Header Ads Widget

Welcome You all to Ruthitha's KKR family

Kanavu Kadhali's World

To share your valuable comments : kanavukadhali@gmail.com

அன்பே நீ யாரோடா-4

 அத்தியாயம்-4



“ஏய், இங்கேரு புள்ள.. எவ்ளோ பெரிய விஷயத்தை நான் சொல்லிட்டு இருக்கேன்.. நீ உன் பாட்டுல சுவத்தை பாத்துட்டு இருக்க??” என்று உலுக்கிய ஜோதியை கனிவாய் பார்த்த வித்யா, “எனக்கு ராமை பாக்கணும்..” என்றாளே தலை சுற்றாத குறையாய் அவளை விழித்தாள் இவள்..

“உனக்கென்ன கிறுக்கு குறுக்கு பிடிச்சு போச்சா?? நல்ல காலத்துலேயே உன்னால அவனை பாக்க முடியாது.. அதுலயும் இப்போ.. சுத்தம்.. தம்பி காரன் நெத்திய பேர்த்து வச்சிருக்கான்.. நீ அண்ணன்காரனை பாக்கணும்னு சொல்லுத.. இதை யாராச்சும் கேட்டாங்கன்னு வையு.. ரெண்டு பேரையும் உரிச்சு உப்புக்கண்டம் போட்ருவாக.. பாத்துக்கோ”

“ச்சூ.. நீயே கத்தி காமிச்சு குடுத்துருவ போல.. பாக்கணும்னு தான கேட்டேன்.. அவன் என் நெத்திய உடைச்சதுக்கு ராமால என்ன பண்ண முடியும்??”

“ஆமாண்டி ஆமா.. ஏன் கேக்க மாட்ட.. அவன்கிட்ட உன்னை கூட்டிட்டு போறதா இருந்தா எங்க அம்மா என்னை டின்னு கட்டும்.. அவனை இங்க கூட்டிட்டு வர்றதா இருந்தா ஊரே சேர்ந்து எனக்கு கல்லறை கட்டும்.. அதுனால முடியவே முடியாது.. நீ நல்ல புள்ளையா வீட்ல உக்காரு.. சரியா??” பச்சை குழந்தைக்கு சொல்வது போல தெளிவாக கூறிவிட்டே சென்றாள்..

அதே நேரத்தில் வாசலில் வண்டி சத்தம் கேட்கவும், “அப்பா..” வித்யா நான்கு கால் பாய்ச்சலில் ஓடிவந்தாள் கீழே.. அங்கே வீட்டிலிருந்து வெளியே வந்த ஜோதியை, “யே.. வாயாடி.. நானும் உங்க வீட்டு பக்கமா தான் போக போறேன்.. கொஞ்சம் பொறு.. போற வழியில உன்னையும் இறக்கி விடுதேன்..” என்று கையோடு அழைத்து வந்திருந்தார் தர்மா..

வாசல் வரை சென்ற வாய்ப்பு திரும்பவும் வீட்டிற்குள் வந்ததும் உற்சாகமானாள் வித்யா.. ஓடிச்சென்று செம்பில் தண்ணீர் கொண்டு வந்து தர்மாவிடம் கொடுத்து விட்டு, “ப்பா.. எனக்கு சுடிதார் தைக்கணும்.. அளவு குடுக்க ஜோதி வீடு வரைக்கும் போயிட்டு வரட்டா..” என நைசாக கேட்டாள்..

“எங்க அலையணும்ங்கற.. ஒழுங்கா வீட்ல உக்காந்து பரிச்சை எதுக்காவது படி.. ஊரு கெடக்க கிடப்புல வீடு வீடா போவணும்ங்கறா..” மறுத்து பேசிய பார்வதியை உதடு பிதுக்கியவள், தலையை தொங்கப் போட்டு கொண்டு திரும்ப நடந்தாள்..

