Header Ads Widget

Welcome You all to Ruthitha's KKR family

Kanavu Kadhali's World

To share your valuable comments : kanavukadhali@gmail.com

பேயோடு பார்த்த பேய்ப்படம்..

 



இருட்டிற்கு பயம் கொண்டு ஒன்றுக்கும் ரெண்டுக்கும் அம்மாவை எழுப்பி செல்லும் எலும்பன் நண்பர்களே..

தண்ணீர் குடித்து விட்டு தலை தெறிக்க ஓடி வரும் தைரியசாலிகளே..

மரம் அதிகமாக இருக்குற இடத்தின் பின்னே இருந்து வெள்ளை ஒளி வந்தால் கூட மயங்கி விடும் மதிக்காரர்களே..

ஒரு நொடி பேய்க்கு கூட மற்றவர்களை கைகளை கெட்டியாக பிடித்து ஒரு அடி வரை நகத்தால் கிணறு தோண்டும் கம்பீரமானவர்களே..

வெள்ளி செவ்வாய் அன்று வீட்டில் வைத்திருக்கும் பத்தி சாம்பிராணியை ஆவி போல பாவிக்கும் பங்காளிகளே..

பகலில் கூட கல்லறை பக்கம் வர மறுக்கும் மகா பிரபுக்களே..

தாராளமா படிக்கலாம்.. எந்த பேயையும் பப்ஸ்குள்ள பொதிந்து வைத்து பயமுறுத்த போவதில்லை..

 

அது ஒரு ராக்காலம்.. எனக்கோ ராகுக்காலம்..

சுக்கிரன் உச்சத்தில் இருந்தால் சனிபகவானோ சட்டை பையினுள் சாவகாசமாக அமர்ந்திருந்தார்.. எனக்கு மட்டுமல்ல அங்கு பலருக்கும் அதே கதி தான்..

எங்களின் சுவாச மூச்சான ஹாஸ்டலின் வொய்பை ஹார்ட் அட்டாக்கில் அடிபட்டு கோமாவிற்கு சென்று விட்டது.. தடையில்லா மின்சாரம் தந்து எதற்கு?? தாயில்லாத பிள்ளைகளாகி போனதே எங்களது மொபைல்கள்..

சனிக்கிழமை வேறு.. வேலை நாட்களாக இருந்தால் கூட வகுப்பில் சென்று சூழ்ந்து அமர்ந்து வொய்பையை பறித்து கொண்ட காரணியை சபித்து கொண்டாவது இருந்திருப்போம்.. அதற்கும் வழியில்லை.. நெட்டிற்கோ சிக்னலில்லை.. எங்களுக்கோ வேலையில்லை.. நேரத்திற்கோ நகர விருப்பமில்லை..

 

அறையில் அஷ்டகோணலாக அடைந்து கிடந்தது கொஞ்சம்.. ஊஞ்சலில் ஊசலாடியது கொஞ்சம்.. மெஸ்ஸில் மெனு கேட்டு கொஞ்சம் என்று கொஞ்சம் கொஞ்சமாக கெஞ்சி நேரம் கரையை கடக்க முயன்றோம்.. பகல் பத்திரமாக கழிந்தது.. இரவு தானே இன்னல்கள் அடங்கியது.. இரண்டு மூன்று என்ற மணிகணக்கில் உறங்க செல்லும் ஆந்தைகளே..

 

எந்நேரமும் கடலை வறுக்கும் சனாவிற்கு கடலையை மட்டும் மிச்சம் வைத்து விட்டு சட்டி என்னும் சிக்னல் சைனா பார்டர் சென்று விட்டதே.. எந்த படம் கேட்டாலும் கிடைக்க கூடிய ஏடிஎம் ஜெனிதா நேற்று தான் ஏதோ பாய்பிரெண்டோடு பாரிஸ் சென்று வந்து வீட்டில் மாட்டி கொண்டது போல ரீசெட் அடித்திருந்தாள்.. ஒரு திருநாளில் கூட விளக்குமாற்றை தொட்டு அறையை கூட்டாதவள் லேப்டாப்பை சுத்தமாக வைக்க துப்புரவாளராக மாறி போனது k7 ஆன்ட்டி வைரஸ்..

