Header Ads Widget

Welcome You all to Ruthitha's KKR family

Kanavu Kadhali's World

To share your valuable comments : kanavukadhali@gmail.com

தீருமோ என் உதிரதாகம்?? - 1

தீருமோ என் உதிரதாகம்?? – 1

            அந்த தெருவின் ஓரத்தில் சிறிய வரப்பாக பிரித்து விடப்பட்டு ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் கால்கள் பட்டதும் "சலக்" என்ற சத்தம் கேட்டது. அந்த சத்தத்தினை செவியில் வாங்கி, அதனுடைய பிறப்பிடம் அறிந்து வலது காலை பின்னால் உயர்த்தி பார்க்க, ஹைஹீல்ஸ் போட்டிருந்ததால் சகதி அவளது லெக்கின்ஸிற்கு ஏறவில்லை... அன்றாட தேவைக்காகத் தண்ணீரை குடங்களில் நிரப்பிக் கொண்டிருந்த மக்களுக்கு நடுவே நுழைந்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வாங்கி செருப்பினை சுத்தமாகக் கழுவிக் கொண்டாள்..

"யே.... சம்மு.. ஒரு வாய் சாப்பிட்டுட்டு போடீ..." என்ற தாய் தெய்வானையின் அழைப்பைப் பெரிதாய் எடுத்துக்கொள்ளாமல், "மா.. கல்லூரி கேன்டீன்ல சாப்பிட்டுக்கிறேன்... இப்ப நேரம் ஆச்சு..." எனக் கைக்கடிகாரத்தைக் காட்டி விட்டு, இதய வடிவம் இடப்பட்டிருக்கும் ஜல்ஜல்லென்ற மணிகள் தொங்கவிடப்பட்டிருந்த சாவியைத் தனது தோள் பையில் இருந்து எடுத்து, செருகி வண்டியை உயிர்ப்பித்தாள்.

சாப்பாட்டுத் தட்டோடு வெளியே வந்த தெய்வானை நிலைக்கதவில் பாதம் இடித்து கொள்ளவும், சற்றே எச்சரிக்கையுடன், "சம்மு... தண்ணீய குடிச்சிட்டு போ..." எனக் கத்த, அவளோ அது காதில் விழாத தூரத்திற்குச் சென்றிருந்தாள்.

பட்டாம்பூச்சியாய் சாலையில் பறந்தவள், கல்லூரியின் வாசலில் ஸ்கூட்டியை நிறுத்தி தனது அடையாள அட்டையை செக்கியூரிட்டியிடம் காண்பித்து விட்டு உள்ளே செல்ல, எதிரில் வந்தாள் அவளது தோழி செண்பா.

"என்ன... படிச்சிட்டியா?? இன்னைக்கு இன்பெரன்ஸ் எக்ஸாம்டி... மத்த சேப்டர்ஸ் எல்லாம் சமாளிச்சிடலாம்... பாய்ண்ட் ஆஃப் எஸ்டிமேஷன் தான் கொஞ்சம் பயமா இருக்குது..." எனப் பயத்தால் சிடுசிடுக்க, "சில் பேபி...எதுக்கு டென்ஷன்.. சில் மாமே..." என ஒற்றைப் பேனாவைக் கையில் சுழற்றியவாறே கால்கள் தரையில் படாமல் தேர்வறைக்குள் நுழைந்தாள் அவள்.

 

தேர்வு கண்காணிப்பாளர் வந்து அனைவருக்கும் கேள்வித்தாள்களைக் கொடுக்க, அப்போதும் செண்பா திரும்பி அவளைப் பார்க்க, சிறிதும் கலக்கமின்றி உதட்டில் சீட்டியோடு பேனாவினை சுழற்றினாள்..

வெண்பாவைப் பார்த்ததும் கண்ணடித்து உதட்டைக் குவித்து முத்தத்தை காற்றில் பறக்க விட, “இவளைத் திருத்த முடியாது..” எனக் குனிந்து எழுதத் தொடங்கிவிட்டாள் செண்பா...

ஒரு மணிநேரத் தேர்வை இருபது நிமிடங்களில் முடித்துவிட்டு வெளியே வந்தவளை மொத்த தேர்வறையும் ஆச்சரியமாகப் பார்த்தது.

அசராமல் வெளியே வந்து மரத்தில் சாய்ந்து நின்றவளிடம், தெரிந்தவற்றை எழுதிக் கொடுத்துவிட்டு நாற்பது நிமிடங்களில் வெளியே வந்த செண்பா "எப்படி இவ்வளோ சீக்கிரமா எழுதுற??" என ஆச்சரியமாகக் கேட்டாள்..

