Header Ads Widget

Welcome You all to Ruthitha's KKR family

Kanavu Kadhali's World

To share your valuable comments : kanavukadhali@gmail.com

ஒரு பானை சோறு

 ஒரு பானை சோறு



“ராசு... ஏலே.. ராசு..” என முற்றத்தில் நின்றபடியே அழைத்தான் மாரி.

“ஏலே எம்புட்டு நேரமா உறங்குவ... எந்திரில.. உன் கோஷ்டி மாரி காலங்காத்தாலே வந்து நின்னுட்டு கூவுதாம்ல...” என அவனை அடித்து எழுப்பினாள் அவன் தாய் வடிவு. 

நேற்று இரவு படுத்த பாயைவிட்டு உருண்டு இன்று காலையில் சுவற்றோடு ஒட்டி படுத்திருந்த ராஜூ மெல்ல கண்விழித்தான். வாயில் இருந்த விரலை எடுக்காமலேயே எழுந்து பார்த்தான். பன்னிரெண்டு வயதாகியும் கை சூப்பும் பழக்கம் அவனைவிட்டு அகலவில்லை. 

அப்போதும் விடாமல் கத்திக்கொண்டிருந்தான் மாரி. 

“இந்தா வரேம்ல...” என கூறியவன்  தன் அரைக்கால் சட்டையை மேலிழுத்து கொண்டு சரிசெய்தான். நேற்று போட்ட பனியன் வேறு மஞ்சள் நிறமாய் மாறியிருந்தது நேற்று மண்ணில் உருண்டு விளையாடியதற்கு சாட்சியாய். 
வெளியே சாம்பலை வைத்து பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த மல்லியின் அருகில் இருந்த டப்பில் வைத்திருந்த தண்ணீரில் வாய் வழியே வழிந்திருந்த கோழை போகாமல் முகம் கழுவினான். அதுவும் அவனின் அம்மாவின் கண்துடைப்புக்காக..

“அங்குட்டாப்பில போய் கழுவலாம்ல.. பாத்திரம் தேய்க்க டப்புல உன் ஊத்தவாய கழுவுற..” என பொறிந்தாள் மல்லி. 
“போப.. உன் வேலைய பாத்திட்டு..” என கூறிக்கொண்டே தன் தோஸ்த்தை பார்க்க சென்றான்.

மாரி அரசு வழங்கும் இலவச கால்சட்டை இடுப்பில் நிற்காமல் போக தன் அரைஞாண் கயிறை போட்டு ஒட்டுக்கு நிற்க வைத்திருந்தான். அதுவோ இப்பவோ அப்பவோ என அவிழ்ந்து விடும் நிலையில் பாவமாய் முழித்துக் கொண்டிருந்தது. உடம்பை செட்டை செய்யாமல் அக்னி நட்சத்திரத்திலும் சட்டை அணியாமல் நின்றிருந்தான். கழுத்தில் குலதெய்வ கோவில் முத்தாரம்மன் டாலர் சிவப்பு நிற நூலில் போட்டு கட்டியிருந்தான்.

“ஏம்லே இவ்வளோ நேரமாவா தூங்குவ??" என கூறிக்கொண்டே ராஜூவை ஒட்டிக்கொண்டான்.

“நேத்து எங்க டீவில என் தலைவன் கில்லி படம் போட்டானுவல.. அத பாத்துட்டு தான் தூங்குவேன்னு பாதிலே தூங்கிட்டேன்.. நான் தூங்கும் போது யாரு வீட்டுலயும் வெளிச்சமே இல்ல..” என ஏதோ புதிதாய் பார்த்தது போல கதைகூற அருகில் ஒட்டிக்கொண்டே வந்த மாரி “உண்மையாவால??” என வாயை பிளந்து கேட்க, அவனது ஆச்சர்யத்துக்கு தீனி போட்டவனாய் “ஆமாம்லே நம்ம சீனி பாட்டி வீட்டு பக்கம் வெள்ளையா புகையா போச்சுல.. உங்கம்மா சொல்லும்போது நீ நம்பலல்ல..” என்றான் ராஜு
“எங்கம்ம அன்னைக்கே சொல்லுச்சு.. அது பக்கம்லா போவாதல்லேன்னு.. இனி நான் போமாட்டேன்..” என்ற வாக்குறுதியை கொடுத்தான் மாரி. 

பின் இருவரும் கோழிக்கூட்டிற்கு பின்னால் ஒளித்து வைத்திருந்த கோலிக்காய்களை எடுத்தனர். எல்லா நாளுமே அவர்களது விளையாட்டு சாமான்களை அங்கே தான் ஒளித்து வைப்பனர். இல்லன்னா திருடு போய்டும்ல.  எடுத்துவிட்டு வெளியே வந்தனர். 
“இன்னைக்கு குழி விளாடுவோம்ல.. இன்னிக்கு உன்னை குழிக்கு தள்ளல.. எம்பேரு மாரி இல்லலே...” என சவாலாய் கூற,
“இன்னிக்கு குழி வேண்டாமுலே.. குழி பறிச்சா எங்கம்மா யேசும்.. பொறவு மல்லி குழிய மூடிபுடுவாலே.. வேணுமுன்னா உன் வீட்ல விளாடுவோமா??” என்றான் ராஜு.
“ம்...” என இழுத்தவன் "போலே.. எங்க அய்யா இப்ப வேலைக்கே போவல.. வீட்ல தான் இருக்கு.. விளையாடுறத பாத்துச்சு வேப்பங்குச்சு வச்சு விளாசிபுடும்..” என பயமுறுத்தினான். ராஜுக்கும் மாரியின் அப்பா என்றால் பயம் தான். தெருவில் எங்கு சண்டை என்றாலும் எங்கு அடிதடி என்றாலும் அவர் முதல் ஆளாய் நின்று களத்தில் கலக்கிவிடுவார்.

