Header Ads Widget

Welcome You all to Ruthitha's KKR family

Kanavu Kadhali's World

To share your valuable comments : kanavukadhali@gmail.com

பதினொன்றாம் வகுப்பில் எந்தப் பிரிவைத் தேர்ந்தெடுக்கலாம்??

 பதினொன்றாம் வகுப்பில் எந்தப் பிரிவைத் தேர்ந்தெடுக்கலாம்??

பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் மட்டுமின்றி அவர்களது பெற்றோருக்கும் இந்த விஷயத்தில் சில குழப்பங்கள், தயக்கங்கள் இருக்கவே செய்கின்றன. நம் கல்விமுறையை பொருத்தவரையில் பரவலாக நிலவி வரும் கருத்து என்னவென்றால், “நானூறு மார்க்குக்கு மேல எடுத்திட்டியா?? மேத்ஸ் க்ரூப் எடு... பயாலஜி பிடிக்காதுன்னா கம்பியூட்டர் சைன்ஸ் எடு... அதுக்கு கீழே இருக்கிற மார்க் எல்லாம் காமர்ஸ் க்ரூப் எடு...” இவ்வளவு தான்.. இவ்வளவே இவ்வளவு தான். நகர்ப்புறங்களிலும், படித்த பெற்றோரிடத்திலும் இந்த கண்ணோட்டம் மாறியிருக்கலாம் ஆனால் இன்றளவிலும் கிராமங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் தான் பதினொன்றாம் வகுப்பில் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்கும் அளவுகோல்.

உண்மையில் மதிப்பெண் என்பது அறிவின் அளவுகோல் அல்ல. நம் தற்காலிக ஞாபக சக்தியின் மதிப்பீடு அவ்வளவுதான். அவ்வளவே அவ்வளவு தான். நாம் பத்தாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்ணிற்கும் வாழ்க்கைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. வெளிப்படையாக, பச்சையாக குறிப்பிட வேண்டுமென்றால், “பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு முந்தைய வாரம் புத்தகத்தில் இருக்கும் முக்கிய வினாக்களை மட்டும் படித்தாலே நானூறு மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுவிடலாம்...” (யாரும் என்மீது கோபிக்க வேண்டாம்... இது நான் அனுபவப்பூர்வமாக கண்டுகொண்ட உண்மை..)

நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம் அது. நான் எப்போதும் முன்கூட்டியே படித்துவிடும் பழக்கம் உடையவள்; ஆண்டின் முதலில் இருந்தே நானூற்று ஐம்பதிற்கு அருகிலான மதிப்பெண்களையே பெற்று வந்தேன். என் தோழி ஒருத்தி ஆரம்பத்தில் எல்லாம் முன்னூறு மதிப்பெண் தான் பெறுவாள். பொதுத் தேர்வுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவளது உறவினர் யாரோ கூறியதன் பேரில் ஊன்றிப் படிக்கத் தொடங்கிவிட்டாள். நான் நானூற்று ஏழுபது மதிப்பெண் பெற்றிருந்தேன், அவள் நானூற்று ஐம்பத்து ஆறு மதிப்பெண் பெற்றிருந்தாள். இதை ஏன் கூறுகிறேன் என்றால் பத்தாம் வகுப்பு மதிப்பெண் ஒன்றும் நம் அறிவின் அளவுகோல் அல்ல, உழைப்பின் மதிப்பீடும் அல்ல. ஆகவே, பத்தாம் வகுப்பின் மதிப்பெண்ணையும் தேர்வு செய்யப் போகும் பாடப்பிரிவையும் குழப்ப வேண்டாம். ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்பது பின்னால் நான் கூறப் போகும் கருத்துரைகளில் புரியும்.

கல்லூரிகளில் நாம் தேர்வு செய்யப் போகும் கலை அல்லது அறிவியல் பிரிவின் தேர்வுகள் பதினொன்றாம் வகுப்பிலேயே தீர்மானம் செய்யப்பட்டு விடுகின்றன.

மேல்நிலை பாடப்பிரிவில் பல பிரிவுகள் இருந்தாலும் அவை இறங்கு பெரும்பிரிவுகளாக அடக்கம். ஒன்று கலை பிரிவு, மற்றொன்று அறிவியல் பிரிவு.

அறிவியல் பிரிவில் முறையே மூன்று உட்பிரிவுகள் தான். ஒன்று உயிரி – கணிதவியல், மற்றவை கணினி அறிவியல், அறிவியல் என்பவை.

இங்கே பொதுவான பாடங்கள் இயற்பியலும், வேதியியலும். உயிரி – கணிதவியல் மற்றும் கணினி அறிவியல் பிரிவிற்கு கணிதம் பொதுவான பாடமாக இருந்தாலும் சிறப்பு பாடமாக உயிரியல் அல்லது கணினி அறிவியல் இருக்கும். மருத்துவம் சார்ந்த படிப்புகள் படிக்க விரும்புவர்கள் உயிரி – கணிதவியல் எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி இரண்டு பிரிவிற்கும் பெரிதாக வேறுபாடு ஒன்றுமில்லை.

