கதை பிறந்த கதை - 3

 

நானும் என் வாழ்வளித்த வள்ளலும்...


    

இனிய மதிய வணக்கம் நண்பர்களே... எப்போதும் எனது எழுத்துலக அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என நான் எண்ணியதுண்டு. ஆனாலும் நான் படைப்பித்த படைப்புகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு அவற்றை விளக்காமலேயே கடந்து விடுவேன்.

மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்த எனது எழுத்துப் பயணம் இன்று வரை தொடரக் காரணம் பிரதிலிபியும், அதன் வாசகர்களாகிய நீங்களும் தான். அதற்காக என் மனமார்ந்த சிரம் தாழ்ந்த நன்றி!

இப்போது என் வாழ்வளித்த வள்ளல் உடனான எனது சில அனுபவங்கள்:

“வாழ்வளித்த வள்ளல்” – இது என் எழுத்துப் பயணத்தில் ஒரு திருப்புமுனை, ஒரு மைல்கல் என்று கூட சொல்லிக் கொள்ளலாம். ஏனென்றால் அந்தக் கதையில் நான் வாழ்ந்திருக்கிறேன். ஆம், அந்த வைஷாலி நானே தான்.

அனைவரும் மனிதர்களைக் காதலித்துக் கொண்டிருக்கையில், நான் மட்டும் கணிதத்தை முதலில் காதலித்து, அதன் பின்னர் வேதியியலுடன் காதலில் விழுந்து பின்னர் கணிதத்தையே திருமணம் செய்து கொண்டுள்ளேன்.

அனைவருக்கும் காதலில் திளைப்பது இன்பமென்றால் எண்களுடன் எண்ணங்களில் மூழ்குவதில் அதீத இன்பம் எனக்கு. என்னைப் பொருத்தவரை கணிதமென்பதும், அதைக் கையாள்வதென்பதும் ஒரு சுய இன்பம்.

காதல் சார்ந்த இயல்பான கதைகள் தான் எனது கம்போர்ட் ஜோன் என்றாலும் இது போன்றதொரு பேண்டசி கதையொன்றை படைத்துவிட வேண்டும் என்பது எனது வெகு நாளைய தீரா அவா.

அந்த ஆசையை நிறைவேற்றியே தீர வேண்டும் என்பதற்காகவே தான் தைரியமாக இப்படியொரு உருவகம் சார்ந்த கதைக்கருவையும், கதைக்களத்தையும் தேர்ந்தெடுத்தேன். ஆனால் கதையை ஆரம்பித்ததில் இருந்தே பல எதிர்மறை விமர்சனங்கள். கதையின் போக்கில் வைஷு வேதா, ரசாக், உலகநாதன்,.... என பலரை விரும்புவது போல காட்சி அமைந்திருக்கும். இது ஒரு உருவகம் செய்யப்பட்ட கதை என்று பல முறை சொல்லிவிட்டேன். இங்கே பலருக்கு அதன் அர்த்தமே புரியவில்லை போலும். கடும் வார்த்தைகளால் என்னை வதைத்தார்கள். வெளிப்படையாகவே சுடுசொற்களை அள்ளி வீசினார்கள். உண்மையில் எழுத்தாளர் ருத்திதாவாக, கதையின் நாயகி வைஷுவாக, சாதாரண மனுஷியாக மிகவும் காயப்பட்டுப் போனேன்.

மிகவும் நெருங்கிய சிலரே, “இவ்ளோ கான்ட்ரோவர்சி, நெகட்டிவிட்டி இருக்கிறப்போ இந்த கதையை நீ எழுதியே தான் ஆகணுமா? எதுக்கும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை யோசிச்சுக்கோ...” என்றனர். ஆனாலும் சிலர் என்னை நம்பி துணை நின்றனர்.

கதை பதினோராவது அத்தியாயத்தை கடக்கையிலேயே பலர் உள்பெட்டிக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டனர். “அட!! நீ இப்படி தான் சொல்ல வந்தியா?! நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேனா?? ஆனாலும் ரொம்ப வித்தியாசமா எழுதியிருக்கிற ருத்தி... டிபரன்ட் திங்கிங்... ஹாட்ஸ் ஆப்..” என.

