Header Ads Widget

Welcome You all to Ruthitha's KKR family

Kanavu Kadhali's World

To share your valuable comments : kanavukadhali@gmail.com

பத்தாம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்??

பத்தாம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்??



இந்தக் கேள்வியை பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அதில் அநேகர் பத்தாம் வகுப்பிற்கு பிறகு Professional கோர்ஸ் அதாவது படித்து முடித்ததும் வேலைக்குச் சென்றுவிடுவதற்கு ஏதுவான படிப்புகளை விரும்புபவர்களாக இருக்கிறார்கள்.

இதுகுறித்து இரண்டு கூறாக பிரித்து பதிலளிக்கலாம்.

முதலில் இதில் இருக்கும் சாதக, பாதகங்களை குறிப்பிட வேண்டுமானால் பத்தாம் வகுப்பிற்கு பிறகு பதினொன்றாம் வகுப்பு பயிலுவதே பலரின் தேர்வு. காரணம் நம் சமூகத்தில் பள்ளிப்படிப்பை முழுவதுமாக முடித்துவிட்டு இளங்கலை / ப்ரொபஷனல் படிப்பைத் தேர்ந்தெடுப்பதையே ஓரளவு கௌரவமாக கருதுகிறோம். ஆனால் அப்படியல்ல, படிப்பு எதுவாயினும் அதை கற்கும் விதத்தில் கற்க வேண்டும். மதிப்பெண்களைத் தாண்டி அதில் கூறப்படும் விஷயங்களைத் தெரிந்து, நடைமுறைப்படுத்தும் அறிவை வளர்க்க வேண்டும். அதாவது ப்ராக்டிக்கல் நாலேஜ் இருக்க வேண்டும். இது அனைத்து படிப்புகளுக்குமே பொருந்தும்.

முதலில் பரவலான வகையில் பத்தாம் வகுப்பிற்கு அடுத்ததான சரியான தேர்வாக, படிப்பாக கருதப்படுவது பல்தொழில்நுட்பம் எனப்படும் பாலிடெக்னிக். பத்தாம் வகுப்பிற்கு அடுத்து இதைத் தேர்வு செய்யலாம். உண்மையில் இது ஒரு சிறந்த தேர்வு தான். ஆரம்பத்தில் ஆட்டோமொபைல் துறையில் இது கொடிகட்டிப் பறந்தது. இப்போது ஈசிஈ மற்றும் மெக்கானிக்கல் துறையில் பாலிடெக்னிக் படிப்பது வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது.பாலிடெக்னிக் கல்லூரிகள் பரவலாக காணப்பட்டாலும் அதிகமான கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு பெற்று தரப்பட்டு விடுகிறது. கூடவே இன்னொரு தகவலும், பன்னாட்டு நிறுவனங்களும் பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்களை விடவும், பாலிடெக்னிக் படித்தவர்களையே பணியில் சேர்த்துக் கொள்ள விரும்புவதாக நண்பர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.

பாலிடெக்னிக்கில் பல பிரிவுகள் உள்ளன. ஆனால் குறிப்பிடத்தக்க படிப்புகளாக CSE, EEE, ECE, Mech., Automobile, Civil பிரிவுகள் இருக்கின்றன. மற்ற படிப்புகளும் குறைந்தவை அல்ல. அவற்றிற்கும் அவை தொடர்புடைய நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன.நான் கூறும் தகவல்கள் அனைத்துமே உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கக் கூடும். இருப்பினும் ஒரு சிலருக்காகக் குறிப்பிடுகிறேன்.

அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் இந்த பல்தொழில்நுட்பப் படிப்பை வழங்கி வருகின்றன. இதில் சேர்வதற்கு கல்வித் தகுதி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி மட்டுமே.பாலிடெக்னிக் முடித்த பின் தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக்குச் சேரலாம் அல்லது மேற்படிப்பு படிப்பதாக இருந்தாலும் படிக்கலாம். உதாரணமாக DECE என்னும் பிரிவை நீங்கள் தேர்ந்தெடுத்து படித்திருந்தால் பொறியியலில் Lateral Entry மூலம் நேரடி இரண்டாம் ஆண்டு B.E (ECE) சேர்ந்து கொள்ளலாம்.பொறியியல் படிக்க விரும்பும் சிலர் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் பாலிடெக்னிக் படித்துவிட்டு நேரடியாக பொறியியல் இரண்டாம் ஆண்டு சேர்வதை கேள்விப்பட்டிருக்கிறேன். இது சரியான முறை என்பதெல்லாம் குறித்து விவாதிக்க வேண்டாம். இப்படியொரு நடைமுறை உள்ளது எனக் குறிப்பிட்டேன்.

