Header Ads Widget

Welcome You all to Ruthitha's KKR family

Kanavu Kadhali's World

To share your valuable comments : kanavukadhali@gmail.com

ரக்ஷாவின் ரகசியம்..

 ரக்ஷாவின் ரகசியம்.. 




(இந்த கதையில் வரும் கதைமாந்தர்கள், காட்சிகள் அனைத்தும் கற்பனையே. ஆயினும் தரப்பட்டிருக்கும் விவரங்கள் அனைத்தும் உண்மை. ஆராய்ச்சியின் முடிவில் உறுதி செய்யப்பட்டவையே.)


"பாப்பா ஏதாவது மெட்டல் திங்ஸ் வச்சிருக்கிறியா?? ஏதாவது இருந்தா உள்ளே உள்ள லாக்கர்ல கொடுத்திடணும்..." என தேவா கூற சரியென தலையாட்டிய ரக்ஷா தனது பேக்கை திறந்து, டப்பாவை எடுத்து பென்சில் திருவி மற்றும் இரும்பினாலான அளவுகோலை எடுத்து வெளியே வைத்தாள். அவளுடைய செயலைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் புன்னகைக்க, அவளது தந்தை தேவாவோ பாந்தமாக அவளது தலையை தடவிக் கொண்டார்.

தன் தந்தையை பார்த்து புன்னகைத்த ரக்ஷா ஜன்னல் கண்ணாடியின் வழியாக வெளியே பார்க்க நுழைவு வாயிலில் வரிசையாக பசுமையான புற்களை விரித்து வைத்திருந்த அந்த வாசலில் இருந்த கேட் இரண்டு ஆள் உயரத்தில் இருந்தது.. அதன் முனைகளில் கூர்மையான ஊசிக்கொண்டு தைக்கப்பட்டிருந்தது.

"ஜவஹர்லால் நேரு அணு ஆராய்ச்சி மையம்" என கற்கள் பதித்திருந்த சுவற்றில் பலகை ஒன்று மாட்டப்பட்டிருந்த அந்த மையத்தில் தான் அவளது தந்தை தேவா பணிபுரிகிறார். இன்று விடுமுறை என்பதால் அவளையும் தன்னுடன் அழைத்துவந்தவர் அவளுக்கு காரீயத்தினால் ஆன உடை கவசம் ஒன்றினையும் வாங்கி வந்தார்.

அணு ஆராய்ச்சி மையத்திற்கு தன் மகளை அழைத்து வரும் அளவிற்கு தேவா அலட்சியமானவர் இல்லை தான். அவள் அடம்பிடித்ததாலும், தன் மகளது ஆர்வத்திற்கு தீனி போட நினைத்ததாலும் மாணவர்களுக்கான பிரிவில் ரக்ஷாவிற்கு அனுமதி பெற்று அழைத்து வந்திருந்தார்.

உள்ளே நுழைந்த ரக்ஷா பிரமிப்புடன் சுற்றி பார்க்க, புனலை போன்ற கட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருந்த கட்டிடத்தினுள் உள்ளே செல்ல விட்டமானது வெகு தூரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. வெகு சிலரே இருந்தாலும் அனைவரும் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவாறே வேலையில் மும்முரமாய் இருந்தனர்.

அவளை நாற்காலியில் அமருமாறு பணித்த தேவா "சரி பாப்பா.. நீ இங்கேயே இரு.. அப்பா வேலைய முடிச்சிட்டு வந்து கூட்டிட்டு போறேன்.. அதுவரை இந்த இடத்தை விட்டு எங்கேயும் போகக்கூடாது.." என மற்றொரு நாற்காலியையும் அவள் முன்னர் இழுத்துப்போட "சரிப்பா..." வேகமாக தலையாட்டினாள்.

தந்தையின் சொற்கேட்டு அமைதியாக அமர்ந்தாளே தவிர அவளது கண்கள் துருதுருவென அலைபாய்ந்து கொண்டிருந்தது.

தேவா சென்றதும் மெல்ல எழுந்து அந்த கண்ணாடி போன்ற துளை வழியே உள்ளே பார்வையை செலுத்த அந்த அறையின் நடுவே சில்வர் நிறத்தில் உருளை ஒன்று இருக்க, பல இணைப்புகள் பல்வேறு இடங்களிலிருந்து பல்வேறு விதமாக பொருத்தப்பட்டிருந்தது. அதனை சுற்றி பலரும் கணினியில் ஏதேதோ இயக்கி கொண்டிருந்தனர். இவை அனைத்தையும் அந்த துளை வழியே பார்த்து வியந்து கொண்டிருந்தாள் ரக்ஷா.


தனது சீருடையை எடுத்து மாட்டிக் கொண்டிருந்த தேவாவை மூத்த விஞ்ஞானி ஒருவர் அழைப்பதாய் கூற, அந்த தலைமை இடத்தினுள் நுழைந்தார்.

"வாங்க மிஸ்டர்‌.தெய்வேந்திரன்.." என ஒரு பைலை எடுத்து அவரிடம் நீட்ட "என்ன சார் இது??" என கேட்டுக்கொண்டே பைலை திறந்தார் தேவா.

"எனக்கு ஒரு நியூ ப்ரொஜெக்ட் வந்திருக்குது.." என அவர் கூறிக்கொண்டிருக்கும் போதே அந்த பைலை திறந்து பார்த்த தேவாவுக்கு ஆச்சரியம்.

"ரொம்ப நாள் நம்ம கேட்டுட்டு இருந்த எலெமெண்ட் வந்திருச்சா??" என அவர் ஆச்சரியத்தில் விழிகளை விரிக்க "நம்ம கேட்டது இல்ல.. நீங்க கேட்டது.. நானும் கவர்மெண்ட் கிட்ட பேசினேன்.. ரஷ்யாவுக்கு அப்புறம் இங்க தான் பர்ஸ்ட் டைம் பெர்மிஷன் குடுத்து இருக்காங்க..." எனக் கூறிய மூத்த விஞ்ஞானி சீனிவாசன் "அதுக்கு தேவையான எலெமெண்ட் கூட வந்து இறங்கியுள்ளது..." என்றார்..

"ரிஸ்க் கொஞ்சம் ஜாஸ்தி தான் போல.." என கேட்டவரிடம்,
"ஆமா சார்.. நிறைய இருக்குது... நான் யோசிச்சேன் அதோட அரைவாழ்வு (half life period) ரொம்பவே கம்மி.. அந்த டைம்க்குள்ள நாம நமக்கான ரிசர்ச் முடிச்சிருக்கணும்.. இந்த பிராஜக்டிலே எனக்கு இந்த பார்ட்தான் ரொம்ப பிடிச்சது.." என்றார் தேவா...

"எஸ்..கேரி ஆன்.. எல்லாம் ரெடியா இருக்கு.. நீங்க வேலையை ஸ்டார்ட் பண்ணலாம்.." என  கூறிவிட்டு "கங்கிராஜுலேசன்ஸ்..." என கையை குலுக்கிய சீனிவாசன் "அண்ட் பீ கேர்புள்.." என எச்சரித்தார்...

ஆவலாக வெளியே வந்த தேவா, "கணேஷ் அந்த கிரிப்டான் வந்திருச்சா??" என கேட்க, "அல்ரெடி லேண்ட் ஆய்டுச்சு சார்.. எலெமண்ட்ட ராடா மாத்துற ப்ராஸஸ் கூட டன் சார்.."என்றான் கணேஷ்.

உடனே தேவா படுவேகமாக செயலில் இறங்க, அவரது குழுவினை அழைத்து மேஜையின் முன் ஒரு குழும உத்தரவிட்டார்..

(அணுக்கரு பற்றி பரிச்சயம் இல்லாதவர்கள் கீழே வரும் மூன்று பத்திகளை தவிர்த்துவிடலாம்...) 

"கைஸ்... இது நம்மளோட புது ப்ராஜெக்ட் தான்... இதுவரை யுரேனியம், பலேடியம் வச்சு அணுக்கரு சிதைவு மூலமா மின்சாரம் தயாரிச்சிட்டு இருந்தோம்... இப்போ அதுல சின்னதா மாற்றம்... நம்மளோட ஹிஸ்டரில பர்ஸ்ட் டைம் இந்தியாவே இந்த தனிமத்தை பரிசோதனை பண்ண அனுமதி வழங்கியிருக்குது... தனிம வரிசை அட்டவணையில் 118 தனிமங்கள் இருக்குது.. அதுல நெறைய பிரிவுகள் வகைகளா பிரிச்சிருக்காங்க... 108 தனிமங்கள் மட்டுமே நிலையானவை.. மற்ற தனிமங்கள் எல்லாமே மனிதனால உருவாக்கப்பட்ட நிலையற்றவை தான்.."என கூற, "அதாவது லைஃப் டைம் கம்மியான தனிமங்கள் இல்லையா சார்.." என கேட்டான் ஒருவன்...

