Header Ads Widget

Welcome You all to Ruthitha's KKR family

Kanavu Kadhali's World

To share your valuable comments : kanavukadhali@gmail.com

அன்பே நீ யாரோடா-5




 

அத்தியாயம்-5

 வீட்டு வாசலில் கயிற்று கட்டிலை போட்டு குப்புற கிடந்தவனின் பழுத்து போயிருந்த முதுகில் எண்ணெய் விட்டு தடவிக் கொண்டிருந்தான் அருள்..

“அருளேய், உள்ள போயி திங்குறதுக்கு என்னமாச்சும் எடுத்துட்டு வாயேன்.. வாய் நமநமங்குது..”

“அட யப்பா.. நீயாவது செஞ்சதுக்கு மூணு நாள் உள்ள இருந்துட்டு வந்த.. ஒன்னும் பண்ணாம மூணு மணி நேரமா கருவாடா காயுறேனே ஒரு வாய் சாப்பிட்டியான்னு என்னை கேட்டியா?? வாய் நமநமங்குதாம்.. இங்க என் வயிறு கால் கால்னு கத்துது.. மூடிட்டு தானே இருக்கேன்.. செத்த வாயை அடக்குலே..” பசியில் கடுகடுத்தான் அருள்..

“புத்தியில உரைக்குற மாதிரி நாலு புத்திமதி சொல்லி திருத்துததுக்கு இல்லாம கூட போய் உக்காந்து தர்ணா பண்ணிட்டு கிடந்தல்ல.. அனுபவி..” என வந்து சேர்ந்தாள் கயல்..

“இங்கேரு புள்ள.. நடந்தது என்னன்னு தெரியாம பேசாத.. நானும் சொல்லிட்டே கெடக்கேன்.. ஒரு பய கேக்க மாட்டைக்குறான்.. நானே வாரேன்ன்னு வம்படியா ஜீப்புல ஏறி போறவனை என்ன செய்யட்டும்?? இவனை நம்பி ஜீப்புக்கு குறுக்கால போயிருந்தேன்னு வை.. நடுவீட்டுல மல்லாக்க போட்டு மாலைய போட்ருப்பீய.. பேசுதா பேச்சு..” என அருள் நொந்து கொண்டான்..

“இந்த வியாக்கியானத்தை அந்த உலக அழகி பின்னாடி நாக்கை தொங்க போட்டுட்டு அலையும் போது பேசியிருக்கணும்.. இப்ப பேசி என்ன பிரயோஜனம்.. அன்னைக்கே நாலு நார கேள்வி கேட்ருந்தா இன்னைக்கு செல்வாத்தான் இப்பிடி இருப்பானா?? இல்ல பண்ணுததெல்லாம் பண்ணிட்டு பெரிய நியாயவாதி மாதிரி அவ தான் கோயில்ல போய் நிப்பாளா??” செல்வாவின் மீதிருந்த கோபத்தை அருளின் மீது இறக்கி வைத்தாள் கயல்..

அவள் என்றதும் “ஒ.. காதலனை பாத்து கொஞ்சிட்டு அங்க போய் வேண்டிட்டு கிடக்காளோ.. வண்டிய எடுலே.. இன்னைக்கு ஒரு பிடி பிடிச்சு விட்டா தான் அடங்குவா..??” எழுந்து கைலியை தூக்கி கட்டினான் செல்வா..

“இவ்ளோ நேரம் உஷ் இஷ்னு பாம்பாட்டம் பாட்டு பாடிட்டு இருந்தான்.. அந்த புள்ளைன்னதும் ஐயாவுக்கு வந்த தெம்ப பாத்தியோ.. இவன நான் திருத்தவாக்கும்.. நாய் வாலை நிமித்தவாக்கும்..” என நொந்துக் கொண்ட அருள், வாசலில் வந்த லிங்கத்தை கண்டதும், “தோ, நாய் வாலை நிமித்துறதுல ஸ்பெஷலிஸ்ட் வந்திட்டாருல்ல..” மெல்லமாய் சொன்னான்..

