பூமி காணா தேவன் நீ... – 4
“இப்போ நீ மாலதியை உயர்வா சொல்றியா இல்ல உன் வீட்டுக்காரரை
உயர்வா சொல்றியா??” என
சுரேஷ் கேள்வியாகப் புருவமுயர்த்த, “அவரவருக்கு அவரவர்
வாழ்க்கைத்துணை பெருசுதான் அத்தான்... இவர் எல்லாத்தையும் பக்குவமா
புரிஞ்சிப்பார்... ஆனா உங்க பெயரை வைக்கிறதுக்கு நிச்சயமா சம்மதிக்க மாட்டார்...
ஏன்னா குழந்தைங்கறது நமக்கே நமக்கான அடையாளம்... அதிலே நம்மளோட கடந்தகால
எச்சங்களையும் மிச்சங்களையும் புகுத்தி, சுயவேதனையை தணிக்க
முயற்சிபண்ண ட்ரை பண்ணக்கூடாது...” என பக்குவமாகப் பேசினாள் ரவீனா.
எப்போதும் அவளை உயர்வாகவே மனதில் பாவித்திருந்தவனின்
பார்வையில் அவள் மேலும் உயர்ந்தாள்.
உணவை முடித்துவிட்டு எழுந்து கொண்டவன், தனது பையைத் தூக்கிக்கொள்ள முற்பட, “ஏன் இவ்ளோ பதறுறீங்க அத்தான்? ரெண்டு நிமிஷம்கூட
உக்கார்ந்துட்டு போகக்கூடாதா??” என அங்கலாய்ப்புடன் வந்த
ரவீனா அவனுக்கு வெற்றிலையும் பாக்கையும் எடுத்துவந்து கொடுத்தாள்.
“வெத்திலை எவ்ளோ சிவக்குதோ அந்த அளவுக்கு நாம பாசம்
வச்சிருக்கிறோம்ன்னு அர்த்தமாம்...” என அவள் விதர்ப்பமின்றி பேச, அவனுக்கு சுருக்கென தைத்தது.
அவள் முகத்தை நிமிர்ந்து பாராமலே வாங்கி, திணித்து, மென்றவன், “புறப்படவா? டைமாச்சுது...” என்றான்.
“கவலைப்படாதீங்க... எவ்ளோ சிவந்திருக்குதுன்னு வாயை திறந்து
காட்ட சொல்ல மாட்டேன்...” என நமட்டுச்சிரிப்புடன் குறிப்பிட்டவள், உள்ளே சென்று பணத்தை எடுத்துவந்தாள்.
“ஃப்ரீ சர்வீஸ்ன்னுதான் சொன்னாங்க அத்தான்... ஆனா
சாஃப்ட்வேர் இன்ஸ்டால் பண்ணியிருக்கிறீங்க தானே! எவ்ளோ கொடுக்கணும்??” என அவள் வினவ,
“அவ்ளோதானா ரவீ??” என அடிபட்ட பார்வை பார்த்தான் சுரேஷ்.
“பாசம் வேற, தொழில் வேற... ரெண்டையும் குழப்பிக்காதீங்க அத்தான்...” என்றவள், “எவ்ளோன்னு சொல்லுங்க...” என கறாராக வினவ, “நீ
எனக்கு செஞ்சிருக்கிற உதவிக்கு நான்தான் சன்மானம் கொடுக்கணும் ரவீ... அதை
சன்மானம்ன்னுகூட சொல்லக்கூடாது... காணிக்கை...” என மனதிற்குள் நினைத்தவன், “இதுவும் அந்த ஃப்ரீ சர்வீஸ்ல சேர்த்திதான்ம்மா... தேவைன்னா க்ராஸ் செக்
பண்ணிக்கோ...” என தெரிவித்துவிட்டு தன்வழியில் புறப்பட்டுவிட்டான்.