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் செய்து வைக்காததினாலேயே வசமாக மாட்டி கொண்டோம்.. வேறு வழியே இல்லை.. அறையில் தேல்பத்ரிசிங் மஞ்சுவை யாசித்து வர யோசித்தோம்.. நான்கு ப்ளாக்கிலும் பிரேக்கே இல்லாமல் அலைந்து திரிந்து பெண்ட்ரைவை கொண்டு வந்து விட்டாள்..

சுடசுட சாம்பார் சாதத்தினை ருசித்து சாப்பிட்டு விட்டு, நான்கு பாட்டில் தண்ணீரை பிடித்து வைத்தாயிற்று.. ஜன்னல்களில் வெளிச்சம் வராமல் இருக்க போர்வையை கட்டி விட்டு வெறுந்தரையில் கிடைத்த அனைத்து தலையணைகளையும் குவித்து விட்டு ராணுவ வீரர்கள் போல தண்ணீர் பாட்டில், நபட்டி சகிதம் “டேக் ஆக்ஷன்..” போசில் நானும் மஞ்சுவும் படுத்து கொண்டோம்.. எங்களின் முன்னே லேப்ட்டாப்பை வைத்து சனாவும் ஜெனிதாவும் எங்களை தலையணைகளாக்கி கொண்டனர்..

 

அதிக எதிர்பார்ப்போடு திறந்து பார்த்தால், “லைட்ஸ் அவுட்” படம்.. “பக்கி படம் ஏத்திட்டு வர சொன்னா எங்களுக்கு படுகுழி வெட்டி பாதாளத்துல தள்ள முடிவு பண்ணியிருக்குறா..” சனா குழந்தைக்கு ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியுமே’ பார்த்துட்டு டவுட்ஸ் தீர்ந்து போகலை.. புரியலைன்னா ஸ்டாப் பண்ணி அந்த இடத்துலேயே டவுட் கேட்டதுனால இரண்டு மணி நேரம் ஆறு மணியானது வேறு கதை.. (கிளாஸ்ல கோடு கிழிக்குறவங்க ரூம்ல டவுட்ல டபிள் ஆய்டுவாங்க..)

 

ஜெனிதா (மனுஷியே இல்லை..) பேய் நேராக வந்து நின்றால் கூட “உனக்கு இந்த காமிநேஷன் காஸ்ட்யூம் சரியில்லை..” என கரெக்ஷன் கூறும் பேர்வழி.. மஞ்சு சொல்லவே வேண்டாம்.. விளைவுகள் தெரிந்து தானே வாங்கி வந்திருப்பாள்.. சம்பளம் கொடுக்காமல் கூடவே இருந்த மொழிபெயர்ப்பாளர்.. நான் (பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக்..) முன்வரிசையில் அமர்ந்திருக்கிறேன்..

 

படத்தில் லைட்டை அணைத்த மறுநொடி பேய் அங்கிருக்கும்.. வெளிச்சத்தில் வருவதற்கு பயம்.. உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் நண்பர்களோடு பார்ப்பது என்பது வித்யாசமான அனுபவம்.. பயமான சீன்களில் கூட கெக்கேபிக்கே என பல்லை காட்டும் மஞ்சு.. கண்களை தட்டாமல் ஒன்று விட்ட பெரியம்மா மகளே பேயாக வந்தது போல பேய்க்கு பரிதாபம் பார்த்த ஜெனிதா.. சிவி போல முதுகில் தொற்றி கொண்ட சனா.. முதுகு ரணமாய் அழுத்தினாலும் படத்தின் மேல் உள்ள ஆர்வத்தில் முழுவதுமாக பார்த்து முடித்து விட்டேன்..

