Header Ads Widget

Welcome You all to Ruthitha's KKR family

Kanavu Kadhali's World

To share your valuable comments : kanavukadhali@gmail.com

அன்பே நீ யாரோடா-2

 அத்தியாயம்-2



பேன்சி கடையின் முன்னே வித்யாவிடம் காட்டமாக பேசிக்கொண்டிருந்த செல்வாவை பார்க்க பார்க்க ராமிற்கு பிபி எகிறியது.. பஸ்ஸ்டாண்டில் வைத்து ஏடாகூடமாக நடந்து கொள்ளும் தன் தம்பியை ஊர்க்கார்கள் பார்த்து விட்டால்.. அவ்வளவு தான்.. பஞ்சாயத்து வைத்து பாலூற்றி விடுவார்கள்..

“லேய் அருளு.. நீ அவனை இங்க வரச்சொல்லேன்.. எனக்கு பயமா இருக்கு..” என்று நடுரோடென்றும் பார்க்காமல் குத்த வைத்து அமர்ந்திருந்தவனை உலுக்க, “ஆன்.. நொட்டுறேன்.. வேலியில போற ஓணானை வெட்டியில இழுத்து விட்டுட்டு வர சொல்லணுமாம்.. அவன் ஏழரையை கூட்டாம வர மாட்டான்.. இன்னைக்கு கம்பி எண்ண போறது உறுதி.. ஜட்டியோட ஸ்டேஷன்ல உக்கார இப்பவே ப்ராக்டீஸ் பண்ணிக்குறேன்..” என திரும்பி கொண்டான்..

சுட்டுவிரல் உயர்த்தி தன்னை மிரட்டிக்கொண்டிருந்த செல்வாவை அனுப்பும் வழி தெரியாது விழித்து கொண்டிருந்தாள் வித்யா..

“சரி.. நீ சொல்ற மாதிரி நாதியில்லாம நடுரோட்டுல கிடந்தாலும் உன்னை தேடி வரலை.. போதுமா?? கிளம்பு முதல்ல..” போன் செய்த நேரத்திற்கு வீட்டிலிருந்து ஆட்கள் கிளம்பியிருப்பார்கள் என்ற பயம் அவளை பேச வைத்தது..

“பாத்தியா.. இப்பயும் நீ திருந்தல.. எவ்ளோ தைரியம் இருந்தா என்னையே கிளம்புன்னு சொல்லுவ.. நீ சொன்னதுக்காவே இங்க தான் நிப்பேன இதென்ன உங்கப்பன் போட்ட ரோடா??” பேக்குகளை வைத்திருந்த திண்டில் வசதியாய் அமர்ந்து கொண்டான்..

“பிரச்சனை பண்ணாம ஒழுங்கா போயிரு.. இல்லன்னா கத்தி ஆட்களை கூப்பிட வேண்டியிருக்கும்..” பயமுறுத்தி பார்க்கலாம் என்று முயற்சிக்க, “ஒ.. அப்பிடி.. சரி கத்தி கூப்பாடு போடணும்னு முடிவு பண்ணிட்ட.. உன் கையை பிடிச்சு இழுத்தேன்னு கத்து.. வீராவுக்கு அது தான் பழக்கம்..” என்று கையை பிடிக்க போக,

“என்னை ஏன் இப்படி கொலையா கொல்லுற.. மறுபடியும் உன்கூட இந்த கோலத்துல பார்த்தா வெட்டி புதைச்சிருவாங்கன்னு உனக்கே தெரியாதா??.. கையெடுத்து கும்பிடுறேன்,, ப்ளீஸ் கிளம்பு வீரா..” என குலுங்கி அழவே செய்தாள்..

“இப்பிடி அழுது அழுது தானடி மனுஷனை பைத்தியமாக்கி வச்சிருக்க.. கடைசியா கூப்பிட்டியே.. அதுக்காக பாக்குறேன்.. ந்தா பிடி.. இந்த வளையலை கையில போடு.. நான் போறேன்..” மனசாட்சியே இல்லாமல் சிவப்பு வளையலை தெனாவட்டாய் நீட்ட,

“இல்ல.. வேணாம்.. வளையல் எப்படின்னு வீட்ல கேப்பாங்க..” பயத்தில் உதறல் எடுத்தது..