"வந்து சொல்றேன்.. நான் இப்ப கிளம்பணும்... நந்தா குற்றாலத்தில் எனக்காக வெயிட்டிங்..." என்றுவிட்டு புத்தகப்பையை வெண்பாவின் கழுத்தில் தொங்க விட்டாள்.

"இப்ப எப்படி??" எனக் கேள்வியாய் கேட்ட செண்பாவிடம், "இந்த மதில் சுவர் ஏறிக் குதிச்சு போற வழியைக் காலங்காலமா நம்ம சினிமாவுல யூஸ் பண்றாங்க... இப்படி பச்ச மண்ணா இருக்கிறியே பேபி..." எனக் கன்னம் பிடித்தாள்.

"திருநெல்வேலியில் இருந்து தென்காசி வரை போறேன்னு சொல்றே.." எனக் கேட்டவளிடம், "இதெல்லாம் ஜுஜுபி மேட்டர்..." என அலட்சியமாகக் கூறியவள் தனது துப்பட்டாவை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, மதில் சுவரை ஏறிக் குதித்துத் தப்பித்துச் சென்றுவிட, செண்பாவும்  அவளது புத்தகப் பையை எடுத்துக்கொண்டு வகுப்பிற்குச் சென்றாள்...

வெளியே வந்தவள் செக்யூரிட்டி அருகிலிருந்த கடைக்குத் தேநீர் குடிக்க சென்ற சமயம் பார்த்து மெதுவாய் நுழைந்து ஸ்கூட்டியை வெளியே கடத்தி, மறுநிமிடமே அந்த காற்றோடு காற்றாகப் பறக்கத் துவங்கினாள்.

சென்று கொண்டிருந்த வழியில், அவளது அலைபேசி சிணுங்க; அழைப்பை ஏற்று, காதில் இயர்போனை மாட்டினாள்.

"செல்லக்குட்டி... எங்க வந்துட்டு இருக்கிற???" என குரல் ஒலிக்க, "டேய் எருமை மாடு... உன்னால நான் காம்பவுண்ட் வால் ஏறிக் குதிச்சு வரவேண்டியிருக்குது... நீ இங்கே வரவேண்டியது தானே... அறுபது கிலோமீட்டருக்கு அங்க போய் இருக்கிற??" என திட்டினாள்.

"என் முயல்குட்டி.. அங்க பயங்கர ட்ராஃபிக்.. இரைச்சல் சத்தமா இருக்கும்... இங்க குற்றாலம் வந்து பாரு... ஜில்லுன்னு காத்தும் சூடா வீசுற பஜ்ஜி வாசமும் ஆளையே தூக்குது... இப்படி ஒரு இடத்துலே தான் வாழ்க்கை சொர்க்கமாகும்... அந்த சொர்க்கத்தில் உங்கூட இருக்கணும்னு ஆசைப்பட்டேன்.. ரொம்ப சலிச்சிக்கிறீயே..." என்றான் நந்தன்.

"உன் வாழ்க்கையும் ரசனையும்... வர்றதே ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை தான்.. அதுக்காக என்னை இப்படி சுத்தல்ல விடுறீயே... உன்னை நம்பி கிளம்பிட்டேன்.. வழியை சொல்லு... வர்றேன்..." என பிரேக்கை பிடித்து வேகத்தை மிதப்படுத்தினாள்.

நந்தன் வழியைக் கூற, அந்த வழிமுறையைப் பின்பற்றி  ஸ்கூட்டியை செலுத்தத் தொடங்கியிருந்தாள். அப்போது, வழியில் வீடுகளே இன்றி, ஆள்நடமாற்றமும் குறைந்து காட்டுப்பகுதியாய் அமைந்திருந்தது.. பேசிக்கொண்டே வந்தவளின் காதில் அவனின் குரல் தேய்ந்து போக, உடனே பிரேக்கை பிடித்து அழுத்தி கால்களைத் தரையில் ஊன்றினாள்.

அவள் கால்பதித்த இடத்திலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் "ஹ்ஹும்... ஹ்ஹுஹ்ஹீம்... ஹ்ஹும்..." என மரங்களுக்கு நடுவிலிருந்து உறுமல் வந்தது...