“பறி விளையாடலாம்.. ஆனா குட்டி கோலிக்கா இல்லியே..” என ராஜு சோகமாய் கூற “எங்கிட்ட இருக்கே.‌.. நான் எங்க வீட்டுல யாருக்கும் தெரியாம என் பாப்பா தொட்டிலுக்கு பக்கத்துல ஒளிச்சு போட்ருக்கேன்..இந்தா எடுத்துட்டு வர்றேன்..” என முருங்கைக்காய் அளவில் இருக்கும் பின்னங்கால் பிடறியில் பட ஓடினான். இதைதானே ராஜுவும் எதிர்பார்த்தான்.

“என் பெரிய கோலிக்காவ மட்டும் வாங்கி விளையாடுவானாம்.. இவன் சின்ன கோலிக்காவ தொடக்கூடவிடமாட்டான்.. இன்னிக்கு அவன் எடுத்துதான வரணும்.. பாரு என் பெரிய கோலிக்காவ வச்சு உன் கோலிக்காவ சொட்டி வுடுறேன்..” என தனக்கு மட்டுமே பேசிக்கொண்டிருந்தான் ராஜு.
“ஏலே.. ராசு.. இங்க வா..கடைக்கு போவனும்..” என வடிவு அழைத்தாள். 
“இந்தம்மைக்கு வேற வேலையே இல்ல.. என்ன கடைக்கு அனுப்புறதயே சோலியா வச்சிட்டு திரியுறா..” என திட்டியவன் “வாரேம்ம..”என கத்திக்கொண்டே வந்தான்.

“இந்தாலே இதுல பத்து ரூவா இருக்கு.. போய் கந்தாண்ணே கடையில மசாலா வாங்கிட்டு வா..” என பிளாஸ்டிக் ஒயரால் பின்னப்பட்ட கூடையை எடுத்து காசை அதற்குள் போட்டு கொடுத்தாள். அவன் அசையாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க “ஏம்ல எம்மூஞ்சையே பாத்திட்டு இருக்க??” என கடுமையாய் கேட்டாள்.
“மசாலா பத்து ரூவா.. எனக்கு யாரு உங்கப்பனா காசு தருவான்..” என்றான் ராஜு.
“வர வர உன் வாயே சரியில்ல...” என்றவள் தன் முந்தானையை எடுத்து பிரித்தவள் ஒரு ரூபாயை எடுத்து கொடுத்தாள். 
“எனக்கு ரெண்டு ரூவா தாம்மே..” என அடம்பிடித்தான். அப்போது பாத்திரத்தை கழுவிக்கொண்டு வந்த மல்லி “உனக்கு என்னம்மா வேணும்??”என சலிப்போடு கேட்க “கொழம்பு வைக்க மசாலா இல்ல.. கந்தாண்ணே கடையில வாங்கிட்டு வான்னா துரைக்கு ரெண்டு ரூவா வேணுமாம்..” என கன்னத்தில் இடித்தாள்.

“ரெண்டு ரூவா தாரதா இருந்தா போவேன்.. இல்லன்னாக்கி உம்மொவளையே போச்சொல்லு..” என கூடையை போட்டு விட்டு சென்றான் ராஜு.
“இவன வச்சிக்கிட்டு ஒரு காரியமும் நடக்காது..” என ஒரு ரூபாயையும் தன் முந்தியில் போட்டு முடிச்சிட்டு கொண்டாள் வடிவு.
“ஏம்மோவ்...எங்கிட்ட சொன்னா நான் போயிட்டு வர போறேன்.. அதவிட்டுபுட்டு அவன புடிச்சு கெஞ்சிட்டு இருக்க..” என  பாத்திரத்தை கொண்டு வைத்தவள். இடுப்பில் சொருகியிருந்த நைட்டியை கீழே இறக்கிவிட்டு ஒரு துண்டை எடுத்து மார்பில் போட்டுகொண்டு கூடையை எடுத்து சென்றாள்.