“என்ன பெரியப்பா, திரும்பயும் கேஸு கீசு போட்டுட்டானுவளா??”

“எலேய்.. வாயை பினாயில ஊத்தி கழுவு.. வீட்டுக்கு பிடிச்ச சனி உன்னோட கழியட்டும்.. நடுவீட்டுல நின்னுக்கிட்டு நாராசமா பேசிக்கிட்டு.. நீங்க பண்ணுன நாடகத்துக்கு நடுத்தெருவுல கட்டி வச்சு உரிக்காம நாலு சுவத்துக்குள்ள வச்சு மிதிச்ச புண்ணியவானுக்கு நன்றின்னு சொல்லிட்டு வாரேன்..” என்றபடியே காலை கழுவினார்..

“கால்ல விழுந்தியரா?? தப்பென்ன நம்ம மேலயா??” முறுக்கி கொண்டு நின்ற செல்வாவை சிறிதும் மதியாமல், “ந்தா கனகம்.. நீ பெத்ததை நம்பி வாக்கை குடுத்துட்டு வாரேன்.. இனி தலைகீழ நின்னாலும் அவரு வீட்டு பக்கம் போவ மாட்டேன்னு ஒரு வார்த்த சொல்லிட்டு வர சொல்லு.. எனக்காவ பாக்க வேணாம்.. அவன் உடைச்சது பொம்பள புள்ள நெத்திய.. நம்மள பெத்ததும் பொம்பளை தானன்ற நெனப்பு இருந்தா போவ சொல்லு..” என்றார்..

“நானுமா பெரியப்பா..” என்ற அருளை “உங்க அப்பனையா கூட்டிட்டு போவட்டும்.. கூட நின்னது நீதானாலே.. மசமசன்னு நிக்காம நறுக்குன்னு கூட கிளம்பி போயிட்டு வா.. இல்லன்னா மைனரு அடுத்த பஞ்சாயத்தை இழுத்துருவாரு..” அதட்டிய லிங்கம், “அவனுவ வாயையே பாத்துட்டு நிக்காம சோத்தை வையு.. மனுஷன் வெளிய போயிட்டு என்னத்துக்குல்லாம் போராட வேண்டியிருக்கு..” துண்டை உதறி கொண்டார்..

“பாத்து பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வா ராசா..” நாடி பிடித்து கேட்ட கனகத்திடம், “உங்க புருஷரும் புள்ளையும் என்னை கல்லை கட்டி கிணத்துல ஆத்தாம இருந்தா இந்த பக்கம் வாரேன்.. எந்த பஞ்சாயத்தை இழுத்து வைக்க போகுதுகளோ..” புலம்பிக் கொண்டே நடந்தான்..

“லேய், பெரியப்பா சொல்லுததுல எதையவாது கேட்டு வைப்போம்.. நாளைக்கு ஒரு பேச்சையும் கேக்கலைன்னு சொல்ல முடியாதுல்ல..” என அருள் சொல்லி முடிப்பதற்குள், “இன்னைக்கு நடக்க போற சம்பவத்தை மட்டும் பாரு..” என கைலியை மடித்துக்கொண்டு நேரே நடையை கட்டினான் செல்வா..

வருஷகணக்காய் வீட்டை விட்டு பிரிந்திருந்தாலும் பண்பாடு மாறாமல் மாலையில் வாசல் தெளித்து பெரிய ரங்கோலியாய் வரைந்து கொண்டிருந்த வித்யா, கோலத்தை அழித்துக்கொண்டு வந்து நின்ற கால்களை கண்டு திகைத்தாள்..

மகளின் கைவண்ணத்தை ரசித்தபடியே காபி குடித்துக் கொண்டிருந்த தர்மா, மகள் மிரண்டு நிற்கும் செல்வாவை கண்டதும், “லேய், எங்க வந்த நீ??” வேட்டியை மடித்து கொண்டு கத்தினார்..