அவன் சென்ற பிற்பாடு ரவீனாவிடம் வந்த சரஸ்வதி, “நெருங்கின சொந்தம்ன்னு சொல்றீங்க, ஆனா ஒருத்தரை பத்தி ஒருத்தருக்கு தெரியலையே வீணாம்மா?” என கேள்வியாகப் பார்க்க, “எனக்கும் என்
பேரன்ட்ஸ்க்குமே கேப் விழுந்துடுச்சு.. அதிலே இவரெல்லாம் எம்மாத்திரம்??” என சிரித்தவள், “புறப்படுறதுன்னா புறப்படுங்கக்கா...
சாப்பாடை வீட்டுக்கு எடுத்துட்டுப் போய்டுங்க... நான் நைட்டுக்கு தோசை
ஊத்திக்கறேன்... நாளைக்கு செக்அப் போகணும்...” என அவரை வழியனுப்பினாள்.
“பாவாடை அவிழும் வயதில் கயிறுகட்டி விட்டவன் எவனோ தாலிகட்ட
வந்தவன் அவனே உறவானவன்...” என காதோரம் வரிகள் ஒலிக்க, அதைப் புறந்தள்ளிவிட்டு கட்டிலில்
சாய்ந்தாள் ரவீனா.
“அத்தான் கண்ணுல ஒரு சோகம் தெரிஞ்சதே! என்னவா இருக்கும்?? ஏதாவது பிரச்சனையா?? அவரோட மேரீட் லைஃப் ஸ்மூத்தா இல்லையா? மாலதி அக்கா
புரிஞ்சிக்காம பண்ணுறாங்களோ??” என சிந்தித்தவள், “எதுவா இருந்தாலும் நான் என்ன சால்வ் பண்ணவா போறேன்?? அவரவர் வாழ்க்கையை அவரவர்தான் பார்த்துக்கணும்...” என தனக்குள் பேசியவாறே
உறங்கிப் போனாள்.
மறுநாள் மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்றுவிட்டுத்
திரும்பும் வழியில் தனது அன்னைக்கு அழைத்து குசலம் விசாரித்தவளுக்கு எதேச்சையாக
சுரேஷின் நினைவு வந்துபோனது.
“ம்ம்மா... உங்ககிட்டே ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்... நேத்து
சுரேஷ் அத்தான் வீட்டுக்கு வந்திருந்தார்...”
“உன் வீட்டுக்கு வந்தானா? அட்ரெஸ் தெரியுமா அவனுக்கு? எப்படி?
நீயா இன்வைட் பண்ணுன??”
“பொறுமை, பொறுமை...
ஏன் இத்தனை கேள்வி? லேப்டாப்ல ஹார்ட் டிஸ்க் போச்சுதும்மா..
புதுசா ஆர்டர் பண்ணியிருந்தேன்... அத்தான்தான் டெக்னிக்கல் இஞ்சினியரா வந்தார்...”
“ஓ... அவன் அங்கே ஒர்க் பண்றான்னு நீ சொல்லித்தான்
தெரியும்...”
“ரொம்ப மெலிஞ்சு போயிட்டார்ம்மா... மாலதியக்காவோட ஏதாவது
பிரச்சனையா?? ஏன் இங்கே
பசங்களோட ரூம்ல தங்கியிருக்கிறார்?”
“பின்ன.. குடும்பம்ன்னு ஒண்ணு இருந்தாத்தானே அங்கே
அழைச்சிட்டு வரமுடியும்??”
“குடும்பம் இல்லையா?? என்கிட்டே அப்படி எதுவும் சொல்லலையே! ஒரு பொண்ணு இருக்கிறான்னு சொன்னாரே!”
“மாலதியும் அவனும் பிரிஞ்சு ரெண்டு வருஷம் ஆச்சுது.. அந்த
பொண்ணு அவனோட வளர்ப்பு மகன்னு நினைக்கிறேன்...”
“என்னம்மா சொல்றீங்க? மாலதியக்காவும் சுரேஷ் அத்தானும் லவ் பண்ணித்தானே கல்யாணம்
பண்ணிக்கிட்டாங்க... அப்புறம் எப்படி??”