"எஸ்.. யூ ஆர் ரைட்.. சில தனிமங்கள் பூமியில நேரடியாக கிடைக்காவிட்டாலும் நிலையானதா இருக்கும்.. இந்த வகையான தனிமங்களுக்கு இந்த இரண்டு வகையான பண்புகளும் கிடையாது.. அதனால இதை பற்றிய பல ஆராய்ச்சிகள் இன்னமும் நடந்திட்டு தான் இருக்குது... அதில் ஒன்று தான் இந்த ஒகனிசோன்... 118வது தனிமம்.. ரொம்ப அரியவகை... கதிர்வீச்சு தன்மையுடையது.. இது மந்த வாயுக்களை ஒத்த எலக்ட்ரான் வரிசை கொண்டிருந்தாலும் இது ஒரு வாயுவாகவும் இருக்கும், ஆவியாகக்கூடிய திரவநிலையிலும் இருக்கும்...20°டிகிரி செல்சியஸ்ல திண்மமா மாறக்கூடியதும் கூட.. பூமியில் அரிய அளவில் மட்டுமே இருக்குது... விலை மதிப்பற்றது..." என கூறிக்கொண்டிருக்க,
"சார்.. இந்த தனிமத்தை பத்தி நானும் படிச்சிருக்கேன்.. 1922ல் நீல்ஸ் போர் ஏழாவது மந்த வாயு இருக்குதுன்னு ஒரு யூகமா சொல்லிட்டு குறிப்புகளைமட்டும் சொல்லிட்டுப்போக 1965ல் வாண் கிராஸ்ங்கிறவர்   அதோட பண்புகளை கண்டுபிடிச்சிருக்கிறார்... அப்புறம் கிட்டத்தட்ட நாலு தடவை ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன்ல உருவாக்க ட்ரை பண்ணியிருக்கிறாங்க... சக்ஸஸ் ஆன இடத்துல நெறய இழப்புகள் ஏற்பட்டிருக்குது... 1975ல் கென்னத் பிட்சர் இது ஒரு வாயு அல்லது திரவமாக இருக்க வாய்ப்பு இருக்குதுனு சொல்ல ராபர்ட் ஸ்மோலன்சூக் முதல்முறையா காரீயத்தையும் கிரிப்டானையும் சேர்த்து புது வகையான தனிமத்தை கண்டுபிடிக்க, அதில் மூன்று வகையான மிண்ணனு துகள்கள் வெளியேறி இருக்குது.. அதில் ஓகனிசோன் எது என கண்டுபிடிப்பக்கிறதுக்குள்ள அதோட லைஃப் பீரியட் முடிஞ்சுருச்சு..." என்றார்.

"நீங்க சொல்றது எல்லாமே ஒரு தனிமத்தை உருவாக்க விஞ்ஞானிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் கஷ்டப்பட்டிருக்கிறாங்க... இப்ப ரீசண்டா ரஷ்யால யூனிட்டட் ஸ்டேட்ட சேர்ந்த ஒரு விஞ்ஞானி  லாரன்ஸ் லிவ்மோர் நேஷனல் இன்ஸ்டிடியூட்ல கலிபோர்னியம்249 தனிமத்தை கால்சியம் கொண்டு அணுக்கரு சிதைவுக்கு உள்ளாக்கி வெற்றிகரமா ஒகனிசோனை உருவாக்கியிருக்கிறார்... அதேநேரத்துல இதோட அரைவாழ்வுக் காலம் ரொம்ப கம்மி.. 181 மில்லி செகண்ட் மட்டும் தான்... அதற்கான வழிமுறையை  ரஷ்யாவிடம் இருந்து வாங்கியாச்சு.. நமக்கு  இப்போ கவர்மெண்ட்ல இருந்து அப்ரூவல் வாங்கி இருக்காங்க..."என தேவா கூற அனைவரும் மகிழ்ச்சியில் கைகளை தட்டினர்.

"இன்னைக்கு நாம என்ன பண்ண போறோம்னா கலிபோர்னியம் தனிமத்தை பட்டையாக மாற்றி ஒரு காரீய கொள்கலன்ல வைக்க போறோம்.. அதை கால்சியம் கொண்டு அணுக்கரு சிதைவுக்கு உள்ளாக்கும் போது நமக்கு நியூட்ரானோட சேர்ந்து ஓகனிசோனும் கிடைக்கும்.. நியூட்ரானை போரான் கொண்டு ஈர்த்து கொள்றதுக்கு குறைந்த பட்சம் 30 மில்லி செகண்ட்  தேவைப்படும்.. மீதி இருக்கிற 151மில்லி செகண்ட் தான் நமக்கான ஆராய்ச்சி நேரம்..."என்றார்.

"சார்.. இது ஆபத்தான ஆராய்ச்சி... ரஷ்யால நடந்த விபத்து இங்கேயும் நடந்துச்சுன்னா??" என ஒருவர் கேட்க, "இது கதிர்வீச்சு தன்மையுடையது தான்.. ஆனா நம்ம கிட்ட காரீயம் டன் கணக்குல இருக்கு... நாம் பண்ற ஆராய்ச்சி கிலோகணக்கு தான்.. அதோட லேப்பை சுத்தி ஐந்து அடிக்கு கான்கிரீட் சுவர் இருக்கு.. கதிர்வீச்சு இதை தாண்டி எங்கேயும் போகாது..."என்றார் அவர்.

அதன்பின் வேலைகள் துரிதமாக்கப்பட்டது.. அந்த உருளை கொள்கலனிற்குள் கலிபோர்னியம் வைக்கப்பட்டு அணுக்கரு சிதைவினை மேற்கொண்டனர். அடுத்த சில நொடிகளில் நியூட்ரான்களும் ஓகசோனியமும் உருவாகியது...

இதை கணினி திரையில் பார்த்தவர்கள் கணினியின் இயக்கத்தினால் சில இயந்திர கட்டுப்பாடுகளை கொண்டு போரானை உள்நுழைந்து நியூட்ரான்களை வெளியேற்றினர். தற்போது ஓகசோனியம் அணுக்கள் மட்டுமே உள்ளே இடம் பெற்றது.

"கணேஷ்... இப்ப நீங்க 245 மெகா எலக்ட்ரான் வோல்ட் ஆற்றலை செலுத்துங்க..." என கூற, கணினியின் மூலம் செலுத்தினர்.

"சார்.. ஓகசோனியம் எந்த ஒரு பாதிப்பிற்கும் உள்ளாகலை..."என கணேஷ் கூற "ஓகே... நாம குடுக்கிற ஆற்றலை 251 மெகா எலக்ட்ரான் வோல்ட்டா இன்கிரீஸ் பண்ணுங்க..." என்ற கட்டளை பிறக்க, கணேஷ் ஒரு கோலை மேலே ஏற்றினான்.

மின்சார ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாற, "ராஜ்.. கூலரை இன்கிரீஸ் பண்ணுங்க..."என்றார் தேவா.

ராஜ் ஒரு வட்டமான கம்பியை சுழற்ற, வினையானது படுவேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்க, தேவாவோடு சேர்ந்து குழு உறுப்பினர்கள் முகத்திலும் பெருமை உணர்வு மேலோங்கி இருந்தது.

அப்போது திடீரென "சார்... கூலண்ட்ல ஒரு ப்ராப்ளம்.." என வந்து நின்றாள் சாரா. "என்ன?" என்பது போல தேவா பார்க்க, "சார் ரிவர் வாட்டர்ல மேக்ஸிமம் லெவல் ஆஃப் பேஸ் இருக்குது சார்..."என்க "ஓ மை காட்.. பேஸ் அதிகம் இருந்தா ரியாக்ஷன் கண்டினியூ பண்றது கஷ்டம்..."என சத்தமாய் கூற அனைவரும் அங்கே குழுமினார்.