முற்றத்தில் ஒரு முக்கோணமிட்டு அதிலே பன்னிரெண்டு குட்டி கோலிகளை வைத்துவிட்டு இருபுறமும் பெரிய கோலிகளை வைத்து அடித்து விளையாடிக்கொண்டிருந்தனர் ராஜுவும் மாரியும். ஒரே அடியில் இரண்டு காய்களை மாரி எடுத்திருக்க ராஜுவுக்கோ ஒன்றும் தேறவில்லை.
கடைக்கு செல்ல வந்த மல்லி “ஏ.. ராசு.. ராசு.. நான் ஒரு தடவ அடிக்கட்டுமா??” என கேட்டாள். 
“நீ வேணும்னா போய் உன் கோலிக்காவ எடுத்துட்டு வா.. ஆட்டையில சேத்துக்கிறோம்..” என ராஜு விதிமுறைகள் பேசினான். 
“நான் கடைக்கு போவணும் ராசு.. ஒரே ஒரு தடவ மட்டும் அடிச்சிட்டு போறேனே..” என கெஞ்சினாள். ஒரு காலத்தில் கோலி பறியில் மல்லியை மிஞ்ச ஆள் கிடையாது. ஆட்டம் ஆரம்பித்த சில சுற்றுகளிலேயே முக்கால் பாகம் கோலிகளை பறித்துவிடுவாள். ஆண்பிள்ளைகளே இவளிடம் பறி விளையாட தயங்குவார்கள். அதன்பின் பூப்பெய்தி வயதிற்கு வந்ததால் வீட்டிற்குள்ளே பூட்டி வைத்தனர். அத்தோடு அவளது விளையாட்டுகள் முடிவுக்கு வந்தது. கல்லூரி சென்ற பல நாட்களுக்கு பின் இன்று தான் அவளுக்கும் விளையாட வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டிருந்தது.

“ராசு.. உன் அக்காவ அடிக்க விடுலே.. எத்தன அடிக்கான்னு பாப்போம்..” என நகையாடினான் மாரி. அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் மல்லியிடம் கோலியை கொடுத்தான். மல்லி மீண்டும் நைட்டியை இடுப்பில் எடுத்து சொருகி குத்த வைத்து அமர்ந்தாள். ராஜூவோ ஆர்வமிகுதியால் அவளது தோளில் உப்பு மூட்டை போல தொவ்விகொண்டு அமர்ந்திருந்தான். குறிபார்த்து பெரிய கோலியை அடித்துவிட அது நான்கு குட்டி கோலிகளை பதம் பார்த்து வெளியே அனுப்பியது. மாரி ஆவென்று வாய்பிளந்து ஆச்சரியமாய் பார்த்தான் மல்லியை. ராஜூவோ துள்ளி குதித்தான். 

அப்போது பின்னால் இருந்து விளக்குமாறு பறந்து வந்து மல்லியை பதம் பார்த்தது. “கடைக்கு போறேன்னு சொல்லிட்டு.. சின்னபயலுவ கூட சேந்திட்டு கோலிக்காயா ஆடுத... கால உடைச்சு வீட்டுக்குள்ள போட்டுபுடுவேன்.. ஒழுங்கா கடைக்கு போற வழிய பாரு..” என வடிவு கோபத்தில் திட்ட உடனே மல்லியும் பயந்து பயந்து எழுந்து ஓடினாள்.


“இந்த ஆட்டம் செல்லாது ராசு..” என மாரி சண்டை பிடிக்க “நானா அவள அடிக்க சொன்னேன்.. நீதானல சொன்ன..அது கிடையாது நாலு காயும் எனக்குத்தான்..” என வம்பு பேசினான் ராஜு.
“இங்க பாரு உன் அக்கா என் கோலிக்காய சொட்டிட்டா.” என கோலிக்காயின் மீதிருந்த சிறிய கீறலை காட்டினான் மாரி. 
“இல்ல சொட்டல..வேணும்னா தண்ணி வச்சு பாக்கலாம் சொட்டிருக்கான்னு” என தன்னை நியாயப்படுத்தினான். உடனே சிறிய கோலிக்காயை தன் வாயினுள் போட்டு சூப்பி வெளியே எடுத்தான். அப்போதும் அந்த கீறல் இருந்தது. “பாத்தியா.. சொட்டிருக்கு.. எனக்கு புதுசு வாங்கி தா..”என மாரி வம்படியாய் கேட்க “ஆன்... அன்னைக்கு என் பெரிய கோலிக்காய உடைச்சல்ல..அதுக்கு இது சரியா போச்சு..”என பழைய கணக்கை காட்டி சரிபடுத்தினான் ராஜு.

கடையில்...
“அண்ணே.. ஒரு மசாலா பொடி குடுங்கண்ணே..”என்றாள் மல்லி.
“என்ன மல்லி.. வீட்டுல ஆட்டுகறியா??”என நக்கலடித்தான் கல்லாவில் இருந்த கந்தா.
“ஆமாண்ணே.. கிடா வெட்டுனா சொல்லுங்க.. வாங்கிட்டு போவோம்..”என கூறி வாயடைத்தாள்.
கடையில் நின்றவன் ஒரு பாக்கெட்டை எடுத்து வைத்தான்.
“சிட்டகணக்கு தானே..”என நோட்டை பார்த்துக்கொண்டே கந்தா கேட்க “காசு கொண்டு வந்திருக்கேன்.." என வாயை சுழித்தாள் மல்லி.