“அவன் வாங்கி குடுத்ததை என்னன்னு சொல்லி சமாளிச்சியோ அதையே சொல்லு..”

“..” திருதிருவென விழித்தாள் அப்பாவி பேதை

“ஒன்னு கூடவா வாங்கி தரலை.. பிச்சைக்காரபய.. அவன் கெடக்கான்.. ஒழுங்கு மரியாதையா நீயே வாங்கி போடுறியா இல்ல நான் பிடிச்சு போட்டு விடணுமா??” என்று அதட்ட, பிரம்பை பார்த்து மிரண்ட குழந்தையாய் வாங்கி கடகடவென கையில் திணித்தாள்..

“பாத்து பொறுமையா போடு.. கண்ணாடி நொறுங்கி குத்துனா அதுக்கும் என்னையே குத்தம் சொல்லுவ.. ஒரு வளையலை போட தெரியுதா கொண்டாட தெரியுதா??” தலையிலடித்து ஓரிரு வளையல்களை அணிவித்து விட்டு, “கேட்டா வருங்கால மருமகன் வாங்கி குடுத்ததுன்னு சொல்லு.. வர்றட்டா..” என சென்ற பின்னரே மூச்சு சீரானது வித்யாவிற்கு..

சாலையை கடந்து வந்த செல்வாவை இருவரும் ஆவென வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருக்க, செல்பேசி அலறியது.. “என் மூஞ்சில என்ன தேனா வடியுது.. கொண்டு வந்த பேக்கை பின் கம்பியில சேர்த்து கட்டு..” என அருளிடம் கடிந்தபடியே சட்டை பையிலிருந்த போனை எடுத்தான்..

“ம்ம்.. சொல்லு..” என ஆரம்பித்தவனுக்கு மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ கோபத்தில் தாடை இறுகியது... “வளருத பிள்ளைங்க வாழ்க்கை மண்ணாங்கட்டி ரொம்ப வியாக்கியானமா நீட்டி முழக்குற பெரிய மனுஷன் பண்ணுற காரியம்ல.. அப்போ மொத்த ஊரும் ஆமாஞ்சாமி தான் போடும்.. நீ அங்கயே இரு.. நான் வந்துடுறேன்..” என இரைந்தவன், “சீக்கிரம் வண்டியில ஏறி தொலை..” என்று புல்லட்டை முறுக்கினான்..

அவனிருந்த வேகத்திற்கு குறுக்கே பேசினால் ராமிற்கு பதில் தன் தலை உருண்டு விடும் என்பதால் நல்ல பிள்ளையாக இருவருக்கும் நடுவில் அமர்ந்து கொண்டான் அருள்..

வழக்கமாக செல்லும் சாலையில் செல்லாமல் குளத்திற்குள் இறங்கியது வண்டி.. “வத்தி போன குளத்துக்குள்ள காணா பொணமா போவணும்னு உன் விதியில எழுதியிருக்கு போல..” அவனுக்கு கேட்காத வண்ணம் ராமின் காதில் ஓதி பீதியை கிளப்பி கொண்டிருந்தான் அருள்..

“லேய்.. பின்னாடி என்ன குசுகுசுன்னு பேச்சு??”

“அது ஒண்ணுமில்ல செல்வா.. கவர்மென்ட் பத்து இன்ச்க்கு தார் ரோடு போட்ருக்கு.. அதை விட்டுப்புட்டு கல்லு முள்ளுமா கெடக்க குளத்துக்குள்ள போறியேன்னு பேசிட்டு இருந்தோம்..”

“அதெல்லாம் காரணமாத்தான்..” என்ற செல்வாவின் காரணம் ராமிற்கு புரிந்தது.

“நீ சொல்லுத தொனியே சரியில்லையே.. எதுக்கும் என்னை போலீஸ் ஸ்டேஷன்ல இறக்கி விட்டுட்டு போயிரு.. விஷயம் தெரிஞ்சு எங்க ஐயா தோலை உரிக்குறதுக்கு போலீஸ் காரங்க லாடம் கட்டுதது எவ்வளவோ மேல்..” தன்னப்பாட்டிற்கு புலம்பி கொண்டிருந்தவனின் வாயை அடைக்கும் வேகத்திற்கு ப்ரேக் அடித்து நின்றது புல்லட்..