“என்னவோ தெரியல... அவங்களா சண்டை போட்டுக்கிட்டாங்க, அவங்களா பிரிஞ்சிட்டாங்க...” என தெரிவித்த
அவளது தாயார், “அதை விடு... நீ சரியான நேரத்துக்கு
சாப்பிடுறியா? செக்அப் போனியா?? டாக்டர்
என்ன சொன்னாங்க?? ஏழாவது மாதத்திலே எல்லாரும் புறப்பட்டு
வர்றோம், வளைகாப்பு வச்சிக்கலாம்.. சும்மா ஏதாவது வெட்டி
நியாயம் பேசிட்டு இருக்காம எங்களோட புறப்பட்டு வர்ற வழியைப் பாரு...” என தானே
பதிலுமானார்.
“இதுக்குத்தான் உங்களோட பேசுறதேயில்லம்மா... நீங்களா ஒரு
முடிவுபண்ணிட்டு அதுக்கு ஏத்த மாதிரி என்னை ஆட்டுவிக்காதீங்க...” இம்முறை சற்றே
சீறினாள் ரவீனா.
“ஆத்திர அவசரத்துக்கு யாருமில்லாத அந்த ஊருல தனியா
உக்கார்ந்து என்ன பண்ணப் போறதா உத்தேசம் ரவீ? ஏதோ ஒண்ணுன்னா எங்களால உடனே புறப்பட்டு வரமுடியுமா??” என அவளது அன்னையும் பதிலுக்கு குரலையுயர்த்த, “ஐ
கேன் மேனேஜ் மைசெல்ஃப்ம்மா... உங்க அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி!” என அழைப்பைத்
துண்டித்துவிட்டாள்.
“ச்சே... ஆதரவா ஏதாவது பேசுவாங்கன்னு பார்த்தா வழக்கமான
புராணத்தை பேசி கடுப்படிக்கிறாங்க...” என சலிப்புடன் இல்லம் வந்து சேர்ந்தாள்.
தன் வளர்ப்பு மகளைக் குறித்து விசாரிப்பதற்காக இரவில்
தாய்க்கு அழைத்தான் சுரேஷ். அழைப்பை ஏற்ற அவனது அன்னை அன்னலட்சுமி, “என்னப்பா சுரேஷ்... சாப்பிட்டியா??
அங்கே சாப்பாடு, தங்குற இடமெல்லாம் சரியா
இருக்குதுதானே?!” என அக்கறையுடன் விசாரிக்க, “எல்லாம் பரவாயில்லம்மா... இந்த வேலையையே கொஞ்ச நாள் செஞ்சிட்டு கொஞ்சம்
பெட்டரா இன்னொரு ஜாப் கிடைச்சதும் ரவீனாவையும் கூட்டிட்டு வர்றேன்...” என்றான்
அவன்.
“சரிப்பா... உடம்பை பார்த்துக்கோ... வெளியே போறப்போ கவனமா
போ சரியா?? அடுத்த அலை வருதுன்னு சொல்லிக்கிட்டு
இருக்கிறாங்க...”
“அதெல்லாம் பார்த்துக்கறேன்ம்மா... ரவீ என்ன பண்றா??” என தன் மகளைக் குறித்து விசாரிக்கும்
போதுதான் மாமன் மகள் ரவீனாவின் நினைவு வந்தது.
“சொல்ல மறந்துட்டேனே! இன்னைக்கு ரவீயை பார்த்தேன்ம்மா... அவ
வீட்டுக்கு போயிருந்தேன்...” என அவன் தொடங்க, “ரவீயா??” என புரியாமல் கேட்டார் அன்னலட்சுமி.
“என்னம்மா எந்த ரவீன்னு கேக்கறீங்க?? நம்ம தெய்வேந்திரன் மாமா பொண்ணு...” என
அவன் சற்றே அழுத்தம்தர, “ஓ... ரவீயா?? இவளை
ரவீன்னு கூப்பிட்டு அவ பெயரும் அதுதான்னு மறந்தே போய்டுச்சு...” என்றார் அவர்.