"ஏன் சார்??" என கணேஷ் கேட்க, "கணேஷ்.. சுத்தி இருக்கிற லெட் மாடரேட்டார் 0.23ல இருந்து 0.34 சென்டிமீட்டர் ஸ்குயர் தான் இருக்கும்.. மேக்ஸிமம் லெவல் ஆஃப் ஹீட்ல ரியாக்ஷன் உள்ள நடந்திட்டு இருக்குது... பேஸ் அதிகம் உள்ள வாட்டரை வச்சு கூலண்ட் யூஸ் பண்ணுனா ஷீல்ட் உடைய சான்ஸ் இருக்குது..." என பதட்டமாக கூறினார் தேவா.
அடுத்தகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் அனைவரும் இறங்க, ஒருவர்கூட இல்லாது அனைவரும் அமைதியாக வெளியேறினர். தேவா அங்கிருந்த சிவப்பு நிற பொத்தானை அழுத்த பெரிய இரும்பு கதவு கொண்டு மூடப்பட்டது.

அதில் தெரிந்த கண்ணாடி ஓட்டை வழியாக உள்ளே காண கணநேரத்தில் பெருத்த சத்தத்தோடும் வெளிச்சத்தோடும் அந்த சில்வர் கொள்கலன் வெடித்து சிதறியது.. ஒளியோ ஒலியோ அந்த கான்கிரீட் சுவற்றை தாண்டி வெளியே வரவில்லை...

பெரூமூச்சு விட்டு திரும்பிய தேவாவிடம் "சார் இவ்வளோ கஷ்டப்பட்டும் வேஸ்டா போச்சே சார்.. நம்ம ப்ராஜெக்ட்ல சக்ஸஸ் கிடைக்கும்னு ரொம்ப நம்புனேன் சார்..." என கணேஷ் வருத்தத்துடன் குறிப்பிட "என்ன பேசுறீங்க கணேஷ்? எந்த ஒரு உயிர்சேதமும் இல்லாம தப்பிச்சிட்டோம்னு சந்தோஷப்படாம ஆராய்ச்சி நின்னு போறதை பத்தி பேசுறீங்க... ஆராய்ச்சிய நாளைக்கே கூட பண்ணலாம்.. ஆனா இந்த பில்டிங் வெடிச்சு ரேஸ் வெளியே போயிருந்தா இல்ல எதாவது ஒரு உயிர் போயிருந்தா..."என கூறிக்கொண்டிருக்கும் போது தான் தேவாவின் கண்கள் வெளியே இருந்த சேரில் பதிந்தது.

அவசரமாக சென்றவர், அருகில் இருந்த சாராவிடம் "சாரா.. இங்க இருந்து குழந்தைய எங்க??" என பதட்டமாக கேட்டார்.

"சார்.. பாப்பா கண்ணாடி வழியா உள்ள வேடிக்கை பார்த்திட்டு இருந்தா... உள்ள இருக்கிறது ப்ரீயாடிக் டேபிள் தானேன்னு கேட்டா ஆமான்னு சொன்னதுக்கு அப்புறம் வேடிக்கை தான் பார்த்துண்டு இருந்தா... அதுக்குள்ள கூலண்ட் சிஸ்டம்ஸ் இருந்து கால் வந்ததால அங்க போய்ட்டேன்.."என்க,  இப்போது தேவாவை பயம் தொற்றிக்கொண்டது. ஒவ்வொருவரும் அனைத்து இடங்களிலும் தேட, பித்து பிடித்தது போல அமர்ந்திருந்த தேவா..

சடாரென அங்கிருந்த கணினியை திருப்பி சிசிடிவி காட்சிகளை ரீவைன்ட் செய்து பார்க்க,  அதில் ரக்ஷா சாரா உள்ளே வரும் நேரத்தில் அவளோடு உள்ளே நுழைந்திருந்தாள். தேவாவிற்கு இதயம் அப்படியே உறைந்தது.


வேகமாக உள்ளே எட்டிபார்க்க ஒரு ஓரமாக கிடந்தாள் ரக்ஷா. அதற்குள் விஷயமறிந்து அனைவரும் வந்துவிட, தேவா தான் கால்கள் படபடத்து கொண்டிருந்தார்.

சில நிமிடங்களிலேயே மொத்த கதிர்வீச்சை சோதனை இயந்திரத்தை பயன்படுத்தி சோதிக்க, கதிர்வீச்சின் அளவு குறைந்த அளவு இருக்க மீட்பு குழுவினர் உள்ளே நுழைந்தனர்.


தேவாவின் அருகே அமர்ந்த கணேஷோ, "சார் வொரி பண்ணிக்காதீங்க... பாப்பா சேப்டி சூட் போட்டிருக்கிறா.. ஒன்னும் ஆகாது.. கார்ட்ஸ் இப்ப உள்ள போயிருக்காங்க.. இன்னும் கொஞ்ச நேரத்தில பாப்பாவ கூட்டிட்டு வந்திடுவாங்க... ப்ளீஸ் சார் நம்பிக்கையை விட்றாதீங்க..."என்றார்.

மீட்பு குழுவினர் இரண்டடுக்கு பாதுகாப்பு கவசம் அணிந்தே உள்ளே சென்றனர்.

ஸ்டெரெச்சரை அருகில் வைத்து விட்டு ரக்ஷாவின் அருகே செல்ல, இருவர் தூக்கி எறியப்பட்டனர். அந்த சத்தத்தில் அனைவரும் கதவின் பக்கம் வர அங்கே ரக்ஷா கண்ணை கசக்கிக்கொண்டே எழுந்தாள்.

அதில் ஒருவர் அவளருகே யாரும் செல்ல வேணாம் என்பது போல சைகை செய்ய, அவளோ விழி திறந்து வித்தியாசமான சூழலை கண்டு விழிவிரித்து வியந்து கொண்டிருந்தாள்.

கொள்கலன் இரண்டாய் பிளந்து தனது உள்ளுறுப்பான அனைத்து பாகங்களையும் காட்ட, கணினிகள் வயர்களை வெளியே கக்கியவாறு ஆங்காங்கே கிடந்தது.

அப்போது சாரா, "சார்... பாப்பாவோட சேப் கோர்ட் இங்க இருக்கு..."என எடுத்துக் கொடுத்தாள். 'அவளுடையது இங்கே என்றால் அவள் போட்டிருப்பது?' என யோசிக்க, உள்ளேயே சில பாதுகாப்பு கவசங்களை தேக்கி வைத்திருப்பது நினைவுக்கு வந்தது. உடனே அங்கே வந்த மூத்த விஞ்ஞானி சிலருக்கு கட்டளை பிறப்பித்தது கொண்டிருந்தார்.

அவரருகே சென்று விசாரிக்க செல்ல, "தேவா... ஸாரி... இதை சொல்றதுக்கு கஷ்டமா தான் இருக்கு... உங்க பொண்ணு கதிர்வீச்சால பாதிக்கப்பட்டிருக்கிறா...அவளை எங்களால நெருங்க முடியல... அதான் ஈயம் வைத்து ஒரு பாதுகாப்பு அறை உருவாக்க சொல்லியிருக்கிறேன்.." என்றார்.

"சார்.. நான் அவகிட்ட பேசுறேன்.. ரொம்ப நேரம் அந்த இடத்தில் அவளால் இருக்க முடியாது.. என் பொண்ணு பிரைமரி காம்ப்ளஸ்க் பேஷண்ட்... " என்றார் தேவா உடைந்த குரலில்.

"பட் தேவா உங்களால உள்ள போக முடியாது... பயங்கர ரேஸஸ் எமிட் ஆகுது... எப்படியாவது அந்த லெட் ஷீல்ட்க்குள்ள வந்துட்டா ட்ரீட்மென்ட் குடுக்க ஈசியா இருக்கும்..." என்கவும் "சரி.." என தலையசைத்தவரிடம் ஒரு மைக் கொடுக்கப்பட்டது..

"ரச்சு பாப்பா..."என அழைக்க, "ப்பா... எங்க இருக்கீங்கப்பா... இங்க ஒரே இருட்டாக இருக்குது..."என்றாள்.

"நான் இங்க தாண்டாத இருக்கிறேன்.. அப்பா சொன்னா கேப்பல்ல..."என கூற, "அப்பா நீங்க முதல்ல என் பக்கத்துல வாங்க... அப்ப தான் கேட்பேன்.."என்றாள்.

