Header Ads Widget

Welcome You all to Ruthitha's KKR family

Kanavu Kadhali's World

To share your valuable comments : kanavukadhali@gmail.com

புரட்டப்படாத பக்கங்கள்

 


 

அன்று காலை,

   விருப்பமேயின்றி தான் எழுந்து கொண்டேன்.. விருப்பமில்லை என்றாலும் விரக்தி என்பது அதிகமாகவே கொண்டிருந்தேன்.. மெண்டலி டிப்ரசிட் என்ற மனநிலையினால் தூக்கம் என்பது குறைந்து கெட்ட கனவுகளின் ஆக்கிரமிப்பு அதிகமிருப்பதால் அனர்த்தமாய் பின்னந்தலையில் அழுத்தம் உருவாகி அவஸ்தையாகி கொண்டிருக்கிறது.. எதை குறித்து என்ற கேள்வி மேலும் எனது மனசிதைவை அதிகப்படுத்தும் என்பதால் கூறுவதை மட்டும் கேட்டுகொள்ளுங்கள்..

  ஒரு சூழ்நிலையை கூறுகிறேன்.. நிதானமாக கண்களை மூடி அவ்விடத்தில் தங்களை நிறுத்தி அந்த உணர்வை அனுபவித்து பாருங்கள்.. புரிய வாய்ப்புள்ளது.. நார்திசைகள், எட்டு பரிமாணங்கள், பதினாறு கோணங்கள் இப்படி எத்திசையிலும் தப்பிக்க இயலாத அறையில் மாட்டி கொண்டு வாழவும் முடியாது சாகவும் முடியாது என்ற நிலை என்றால் தங்களின் அடுத்தக்கட்ட செய்கையாக என்னவிருக்கும்??

 அதே நிலையில் தான் நானும் உள்ளேன்.. விரிந்து கிடந்த கூந்தலை அள்ளி முனியும் பொழுது கற்றை கற்றையாக கையோடு வருகிறது.. ஒருவேளை கடவுள் கண்முன்னே வந்து நின்றால் எனக்கிருக்கும் பல கேள்விகளில் இதுவும் ஒன்றாக இருக்கும்.. மனதின் வேதனைகளை வெளிப்படுத்தாமல் வாயானது காப்பது போல சிந்தையின் சித்திரவதைகளை கூந்தலோ முகப்பருவோ காப்பது போல படைக்கவில்லை..

  சோர்வாக எழும் பொழுதே முதுகு தண்டோடு பொருந்தியுள்ள கழுத்து நரம்புகளில் ஊசி நுழைப்பது போன்ற வலியும் கைமூட்டுகலினுள் மூட்டை பூச்சி புகுந்து விட்டது போன்ற வேதனையும் இருப்பினும் மெல்ல செல்கிறேன்..

   “என்ன வேலை செஞ்சு கிழிக்குறன்னு பத்து மணி வரை தூக்கம் வேண்டி கிடக்கு..” என்ற திட்டுகள் காதில் விழும் பொழுது திரும்பி கடிகாரத்தை பார்த்தால் மணி ஆறரை அப்பொழுது தான் தொடவிருக்கும்.. பல்துலக்க குறிப்பிட்ட நேரம்.. ஒரு நிமிடம் அதிகமாயினும் உள்ளிருந்த குரல் எட்டிப்பார்க்கும்..

  சரியான நேரத்திற்கு சென்றால் சூடான காபி கிடைக்கும்.. நிம்மதி இல்லை.. முதல் மிடறினை விழுங்கும் பொழுதே “அடுத்து என்ன பண்ண போற?? உன்கூட சேர்ந்த ஒவ்வொருத்தனும் காம்படீட்டிவ் எக்ஸாம் எழுதி வேலைக்கு போறான் பாரு.. நீ இன்னும் வீட்ல இருந்து என் மானத்தை வாங்குற..” என கேள்வியில் தொடங்கப்பட்டு அதற்க்கான பதிலும் தீர்வும் கூடவே கிடைக்கப்பெறும்.. காபி ஆறினால் மட்டும் கசந்து விடுவதில்லை.. இப்படியாக நாறினாலும் கசந்து போகும்..

