தீருமோ
என் உதிரதாகம்? -2
கெளரியின் வீட்டை வந்தடைந்த பாவ்யா ஆச்சரியத்தில் கண்களை
அகல விரித்து, அப்படியே
நின்று போனாள்.. வாசலுக்கும் சாலைக்கும் நடுவே ஒரு அடுக்குமாடிக்குடியிருப்பு
அளவிற்கு காலிமனை கிடக்க, நடுவே நடைபாதையும் இருபுறங்களில் அழகு செடிகள் துவங்கி அவசியமான மரங்களும்
நட்டிருந்தனர்..
நகரத்தில் பத்துக்கு பதிமூன்று அளவிலான
அடுக்குமாடிக்குடியிருப்பு வாசிக்கு இது அதிசயமாகவே தெரிந்தது.. ஒரே இடத்தில்
கால்பதித்து நின்ற பாவ்யாவின் பின்னே அகோர பற்களும் இரத்தவரிகள் இடப்பட்டிருந்த
கண்களும் தெளிவாய் தெரிய; மற்ற பகுதிகள் கருப்புநிற புகையாய் கொண்ட உருவம் காற்றில் மிதந்து
கொண்டிருந்தது. சில்லிட்ட தனது முதுகுத்தண்டையே அறியாதவள்,
பேருந்து நிலையத்தில் தூணில் முட்டிக் கொண்ட போது,
கையில் கட்டியிருந்த விசேஷ கயிறு அவிழ்ந்ததைக்
கவனித்திருக்க வாய்ப்பில்லை.
அவர்கள் வந்ததை அறிந்து வெளிவந்த கௌரியின் தாய் மாலா,
"வாடி..." எனத் தனது மகளைச்
சாதாரணமாய் அழைத்தவர், பக்கத்தில் நின்றவளைப் பார்த்து "வாம்மா..." என முகம் கொள்ளா
புன்னகையோடு வரவேற்றார். இதைக் கண்ட கௌரி ஒற்றை புருவம் உயர்த்தி,
மாலாவை முறைத்துப் பார்க்க; “நீ இங்கே தானடி இருக்கிற.. மாலை,
வரவேற்பு எல்லாம் வேண்டாம் தானே..” என கிளுக்கிச்
சிரித்தார் அவர்.
“சரி.. சரி.. மன்னிச்சிட்டேன்.. உள்ளே போகலாம்.. கால்
வலிக்குது..” என கௌரி கூறவும், இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றார் மாலா. பாகுபலியின்
பெரியப்பாவின் பரம்பரை வாரிசு என்று பெருமிதம் பேசி கொண்ட பாவ்யா;
கொண்டு வந்திருந்த பைகளைத் தானே உள்ளே கொண்டு செல்ல முயல,
நிலைக்கதவில் முட்டிக் கொண்டு உள்ளே வர மறுத்தது.
“பாவ்யா.. ஒரு பேக்கை கொடு.. நான் எடுத்துட்டு வர்றேன்...”
என்ற மாலாவையும் தடுத்து விட்டு, மீண்டுமாக அவள் முயற்சிக்க, அதுவோ விடாப்பிடியாக வீட்டிற்குள் வரத் தயங்கியது. “ஐயா
ராசா... என்னோட செல்ல பேக் தானே... என் ப்ரென்ட் வீட்டிலே வந்து மானத்தை வாங்காதே
மேன்.. என் செல்லம்ல... உன்மேல இருக்கிற அலாதி பாசத்திலே தானே நானே எடுத்துட்டு
வர்றேன்னு சொன்னேன்... சமர்த்தா உள்ளே வந்துடுங்க பார்ப்போம்..." என
மானசீகமாக தனது பைகளுடன் கெஞ்சி, கொஞ்சி, வீட்டிற்குள் இழுக்க; ஒருவழியாக நிலைக்கதவை தாஜா செய்து உள்ளே வந்துவிட்டது..
அந்த தடுமாற்றத்தில் பின்னால் பல்டியே அடித்து விட்டாள் பாவ்யா.