ஏனென்றால் கணினி அறிவியல் பிரிவில் பைத்தான், கோடிங் போன்றவற்றின் அறிமுகம் மேலும் வரலாறு போன்றவை தான் இருக்கும். ஆகவே பதினொன்றாம் வகுப்பில் உயிரியியல் கணிதம் தேர்ந்தெடுத்தவர் கல்லூரியில் கணினி அறிவியல் எடுப்பதற்கும் எந்தத் தடையும் இல்லை. ஆனால் உயிரியியல் – கணிதவியல் பிரிவைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே மருத்துவம் சார்ந்த படிப்புகளை படிக்க இயலாம்.

இந்தப் பிரிவுகளுக்கு பொதுவான மேற்படிப்பாக இருப்பது பொறியியல். நாம் அனைவரும் நன்கு அறிந்தபடி இயற்பியல், வேதியியல், கணிதவியலில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பொறியியல் சேர்க்கை அமையும். இது தவிர அந்தந்த பிரிவில் பட்டப்படிப்புகளும் படித்துக் கொள்ளலாம். அதாவது B.Sc, படிக்கலாம்.

அடுத்ததாக அறிவியல் பிரிவு. இதில் வேதியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல் பாடங்கள் இடம்பெறும். மருத்துவம் சார்ந்த பிரிவுகள் படிக்க விரும்புவோர் இந்தப் பிரிவைத் தேர்வு செய்யலாம்.. இந்தப் பிரிவில் கணித தொல்லை இருக்காது...

 

பெரும் பிரிவான கலை பிரிவு / வணிகவியல் பிரிவில் பல உட்பிரிவுகள் இருக்கின்றன. வரலாறு, அரசியல் அறிவியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், கணினி அறிவியல், தட்டச்சு, டிவி, பொருளியல், புள்ளியியல் என என்னும் எதாவது நான்கு பாடங்கள் கொண்ட Combination கொண்ட பாடப்பிரிவுகள் உள்ளன. இங்கு நான் ஏன் எண்ணிக்கை கூறவில்லை என்றால் இந்த பிரிவு பள்ளிக்கு பள்ளி மாறுபடும். சில பள்ளிகளில் வரலாறு முக்கியப்பாடமாக இருக்கும். சில பள்ளிகளில் அரசியல் அறிவியல் பிரிவு இருக்கும். எனவே தான் இங்கே அறுதியிட்டு பிரிவுகளை வரிசைப்படுத்தவில்லை.  

இங்கே வேறுபாடுகள், வகைப்பாடுகள் எதுவுமில்லை. நாம் இவற்றில் எந்தப் பிரிவைத் தேர்ந்தெடுத்து இருந்தாலும் இவை சார்ந்த பட்டப்படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். பி.காம், பி.காம் சிஏ, பி.ஏ என்பவை பொதுவான படிப்புகள். அவற்றைத் தவிர கணக்காளர் பட்டயப்படிப்பும் படித்துக் கொள்ளலாம்.. குறிப்பிட்ட பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றால் தொடர்ந்து முதுகலைப் பட்டம், ஆய்வியல் நிறைஞர் என அடுத்ததடுத்த மேற்படிப்புகள் உள்ளன.

அறிவியல் பட்டப்படிப்பிற்கும், கலை பிரிவு பட்டப்படிப்பிற்கும் சிறு வித்தியாசம். அறிவியல் பிரிவில் பி.எஸ்சி முடித்ததும் பி.எட் படிக்கலாம். ஆனால் கலைப்பிரிவில் தனிப்பட்ட பி.எட் என்பது அரிது தான். அதற்காக இவ்விரண்டையும் ஒப்பிடவில்லை. இரண்டும் அதினதின் வகையில் சிறந்தவையே.

இரண்டிற்கும் பொதுவாக தமிழ் / மொழிப்பாடம், ஆங்கிலம் இருக்கின்றன. மொழியியலில் அதீத ஆர்வம் இருப்பவர்கள் பிரிவுபேதம் இல்லாமல் மொழிப்பாடத்தில் பட்டப்படிப்பைத் தேர்வு செய்யலாம்.

இதுபோக உயர்ந்த படிப்பான சட்டப்படிப்பும் இரு பிரிவிற்கும் பொதுவானது தான். பன்னிரெண்டாம் வகுப்பில் பெறும் மொத்த மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆனால் அங்கே பாடத்திட்டங்கள் ஓரளவு கலைப்பிரிவை சார்ந்தவையாவே இருக்கும். ஆனாலும் அறிவியல் பிரிவு மாணவர்கள் மனத்திண்மையுடன் மேற்கொள்ளலாம். பெரிய அளவில் கடினமானது ஒன்றுமில்லை. அரசியல் அறிவியல், பொருளியல், வணிகவியல் மட்டும் தான் இடம்பெறும். எளிதாகத் தான் இருக்கும். (சொந்த அனுபவம்)

 

இரண்டு பெரும்பிரிவுகளில் இருக்கும் features பட்டியலிட்டாயிற்று. இனி தேர்வு செய்வது எப்படி என்பதைக் காண்போம்.