அப்பாவின் திடீர் கோபத்தில் மிரண்ட வித்யா இரண்டு எட்டுக்கள் பின்னெடுத்து வைக்க, “ஐயா, நான் தான் கூட்டியாந்தேன்.. அவனா வரல..” அவசரமாய் முன்னே வந்தான் அருள்.

“என் வீட்ல காலடி எடுத்து வச்ச அன்னிக்கே இவனையெல்லாம் காலை முறிச்சி போட்ருக்கணும்..” கோபத்தில் தர்மா கத்த, “இப்போ மட்டும் என்ன செஞ்சிருக்கியரு வாத்தியாரே.. எந்தரிச்சு நடக்க முடியாத மாதிரி பண்ணியாச்சுல்ல.. சந்தோசமா இரும்..” பதில் பேச்சு பேசினான் செல்வா..

“செத்த நேரம் சும்மா இருக்க மாட்டியா.. கூறுகெட்ட மவனே.. அடங்குதானா.. எந்நேரமும் குதிச்சுட்டு முறைச்சுட்டு.. வாங்கினது பத்தலையோ??” என்ற அருள், தர்மாவின் பக்கம் திரும்பி, “ஐயா பிரச்சனை பண்ணனும்னு வரல.. இனிமே எந்த பிரச்சனையும் வராதுன்னும் அன்னிக்கு நடந்ததுக்கு மன்னிப்பு கேட்டுட்டு வர சொல்லி பெரியப்பா சொன்னாரு..” சமாதானமாய் பேசினான்..

“அருளேய், உன் பெரியப்பாவுக்கு மண்டையில சரக்கில்ல.. ஊர் தலைவர் தப்பு பண்ணுன்னா தட்டி கேக்கதாம்லே செய்யுவேன்.. அது பிரச்சனையா தெரிஞ்சா ஒரு காலமும் முடிவு கிடைக்காது.. அதே நேரத்துல மன்னிப்புன்ற பேச்சுக்கே இடம் இல்லை.. அதையும் கேட்டுக்கோ..” நக்கல் தொனியாய் பேசினான் செல்வா..

“வார்த்தைய அளந்து பேசு.. சொல்லிட்டேன்.. யார் இங்க தப்பு பண்ணுதா?? ஆன்.. யார் மேல தப்புன்னு மொத்த ஊருக்குமே தெரியும்.. அமைதியா இருக்க வீட்டுல வந்து சண்டியர்த்தனம் பண்ணிட்டு இப்போ ஊர் தலைவரை குறை சொல்லுதியோ..” அதுவரை பம்மிக்கொண்டிருந்த வித்யா, அப்பாவை பேசியதும் செல்வாவிடம் சீறினாள்..

“அம்மாடியோவ், என்னா எகிறு எகிறுத.. மண்டை உடைஞ்சாலும் இந்த பேச்சு பேசுறவ, அப்போ நல்லா இருக்கும் போது நல்லபடியா நாலு வார்த்த பேசிருந்தா இப்பிடி ஆயிருக்காதுல்ல” பஸ் ஸ்டாண்டில் நடந்த சம்பவத்தை நினைவுப்படுத்தவும், அவனின் நோக்கம் தெளிவாய் புரிந்தது வித்யாவிற்கு..

“ச்சீய்.. உனக்கெல்லாம் கொஞ்சம் கூட பாவமே பாத்துருக்க கூடாது..” என முகத்தை திருப்பி கொண்டு நகர்ந்தவளை, “நீங்க தான் பாவம் புண்ணியம் பாக்குற பரம்பரை இல்லையே..” என நிறுத்த முற்பட்டான்..

அவனை தடுக்கும் பொருட்டு தர்மா குறுக்கே நுழைய நடுவில் இடமில்லாமல் கால் பிசகிய செல்வா அவன் உடைத்த ஜன்னல் கண்ணாடியிலே விழுந்தான்.. முதுகில் ஆங்காங்கே கீறி வைக்க, வீக்கத்திலிருந்து ரத்தம் கசிய துவங்கியது..