பேருந்து பயணத்தில் முன் ஸிப்பில் இருந்த ஹெட்போனை எடுத்து
விட்டு மூட மறந்திருக்க, தற்பொழுது நடந்த போராட்டத்தில், அவளது அனுமதியின்றி உள்ளே திணிக்கப்பட்டிருந்த தகடு
போன்றதொரு பொருள் அந்த சிறு இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு வெளியே
விழுந்திருந்தது.. விழுந்த வேகத்தில் இரண்டு மூன்று திருப்பங்களைச் சந்தித்து
நிராதரவாகத் தரையில் விழ, மறுநொடியே பெருங்காற்று ஒன்று தோன்றி, அந்த தகட்டை வீட்டிற்கு வெளியே நடப்பட்டிருந்த நித்திய
கல்யாணி செடியின் அருகே சென்று விழுந்தது. விழுந்ததைக் கைப்பற்றுவதற்காகவே
காத்திருந்தது போல, சடிதியாக அதைத் தன் வாயில் ஏந்திக் கொண்டு சென்றது பாம்பொன்று.
தடுமாறி விழுந்ததில் பாவ்யாவின் முடிக்கற்றைகள் முகத்தில்
விரவிக் கிடக்க, தனது
பிஞ்சு விரல்கள் கொண்டு ஒதுக்குகையில் தான் தன்னை கடந்து சென்ற கருப்பு உருவத்தினை
கடைக்கண் பார்வையில் அவதானித்தாள். தன்னை உரசிச் சென்றதை உணர்ந்தவள்;
வெடுக்கென அத்திசை நோக்கித் திரும்ப எத்தனிக்கையில்,
“வந்ததுமே கீழே விழுந்ததும் இல்லாம
அப்படியே உக்கார்ந்துட்டு இருக்கிற?? எழுந்து உள்ளே வர்ற ஐடியா இல்லையா??"
என அவள் தோளைத் தொட்டாள் கௌரி.
சுதாரித்து தன்னிலைக்குத் திரும்பியவள்;
"ஹெல்ப் பண்ணு..." என ஒற்றைக்
கையை அவளை நோக்கி உயர்த்த, பாவ்யா எழுந்து கொள்வதற்கு உதவி செய்தாள் கெளரி.
எழுந்து கொண்ட பாவ்யா; இடையில் கரம் பதித்து, மூச்சு வாங்கிக்கொண்டே, "அந்த பக்கம் ஏதோ க்ராஸ் பண்ணின மாதிரி இருந்ததே..."
என்க,
"க்ராஸ் பண்ணின மாதிரி இருந்ததா??!!"
எனக் கௌரியும் அவள் சுட்டிக்காட்டிய திசையை நோக்கி கண்களைச்
சுழலவிட்டாள்.
சில நொடிகள் அத்திசையை நோட்டம்விட்ட கெளரி;
"அங்கே யாரு இருக்கிறாங்க?!
யாரும் இல்ல.. நீ உள்ளே போய் ரெஸ்ட் எடு..." என
பாவ்யாவை உள்ளே அனுப்பிவிட்டு, தன் தாயும் உள்ளே சென்றுவிட்டதை உறுதிசெய்து கொண்டவளாக;
குறிப்பிட்ட திசையில் நின்றுகொண்டிருந்த அந்த உருவத்தினை
நோக்கி கட்டைவிரலை உயர்த்தி சைகை காட்டிவிட்டு உள்ளே சென்றாள்.
பாவ்யா, கௌரி இருவரும் மும்பையில் புகழ் பெற்ற ஆடையலங்கார
கல்லூரி ஒன்றில் பயின்று வருகின்றனர்.. உயிர்த் தோழிகள் இருவரும் படிப்பின் இறுதி
வருடத்தை அடைந்து விட்டதனால் கெளரியின் ஆசைக்கு இணங்கி, கௌரியின் வீட்டிற்கு வருகைபுரிந்திருந்தாள்
பாவ்யா. இவ்வாறான அழகிய நட்பிற்குத் திருஷ்டி பொட்டு வைத்தது போல ஒரே ஒரு சிறு குறைவும்
உண்டு.. அது கெளரியின் தாழ்வு மனப்பான்மை.. தன்னை மீறி பாவ்யாவிடம் யாராவது கொஞ்சி
பேசினால் கோபம் கொள்வாள்.. தன்னிடம் எவரும் பேசவில்லை என்ற பொறாமையா??
இல்லை பாவ்யா தன்னை விட்டு தூரம் சென்று விடுவாளோ என்ற பயமா??
என்பதற்கான முடிவு ஆராய்ச்சியில்கூட கிட்டாதது.