இதை அறியாதவளாய் தனது அலைபேசியில் சிக்னல் செயலிழந்ததை நினைத்து, “ச்சே.. இப்படி சிக்னல் கட் ஆகிடுச்சே..” எனச் சலித்துக் கொண்டு சிக்னலிற்காக நடுரோட்டில் நின்று அலைபேசியை அங்கும் இங்குமாய் திருப்பியும் ஏந்தியும் கொண்டிருந்தாள்..

அந்த காடே "ஹ்ஹும்... ஹ்ஹுஹ்ஹீம்... ஹ்ஹும்... ஹ்ஹும்..." என ஆக்ரோஷமாக ஆட்டம் கண்டு கொண்டிருந்தது.. அப்போது அவளது போனில் சிக்னல் காட்டின் எல்லையின் அருகே சென்றதும் ஒரு புள்ளியைக் காட்ட, ஆர்வ மிகுதியில் உள்ளே செல்ல முடிவெடுத்தாள்.. மறுகணமே நந்தனின் நினைவு வர, முடிவை மாற்றிக்கொண்டு ஸ்கூட்டியை நோக்கி காலை திருப்பி எடுத்து வைக்க, கழுத்தில் கிடந்த இயர்போன் தானாக நழுவி கீழே விழுந்தது...

அதை எடுக்கக் கீழே குனிந்த பொழுது, அந்த மரங்களுக்கு நடுவே தங்கநிற பட்டாம்பூச்சி பறந்ததைக் கவனித்தாள்.

இந்த நிற பட்டாம்பூச்சிகள் அரிது என்பதாலும் பெண்களுக்கே அரிதானவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் மிகுதி என்பதாலும் மேற்கொண்டு அந்த மரங்களுக்குள் செல்லும் முடிவு அவளது மூளையில் தொடர்ந்தது... அதற்கான செயல்பாட்டைப் பொன்னான பாதங்கள் தொடங்க, முதல் அடியை எடுத்து வைக்கப் போனாள்...

அப்போது, அங்கே டாட்டா சுமோ வாகனத்தில் வந்துகொண்டிருந்த மாந்திரீகர் ஒருவர் காரை நிறுத்திவிட்டு இறங்கி ஓடி வந்தார். "தாயீ....போகாதே..." என அவர் எச்சரிப்பதற்குள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதற்கான பாதையில் அவள் காலை பதித்திருந்தாள்...

"தாயீ...." என காப்பாற்ற வந்தவரை சுமையுந்து (லாரி) ஒன்று வேகமாக சடாரென அடித்து விட்டுச் செல்ல, அந்தரத்திற்குத் தூக்கி செல்லப்பட்ட மாந்திரீகர், பொத்தென சாலையை நோக்கி எறியப்பட்டார்...

விழுந்ததில் இரத்தக்களறியாய் கிடக்க, அவரது இரத்தம் தோய்ந்த தலையை எரிந்த கால்கள் ஒன்று மிதித்து நசுக்க, தலை இருந்த இடம் தெரியாமல் போனது...

அந்த கணமே அங்கே 'ஆஸ்தா காடு.. (எச்சரிக்கப்பட்ட பகுதி) என்ற பெயர்ப்பலகை உயர்ந்து நின்றது...

பாதையில் கால் வைத்தவளை ஏதோ ஒன்று காலை பிடித்து தரதரவென இழுத்து வந்து போட்டதில் கையிலிருந்த அலைபேசி  சாலையிலேயே சிதறி விழுந்தது... தன்னை நிலைப்படுத்திக்கொண்டு கண்களை விழித்துப் பார்த்தவளுக்கோ பயம் நெஞ்சை கவ்விக்கொண்டது... காரணம் பன்னிரண்டு மணி உச்சி வெயில் இருக்க, உள்ளே இருண்ட தேசமாய் மினுமினுத்தது... தன் எதிரே என்ன இருக்கிறது என்பதை கூட அறியமுடியாமல் இருள் சூழ்ந்து இருக்கத் தவித்துக்கொண்டிருந்தாள்...

அங்கே குற்றாலத்தில் "வெண்பா லாட்ஜ்..." எனப் பலகை மாட்டியிருந்த கட்டிடத்தில் விளக்குகள் விட்டு விட்டு மின்ன, தெய்வங்களின் கோவில்கள் அனைத்தும் கருப்பு புகையால் மூடப்பட்டிருக்க, 32ம் அறையின் கதவு திறக்கப்பட்டிருந்தது... உள்ளே கட்டிலில் மல்லாந்து கிடந்தவனை ஒரு இரத்தம் தோய்ந்த கரம் சட்டை காலரைப் பற்றி இரத்தத்தடம் தெரியுமாறு தரையில் போட்டு இழுத்துக் கொண்டிருந்தது...