சண்டை சண்டையாயிருந்தாலும் ரத்தத்தை கண்டதும் பதற்றம் கொடுத்தது.. விடாபிடியாய் அவனை உட்கார வைத்து சட்டையை திறந்து தர்மா காயத்தை சோதிக்க, வித்யா பர்ஸ்ட் எய்ட்ஸ் பாக்ஸை எடுத்து வந்தாள்..

வித்யா பஞ்சில் மருந்தை தொட்டு காயத்தில் வைக்க வர, “பரவாயில்ல.. கண்ணாடி குத்துனதுல விஷம் ஏறி செத்தாலும் சாவேனே தவிர.. உன் கையால மருந்து கட்ட மாட்டேன்..” கொலைவெறியாய் முறைத்தான் செல்வா..

“ஆத்தா, நர்சுக்கு படிச்சிருக்கன்னு தெரியும்.. உன் கோவத்த இது காட்டிராத தாயி.. நல்லா இருப்ப.. லேய்.. ஆடாம அசையாம உக்காந்து தொலை.. சீக்கிரம் மருந்தை வைக்கட்டும்..” என அருள் குறுக்கிட, அவனை முறைத்தபடியே மருந்தை பஞ்சில் நனைத்தாள்..

“ஷ்ஷ்... ஆ.. எரியுது.. இப்ப உனக்கு என்னயணும்?? வாத்தியார் வம்புக்கு வரக்கூடாது.. அதானே.. யப்பா, வாத்தியாரே.. நான் எங்கேயும் சண்டைய போட்டு மண்டைய ஓடச்சிக்குறேன்.. பஞ்சாயத்து பண்ணுதேன்னு வந்துராதியரும்.. ஏற்கனவே நீங்க செஞ்ச பெரிய காரியமே என் தலையில கணக்குது.. வாத்தியார் இருக்க பக்கமே தலை வச்சு படுக்க மாட்டேன்.. போதுமா.. இப்போவாவது மருந்து வைக்கேன்ற பேருல அழுத்தி வைக்காத..” அதுவரை பல்லை கடித்துக்கொண்டு வலியை பொறுத்தவன் சட்டையை மாட்டினான்..

“ஆனா நேரத்துக்கு தகுந்தால மாத்தி மாத்தி பேசுத நீ இருக்க இந்த வீட்டு பக்கம் வருவேன்னு மட்டும் நினைக்காத..” வித்யாவை பார்த்து முகம் சுருக்கி விட்டு சென்றான்..

“லேய்.. செல்வா..” பின்னாடியே ஏலம் போட்டு வந்த அருள், “ஏம்லே.. அந்த புள்ள அதுவா தானே உதவி பண்ணுறேன்னு வந்தா.. அதை போய் அந்த பேச்சு பேசுற.. முகமே வாடி போச்சு தெரியுமா??” மூச்சு வாங்க கேட்டான்..

“ஆன் ஆன்.. அப்பிடியே இவுக ரோசா பூ.. நான் சொன்னதும் அப்பிடியே வாடி போயிட்டா.. அன்னைக்கு ஜீப்புல பிடிச்சு போட்டு கொண்டு போவும் போது கல்லு மாதிரி தான நின்னா.. மூணு நாளா தண்ணியில முக்கி அடிச்சாணுவ.. இவளுக்காவேண்டி வாங்கிட்டு வந்து நின்னா அவனை பாத்து நலம் விசாரிக்கா.. எம்புட்டு கொழுப்பு இருக்கணும்.. அனுபவிக்கட்டும்.. ஒத்தையா கோயிலுக்கு போவ தெரியுதுல்ல..”

