Header Ads Widget

Welcome You all to Ruthitha's KKR family

Kanavu Kadhali's World

To share your valuable comments : kanavukadhali@gmail.com

அன்பே நீ யாரோடா - 1

அத்தியாயம்-1


“அத்தயோவ்... கேள்விப்பட்டீங்களா?? சுதனை போலீஸ் பிடிக்க வந்துருக்காம்..” என மூச்சிரைக்க ஓடி வந்தாள் கயல்..

அகராதியில் கிராமத்து அழகி என்ற சொல்லின் அட்சரம் பிசகாத அர்த்தமவள்.. அடர்ந்த மாநிறம்.. வடிவான முகத்தில் கொட்ட கொட்ட விழிக்கும் உருண்டை விழிகள்.. சதாநேரமும் புன்னகைக்கும் இதழ்கள்.. வயலில் மண்வெட்டி களைகொத்தி பிடித்து  இறுகியிருந்த கரங்களில் அத்தையின் வேண்டுதலுக்காக கட்டிய சிவப்பு கயிறு.. இதுவே கயலின் அடையாளம்..

“கத்தி தொலையாதடி வெண்கல தொண்ட.. நீ போட்ட சத்தத்துல எந்திரிச்சிற போறான்..” என அடக்கிய கனகவள்ளியின் அண்ணன் மகள் அவள்..

“அத்தான் இன்னும் கிளம்பலியா??”

“ம்க்கும்.. நேத்து ஆடுன ஆட்டத்துக்கு காலைல பத்து மணி வரைக்கு உறங்குனாலும் காணாது.. நீ இப்ப சொன்ன விஷியம் மட்டும் காதுல விழுந்துச்சுன்னு வையேன்.. சட்டை காலரை இழுத்து விட்டு தெற்கு தெருவுல போய் மல்லு கட்டிட்டு கெடப்பான்.. தேவையா?? மெல்லமா தான் சொல்லி தொலையேன்..” என சொல்லி வாயை மூடவில்லை..

“என்னத்த சொல்லி தொலைக்கணும்??” என்று கைலியை மடித்து கட்டிக்கொண்டு வந்து நின்றான் அவ்வீட்டின் அடங்காத காளை வீரசெல்வம்..

பொறுமை என்பதற்கு சற்றும் பொருந்தாதவன்.. கோபத்தை நுனிமூக்கிலும் கனைப்பை நுனிநாக்கிலும் தேய்த்து கொண்டவன்.. சட்சட்டென முடிவெடுப்பவன் அதை அடையாமல் அடங்க மாட்டான்.. இதனாலேயே ஊர்வம்புகளில் முதல் பெயராய் ஐயாவை கண்ணை மூடிக்கொண்டு எழுதி விடும் பஞ்சாயத்து..

தோற்றத்தை சொல்லவே வேண்டாம்.. கனகவள்ளியின் கைப்பக்குவத்தில் மூக்கு முட்ட சாப்பிட்டு எவனையாவது மூச்சு முட்ட அடித்து விட்டு ஊரில் திரிபவனுக்கு என்ன குறை?? ‘நல்லா ராசா மாதிரி ஜம்முன்னு இருக்கய்யா..’ என பக்கத்து தெரு பெரியாச்சி பீத்தி கொள்வது தான் குறைச்சல்..

“இப்பிடி ஒரு பிள்ளைய பெத்ததுக்கு மீசைய முறுக்கிட்டு அலையனுமாக்கும்” என ராமலிங்கம் தண்ணீர் தெளித்து பல வருடமாகிறது..  தன்மான சிங்கம்.. அவனில்லை என தெரிந்தால் மட்டுமே வீட்டு பக்கம் வருவது.. மற்றபடி கோவில் மண்டபம் தான்.. சாப்பாடும் அங்கேயே போய் விடும் கயலின் தயவில்..

‘வீட்டுக்கு அடங்காத நாயி ஊருக்கு அடங்குமாம்..’ ராமலிங்கத்தின் எச்சரிப்புகளும் ‘அப்பா பேச்ச தான் கேளேண்டா..’ எனும் கனகவல்லின் கெஞ்சலான கோரிக்கையும் அவனின் முதுகு தழும்பில் காணா போய்விடும்.. 

