நூல் விமர்சனம்
நூலின் பெயர் : கோகிலா என்ன செய்துவிட்டாள்?
ஆசிரியர் : ஜெயகாந்தன்
இந்தக் கதை தான் நான் ஜெயாகாந்தன் அவர்களின் எழுத்தில் முதலில் படித்த, உணர்ந்த, கொண்டாடிய, கொண்டாடுகிற கதை.
என் தந்தை ஜெயகாந்தன் ஐயாவின் தீவிர விசிறி. அவரின் கதைகளைப் பற்றி பேசுகையில் சிலாகித்து, சிலிர்த்துப் போவார். அப்படி சிலிர்த்து, சிந்தித்து, சிதைந்து போகும் அவாவுடன் அவர் நூலகத்திலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்த நூல் தான் “கோகிலா என்ன செய்துவிட்டாள்?”
பலமான சமூக உணர்வால் தனிமனிதர்களின் சொந்த வாழ்க்கையில் ஏற்படுகின்ற இயல்பேயான பிசிறுகள் முற்றாகச் சமன்படுத்த முடியாவிட்டாலும் ஒருவகை சகிப்பு உணர்வோடு சமாளிக்கப்படுவதில் தான் குடும்பங்கள் குலைந்து போகாமல் நிலைக்கின்றன – ஆஹா!! எத்தனை நிதர்சனமான கூற்று!! கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக இணைந்து வாழும் தம்பதியருக்கு கூற வேண்டிய கருத்தை எப்படி நான்கே வரிகளில் ஒளித்துவிட்டார்!!
கதையின் நாயகன் அனந்தராமன் – ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் பணிபுரிவபன்; நன்கு படித்தவன்; வேலையில் சிரத்தையுடன் செயலாற்றுபவன்; அறிமுகத்திலேயே அவனது குணநலன்களை தன் எழுத்து வன்மையால் கண்முன்னே தத்ரூபமாக எடுத்துரைத்திருக்கிறார் ஆசிரியர் அவர்கள்.
கதைக் கரு, கதைக் களம் இரண்டுமே பெரிதான சிக்கலுடன் கூடியதொன்றும் இல்லை. அன்றாடம் நாம் தங்கி தாபரிக்கும் நமது இல்லம் தான். வெளியில் நன்கு படித்து, அரசியல் பேசி தன்னை ஒரு ஆகச் சிறந்த முற்போக்காளனாக காட்டிக்கொள்ளும் ஒருவன் – அவனின் மனைவி, இருவருக்கும் இடையிலான பிணக்குகள். இவை தான் கதைக்களம்.
ஒவ்வொரு வரியையும், ஒவ்வொரு நொடியையும் விளக்கி, விவரித்து நகர்த்துவதில் இவருக்கு இணை இவரே. வெளியே தன்னை மேம்போக்காளானாக காட்டிக்கொள்ளும் அனந்தராமனுக்கு வீட்டிற்குள் தன் கோகிலா செய்யும் சிறிய, மிகச் சிறிய எல்லை விஸ்தரிப்பில் உடன்பாடில்லை. அதுவும் வேறாரும் செய்திடாத மாபாவம் ஒன்றுமில்லை.
அதை ஏற்றுக் கொள்ள மறுப்பவன்; “நீங்க தான் காவியக் காதலர்களாயிற்றே!!” என்பது போன்ற எள்ளலான வார்த்தைகளை அவள் மேல் தூற்றுகிறான்.
இவ்வாறு நடந்த மனப்போராட்டங்களுக்குத் தீர்வாக இருவரும் பிரிய முடிவெடுத்து இறுதி நாளும் வந்துவிடுகிறது. இருவரும் ஒரே வீட்டில் வேறு வேறு அறையில் தங்கியிருக்கின்றனர். அவ்வவ்போது தன்னறைக் கதவைத் திறந்து எதிர் அறைக் கதவை வெறித்துவிட்டு மூடிக் கொள்கின்றனர். “இருவரும் ஒரே நேரத்தில் திறந்திருந்தார்களானால்?” அட அட!!
இவ்வாறு நிகழ்வுகள் நிகழ்ந்த வண்ணமிருக்க, அவள் அவனுக்கு விரிவாக கடிதமொன்றை எழுதுகிறாள். அதில் அவள் என்ன எழுதியிருந்தாள், அவன் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கெல்லாம் சினிமாட்டிக் வர்ணனைகள், ஒப்புமைகள் எதுவுமில்லாது அழகான மிக நிம்மதியான முடிவு அது.
அங்கே அவர்கள் இல்லறத்தில் என்ன பிணக்கு, என்ன நிலை என்பதெல்லாம் அறியிலோம். ஆயினும் நம்முள் நிலவும் பிணக்கை சுமூகமாக தீர்த்து, நிம்மதி கொண்டதன் நிறைவு!
சமூகக் கண்ணோட்டத்தில் நயத்தக்க நாகரிகமாக்கப் படுகின்ற சமத்துவம், சுதந்திரம், பெண் உரிமை போன்ற பண்பாடுகள் குடும்பத்துள் பிரவேசிக்கும்போது அவை குடும்பம் என்னும் கோயிலின் புனிதத் தன்மையை போக்கிக் குலைத்துவிடும் நாசப் போக்குகளாய் அவர்களது குறுகிய கண்ணோட்டத்தில் கொச்சைப் பட்டுப் போகின்றன.
இங்கே அந்த குறுகிய கண்ணோட்டம் கொண்ட அனந்தராமன் தன் கோகிலத்துடன் இணைகிறான். இங்கே அரைபக்கத்திற்கு பெண்ணியம் தெறிக்கும் வசனங்களோ இல்லை அவன் மனமாற்றத்திற்கு வித்திடும் எதுவோ இல்லை ஆயினும் அவன் அவளை இணைகிறான். முற்றிலும் மாறிவிட்டான் என்பதற்கு எவ்வித உத்திரவாதமுமில்லை ஆயினும் முன்சொன்னது போல “பலமான சமூக உணர்வால் தனிமனிதர்களின் சொந்த வாழ்க்கையில் ஏற்படுகின்ற இயல்பேயான பிசிறுகள் முற்றாகச் சமன்படுத்த முடியாவிட்டாலும் ஒருவகை சகிப்பு உணர்வோடு சமாளிக்கப்படுவதில் தான் குடும்பங்கள் குலைந்து போகாமல் நிலைக்கின்றன”.
இத்தகைய சிறந்ததொரு படைப்பைக் கொடுத்த ஜெயகாந்தன் அவர்களின் எழுத்துக்கள் ஏற்படுத்திய தாக்கத்தால் தான் எழுத முற்பட்டேன் என்பதில் எப்போதும் பெருமை எனக்கு. இந்த போட்டிக்கும் அவரது படைப்பிற்காக விமர்சனம் எழுதி, மானசீகமாக அவரின் பாதம் தொட்டு ஆசீர்வாதம் பெற்று எழுதத் தொடங்கும் உணர்வு.
அவரின் படைப்புகள் காலத்தால் அழியாதவை!!
0 Comments