கல்லூரியிலும் அடிக்கடி ஏதாவது ஒரு மாணவன் பாவ்யாவிடம் காதலைத்
தெரிவிப்பதும், அதன்பொருட்டு கெளரி அவளிடம் இரண்டு நாட்களுக்கு பேசாமல் செல்வதும்
வாடிக்கையான ஒன்று.. ஆனாலும் பாவ்யா கௌரியை விட்டு விடுவதும் இல்லை..
விட்டுக்கொடுப்பதுமில்லை.. அவளைப் பொருத்தவரை முதலிடம் என்றும் கௌரிக்கு தான்.
இந்தியாவின் ஒரு மத்தியிலிருந்து மற்றொரு பெருநகரத்திற்கு
அனுப்புவதில் பாவ்யாவின் பெற்றோர்களுக்குமே உடன்பாடு இல்லை.. பாவ்யா கெளரிக்காக
கெஞ்சிக் கேட்டதினாலும் அவளின் குடும்ப பின்னணிகளை விசாரித்து விட்டதினாலும்
அனுப்பி வைத்துள்ளனர்..
தந்தையில்லாத வீடு என்பதாலும் தாயின் மீது கொண்ட
நம்பிக்கையாலுமே பாவ்யா இங்கு அனுப்பப்பட்டிருக்கிறாள் என்ற உண்மை அவளுக்குமே
தெரியும்.. ஆனாலும் கல்லூரியில் கண்ட அந்த கள்வனை இந்த பயணத்திலாவது
கண்டுபிடித்திட வேண்டும் என்ற உறுதியில் நிலைத்து நிற்கிறாள்..
முன்னால் ஓடிக் கொண்டிருந்த தொலைக்காட்சியில் மனம்
லயிக்காமல் போகவே, சுற்றும் முற்றும் விழிகளைச் சுழல விட்டு வீட்டின் ஒவ்வொரு அங்கத்தினையும்
அளவெடுத்து கொண்டிருந்தாள் பாவ்யா..அப்போது அவளது கழுத்தின் அருகே ஏதோ ஊர்வது
போலத் தோன்ற, கைவைத்துப்
பார்த்தால் எதுவும் இல்லை. கால்களில் பூரான் ஊர்வது போலத் தோன்ற, கீழே குனிந்து
பார்த்தவளுக்கு அதிர்ச்சி!! சதையும் தோலும் இன்றி எலும்பு மட்டுமே கொண்ட கைகள் சோபாவின்
உள்ளே நகர்ந்தது.
தேநீர் தயாரிப்பதற்காக மாலா சமையலறைக்குச் சென்றிருக்க, கௌரியும் ஏதோ ஒரு வேலைக்காக வேறு அறைக்குச்
சென்றிருந்தாள். குரலை உயர்த்தி இருவரில் யாரையாவது துணைக்கு அழைக்கலாம் என
எத்தனித்தவளது நாவானது பயத்தில் மேலண்ணத்தோடு ஒட்டிக் கொண்டது.
பயத்தில் உறைந்து இருந்தவளது கேசத்தில் விழுந்த ஈரம் சிரசு
முழுவதும் ஊர்ந்து, அவளுக்கு உணர்ச்சியைத் தோற்றுவிக்க, பதட்டத்தில் தொட்டுப் பார்த்தாள் பாவ்யா.
அதில் குருதி பிசுபிசுக்க, உச்சக்கட்ட அதிர்ச்சியில் படபடவென துடிக்கும் கண்களோடும் இதயத்தோடும்
மேலே நிமிர்ந்து பார்க்க, "வே........" என அலறலோடு மேலே இருந்து ஒரு உருவம் தலைகீழாக
பாய்ந்து வந்தது.
"ஆ....ஆ...." என அவள் அலறத் தொடங்க, அவளது அலறலைக் கேட்டு வெளியே ஓடி வந்த மாலா;
சோபாவின் ஒரு ஓரத்தில் உடலைக் குறுக்கிக்கொண்டு, முகத்தை
மூடியவாறே நடுங்கிக்கொண்டு அமர்ந்திருந்த பாவ்யாவைக் கண்ணுற்றார்.
மாலா கண்களைப் பக்கவாட்டில் நகர்த்த, அவளருகே இரண்டு
குட்டிச் சாத்தான்கள் ஆபத்தான பற்களோடு சிரித்துக் கொண்டிருந்ததைக் கண்டார்.