அவளிடம் என்ன சொல்வது என உதட்டை கடித்துக்கொண்டிருந்த தேவாவிடம் "தேவா.. நீங்க நம்பிக்கைய கைவிட்றாதீங்க... உங்க பொண்ணு பேசுறா.. முன்ன அவள் பக்கத்துல கூட யாரையும் விடலை.. எப்படியாவது பேசி சமாதானம் பண்ணி அந்த லெட் ரூம்க்குள்ள வரவச்சிடுங்க... அப்ப தான் நான் என்ன ப்ராப்ளம்னு ஐடென்டிபை பண்ண முடியும்..." என்றார் சீனிவாசன்.

உடனே, "பாப்பா... அப்பாவால உன் பக்கத்துல வரமுடியாது... நான் ரொம்ப அழுக்கா இருக்கிறேன்.. சோ நீ அங்க ஒரு ட்ரேன்ஸ்பரெண்ட் ரூம்ல வெயிட் பண்ணு... நான் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்..." என தளுதளுத்த குரலில் கூற, தந்தையின் குரலில் மாற்றத்தை உணர்ந்தவள், "அப்பா... நானும் டேர்ட்டியா தான் இருக்கிறேன்.. அங்க இருந்த ஒரு ட்ரெஸ்ஸை தான் எடுத்து போட்டேன்.. நீங்க பொய் சொல்றீங்களாப்பா??? எனக்கு உடம்பு சரியில்லையா?? அதான் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகபோறீங்களா?? நான் அடம் பண்ண மாட்டேன்ப்பா.. ப்ளீஸ் வாங்கப்பா..." என்றாள்.

தேவாவின் கண்களில் கண்ணீர் வழிந்து ஓடிக்கொண்டிருக்க, அவரின் தோள்களில் கைவைத்தார் மூத்த விஞ்ஞானி..

பின் சுதாரித்துக் கொண்டு கண்ணீரை துடைத்தவர், "பாப்பா.. ஹாஸ்பிடல் போகலை... அது என்னோட ஆபிஸ் ரூம்.. நீ வெயிட் பண்ணு அப்பா வந்திடுறேன்.." என குரலை நிலைப்படுத்திக்கொண்டே கூறினார்.

அதற்கு மேல் முடியாமல் கையை வைத்து வாய்மூடிக்கொண்டே மைக்கை விட்டு தள்ளிவந்து கண்ணீரை வெளியிட்டார்.

கணேஷ் அவரை தேற்றிக்கொண்டிருக்க, ரக்ஷா நகர்ந்து அந்த லெட் ஷீல்டிற்குள் நுழைந்தாள். அவள் உள்ள வந்ததும் வந்த வழி அடைத்துக்கொள்ள திடுக்கிட்டாள்.

அப்போது, "பாப்பா பேர் என்ன??" என கேட்டார் சீனிவாசன்.

சுற்றும் முற்றும் பார்த்தவள் அவளிருந்த அறையை விடுத்து மற்ற இடங்களில் இருட்டு மட்டுமே சூழ்ந்திருக்க "நீங்க யாரு??" என கேட்டாள்.

"நான் சீனிவாசன்.. உங்க அப்பாவோட சீனியர்..." என பேச்சுக்கொடுத்தார். அவர் இங்கே ரக்ஷாவிடம் பேசிக்கொண்டிருக்க, மற்றொருபுறம் அந்த அறையில் வைத்தே அவளை ஸ்கேன் செய்து கொண்டிருந்தனர்.

"சீனியர் சீனி அங்கிள்... நான் ரக்ஷா.. ரச்சுன்னு கூப்பிடுவாங்க..." என்றாள்.
"ரச்சுக்கு என்னலாம் புடிக்கும்?" என பொதுவாய் அவளிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டிருந்தார்.

பதில்களினூடே "அப்பா எங்க?? அப்பா எங்கே??" என அவள் கேட்டுக்கொண்டே இருக்க "அப்பா டேர்ட்டியா இருக்காரா அதான் கிளீனாக போயிருக்கிறாரு..." என சமாளித்தார்.

"நீங்க பொய் சொல்றீங்க... அப்பா இங்க தான் இருக்கிறாரு... அப்பா அப்பா..."என அழைத்தாள்.

அதற்கு மேல் அவளது கூக்குரலை கேட்கும் திராணியற்றவர் அந்த அறையை விட்டு வெளியே சென்றார். வெளியே வந்த பிறகும் அவளது குரல் காதிற்குள் ஒலித்துக்கொண்டே இருக்க,  காதை கைகளால் பொத்தியவர் வாசலிலேயே சரிந்து அமர்ந்து,  சுருங்கி கிடந்து தனது இயலாமையில் தரையை அடித்துக் கொண்டிருந்தார்.

சில நிமிடத்துளிகளில் தரையில் வீழ்ந்தவரின் கண்முன்னே காலையில் நடந்த நிகழ்வு கண்முன் நிழலாடியது...

"ஏ... சாப்பாடு எடுத்து வச்சிட்டியா??" என கேட்டு கொண்டே தனது டையினை மாட்டிக்கொண்டே வந்தார் தெய்வேந்திரன்.

"எடுத்து வச்சிட்டேன்... கொஞ்சம் சீக்கிரமா தான் சாப்பிட வாங்களேன்..." என காலை சுப்ரபாதத்தை தொடங்கியிருந்தாள் பிரபா. சாப்பிட அமர்ந்தவரின் தட்டில் இரண்டு இட்லிகளை எடுத்து வைத்தார் பிரபா.

அரை இட்லியை பிட்டு வாயில் வைத்தவர் மென்று கொண்டே, "பாப்பா சாப்பிட்டாளா??" என அக்கறையாய் கேட்டார். பிரபா அவரை அர்த்தமமாய் கோபம் சிந்த பார்த்தார். அதன் அர்த்தம் புரிந்தவர், பாதி இட்லி உண்ட கையோடு எழுந்து சென்றார். 

"போயும் போயும் இந்த ரெண்டுக்கு மத்தியிலயும் போய் படைச்சான் பாரு கடவுள்.. அவனை சொல்லணும்..." என நொந்து கொண்டே ஹாட் பாக்ஸினை உள்ளே எடுத்து சென்றார்..

ஒரு அறையினுள் சென்ற தெய்வேந்திரன் கட்டிலில் சுருண்டு கிடந்த போர்வையை பாவமாய் பார்த்தார். கீழே கிடந்த தலையணைகள் இரண்டையும் மேலே தூக்கி போட்டவர், "ஏலே..ரச்சு..." என அழைக்கையில், முந்தைய நாள் துவைத்து காயப்போட்டு பிரபாவால் எடுத்து வைக்க பட்ட துணியின் கூட்டம் பாவமாய் சேரில் கிடந்தது..

அதை அள்ளி செல்ஃபில் உள்நுழைத்தவர் "பாப்பா..." என மீண்டும் அழைத்தார். அங்கே ஸ்கூல் பேக்கில் மறந்து வைக்கப்பட்ட முந்தைய நாள் டிபன் பாக்சினை எடுத்து டேபிளில் வைத்தார்... பின் குளியலறை கதவின் அருகே செல்ல உள்ளே நீர் சொட்டி கொண்டிருந்தது...

"பூம்..." என கூறிக்கொண்டே தட்ட, அது திறந்து கொண்டது. அங்கே வெறும் வாளியில் நீர் தேங்கியிருந்தது.

"எங்க அம்மாவோ... வெளிய வாங்க பாப்போம்.. அப்பா அவுட் ஆயிட்டேன்.. சரண்டர்...." என இரு கைகளையும் மேலே தூக்கி நிற்க, கதவின் பின்னால் ஒளிந்திருந்தவள் பட்டென முன்னால் கையில் தண்ணீர் துப்பாக்கியோடு வந்து நின்றாள்...

"அப்பா... நான் தான் அரெஸ்ட் சொல்லுவேன்.. அப்றம் தான் நீங்க சரண்டர் சொல்லணும்..." என நெற்றியில் அடித்து கொண்டாள் ரக்ஷா.

"நீ திரும்ப போய் ஒளிஞ்சிக்கோ.. நான் தெரியாத மாதிரி உள்ள வரேன்..." என கூறினார் தேவா.

"போங்கப்பா..." என கோபித்து கொண்டவள், சென்று மின்விசிறியை ஓட விட்டாள். மேலே இருந்து நேற்று வீட்டு பாடங்களை செய்து முடித்து கிழித்த தாள்கள் இப்போது தேவாவின் தலை மேல்.. அதனை கண்டு கைதட்டி குதித்து கொண்டிருந்தாள்... பாவமாக உதட்டை பிதுக்கி நின்றார் தேவா.