அவனின் அடங்காத்தனத்திற்கும் அகங்காரத்திற்கும் நடுவில் ஆழமான காயங்களும் உண்டு.. அந்த காயத்தின் சுவடே அவளுக்கு வலிக்க தனக்கும் வலிக்க அவன் வைத்துக்கொண்ட சூடு.. “வீரா, வேணாம்.. ப்ளீஸ்.. அப்படி பண்ணாத.. வீராஆஆ” என மண்ணில் அழுது புரண்டவளின் குரல் இன்னமும் காதில் ரீங்காரமாய் ஒலிக்கிறது..

“காலையில காபி போடாம ரெண்டு பேருமா சேர்ந்து என்னத்த தொலைச்சிட்டு கிடக்கியன்னு கேக்கேன்ல..” அதட்டலாய் கேட்டான்.

“அது ஒண்ணுமில்ல சின்னவனே.. தெற்கு தெரு சுதன் இருக்கான்ல..” என்று கனகவள்ளி உளறி கொட்டும் முன், “சுதன் தங்கச்சி மைதிலி இருக்கால்ல.. கருப்பு கலர்ல மருதாணி வாங்கியிருக்காளாம்.. காட்டி காட்டி பந்தா பண்ணுதா.. அதான் வார வழிக்கு பட்டணத்து புதுக்கடையில எனக்கும் ரெண்டு வாங்கி குடு செல்வாத்தான்.. நானும் யாருன்னு காட்டுறேன்..” என பேச்சை மாற்றி விட்டாள் கயல்..

“இந்த சப்ப காரணத்துக்கு எல்லாம் பட்டணம் வரைக்கு போவ முடியாது.. வேணும்னா அடுத்த வாரம் அருள் தோட்டத்துக்கு உரம் வாங்க போவான்.. என்ன ஏதுன்னு தெளிவா சொல்லிவிடு.. வாங்கிட்டு வரலாம்.. சரியா??” என்றுவிட்டு “ம்மோவ்.. சோத்தை வையுமா..” தட்டை கொடுத்தான்..

“எப்பிடியும் இன்னிக்கு பெரியத்தானை கூப்பிட பட்டணம் போவணும்ல.. கையோட சேர்த்து வாங்கிட்டு வாத்தான்..” விளையாட்டு போக்கில் உளறி கொட்டிட,“இரு வாரேன்.. இட்லிக்கு சட்னிய மட்டும் அறைச்சிடுறேன்..” பேச்சை மாற்றி பார்த்தார்..

“அவன் வர்றானா?? ஒ.. அதான் காலையில சோறு கூட பொங்காம இட்லி வேகுதோ?? இவன் வயிறு காய்ஞ்சா என்ன மாடு புல்லுக்கட்டை மேஞ்சா என்னன்னு வர்றவனுக்கு மட்டும் வகைவகையா படையல் வச்சிரணும்..” அவிழ்ந்த கைலியை மீண்டும் கட்டிக்கொண்டான்..

“அவன் செஞ்ச காரியத்துக்கு கழுத்த நெரிச்சு கொல்லாம ஊரை விட்டு விரட்டுனதே பெருசு.. எல்லாம் மறந்து போச்சோ.. அஞ்சு வருஷம் கழிச்சு வர்றான்னதும் பாசம் பொத்துக்கிட்டு வருதோ.. கையில மட்டும் கிடைச்சான்.. கண்டதுண்டமா வெட்டிபோட்டுடுவேன்..” கோபத்தில் கையை உதற, அடுப்பில் கொதித்து கொண்டிருந்த பானை கவிழ்ந்தது..

விழுந்த வேகத்தில் ஒன்றிரண்டு துளிகள் கயலின் காலில் வசமாய் விழுந்து வைக்க, “ஆ.. அம்மா..” என அலறினாள்.. அவள் கத்தியதும் குடத்திலிருந்த தண்ணீர் முழுவதையும் ஊற்றி விட்டான்..

“அது இன்னைக்கு பிடிச்சு வச்ச தண்ணீ..” என்ற தாயை ஒற்றை முறைப்பில் அடக்கி விட்டு, “உனக்கும் சூட்டுக்கும் ஏழாம் பொருத்தம்னு தெரியும்ல.. அடுப்புக்கு நேரே வந்து நிக்குற..” என கடிந்தபடியே கூடத்திற்கு அழைத்து வந்தான்..

“ரெண்டு சொட்டு தான் விழுந்ததுக்கு மொத்த வீட்டையும் குளிப்பாட்டிடியே த்தான்..லேசா எரியுது.. சரியா போயிரும்..” என்ற கயல் சாதாரணத்திற்கு வந்த பின்னே நிமிர்ந்தான்..