  காபி வேளை என்பதால் கம்மியாகவும் உணவு நேரங்களில் “உரைக்குதா??.. உரைக்குதா??” என்ற சபிக்ஸோடு சோதனைகள் நடைபெறும்.. எங்கும் தப்பவும் பதிலுறுக்கவும் மறுத்து பேசவும் உரிமைகள் கிடையாது அவர்களின் பாணியில் தகுதி கிடையாது..

   இவையனைத்தையும் கேட்கும் பொழுது, நான் ஆண் என்றோ பல ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் தண்டசோறு சாப்பிடுபவன் என்றோ எண்ணினால் இந்த நாட்டில் வாழ்வதற்கும் பொது மக்கள் என்ற முத்திரை குத்தப்படுவதற்கும் தகுதியானவர்கள் எனலாம்.. வீட்டிற்கு வந்து அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு சென்றால் நிச்சயம் என்னை காறி உமிழ்ந்து விட்டு, “கொழுப்பை பாரேன்..” என கூறி விட்டு செல்வீர்கள்..

   உங்களின் அனுமானம் இங்கு தவறென்ற படியால் உங்களின் குற்றஉணர்ச்சியை பயபடுத்தி இதை முழுவதுமாக நான் கூறியே ஆக வேண்டும்.. நான் ஒரு பெண்.. வேலைக்கு போகாமல் நேரத்தை கடத்துவதற்கு நான் படிப்பை முடிப்பதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கிறது..

   வீட்டின் வேதனைகளை கடந்து கல்லூரி சென்றால் என்னை பற்றிய அவர்களின் அனுமானம் அழுவதா?? அணைப்பதா?? என தெரியாமல் குழப்பி விடுகிறேன்.. இந்த நோய்தொற்று காலத்தில் வேதனைகளில் பழகி விட்ட நான் புதிதான ஒரு பிரச்சினையை எதிர்கொண்டேன்..

   மன ஆறுதலுக்காக வாட்சாப் ஸ்டேடஸ்களை பார்த்து கொண்டிருந்த போது, ஒரு வரி.. “இந்த உலகத்துலேயே மிக பெரிய முட்டாள்தனம் கவர்மென்ட் வேளைக்கு போனா தான் லைப்ல செட்டில் ஆக முடியும்னு நம்புறது..” என்பது தான்.. பழக்கதோஷத்தில், “ஆமாம் அது உண்மையே..” என பதிலனுப்பி விட்டேன்.. அதன் பதிலோ, “உனக்கு என்ன பிரச்சினை..” என எள்ளலாகவே கிடைத்தது..

   நீங்கள் வீட்டில் வளர்க்கப்படும் சாதாரணமான செல்ல பிராணிகள் என்றால், நானோ அரசு வேலை என்ற பலிக்காக மட்டுமே வளர்க்கப்பட்ட ஆடு.. சில இடங்களில் குழந்தை பிறந்ததுமே காதில், “இன்னார் தான் நமது கடவுள்.. அவரை நாம ஆராதிக்க வேண்டும்..” என கூறி வளர்ப்பராம்.. அப்பொழுது தான் பிஞ்சு மனதில் கருத்து ஆழப்பதியும் என்ற எண்ணம்.. அதே போல சிறு வயதில் இருந்தே பார்ப்பவர்கள் அனைவருமே, “கவெர்மென்ட் வேலைக்கு தானே..” என கேட்கும் பொழுது என்காதில் மட்டும் “பலியாடு தானே..” என்று கேட்கும்..

   ஆம், நான் ஒரு அரசு ஊழியரின் வாரிசு.. பரம்பரை பரம்பரையாக அரசு உத்தியோகத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.. இதனை பெருமைக்காகவோ இல்லை கர்வத்துடனோ கூறுகிறேன் என நினைத்து கொண்டால் மீண்டும் அதே தவற்றை செய்கிறீர்கள்.. மீண்டும் அதே குற்ற உணர்வோடு இதில் பயணியுங்கள்..