இரண்டு சாத்தான்களையும் இரண்டு சாத்து சாத்தியவர்; பாவ்யாவின் கைகளைத் தொட, அதில் வீறிட்டுக் கத்தியவளை சமாதானம்
செய்யும் பொருட்டு, “நான் தான்...” என்றார்.
சற்றே பதற்றத்துடன், “மா...” என அவள் தட்டுத் தடுமாறி கண்களைத்
திறக்க, மாலா பக்கவாட்டை நோக்குமாறு சமிக்ஞை காட்டினார்.
அவர் சுட்டிய திசையைப் பார்த்ததும், பயம் நீங்கி கைகளையும்
கால்களையும் இயல்பாய் தரையில் பதித்தவள்; அருகிலிருந்த கௌரியைச் செல்லமாய் அடித்துவிட்டு, கட்டிக்கொண்டாள்.
"பயந்துட்டியா??" எனக் கௌரி கேட்க, "ம்ம்..." என மெலிதாக தலையசைத்தாள். "பின்ன.. இந்த
மானா மதுரை மகேஷ் பிளானாச்சே..." என சட்டை காலரைத் தூக்கி விட்டுக் கொண்டவனை
யாரென பாவ்யா உறுத்து விழிக்க,
"என் தம்பி... மகேஷ்.. மேக்கப்
ஆர்ட்டிஸ்ட்.. சொல்லியிருக்கிறேனே" என விளக்கமளித்தாள் கௌரி.
"ஹாய்.. ஹலோ... வெல்கம் டூ மகீஸ் ஹோம்.." எனக்
கைகுலுக்க, புன்னகையுடனே, “பாவ்யா.. பாவ்யா சௌத்திரி..” என்றாள்.. அறிமுகமாகிய சில மணி நேரங்களிலேயே
இருவரும் நல்ல நண்பர்களாயினர்.. இருவரின் துறையும் சங்கமிக்கும் இடம் ஒன்று
என்பதால் அனுபவங்கள், அன்றாட வேலைகள் என்று அனைத்தையும் பகிர்ந்து கொள்ள துவங்கினர்..
உரையாடல் மிக சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் பொழுது,
சடுதியாக பக்கவாட்டில் ஏதோ அசைவது போல கண்களில் புலப்பட
சற்றும் தாமதியாமல் திரும்பிப் பார்த்தாள் பாவ்யா. “மகியோட பிரெண்ட் எவனோ உள்ள
நுழைஞ்சிருக்கிறான் போல..” என நினைத்து கொண்டவள்; அதன் மேல் பதித்த கவனத்தை
விலக்கவில்லை.. அங்கே வெள்ளை முத்து பற்களில் இரத்தம் வழிந்தோட சிவப்பேறிய
கண்களில் வெறி விறைத்திருக்க, அவள் வெறித்து பார்த்துக்கொண்டிருக்க,
திடீரென்று அந்த கருப்பு புகை காற்றாக மாறி கலைந்தது.
"பாவ்ஸ்.. என்ன?? அங்கேயே பேயறஞ்ச மாதிரி பாக்குற??" என மகி
கேட்டும் பதிலளிக்காமல் அத்திசையை வெறித்து
கொண்டிருந்தவளை உலுக்க, "ஹான்.. ஒன்னும் இல்ல..
சும்மா பார்த்தேன்..." என சமாளித்து வைத்தாள். தான் கண்களால் கண்ட காட்சியை அவளாலேயே
நம்ப முடியாமல் இருக்க எப்படி வெளியே கூறுவாள்??
"டேய் நீ
கொஞ்ச நேரம் சும்மா இரு.. ட்ராவல் பண்ணி வந்திருக்கிறா.. அவளுக்கு டயர்டா
இருக்கும்...” என மகியை அடக்கிய மாலா; “நீ தூங்கி ரெஸ்ட் எடும்மா.." என ஒரு அறையை காட்ட, வாசலில் நின்ற கருப்பு உருவம் கலைந்து உள்ளே சென்றது. கருமைநிற அந்தப் புகை
அறைக்குள் செல்வதை கண்ணாடி
காட்டிக்கொடுத்தாலும் அதை அறியாதவளோ "சரி..." என ஆமோதித்து விட்டு தனது பைகளுடன்
அந்த அறைக்குள் நுழைந்தாள்.
