அத்தியாயம்-3
“ச்சை.. ஊரு
உலகத்தை பார்த்து ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்கு வார புள்ளைக்கு நிம்மதியா ஒரு
திருஷ்டி சுத்தி போட முடியுதா?? வரவர உங்க அப்பாவுக்கு கூறே இல்லாம போயிட்டு இருக்கு..” என்று வந்ததும்
வராததுமாக முனுமுனுக்க தொடங்கி விட்டார் பார்வதி..
“இப்ப ஏன்மா
அப்பாவை திட்றீங்க??”
“அப்பாவ சொன்னா
உடனே உனக்கு பொத்துக்கிட்டு வந்துருமே.. வேலில போற ஓணானை வேட்டில இழுத்து கட்டுன
கதையா ஊருக்குள்ள சண்டியர்த்தனம் பண்ணிட்டு இருந்தவனை முச்சந்தில உக்கார வச்சு
ஊருக்கு வேடிக்கை காட்டிட்டு இருக்காரு.. எவனும் எக்கேடும் கெட்டுட்டு போறான்னு
விடுறதுக்கு இல்ல..” திட்டியபடியே அஞ்சரை பெட்டியிலிருந்து வத்தலையும் உப்பையும்
கையில் அள்ளிக்கொண்டு சுற்றி போட்டார் பார்வதி..
பதிலுக்கு வித்யா ஏதாவது
பேசலாம்.. வெளியில் அமர்ந்திருப்பது செல்வாவாக இல்லாமல் இருந்திருந்தால்.. ஐந்து
வருடங்களுக்கு சொந்த ஊர் வாடையே இல்லாமல் செய்தவன் வனவாசத்திற்கு பிறகும் நினைக்கும்
கருத்தை பேசுவதற்கு கூட சுதந்திரம் இல்லாமல் செய்து விட்டானே என நினைக்கும் பொழுதே
கண்களில் நீர் துளிர்த்தது..
“சாம்பல்
கண்ணுக்குள்ள விழுந்துட்டோ??” என்ற தாயிடத்தில் கண்களை காட்ட மனமின்றி கண்களை கசக்கியபடியே தண்ணீர்
தொட்டியை நோக்கி நகர்ந்தவளின் கைகளில் கிடந்த வளையலை கவனித்து விட்டார் பார்வதி..
“யே.. இரு.. ஆமா
இதென்னடி வளையல்.. அதுவும் கண்ணாடியில.. உங்க அப்பா கண்ணாடி வளையல் வாங்கி தர
மாட்டாரே.. இது ஏது??” என்று வினவவும், இதயம் தாறுமாறாய் துடித்தது..
“ஆன், காலேஜ்ல
சாரதாவோட டான்ஸ் ப்ரோக்ராம் இருந்துச்சு ம்மா.. இது அவளோடது.. அவசரமா ட்ரெஸ்
மாத்தும் போது என் கையில மாட்டிவிட்டுட்டு போனா.. நானும் குடுக்க மறந்துட்டேன்..”
என வாயில் வந்த பொய்யை உளறி வைக்க, “அவ வளையலை உங்கிட்ட ஏன் குடுக்கணும்??” என தாயின் கேள்விகள் தொடங்கும்
முன்னே, “என் ரூமுக்கு போறேன்..” என தப்பித்து விட்டாள்..
மற்றொரு புறத்தில், செல்வாவின் பேச்சை கேட்டுக்கொண்டு கிளம்பிய அருள், தெரு
முனையிலேயே ராமை இறக்கிவிட்டு புல்லட்டை மாட்டோடு மாடாக தொழுவத்தில் கட்டி
வைத்தான்.. பின் வைக்கபோரில் சுருட்டி வைத்திருந்த ஓட்டை சைக்கிளை விசுக்விசுக்கென
ஓட்டிக் கொண்டு வருவதற்குள் பெரிய ஏழரையாக கூட்டி வைத்திருந்தான் செல்வா..