அங்கே வந்த பிரபா இதை கவனித்து விட்டு "ஏண்டி.. இதுக்கு தான் நேத்து புல்லா உக்காந்து குட்டி குட்டியா கிழிச்சிட்டு இருந்தியா ?? இப்போ இதை யாரு க்ளீன் பண்ணுவா???" என கடிந்து கொண்டாள். 

"நீங்க தானே க்ளீனிங் லேடி..." என் கூறிய ரக்ஷவை அடிக்க பிரபா செல்ல, மறுநிமிடமே தன் பின்னால் இழுத்துக்கொண்டார் தேவா. ரச்சுவோ விடாமல் பின்னால் நின்ற படி ஒழுங்கு காட்டிக்கொண்டிருந்தாள்.

"உங்க ரெண்டு பேரையும்..." என உதட்டை அழுந்த கூறியவர், தேவாவை பாத்து அமைதியாகினார். 

"வழிய விடுடி..." என ரக்ஷாவின் அருகில் இருந்த துடைப்பத்தை எடுக்க போக, அங்கே கைக்குட்டை ஒன்று கிடந்தது. அதை உள்ளே வைப்பதற்காக செல்ப்பை திறக்க துணிகள் அனைத்தும் பிரபாவின் மேல் பாறையென உருண்டு விழுந்தது.

கோபமாய் திரும்பி பார்க்க இரண்டு பேரையும் காணவில்லை. அதற்கு மேல் பிரபாவினால் திட்டுவதற்காக தனது ஆற்றலை செலவழிக்க இயலாது என்ற உண்மை உணர்ந்து அமைதியாகி விட்டார்..

சுத்தம் செய்து விட்டு வந்தவர் கண்டது ஹாலில் அமர்ந்து அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை தான். உள்ளே சென்று ஹாட்பாக்ஸினை எடுக்க சென்றவரின் கண்களில் பட்டது அந்த சிங்கில் கிடந்த டிபன் பாக்ஸ் தான்.

"ஏய்..ரச்சு.. ஈவினிங் ஸ்கூல் முடிஞ்சி வந்ததும் டிபன் பாக்ஸ் எடுத்து போடுன்னு சொல்லிருக்கேன்ல..." என திட்டினார். அதெற்கெல்லாம் அசராமல் பார்வையை தட்டில் செலுத்தி கொண்டே "அப்பா.. உங்களால தான் நான் மாட்டுறேன்.. போங்கப்பா.. உங்களுக்கு மிஸ்டேக்ஸே பண்ண தெரியல ..." என்றாள்.

"இங்க ஒருத்தி உங்கிட்ட தானே கத்திட்டு இருக்கேன்.. நீ என்ன அங்க பேசுற??" என கேட்க, " ம்மா அப்பாக்கு ரெண்டு இட்லி வேணுமாம்.. அப்படியே அந்த வைட் வாட்டரையும் குடுங்க..." என் கூறி விட்டு தட்டை எடுத்துக்கொண்டு தப்பி சென்றாள்.

"என் கைல கிடைச்ச தோலை உரிச்சிடுவேன் கழுதை..." என  செல்ல முயன்ற பிரபாவின் கையை பிடித்து தடுத்த தேவா "சின்ன பொண்ணு தானே.. அவகிட்ட போய் ஏட்டிக்கு போட்டியா சண்டைக்கு நிக்குற..." என கேட்டார்.

"நீங்க சும்மா இருங்க.. சின்ன பொண்ணுன்னா மடியில வச்சு கொஞ்சுவீங்களோ..." என பிரபா கோபித்து கொள்ள "அவள் டைப் என்னன்னு தெரியாத மாதிரி பேசுற.." என கேட்டுக்கொண்டே சாப்பிட்டார் தேவா.

"அஞ்சு வருஷம் தவமிருந்து கோவில் கோவிலாக அலைஞ்சு கிடைச்ச பொண்ணு.. விடு.. குழந்தைகள்னா குறும்பு பண்ண தான் செய்வாங்க..." என தேவா கூற "குறும்பு வேற கொடுமை வேற.. என்ன கொடுமை பண்றா உங்க பொண்ணு.. உங்க அம்மா இல்லாத குறையை நல்லா தீர்த்து வைக்குறா.."என கூறியவர், "காலையில ஆறு மணிக்கு எந்திரிக்கிறவ ஒன்பது மணி வரை ப்ரெஷ் பண்ணமாட்டேன்னு அடம் பண்ணுறா.." என குற்றப்பத்திரிக்கை வாசித்தார்...

"எப்படியோ ஒன்பது மணிக்கு ஃப்ரெஷ் பண்ணுறால்ல..." என தேவா தன் மகளின் செயலை நியாயப்படுத்த முயற்சிக்க "அதுக்கு முன்னேயே பூஸ்ட் ஹார்லிக்ஸ் அள்ளி தின்னுறா..." என்றாள் பிரபா.

"அதையாவது ஒழுங்கா சாப்பிடறாளே..." என தேவா மீண்டும் அவளுக்காக பரிந்து பேச "ஹோம்வொர்க்கை சீக்கிரம் முடிச்சிட்டு கதை சொல்லு கதை சொல்லுன்னு என் உயிரை எடுக்குறா..." என்றார் பிரபா.

"படிப்புல கெட்டிக்காரி.." - இது தேவா...

"டைனிங் டேபிள்ல உக்காராம அவ ரூம் செல்ப்ல ஏறி உக்கார்ந்து சாப்புடுறா... எச்சு அங்கேயே எடுத்து வச்சிட்டு எறும்பு பாவம்லன்னு என்னையே கன்வின்ஸ் பண்ணுறா.." 

"அவளாவது பண்ணட்டுமே..."

"டிபன் பாக்ஸ் எடுத்து போட மாட்றா...."

"போக போக பழகிருவ...."

"யாரு நான் பழகிக்கனுமா??" என கோபமாக கேட்டாள் பிரபா.

"அவள் நிலைமை என்னன்னு தெரிஞ்சும் அவ கூட கூட்டு சேர்ந்து இருக்கீங்களே.." என கேட்டவளின் குரலில் சற்று கலக்கம் கலந்திருந்தது.

"தெரியும்.. பொறக்கும்போதே ஆஸ்துமா கூடவே வச்சிட்டு பொறந்த பொண்ணு.. அதுக்காக நம்ம வீட்டுக்குள்ளேயே அவளை கட்டுப்படுத்தலாம்னா எப்படி?? அவள் மத்த குழந்தைங்க மாதிரி இல்லன்னு தெரியும் இல்ல.." என சமாதானம் செய்ய முயற்சித்தார்.

"தெரியும்ங்க சின்ன வயசுல இருந்தே அவள் ஜக்கியூ லெவல் ஜாஸ்தின்னு டாக்டர் சொல்லிருக்காரு... எனக்கு அது தான் பயமா இருக்கு.. நாம எத்தனை இடத்தில் பார்க்கிறோம்.. ரொம்ப நாள் கழிச்சு பிறந்த குழந்தை.. அதுவும் திறமையா இருக்கிற குழந்தையை நோயை இல்லன்னாலும் சின்ன வயசிலேயே பறிகொடுத்திட்டு ரொம்ப கஷ்டப் படுவாங்க.. இவ அஞ்சு வருஷம் கழிச்சு பிறந்திருக்கிறா.. இதுல அவளுக்கு ஆஸ்துமா வேற இருக்குது.. ஒவ்வொரு தடவையும் மூச்சு திணரும் போதும் எனக்கு மூச்சு நிக்குது... கொஞ்சமாவது ஒரு இடத்துலே இருன்னா கேக்கமாட்றா.. இவளை தேடியே நான் டயர்டா ஆகிடுறேன்... இதுக்கு மேல நான் எதுவும் சொல்லல.." எனக் கூறிவிட்டு கரண்டியை தட்டென மேஜையில் வைத்து விட்டு உள்ளே சென்றாள்.

இது தினமும் கேட்கும் கீதை என்பதால் அமைதியாக உண்ண தொடங்கினார் தேவா. ரக்ஷிதா - தெய்வேந்திரன் மற்றும் பிரபாவின் ஐந்து வருட தவத்திற்கு கிடைத்த பலன்... குழந்தை பிறக்கும் போதே ஆஸ்துமா ஒட்டி இருக்க, அவளை 10 வயது வரை வளர்க்கும் முன் பத்தாயிரம் தடவை ஹாஸ்பிடல் சென்று வந்திருப்பர்.. அத்தனை நோயையும் உடலில் கொண்டிருந்தாலும் மனதால் குறும்புடன் வீட்டில் வலம் வந்தபடி நிற்பாள் ரக்ஷா. சில நேரங்களில் பிரபாதான் அவளின் குறும்பில் சோர்ந்து விடுவாள்.