“அட கிறுக்குபயலே.. நானும் உண்மையிலே சூடு சொரணை வந்து தான் பேசுதியோன்னு மண்டை குழம்பிட்டேன்.. அப்போ உன்ன அந்த கிழி கிழிச்சதுல தப்பே இல்ல.. ஒத்தையில கோயிலுக்கு போனதுக்கு இந்த குதி குதிக்க.. நெத்திய உடைச்சு விடுவ.. அவ பதிலுக்கு இடுப்புல சொருவுன சாவி கொத்தாட்டம் எங்க போனாலும் உன்னையும் கூட்டிட்டு போவணுமோ”

“ஸ்டேஷன்ல அந்த மொத்து மொத்திருக்கானுவல்ல.. என்னை சாவி கொத்தா தூக்கிட்டு போறதுக்கு என்னவாம்.. எல்லாம் அந்த கிறுக்கிக்காவ தான பண்ணுதேன்.. அதுக்குன்னு மடியில போட்டுலாம் கொஞ்ச சொல்லல.. வீரா கோயிலுக்கு வான்னு கூப்ட்ருந்தா போயிருக்க போறேன்.. பெரிய இவளாட்டம் உன் தொங்கச்சிய கூட்டிட்டு போயிருக்கா.. இவளும் வெக்கமே இல்லாம கூடவே சுத்துதா.. எங்கன்னாலும் வாலு மாதிரி கூடவே வந்துகிட்டு..”

“ஒன்னு பண்ணுவோம்.. ஜோதி காலை உடைச்சு வீட்ல போட்ருவோம்.. நீ ஜாலியா அந்த புள்ள கூடவே சுத்து.. சரியா?? என்னை ஏம்லே முறைக்க.. நெஞ்ச தொட்டு சொல்லு.. ஜோதி இருக்கது தான் பிரச்சனையோ.. அவ இல்லைன்னா அப்பிடியே ஐயாவ பாத்து ஓடியாந்துருவாளாக்கும்.. போவியா.. எப்பிடியும் உனக்கும் அந்த புள்ளைக்கும் குறுக்கால கௌசிக் மாதிரி உன் கூட பொறந்தவன் நிக்கான்.. இந்த லட்சணத்துல காதல் பண்ணுறாங்களாம்.. அட போடா.. வயிறு வேற கால் கால்னு பசிக்கு.. பெரியம்மா காய்ச்ச கஞ்சிய குடிச்சிட்டு பெறவு உன் கதையை கேக்கேன்..” முறைத்துக் கொண்டிருந்த செல்வாவின் முகத்தையே பார்க்காமல் ஓடியே விட்டான் அருள்..

அடிப்பதற்கு தென்னை மட்டையை உருவிய செல்வா, எதிரில் வந்த கயலை கண்டதும் கீழே போட்டான்..

“மருதாணியை வாங்கிட்டு போனியே.. நல்லா இருக்கா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லுததுக்கில்ல..”

“நான் போட்ட மருதாணிக்கு தான் உன் உடம்பு பூராம் செவந்து கெடக்கே.. போதாதாக்கும்..”

“நீ வச்சாலே அத்தானுக்கு உடம்பெல்லாம் செவந்திருது பாரேன்..” கன்னம் பிடித்து கண்ணடித்தான்..

கையை தட்டிவிட்ட கயல், “ஏன் செல்வாத்தான்.. இம்புட்டு நாளா கோமால கெடந்தியோ.. நீ மருதாணி வாங்கி தந்து ரெண்டு வாரம் ஆச்சு.. வச்ச தடம் கூட அழிய போவுது.. இப்போ வந்து விசாரிக்க..” நொடித்துக்கொண்டாள்..

“இதாவது விசாரிக்கானேன்னு சந்தோசபட்டுக்கோ.. ஆறாவது படிக்கும் போது என்னை கருவங்காட்டுக்குள்ள போட்டு வெளுத்து எடுத்தாணுவ.. இவன் எதிராளி டீம்.. இப்போ வரைக்கும் என்னன்னு கேட்டதில்லையே..” என்ற அருள் கரைத்து குடித்துக்கொண்டிருந்தான் பழைய சோற்றை..

“அதான் உன்னை புரட்டி எடுத்ததை கண்கூடா பாத்தேனே.. போதாது..” என்ற செல்வாவை பேவென பாத்துக்கொண்டிருக்க, “நீயும் உக்காருத்தான்.. நான் சோறு வச்சுட்டு வாரேன்..” என உள்ளே சென்றாள் கயல்..