“சகுனம் சரியில்லன்னு திரும்ப போவ சொல்லுங்க.. அவன் வந்து தான் இங்க எதையும் தூக்கி நிறுத்தணும்னு இல்ல..” அலட்சியமாய் கூறிய மகனிடம் என்ன சொல்லு ஒத்துக்கொள்ள செய்வதென தெரியாமல் கனகா கையை பிசைந்து கொண்டு நிற்க,

“தள்ளி விட்டுட்டு சகுனம் சரியில்லன்னு சொன்னா எப்பிடி த்தான்.. என்ன இருந்தாலும் பெரியத்தானும் இந்த வீட்டு புள்ள தானே.. அத்தைக்கு தலைபுள்ள வேற.. பாசம் கெடந்து அடிக்கும்ல.. அத்த முகத்துக்காவது பெரியத்தானை மன்னிச்சு விடலாம்..” முறுக்கி கொண்டு நின்றவனின் கரங்களை பிடித்து திருப்பினாள்..

“ப்ளீஸ் எனக்காக..” என்றவளின் குழந்தை பேச்சில் சற்றே இறங்கி, “சரி.. போறேன்.. ஆனா ஒன்னு.. இன்னும் திருந்தாம அலையுறான்னு தெரிஞ்சிது.. நடக்குறதே வேற.. வடக்கு தெரு கருப்பன் மொவனுக்கு நடந்த கதி தான் உங்க புள்ளைக்கும்.. ஒழுங்கா நடந்துக்கோடான்னு புத்தியில உரைக்குற மாதிரி சொல்லி வையுங்க.. ஜாக்கிரதை..” என எச்சரித்து விட்டே சென்றான்..

புல்லட்டின் கிக்கரை மிதிக்கும் பொழுது, “அருளேய்..” என சத்தம் கொடுக்க, “தோ.. வந்துட்டேன்..” ஓடோடி வந்து ஏறிக்கொண்டான்..

பட்டணத்தை நோக்கி வந்து கொண்டிருந்த விரைவு பேருந்தில்..

“ஊர் ரொம்ப மாறிடுச்சுல்ல.. ஸ்கூல் படிக்குறப்போ நண்டு சிண்டா அலைஞ்சதெல்லாம் இந்த அஞ்சு வருஷத்துல ஆளுயரத்துக்கு வளர்ந்துடுச்சுங்க.. ஆ.. அதோ போறான் பாருங்க.. முத்துபாரதியோட தம்பி.. சாக்பீஸ் கொடுத்து போர்ட்ல எழுத சொன்னா முழிப்பான்.. இவனெல்லாம் ப்ளேபாய் அவதாரம் எடுத்துருக்குறான்.. தோ.. நம்ம பழனி..” என பூரிப்பாய் வியந்து கொண்டிருந்த வித்யாவின் கைகளை பிடித்து அமைதிபடுத்தினான் அவன்..

“உன்னையும் என்னையும் தவிர எல்லாமே மாறியிருக்கும் விது..” என நிதானமாய் கூற, “ராம், நாம மட்டுமில்ல.. நம்ம மேல இருக்குற கோபமும் வெறுப்புமே இன்னும் மாறியிருக்காது.. அதை நினைச்சாலே பயமா தான் இருக்குது..” கைகளை அழுத்தினாள்..

அவளின் பயம் புரிகிறது.. இவனுக்கும் பயமாக தான் இருக்கிறது.. ஆதரவாக தோள்களை அணைத்து, “பயப்படாத விது.. வர்றதுன்னு முடிவு பண்ணிட்டோம்.. இனி வர்ற பிரச்சனையை சந்திச்சு தான் ஆகணும்.. ரெண்டு பேரும் சேர்ந்தே பண்ணலாம்.. நான் எப்பவும் இருப்பேன்.. உன்கூட.. உனக்காக..” என்றவனை “தெரியும்..” என்று கண்கள் கசிய நோக்கினாள்..

அதற்குள், “பட்டணம்.. பட்டணம்.. பட்டணம் வந்துடுச்சு.. இறங்குறவங்க சீக்கிரம் வெளிய வாங்க.. இல்லைன்னா இறங்க விட மாட்டாங்க..” கண்டக்டரின் குரல் குறுக்கிட்டது..