கதவினை உள்பக்கமாக அடைத்து விட்டு, தான் கொண்டுவந்திருந்த
பைகளை மேசையின் மீது வைத்தவள்; சோர்வில் அங்கிருந்த படுக்கையில் ஆயாசமாய் விழுந்து,
பயணக்களைப்பின் காரணமாக கண்ணயர்ந்தாள். அங்கே காற்றாடியின் அருகே அந்தரத்தில்
கருப்புநிறப் புகை இரத்த கண்களுடைய காத்திருந்தது.
அவள் கண்மூடி உறக்கத்திற்கு சென்றிருக்க, அவளை மெல்ல
நெருங்கியது அவ்வுருவம். அவளது முகத்திற்கு நான்கு இன்ச் இடைவெளியில் கோரப்பற்களை
நீட்டிக் கொண்டு நிற்கையில் பாவ்யாவின்
மூக்கில் ஒருவிதமான நாற்றம் ஏறியது. திடீரென குடலைப் புரட்டும் நாற்றத்தை முகரவும், வயிற்றை பிடித்துக்கொண்டு சுருங்கி
படுத்தாள். தன்னை யாரோ கவனித்து கொண்டிருப்பதாக தோன்றி, பாதி தூக்கத்தில் திடீரென கண்களைத்
திறந்து பார்த்தாள்.
அங்கே எதுவும் இல்லாமல் இருக்கவே,
மீண்டும் கண்ணை மூடிக்கொண்டு தூக்கத்தைத் தொடர்ந்தாள். அந்த
கருநிற புகைபோன்ற உருவம் அவளது கழுத்தை நோக்கி நீண்ட நகங்களை தாங்கிய கரங்களைக்
கொண்டு செல்ல, மின்னல்
அடித்தது போன்று உணர்வில் தூக்கி எறியப்பட்டது. விழுந்த மறுநொடியே உதறிக்கொண்டு
எழுந்து மீண்டும் அவளது கழுத்தை நெரிக்க முயல, ஒவ்வொருமுறையும் மின்னல் அடித்தது போல் தூக்கி
எறியப்பட்டது.
பாவ்யாவோ இவை எதையும் அறியாமல் மயிலிறகில் துயில்வது போல
எவ்வித தொந்தரவுமின்றி துயின்று கொண்டிருந்தாள். ஆழ்ந்த தூக்கத்தில் புரண்டு
படுத்தவளின் ஒரு சங்கிலி வெளியே விழுந்தது. அதன் இறுதியில் ஒரு பட்டையான
சுட்டியில் வரையப்பட்டிருந்த எழுத்துக்களைப் பார்த்ததும் அந்த கருநிற புகைபோன்ற
உருவம் உக்கிரத்தில் அங்கிருந்து வெகுவிரைவாக நகர்ந்தது.
காவல் நிலையத்தில்,
"சார் இந்த சம்யுக்தா கேஸ் பைலை எங்கே வைக்கிறது??"
என கேட்டவாறே கான்ஸ்டபிள் உள்ளே வர,
"அந்த கேஸ் இனி அவ்வளவுதானே..
கொண்டுபோய் குளோஸ்டு கேஸ் செல்ஃபில் வச்சுடுங்க.." என்றான் விஷ்ணு.
அப்பொழுது அவனின்
அலைபேசி சிணுங்க, திரையைப் பார்த்தவனின் முகத்தில் தன்னிச்சையாக புன்னகை விரிந்தது.
அழைப்பை ஏற்று, "ஹலோ தங்கம்..." என்க,
"...."
"நம்ம ஸ்டேஷன்ல தான் இருக்கிறேன்.."
"...."
" எங்க???"
"...."
"அப்பவே பஸ் ஸ்டாண்டுக்கு வந்துட்டியா?!"
"...."
"சரி..கோபப்படாதே தங்கம்.. நீ வெயிட் பண்ணிட்டு
இரு..."
"...."
"இப்ப பத்தே நிமிஷத்தில் அங்கே இருப்பேன் தங்கம்...
பிராமிஸ்.." என இணைப்பைத் துண்டித்துவிட்டு, வண்டியின் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
வெளியே வந்தவன்; "ஏட்டையா... தங்கம் ஊர்ல இருந்து வந்திருக்கிறாங்க... நான்
போய் கூட்டிவிட்டு வந்திடறேன்.. அதுவரை ஸ்டேஷன்லயே இருங்க.. சேவல் சண்டை
பார்க்குறேன்னு வெளியே போய்டாதீங்க..." என அறிவுரை கூறி, பொறுப்பை ஒப்படைத்து
விட்டு வெளியேறினான்.