“பார்வதி, ஊர்ல இருந்து வந்ததுல இருந்து ரூமுக்குள்ளே தான அடைஞ்சி கெடக்குறா.. வெளிய போய் பார்த்தா தான நாலு பேர் பழக்கம் கெடைக்கும்.. மனுஷங்களோட பழகாத படிப்பு என்னாத்துக்கு?? நீ போயிட்டு வா பாப்பா.. உங்க அம்மா கெடக்குறா..” என்ற தர்மாவின் பேச்சுக்கு மறுபேச்சில்லாமல், “எல்லாம் இவர் குடுக்க செல்லம்..” என்று புலம்பி கொண்டே அடுக்களைக்கு சென்று விட்டார் பார்வதி..

வித்யாவின் முகம் மலர்ந்து, “தேங்க்ஸ் ப்பா..” என்கவும், “சரி, வாங்க போலாம்..” என்ற தர்மா ட்ரைவரை காரை எடுக்க சொன்னார்..

ஜோதியின் வீட்டில் இருவரையும் இறக்கி விட்ட கார், கிளம்பாமல் ஓரமாய் நிறுத்தப்பட்டது.. “ப்பா..” என்று புரியாமல் வித்யா விழிக்க, எதுவும் சொல்லாமல் ராமலிங்கத்தின் வீட்டிற்குள் நுழைந்தார்..

அங்கே, சோகமே உருவாய் தூணில் சாய்ந்து கொண்டு மீதியிருந்த கொஞ்ச கண்ணீரையும் சொரிந்துக் கொண்டிருந்தார் கனகவல்லி..

“பிடிச்சுட்டு போய் மூணு நாள் ஆவுது.. என் புள்ள எப்பிடி இருக்கானோ?? சாப்பிட்டானோ இல்லையோ?? சூடா இட்லி இருக்குன்னு சொன்னேனே.. அவனுக்கு தானே அவிச்ச.. அவன் தலையில கொட்டுன்னுட்டு போயிட்டான்..”

“கொள்ளையில போறவன் ஒருநாளாவது எம்பேச்ச கேக்கானா?? பெத்தவ தான் பரிதவிக்க வேண்டியிருக்கு.. சண்டியர் கணக்கா சண்டை போட்டுட்டு கெடந்தாலும் கத்திட்டு கனைச்சிட்டு வீட்ட சுத்தி சுத்தி வருவானே.. பெத்த புள்ளைய பிடிச்சுட்டு போம்போது விரல் சூப்பிட்டு இருந்தியராக்கும்..”

அங்குட்டு ஒன்னு இங்கிட்டு ஒன்னு என்று அவனை திட்டுவதோடு சேர்த்து ராமலிங்கத்தையும் திட்டி தீர்த்துக்கொண்டிருந்தார்..

“யே.. சும்மா ஒப்பாரி வச்சுட்டு கெடக்காத.. அவன் பண்ணுன வேலைக்கு பிடிச்சுட்டு போவாம மடியில போட்டு கொஞ்சுவாகளோ.. இருந்திருந்து அம்புட்டு கோவம் உன் அருமை புத்திரனுக்கு எங்க வந்துச்சுன்னு கேக்காத விட்டுட்டு என்னை போட்டு யேசுர.. நீ பாத்திருக்கணும்.. ஒரு விரலுக்கு கிழிச்சு ரத்தம் கொட்டுனுச்சு.. அந்த புள்ளைக்கு உன் சீமந்திர புத்திரன் எம்புட்டு தான் பண்ணுவான்.. பாவம்டி...” என தோளில் போட்டிருந்த துண்டை உதறியபடி அடக்க முயன்று கொண்டிருந்தார் ராமலிங்கம்..

கனகவல்லியின் ஒப்பாரிக்கு எல்லையேது.. வாயை பொத்திக்கொண்டு ஊன் ஊன் என்று இன்னமும் முணங்கி கொண்டே தானிருந்தார்..

“லிங்கம்..” என்ற தர்மாவின் கனத்த குரலில் திரும்பியவர்கள் மரியாதைக்காக எழுந்து கொள்ள, கனகவல்லி சேலை தலைப்பால் கண்ணீரை துடைத்துக் கொண்டார்..