வித்யாவின் பேக்குகளையும் சேர்த்து இறக்கி வைத்த ராம், “வீட்டுக்கு போன் பண்ணனுமா??” என்று சட்டைப்பையில் கிடந்த பட்டன் போனை தடவ, “வேணாம் ராம்.. பிசிஒல இருந்து போன் பண்றேன்..” அவசரமாய் மறுத்தாள்..

“அதுவும் சரி தான்.. ஊர்ல இருக்குற ஒருத்தன் ரெண்டு பேரும் ஒண்ணா நிக்குறதை பார்த்தான்.. அவ்ளோ தான்.. கதை கந்தலாயிடும்.. போன் பண்ணிட்டு கடையிலேயே நில்லு.. நான் எதுத்தாப்புல இருக்குற பழக்கடையில தான் நிக்குறேன்..” பலபல பத்திரம் கூறிவிட்டு பழக்கடைக்கு செல்லும் வரை பத்து முறை திரும்பியிருப்பான்..

அத்தியங்கரை கிராமத்திற்கு போதுமான பஸ் வசதி கிடையாது என்பதால் மக்கள் பட்டணம் வந்து அதற்கு மேல் நடந்து தான் செல்ல வேண்டும்..

ஒரு அக்கறையில் வித்யாவிற்காக தண்ணீர் பாட்டிலை வாங்கிக் கொண்டு சாலையை கடக்க முயன்ற ராமை மறித்துக் கொண்டு நின்றது செல்வாவின் புல்லட்..

ஐந்து வருடத்திற்கு பிறகு நேருக்கு நேர் சந்தித்த அண்ணனை ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தாமல் அனல் பார்வை பார்த்தான் செல்வா..

கூரிய விழியின் உஷ்ணத்தில் வேதனையடைந்த ராமின் விழிகள் தாழ்ந்து கொள்ள, “தோ வந்துடுறேன்..” என்ற செல்வா சாவியை எடுத்துவிட்டு நடந்தான்..

“எங்க போற??” என்று கேட்ட அருளுக்கு, “பக்கத்து வீட்டு புள்ள உசுப்பேத்தி விட்டான்னு காலையிலே மருதாணி வேணும்னு கயல் வீட்டுக்கு வந்தா.. இங்கயே இரு.. பத்து நிமிஷத்துல வந்துருவேன்..” கைலியை மடித்து கட்டிக்கொண்டு நடந்தான்..

அவன் சென்ற திசையை கண்டதும் ராமின் நெஞ்சம் படபடவென துடிக்க, “எப்பிடி இருக்கண்ணே.. அஞ்சு வருஷமா ஊர் பக்கமே வராம தப்பிச்சிட்டியே..” செல்வா இல்லாத தைரியத்தில் சவுகரியமாக பேச்சு கொடுத்தான் அருள்..

அவனிருக்கும் போது பேசியிருந்தால் தோலை உரித்திருப்பானே.. “ம்ம்.. நல்லா இருக்கேன்..” என அளவோடு நிறுத்திக்கொண்டு செல்வா சென்ற பக்கத்தையே பயத்துடன் நோக்கியிருக்க, “பிறவு.. என்ன விசேஷம்?? ரெண்டு சுத்து ஊதியிருக்க மாதிரி இருக்கு.. இடுப்பு சதை எல்லாம் போட்ருக்கு..” விஷயம் புரியாமல் பேசிக்கொண்டிருந்தான் அருள்..

வித்யா சென்ற அதே கடைக்குள் நுழைந்த செல்வா, “கருப்பு கலர்ல மருதாணி வந்திருக்காம்ல.. ரெண்டு எடுத்து போடுங்க.. அப்பிடியே கருப்பு கலர் ரிப்பனும்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்த பொருட்களை பார்த்து கொண்டிருந்தான்..

“சீட்ட எழுதிறவா செல்வாண்ணே??”

“இல்ல, பொறு.. வேற ஏதாவது வாங்கணுமான்னு பாத்துக்குறேன்..” என சுற்றிலும் நோட்டமிட்டு கொண்டிருந்தவனின் கண்களில் ஓரத்தில் போன் பேசிக்கொண்டிருந்த வித்யா தென்பட்டு விட்டாள்..

வெறி கொண்ட மிருகமாய் தகித்தவன், “அது.. இது..” என என்னவெல்லாமோ கேட்டு மொத்தமாய் பில் போட்டான்..  

அப்பாவிடம் பேசிவிட்டு திரும்பிய வித்யா திடீரென வந்து நின்ற செல்வாவை கண்டதும் கரண்ட் அடித்த கம்பமாக நின்று விட்டாள்..

