அத்தான்...
அவர் டாக்டர்...” என சற்றே அழுத்தியவள், “போன தடவை ஊருக்கு
வந்திருந்தப்போ மாலதி அக்காவை பார்த்தேன்... பஸ்க்கு வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க, கையில ஒரு பையனை வச்சிருந்தாங்க... அநேகமா அது அவங்க தங்கச்சி பையன்னு
நினைக்கிறேன்... பேசலாம்ன்னு நினைச்சேன்... அப்புறமா அவங்க கோபத்துல எதுவும்
பேசிடக்கூடாதுன்னு அப்படியே வந்துட்டேன்...” என இயல்பாகப் பேசியவாறே எதிரிலிருந்த
சோஃபாவில் அமர்ந்தாள்.
இதைக் கேட்டவனது முகம் மாற, “அத்தான்.. நான் ஜஸ்ட் கேஷுவலாத்தான் சொன்னேன்... உங்க
பொண்டாட்டியை தப்பா சொன்னேன்னு கோச்சுக்காதீங்க....” என அவனை சமாதானம் செய்யும்
தொனியில் பேசியவள், தனது மடிக்கணினியை அவனிடம் நீட்டினாள்.
அதைப் பெற்றுக் கொண்டவன் தனது பணியைத் தொடங்க, “ஒரு வருஷம்தான் ஆகுது அத்தான்...
அதுக்குள்ளே ஹார்ட் டிஸ்க் போச்சுது... எல்லாம் அப்படியே வச்சிட்டு போய்டறதால்
ஏற்பட்ட துயரங்கள்...” என்றவள், “ஒரு வாரமா மெயிலையே
ரீஃப்ரெஷ் பண்ணிட்டு இருந்தேன்... லேப்டாப் இல்லைன்னா கையே ஒடிஞ்ச மாதிரி
இருக்குது... எப்படியும் எல்லா டாகுமென்டும் போயிருக்கும்தானே?!” எனக் கேட்டாள்.
“ரெகவர் பண்ணிக்கலாம்மா...” என்றவன், “உன் வீட்டுக்காரர் ஹாஸ்பிடலுக்கா
போயிருக்கிறார்?? கோவிட் ஓரளவுக்கு கன்ட்ரோல்ல வந்துட்டாலும்
இன்னமும் ஸ்ப்ரெட் ஆகிட்டுதானே இருக்குது... கொஞ்சம் கேர்ஃபுல்லா இருக்க
சொல்லலாமே!” என தன்போக்கில் பேச, “அத்தான்... நாம சேஃபா
இருக்கணும்ன்னு சுயநலமா யோசிக்கிறதா இருந்தா டாக்டர்ங்கற நோபிள் ப்ரொஃபஷனை
தேர்ந்தெடுத்திருக்கவே கூடாது...” என புன்னகை சிந்தியவள்,
“அவர் ஃபாரின்ல இருக்கிறார்...” என பதிலிறுத்தாள்.
சரஸ்வதி அவளை திகைத்து நோக்க, “அக்கா... உங்களுக்கு வீட்டுக்கு போறதுக்கு அவசரம் இல்லைன்னா
லஞ்ச் ரெடி பண்றீங்களா?? அத்தான் முதல் தடவையா வீட்டுக்கு
வந்திருக்கிறார்... சாப்பிட்டுட்டு போகட்டுமே!” என்றாள் அவரிடம்.
“எல்லா வேலையையும் முடிச்சிட்டுதான்ம்மா வந்தேன்... என்ன
சமைக்கணும்??”
“அத்தானுக்கு வெஜ் மீல்ஸ்தான் ரொம்ப பிடிக்கும்... சாதமும்
முள்ளங்கி சாம்பாரும் வச்சிடுங்க... முட்டைகோஸ், பீன்ஸ், கேரட் கட் பண்ணி வையுங்க..
பொரியலும் ரசமும் நானே பண்றேன்... அத்தானுக்கு நான் செய்யுற கதம்ப பொரியல் பயங்கர
இஷ்டம்...” என பேசியவளின் வதனத்தையே ஆழமாகப் பார்த்திருந்தான் சுரேஷ்.
திரும்பியவள் புரியாமல் அவனைப் பார்க்க, “பரவாயில்ல ரவீ... நான் ரூம்ல போய்
சாப்பிட்டுக்கறேன்...” என தவிர்த்தான் அவன்.
“எனக்கு எந்த சிரமமுமில்ல அத்தான்... நீங்க வேலையைப்
பாருங்க...” என எழுந்தவள்,
அறைக்குச் சென்று உடைமாற்றிக்கொண்டு வந்தாள்.