பிளாஸ்டிக் சேரை எடுத்து போட்ட லிங்கம், “காப்பி போட்டு கொண்டா கனகம்..” என்று விட்டு, “சொல்லுங்கய்யா..” என்றார் பணிவாக..

“இல்ல பரவாயில்ல.. இருக்கட்டும்.. நான் பேசிட்டு போகலாம்னு தான் வந்தேன்..” என்றவர் மேலும் தொடர்ந்தார்..

உள்ளே என்ன நடக்கிறதென வாசலில் நின்று ஒட்டுக்கேட்டு கொண்டிருந்தனர் வித்யாவும் ஜோதியும்..

“இங்க பாரு லிங்கம்.. கனகா சொல்லுததும் சரி தான்.. புள்ளைக்கு ஒண்ணுன்னா பெத்த மனசு கெடந்து தவிக்கும்.. அன்னைக்கும் அப்பிடி தான்.. உன் மொவன் வாய்பேசிட்டு மட்டும் போயிருந்தா விட்ருப்பேன்.. கையில வச்சு தாங்குற புள்ளை மண்டைய உடைச்சாம்னா எப்பிடி சும்மா விட முடியும்?? பாப்பா நெத்தியில ரத்தம் ஒழுகவும் ஆத்திரத்துல தான் கம்ப்ளைன்ட் எழுதி குடுத்துட்டேன்..”

“அவன் இன்னொரு வீட்டுக்கு புள்ளைன்னு நினைக்கும் போது மனசு கேக்கலை.. அதான் கையெழுத்து போட்டு கூட்டிட்டு வந்துட்டேன்.. இனி இந்த மாதிரி நடக்காம பாத்துக்கோ..” என்று விட்டு எழும் பொழுதே ராம் வந்தான்..

“வணக்கம் ஐயா..” என காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டவனை “நல்லாயிரு..” என்று தூக்கி விட்ட தர்மா, “ஊருக்கு வந்துருக்கன்னு பாப்பா சொல்லவே இல்ல.. எப்பிடி இருக்க?? படிப்பும் முடிஞ்சிது.. ட்ரைனிங்குக்கு எங்கேயும் போட்ருக்கியா.. இல்லைன்னா சொல்லு.. நம்ம துரை அண்ணன்ட்ட சொல்லி நல்ல இடமா பாத்துருவோம்..” என்றார்..

“இல்லங்கய்யா.. இவ்ளோ தூரம் படிக்க வச்சதுக்கே திரும்ப என்ன செய்ய போறேன்னு தெரியல.. இன்னுமா?? பக்கத்துல ரெண்டு மூணு இடத்துல சொல்லி வச்சிருக்கேன் ய்யா.. எப்போ வேணா கூப்பிட்டதும் கிளம்பனும்..” என்றான் மிக பணிவாக..

ராமின் குரலை கேட்டதும் “உள்ள தான் இருக்கான்..” உற்சாகமாய் கூறிய வித்யா ஜோதியின் கையை இறுக பிடிக்கவும், “இன்னும் இங்கேயே நின்னோம்.. மாட்டுனோம்.. அவன் குரலை கேட்டதோட முடிஞ்சிது இந்த ஜென்மத்துக்கு பாக்கவே முடியாது.. ஒழுங்கா என்கூட வா..” என்று வீட்டிற்குள் அழைத்து சென்றாள்..

“ரொம்ப சந்தோசம்.. இந்த ஊருக்குள்ள இன்னொரு வாத்தியார உருவாக்குனதுல என் பங்கும் இருக்குன்னு நினைச்சாலே புல்லரிக்குது.. மனசுக்கு நிறைவா இருக்கு..” என்றுவிட்டு கிளம்பினார்..

காரின் பின்னேயே வந்த ஆட்டோவிலிருந்து அருள் செல்வாவை இறக்க, உடம்பெங்கும் இரத்த கட்டுக்களாக வீங்கி நின்றது.. மகனை நிலையை கண்டு கனகவல்லி அலறுவதற்குள் அறையில் தள்ளி தாழ்ப்பாளிட்டார் ராமலிங்கம்..