பாடத்திட்டத்தை பொறுத்தவரை முதலாமாண்டு கணிதவியல் போன்றவை பதினொன்றாம் வகுப்பு பாடத்திட்டத்தை ஒத்தவை தான். எனவே பெரிதாக வேறுபாடு ஒன்றுமில்லை.எனவே, பத்தாம் வகுப்பிற்கு அடுத்து டிப்ளமோ படிக்க விரும்பினால் பாலிடெக்னிக் சிறந்த தேர்வு.பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களும் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம். பதினொன்றாம் வகுப்பில் கணிதவியல் சார்ந்த பிரிவை நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால் பாலிடெக்னிக்கில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்ந்து கொள்ளலாம். அதன் பின்னர் மேலே குறிப்பிட்ட நிபந்தனைகள் உங்களுக்கும் பொருந்தும். வேறு பிரிவாக இருந்தால் முதலாம் ஆண்டிலேயே சேர வேண்டும்.மற்ற படிப்புகளை ஒப்பிடுகையில் பாலிடெக்னிக்கில் வேலைவாய்ப்பு அதிகம். இதில் ஆண்கள், பெண்கள் என்னும் வேறுபாடுகள் இருக்கிறது என்னும் பேச்சு நம்மிடையே உண்டு.

பொதுவாக சிவில், மெக்கானிக்கல் பிரிவில் பெண்கள் அதிகமாக பயில மாட்டார்கள். அதுபோல தான் இங்கேயும் அந்த பிரிவுகள் தவிர மற்ற அனைத்து பிரிவுகளிலேயும் பெண்களும் சேர்ந்து படித்து பணியாற்றத் தான் செய்கிறார்கள். மெக்கானிக்கல் பிரிவில் படித்து பணியாற்றும் சிங்கப் பெண்களைக் குறித்தும் தான் கேள்விப்படுகிறோமே! இதைத் தாண்டி கேட்டரிங், நர்சிங், லேப் டெக்னீஷியன் படிப்புகளும் உள்ளன. அவற்றிற்கும் முறையே அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளன. எந்த பாடப்பிரிவாக இருந்தாலும் படிப்பதற்காக தேர்ந்தெடுக்காதீர்கள், கற்றுக் கொள்ள தேர்ந்தெடுங்கள். அதுவே பாதி வேலைவாய்ப்பை பெற்றுவிட்டதற்கு சமானம்.

ஒருவேளை எதிர்பாராத விதமாக பத்தாம் வகுப்பிற்கு அடுத்து ப்ரொபஷனல் பாடப்பிரிவில் சேர நேர்ந்துவிட்டால், சுற்றி இருப்பவர்களின் “மேற்கொண்டு பதின்னொன்னு படிக்கலையாப்பா?? ஸ்கூல் முடிச்சிட்டு டிகிரி போயிருந்தா ஒரு நல்ல ஜாப் போயிருக்கலாம்... பன்னிரெண்டாவது வகுப்பாவது முடிச்சிருக்கலாம்..” என்பது போன்ற பேச்சிற்கெல்லாம் துவண்டு விட வேண்டாம். கற்றலைத் தொடருங்கள். உங்களின் துறை எதுவாயினும் அதில் 100 சதவீத பங்களிப்பைக் கொடுங்கள். வாழ்க்கையில் உயருங்கள்! வெற்றி நிச்சயம்... (டிஎன்பிஎஸ்சி க்ரூப் நான்கு தேர்விற்கு குறைந்த பட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி தான்..) (பதினொன்றாம் வகுப்பில் எந்த பிரிவைத் தேர்ந்தெடுப்பது, எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்னும் சஜஷன்ஸ் அடுத்த பகுதியில்... வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால் கமெண்டில் பதிவு செய்யுங்கள்.)


Post a Comment

0 Comments