சாப்பிட்டு முடித்துவிட்டு வந்தவர், "பிரபா... அந்த பேக்கை எடு... நான் கெளம்புறேன்..." என்றார். அப்போது பிரபா அங்கும் இங்கும் கண்களை உருட்டியவாறே தேடிக் கொண்டு வந்து "என்னங்க உங்க பேக்கை காணோம்..." எனக் கூறினாள்.

"பிரபா.. டேபிள் பக்கத்துல தான் வச்சேன்.. ஒழுங்கா போய் தேடிப் பாரு கண்ணை பிடறில வச்சுட்டு தேடினா எப்படிக் கிடைக்கும்??" என  தேவா கூற, "என்னங்க நான் ஒழுங்கா தான் தேடுறேன்.. டேபிள்ல, எல்லாம் இடத்திலேயும் பாத்துட்டு தான் வரேன்.. எங்கேயுமே இல்ல.. நேத்தே அவ கேட்டா.. லீவு நாள்ல அப்பா எங்க போறார்னு.. இருங்க.. அந்த குட்டி குரங்கு எங்கேயாவது ஒளித்து வச்சிருக்கும்... அவளையே கேளுங்க... என் தலையை நடுவுல போட்டு உருட்டாதீங்க..." என கூறினார்.

" நான் சொல்றத.." எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே பிரபா வீட்டினுள் சென்றிருந்தார். தேவாவும் வீடு முழுக்க தேடி விட்டு ஹாலுக்கு வர அங்கே வீட்டின் வாசலில் நின்றிருந்த ரக்ஷா "அப்பா உள்ளே என்ன பண்ணிட்டு இருக்கீங்க??" என கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தாள்.

"நீ எப்ப வெளியே போன ரச்சு?" என தேவா கேட்க "டைமாச்சு சீக்கிரம் வாங்க.." என சிறுவிரல்களை கொண்டு தேவாவின் பெருவிரலை பிடித்து அழைத்தாள்.

"நீ எங்க வர்ற?? அப்பா வேலைக்கு தான் போறேன்.. கடைக்கு போகல.." என தேவா புரிய வைக்க முயற்சிக்க "வேலைக்கு போனாலும் நானும் கூட வரேன்... இந்த அம்மாக்கூட ஒரே போர்.." என்றாள்.

அதற்குள் வெளியே வந்த பிரபா "அங்க எல்லாம் போக கூடாது ரச்சு.. ஒழுங்கா வீட்ல உக்காந்து ஹோம்வொர்க் பண்ணு.." என அதட்டினார்.
"நேத்தே.. எல்லா ஒர்க்கையும் பண்ணிட்டேன்.. வேணும்ன்னா என்னோட ஹோம் வொர்க் நோட்டை எடுத்துட்டு போயி நீங்க என் மேத்ஸ் மிஸ்கிட்ட டிக் வாங்கிட்டு வாங்க..." என தலையை திருப்பினாள்.

" வர வர உன் வாய் அதிகமாக போச்சுது.." என ஒருவிரல் உயர்த்தி எச்சரிக்க, "அப்பா ப்ளீஸ்..."என கெஞ்ச, பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு "அப்பா அங்க வந்து நான் டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன்.. ஒரு ஓரமா உட்கார்ந்துக்கிறேன்...ப்ராமிஸ் பா.." என கூறினாள்.

"ரச்சு அப்பா சொன்னா கேப்பல்ல.. அங்க எல்லாம் வரக்கூடாதுமா.. அங்க எல்லாம் டேஞ்சரஸ் திங்ஸா இருக்கும்.." என கூறினார்.

"அப்ப நீங்க மட்டும் போறீங்க.." என அடுத்த கேள்வியை கேட்டாள்.

"அப்பா வேலைக்கு போறேன் டா..." என கூற, "அப்ப நானும் வருவேன்.." என தேவாவின் பேக்கை தரையில் வைத்தவன் கூடவே அவளது ஸ்கூல் பேக்கையும் தூக்கி வைத்து இருந்தாள்.


தேவா பிரபாவை கெஞ்சுவது போல பார்க்க பிரபாவும் "போறதெல்லாம் சரிதான்.. அங்கு உட்கார்ந்து அப்பாவுக்கு டிஸ்டர்ப் பண்ணாம ஹோம்வொர்க் பண்ணனும்.." என கூற வேகமாக தலையை ஆட்டியவள் உற்சாகமாக காரில் ஏறி அமர்ந்தாள்.

தேவாவின் அருகே வந்த பிரபா "ஏங்க.. அங்க கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்க..." என கூற தலையாட்டி விட்டு காரில் ஏறினார்.


சீனிவாசனின் கரங்களில் ரக்ஷாவின் ஸ்கேன் ரிப்போர்ட்டுகள் தரப்பட்டிருந்தது. கணேஷூம் ஒருவாறாக தேவாவை தேற்றி, ஆறுதல்படுத்தி அழைத்து வந்திருந்தார்.

"மிஸ்டர்.தெய்வேந்திரன்.. இந்த விஷயத்தை சொல்றதுக்கு எனக்கே கஷ்டமா இருக்குது.. இருந்தாலும் சொல்லித்தான் ஆகணும்.. கொள்கலன்ல இருந்து வெடிச்ச ஒகனிசோன் துகள்கள் பல ரக்ஷாவின் உடம்புல இருக்குது... அது மில்லிசெகண்டுக்கு ஒரு தடவை கதிர்வீச்சை வெளியிட்டு லிவர்மோரியம் ஐசோடோப்பா மாறுது... அடுத்தடுத்து சிதைவுக்கு உள்ளாகி சங்கிலி வினை நடக்குது... ஒவ்வொரு தடவையும் சுமார் 11.65 மெகா எலக்ட்ரா வோல்ட் ஆற்றலை வெளியிடுது... அதோட ஆல்பா கதிர்களையும் வெளியிடுது...இது எல்லாமே அவளோட உணர்ச்சிகளோட பிண்ணப்பட்டிக்குது... அவ அதிக அளவு கோபப்பட்டா அதிக அளவு கதிர்வீச்சு வெளிவருது.. அவ ஒவ்வொரு தடவையும் அப்பா அப்பான்னு கூப்பிடும் போதும் கதீர்வீச்சு அளவு அதிகமாகுது... இதுனால அவளோட உடல்ல எந்த விதமான மாற்றங்கள் நடக்குதுங்கிறதை கண்டுபிடிக்க தான் சம்யுக்தாவை வரவச்சிருக்கிறேன்... செக் பண்ணிட்டு இருக்கிறாங்க...அவளோட உடல்நிலை பத்தி தெரிஞ்சிட்டா ட்ரீட்மெண்ட் எந்த மாதிரி பண்ணலாம்னு முடிவு பண்ணலாம்..."என்றார் சீனிவாசன்.

தேவாவோ எந்த உணர்ச்சியும் காட்டாது அமைதியாய் செவியில் கேட்டுக்கொண்டிருந்தார்.

"சார்..." என்றவாறே சம்யுக்தா உள்ளே வர "சொல்லுங்க... பாப்பாவுக்கு என்னாச்சு?" என கேட்டார் சீனிவாசன்...

"சார் பர்ஸ்ட் அப் ஆல் அந்த குழந்தையோட எல்லா பார்ட்ஸ்லயும் ஆல்பா ரேஸோட தாக்கம் இருக்குது... செகண்டுக்கு 121மெகா எலக்ட்ரான் வோல்ட் ஆற்றல் வெளியேறுது... இந்த அளவுக்கான ஆற்றலை நம்ம ஸ்டீல் ஷீல்ட் கூட தாங்காது... ஆனா பொண்ணு எந்த ஒரு சலனமும் இல்லாமலே இருக்கிறா... அவளோட உடம்புல சராசரி மனிதனை விட அதிக அளவுல மெட்டல்ஸ் இருக்குது.." என கூறிக்கொண்டிருக்கும் போதே, "என் பொண்ணு ஒரு ஆஸ்துமா பேஷண்ட்... டேப்ளட்ஸ் கன்டினியூ பண்ணிட்டு இருக்கிறா..."என சோர்வாய் கூறினார் தேவா.