“கம்ப்யூட்டர் சர்வீஸ் பண்றதுக்கு போயிருந்தேன்ம்மா... நல்ல
பெரிய வீடா வாங்கியிருக்கிறாங்க... பெங்களூரிலே அவ்ளோ பெரிய வீடுன்னா பெரிய
விஷயம்தான்... அவ வீட்டுக்காரர் டாக்டராமே! ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன்னு
சொன்னா... கேக்கறப்போ மனசுக்கு நிறைவா இருந்துச்சு...” என சுரேஷ் சிலாகித்துப் பேச, “ம்ம்க்கும்...” என சலித்துக்கொண்டார்
அன்னலட்சுமி.
“என்னாச்சும்மா?? ஏன் இந்த ம்ம்க்கும்?? நம்ம புள்ள சங்கடப்படுறப்போ
இவளுக்கு இவ்ளோ நல்ல வாழ்க்கையான்னு ஆதங்கப்படுறீங்களா?? அதிலே
எந்த அர்த்தமுமில்ல... அவ மனசுபோல அவ இருக்கிறா...” என சுரேஷ் தன் மாமன்
மகளுக்காகப் பரிந்துபேச முன்வர, “என்ன பேசுறப்பா?? என் தம்பிமக நல்லா இருந்தா எனக்கும் சந்தோஷம்தானே?! இப்போ
நான் சலிச்சுக்கிட்டதே அவ மனசுபோல அவ இல்லைங்கறதால தான்..” என்றார்.
“மனசுபோல இல்லையா??? என்ன சொல்றீங்கம்மா??”
“அவ நல்லா இல்லைன்னு சொல்றேன் சுரேஷ்... அவ வீட்டுக்காரர்
தவறிட்டார்....”
“என்னம்மா சொல்றீங்க??” அதிர்ச்சியில் உறைந்த சுரேஷ் அப்படியே சுவற்றில் சாய்ந்துவிட்டான்.
“ஆமாப்பா... அஞ்சுமாதம் ஆச்சுது.. அவ இதை உன்கிட்டே
சொல்லலையா??”
“சொல்லலைம்மா... ரொம்ப நிறைவான ஒரு வாழ்க்கை வாழுற
மாதிரிதான் காட்டிக்கிட்டா... எப்படி இறந்தார்?? கொரோனாவிலேயா??”
“முதல் அலை முடிஞ்சதுல்ல... அப்போ ஏதோ ஆஃபர்ன்னு டெல்லி
கிளம்பிப் போனாராம்... அந்த லேப்ல ஏதோ தீவிபத்து நடந்து, மூணாவது நாளே செத்துட்டார்... ஒரு
எலும்புகூட மிஞ்சல... எல்லாம் எரிஞ்சு சாம்பலாகிடுச்சு... அவர் இறந்ததுக்கு
அப்புறம்தான் இவளுக்கு கர்ப்பமே உறுதியாச்சுது.... ஊருக்கு வா, பெத்தவங்களோட இருன்னு சொன்னா கேக்காம அவனோட வாழ்ந்த வீட்டுலதான்
இருப்பேன்னு பிடிவாதமா அங்கேயே இருக்கிறா... கேட்டா அவன் சாகவேயில்ல, என்னோடதான் இருக்கிறான்னு சொல்லுறா... என்ன மனநிலையில இருக்கிறான்னு
ஒண்ணுமே புரியமாட்டிக்குது... அவங்க அப்பா அம்மாதான் ரொம்ப நொந்து போய்ட்டாங்க...”
“அஞ்சு மாதமாச்சுதுன்னு சொல்றீங்க, இதுவரைக்கும் ஏன் என்கிட்டே சொல்லலை??”
“நீயே நொந்து போயிருக்கிற, இந்த சமயத்திலே ஏன் சொல்லணும்ன்னுதான் சொல்லலைப்பா...”
“சரிம்மா... வையுங்க... அப்புறமா பேசுறேன்...” என அழைப்பைத்
துண்டித்தவனுக்கு இதயமே வெடித்துவிடும் போலிருந்தது.