வேட்டி கட்டிய அய்யனார் போல தர்மா வீட்டு வாசலில் அமர்ந்திருக்க, முற்றத்தில் கையில்
கல்லோடு கோலத்தை அழித்து வைத்திருந்தான் செல்வா..
“லேய், பால் பெரியப்பா வீட்டுக்கு வர சொல்லிட்டு இங்க என்னலே பண்ணுத?? சுதனை வெளிய எடுக்க வக்கீல்
பாப்போமான்னு கூட்டம் போட்டு பேசிட்டு கிடக்கானுவ.. நீ வரலையா??” என கேட்டுக்கொண்டே வந்தவன் தர்மாவின் முறைப்பை கண்டதும் வாயை
மூடிக்கொண்டான்..
“வக்கீலும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்.. அவன் தானா வெளிய வருவான்.. நான் தான்
இருக்கேன்ல..” என்ற செல்வாவின் பேச்சில் இறுமாப்பு கூடிட, “தானா வருவானா??” என வாயை கோணலாக்கி யோசித்த
அருளுக்கு விஷயம் பிடிபட்டது..
“எடேய், ஊருக்கே பஞ்சாயத்து பண்ணுதவர் வீட்டுல உக்காந்துக்கிட்டு பஞ்சாயத்து
பண்ணுனா நம்ம சுதனை விட்ருவாருன்னு நினைக்கியா??” அவனுக்கு மட்டும் கேட்கும் விதத்தில் பேசியவனிடம்,
கண்களால் கையிலிருந்த கல்லை சுட்டினான்..
“அந்த ஜன்னல் கண்ணாடியை அடிச்சு நொறுக்கலாம்னு இருக்கேன்.. அப்பிடியே வாய்ப்பு
கிடைச்சா ஊருக்கு உத்தமர்னு சொல்லிட்டு திரியுற ஊத்தவாயையும் உடைக்கணும்..”
“ஏதே.. ஜன்னல் கண்ணாடியா?? அந்த புள்ள ரூமுடா அது.. உன்ன பார்த்தா
சுதனுக்கு நியாயம் கேக்க வந்த மாதிரி இல்லியே.. இவன் தர்ணா பண்ணுததுக்கு என்னை
பொரிக்கவா குழம்பு வைக்கவான்னு பாக்குறாரே அந்த மனுஷன்.. இந்த வினயம் புடிச்சவன்
கூட சேர்ந்ததுக்கு இன்னும் என்னல்லாம் பாக்க வேண்டியிருக்கோ..” தலையில் துண்டை
போட்டுக்கொண்டு அமர்ந்து விட்டான் அருளும்..
விஷயம் கேள்விப்பட்டு செய்து கொண்டிருந்த வேலையை பாதியிலேயே போட்டுவிட்டு
ஓடோடி வந்தார் ராமலிங்கம்.. மரியாதையான மனுஷனை நடுவீதியில் அமர வைத்து அழகு
பார்த்த மகனை வேண்டாத பார்வை பார்த்தபடியே உள்ளே சென்றார்..
தலையில் கட்டியிருந்த துண்டை உதறி தோள்களில் போட்டுக்கொண்டு நின்ற
ராமலிங்கத்தின் தோள்களில் கைவைத்த தர்மா, “இங்க பாரு லிங்கம்.. இந்த ஊருக்குள்ள
உன் மவன் பண்ற சண்டியர்த்தனம் எல்லாம் தெரிஞ்சும் நான் ஏன் கண்டுக்காம விட்டேன்னு
உனக்கே தெரியும்.. ஏதாவதொரு பஞ்சாயத்து இழுத்துட்டு வந்து நிக்கும் போது உன்
முகத்துக்காக தான் பார்த்தேன்.. இப்போ என் வீட்டு முன்னாடி நின்னு என்னை ஊர்ல
அசிங்கப்படுத்தணும்னு பார்க்கான்.. இதுக்கு நான் என்ன செய்யட்டும்?? நீயே சொல்லு..”