அந்த இருள் படர்ந்த காட்டில் தனது வெறுங்காலோடு ஓடிக்கொண்டிருந்தாள்.  எவ்வாறு அக்காட்டிற்குள் வந்தாள் என்பதெல்லாம் அவளுக்கே தெரியாத ஒன்று. அவளின் கால் பதிந்த இடங்களில் என்றோ காய்ந்து போய் உடைய தயாராய் இருந்த இலைச்சருகுகள் நொருங்கும் சத்தம் கேட்டது. அந்த காட்டில் இரவு பூச்சியின் சத்தம் கூட கேட்காமல் மயான அமைதி நிலவ, அவளின் மூச்சிரைக்கும் சத்தமும் அவள் ஓடும் சத்தத்தையும் தவிர எந்த ஓசையும் கேட்கவில்லை.

அவளது ஒலி அவளின் பயத்திற்கே தீனி போட்டது. அவளின் மூச்சிரைக்கும் சத்தம் கோபத்தோடு சீறிப்பாய இருக்கும் புலியின் மூச்சை போலவும் காலடி ஓசை சிறுத்தையின் காலடி ஓசையைப் போலவும் மாறி மூளையின் யோசிக்கும் திறனைச் சிதறடித்தது.

அவளின் பின்னே அந்த இருட்டிலும் பிரகாசிக்கும் அளவில் அதனின் தோற்றம் இருந்தது. பாதி எரிந்து பாதி தோலுரிக்கப்பட்டு மீதியில் எரிந்த காயத்தில் கருப்பாய் ஏதோ காய்ந்திருந்தது. முகத்திலோ நடுவே ஒரு கீறலோடு மண்டையோடு வெளியே தெரிய, அதனுள் இருக்க வேண்டிய மூளை சிதறி கால்வாசி பாகம் மட்டுமே அங்கிருந்தது. ஒரு கண்ணில் குழி மட்டும் இருக்க, கண்ணை காணவில்லை. அந்த காணாமல் போன கண்கள் அதன் விரலில் மோதிரமாக நடுவில் துளையிட்டுப் போடப்பட்டிருந்தது. உதடு மொத்தமாய் சிதைக்கப்பட்டிருந்தது.

கழுத்துக்குக் கீழே சில இடங்களில் மட்டும் தோலானது மூடியிருக்க நெஞ்சுக்கூட்டில் தொடங்கி முழுவதுமாக தோலின்றி நிர்வாணமாய் இருந்தது. அந்த மார்புக்கூட்டினுள் உள்ளுறுப்புகள் அழுகிய நிலையில் இருக்க, வயிற்றுப்பகுதியில் இருக்க வேண்டிய பாதி பாகங்கள் வெளியே தொங்கிய நிலையிலிருந்தது இடுப்பிற்குக் கீழே வெறும் எலும்பு மட்டுமே மிஞ்சியிருந்தது. ஆங்காங்கே கந்தலான துணி தொங்கிக் கொண்டிருக்க, அந்த உருவமானது அவளிற்கு மரணபீதியை கிளப்பிக்கொண்டிருந்தது.

பின்னால் திரும்பிப் பார்க்காமல் மூச்சைப் பிடித்து ஓடிக்கொண்டிருக்க, திடீரென ஏதோ ஒன்று தடுக்கி கீழே விழுந்தாள். கீழே விழுந்தவள் திரும்பிப் பார்க்க, அந்த உருவம் அந்தரத்தில் மிதந்துகொண்டிருந்தது. இதயம் திக் திக் என அடிக்க, கரங்களை பின்னால் வைத்து உடலைத் தரையோடு இழுத்து, தப்பிக்க இயலாது என அறிந்தும் முயன்றும் கொண்டிருந்தாள்.

சடாரென அவளின் முகத்தின் அருகே குனிந்து, நீள நகங்கள் கொண்ட கரங்களினால் அவளது கழுத்தை பிடிக்க, "ப்ளீ‌...ஸ்.. விட்டு..டு..."  என வார்த்தைகள் தொண்டையிலிருந்து வர மறுத்தது.

"க்ஹா...ஹா...ஹா.." என இடியென சிரிக்க, அதனுடைய பற்கள் பளிங்கு போல மின்னிக்கொண்டிருந்தது.