    இந்த ஒரு சம்பவம் மட்டுமில்லை.. நிறைய நிறைய உள்ளது.. அவற்றை எழுத்துகளாக வடித்தால் திருமறையில் புலம்பல் அதிகாரங்களை மிஞ்சியதாக போய்விடும்.. மூளையில் பதிய வைப்பதற்கு மூன்று உவமைகள் போதுமென்று எண்ணுகிறேன்..

   இரண்டாவதாக, பல நாட்கள் கழித்து திறக்கப்பட்ட கல்லூரிக்கு உற்சாகமாக சென்ற நாங்கள் பொதுவான காரியங்களை குறித்து விவாதித்து கொண்டிருக்கையில் அரசியல் பற்றிய அலசல் ஆரம்பமானது.. பெண்கள் அரசியல் பேச கூடாது என்றில்லை.. எனக்கு அரசியல் பற்றிய எந்த அனுமானமும் கிடையாது..

   எந்த தலைவருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற விவாதத்தில் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட, “எனக்கு எந்த ஐடியாவும் இல்லை.. யார் ஆட்சிக்கு வந்தாலும் என் வாழ்வில் எந்த அதிசயமும் நிகழப்போவதில்லை..” என்றேன்.. இது எனது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்.. இதற்கும் என் சொந்த வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை..

  “உனக்கு யார் வந்தால் என்ன?? சரியான நேரத்திற்கு சம்பளம் ஏறி விடுகிறதே..” என்றவனை மூக்கை உடைக்கும் பொருட்டு, “தகுதி தேர்வினால் என்னை பெற்றவர்கள் பதவியில் இருக்கிறார்கள்.. அதில் உனக்கு என்ன பாதிப்பு..” என கேட்டு விட உதடுகள் துடித்தது.. ஆனால் வாயை திறக்கவேயில்லை.. என்ன கூறினாலும் அந்த அடையாளம் மாறிவிட போவதில்லை..

    மற்றொரு நாள், இணையத்தில் வியாபாரம் ஒன்றுள்ளது வருகிறாயா என்று நண்பனின் அழைப்பு வர, இணையத்தில் நடக்கும் போலி வியாபாரங்களை பற்றிய விழிப்புணர்வு இருந்த காரணத்தினால் மறுத்து விட்டேன்.. அதற்கும், “உனக்கு என்ன?? காசுக்கு பஞ்சமில்லை.. மாதா மாதம் சம்பளம் வருகிறது..” என்றான்..

   இது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே வேதனையில் உழலும் எனக்கு மேலும் மனஉளைச்சலை அளிக்கிறதோ என்று தோன்றுகிறதோ.. இதில் எனக்கு என்ன குழப்பம் என்றால் மற்றவர்களை காட்டிலும் எந்த நிலையில் உயர்வாக இருக்கிறோம்.. “வாத்தியார் வீட்டு பிள்ளை..” என்ற அருவருப்பான ஆடை மொழியை தவிர..

    பள்ளி காலங்களில் இந்த அடைமொழிக்கு இழுக்கு வர கூடாது என்பதற்காக எங்களின் சுயம் ஒடுக்கப்படுகிறது.. வளர வளர நல்மதிப்பிற்க்காக எங்களின் ஆசை நசுக்கப்படுகிறது.. இயல்பாக வாழ இயலாது.. வீட்டிற்கு வரும் உயர்ந்த மனிதர்களிடம் எங்களின் ரேங் கார்ட் தப்பிப்பதில்லை.. காமிரா என்ற ஒன்றில்லாமலேயே வாழ்நாள் முழுவதும் கண்காணிக்கப்படுகிறோம்..