மகனை தந்தை கையிலே ஒப்படைத்தார் தர்மா..
தர்மாவின் பேச்சில் எரிச்ச்சலுற்ற செல்வா, “யோவ்.. பெரிய நல்லவனாட்டம்
பேசாதய்யா.. நீரு செஞ்சதுக்கு நியாயம் கேட்டு வந்தா என் யோக்கியதை பத்தி
பேசுதியரோ.. முதல்ல உம்ம யோக்கியதைய பாரும்.. ன்ன!! கேஸை வாபஸ் வாங்க முடியுமா??
முடியாதா?? அதை சொல்லும்..” எகிறினான்..
“சும்மா இரு.. பெரியவுக தான் பேசிட்டு இருக்குறாங்கல்ல..” என்ற அருளை முறைத்து
விட்டு, “இப்போ.. இப்போவே சுதன் வெளிய வந்தாவணும்.. இல்ல வேற மாதிரி ஆயிடும்..” தர்மாவின்
முகத்திற்கு நேராய் விரல் நீட்டி எச்சரித்தான் அவன்..
தர்மா பேச பேச ஆத்திரமான செல்வா தாம்தூமென குதித்துக் கொண்டிருக்க, ஒரு
கட்டத்தில் ஜன்னல் கண்ணாடியை கல்லால் அடித்து விட்டான்.. பதறியடித்து பார்வதி மேலே
ஓட, உடைமாற்றுவதற்காக அறைக்கு சென்ற வித்யாவின் நெற்றியை உடைத்திருந்தது..
“ஐயோ.. அம்மா.. மாரியம்மா..” என தலையிலும் நெஞ்சிலும் அடித்துக்கொண்டு அழுத
பார்வதியின் குரலில் பதட்டமாக உள்ளே சென்றார் தர்மா..
ரத்தம் ஒழுக கைக்குட்டையை நெற்றியில் பிடித்துக்கொண்டு உட்கார்த்திருந்தவளை
கண்டதும் தர்மாவிற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை..
“யே.. உன் ஒப்பாரியை நிறுத்திட்டு தண்ணீய எடுத்துட்டு வா.. சீக்கிரம்..” என்று
மனைவியையும் “லேய்.. டாக்டரை கூப்பிடு..” என்று ராசுவையும் விரட்டினார்..
“அம்மாடி, பாப்பா.. இந்தா இந்த தண்ணீய குடி.. கொஞ்சம் இரத்தம்
நிக்கும்..” என்று வித்யாவையும் ஒரு செம்பு தண்ணீரை குடிக்க வைத்து விட்டார்..
ஐயோ அம்மா ரத்தம் என்றெல்லாம் கேட்கவும் செல்வாவிற்கு வெளியில் இருப்பு
கொள்ளவில்லை.. உள்ளே ஓடியவன் அதே வேகத்தில் வெளியே வந்து விட்டான்..
உள்ளே கண்ட காட்சி அவனை கல்லாய் சமைய வைத்தது.. அடுத்த அரைமணி நேரத்திற்கு
டாக்டர் வந்ததும் சென்றதும் ராமலிங்கம் பேசிய வசவுகளும் பார்வதி ஏசிய
வார்த்தைகளும் அவன் காதுகளுக்கு ஏறவேயில்லை..
கடைசியாய் போலீஸ் ஜீப்பின் சைரன் சத்தம் ‘கொயிங்’ என்று காதை அடைத்த பின்னே நினைவிற்கு
திரும்பினான்..
“இப்பிடி வயசு புள்ள மேல கல்லெறிஞ்சிட்டானே.. அதுவே பலநாள் கழிச்சு வீட்டு
பக்கம் எட்டி பார்க்குது.. நாளைக்கு அடுத்த வீட்டுக்கு போற புள்ளைன்னு கூட பார்க்காம
முகத்துல அடிச்சிருக்கான் பாரேன்.. பஞ்சப்பய..” என மொத்த ஊரும் அவனுக்கு எதிராய்
கொடிபிடித்தது..