பேருந்து நிலையம்..
ஐந்து நிமிடங்களாகக் காத்திருந்த கோபம் மொத்தத்தையும் கணவன்
விஷ்ணுவின் மீது இறக்கி விட்ட நிம்மதியில் தண்ணீரைக் குடித்தாள் தங்கம்.. அதன்
பின் இருவருமாக வண்டியில் வீடு திரும்ப, “என் நிலைமை தெரிந்தும் காரை எடுத்துட்டு வராம பைக்கை
எடுத்துட்டு வந்துருக்குற..” என ஐந்து மாத கர்ப்பிணி தங்கத்திடம் இன்னும் சலுகையாக
திட்டுகளையும் அடிகளையும் வாங்கிக் கொண்டான் விஷ்ணு.
நினைத்ததை நடத்த முடியாத கோபத்தில் காட்டிற்குள் நுழைந்த
அந்த எரிந்த உருவம், கோபத்தை தணிக்க வழி தேடியது.. அன்று சம்யுக்தாவின் மரணத்தின் போது காப்பாற்ற
வந்த மாந்திரீகனின் உடலும் டாட்டா சுமோவும் அந்த காட்டின் ஓரத்தில் குப்பை என
போடப்பட்டிருக்க, வேகமாக மாந்திரீகனின் உடலுக்குள் புகுந்து தலையில்லா முண்டமாய் எழுந்து
நின்றது.
அந்த உடலோடு சுமோவினுள் புகுந்து கண்ணிமைக்கும் நேரத்தில்
காரை துண்டு துண்டாகச் சிதறடிக்க,
ஒவ்வொரு பாகமும் சில கிலோமீட்டர் தொலைவில் சென்றுவிழுந்தது. அதிலும் வெறி தீராமல்
அங்கிருந்த மரங்கள் இரண்டாய் முறிந்துகொள்ள, இன்னும் வெறி தீராமல் செல்ல,
புகுந்திருந்த மாந்திரீகனின் உடற்கட்டை உருக்குலைப்பாய்
உடைத்தெறிந்தது. நடக்காததை எண்ணி மேலும் கோபத்தில் அந்த காட்டின் நாலாபுறத்திலும் "ஹும்... ஹ்ஹூம்...
ஹ்ஹ்ஹும்..." என்ற மூச்சிரைப்போடு குறுக்கும் நெடுக்குமாய் நடை போட்டது.
ஒரு சிறிய துண்டு அதாவது வாகனத்தின் கண்ணாடி பகுதியானது
காட்டை விட்டு வெளியே தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்த,
விஷ்ணுவின் கன்னத்தைக் கிழித்து கீழே விழுந்தது. எதிர்பாராத
அந்த தாக்குதலில் தடுமாறினாலும் பைக்கை கீழே விழாமல் உறுதியாகப் பிடித்து பிரேக்
போட்டு நின்றான்.
பின்னால் அமர்ந்திருந்தவள் கீழே இறங்க எத்தனிக்க, "தங்கம்... நீ இறங்க வேண்டாம்..." என்றபடி, வண்டியின்
பக்கவாட்டு கண்ணாடிவழி தன் கன்னத்தில் ஏற்பட்ட காயத்தைப் பார்த்தான். கண்ணாடி மேல்
தோலினை மட்டும் கீறிச் சென்றிருக்க, சிறிதளவு குருதி கசிந்தது. தனது கால்சராய்
பையிலிருந்து பாக்கெட்டில் இருந்து கைக்குட்டையை எடுத்து துடைத்து விட்டு மீண்டும்
பைக்கை உயிர்ப்பிக்க முற்பட்டான்.
"என்னங்க.. கொஞ்சம் சீக்கிரமா கிளம்பலாமா??
இந்த இடத்தை பார்த்தாலே பயமா இருக்குது.." என அவள் நடுங்கும்
விரல்களை அவனது தோள்களில் பதிக்க, அந்நேரத்தில் அலைபேசி அலறியது.. “ஒரு நிமிஷம்..”
என்றவன் அழைப்பை ஏற்க எத்தனிக்க,
குருதிதோய்ந்த அந்த கைக்குட்டை தவறி கீழே விழுந்தது..
