மீதமிருந்தது காதல் – 6

 மீதமிருந்தது காதல் 6


முந்தைய அத்தியாயம் 

இதுவரை...

சரண்யாவின் இல்லத்திற்கு வருகைதந்தார் அவளது அன்னை.

இனி...

முந்தைய நாள் இரவில்...

சரண்ராஜ் அவளைத் திட்டிக்கொண்டிருக்க, எரிச்சலுடன் தனது இல்லத்திற்கு வந்த சரண்யா, கதவைத் தடாரென அடைத்துவிட்டு தனது தோழி லாவண்யாவுக்கு அழைத்தாள்.

“என்னடி? ரொமான்டிக் டின்னர் முடிஞ்சதா? என்ன சொன்னான் உன் பிராணநாதன்?” என அவள் குறும்பாக விசாரிக்க, “சொன்னான் சுரைக்காய்க்கு உப்பில்லன்னு...” என சலித்துக் கொண்டாள் சாரு.

“உங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் அன்பா அப்ரோச் பண்ணவே தெரியாதாடி? எப்பப்பாரு முட்டிக்கிட்டே இருப்பீங்களா?”

“அவனுக்குத்தான் என்னை ஹான்டில் பண்ணத் தெரியல...”

“அவன்கிட்டே கேட்டா உனக்குத்தான் அவனை ட்ரீட் பண்ணத் தெரியலைன்னு சொல்லுவான்... சரி அதைவிடு... என்னாச்சு?”

“மாவு வாங்கிட்டு வா, தோசை சுடலாம்ன்னு சொன்னேன்... கடையிலேயே சாப்பாடு வாங்கிட்டு வர்றேன்னு ஃப்ரைடு ரைஸ் வாங்கிட்டு வந்தான்... நல்லாத்தான் உக்கார்ந்து சாப்பிட்டான்... சரின்னு கிளம்பும்போது காசு கொடுத்தேன், கத்துறான்...”

“கொஞ்சமாவது அறிவிருக்குதா சாரு? நீ ஏன் காசு கொடுத்த? அவன் காசுக்காகவா வாங்கிட்டு வந்தான்?”

“என்னடி நீயும் அவனை மாதிரியே புரிஞ்சுக்காம பேசுற? ஹீ இஸ் அ ஸ்டூடன்ட்... அவன்கிட்டே சேவிங்க்ஸ், பேரன்ட்ஸ் கொடுக்கிற பாக்கெட் மனின்னு எல்லாமே இருக்கும்தான்.. ஆனாலும் நானும் என் பங்குக்கு ஏதாவது ஃபினான்ஷியல் சப்போர்ட் பண்ணனும்ல... கீர்த்தனா பார்த்துக்குவான்னுதான் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணினாங்க... இப்போ இது என்னோட கடமை இல்லையா?”

“நீ சொல்றது ரொம்ப சரி, அவனுக்கு சப்போர்ட் பண்ண வேண்டியது உன்னோட கடமைதான்.. ஆனா பொண்டாட்டியா அவனுக்கு சப்போர்ட் பண்ண நினைச்சிருந்தா நீ என்ன பண்ணியிருக்கணும் தெரியுமா? மாதத்தொடக்கத்திலே சம்பளம் வந்ததும் அவன்கிட்டே எடுத்துட்டுப் போய் என்னோட வருமானம் இது, எனக்கான செலவுகள் இது; உன்கிட்டே பார்ட் டைம் ஜாப் மாதிரி வருமானம் ஏதாவது இருக்குதா? இந்த மாதத்திலே உனக்கான செலவுகள் என்னென்னன்னு பொறுமையா எல்லாத்தையும் டிஸ்கஸ் பண்ணியிருக்கணும்... அதைவிட்டுட்டு ஐநூறு ரூபாயை எடுத்து நீட்டினா அவனை இன்சல்ட் பண்ணின மாதிரி ஆகிடாதா? ஏன்டி அவன்கிட்டே இல்லாத காசா?” என லாவண்யா பேச, அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் சரண்யா.

“ஸீ சாரு... நீ அவன்கிட்டே நல்லவிதமா நடந்துக்கத்தான் முயற்சி பண்ற, அது எனக்குப் புரியுது... ஆனாலும் ஸ்கூல்டேஸ்ல நடந்த மாதிரியே ஹார்ஷா பண்ணினா எப்படிப்பா? நீ அவனை மதிக்கிறன்னு அவனுக்கு முதல்ல புரிய வை... அதுக்கு அப்புறம் அவனும் உன்னைப் புரிஞ்சிக்குவான்... நீ நினைக்கிற அளவுக்கு சரண் ஒண்ணும் மோசமானவன் இல்லடி..” என முடித்துவிட்டாள் லாவண்யா.

