வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
வேலையானது விசாவின்
வழியே வந்து சேரும்
வரையிலும் வலி தான்..
வந்தப்பின் வளர்ந்தநாட்டை
விட்டு வெளிநாடு விமானத்தில்
செல்லும் போதும் வலிதான்...
முதல்முறை சுற்றத்தாரின்
கேள்விகளுக்கு பதிலில்லையே
என்ற வலி...
இரண்டாம்முறை சூழ்நிலையால்
சொந்த குடும்பத்தை
சில காலங்களுக்குவிட்டு
செல்கிறோமே என்ற வலி...
வலியை மறைத்து வழியில்
சென்று வேள்வி போன்ற
வேதனை வந்தாலும் ஊரில்
பெற்ற மகள் சந்தோஷமாய்
சைக்கிள் மிதிக்கிறாள் என்ற
செய்தியை கேட்டு சிலிர்த்துபோகும்
செவியானது...
இவற்றை ஏன் பொறுத்துக்கொள்ள
வேண்டும் என இருமாப்பு
கொள்ளும் போது இரண்டரை
வயது புதல்வன் இரைச்சலாக
பொம்மை கார் ஓட்டுகிறான்
என கேட்டதும் கெத்து தானாய்
செத்து போகும்...
ஒவ்வொரு காரணங்களுக்காக
கஷ்டங்களை ஏற்றுக்கொண்டாலும்
குடும்பத்தினர் நிம்மதியாய்
உறங்குகிறார்கள் என்றதும் கட்டாந்தரையில் கூட
கண்ணயர்வு கொள்ளும்..
எத்துனை துயர் தாண்டி
கடல் தாண்டி சென்றாலும்
சொந்த ஊர் திரும்பிய போது,
ஓடி வந்து கட்டிக் கொள்ளும்
மகனும் மகளும்
ஓரமாய் நின்று கண்களாலேயே
நலம் விசாரிக்கும் மனைவியும்
காணும்போது கஷ்டம்
கானலாகி விடும்...
0 Comments