அக்கம் பக்கத்தில் சத்தம் கேட்காதவாறு அவனை வீட்டிற்குள் கொண்டு வந்து கட்டிலில் கிடத்துவதற்குள் போதும் போதுமென்றாகியது.. பட்டாபட்டியில் இருந்து சில ரூபாய் நோட்டுக்களை எடுத்த லிங்கம், “அருளு.. செல்வம் கடையில போயி ஒரு லிட்டர் நல்லெண்ணெயும் அரைகிலோ கறியும் எடுத்துட்டு வா..” என அனுப்பினார்..

அரைமயக்கத்தில் கிடந்தவனை பின்கட்டிற்கு தூக்கி வந்து உச்சந்தலையில் எண்ணெய் வைத்து பிடித்த சனியன் அத்தோடு கழியட்டும் என்ற லிங்கம் பதமாக காய்ச்சிய வெந்நீரை மேலுக்கு ஊற்றினார்..

அரை மயக்கத்திலும் வலியில் சுணங்கிய செல்வாவின் முகத்தை பார்க்காமல் தண்ணீரை ஊற்றிய லிங்கத்தின் கண்களும் கலங்கியிருந்ததை ராம் கவனித்தான்.. இது செல்வாவிற்கு சொன்னாலும் புரியபோவதில்லை..

உடையை மாற்றி மீண்டும் கட்டிலில் படுக்க வைத்து ராம் ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருந்தான்....

கனகவல்லியை திறந்து விட்ட லிங்கம், “மூச்.. திரும்பவும் ஒப்பாரி வச்சு ஊரை கூப்பிட்ட.. நானே திரும்ப கொண்டு போலீஸ்ல விட்டுட்டு வந்துருவேன்..” என்று மிரட்டவும், மூக்கை சீந்திக் கொண்டு பக்கத்திலேயே அமர்ந்தார்..

இங்கே நடந்த எதுவும் தெரியாமல் சரசுவிடம் விட்டுப்போன ஐந்து வருட கதையை கேட்டுக்கொண்டிருந்தாள் வித்யா..

“ஏப்ள.. ஏப்ள..” மூச்சிரைக்க ஓடி வந்த ஜோதி அம்மாவை கண்டதும் அமைதியாகிட, “என்ன?” என்று புருவம் உயர்த்தி கேட்ட வித்யாவிடம் ராமென சைகை செய்தாள்..

அதை கேட்ட பின்னும் வித்யாவிற்கு இருப்பு கொள்ளவில்லை.. குடுகுடுவென பின்கட்டில் மாடிப்படியேறி செல்ல, அவன் வீட்டு மொட்டை மாடியில் நின்றிருந்தான் ராம்..

இருவரின் வீடும் நெருக்கமாக அமைந்திருப்பதால் ஜன்னல் மேல்தட்டில் இறங்கினால் இன்னொரு வீட்டின் மாடிக்கு வந்துவிடலாம்.. அப்படி தான் ராமும் இப்பொழுது இந்த பக்கமாய் வந்திருந்தான்..

வந்ததுமே நெற்றியில் இருந்த காயத்தை கண்டு, “இப்போ எப்பிடி இருக்கு?? ரொம்ப வலிக்குதா??” என்று அக்கறையாய் வினவ, “பரவாயில்ல ராம்.. காய ஆரம்பிச்சிட்டு.. சொல்ல சொல்ல கேக்காம எங்கம்மா தான் பாதுகாப்புன்னு திரும்பவும் கட்டு போட்டு விட்ருக்காங்க..” அவனின் பதற்றத்தை குறைத்தாள்..