“இந்த ஊருல எல்லா பயலுவ வீட்டு பேர்லயும் சிட்ட இருக்கு.. ஆனா நீங்க மட்டும் மாட்ட மாட்றியளே...” என குத்திக்காட்டி பேசினான் கந்தா.
“என்ன பண்றதுண்ணே... ஊர் சொத்த அடிச்சு உலையில போடுற உங்கள மாதிரி ஒரு ஆளு இருக்கப்போ எங்கள மாதிரி ஒரு ஆளு இருக்க வேணாம்??” என சிரித்துக்கொண்டே நெற்றியடியாய் பேசினாள். இதை கேட்டதும் கடையில் வேலைக்கு நின்றவன் நமட்டு சிரிப்பை சிரித்தான். அவனை பார்த்து முறைத்த கந்தா “என்ன புள்ள வார்த்தையெல்லாம் துடிக்குது??” என முறைத்துக் கொண்டே கேட்க “நீங்க கேட்டதுக்கு பதில் சொன்னே அண்ணாச்சி...” என சிரித்து விட்டு காசை 
கொடுத்தாள். மீதியை வேண்டாவெறுப்பாய் சாக்லேட்டாக எடுத்து வைத்தான் கந்தா.
“மசாலா பொடி பத்து ரூவா தானே..”என புரியாமல் கேட்க “இப்ப கம்பெனிகாரன் எட்டு ரூவாயா கொறச்சிருக்கான்...” என குனிந்து எழுதிக்கொண்டே கூறினான் கந்தன்.
“அவளோ பெரிய கம்பெனிகாரனுக்கு எங்க கஷ்டம் புரியுது.. சின்ன கடைக்காரங்க தான் இந்த நெலமையிலயும் ஒரு ரூவா சாக்லேட்ட ரெண்டு ரூவான்னு விக்கிறாங்க...” என கூறிக்கொண்டே சாக்லேட்டை எடுத்துக்கொண்டு நகர்ந்தாள்.

"எல்லாம் இந்த அப்பாவ சொல்லணும்.. இனிலாம் வியாவாரத்துக்கு போம்போதே அம்புட்டையும் மொத்தமா வாங்கிட்டு வர சொல்லனும்.. போயும் போயும் இந்த எழவெடுத்தவன்கிட்டலாம் பேசவேண்டியதா இருக்கு..” என புலம்பிக்கொண்டே நடந்தாள் மல்லி. 

பின் வீட்டிற்கு வந்தவள் கூடையை கையில் வைத்துக் கொண்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த ராஜூவிடம் சென்று சாக்லேட்டை கொடுத்தாள்.
“ஐ.. வில்ல..” என உற்சாகமானான்.
“எனக்கும்..” என மாரியும் ஒட்டிக்கொண்டான்.
“அன்னைக்கு ரோஜா வில்ல நான் கேக்கும் போது தந்தியா?? போலே..” என கைமுட்டியை வைத்து மாரியின் நெஞ்சில் இடித்தான். மாரியும் விடாமல்
“இன்னொரு நாள் தாரேம்ல...” என வாக்குறுதி அளிக்க அதில் சமாதானம் ஆன ராஜூ, கவரோட அந்த சாக்லேட்டை தன் கடைவாய்பல்லை வைத்து கடித்தான். அதில் பல துண்டுகளாக நொறுங்கி போனது. பின் கவரை பிரித்து துண்டு துண்டாக உடைந்த சாக்லேட்டை தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்டனர்.

உள்ளே சென்ற மல்லி கூடையை தன் தாயிடம் கொடுத்தாள்.
“ம்மோ.. இனி நான் அந்த கடைக்கு போமாட்டேன்..” என்றாள் மல்லி.
“எதுக்காம்??” என கேட்டுக்கொண்டே சோற்றை வடித்தாள் வடிவு. நடந்ததை கூற “அடியாத்தி.. உன் படிச்ச திமிர்ல இப்பிடியா பேசிட்டு வருவ.. ஒரு ஆத்திர அவசரத்துக்கு அங்க தான் போயாவணும்.. எல்லா நேரமும் உன் தவப்பன் டவுண்ல இருந்து வாங்கிட்டு வரமுடியுமா?? இல்ல எங்கையில தான் காசும் இருக்குமா?? ஏதோ டெய்லி எறநூறு தூள் சுத்துனதுனால என் கையில இருந்திச்சு.. நாள பின்ன போய் கேட்டா எதாச்சும் தருவானா??" என பொரிந்து தள்ளினாள் வடிவு.
“ம்மோ அதெல்லாம் பாத்துக்கலாம்.. சோறு வடிச்சிட்டியா??”என பேச்சை மாத்தினாள். 
“ஈருளி எல்லாம் வெட்டி வச்சிருக்கேன்.. கத்தரிக்கா கறிய புளி ஊத்தி வச்சிரு.. நீ வச்சா தான் உங்கப்பாரு நல்லா சாப்பிடுவாரு.. நான் போய் கந்தாண்ணன்ட்ட போய் பேசிட்டு வர்றேன்..”என அடுப்பறையை விட்டு வெளியே வந்தாள் வடிவு
“ம்மோ.. மன்னிப்பெல்லாம் கேட்றாத.. மழுங்கி மழுங்கி போய் பேசப்போய் தான் நம்மள ஈனாவானான்னு நெனைக்காரு..”என கூறினாள் மல்லி. இவளது பேச்சை கேட்காமல் சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தார் வடிவு.

மாரியின் வீட்டில்...
“ஏலே முத்து.. புள்ள அழுவுது.. அத கவனிக்காம உன் பொண்டாட்டி ஊஞ்சல் ஆடிக்கிட்டு இருக்காளோ.??”என சரமாரியான திட்டுகளை உள்ளிருக்கும் அறையில் இருந்து அவளது மாமியார் கொடுத்துக்கொண்டிருக்க, அழுகை சத்தம் வெளிவராமல் அடக்கி கொண்டு கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாள் செல்வி. அவளது கண்ணீரை பார்த்து தான் பத்து மாத குழந்தை அழுது கொண்டிருந்தது. அவளது கணவன் முத்து தலையில் கைவைத்தவாறே ஒரு மூலையில் அமர்ந்து கொண்டிருந்தான்.