“சின்னவன் வந்துட்டானா?? அவனுக்கு சுடு சோத்தை போடு.. வீங்குனது வத்துதது வரைக்கும் பழையதை தொடக்கூடாது.. பெறவு உன்னால தான் உடம்பு நோவுன்னு என்னை குத்தம் சொல்லுவான்..” என பானையை நகர்த்தி வைத்த கனகத்திடம், “ய்யோ அத்த.. அந்த மகாராணி ஊருக்கு வந்ததுல இருந்தே உங்க வீட்டு ராசா குளிர்க்காயச்ச்சல் வந்த மாதிரி தான் சுத்துதாப்புல.. இதுல நான் பழையதை குடுக்குறது ஒன்னு தான் குறைச்சல்..” என முனங்கியபடியே சாப்பாட்டை வைத்து கொடுத்தாள் கயல்..

அன்று இரவு,

தனதறையில் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்த வித்யா ஏதோ சத்தம் கேட்டு எழுந்தாள்.. ஜன்னலின் அருகே கரகரவென சத்தம் கேட்க உள்ளுக்குள் நடுக்கத்துடனே திறக்க, சட்டென பயந்தே போனாள்..

“யம்மா தாயே.. நான் தான் அருள் அண்ணே.. கத்தி கித்தி தொலைச்சிராத.. அடி வாங்க தெம்பில்ல...” டார்ச்சை முகத்தில் அடித்து காட்டினான்..

“மெண்டல்.. இப்ப தான் பயத்துல கத்துவேன் போல.. அட ச்சை.. லைட்டை ஆப் பண்ணு.. இந்நேரத்துல இங்க என்ன பண்ணுத?? திருட வந்தியா??” என வித்யா கேட்க,

“ஆஆ.. அபாபா..” வாயிலே அடித்துக்கொண்டு. “உனக்கு சப்போர்ட் பண்ண போயி அந்த சாத்தான் கிட்ட மாட்டிக்கிட்டேன்.. அர்த்த ராத்திரியில அடிச்சு பிடிச்சு மாடியேறி வந்தா களவாங்க வந்தேனான்னு கேக்கியே.. இந்த கூத்தை கேட்டுக்கிட்டு தான் நிக்கியேலே செல்வா..” என கீழே பார்த்து பேச, எட்டி பார்த்தாள் வித்யா..

விறுவிறுவென ஏறி பக்கத்து பால்கனியில் நிற்க, மற்றொரு கதவை திறந்து கொண்டு வந்தாள் வித்யா.. “யே.. நீ எப்படி இங்க வந்த??” என இடையில் கரம் குத்தி நிற்க, “பாத்தியாலே.. எதுக்கு வந்தன்னு கேக்காம எப்படி வந்தேன்னு கேக்குறா.. அத்தான் மேல எம்புட்டு அக்கறை.. இப்பிடி ஒரு ஆச வார்த்தைய கேக்க தான்மா பைப்பை பிடிச்சு ஏறி வந்தேன்..” கன்னத்தில் இடித்தவனை தீயாய் முறைத்தாள் வித்யா..

“இங்க எதுக்கு வந்த??” விரலுயர்த்தி கேள்வியை திருத்தினாள்..

“அப்பிடி வா வழிக்கு..” அந்த விரலை பிடித்து சுற்றி முதுகின் பக்கமாய் நிறுத்தினான்..

“காலையில உங்க ஐயாவும் நீயும் தள்ளி விட்டதுல ஏற்கனவே வீங்கி கிடந்ததெல்லாம் வெடிச்சு போச்சு.. இப்ப வின்னுவின்னுனு தெறிக்கு.. உறக்கமே இல்ல.. பிறவு தான் அருளு சொன்னது ஞாவத்துக்கு வந்துது.. நீயும் இதுக்கு தான படிச்சிருக்க.. ஒழுங்கா என்ன ஏதுன்னு பாரு..” என்று சட்டையை கழற்றினான்..