விருட்டென மீண்டும் அந்தரத்திற்கு ஏறி பின்னால் திரும்ப, "தப்பித்தோம்.." என நெஞ்சில் கைவைத்து மூச்சை விட்டாள். அசுர வேகத்தில் திரும்பிய உருவம், நம்ப முடியாத வேகத்தில் அவளது கால்கள் இரண்டையும் பிடித்து அவளை இரண்டாக கிழித்தது. கிழிந்த இரண்டு உடல் பாகங்களும் இரத்த துளிகள் ஆறாய் பெருக்கெடுக்க துள்ளி துடித்துக் கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நொடியில் இரண்டு துண்டுகளும் இருபது துண்டுகளாக மாற்றப்பட்டிருந்தது. இதுவரை ஆக்ரோஷமாய் அவளின் உடலை கிழித்தெடுத்த உருவமோ இப்போது கிழிந்து சிதைந்த அவளது உடலை பார்த்து ஆனந்தம் கொண்டது. இரண்டு மூன்று சுற்று உடலை சுற்றி வந்து கெக்கரித்தது.

சுற்றுகளை முடித்த உருவமோ, சடாரென பாய்ந்து அந்த சிதைந்த சதைகளின் மத்தியில் எதையோ தேடி எடுத்து விட்டு காற்றோடு காற்றாகி கலந்தது.

 

மறுநாள் காலை,

இளம்பெண் மாயம்..

பெயர்: சம்யுக்தா

நிறம்: மாநிறம்

வயது: 23

அடையாளம்: உதட்டோரத்தில் குழி விழும்..

மேலே குறிப்பிட்டுள்ள இளம்பெண் தென்காசி அருகே தனது பணியின் காரணமாக சென்று கொண்டிருந்த போது காணவில்லை.. கண்டுபிடித்து வருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்..

இந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த தெய்வானையை பார்த்து, "இப்போ உங்களுக்கு நம்பிக்கை வந்திடுச்சாம்மா... உங்க பொண்ணு பேரு கெட்டுப் போகாத மாதிரி செய்தி குடுத்தாச்சு... எங்களுக்கும் பொறுப்புணர்ச்சி இருக்குது... கண்டிப்பா உங்க பொண்ணை கண்டுபிடிச்சு தருவோம்..." என உறுதியாய் கூறினார் ஆய்வாளர் விஷ்ணு..

"ரொம்ப நன்றிங்க அய்யா..." எனக் கையெடுத்துக் கும்பிட்டு விட்டுக் காவல் நிலையத்திலிருந்து அவர் வெளியேற எத்தனிக்க, செண்பா உள்ளே நுழைந்தாள்...

 

இரண்டு நாட்களுக்குப் பின்..

காவல் நிலைய வாசலில் தளர்ந்த நிலையில் தெய்வானை நின்றிருக்க, கான்ஸ்டபிள் ஒருவர் அவரை அழைத்து உள்ளே அமர வைத்தார்... தேநீரை வாங்கி குடிக்குமாறு கூறிவிட்டு தனது பணிகளைக் கவனிக்கச் சென்றார்.

வழக்குகளை விசாரித்து விட்டு உள்ளே நுழைந்த விஷ்ணு அப்போது தான் தெய்வானையைக் கவனித்தார்...

"அம்மா..உங்களை நானே பார்க்கணும்னு நெனைச்சேன்.. உங்களை ரீச் பண்ண முடியலை..." என்றதும், "என் பொண்ணு கிடைச்சிட்டாளாய்யா??" என ஆர்வம் பொங்க எழுந்தார்.

"அம்மா..." என நெற்றியைத் தேய்த்தவன் அவரருகே அமர்ந்து, "உங்க பொண்ணு காலேஜ் போய் எக்ஸாம்ஸ் அட்டென்ட் பண்ணிட்டு கிளம்பி குற்றாலம் போயிருக்கிறா... இதை அவங்க பிரெண்ட் செண்பா சொன்னாங்க... குற்றாலத்தில் அவங்க லவ்வர் நந்தனை பார்க்க போறதா சொல்லிட்டு போனதா விசாரணையில் ஒத்துக்கிட்டாங்க... உங்கள் பொண்ணு ஸ்கூட்டி நின்ன இடத்துக்கே போய் செக் பண்ணிட்டோம்... அந்த இடத்துலே ஸ்கூட்டிய நிறுத்திட்டு டாடா சுமோ கார்ல ஏறி போயிருக்கிறாங்க... கார் டயர்மார்க்ஸ் கிடைச்சிருக்குது... போனை உடைச்சு தூக்கி போட்ருக்கிறாங்க... அண்ட் குற்றாலத்தில் அந்த பையனும் மிஸ்ஸிங்... அவங்க ரெண்டு பேரும் வீட்டை விட்டு ஓடி போய்ட்டாங்க... கொஞ்ச நாளிலே திரும்ப வந்திடுவாங்க...." என ஆறுதல் கூறினான்..