“கையில் எவ்வளவு இருக்கு செல்வி??”என மெதுவாய் கேட்டான்.
“முப்பது ரூவா..”என அழுதுக்கொண்டே மெதுவாய் கூறினாள்.
“அது வச்சு ஒரு கிலோ அரிசி கூட வாங்க முடியாதுன்னு சொல்லு.. அக்கம்பக்கத்துல இருக்காவால்லாம் முண்ணூறு தூள் பீடி சுத்துறா.. மகாராணி நூறு தூள் தான் சுத்துவாளாம்.. மாடி வீட்டு காரில்லா.. அவள எப்படி குறை சொல்ல முடியும்.. எல்லாம் என் வயித்துல பொறந்தத சொல்லணும் இந்த அழகுராணி தான் வேணும்னு மேலூருக்கு போய் கூட்டியாந்தான்.. இப்ப பாரு குழந்தைக்கு கஞ்சு ஊத்த கூட வழியில்ல..." என உள்ளிருந்தவாறே கூறினாள் அவனது தாய். 
“நான் என்ன மச்சான் பண்ணட்டும்.. பாப்பாக்கு தூள் வாட பிடிக்கல.. அவள வச்சிட்டு என்னால நூறு தூள் கூட போடமுடியல..” என மீண்டும் கண்ணீர் வடித்தாள். 
அதற்குள் உள்ளே இருந்து ஏதோ பேச வர, “யம்மா கையெடுத்து கும்பிடுறேன்.. என் குடும்பத்து வெவகாரத்துல தலையிடாத.. உனக்கு நாடகம் பாக்க முடியலன்னு அவள கரிச்சுக்கொட்டாத.. என்னால முடிஞ்சா வேலைக்கு போய் கஞ்சு ஊத்த மாட்டேனா?? நேர வேலைக்கு எவனையுமே வெளிய விட மாட்டைக்கான்.. போலீசு.. அடிச்சு விரட்டுறானுவலாம்.. நானும் என்ன தான் பண்ணட்டும்.. என் குழந்தை குட்டிவளுக்கு கஞ்சு ஊத்துதேன் இல்ல கருமாதி பண்றேன்.. நல்லாயிருப்ப வாய திறக்காத..” என கையெடுத்து கும்பிட்டவன் வீட்டை விட்டு வெளியே சென்றான்.

“அய்யய்யோ.. சனியன் புடிச்சவ.. என்னைக்கு என் வீட்டுல காலடி எடுத்து வச்சாளோ அன்னைக்கு பிடிச்சது சனி.. பச்ச பிள்ளைகளுக்கு கருமாதி பண்றேன்னு சொல்லிட்டு போறானே பாவிபய...” என பெரும்பாட்டு தொடர்ந்தது. செல்வியும் முட்டிக்கொண்டு வந்த அழுகையை தொண்டைக்குள் அடக்கி வைத்தாள்.

குடையை மடக்கி விட்டு வந்தார் பால்சாமி. அவரை வாசலில் கண்டதுமே வந்து ஒட்டிக்கொண்டது அவர் வீட்டு நாய். 
“பாப்பா.. வந்திட்டியா??" என பேசிக்கொண்டே உள்ளே வந்தான்.
“யப்பா.. இந்த வெயிலுக்குள்ள உங்கள யாரு வெளிய போவ சொன்னா.." என குழம்பு கரண்டியோடு வெளியே வந்தாள் மல்லி.
“மாத்திரை தீந்து போச்சுத்தா.. அதான் காலங்காத்தாலே போய் வாங்கிட்டு கத்தரிக்கு தண்ணிய பாச்சிட்டு வாரேன்.. தண்ணி கோதி தா ஆத்தா..” என கூறி அருகே இருந்த சேரில் அமர்ந்தான்.

ஓடிச்சென்று தண்ணீர் செம்பில் எடுத்து வந்து கொடுத்தாள். 
“போலீசு.. நிக்குதாப்போ..” என ஆர்வமாய் கேட்டாள். 
“அவிங்க அங்கங்க நிக்குறாக்கத்தா.. மருந்து கடையில தான் நெறைய பேரா நிக்குது..” என்றார். பாப்பா என்ற நாய்குட்டி அவரது காலை தேய்த்துக்கொண்டே படுத்துக்கொண்டது. அப்போது தான் கூடத்தில் இருந்த இரண்டு நெல் மூட்டை கண்ணில் பட்டது

“நல்ல வேள.. அன்னைக்கு உங்கம்மா சொன்னத கேட்டு இந்த ரெண்டு மூடையும் விக்காம ஏதோ ஒரு நெனப்புல போட்டுட்டேன்.. அவ சொன்னத கேட்டு வித்திருந்தா.. சோத்துக்கு ரோட்டுல தான் நிக்கனும்...” என்றான். அதற்கு நாயும் ஆமாம் என்பது போல பால்சாமியையே பார்த்து கொண்டிருந்தது.
“அவியளுக்கு என்ன தடஉத்தரவு போடுவான்னு தெரியவா செய்யும்..” என வடிவுக்கு வக்காலத்து வாங்கினாள் மல்லி. 
“உங்கம்மைய சொன்னா உனக்கு பொறுக்காதே...” என்று சிரித்துக்கொண்டார்.