அதன் பிறகு முன்னிலும் அதிக வேகத்தோடு கதையை எழுதி, நான் கூற வந்த விஷயங்களை இணைத்து முடித்துவிட்டேன். அதன் பிறகு பல வாழ்த்து மொழிகள் வந்தன. முகநூலில் தெரியாதவர்கள் கூட விமர்சனம் அளித்து, பாராட்டினர். பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. அதை என் எழுத்திற்கு கிடைத்த வெற்றியாக எடுத்துக் கொள்ளவில்லை. மனம் தளராமல் நான் எழுதியமைக்கு கிடைத்து வெற்றியாக தான் எடுத்துக் கொண்டேன்.

ஏனென்றால் அத்தனை சோதனைகளுக்கு மத்தியில் அக்கதையை நான் எழுதியதற்கு காரணம், வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் மனநிலையை எடுத்துக் காட்டவும், வாழ்வில் மனம் தளராமல் முன்னேற வேண்டும் என்னும் உத்வேகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான்.

பி.எஸ்சி கணிதமோ இல்லை வேறு ஏதேனும் ஒரு பிரிவிலோ படித்துக் கொண்டிருக்கும் ஏதேனும் ஒரு மாணவன்/மாணவிக்கு மனதளவில் ஏதேனுமொரு மாற்றத்தைத் அதுவே எனக்குக் கிடைத்த ஆகப் பெரும் வெற்றி என நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது கதை முடியப் போகும் தருவாயில் பலர் உள்பெட்டியில், “அக்கா.. வாழ்வளித்த வள்ளல் படிச்சேன் அக்கா.. மனசளவுல ரொம்ப மாற்றம் வந்துருச்சு... இனிமே பாடங்களை புரிஞ்சு படிப்பேன்... நானும் வைஷு மாதிரி வேதா/ ரசாக்/ உலகநாதனை இறுக்கமா பிடிச்சிப்பேன்...” என கூறவும், அப்போது தான் கதையின் நோக்கத்தை அடைந்து விட்டதாக உளபூரிப்பு எனக்கு.

காதல் கதைகள்/த்ரில்லர் கதைகள் எப்போதுமே வெற்றி பெறும் ரகம். ஆனால் இது போன்ற கதைகள் சேர வேண்டியவர்களிடத்தில் சேர்ந்து, ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களை ஏற்படுத்தினால் அதுவே வெற்றி. அந்த வகையில் இந்தப் படைப்பை வெற்றிப் படைப்புகளுள் ஒன்றாக நான் இணைத்துக் கொள்கிறேன்.

“மறுபடியும்” போட்டிக்காக இந்த கதையை சமர்பித்திருக்கிறேன். வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி, உங்களுக்குள் சலனத்தை ஏற்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி!

 

கதைக்குப் பின்னதான எனது சொந்த அனுபவங்கள். நான் எவ்வாறு பள்ளிக்குச் சென்றேன் என்னும் கதைகளை எல்லாம் ஏற்கனவே உங்களிடம் தெரிவித்திருக்கிறேன். ஆனால் வேதா என்னைச் சேர்ந்த கதை உங்களுக்கு தெரியாது அல்லவா!? மிகத் துல்லியமாக வைஷுவின் வாழ்வில் நடந்ததை போல தான்.

வெண்டைக்காய் புளிக்குழம்பு உண்டுவிட்டுச் சென்ற அன்று மதியம் பத்தாம் வாய்ப்பாடு சரியாக எழுதி ஆசிரியரிடம், “Super” பெற்றதும் ஒரு மூட நம்பிக்கை எனக்குள் வந்து ஒட்டிக் கொண்டது. “வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நன்றாக வந்துவிடும்..” என.

உண்மை பொய் என்பதைத் தாண்டி எனக்குள் ஒரு நம்பிக்கை. என்ன நடந்தாலும் மறுநாள் கணிதத் தேர்வு என்றால் அன்று வெண்டைக்காய் சமைத்திருக்க வேண்டும். இல்லையேல் வீட்டை இரண்டாக்கி விடுவேன். 99 மதிப்பெண் பெற்றிருந்தால் கூட அழுது ஆர்ப்பாட்டம் செய்துவிடுவேன்.