இவளிடம் பேசிவிட்டு சரண்ராஜின் தோழன் ராஜேஷிற்கு அழைத்தவள், “என்னடா... அவன்கிட்டே பேசினியா? ஏதாவது சொன்னானா?” என விசாரிக்க, “சாரு ஏதோ காசு கொடுத்திருப்பா போல... அதை சொல்லி கத்திட்டு இருந்தான்...” என தெரிவித்தான் அவன்.

“அவ தப்பான நோக்கத்திலே கொடுக்கலைடா... அவனுக்கு சப்போர்ட் பண்ணனும்ன்னுதான் கொடுத்திருக்கிறா.. ஆனா எப்படி அப்ரோச் பண்ணனும்ன்னு தெரியல... இப்போதான் அட்வைஸ் பண்ணிட்டு வச்சேன்...” என லாவண்யா விளக்க, “நானும் இவ்ளோ நேரம் அட்வைஸ் பண்ணிட்டுதான் இருந்தேன்.. தனித்தனியா இருந்தா புரிதல் வராது, ஒண்ணா இருந்தாத்தான் என்ன நோக்கத்துக்காக இன்னொருத்தர் இதை சொல்றாங்கன்னு புரியும்ன்னு சொன்னேன்... யோசிக்கறேன்னு சொல்லியிருக்கிறான்..” என்றான்.  

“இவங்க ரெண்டு பேருக்கும் கிளாஸ்மெட்டா இருந்த காலத்திலேயும் நிம்மதியில்ல... இவங்க புருஷன் பொண்டாட்டியான பின்னாடியும் நிம்மதியில்ல... ஷப்பா... முடியல சாமி...” சலித்துக் கொண்டாள் லாவண்யா.

“இப்பவரைக்கும் சாரு ஏன் கல்யாணத்துக்கு சம்மதிச்சாங்றதையே தலைவர் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கிறார், லாவண்...”

“பிடிக்காமலேயா கட்டிக்கிட்டா?”

“சொன்னா எங்கே நம்புறான்... நன்றியுணர்ச்சிக்காக சம்மதிச்சான்னு சொல்றான்... அதைவிடு... உண்மையாவே சாருவுக்கு இவனைப் பிடிக்குமா?”

“இவளைப் பத்தி உனக்குத் தெரியாதா ராஜு? பிடிக்கும்டா... ஆனா அக்செப்ட் பண்ணிக்க மாட்டிக்கிறா...”

“நமக்கென்ன... பிடிக்கும்ங்கறதை ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லிக்கட்டும்... நல்லா இருந்தா சரிதான்...”

“ஆமாடா... சரண் பேரன்ட்ஸ் பேசினாங்களா?”

“பேசினாங்க... ரெண்டு பேரையும் ஒண்ணா தங்கவைக்கிறதுக்கு வீடு பார்க்கணும்ன்னு சொன்னாங்க... அப்படியே ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின்னு வீட்டுக்குத் தேவையான பொருட்களும் வாங்கணுமாம்...”

“என்னடா இவங்க இவ்ளோ அட்வான்ஸா போயிட்டாங்க...”

“அவன்கிட்டே பெர்மிஷன் கேட்டுட்டு இருந்தா சரிப்பட்டு வராது, நாமளா தடாலடியா முடிவெடுத்தாத்தான் உண்டுன்னு சொல்றாங்க..”

“இதுங்க ரெண்டும் சம்மதிக்கணுமே!”

“அது பெத்தவங்க பாடு... பசங்களை எப்படி ட்ரீட் பண்ணனும்ன்னு அவங்களுக்குத் தெரியும் லாவண்... நீ ஃப்ரீயா விடு...”

“சரிடா... பார்ப்போம்.. வேற எதுவும்ன்னா கால் பண்ணு... குட் நைட்...” என அழைப்பைத் துண்டித்துவிட்டாள் லாவண்யா.

இங்கே...