அலைபேசியை பின்னால் நீட்டி, "உன் அண்ணன் தான்.. பேசு..." என்று விட்டு வண்டியை
நகர்த்த,
பின்னால் அமர்ந்து அலைபேசியில் அங்கே நடப்பவற்றை தன்
சகோதரனுக்கு நேரலையில் விளக்கிக் கொண்டிருந்தாள் தங்கம்.
கீழே விழுந்த கைக்குட்டை மெல்லக் காற்றில் உருண்டு,
காட்டிற்குள் சென்றது. உள்ளே ஆக்ரோஷமாய் அலறிக்கொண்டிருந்த உருவம் தன் ஆட்சி
பிரதேசத்திற்குள் நுழைந்த கைக்குட்டையினை பார்த்ததும் தனது வேட்கையினை தணித்தது.
அலுப்பு தீர உறங்கி முடித்த பாவ்யா; சோம்பல் முறித்தபடியே
அந்த அறையின் கதவைத் திறக்க முற்பட, கூடத்தில் இருந்த சோபாவில் அமர்ந்து மாலாவிடம்
உரையாடிக்கொண்டிருந்தான் புதிய ஆடவன் ஒருவன். பாவ்யாவிற்கு அவனது பின்பக்கம் மட்டுமே
புலப்பட, அது யாராக இருக்கும் என அறியும் ஆர்வத்தில்
பக்கவாட்டில் அங்குமிங்கும் நகர்ந்து அவனை அவதானிக்க முயன்றாள்.
அவனோ இந்த இயல்பான உணர்வுகளையும் செய்கைகளையும் பிரதிபலித்த
எதிர் கண்ணாடியைப் பார்த்து அதரத்தில் புன்னகையைப் பூசிக் கொண்டான்.. அப்போது காபி
தட்டோடு வெளியே வந்த கௌரி, "ஹே... பாவ்யா..." என்று விடவும் திகைத்து விட்டாள் பாவ்யா.
அந்த சமயத்திற்காகக் காத்திருந்தவனோ புதிதாகப் பார்ப்பது
போன்ற போலியான உணர்வுகளோடு பின்னால் திரும்ப, அவன் மகியின் நண்பனாக இருக்கக் கூடும் என்று முடிவிற்கு
வந்த பாவ்யா, "ஹலோ
தம்பி..." என முறுவலித்தாள்.. அந்த கண்ணாடி நீங்கிய பின்னர அவனைத் தெளிவாக
உணர,
கண்டு ஸ்தம்பித்தாள்.
“இது.. அவனா?? அவனே தானா??” என மனதிற்குள்ளே எழுந்த கேள்வியை மட்டுப்படுத்தும் நோக்கில்
அசையாமல் நிற்க, "ஹா... ஹாஹா...." என சிரித்துக் கொண்ட கௌரி அவனருகே
சென்று அமர்ந்தாள்.. அவளைப் பார்த்து இருவருமே சிரிக்க,
பாவ்யாவிற்கு புரியவில்லை ஏன் சிரிக்கிறார்கள் என்று.
திருதிருவென விழித்தவளைப் பார்த்து,
"இது என்னோட தம்பி இல்லை.. என்னோட கசின்
பரதர்... தீரன்...” என கௌரி அறிமுகம் செய்ய, "ஓ.. ஓகே ஓகே... ஹாய் கசின் பிரதர்..." என அசடாய்
முறுவலித்து விட்டு, அறைக்குள் புகுந்து கொண்டாள் பாவ்யா. தீரனின் கண்களோ அவள்
சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தது.
தீருமோ?? 🌨️🕯️🕯️
முந்தைய அத்தியாயம் அடுத்த அத்தியாயம்
5 Comments
Semma ka interesting ah iruku. Paavya va illa divya ya va ka remdu name um mention panni irukinga.
ReplyDeleteAdhu typo error check panrappo thappaagiduchu pola maa.. correct pannidaren.. thank you so much maa... keep supporting..
Deleteமிக்க நன்றி அக்கா.. கீப் சப்போர்ட்டிங்..
ReplyDeleteவாவ்.. சூப்பர். கதை கோயிங் கிரேட்.
ReplyDeleteமிக்க நன்றி டியர்... சீக்கிரமா அடுத்த எபிசொட் போஸ்ட் பண்றேன்...
Delete