அனைத்தும் ஒன்பதாம் வகுப்பு வரை தான். பொதுத் தேர்வு என்பதால் அனைத்து பாடங்களிலும் கவனம் செலுத்தியாக வேண்டிய சூழல். எனவே வேதாவுக்கு மட்டுமே செலவழித்துக் கொண்டிருந்த நேரம் ஐந்தாக பிரிக்கப்பட்டு சமபங்காக பிரித்துக் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் நடந்தவை தான் அனைவரும் கதையில் படித்து தெரிந்து கொண்டிருப்பீர்களே.

இன்று பல கல்வி நிறுவனங்களில் நடந்து கொண்டிருக்கும் ஒரு கண்ணுக்குப் புலப்படாத அரசியல் – மதிப்பெண் அரசியல். சார்லஸ் டார்வினின் கூற்றுப்படி, “சிறந்த உயிரிங்கள் மட்டுமே இந்த உலகில் வாழத் தகுதியானவை...”. அதே மாதிரி “நல்ல மதிப்பெண் வாங்கும் மாணவர்கள் மட்டுமே கல்லூரி/பள்ளியில் தலைசிறந்தவர்களாக பயிலத் தகுதியானவர்கள்..” என்னும் மனநிலை தான் பலருக்கு.

சமுத்திரக்கனி போன்ற ஆசிரியர்களை திரைப்படங்களில் காட்டுவித்தாலும் நிதர்சனத்தில் அது போன்ற குறிஞ்சிப் பூக்கள் பூப்பதரிது. அப்படியே பூத்தாலும் காலத்தின் ஓட்டத்தில், நிறுவன தலைமையின் அறிவுறுத்தலால் உதிர்ந்து போய் விடுகின்றனர். மதிப்பெண்களை நோக்கிய ஓட்டத்திலேயே தான் நம்மனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம், ஓட அறிவுறுத்தப் படுகிறோம்.

இங்கே என் சொந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். நான் இளங்கலை கணிதவியல் படித்துக் கொண்டிருந்த நேரமது. நான் பயின்றது பெண்கள் மட்டுமே படிக்கும் புகழ்வாய்ந்த கல்லூரி.

சுற்றுவட்டாரத்தில் அந்தக் கல்லூரியில் படித்த பெண் என்றால் மறுவார்த்தை பேசாமல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் அளவிற்கு ஒழுக்கத்திற்கு பெயர்போன கல்லூரி. ஒவ்வொரு வருடமும் குறைந்தது ஐந்து மாணவிகளாவது பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கம் பெற்றுவிடுவர். நூறு பேராவது பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பெற்று விடுவர்.

இன்டெர்னல் தேர்வில் 19/20 மதிப்பெண் பெற்றாலே மூக்கைச் சீந்தும் மாணவிகள் பலர் என் வகுப்பில் உண்டு. என் ஒட்டுமொத்த சதவீத மதிப்பெண்ணில் 90 சதவீதத்திற்கு மேல் பெற்றவர்கள் நாற்பத்தி ஏழு பேர். (வகுப்பின் மொத்த மாணவிகள் எண்ணிக்கையே நாற்பத்து எட்டு தான். அந்த ஒற்றைக் கருப்பு ஆடு யாரென்பது உங்களின் கற்பனைக்கு..)

இத்தனை மதிப்பெண்கள் பெற்று பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்றவர்களில் எத்தனை பேர் கேரியரில் வெற்றி பெற்றார்கள் எனத் தேடினால் மிகப் பெரும் கேள்விக் குறியே மிஞ்சும்..

99 விழுக்காடு மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கம் பெற்ற பேச்சியம்மாள் M.Sc படிப்பின் பாதியிலேயே திருமணம் செய்து கொண்டு இன்று தன் குழந்தைகளுக்கு ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு என பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள், தொண்ணூற்று எட்டு விழுக்காடு மதிப்பெண் பெற்ற மாலதி க்ரூப் நான்கு தேர்வில் வெற்றி பெற்று இளநிலை உதவியாளராக இருக்கிறாள். இன்னுமின்னும் மற்றைய மாணவிகளும் தத்தமது குடும்ப வாழ்வில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் சராசரி மதிப்பெண் பெற்ற ராமலட்சுமி கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறாள். வகுப்பில் அனைவராலும் ஒதுக்கப்பட்டு, வெளியேற்றப்பட்ட நான் ஆராய்ச்சியாளராக இருக்கிறேன், எனக்கு பாடம் கற்றுத் தந்த ஆசிரியர்களை விடவும் பல மடங்கு சம்பாதிக்கிறேன். இங்கே நான் யாரையும் குறைத்துக் கூறவில்லை. ஒப்பீடும் செய்யவில்லை. அதே சமயம் அந்தக் கல்லூரியை சாடவில்லை. நம் அனைவரின் மதிப்பெண் சார்ந்த மனநிலையைச் சாடுகிறேன்.

இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட விரும்புகிறேன். அதே இளங்கலை பயிலும் போது நிகழ்ந்த நிகழ்வு தான். வருடாவருடம் எங்கள் கல்லூரியில் அந்தந்த துறை சார்பாக வினாடிவினா நடப்பது வழக்கம். ஒரு அணியில் ஒரு மூன்றாமாண்டு மாணவி, ஒரு இரண்டாமாண்டு மாணவி, ஒரு முதலாமாண்டு மாணவி இடம்பெறுவர். நான் வழக்கம் போல கடைசி மதிப்பெண் எடுக்கும் படிக்காத மக்கு, கூமுட்டை மாணவி. எனவே நாங்களெல்லாம் இந்த அணி பரிசீலனைக்கு உட்பட மாட்டோம். நன்றாகப் படிக்கிறார்கள் என கருதப்படும் சிலரை அவர்களாகவே தேர்ந்தேடுத்து போட்டியை நடத்தி பரிசு கொடுத்து விடுவார்கள். என் போன்றோர் அந்த நிகழ்வில் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே.

முதலாமாண்டு படிக்கையில் அந்த சம்பவத்திற்கான நாள். ஒரு அணியில் இடம்பெற்ற எனது வகுப்பு மாணவி அன்று விடுப்பு எடுத்துவிட்டார். பேராசிரியர்கள் அனைவரும் அதற்குப் பதிலாக யாரை கலந்துகொள்ள செய்வது என்பது குறித்து பெரிய பட்டிமன்றமே நடத்தி, ஒவ்வொரு மாணவியாக அழைத்து கெஞ்சிக் கொண்டிருந்தனர். எதேச்சையாக நான் அவர்களது அறைக்குச் செல்ல, ஒரு பேச்சுக்காக, “ஏய்.. நீ வர்றியா?” என்னும் ரேஞ்சில் கேட்க, நானும் மறுபேச்சின்றி சம்மதம் தெரிவித்துவிட, ஒப்புக்கு சப்பாணியாக என்னை அமர்த்தி வைத்துவிட அனைவரும் முடிவெடுத்து விட்டனர்.

முதலாமாண்டு பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டாலும் அணியில் இருக்கும் இரண்டாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவிகள் சமாளித்து விடுவர் என்னும் எண்ணத்தில் தான் இவற்றிற்கான சம்மதம் தெரிவித்திருந்தனர். வினாடிவினா மதியம் நிகழ்வதாக முடிவு செய்யப்பட்டிருக்க, அனைவரும் விழுந்து விழுந்து அதி தீவிரமாக அனைவரும் படித்துக் கொண்டிருந்தனர்.

அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பவம் நிகழப் போகும் நேரமும் வந்தது. நாங்கள் B அணி. A அணிக்கு முதல் கேள்வி கேட்கப்பட்டது. இரண்டாமாண்டு பாடத்திட்டத்தில் இருந்து கேள்வி. அவர்களுக்கு தெரியவில்லை. எனவே கேள்வி பாஸ் ஆகி எங்கள் அணிக்கு வந்தது. எங்கள் அணியில் இருந்த மற்ற இரண்டு பேரும் குறிப்பேட்டில் அதை எழுதி, ஏதேதோ கணக்கிட்டுக் கொண்டிருக்க, நானோ பன்னிரெண்டாம் வகுப்பில் என் ஆசான் சொல்லித் தந்த ஒரு சிறிய குறிப்பை இங்கே அப்ளை செய்து இரண்டொரு நொடியில் பதில் கூறிவிட்டேன். “B டீம் 5 பாயின்ட்” என்ற நடுவரின் குரலில் அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர். அனைவரின் காதுகளாலேயுமே நம்ப இயலவில்லை. ஏதோ குருட்டாம்போக்கில் அடித்து விட்டிருப்பாள் என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்க, அடுத்தடுத்த பதில்களைக் கூறி, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றேன் நான். என் பொருட்டு எங்கள் அணியில் இருந்த இருவரும் பரிசு பெற்றனர்.