“ஊருக்குள்ள ஒவ்வொருத்தனும் ஒன்னொன்னு சொல்றான்.. எங்கப்பா ஒரு விரலுக்கு ஆழமா இறங்கிட்டுன்னு வேற சொன்னாரா.. நான் ரொம்பவே பயந்துட்டேன்.. அதான் உன்னை பாக்கணும்னு ரெண்டு நாளா அந்த வழியா வந்துட்டு போயிட்டு இருக்கேன்..” என்றவனின் விரல் காயத்தை மெல்ல வருட, “அதான் நானே வந்துட்டேன்ல.. பயப்படுறதுக்கு எதுவுமில்லை.. சின்ன காயம் தான் ராம்..” மெலிதாய் புன்னகைத்தாள்..

“இதுக்கு தான் சொன்னேன் விது.. ஊருக்கு வர வேணாம்னு.. என்னை ஏதாவது பண்ணியிருந்தாலும் சரி.. உன்னை காயப்படுத்தி பாக்குறானே.. போலீஸ் மொத்தி எடுத்ததும் சரி தான்.. அவனுக்கு இது வேணும்..” கோபம் செல்வாவின் பக்கம் திரும்ப, “வந்துட்டானா??” என கேட்டாள்..

“ம்ம்.. வந்துட்டான்.. மூணு நாள் ஊற வச்சு துவைச்சிருப்பாங்கன்னு நினைக்கேன்.. அங்கங்க உருளை கிழங்காட்டம் வீங்கி கெடக்கு.. இப்போ தான் ஒத்தடம் குடுத்துட்டு வாரேன்..”

“சரி.. ராம்.. என்னை நினைச்சு கவலைப்பட்டுட்டு இருப்பியேன்னு தான் நல்லா இருக்கேன்னு சொல்லிட்டு போலாம்னு வந்தேன்.. இப்போ நான் கிளம்பனும்.. சரியா.. பத்திரமா இரு..” என்று விடைகொடுக்க, மனமேயின்றி இறங்கினான் ராம்..

அவன் இறங்கிய ஜன்னலின் பக்கம் தான் செல்வா படுத்திருந்தான்.. இருவரின் உணர்ச்சி மிக்க உரையாடல்களை கேட்க கேட்க உடலெங்கும் பற்றி எரிந்தது செல்வாவிற்கு.. ராம் இறங்கும் பொழுது தான் அருள் வந்து சேர்ந்திருக்க, “லேய், அவன் என்னமும் பண்ணிட்டு போறான்.. நீ அதுல தலையிடாத.. நீ பட்டது வரைக்குமே போதும்.. அவனாச்சு அந்த புள்ளயாச்சு.. கண்டுக்காத..” என்றான்..  

கசக்கி பிழிந்த ஆடையாய் துவண்டு கிடந்தாலும் அருளின் சட்டையை கொத்தாய் பற்றி, “உள்ளுக்குள்ள இறங்கி நாடி நரம்புல ஊறி போனவளை எப்பிடி விட முடியும்..” என்றவனின் கண்களில் தெரிந்த உணர்வை இன்னதென்று வகைப்படுத்த முடியவில்லை..

“ஆனா அந்த புள்ள உன்னை நினைக்கல..”

“நினைப்பா.. சீக்கிரமே.. என்ன தவிர வேற எந்த நினைப்பும் வராம நான் மாத்துவேன்.. அதுக்கு நான் என்ன பண்ணுறேன்னு மட்டும் பாரு..” செல்வாவின் பேச்சில் ஒரு உறுதி தெரிந்தது.. அந்த பிடிவாதம் எங்கு சென்று நிறுத்தும் என்று யோசித்தாலே உடல் உதறியது..

வீட்டிலிருந்து நேரே பேச்சியம்மன் கோவிலுக்கு சென்ற வித்யா கருவறையை பார்த்தபடி உட்கார்ந்து கொண்டாள்.. பிரகாரம் சுற்றி விட்டு பிரசாதத்தோடு வந்த ஜோதி அவள் கைகளில் ஒன்றை திணித்து விட்டு கேள்வியாய் நோக்க,

“உனக்கு ஞாபகம் இருக்கா ஜோதி.. முன்னாடி எல்லாம் என்ன கஷ்டம் வந்தாலும் இங்க தான் வந்து உக்காருவேன்...”