“ப்போ.. இனி டவுண்ல இருந்து எல்லாத்தையும் மொத்தமாவே வாங்கிரலாம்.. இனி இந்த கந்தா கடைக்குலாம் போவேணாம்..” என்று நினைவு வந்தவளாய் கூறினாள்.
“ஏன்த்தா??”
“இந்த அம்ம மசாலா வாங்க போவ சொன்னாவ.. நானும் போனேன்.. அவன் கடன் வாங்கல வைக்கலன்னு ஏற்குமாறு பேசுதான்..” என கோபமாய் கூறினாள்.
“நீ சும்மாவா விட்ட??” என ஆர்வமாய் கேட்டார்.
“சும்மா எங்க விடுவேன்.. பால்சாமி மொவளா கொக்கா.. நான் பிடிச்சு பேசிட்டு வந்துட்டேன்..” என பெருமையாய் கூறினாள்.
“மேய்ச்சது எரும.. இதுல அப்பனுக்கும் மொவளுக்கும் பெரும வேண்டி கெடக்கு.. நான் போய் நல்லார்த்தை சொல்லி தாங்கிட்டு மன்னிப்பு கேட்டுட்டு வந்திருக்கேன்..” என திட்டிக்கொண்டே வடிவு உள்ளே நுழைந்தாள்.
“ம்மோவ்.. உன்ன தான் மன்னிப்பு கேக்காதன்னு சொன்னேன்ல..” என எரிந்து விழுந்தாள் மல்லி.
“இந்த வீராப்ப வச்சு ஒரு புல்லும் புடுங்க முடியாது.. எல்லாம் அப்பன் குடுக்க செல்லம்..” என பொதுவான வழக்காய் மாற்றினார் வடிவு.

“நீ கூறுகெட்ட தனமா போய் மன்னிப்பு கேட்டதுக்கு எம் மொவள எதுக்கு குறை சொல்லுற??” என பால்சாமி மகளுக்காய் பரிந்து பேசினார்.
“நான் வர்றதுக்குள்ள அப்பன் கிட்ட என்ன பத்தி கோளு மூட்டிட்டியோ??” என வடிவு மல்லியை அடிக்க சென்றாள். அதற்குள் நாய்க்குட்டி இருவரையும் பிரித்துக்கொண்டு நடுவில் வந்து நின்றது.

“ஏலே பாப்பா.. நான் உங்கப்பன அடிச்சாதான் நடுவுல வரணும்.. இங்கலாம் வரபிடாது..” என எச்சரிக்கவும் மீண்டும் பால்சாமியின் கால்களுக்குள் ஒளிந்துக்கொண்டது.
“அவள அடிக்காத..” என பால்சாமி தடுக்க போக, வடிவின் அடி இரண்டு பால்சாமியின் மீது பட்டது. உடனே நாய்க்குட்டி குரைத்தது. அதன் பாசத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க பால்சாமி லேசாய் தடுமாறினார். 

“ஏ மல்லி.. அப்பாவுக்கு சாப்பிட குடுத்தியா??” என வடிவு கேட்க "இல்லை" என தலையசைத்தாள் மல்லி.
“வெரசா போய் சோத்த எடுத்திட்டு வா..”என வடிவு மல்லிக்கு ஆணையிட்டாள். மல்லி சோற்றுபானையையும் குழம்பையும் எடுத்து வந்தாள். 

“நான் பொறவு சாப்புடுதேன்.. புள்ளைகளுக்கு சாப்பாட வை..” என தன் பெருந்தன்மையை காட்டினார் பால்சாமி.
“ப்பா.. நாங்க சாப்பிடுறதுக்கு இருக்கட்டும் உங்களுக்கு தான் சுகர் இருக்கு.. நீங்க தான் வேளாவேளைக்கு சாப்பிடனும்.. காலையில வேற சாப்பிடாம கிளம்பிட்டிய..” என மல்லி அக்கறையுடன் கூற “நான் இப்பதான தண்ணீய குடிச்சேன்.. வயிறு கம்முன்னு இருக்கு...மொதல்ல ராசுவுக்கு வை..” என கூறிவிட்டு டீவியை ஆன் செய்தார்.

“ஏலே ராசு.. திங்க வா..” என மல்லி அழைத்ததும் கோலிக்காய்களை அப்படியே போட்டுவிட்டு வந்தான்.
“அப்பா வந்துட்டாவளோ??” என கூறியபடி உள்ளே நுழைந்தான்.  மாரி மட்டும் தனியாய் நிற்க “மாரி நீயும் வா..”என மல்லி அழைக்க அவன் உற்சாகமாய் ஓடிவந்தான்.

உள்ளே வந்த இரு சிறுவர்களுக்கும் சாப்பாட்டை பரிமாறினார்கள். டீவியில் 

"கரோனாஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு
மத்திய அரசு உத்தரவு

ஊரடங்கு மே 3-ம் தேதி நிறைவு பெற இருந்த நிலையில் இதனை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடிநாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளதுஅத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதுவர்த்தக நிறுவனங்கள்தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள்வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள்சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுபோக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதுகரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனமே 3-ம் தேதி வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதுஎனினும் இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் ஊரடங்கு மே 3-ம் தேதி நிறைவு பெற இருந்த நிலையில் இதனை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளதுஇதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் ‘‘மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது."
என செய்தி ஒளிபரப்பானது.