    விருப்பப்பட்ட படிப்பினை தேர்வு செய்ய முடிவதில்லை.. மற்றவர்களை போல உதவி தொகையோ அரசு சலுகையோ கிடைப்பதில்லை.. இதை தவிர்த்து நாங்களும் மற்றவர்களை போல தானே வாழ்கிறோம்.. என கூறினால் சம்பாத்தியத்தில் வந்து நிற்கிறார்கள்.. நீங்கள் பெட்டி கடையில் கணக்கு எழுதி கடன் வாங்குகிறீர்கள்.. நாங்கள் சான்றிதழ்களில் கையொப்பமிட்டு வங்கியில் கடனை வாங்குகிறோம்..

    பெட்டி கடைக்காரிடம் ஒரு நாள் அவகாசம் கேட்டால் கிடைக்கப்பெறும்.. வங்கிகளில் அதற்கான வாய்ப்பே அளிக்கப்படுவதில்லை.. கடனை திரும்ப அளிக்காவிட்டால் ஒரு தெருவோடு தங்களின் அவமானங்கள் நின்று விடும்.. ஆனால் இங்கோ விளம்பர பலகைகளில் பரப்பப்படும்..

   திருமணத்திலோ எங்களுக்கான வரதட்சணை என்பது பூச்சியம் பூச்சியமாக அதிகரித்து கொண்டே தான் செல்கிறதே தவிர நிறுத்துவதில்லை.. வசதி மிக்க வணிகர் தனது விலை போன மாட்டை குறைந்த விலையில் விற்க முயல்வதாகவே எனது மனகண்ணில் தெரிகிறது..

   அனைத்தும் இருந்தும் ஏனோ ஒரு அகதி குழந்தைகள் போல நடத்தப்படுகிறோம்.. வேலை வாய்ப்பு என எடுத்து கொண்டாலும் எங்களை காட்டிலும் தங்களுக்கு தானே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.. எந்த அரசு திட்டத்திலும் தந்தைக்கு பிறகோ தாய்க்கு பிறகோ அதே பணியை குழந்தைகளுக்கு அப்படியே அள்ளி கொடுப்பதில்லை.. நாங்களும் உங்களை போல ஒரு ஓட்டபந்தயத்தில் தான் பயணிக்கிறோம்.. பின்னால் பெற்றோரின் பணி என்ற சுமையை கட்டி கொண்டு..

    இவ்வளவான விளக்கங்களை கண்ட பின்னும் மனதில் இருக்கும் அந்த துச்சமான எண்ணங்கள் மாறுமா என்பது தெரியவில்லை.. தற்பொழுதெல்லாம் இந்த காரணங்களையும் விளக்கங்களையும் எவரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை.. பின்னால் குத்தி கொண்டிருக்கும் நெருஞ்சி முள்ளின் வேதனை முன்னால் எள்ளி நகையாடுபவர்களுக்கு புரியபோவதில்லை..

   “உனக்கென்னப்பா.. சம்பளம் வருகிறது..” என கூறுபவர்களை தயவு செய்து ஒரு நாள் எனது இடத்தில் நிறுத்தி மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது எவ்வளவு கடினம் என்பதை உணர செய்து விடு என கடவுளிடம் மன்றாடுகிறேன்.. முடிந்த வரை, அடுத்த ஜென்மம் என்று ஒன்றுண்டானால் நீ என்னிடத்திலும் நான் உன்னிடத்திலும் இருந்து நான் உனக்கு மவுன மன்னிப்பை வழங்க வேண்டும்..” என்ற சாபத்தை விடுகிறேன்..

    இப்படிக்கு,

        பிச்சை எடுத்தாலும் சரி, அரசு வேலையில் சேராமல் அடுத்த தலைமுறையினை சுதந்திரமாகவும் இந்த இரக்கமற்ற மூடர் கூட்டங்களுக்கு நடுவில் பிறவாமலும் வாழ வைக்க விருப்பம் கொண்ட அரசு அதிகாரியின் மகள்..

Post a Comment

2 Comments