“ஆமா.. அந்த கஷ்டமே ஒரு நாள் இங்கருந்து உன்னை ஓட ஓட விரட்டுச்சு.. அதுவும் ஞாபகமிருக்கா??”

“அவன பத்தி பேசாத.. நினைச்சாலே அப்பிடியே பத்திட்டு எரியுது.. மூஞ்ச பாக்கவே எரிச்சலா இருக்கு.. ச்சைக்.. சாமியை பார்த்துட்டே காத்து வாங்குனா எல்லாம் சரியா போகும்னு வந்தா கண்டதையும் ஞாபகப்படுத்தி என்ன நிம்மதியா இருக்க விட மாட்டியே..” என எழுந்து கொண்டவளின் முன்னே வந்து நின்றாள் கயல்..

அழுதத்திற்கான சுவடாய் கண்ணீர் இன்னும் காயவில்லை.. “நீ எல்லாம் நல்லாயிருப்பியா?? அடுத்தவனை இந்த பாடு படுத்துறோமேன்னு கொஞ்சமாச்சும் மனசாட்சி உறுத்துதா?? இவ்ளோ நாளா அவனை பைத்தியமா அலைய வச்சது பத்தாது உயிரையும் வாங்க வந்துட்டியா??” ஆத்திரமாய் கேட்டாள்.

“நான் என்ன பண்ணுனேன்னு என்மேல இவ்ளோ கோபமா பேசுற கயல்..” பழைய தோழியை சமாதானப்படுத்தும் நோக்கில் தொடப்போக,

“தொடாதடி.. நீயெல்லாம் தொட்டாலே பாவம்.. உன்ன நினைச்சு நினைச்சு கிறுக்கா அலைஞ்சவனை கேஸ் போட்டு உள்ள தள்ளிட்டு.. நிம்மதிய தேடி கோயிலுக்கு வந்தியாக்கும்.. மூணு நாளா உயிர் போற அளவுக்கு அடிச்சிருக்காங்க.. இப்போ இரக்கங்காட்டி குத்துயிரும் கொலையுயிருமா கொண்டாந்து போட்டுட்டா நாங்கெல்லாம் கையெடுத்து கும்பிடணும்ல..” கயலின் கோபம் குறைவதாக இல்லை..

“யே, கயலு.. நீயென்ன புரிஞ்சிக்கிடாம பேசுத.. கல்ல எரிஞ்சு மண்டைய உடைச்சது அவன் தான்.. தெரியும்ல..” என குறுக்கே பேசிய ஜோதியை ஒரே முறைப்பில் நிறுத்தி விட்டு,

“நான் அதை பத்தி பேசல.. கோயில் பிரச்சனையில ஏன் மாட்டிவிட்ட?? அவனை பத்தி உனக்கு தெரியாதா?? செல்வாத்தான் அப்பிடி பண்ணுவானா?? அதுவும் அது பிள்ளையார் கோயில்.. அந்த கோயிலுக்கும் அவனுக்கும் எப்பிடின்னு உனக்கே தெரியும்ல.. தெரிஞ்சும் நீ எழுதி குடுத்துருக்க.. சொல்லு.. வித்யா.. இப்போ பேசு.. பிள்ளையார் மேல செருப்பை வீசுததுக்கு செல்வாத்தானுக்கு மனசு வருமா??”

அவளின் ஒவ்வொரு கேள்வியும் வித்யாவை உலுக்கி எடுக்க, மனதை கல்லாக்கிக் கொண்டு “தப்பு பண்ணுனவனுக்கு சட்டம் தண்டனை குடுக்குது.. இதுல கருத்து சொல்ல நான் யாரு??” என்றவளின் வார்த்தைகள் வலியை தாங்கி வந்தது.. அதை கூறியபின் வித்யா அங்கே நிற்காமல் கடகடவென கோயிலை விட்டு கீழிறங்கியிருந்தாள்..

Post a Comment

1 Comments

  1. Semmaaa ... Pa.. vithyavum sekvaum kive pannankala. Illa Selva one side love ah

    ReplyDelete