“ஏன் உங்க பொண்ணுக்கு என்னோட பெயரை வச்சீங்க?? அக்கா எதுவும் சொல்லலையா?” என இயல்பாக விசாரித்தவாறே அவள் அமர, அவனால் அதை
சாதாரணமாக எதிர்கொள்ள இயலவில்லை. சற்றே தடுமாறியவன், “வைக்க
தோணுச்சு... வச்சிட்டேன்...” என முடித்துக் கொண்டான்.
“ஸ்ஸ்ஸ்...” என நாக்கைக் கடித்தவள், “ரொம்ப பர்சனலா கேட்டுட்டேனோ?? சாரி.. சாரி...” என கண்களை குறுக்கிக்கொண்டு அவனைப் பார்க்க, “அதெல்லாம் எதுவுமில்லம்மா...” என்றான்.
“ரவீ... ஹார்ட் டிஸ்க் ஃபிட் பண்ணியாச்சும்மா... ஓஎஸ்
மாத்திடவா?? வேற என்னென்ன
ப்ரோக்ராம்லாம் இன்ஸ்டால் பண்ணனும்??” என சுரேஷ் விசாரிக்க, “மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் மட்டும் போதும் அத்தான்... எனக்கு தேவையான
சாஃப்ட்வேர்ஸ் நானே டவுன்லோட் பண்ணிக்கறேன்... எல்லாம் யூசர் ஃப்ரெண்ட்லிதான்...”
என்றுவிட்டாள் ரவீனா.
தன் பணியை நிறைவேற்றிவிட்டு எழுந்தவன், “அப்படியே கிளம்பறேன்ம்மா...” என தெரிவிக்க, “அத்தான்... சாப்பிட்டுட்டுதான் போகணும்... ஒரு டென் மினிட்ஸ்ல
எல்லாத்தையும் முடிச்சிடுவேன்..” என கண்டிப்புடன் உரைத்தவள் தானே சென்று
முட்டைகோஸ், பீன்ஸ், கேரட்
சேர்த்த பொரியலையும் இஞ்சி ரசத்தையும்
தயார் செய்தாள்.
“பேஸின் அங்கே இருக்குது தம்பி.. கைகழுவிட்டு வாங்க...” என
சரஸ்வதி அழைக்க, சற்றே
தயக்கத்துடன் எழுந்து வந்து அமர்ந்தான் சுரேஷ்.
“வீணாம்மா... நீங்களும் உக்காருங்க... நானே எடுத்து
வைக்கறேன்...” என அவர் முன்வர,
“சரிக்கா...” என அவனருகே இருந்த இருக்கையில் அமர்ந்தாள் ரவீனா.
“வீணாம்மா சரியாவே சாப்பிடறதில்ல தம்பி... இப்படி யாராவது
வந்தாத்தான் ஓரளவு சாப்பிடறாங்க...” என்ற சரஸ்வதியை முறைத்தவள், “நீங்க சாப்பிடுங்க அத்தான்... சாப்பாடு
எப்படி இருக்குது??” என வினவினாள்.
“யாராவது வந்தான்னா?? புரியலையே! சரியா சாப்பிடலைன்னா இவ வீட்டுக்காரர் எதுவும் சொல்லமாட்டாரா??”
என சுரேஷ் சரஸ்வதியின் வார்த்தைகளைப் பிடித்துக் கொள்ள, “எப்பவும் எல்லாரையும் பேம்பர் பண்ணிட்டே இருக்கமுடியாது அத்தான்...” என
அவள் தெரிவிக்க, “இருந்தாலும் கன்சீவா இருக்கிற பொண்டாட்டியை
கொஞ்சம் கேர் எடுத்து பார்த்திருக்கலாம்..” என தனக்குள் முணுமுணுத்தவன் உணவில்
கவனத்தைப் பதித்தான்.
“ரசம் ரொம்ப நல்லா இருக்குதும்மா...” என்றவன், “கதம்பப் பொரியல்ல உன்னை அடிச்சுக்க ஆளே
கிடையாது ரவீ... மாமாகூட அடிக்கடி உன்னையே மாதிரி செய்யறேன்னு ட்ரை பண்ணி சட்டியை
கருகவச்சிடுவார்... உன் தம்பிகூட ‘தீ பரவட்டும்’ன்னு கிண்டல் பண்ணுவானே! கரெக்டா
முட்டைகோஸ் கலர் மாறாம, அதே சமயத்துல சரியாக வேகவச்சிடற!” என
புகழாரம் சூட்டியவாறே அவளது தந்தையின் செயல்களை நினைவுபடுத்த, சிரித்துவிட்டாள் ரவீனா.