சாமி சிலை மீது செருப்பை எரிந்தவனையே கம்பி எண்ண வைத்த தர்மா வாத்தியார் தன்
வீட்டு மகாலட்சுமி மேல் கல்லெறிந்தவனை சும்மா விடுவாரா??
“ஐயா, உங்க சார்புல ஒரு ரிட்டன் கம்ப்ளைன்ட் எழுதி குடுத்துடுங்க.. மீதிய நான்
பாத்துக்குறேன்.. இவனை எல்லாம் வச்சு லாடம் கட்டனும்..” என்று உறுமிய போலீஸ்
இன்ஸ்பெக்டர் தர்மாவின் முன்னாள் மாணவன்.. தன் விசுவாசத்தை காட்டினான்..
தர்மா கேள்வியாய் ராமலிங்கத்தை நோக்க, “நீங்க என்ன முடிவெடுத்தாலும் நான் கட்டுப்படுறேன்
ஐயா..” என முடித்துக்கொண்டார்..
“பார்வதி.. நீ பேப்பரும் பென்னும் எடுத்துட்டு வா.. பாப்பா நீ நடந்த எதையும்
விடாம தெளிவா எழுதி குடு.. ம்ம்..” என்று பாந்தமாய் மகளின் தலையை தடவிக்கொடுக்க,
அவளின் விழிகள் செல்வாவின் பக்கம் நிமிர மறுத்தது..
அவ்விடமே மௌனமாயிருக்க, தனக்கு தெரிந்த வகையில் நடந்ததை எழுதி கொடுத்தாள்
வித்யா.. “ஒரு நிமிஷம் பொறு.. நான் சொல்ல போறதையும் சேத்து எழுதிக் குடு..” என்ற
செல்வாவின் திமிரான குரலில், அனைவரின் பார்வையும் அவன் மேலே..
அவனோ அவளின் மீதிருந்த பார்வையை விலக்காமல், “அதே பேப்பர்ல பின்னாடி எழுது.. பழைய
பகைக்காக தப்பு செய்யாத அப்பாவி பய சுதன் மேல பொய்யான கம்ப்ளைன்ட் குடுத்த
பஞ்சாயத்து தலைவர் மேல நான் கம்ப்ளைன்ட் குடுக்குறேன்..” என்கவும் கூட்டத்தில்
சலசலப்பு..
“அது பொய்யான கம்ப்ளைன்ட்னு நீ எப்படிலே சொல்லுத??” இன்ஸ்பெக்டர் செல்வாவின்
சட்டையை பிடிக்க, “எப்படின்னா?? அன்னைக்கு செருப்ப எரிஞ்சது
நான் தான்..” என்றான் கண்களில் பயமில்லாமல்..
அவன் அப்படி சொல்லவும் எதிர்பேச்சுக்கு இடமில்லை.. செய்த தவறை அவனே
ஒத்துக்கொண்டதால் கையில் விலங்கு மாட்டப்பட்டது.. அருள் மட்டும், “லேய், கிறுக்குப்பயலே..
பெரியப்பா அவ்ளோ சொல்லித்தான் விட்டாரு.. அவன பொறுமையாயிருக்க சொல்லு.. நாங்க
பாத்துக்கிடுதோம்னு.. சொன்ன மாதிரியே செஞ்சிட்டியே.. படுபாவி..” என்று அவனுக்காக
குதித்து கொண்டிருந்தான்..
மற்ற அனைவருமே, “இவனுக்கு இது தேவை தான்..” என்று மௌனமாயிருக்க, செல்வா
ஜீப்பில் ஏற்றப்பட்டான்.. அவனின் தீப்பார்வை தர்மாவை சுட்டெரிக்க, அருகில் எந்த
உணர்வும் காட்டாது நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வித்யா அவனின் கவனம்
பறித்தாள்..