சற்று முன்னர் நிகழ்ந்தவற்றை தனக்குள் மீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார் சரண்யாவின் அன்னை சகுந்தலா. “இப்படியே இவபோக்கிலே விட்டுட்டு இருந்தா சரியா வராது... சரண் தம்பி எவ்ளோ இறங்கிப் போறார்... இவ ஏன் சின்ன வயசுப் பகையை மனசிலே வச்சிட்டு இருக்கிறா? கட்டாயப்படுத்தாமலே கட்டிக்க சம்மதிச்சது சாருதானே?! எதிர்காலத்தை யோசிச்சு எடுத்த முடிவுன்னாலும் ஏன் இப்படி பண்றா?”

“நேரா அவ வீட்டுக்குப் போறோம், ரெண்டு பேரையும் ஒரே வீட்டுல தங்கவச்சி, தம்பியை நல்லவிதமா புரிஞ்சிக்க வைக்கிறோம்...” என சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே அவனது அன்னை அகல்யா அழைத்துவிட்டார்.

தாங்கள் இருவரும் தங்களது மகனுக்கும் மருமகளுக்கும் வீடுபார்த்து தனிக்குடித்தனம் வைக்கலாமென முடிவெடுத்திருப்பதாக தெரிவிக்க, சில நாட்கள் அவகாசம் கேட்ட சகுந்தலா தனது மகளுக்கும் மருமகனுக்கும் இருக்கும் இடைவெளியை சரிசெய்துவிடும் நோக்கில் உடனே புறப்பட்டு, இவ்விடம் வந்துவிட்டிருந்தார்.

தனது தாயை எதிர்பார்த்திராதவள், கதவைத் திறந்து திருதிருவென விழிக்க, “என்னடி பூதத்தைப் பார்த்த மாதிரி நிக்கிற?” என்றவாறே உள்ளே வந்தவர், “நீ தூங்கு... லேட்டா எந்திரிச்சா போதும்... நான் சமைச்சிடறேன்...” என்றார்.

“ம்ம்ம்... சரிம்மா...” என கரகரத்தக் குரலில் உரைத்தவள், “சதீஷ் பேசினானா?” என விசாரித்தாள். “ஹான்... பேசினான்... உனக்குத்தான் பேசணும்ன்னு சொல்லிட்டே இருந்தான்... வீக்என்ட் பேசுவான்னு நினைக்கிறேன்... சரண் தம்பிகிட்டேயும் பேசணும்ன்னு சொன்னான், நீ ரொம்ப கொடுத்து வச்சவளாம்...” என அவர் முடிப்பதற்குள் படுக்கையில் விழுந்திருந்தாள் சரண்யா.

சற்றுநேரம் ஓய்வெடுத்த சகுந்தலா, ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்துவிட்டார். “தினமும் முற்றத்தை பெருக்கி, தண்ணீர் தெளிச்சிடுன்னு சொன்னா டைமில்லைன்னு சொல்லுவா...” என முணுமுணுத்தவாறே, வாசலுக்கு வந்தவர் விளக்குமாற்றுடன் குனிவதற்குள் எதிர்வீட்டு வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த வண்டியை கவனித்திருந்தார்.

“இது சரண் பைக் மாதிரி இருக்குதே!” என்னும் சிந்தனையுடனே அவ்வீட்டின் வாசலுக்குச் சென்றவர், கேட்டின் மேலே எட்டிப்பார்க்க, வண்டியின் எண்ணிற்கு மேலே, “சரண்” என எழுதப்பட்டிருந்தது.

“மாப்பிள்ளையோட பைக்தான்.. அவர் இங்கேதான் தங்கியிருக்கிறாரா? சரண்யா ஒரு தடவைகூட சொல்லவேயில்ல... நானும் ரெண்டு மாதமா இங்கே வராததால எனக்கும் தெரியல... சரண்யா இங்கே குடியிருக்கிறான்னு அவருக்குத் தெரியுமா? இவ சொல்லியிருப்பாளா? ஏன் ரெண்டு பேரும் இப்படி இருக்கிறாங்க? சண்டை போட்டுட்டு இருந்தவங்க அப்படியே இருந்திருக்க வேண்டியதுதானே?! ஏன் தேவையில்லாம கல்யாணம்ன்னு ஒண்ணை தலையில தூக்கிப் போட்டுக்கிட்டாங்க... ச்சே இல்ல இல்ல... சரண்யாதான் தலையில தூக்கிப் போட்டுக்கிட்டா... மனசிலே என்ன யோசிச்சிட்டு இருக்கிறான்னு தெரியலையே!” என யோசித்தவாறே முற்றத்தைப் பெருக்கி, கோலமிட்டு முடித்து நிமிர்ந்தார்.