“அப்பா அப்படித்தானே அத்தான்! சில டிஷ் வரலைன்னாலும்
எப்படியாவது பசங்களுக்காக நல்லபடியா செஞ்சு கொடுத்துடணும்ன்னு முயற்சி
பண்ணுவார்...” என அவள் மென்னகையுடன் பேச, “சோகம் என்னன்னா ஆயிரமாவது முறையா முயற்சி பண்ணினாலும் மாமா ஸ்டில்
சொதப்பிங்...” என அவன் கேலிசெய்ய, “ஏய்...” என போலியாக
முறைத்தாள்.
“ச்சும்மாடா...” என தோளை குலுக்கியவன், “பாயாசம் நல்லா இருக்குதுக்கா...” என
சரஸ்வதியிடம் தெரிவித்துவிட்டு ரவீனாவை குறும்புடன் பார்க்க,
“இப்போ என்ன?? எங்கம்மா செஞ்ச பாயாசத்துல அன்னப்பறவையைவிட்டா
பட்டினியோடதான் போகும், அந்தளவுக்கு தண்ணீ
சேர்ந்திருப்பாங்கன்னு சொல்லி கிண்டல் பண்ணப் போறீங்க! அப்படித்தானே!” என
அங்கலாய்த்தாள்.
“ஹஹா... கற்பூரம்...” என அவனும் பதிலுக்கு சிரிக்க, “எங்க அம்மாவையும் அப்பாவையும் கிண்டல்
பண்ணலைன்னா உங்களுக்கு தூக்கம் வராதே!” என சலித்துக்கொண்டாள்.
“பின்ன... நான் கிண்டல் பண்ணலைன்னா யாரு பண்ணுவாங்க...” என
தன்போக்கில் பேசியவன், நிதர்சனத்தை
உணர்ந்தவனாக அவளை சங்கடத்துடன் நோக்க, அவளோ புன்னகையுடன்
தரித்திருந்தாள்.
“என்னைக்கா இருந்தாலும் அவங்க உங்களுக்கு அத்தை, மாமாதானே?! கிண்டல்
பண்ணலாம்... தப்பில்லை...” என்றவள், “அத்தான்... மறக்காம
ரூமுக்குப் போனதும் என் வீட்டுக்கு வந்தீங்க, எங்களோட லஞ்ச்
சாப்பிட்டீங்கன்னு மாலதி அக்காக்கிட்டே சொல்லிடுங்க... இல்லைன்னா இதையும் ஒரு
பஞ்சாயத்தாக்கிடுவாங்க...” எனப் பதற, அவனோ நிர்மலமான
பார்வையுடன் அவளை வெறித்தான்.
“உங்க காதல் மனைவியை குறை சொல்லணும்ன்னு எனக்கும்
எந்தவிதமான இன்டன்ஷனும் இல்லை அத்தான்... எல்லாம் ஒரு
முன்னெச்சரிக்கைக்குத்தான்... ஒருவேளை நீங்களா சொல்லாம அவங்களாவே தெரிஞ்சிக்கிட்டா
தேவையில்லாம ஏதாவது பேசுவாங்க... என்னால உங்க குடும்பத்துல பிரச்சனை எதுவும் வந்துடக்கூடாதுன்னுதான்
சொன்னேன்...” எனப் பேசியவள்,
“கவலைப்படாதீங்க... நான் என்னவர்கிட்டே இதெல்லாம் சொல்லிடுவேன்... சொல்லலைன்னாகூட
அவருக்கு என்மேல நம்பிக்கை ஜாஸ்தி... அண்ட் உங்களைப் பத்தி நெறைய
சொல்லியிருக்கிறேன்...” என புன்முறுவல் பூத்தாள்.
“நம்மமேல அசைக்கமுடியாத நம்பிக்கை வச்சிருக்கிற லைஃப்
பார்ட்னர் கிடைக்கிறது ஒரு வரம்தான்ல...” என சுரேஷ் விரக்தியாக இதழ்வளைக்க, “அதுக்காக குழந்தைக்கு சுரேஷ்ன்னு பெயர்
வைக்க அலோவ் பண்ணுற அளவுக்கு இல்ல...” என சற்றே குறும்புடன் பேசினாள் ரவீனா.
தேவன் வருவான்...
1 Comments
Superb sis ❤️❤️❤️
ReplyDelete