“இன்னும் 2 வாரமா??” என மல்லி வாயை பிளந்தாள். 
அடுத்த இரண்டு வாரங்களுக்கு என்ன செய்வது என பால்சாமியும் வடிவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

மாரியும் ராஜூவும் “ஹே.. ஜாலி..” என உற்சாகமாய் கத்த மல்லி முறைத்து வைத்தாள். பின்  இருவரும் அமைதியாய் சாப்பிட்டு விட்டு எழுந்தனர். அதன் பின் பால்சாமிக்கு சாப்பாட்டை தட்டில் வைத்து கொடுக்க சேரில் அமர்ந்தவாறே சோற்றை பிசைந்தார். அப்போது நாய்குட்டி பாவமாய் அவரையே பார்த்தது.

“பாப்பாக்கு சாப்பாடு போட்டாச்சா??”என மல்லியிடம் கேட்க “இல்ல.. நேத்து ராசு பசியில நல்லா சாப்பிட்டான்.. அதான் பாப்பாக்கு எதுவும் போடல..” என்றாள். 
“அது பாவம்த்தா.. எங்கேயோ இருந்து வந்து தானா நம்ம வீட்ல நிக்குது.. ராத்திரி முழுக்க தூங்காம சுத்தி சுத்தி வருது.. ரோட்டுல புதுசா ஒரு ஆள நடமாட விடுறதில்ல.. நம்ம கஷ்டத்துல அந்த வாயில்லா ஜீவன பசியில போடக்கூடாது.. நமக்கு பசிச்சா எதாவது பண்ணி சாப்பிடுவோம்.. அதுக்கு பசிக்குன்னு கூட சொல்லமுடியாது.. அதுக்கு முதல்ல போடு.. அதுக்கு பொறவு நம்ம சாப்பிட்டுக்கலாம்..” என ஒரு கிண்ணத்தை எடுத்து தட்டில் இருந்த பாதி சாதத்தை வைத்தார். 
“நல்ல சோத்த நாய்க்கு போய்...” என வடிவு கூற அவரை ஒரே பார்வையில் அடக்கினார்.


மல்லி சாதத்தை எடுத்துக்கொண்டு போக நாய்குட்டியும் பின்னாலேயே போனது. நாய்குட்டிக்கென வைத்திருந்த தட்டில் சாதத்தை போட்டாள். போட்டுவிட்டு திரும்ப அவளுக்கு பின்னால் வந்த நாய்குட்டியோ அதே இடத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.  சாப்பாட்டை முழுவதுமாய்  போடுவதற்கு முன்னே வேகவேகமாய் சாப்பிட்டு மல்லியின் விரல்களை கடித்த நாட்களும் உண்டு. ஆனால் இன்று வேடிக்கை பார்த்தவாறு நிற்கிறதே என்று பார்க்க, அங்கே முத்து ஒரு சிரட்டையில் சிறிது சாதத்தை அள்ளிக்கொண்டிருந்தான். மல்லி திகைத்து பார்க்க, முத்துவோ கண்கலங்கி கையெடுத்து கும்பிட்டான். அதில் திகைத்து இரண்டடி பின்னால் வந்தவள் ஏதும் கூறாமல் வீட்டிற்குள்ளே வந்து விட்டாள்.

வீட்டினுள்ளே... 
பாதி சாதத்தை சாப்பிட்டு கொண்டிருந்த பால்சாமி சோத்துபானையை பார்த்துவிட்டார். கொஞ்சமே உள்ளே சாதம் கிடந்தது.
“சாப்பிடுறியாத்தா??” என உள்ளே வந்த மல்லியை பார்த்து கேட்க “ம்ம்.. நான் அப்பவே சாப்டேன்பா..” என்றவளை வடிவு ஒரு நிமிடம் பார்த்தவள் புரிந்து கொண்டு அடுத்து ஏதும் பேசவில்லை. 
“இங்க உக்காருத்தா..” என தன் அருகில் அமர்த்தியவர். “அப்பாக்கு உனக்கு அள்ளி தரணும்னு ரொம்ப நாள் ஆச.. ஆனா நீ சின்ன பிள்ளையா இருந்தப்போ உன் அம்மா எனக்கு அள்ளிதரதெரியாதுன்னு சொல்லி விடமாட்டா.. இப்ப அப்பா அள்ளி தரவா..” என கேட்டவர் அவளிடம் இருந்து பதில் வராது போகவே ஒவ்வொரு உருண்டையாய் மல்லிக்கு ஊட்டினார். பின் கொஞ்ச நேரத்தில் அவரை தடுத்து விட்டு மல்லி மீதமிருந்த சாதத்தை மொத்தமாய் பாலசாமிக்கு ஊட்டிவிட்டாள். வடிவுக்கு அப்பா மகளின் மனம் புரிந்ததால் வந்த கண்ணீரை கூட கட்டுப்படுத்திக்கொண்டு அவ்வவ்போது தன் முந்தானையால் துடைத்துக்கொண்டாள்.