பத்தாம் வகுப்பிற்கு பின்னர் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நமது வாழ்க்கைப் பயணத்திற்கானது. ஆகவே கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

“என் மகன் பத்தாம் வகுப்பு கணக்கில் 90 மதிப்பெண் பெற்றுவிட்டான், அவனை கணிதவியல் பிரிவைத் தேர்ந்தெடுக்கச் செய்து உலகின் தலைசிறந்த கணித மேதையாக்குவேன்...” என நீங்கள் கனவு கண்டு கொண்டிருந்தால்.... கவனிக்க... உங்களுக்கு ஒரு விஷயத்தை கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

பத்தாம் வகுப்பு கணிதத்தில் வரைபடம், செய்முறை வடிவியல் ஆகிய பிரிவுகள் உள்ளன. முழுதாக பத்து பத்து மதிப்பெண்கள் பெற்றுவிடலாம் எளிதாக. (நான் கூற வருவது உங்களுக்குப் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.) கூடவே, பத்தாம் வகுப்பு வரை நாம் படித்த கணக்கு போல பதினொன்றாம் வகுப்பு கணிதவியல் ஒன்றும் அத்தனை எளிதானது அல்ல. போகும் போக்கில் படித்துவிட்டு செல்ல இயலாது. பாடத்தை காதலித்து, அனுபவித்தால் மட்டுமே வாழ்விலும் தேர்விலும் வெற்றி சாத்தியம். (இங்கே நான் கூறிய கணக்கு – கணிதம் என்னும் வேறுபாட்டை கவனிக்க... பத்தாம் வகுப்பில் நான்கு எண்ணை கூட்டி விடையை எழுதிவிட்டால் முடிந்துவிடும், அதாவது கணக்கிட்டால் முடிந்துவிடும். ஆனால் பதினொன்றாம் வகுப்பில் இயற்கணிதம், கலப்பியல் என பலவற்றை கற்க வேண்டும்)

ஆகவே, “பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிரிவைத் தேர்வு செய்ய வேண்டாம்...”

“என் பொண்ணு நானூற்று ஐம்பதுக்கு மேல் மதிப்பெண் வாங்கிட்டு வணிகவியல் அதாவது காமர்ஸ் க்ரூப் தான் எடுப்பேன்னு ஒத்தைக்கால்ல நிக்கிறா... இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்லுவேன்??” என சிலர் கலங்கலாம்... அதிகம் மதிப்பெண் எடுத்தால் குறிப்பிட்ட பிரிவை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என எதாவது கட்டாயம் இருக்கிறதா என்ன?!

எனக்குத் தெரிந்த தோழி ஒருவர் பத்தாம் வகுப்பு நானூற்று எண்பது மதிப்பெண் பெற்று, வணிகவியல் பிரிவைத் தேர்ந்தெடுத்தார். பலர் அவரது தேர்வை விமர்சித்தனர். ஆனால் அவர் இன்று பட்டயக் கணக்கர் படிப்பை முடித்து உயர்ந்த தகுதியுடன் இருக்கிறார். ஆகவே எந்தப் பிரிவாக இருந்தாலும் அதில் ஆர்வத்துடன் படித்தால் வெற்றி நிச்சயம்...

இங்கே நாம் செய்ய வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். மாணவர்களின் மதிப்பெண்ணைக் கொண்டு பிரிவைத் தேர்ந்தெடுக்காமல் அவற்றில் இருக்கும் பாடங்கள், பிரிவுகளைக் குறித்து அவர்களுக்கு நன்கு விளக்குங்கள். அவர்களால் எந்தப் பிரிவில் ஆர்வத்துடன் படிக்க முடியும், அவர்களது Capacity என்ன என்பதற்கு ஏற்ப பிரிவைத் தேர்ந்தெடுக்கட்டும். ஒருவேளை அவர்களால் முடிவு செய்யவில்லை என்றால் பெற்றோர்களான நாம் உதவலாம்.

ஏனென்றால் படிக்கப் போவதும், உயரப் போவதும் அவர்கள் தானே, நம் எண்ணங்களையும், தேர்வுகளையும் அவர்களிடம் திணிக்காமல் வாய்ப்புகள் பிரிவுகளையும் விளக்கிக் கூறி தேர்வு செய்ய வாய்ப்பு அளிப்போம். வெற்றி நிச்சயம்.

கற்போம், உயர்வோம்.

(அடுத்ததாக தொலைதூர படிப்பில் உள்ள சாதக பாதகங்கள் மற்றும் மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு சேர்க்கை குறித்து விவரிக்க இருக்கிறேன்)

நன்றி,

சந்திப்போம்...

விடைபெறுவது...

நான்... உங்கள் ருத்திதா...

Post a Comment

0 Comments