“கொஞ்சமாச்சும் அறிவிருக்கா.. நடுராத்திரியில ஒரு பொம்பள புள்ள முன்னாடி சட்டையை கழட்டிட்டு நிக்கோமேன்ற விவஸ்தை இருக்கா??” தலையிலடித்துக்கொண்டு திரும்பி கொள்ள, “தங்கச்சி முன்னாடி இப்படி நிக்குறதுக்கு என் மச்சானுக்கு என்னா வெக்கம்..” என ஓட்டை வாயை திறந்தான் அருள்..

“இந்த ஊரு உலகத்துல புருஷன் பொண்டாட்டி முன்னாடி சட்டை இல்லாம நின்னதே இல்ல பாத்தியா?? ரொம்ப சீன் போடாம மருந்த போடுடி.. அத்தானுக்கு எரியுது..” என பல்லை கடிக்க, “பகல்லேயே போட்ருக்க வேண்டியது தான.. அப்போ மருந்து விஷம் வேஷம்னு பேசிட்டு போயிட்டு இப்ப வந்து அத்தான் நொத்தான்னு கண்டதையும் பேசிக்கிட்டு.. அர்த்த ராத்திரியில அடுத்தவ தூக்கத்த கெடுக்குறதையே பொழப்பா வச்சுக்கிட்டு..” முனங்கியபடியே மருந்தை எடுத்தாள்..

“யே.. ரொம்ப சிணுங்காம மருந்த போடு.. உன் தூக்கத்தையும் கெடுக்கல.. துக்கத்தையும் கெடுக்கல.. படிச்சிருக்காளேன்னு தேடி வந்தா எரிச்சலை கிளப்பிக்கிட்டு..” செல்வாவின் கோபம் மெல்ல எழ, “அதான் எரிச்சலை கிளப்புவேன்னு தெரியும்ல.. போவேண்டியது தான..” பதிலுக்கு பேசினாள் இவளும்..

“ஒரு மண்ணும் போட்டு கிழிக்க வேணாம்.. நீ எப்ப பாத்தாலும் அவனுக்கே கொடை பிடிச்சிக்கோ.. இனி உன்னை தேடி வந்தேன்னா ‘எதுக்குலே நாயே வந்த??ன்னு செருப்பாலே அடி..” சட்டையை உதறினான்..

“யம்மா தாயே, அவன சொரிஞ்சு விடுததையே ஒரு வித்தையா வச்சுட்டு திரியுரியா?? அவனுக்காவ பாக்கலைன்னாலும் நடுவுல கெடந்து  அல்லாடுறேனே.. எனக்காவ பாக்க கூடாதா.. முக்கு கடை முருகேசன் வீட்டுல கடன் வாங்கி பேட்டரி கொண்டு வந்ததுக்காவது இரக்கம் காட்டிருக்கலாம்..” என அருள் பாவமாய் முகத்தை வைக்க,

“ஆன் ஆன்.. நான்தான் இழுத்தேன் பாரு.. சும்மா நீயும் என்னையே காய்ச்சாத.. அண்ணனேன்னு பாக்கேன்.. இல்லைன்னா அவ்ளோ தான்.. இந்தா.. இதை.. பிடி காயம் இருக்க இடத்துல போடணும்.. இது வீங்குனதுக்கு.. இந்த மாத்திரைய போட்டா வலி கொஞ்சம் கேக்கும்..” என கொடுத்தாள்..

“அருளேய், நீ வாறியா?? இல்ல அம்புட்டு பேரையும் கத்தி கூப்பிட்டதுக்கு பெறவு அடி வாங்கிட்டு வாறியா??” என்ற செல்வாவின் குரலில் “இவன் செஞ்சாலும் செய்வானே..” கொடுத்த மருந்தை தலைப்பாகையில் கட்டிக்கொண்டு பின்னாலேயே ஓடினான்..


Post a Comment

1 Comments