பின் சாப்பிட்டு முடித்த தட்டுகளை எடுத்து கழுவும் இடத்தில் போட்டுவிட்டு வந்த மல்லி அடுப்பறையில் கிடந்த மிச்ச பருக்கைகளை அன்னபாலில் போட்டு கஞ்சியாய் பிசைந்து குடித்துக்கொண்டிருந்த தன் தாய் வடிவை பார்த்தாள். பின் பால்சாமி படுத்திருக்க அவரது கால்மாட்டில் அமர்ந்துக்கொண்டு கால்களை பிடித்து விட்டாள். மூவரும் மூவரின் கண்ணீரும் ஒருவருக்கொருவர் தெரியாதவாறு துடைத்துக்கொண்டனர்.

இங்கே முத்து சிரட்டையில் சாதத்தை எடுத்துக்கொண்டு செல்ல நாய்குட்டியும் மீதமிருந்த சோற்றை உண்ணாது அவனை தொடர்ந்து நடந்தது. அப்போது சாலையில் வாகனத்தில் அரிசி பருப்பு காய்கறிகளோடு அந்த ஊரின் தலைவர் வலம் வந்தார். அவனது வீட்டின் எதிர் வீட்டில் உள்ள நடுத்தரவர்க்க கதவுகளை தட்டி நிவாரண பொருட்களை அளித்துவிட்டு சேனல்களுக்கு போட்டோ எடுக்க சொல்லி போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். அதை கவனியாதது போல் செல்ல அந்த வண்டியில் இருந்த இருவரின் பேச்சு சத்தம் கேட்டது.
“இந்த வீட்டுக்கு குடுத்த மாதிரி.. அந்த எதுத்த வீட்டுக்கும் குடுக்கலையா??” என ஒருவன் கேட்க “அவனுக்கு குடுத்து என்னாக போகுது..? அவனுக்கு என்ன இல்ல..  அரசாங்கம் குடுத்த வீடு வாசல் அவன் குழந்த குட்டின்னு சந்தோஷமா தானே இருக்கான்.. அப்படியே தேவயிருந்தா நம்ம அண்ணன் வீட்டு வாசல்ல வந்து நிப்பான்..” என ஏளனமாய் மற்றொருவன் கூறினான். இவையெல்லாம் காதில் விழுந்தும் விழாதது போல சென்றான்.

வீட்டிற்குள் செல்ல மாரி ஒருபுறமாய் தூங்கி கொண்டிருந்தான்.  அவனது தாயின் புலம்பல் புராணம் நின்றபாடில்லை. செல்வியின் கண்ணீர் அருவியும் கூட... செல்வியின் கைகளில் சிரட்டையை கொடுத்துவிட்டு டீவியை ஆன் செய்தான். 

சிரட்டையில் இருந்த காய்ந்த கறிவேப்பிலை அதன் வரலாற்றை காட்டியது. இருந்தாலும் குழந்தையின் வயிற்றை நிறைக்க வழியில்லாது போக சாதத்தை ஊட்டினாள். குழந்தை விடாது அழுகவே செல்வியை ஒட்டி வந்த நாய்க்குட்டி அங்கும் இங்கும் துள்ளி வாலை ஆட்டி காதை மடக்கி வித்தை காட்டிக் கொண்டிருக்க, குழந்தை நாய்க்குட்டியை பார்த்தவாறே அழாமல் சாப்பிட்டது. பின் நாய்க்குட்டி திரும்பி வர, சிறிதே இருந்த உணவை சாப்பிட்டு விட்டு ஒட்டியிருந்த மசாலாவை நக்கி கழுவியது போன்ற தோற்றத்தை தட்டிற்கு அளித்துவிட்டு ஒரு ஓரமாய் படுத்துக்கொண்டது. அன்று ஒருநாள் மல்லி வைத்த கத்தரிக்காய் குழம்பில் வாழ்ந்தது இரு குடும்பங்கள்.

குழந்தையை சாப்பிட வைத்து தொட்டிலில் கிடத்தி தூங்க வைத்துவிட்டு கைகளை கழுவி வந்தாள். வந்தவள் காதில் இந்த ஒலி தான் விழுந்தது.

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் திறப்பு
வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு:

அசத்தும் காவல்துறை!

அதன்படி, 50-வயதிற்கு மேல் உள்ளவர்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மதுவாங்க அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில்டாஸ்மாக் மதுக்கடைகள் நாளை திறக்கப்பட உள்ளதால்கூட்டத்தை கட்டுப்படுத்த தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதுஇது தொடர்பாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில்நாளை ஒவ்வொரு டாஸ்மாக் கடைகள் முன்பும் 2 போலீசார் மற்றும் 4 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்மேலும்மதுவாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

அதன்படி, 50-வயதிற்கு மேல் உள்ளவர்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மதுவாங்க அனுமதிக்கப்படுவார்கள். 40 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் பிற்பகல் 03.00 மணி முதல் 5 மணி வரை மதுபானங்கள்  வாங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை கேட்டதும் முத்துவின் வாயெல்லாம் பற்கள் தெரிய தொடங்கியது. செல்விக்கோ உலகம் இடிந்து கண்ணீர் நெஞ்சுகுழியில் அடைத்துக்கொண்டு நின்றது. குழந்தையின் கண்ணீரை துடைக்காத அந்த நிவாரண நிதி ஆயிரம் ரூபாய் அவனின் போதை நீரை கொடுக்கப்போகிறது...


(கொரோனா காலத்தில் எளிய மக்களின் வாழ்வியலை சொல்லும் வகையில் எழுதப்பட்ட சிறுகதை...)

Post a Comment

2 Comments