 

“ஏ.. படம் முடிஞ்சிருச்சு..” என திரும்பினால், மிக ஆர்வமாக ஜெனிதா ஸ்னாக்ஸ ஸ்மாஷ் செய்து  கொண்டிருக்க சனா தூங்கியே விட்டாள்.. “அடியே மஞ்சு.. நீ என்ன பண்ணுற??”

“ஹே.. பார்த்த படம் தானே.. போரடிக்குது.. போன்ல சிக்னல் வந்துடுச்சு.. ஸ்டேட்டஸ் பாக்குறேன்.. படம் பார்த்துட்டியா??” என கேட்டவளை தலையணையால் அமிழ்த்தி கொன்று விடலாம் போலிருந்தது.. என்னால் மற்றவர்களுக்கு ஒருநாள் லீவாவது ப்ரீயாக கிடைக்கட்டும்..

 

“ரெஸ்ட் ரூம் போகணும்.. கூட வாடி..” என அழைக்க, “தனியா தானே போவ.. என்ன திடீர்னு..” என அசால்ட்டாக கேட்டாள் மஞ்சு.. “சும்மா இருந்தவளை சொறிஞ்சு விட்டுட்டு ஸ்லோ மோஷன்ல கேக்குறியா?? படத்தை வேற பார்த்துட்டேன்.. லைட்டை ஆப் பண்ணிட்டா பேய் வருமோன்னு பயமா இருக்குது.. பாத்ரூம்ல இருக்கும் போது திடீர்னு கரண்ட் கட் ஆகிடுச்சுன்னா பேய் வந்துடும்..” என பாவமாக கூறிய என்னை பார்த்து கிளுக்கென்று சிரித்த மஞ்சு, “பெரிய பருப்பு மாதிரி இதுக்கு தான் பேச கூடாது.. சரி.. வர்றேன்.. போலாம்..” என கூட்டி சென்றாள்..

 

ஒரு வழியாக சென்ற காரியம் பாதகமில்லாமல் நடந்து முடிக்க, மீண்டும் அறைக்கு வந்து சேர்ந்தோம்.. “இனி என்னை எங்கேயும் கூப்பிடாத.. நான் வர மாட்டேன்..” என சனாவோடு ஐக்கியமாகி கொண்டாள் மஞ்சு.. “சரி குட் நைட்...” என்ற நான் லைட்டை அணைத்து விட்டு திரும்ப, எனக்கு பின்னே ஒரு உருவம்.. தலையின் மயிர்கள் அனைத்தும் அந்த இரவில் நிழலாக தெரிய, கோரபற்கள் தெரிய வாயை பிழந்தது..

 

பயத்தில் “ஆ...” வென்று அலறி விட, எனது சத்தத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற சனா கூட சடன் ப்ரேக் அடித்து திரும்பியிருந்தாள்.. மஞ்சு வேகமாக லைட்டை ஆன் செய்ய, எனக்கோ மூச்சு சீராகாமல் தொண்டை குழியினுள் அடைத்து நின்றது.. வெளிச்சம் அறையினுள் படர, அங்கே நின்றது பேயுமில்லை பிசாசுமில்லை.. ஜெனிதா பூதம்..

 

“நீயா??” என அதிர்ச்சியில் நான் வாயை பிளக்க, பைத்தியக்காரி தூக்க கலக்கத்தில் கூந்தலினை கலைத்து கொட்டாவி விட, எனக்கு காட்டேரியாக தெரிந்திருக்கிறாள்.. “ஆமா.. ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்தேன்.. நீ எதுக்குடி அப்படி கத்துற.. காட்டெருமை கத்துதுன்னு மேட்ரன் மேலே வந்துட போகுது..” என்றவளை தலையணை சமாதியே செய்து விட்டோம்.. பெரியம்மா பொண்ணு பேயில்லை.. பக்கத்துல இருந்ததே ஒரு பேய் தான்..

 

ஹஹஹஹஹ்ஹாஹ்....  

Post a Comment

1 Comments