இதே சம்பவம் மீண்டும் மூன்றாம் ஆண்டில் நிகழ்ந்தது. அன்றும் அதே மாணவி விடுப்பு எடுத்துவிட, என்னை அரைமனதுடன் அணித்தலைவியாக நியமித்தனர். எப்போதும் வினாடி வினா குயின்களாக கருதப்படும் பேச்சியம்மாள், ஜாபியா போன்றோர் போட்டியில் இருந்தும் முதல் பரிசைத் தட்டிச் சென்றது எங்கள் அணி. இதை பெருமைக்காக இங்கே குறிப்பிடவில்லை. ஒரு உதாரணமாக குறிப்பிடுகிறேன்.

மதிப்பெண் என்றுமே நம் அறிவின் அளவை அளவிடும் அளவுகோல் அல்ல. என்றும் அது நமது நினைவுத் திறனை எடுத்துக் காட்டும் கருவி அவ்வளவு தான். பலமுறை இதுகுறித்து நான் பேசியிருக்கிறேன். திரைப்படங்களிலும் பேசியிருக்கிறார்கள். ஆனாலும் நாம் மதிப்பு கொடுப்பது என்னவோ மதிப்பெண்களுக்கு தான்.

அதற்காக படிக்க வேண்டாம், மதிப்பெண் குறைவாக எடுத்தாலும் பிரச்சனை இல்லை என்பதாக நான் கூற விழையவில்லை. பரீட்சைக்கே போகாமல் இருந்துவிட்டு பிள்ளையாருக்கு நூற்றி எட்டு தேங்காய் உடைத்தால் எவ்வாறு தேர்ச்சி பெற முடியும்?!

இங்கே நான் கூற வருவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். படியுங்கள்.. நன்றாகப் படியுங்கள்... ஆனால் கற்றுக் கொள்ளுங்கள்... எதற்காக அதை செய்கிறோம் என்பதை உணர்ந்து செய்யுங்கள். வெறும் மதிப்பெண்களுக்காக மட்டும் எந்தப் பாடத்தையும் மனனம் செய்யாதீர்கள்.

இத்தனை சோதனைகளிலும் என் உடன் இருந்தது வேதா @ வேதாரித் கம்பிரும் அவன் மீது நான் கொண்ட காதலும் தான்.

(வேதா – வேதிக் கணிதம்

அரித் – அரித்மெட்டிக்

கம் – கம்பியூடேஷன்)

நீங்களும் காதலியுங்கள்.. ரசாக்கையோ, இயற்குமரனையோ, உலகநாதனையோ யாரையோ ஒருவரை காதலியுங்கள்... உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். அவன் உங்களுக்கு வாழ்வளித்த வள்ளலாக மாறுவான். உங்களை வாழ வைப்பான். (ரசாக் @ இரசாயனவியல் = வேதியியல், இய்ற்குமரன் – இயற்பியல், உலகநாதன் – உயிரியல்)

கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சைப் புகினும் கற்கை நன்றே!

Reactions

Post a Comment

4 Comments

  1. கதை பிறந்த கதை இல்ல சிஸ்டர் எல்லாமே நிஜத்தில் நடந்தது தானே சிஸ்டர். ரொம்ப யதார்த்தமான எழுத்து

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா.. கீப் சப்போர்ட்டிங்..

      Delete
  2. True words akka. Nanum marks importance kuduka matten ana veetula quiz la 3/5 eduthalai atha 3 yrs solli kattuvanga. .+2 la bio-maths thn clg BCA computer knowledge illa ma distinction pass pannen athuvum concept mattum purinji kittu. 3 month konjam kastama irunthathu thn i love subjects.

    ReplyDelete
    Replies
    1. படிப்புன்னு இல்லைடா எதையுமே புரிஞ்சு செய்தா அதோட நிலைப்புத் தன்மை அதிகம் டியர்... நீங்க உங்க வாழ்க்கையில இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகள்... நன்றி மா..

      Delete