அதிகாலையில் ஜிம்மிற்கு செல்வதற்காக கீழே வந்த சரண் இவரைக் கண்டுகொள்ள, சகுந்தலாவும் அவனைப் பார்த்துவிட்டார். “மாப்பிள்ளை.. இங்கேதான் இருக்கிறீங்களா? ரெண்டு பேரும் சொல்லவேயில்ல...” என அவர் ஆச்சரியத்துடன் வினவ, என்ன சொல்வதென தெரியாமல் திகைத்து நின்றான் அவன்.

“அதில்ல அத்தை... கொஞ்சம் ஸ்பேஸ் எடுத்துக்கலாமேன்னு...” என அவன் இழுக்க, “அதெல்லாம் ஒண்ணும் வேணாம் தம்பி... ஒண்ணா இருந்தாத்தான் எல்லாம் சரியா வரும்... ஜிம்முக்குப் போயிட்டு நம்ம வீட்டுக்கு வந்துடுங்க... டிஃபன் சாப்பிட்டுட்டு காலேஜ் போங்க.. லஞ்சும் பேக் பண்ணிடறேன்...” என கட்டளையிடுவதைப் போல உரைத்தவர் வீட்டிற்குள் வந்துவிட்டார்.

வழக்கத்தைவிட சற்று தாமதமாகவே எழுந்துகொண்ட சரண்யா, சமைத்துக் கொண்டிருந்த தனது தாயை பின்னாலிருந்து கட்டிக்கொண்டாள்.

“பிரஷ் பண்ணிட்டு வா... சூப் வச்சிருக்கிறேன், எடுத்துக் குடி...” என அவர் பேச, “சூப்பா? டீ எங்கேம்மா?” எனக் கேட்டாள். “ஜிம்முக்கு போயிட்டு வர்றவருக்கு ஹெல்த்தியா கொடுக்கணும்ல.. நீயும் இனி ஹெல்த்தியாத்தான் சாப்பிடணும்... நானுமே டீ குடிக்கிறதை நிறுத்த முயற்சி பண்ணப் போறேன்...” என உரைத்த மாத்திரத்திலேயே இவளுக்குக் காரியம் விளங்கிவிட்டிருந்தது.

“ஜிம்மா? சரணை பார்த்தியா?” என அவள் நேரடியாகக் கேட்டுவிட, “தம்பிக்கு சமைச்சுக் கொடு, டீ எடுத்துட்டுப் போய் கொடுன்னு சொல்லும் போதெல்லாம் அவர் இங்கேதான் இருக்கிறார்ன்னு ஏன் சொல்லலை?” என சற்றே ஆதங்கமாக விசாரித்தார்.

“ரெண்டு மாதத்துக்கு முன்னாடிதான் காலேஜ் ஜாயின் பண்ணினார், இங்கே குடிவந்தார்... கொஞ்சநாள் கழிச்சு எங்களுக்குள்ள டெர்ம்ஸ் சரியான பின்னாடி உங்க எல்லார்கிட்டேயும் சொல்லலாம்ன்னு இருந்தோம்...” என அவள் மெல்லிய குரலில் உரைக்க, “என்னவோ... உங்க நியாயம் உங்களுக்கு... போ... சூப்பைக் குடிச்சிட்டு, குளிச்சு ரெடியாகு.. வரும்போதே காய்கறியெல்லாம் வாங்கிட்டுவந்து சமைச்சிட்டேன்...” என விரட்டினார்.

அவனுக்கு அழைத்தவர், “தம்பி... ஜிம் போயிட்டு, வீட்டுக்கு வந்து சூப் குடிச்சிட்டு போய் குளியுங்க... நீங்க எந்த மாதிரி சத்துபானங்கள் எடுத்துக்குவீங்கன்னு தெரியாது... அதனால வெஜிடபிள் சூப்தான் போட்டிருக்கிறேன்..” என தெரிவிக்க, வேறுவழியின்றி வந்து அருந்திவிட்டுச் சென்றான்.

அவன் தயாராகி வருவதற்குள் தயாராகி, உணவருந்திவிட்டு புறப்பட்டுச் சென்றிருந்தாள் சரண்யா. அவள் சென்ற பிற்பாடு வந்தவனுக்கு காலை உணவைப் பரிமாறியவர், “அடுத்தவங்களோட நிர்பந்தத்துக்காக எதையும் பண்ணாதீங்க தம்பி! இந்த காலத்துப் பசங்க ரொம்ப தெளிவானவங்க... என்ன சொல்றேன்னு புரியும்ன்னு நம்புறேன்...” எனப் பூடகமாக உரைக்க, நிமிர்ந்து பார்த்தான் சரண்.