அவன் கூறிய வார்த்தைகள் தெய்வானையை உள்ளுக்குள் உடைத்திருந்தாலும்; இறுதியாய் உதிர்த்த 'திரும்ப வருவாள்' என்ற வார்த்தையில் நம்பிக்கை பெற்றுத் திரும்பினார்...

 

திருநெல்வேலி - பழைய பேருந்து நிலையம்...

"சீக்கிரம்... இறங்கு... ம்ம்..." எனக் கௌரி அழைக்க, அந்த  குரலைக் கேட்டதும் பேருந்தின் படியிலிருந்து குதித்து இறங்கினாள் பாவ்யா

வெள்ளை நிறத்தில் பட்டியாலாவும் குட்டையான டாப்ஸூம் போட்டிருந்தவளின் கழுத்தில் வண்ண நிறத் துப்பட்டா தவழ்ந்து விளையாடியது... கன்னத்தில் சிறு குழி விழக் கூந்தலினை தனது இடது தோள்களில் போட்டிருந்தவள், துப்பட்டா நழுவிப் போகாமல் பிடிக்க, கைகளிலிருந்த பேக்கை கீழே வைத்துவிட்டு கழுத்தோரம் நெருக்கி விட்டு தலைமுடியைக் கோதிவிட்டாள்...

"என்னாச்சு கௌரி..." என பாவ்யா சாவகாசமாகக் கேட்க, "எங்க ஊர் பஸ்ல சீக்கிரம் இறங்கணும்... இல்லைன்னா கையோட கூட்டிட்டு போய் லாஸ்ட் ஸ்டாப்ல விட்டுடுவான்.. இப்போவே டைம் ஆய்டுச்சு.. சீக்கிரம் வா வீட்டுக்கு போகலாம்..." என அழைத்தாள் கௌரி...

"எனக்கு இப்படி சீக்கிரம் இறங்கி பழக்கமில்லையே... நீ ஏன் இவ்வளவு அவசரப்படுற??" என பாவ்யா அவளுக்கே உரித்தான குரலில் சிணுங்க, "அப்ப நீ உட்கார்ந்து ரசிச்சு பார்த்துட்டு வா... நான் போறேன்..." என முறைத்துவிட்டுக் கிளம்பினாள் கௌரி...

"ஏய்.. ஏய்.. இதோ நானும் வரேன்.." என கனமான பெட்டியை தூக்கிக்கொண்டு பாவ்யா பின்னாலேயே நடக்க, அங்கிருந்த கல்லில் இடறி கீழே விழப்போக, பிடிமானத்திற்காக அங்கிருந்த தூணினை பிடித்தாள்...

அந்த மதிய நேரத்தில், காடு மொத்தமாய் மூர்க்கத்தனமாய் ஆட்டம் காண, "ஹ்ஹு... ஹ்ஹும்...." என மூச்சிரைக்கும் சத்தம் காடெங்கும் எதிரொலித்தது... மரங்கள் அனைத்தும் பயங்கொண்டு தனது இலைகளை உதிர்க்க, சருகுகள் அனைத்தும் இணைந்து புயலுக்குள் சிக்கி, கும்பலாக  காட்டாற்று வெள்ளம் போல அங்கும் இங்கும் காற்று வேகமாய் அடித்தது...

அந்த பேய்க்காற்றினூடே, "ஆயே... ஆயே... உனக்காகவே காத்திருக்கிறேன்.. எனது தாகம் தணிக்கத் தனியே வாராயோ??." என்ற குரலும் வெறியை உமிழ்ந்து கொண்டே கலந்து வந்தது....

தீருமா🌡️🌨️??

அடுத்த அத்தியாயம் 

 

Post a Comment

5 Comments

  1. Replies
    1. நன்றி அக்கா... கீப் சப்போர்ட்டிங்..

      Delete
  2. பேய்க் கதை..... திகில் திக் திக் திக் ஆரம்பம். வாழ்த்துக்கள்

    ReplyDelete