“லேய்.. நான் என்ன பொம்பள புள்ளையா.. சடன் ப்ரேக் போட்டு முன்னாடி கூப்பிடுத..” என சலித்தபடியே இரங்கிய அருள் சுற்றி அளந்து விட்டு, “ஆன்.. காக்கா கூட வராத பொட்ட காட்டுக்கு வந்தாச்சு.. யே ராமண்ணே.. இறங்கி வந்து புதைக்கதுக்கு நல்ல இடமா பாத்து சொல்லு.. நான் தோண்டிட்டு இருக்கேன்.. அதுக்குள்ள மாப்பிள்ளை வெட்டிரட்டும்.. அங்க இங்கன்னு ஓடாத.. இரத்த வாடைக்கு நாய் பேயெல்லாம் வந்து செத்த பொணத்தை தோண்டி திங்கும்..” ஏதோ கிடாவெட்டு விழா போல சாவகாசமாக பேசிக்கொண்டிருந்தான்..

“அடச்சீ.. வாய மூடு.. கிறுக்கு மாதிரி என்னத்தயாவது உளறிக்கிட்டு.. இந்தா சாவியை பிடி.. இப்பிடியே நேரா போனின்னா சிமென்ட் ரோடு வரும்.. போஸ்ட் மேன் வீட்டை பிடிச்சு அப்பிடியே கிழக்க திரும்புனா தெரு வந்துரும்.. இவனை வீட்ல இறக்கி விட்டுட்டு நீ பால் பெரியப்பா வீட்டுக்கு வந்து சேரு..” என்று செல்வா கூற,

“அப்ப போட்டு தள்ள நிறுத்தலியா??” என தலையை சொரிந்தபடியே திரும்ப, அப்பாவியாய் முறைத்தான் ராம்..

“எங்கிட்ட இருந்து பறிச்சுட்டு போவ தெரிஞ்சுதுல்ல.. பதிலுக்கு நானும் பறிக்க வேணாம்..” என்ற செல்வாவின் விழிகள் உஷ்ணமாய் ராமை தீண்டி மீள, “நீங்க பறிக்கதெல்லாம் இருக்கட்டும்.. புளியந்தோப்புல பழந்தட்ட போவணும்.. வேலை சீக்கிரம் முடிஞ்சிரும்ல..” என கேட்டான் அருள்..

“ம்ம்.. நீ வர்ற நேரத்தை பொறுத்து சீக்கிரம் முடியும்..” என்று விட்டு எதிர்புறத்தில் நடக்க துவங்கினான் செல்வா..

செருப்பு கூட போடாமல் கருவேலங்காட்டின் வழியே நடந்து கொண்டிருந்த செல்வாவின் மூச்சு காற்று அனலாய் பறந்து கொண்டிருந்தது..

சிமென்ட் சாலையில் இறங்கியதும் கைலியை தூக்கி கொண்டு சட்டை கையை முறுக்கி கொண்டான்.. அந்த பெரிய வீட்டின் காம்பவுண்ட் சுவற்றில் அழகிற்காக வைக்கப்பட்டிருந்த பூச்செடியை தட்டிவிட, விழுந்து உடைந்த சத்தத்தில் அங்கு கூட்டமே கூடியது..

அத்தியங்கரையின் முக்கிய பொறுப்பில் இருக்கும் தர்மராஜின் வீட்டிற்கே இந்த நிலை என்றால் ஊர் கூடாமல் இருக்குமா??

“வெளிய வாய்யா வாத்தி..” உரத்த குரலில் கத்த, “ஏ, தம்பி.. என்ன நீ உன் பாட்டுக்கு வந்து ஏலம் போட்டுட்டு கெடக்க??” கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.

“நான் என்ன யோவ் தர்மா வெளிய வான்னா கூப்பிட்டேன்.. மரியாதையா வாத்தின்னு தானே கூப்பிடுதேன்.. ஊருக்கு ஒழுக்கம் சொல்லி குடுக்க வெளக்கென்ன.. நீ மரியாதைய பத்தி பேசாத..” யார் பேச்சையும் கேட்பதாய் இல்லை..