போலீஸ் ஜீப் தூரத்தில் புள்ளியாய் மறையும் வரை நின்றிருந்த மக்கள் கூட்டம்
கலைந்து செல்ல, தன்னுடைய மொத்த சந்தோசத்தையும் பறித்தவனின் வாழ்க்கையில் இருந்து
சுதந்திரத்தை கெடுத்து பழி தீர்த்து கொண்டதாக திருப்திப்பட்டு கொண்டாள் வித்யா..
அடுத்த வந்த நாட்கள் முழுவதும் இதே பேச்சு தான் ஊருக்குள்.. காயம் ஆறும் வரை
ஓய்வெடுக்க சொல்லி பார்வதி உயிரை எடுக்க, அறைக்குள்ளே அடைந்து கிடந்தாள்..
“அடடா.. வாடி என் வாயாடி.. நீ வரமாட்டன்னுல்லா நினைச்சேன்..” மாவு கையோடு
நின்ற பார்வதியை, “நீங்க பண்ணி வச்சிருக்க கூத்துக்கு வீட்டை விட்டு வெளிய
வராதுக்குள்ளேயே பெரும்பாடா போச்சு.. தள்ளுங்க இப்பிடி..” இடித்துக்கொண்டு உள்ளே
நுழைந்த ஜோதி அருளின் தங்கை..
“நான் என்னடி செஞ்சேன்..”
“நீங்க என்னதான் செய்யல.. சரி அந்த மகாராணி எங்க?? சுடிதார் தச்சு எடுத்துட்டு
வந்தேன்..” என்றவளுக்கு மேலே என்று கையை காட்டி விட்டு சென்றார் பார்வதி..
அறைக்கு வந்த ஜோதியை கண்டதும் துள்ளி குதித்து எழுந்த வித்யா, “ஒரு வழியா
வந்துட்டியா??” என்றிட, “இப்போ தான் கீழ சொல்லிட்டு வந்தேன்.. ஏன் வரலை
எதுக்கு வரலைன்னு கேட்கப்பிடாதுன்னு.. நீயும் கேட்ட மண்டைய உடைச்சு மாவிளக்கு
எத்திருவேன்..” என சீரியசாய் முகத்தை வைத்துக்கொண்டு மிரட்டிய ஜோதியை பார்க்க
சிரிப்பு தான் வந்தது..
“எப்படியோ வந்துட்டன்னு நினைச்சுக்குறேன்.. எப்படின்னு இருக்கன்னாவது
கேக்கலாமா??”
“உடனே ரொம்ப பண்ணாத.. நானே நொந்து போயிருக்கேன்.. அன்னைக்கு ராத்திரி முழுக்க
வீட்டை சுத்தி ஓட ஓட விரட்டி அருளை அடி வெளுத்து எடுத்துட்டாருல்ல.. நூல் நூலா
பிரிச்சு கிடந்தவனை தச்சு ஒன்னு சேக்குறதுக்குள்ள போதும் போதுன்னு ஆயிட்டு
தெரியுமா??”
“உங்க அண்ணனோட உயிர் நண்பன் குறுக்க வந்திருப்பானே..”
“எங்க?? அவனை பிடிச்சிட்டு போய் மூணு நாள் ஆவுது.. இன்னும் வீடு வந்து சேரலை..
நேத்து கூட அவுக அம்மா எங்க வீட்ல சொல்லி அழுதுட்டு இருந்துச்சே.. நம்ம ராம் கூட
பித்து பிடிச்சவன் மாதிரி தான் திரியுறான்.. இவன் போயிட்டானுல்லாம் எவன் பீல்
பண்ணிட்டு கெடக்க??” என்று அவள் பாட்டிற்கு பேசிக்கொண்டிருக்க, வித்யாவிடம் மூச்சு பேச்சில்லை..
1 Comments
Sema epi sis... But enna prachana nu than innum enakku therila .. na poi adutha epi padichidu varen madam...
ReplyDelete