"எக்ஸாட்லி சார்... அந்த நோய் தான் இப்ப உங்க பொண்ணோட உயிரை காப்பாத்திட்டு இருக்குது...அதுனால தான் இந்த அளவு கதிர்வீச்சை அவளோட உடல் தாங்கிட்டு இருக்குது... தனிமம் அவளோட உடல் செல்களோட ரியாக்ட் ஆகி ஒரு செல் இன்னொரு செல்லோட இணைஞ்சு மறுநிமிடமே பிரிஞ்சிட்டு இருக்குது.. அவளோட உடல் இப்போ நிலையான கண்டிஷன்ல இருக்குது... இன்னும் எத்தனை மணி நேரத்துக்கு எலும்புகள் தாக்கு பிடிக்கும்னு சொல்ல முடியாது... இப்பவே அவளோட வெயிட் எல்லாமே குறைய ஆரம்பிச்சிடுச்சு...."என்றார் சம்யுக்தா.

அவர் அவ்வாறு கூறவும் "அப்போ என் பொண்ண காப்பாத்த முடியாதா??" என் வெடித்து கேட்டார் தேவா. 

"சார்... நாங்களும் இதுக்கு முன்னாடி இந்த மாதிரியான கேஸை பார்த்ததில்லை... இது தான் பர்ஸ்ட் டைம்.. இதுக்கான ட்ரீட்மெண்ட் என்னன்னு கூட தெரியலை... மனித செல்கள்ல இருந்து கதிரியக்க தனிமத்தை பிரித்தெடுக்கிற வழிமுறையை இது வரை யாரும் கண்டுபிடிக்கல..." என்றார் சம்யுக்தா.

"நீங்க உங்க பொண்ணுக்கிட்ட பேசுங்க... எதாவது சேன்ஞஸ் தெரியுதான்னு பார்க்கலாம்... " என சம்யுக்தா கூறவும் தேவா அந்த லெட் ஷீல்ட் அருகே சென்றார்.

அவரை பார்த்தும் ரக்ஷா விரல்களை துப்பாக்கி போல வைத்துக் கொண்டு "யூ ஆர் அண்ட் அரெஸ்ட்..." என்க தேவாவும் கைகளை உயர்த்தி "சரெண்டர்..."என்றாள்.

கண்ணீரை எந்த காரணத்திலும் வெளியேற விடக்கூடாது என்பதில் கட்டுப்பாடாக இருந்தார் அவர். 

"அப்பா... உங்களுக்கு என்னாச்சு?? ஏன் இப்படி வெளியே இருக்கிறீங்க...இது உங்களோட ஆபிஸ் தானே... உள்ளே வாங்க..." என வெகுளியாய் அவள் பேச "இல்ல பாப்பா... அப்பாக்கு ஒரு அவசர வேலை... கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன்.. அதுவரை ஒரு டாக்டர் வருவாங்க.. அவங்க கேக்குறதுக்கு நீ உண்மையை மட்டும்  தான் சொல்லணும்.." என்றார்.

"ஏனப்பா.. எப்பவும் அந்த பெரிய ஹாஸ்பிடல் தானே கூட்டிட்டு போவீங்க... இப்ப எதுக்கு புதுசா டாக்டர் வர சொல்றீங்க... ஊசி போடவா?? ஊசிப்போட்டா என் பக்கத்துலயே இருக்ப்பா..." என அழும் குரலில் கூறினாள்.

இருவருக்கும் நடுவில் அந்த லெட்டினால் கண்ணாடி மட்டும் இல்லையெனில் தனது மகளை அள்ளி அணைத்து அந்த எமனிடமே சண்டையிட்டிருப்பார்..

பீறிட்டு வந்த அழுகையை பல்லை கடித்து கட்டுபடுத்தியவர், "ரச்சு...இந்த டாக்டர் ஊசிலாம் போடமாட்டாங்க... டேப்லட் கூட குடுக்க மாட்டாங்க... பேச மட்டும் தான் செய்வாங்க.."என்கவும் "அப்பா அப்போ சீக்கிரமா வந்திடுவீங்களா???" என கேட்டாள்.

"அப்பா உன்னை விட்டு எங்கே போவேன்.. நீ ட்ரீட்மெண்டை சரியா அட்டெண்ட் பண்ணு பாப்பா.."என கூறிவிட்டு அடுத்த வார்த்தை பேசுவதற்கு முன் திரும்பி நடந்தார்.

ரக்ஷாவோ அந்த பிஞ்சு கண்களில் கண்ணீர் பொங்கி நிற்க, கூர்மூக்கு சிவந்து உதடு துடிக்க, எப்போது வேண்டுமானாலும் அழுதுவிடும் நிலையில் இருந்தாள்.

வெளியே வந்த தேவா அங்கே பெஞ்சில் சோர்ந்து அமர்ந்தான். சிறிது நேரத்திற்கு ரக்ஷாவிடம் பேசிய சம்யுக்தா சீனிவாசன் அறையை அடைந்தார்.

"சார் ஸாரி சார்... குழந்தைய காப்பாத்த முடியாது... உடம்புல ப்ளட் சர்க்குலேசன் கூட குறைஞ்சு போச்சு... இன்னும் சில மணிநேரம் தான்னு சொல்லலாம்..." என கூறிவிட்டு குனிய, சீனிவாசனும் தனது மூக்கு கண்ணாடியை கழற்றி கண்களை கசக்கினார்.

அப்போது அங்கே திரையில் ரக்ஷா ஏதோ கூறுவது போல தோன்ற, "கணேஷ்... ரெக்கார்ட் ஆன் பண்ணுங்க..." என்றாள் சம்யுக்தா.

ரக்ஷா ஏதோ பேசிவிட்டு திடீரென கண்களை மூட, சம்யுக்தா வேகமாக வெளியேறி ரக்ஷாவை நோக்கி ஓடினாள். அங்கே கணினி திரையில் பார்த்துக்கொண்டிருந்த பெண்ணொருத்தி, "மேம்... அந்த குழந்தையோட செல்கள் எல்லாமே ஒண்ணோடு ஒண்ணா இணையுது... கண்ட்ரோல் பண்ண முடியல... ரேடியேஷனும் ஹெல்ப் பண்ற மாதிரி செல்ஸோட பைண்டிங்க ஸ்டாராங்காக்குது..."என்றாள்.

சம்யுக்தா கண்ணாடி வழியாக பார்க்க, ரக்ஷாவோ ஒரு அடிக்கு மேலே அந்தரத்தில் பறந்தாள்.. அவளது உருவம் உருக்குலைய தொடங்க, அனைவரும் கண்களை மூடிக்கொண்டனர். சிறிது நிமிடங்கள் கழித்து கண்களை திறந்து பார்க்க, அங்கே கோளவடிவமாய் ஏதோ ரக்ஷாவின் உடையின் நடுவே தெரிந்தது.

ஓடிவந்த கணேஷ் "மேம் ரேடியேஷன் ஜீரோ பர்செண்டேஜ் தான் இருக்குது..." என கூற அந்த அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று துணியை விலக்கி பார்த்தவள் சட்டென கண்களை விலக்கி கொண்டாள்.

"திவ்யா...பார்மால்டிஹைடு ரெடி பண்ணுங்க..." என்றவள் அதை துணியை  கொண்டு மூடினாள். இரண்டு நிமிடத்தில் ஒரு கண்ணாடி குடுவையில் பார்மால்டிஹைடு நிரப்பப்பட்டு கொண்டுவர, சம்யுக்தா கைகளில் பாதுகாப்பு உறையை மாட்டிகொண்டு பத்திரமாக கோள உருண்டையை எடுத்து அந்த குடுவையில் இட்டாள்.

அந்த குடுவையானது உயிரிதொழில்நுட்பவியல் ஆய்வு கூடத்திற்கு கொண்டு செல்லப்பட, ஒரு மணிநேர ஆய்வுக்கு பிறகு வெளியே வந்தாள் சம்யுக்தா.

காத்திருந்த சீனிவாசனிடம் உள்ளே வருமாறு கூறிவிட்டு தனதறைக்கு  சென்று எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

"சார்... நீங்க நியூக்ளியர் வெப்பன் ரெடி பண்ண ரிசர்ச் பண்ணீங்க... ஆனா அந்த குழந்தை பயோ வாருக்கு வெப்பனா மாறிட்டா..." என்றாள் சம்யுக்தா.

"நீங்க சொல்றது புரியல.. கொஞ்சம் தெளிவா சொல்லுங்க..."