“வெளிய வர சொல்லுங்கய்யா.. எப்ப பார்த்தாலும் ஊர் நல்லது.. ம**று, தயிருன்னு என்னாம்மா பேசுவாரு.. இந்த ஊரோட வருங்கால சந்ததிக்கு எவ்ளோ பெரிய உதவி செஞ்சிருக்காருன்னு இந்த உலகம் தெரிஞ்சிக்க வேணாம்.. உண்மைய சொன்னா உள்ளுக்க போய் ஒளிச்சிப்பியரோ..” என்றவன் கீழே கிடந்த கூரான கல்லை எடுத்து கண்ணாடியை உடைக்க தயாரானான்..

வெளியில் கேட்கும் சத்தத்தின் உண்மை புரியாது திருஷ்டி கழிப்பதற்கான பொருட்களை முந்தியில் அள்ளிக்கொண்டு ஓடி வந்தார் ஒன்றுமறியாத இந்துமதி..

உக்கிரமான இவனின் தோற்றம் கண்டு கலங்கி நிற்க, “எங்க வாத்தியாரு?? இப்போ.. இங்க.. என் முன்னாடி வந்து நான் கேக்க கேள்விக்கு பதில் சொல்லலை..” என மொத்த கூட்டத்தையும் ஒற்றை கல்லில் மிரட்டிக்கொண்டிருக்க,

“முன்னாடி இல்ல பின்னாடி நிக்குறேன்.. என்ன கேக்கணும்??” என வந்து நின்ற தர்மாவின் குரலில் மொத்த கூட்டமும் திகைத்து பின்னால் அடியெடுத்து வைக்க, கூட்டத்தில் பலரும் மடித்து கட்டியிருந்த வேட்டியை கீழிறக்கி விட்டனர் மரியாதையின் நிமித்தம்..

பார்ப்பதற்கு ஆஜானுபாகுவான ஆள் தர்மா.. கஞ்சு போட்ட வெள்ளை சட்டையும் ஆளுமையான குரலும் அவரின் அடையாளமாய் அமைந்தது.. அதே ஊரில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியதால் பரம்பரை பரம்பரையாக காத்து வந்த பஞ்சாயத்து தலைவர் என்ற பதவியை தாண்டி வாத்தியார் என்ற அடைமொழி ஒட்டிக்கொண்டது..

அப்பேர்ப்பட்ட மரியாதையான ஆளை தான் இவ்வளவு நேரம் நாராசமாய் கிழித்து கொண்டிருக்கிறான் செல்வா.. அவரை கண்டபின்னும் ஏற்றி கட்டிய கைலியை இறக்கி விடுகிறானா?? கையில் எடுத்த கல்லையும் கீழே போடாமல் வீராப்பாய் முறுக்கி கொண்டு நிற்கின்றான்..

“அடுத்த வாரம் வெளிநாட்டுக்கு வேலைக்கு போவ இருந்தவன் மேல போலீஸ் கேஸ் குடுத்து அவன் வாழ்க்கைய அழிச்சதுக்கு என்ன பதில்??” திமிராய் கேட்க, “அவ்ளோ பொறுப்பு இருக்கவன் கோயிலுக்கு முன்ன கட்அவுட்டுக்கு அடிச்சிக்கிடாம ஒழுக்கமா இருந்துருக்கணும்.. சண்டையில சிலை மேல செருப்பு வீசுனவனை தான் போலீஸ் பிடிச்சுட்டு போயிருக்கு.. சட்டத்துக்கு யாரையும் தெரியாது.. தப்பு பண்ணுனா தண்டனை கிடைக்கும்..” என நிதானமாக கூறினார்..

“அப்போ கேஸை வாபஸ் வாங்க முடியாது??” தன் பிடியில் உறுதியாய் நின்றவனிடம் வந்த தர்மா, “இங்க பாரு, எனக்கு அவன் மேல எந்த முன்பகையும் கிடையாது.. தப்பு பண்ணுனான்.. உள்ள போயிருக்குறான்.. தேவையில்லாம பிரச்சனை பண்ணாம இடத்தை காலி பண்ணு..” என பொறுமையாகவே பேசினார்..

“ஒ.. முன்பகை இல்லை..” என்றவனின் பார்வை தர்மாவின் பின்னே நின்ற வித்யாவின் மீது படிந்தது.. துணுக்குற்ற பார்வதி ஓடி வந்து, அவளை உள்ளுக்குள் இழுத்து சென்றார்..

“அவன் வெளிய வாரது வரைக்கு நான் போ மாட்டேன்..” நடுமுற்றத்தில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டான் செல்வா..  

To be Continued...

Post a Comment

0 Comments