“நீ எல்லாம் இன்னும் உயிரோட தான் இருக்குறியா?? பண்ணுன பாவத்துக்கு பரதேசம் போயிருப்பன்னு நினைச்சேன்.. ஆமா ஊருக்குள்ள உன்ன பத்தி ஒருத்தனுக்கும் ஒன்னும் தெரியல.. தலைமறைவாயிட்டன்னு ஊரே நம்பியாச்சு.. பிறவு எதுக்குடி வந்த?? நிம்மதியை கெடுக்கவா??”

“அந்த ஊருக்குள்ள நீ வச்சது தான் சட்டமா?? என் ஊருக்கு நான் வந்துட்டு போவேன்.. யார் கேக்க முடியும்??” இருந்த தைரியத்தை திரட்டி திக்கி திணறி கேட்டாள்..

“யார் கேக்க முடியுமா?? நான் கேப்பேன்டி..” என பற்களை கடித்துக்கொண்டு சீற, பதில் பேச அவளிடம் வார்த்தைகள் இல்லை.. முகம் அவமானத்தால் கருத்தது..

“திரும்பவும் ஊருக்குள்ள வர்ற அளவுக்கு தைரியம் வந்துடுச்சு ரெண்டு பேருக்கும்.. யாரு?? அந்த நாயி குடுத்த தைரியமா?? இங்க பாரு.. நல்லா கேட்டுக்க.. ரெண்டு பேரும் சேர்ந்து அந்த ஊருக்குள்ள வாழ முடியாது.. வாழவும் விட மாட்டேன்.. இப்பவே பெட்டி படுக்கையை எடுத்துட்டு ஓடிரு.. அவன் இருக்கான்.. அவன் பாத்துப்பான்.. வாழ வைப்பான்னு மட்டும் நினைக்காத.. ஒருநாள் இல்லன்னா ஒருநாள் என் கையால கண்டதுண்டமா கிடப்பான்.. கத்தி அழ கூட நாதியிருக்காது..” எச்சரித்த செல்வாவின் முகத்தில் தெறித்த வன்மத்தை வார்த்தையால் கூற முடியாது..

பழக்கடை முன், சொந்தகதை சோககதை என்று நீட்டி முழக்கி கொண்டிருந்த அருள், நிலைகுத்திட்டு நின்ற ராமின் விழிகள் சென்ற திசையை நோக்கினான்..

“என்ன பண்ணி வச்சிருக்க?? ராம் அண்ணோவ்.. உன்னத்தான்.. நீ முழு கிறுக்காவே ஆயிட்டியா??” அருள் பதற்றத்தில் கத்த,

“நான் என்னடா பண்ணுனேன்??” பாவமாய் முழித்தான் ராம்..

“சும்மா சும்மா ஆடுறவன் முன்ன சலங்கையை கொண்டு வந்து வச்சிருக்க.. அந்த புள்ளையும் வருதுன்னு முன்னாடியே சொல்லியிருந்தா நான் மட்டுமாவது வந்திருப்பேன்.. எப்பிடியாவது அவனை கழட்டி விட்ருப்பேன்.. காரியத்த கெடுத்துட்டியே ராமு..” தலையில் அடித்துக்கொண்டான்..

ராம் பேந்த பேந்த விழித்துக்கொண்டிருக்க, “வீட்டுலேயே ஒரு ஆட்டம் ஆடி தீர்த்துட்டு தான் வந்துருக்கான்.. இப்ப என்ன பண்ணுவானோ தெரியலையே..” என அங்கலாய்த்து கொண்ட அருள், “ஏன் ராம் அண்ணே, அவன் இன்னும் அந்த புள்ளைய மறக்கலைன்னு தெரியாதோ??” கடுப்பில் கேட்டான்..

இடவலமாய் தலையசைத்த ராமை நினைத்தால் எங்கேயாவது போய் முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது.. “போச்சு.. போ.. உன்ன கொன்ன பாவமும் என் தலையில தானா?? நல்ல அண்ணன் தம்பிக்கு பிரெண்டா வாய்ச்சேன் பாரு.. என்ன சொல்லணும்.. போற வழிக்கு போலீஸ் ஸ்டேஷன்ல நிறுத்துங்க.. இறங்கிக்குறேன்..” தலையில் துண்டை போட்டு அமர்ந்து விட்டான்.

.Next Episode

 

 


Post a Comment

0 Comments