"சீனிவாசன் சார்.. அந்த பொண்ணு மொத்தமா தன்னோட செல்கள் எல்லாத்தையும் ஒருங்கே பின்னி பிணையவச்சுட்டா... அதுக்கு அந்த ரேடியேஷனும் ஹெல்ப் பண்ணியிருக்குது... அந்த கோளவடிவ பிண்டத்துல ஆயிரக்கணக்கான செல்கள் இருக்கு... சாதாரண செல்கள் இல்லை மூலச்செல்கள்(ஸ்டெம் செல்ஸ்)... பொதுவாகவே ஒரு மூலச்செல்கள் வச்சு ஒரு மனிதனுக்கு தேவையான உடல்உறுப்புகளை செய்யலாம்... இந்த வழிமுறை தான் வெற்றி பெற்று இன்றைய சமூதாயத்துல உயர்ந்த இடத்துலே இருக்கிறவங்களுக்கெல்லாம் உதவியாக இருக்குது... இந்த டெக்னாலஜி தான் டாப் ட்ரெண்டிங்ல போய்ட்டு இருக்குது... பட் நமக்கு கிடைச்சிருக்கிற மூலச்செல்கள் முழுமனிதனையே உருவாக்க கூடியது... தற்போதைய மனிதன் மட்டுமில்ல சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்த மாதிரியான எட்டடி கொண்ட பலவீனமே இல்லாத மனிதனை கூட உருவாக்க முடியும்... இந்த ஆராய்ச்சியில எந்த பின்னடைவும் இருக்காது.. ஏன்னா செல்கள்ல அத்தனை நேர்த்தி... அதை பிஸிகல் போர்ஸ் அட்டாச் பண்ணி வச்சிருக்குது... இதுமூலமா சார்லஸ் டார்வீன் சொன்ன பலமான சந்ததிகளை உருவாக்க முடியும்..."என்றாள் சம்யுக்தா.

"இது சாத்தியமா??" என கேட்க, "100% சாத்தியம் சார்... "என்றாள்.

"இந்த பலமான சந்ததினால பிற்காலத்துல தீய விளைவுகள் ஏற்பட்டுச்சிதுன்னா??? இதுக்காக ஒரு குழந்தையோட உயிர் போய்டுச்சே..."என்றார் சீனிவாசன்.

"சார் நீங்களே இப்படி பேசுனா எப்படி???அறிவியல் என்பது இரண்டுமுனை கத்தி மாதிரி... அதை வச்சு கழுத்தை அறுக்கவும் செய்யலாம்.. அதேநேரம் அறுவை சிகிச்சையும் பண்ணலாம்... ரெண்டும் நம்ம கையில தான் இருக்குது... மின்சாரம் கண்டுபிடிக்க எத்தனையோ பேர் உயிரை விட்ருக்காங்க...ஆனா இப்ப நாம சர்வசாதாரணமாக யூஸ் பண்ண கத்துக்கலையா?? அதே மாதிரி அறிவியலையும் பயன்படுத்த கத்துப்போம்... அறிவியல்ல புதுமைகள் வேணும்னா நாம எதையாவது இழந்து தான் ஆகணும்... அழிவுல இருந்து தான் அறிவியலோட ஆக்கம் ஆரம்பிக்கும்... நம்புங்க சார்... ஒரு பலமான எதிர்காலத்திற்கு பலவீனமா ஒரு குழந்தைய பலிகொடுத்திருக்கோம்... குழந்தையோட அப்பாவ எங்க??" என கேட்டாள்.

கணினியின் முன் அமர்ந்திருந்தார் தேவா. திரையில் ரக்ஷா. "அப்பா... எனக்கு ஏதோ ப்ராப்ளம் தானே.. அதானே என்முன்னாடி வரமாட்டேன்னு சொன்னீங்க.. எனக்கு அப்பவே தெரியும்...எனக்கு ஏதோ ஆகிருச்சு... இப்ப கூட என்னோட முதுகு எலும்பு வலிக்குதுப்பா... அந்த டாக்டர் எங்கிட்ட கேட்டதுக்கெல்லாம் கரெக்டா பதில் சொல்லிட்டேன்... அப்புறமும் ஏன்ப்பா என்மேல கோபம்??" என கேட்டுக் கொண்டிருக்க, "அப்பாக்கு உன்மேல் எந்த கோபமும் இல்லடா..." என திரையை பார்த்தவாறே கூறினார்.

"கோபம் இல்லைன்னா ஏன் என்னை பார்க்க வரலை.. எனக்கு எல்லாமே தெரியும்பா.. நான் சீக்கிரமா செத்திடுவேன்னு.. அதுனால தானே என்மேல் கோபம்.. எனக்கே பீல் ஆகுதுப்பா.. நான் ரொம்ப வீக் ஆகிட்டேன்.. எனக்கு ஏதோ பண்ணுது... ஆனா எனக்கு வலிக்கவே இல்லை... எனக்கு உங்களை கடைசியாக ஒரு தடவை பார்க்கணும் போல இருக்குப்பா.. " என்றவள் இரண்டு நிமிட இடைவெளிக்கு பிறகு "நான் போயிட்டா என்னை மறந்துடாதீங்கப்பா... என் செல்ப்ல இருக்கிற எறும்புக்கு சாப்பாடு வைங்க..... மறக்காம அம்மாக்கு நிறைய இம்சை குடுங்க... பாத்துப்பா.. அம்மா அடிக்க வந்தா காப்பாத்த நான் இருக்க மாட்டேன்... அம்மாவ பாக்கணும் போல இருக்குப்பா.. ஆனா என்னால தான் வெளிய வர முடியாதே... நான் ரொம்ப டேன்ஜரஸ் கேர்ள் தானே ப்பா... காட் கிட்ட போய் சண்டை போட்டுட்டு சீக்கிரமே வந்திடுவேன்ப்பா.. ஆனா எனக்கு ஒரு டவுட்.. சாகும் போது வலிக்குமா?? வலிச்சா என்ன பண்ணுறது? பிடிச்சிக்க நீங்களும் இல்லை... ப்ளீஸ்ப்பா காட்கிட்ட வலிக்காம சாகடிக்க சொல்லுங்க..." என கூறும் போதே அவளது கண்ணீர் வழிய, திடீரென அவளது உடல் நடுக்கம் கொண்டு ஆடத்துவங்க வீடியோ கட் ஆகியது.

தேவா அதிர்ச்சியில் கணேஷை பார்க்க, " சாரி ஸார்.. இதுக்கு மேல வீடியோ கிளிப்பிங் போடல... ஏன்னா கொஞ்சம் வயலெண்ட்டா இருந்திச்சு" எனக்கூறினார். தலையசைப்பை மட்டும் பதிலாக தந்துவிட்டு வீடியோவை பென்ட்ரைவில் மாற்றிவிட்டு அவரின் அறையினுள் வைத்துவிட்டு சென்றார்.


மறுநாள் காலை..

மருத்துவ துறையில் சாதனை:
இன்றைய காலகட்டத்தில் ஒருவரது மூலச் செல்கள் எனப்படும் மனிதனின் ஆதாரத்தினை மருத்துவ வங்கியில் பதப்படுத்தப்பட்டு சேமித்து தேவை ஏற்படுமாயின் அவற்றின் மூலம் மனித உடல் உறுப்புகளை உருவாக்கும் தொழில்நுட்பம் பெரும்பான்மையான நாடுகளில் வளர்ந்து வருகிறது... ஆனால் தற்போது இந்தியாவில் மூலச்செல்களை கொண்டு முழுமனிதனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதில் வெற்றியும் கண்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்... அம்முறையில் உருவாகும் மனித உயிரினம் அனைத்து சூழ்நிலைகளிலும் பொருந்தி வாழக்கூடிய தன்மையுடையதாகவும் சாதாரண மனிதனை காட்டிலும் சக்தி வாய்ந்த உயிரினமாக வரும் என்று கூறப்படுகிறது....
***** டிவி செய்திகளுக்காக சம்பத். 

"ஏங்க இந்த குட்டி குரங்கை பாத்தீங்களா???" என சமையலறையில் இருந்து வெளியே வந்தார் பிரபா.

டையினை மாட்டிய தேவா பேக்கினை எடுத்துக் கொண்டு "பாப்பா.. இங்க தான் எங்கேயாவது ஒளிஞ்சிட்டு இருப்பா.. ஒழுங்கா தேடு..."என கூறிவிட்டு கிளம்பினார்.
"ரச்சு...." 
"ரச்சு..." என்ற குரல் வீடெங்கும் ஒலித்தது...

Post a Comment

0 Comments