“நான் நல்லா இருக்கிற மாதிரி அவகிட்டே உண்மையை மறைச்சிட்டு
வந்தா அவ நல்லா இருக்கிற மாதிரி என்கிட்டே காட்டியிருக்கிறா... ரவீ எவ்ளோ நல்ல
பொண்ணு! அவளுக்கு ஏன் இந்த சோதனை??” என கடவுளிடம் கேள்வியெழுப்பி மனதிற்குள் மருகினான் சுரேஷ்.
இதுக்குத்தான், “நீ முதல்ல கல்யாணம் பண்ணிக்கோ.. உனக்கு அப்புறம் நான் பண்ணிக்கறேன்’னு
அந்த முட்டாள்கிட்டே படிச்சு படிச்சு சொன்னேன்! கேட்டாளா? ‘மாலதியக்காவுக்கு
வயசு போயிட்டே இருக்குது... கட்டிக்கோங்க’ன்னு கம்பெல் பண்ணி கட்டிக்க வச்சிட்டு
என் வாழ்க்கையும் போச்சுது... அவளும் வாழ்க்கையை இழந்து நிக்கறா... இனி எப்படி
என்னால நிம்மதியா தூங்க முடியும்?? ஒவ்வொரு ராத்திரியும்
நரகமாத்தானே கழியும்? ஒரு காலத்திலே என் இனிமையான
தூக்கத்துக்கு காரணமா இருந்தவ இனி என் தூக்கமற்ற இரவுகளுக்கு காரணமா இருக்கப்
போறா...” என மானசீகமாக கதறினான் அவன்.
அன்று படுக்கையில் சாய்ந்தவனுக்கு தூக்கம் தூரமாகிப் போனது.
ஏறத்தாழ அங்கே ரவீனாவின் நிலையும் அதுவே.
“அத்தான் ஏன் என்கிட்டே பொய் சொன்னாரு? ஒருவேளை நான் ஃபீல் பண்ணுவேன்னு நினைச்சு
சொல்லியிருப்பாரோ?? அவ்ளோ லவ் பண்ணினவரை பிரிஞ்சு போற
அளவுக்கு மாலதியக்காவுக்கு என்ன கோபம்? காதலைவிடவா கோபம்
பெருசா போச்சுது?” என தனக்குத்தானே கேட்டுக் கொண்டவள், “வெளியே இருந்து பார்க்கிறப்போ ஈஸியா தெரியலாம்... மே பீ பிரச்சனைகள்
முத்தின நிலையில் பிரிவு ஒண்ணுதான் தீர்வுன்னு நினைச்சு இந்த முடிவை
எடுத்திருக்கலாம்... சொந்த வாழ்க்கையில் எடுத்த முடிவுகளை விமர்சிக்கிறதுக்கு
யாருக்கும் உரிமை கிடையாது... சரியோ தப்போ அதை அவங்கதான் ஃபேஸ் பண்ணியாகணும்...”
என சமாதான உடன்படிக்கைக்கு வந்தாள்.
“பேசாம என்ன பிரச்சனைன்னு அத்தான்கிட்டேயே கேட்டுடலாமா?? ஒருவேளை மாலதியக்காவை கன்வின்ஸ் பண்ற
மாதிரி இருந்தா நானே இறங்கிப்போய் பேசினா என்ன? எடுத்து
சொன்னா நிச்சயமா புரிஞ்சிப்பாங்கதானே?!” என உள்ளுக்குள் ஒரு
யோசனை உதிக்க, “எடு செருப்பை நாயே! யாருவந்து யாருகிட்டே
பேசுறது?? விளக்குமாத்தை எடுத்து மூஞ்சியை தூர்த்துருவேன்
ஜாக்கிரதை...” என்னும் தரக்குறைவான வார்த்தைகள் மாலதியின் குரலில் ரவீனாவின்
செவிகளில் ஒலித்து, அந்த யோசனையிலிருந்து பின்வாங்கச்
செய்திருந்தன.
தேவன் வருவான்...
1 Comments
Superb sis 😍😍😍
ReplyDelete