“அத்தை! நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லவே இல்ல... நாங்க இன்னமும் சின்னப் பசங்க மாதிரி அடிச்சு விளையாடற ஸ்டேஜ்லதான் இருக்கிறோம்... ஒருத்தர் இன்னொருத்தங்க மேல வெறுப்புங்கறதெல்லாம் ஓவர்ரேட்டட் வார்த்தைன்னு தோணுது...” என தீர்க்கமாக உரைத்தான்.

“அப்போ ஏன் சரண் உங்களுக்காக வாழாம எங்களுக்காக சாக்குப்போக்கு சொல்லிட்டு இருக்கிறீங்க?” என அவர் கிடுக்கிப்பிடி போட, “நான் என்ன செய்யணும் அத்தை?” என நேரடியாகவே கேட்டான்.

“ரெண்டு பேரும் ஒரே வீட்டுல இருக்கணும், சரண்... உங்க வீட்டு சாவியைக் கொடுங்க... உங்களோட பொருட்களை நானே இங்கேவந்து வச்சிடறேன்... உங்க ஹவுஸ் ஓனர்கிட்டே சொல்லிடுங்க...” என அவரும் தன்தரப்பைக் கூற, செய்வதறியாது திகைத்தான் அவன்.

“அத்தை இங்கே இருக்கிற வரைக்கும் ஓகே... இவங்க ஊருக்குப் போயிட்டா அவ கத்துவாளே! ஏற்கனவே பணம் கொடுத்து இன்சல்ட் பண்றா... இனி வீட்டுவாடகை, காய்கறி செலவுன்னு எல்லாத்தையும் தானே சுமந்து, என்னை காப்பாத்துற மாதிரி ஓவரா பண்ணுவாளே!” என்னும் சிந்தனையுடன் இட்லியைப் பிசைந்து கொண்டிருக்க, “விருப்பமில்லைன்னா விடுங்க, தம்பி.. அண்ணாகிட்டேயும் அண்ணிகிட்டேயும் நான் பேசிக்கறேன்...” என்றார் சகுந்தலா.

என்ன நினைத்தானோ தனது அறை சாவியை எடுத்து அவரிடம் நீட்டியவன், “சாவியை வச்சுக்கோங்க அத்தை... ஆனா அங்கேயிருந்து திங்க்ஸ் இங்கே எடுத்துட்டு வர்றதுக்கு நான் ஈவ்னிங் வந்து ஹெல்ப் பண்றேன்... ஏன்னா மூணாவது மாடி வரைக்கும் ஏறி, இறங்கி கஷ்டப்பட வேணாம்..” என தெரிவித்துவிட்டு, மதிய உணவுடன் விடைபெற்றான்.

மாலையில் கல்லூரி வேலைநேரம் முடித்து அவளுக்கு முன்னரே வந்துவிட்டிருந்தவன், சகுந்தலாவை அழைத்துக் கொண்டு தனதறைக்குச் சென்றான். “அத்தை... பெருசா பேக் பண்றதுக்கெல்லாம் ஒண்ணுமில்ல... கிச்சன்ல இருக்கிற திங்க்ஸ் மட்டும் இந்த பிக்ஷாப்பர்ல வச்சு எடுத்துட்டுப் போங்க... டிரெஸ்ஸ நான் எடுத்துட்டு, சாவியை ஓனர்கிட்டே கொடுத்துட்டு வர்றேன்...” என அவன் தெரிவிக்க, இருவரும் அரைமணி நேரத்தில் வீட்டைக் காலிசெய்து விட்டிருந்தனர்.

இருவரும் பேசியவாறே மாலையில் தேநீருடன் வடையை சுவைத்து உண்டனர். இரவு உணவிற்காக அவர் சப்பாத்தி பிசையலாம் எனத் தெரிவிக்க, “அத்தை... எனக்கு பிராஜெக்ட் ஒர்க் இருக்குது... நான் சாப்பிட்டுட்டு அரவிந்த் வீட்டுக்குப் போயிட்டு வந்துடறேன்...” என்றான்.

இதுகாறும் இணக்கமாக நடந்து கொண்டவனது செய்கைகளில் சந்தேகம் ஏற்படாததால், “சரிப்பா...” என அவர் சம்மதித்துவிட, இருவரும் சேர்ந்தே இரவு உணவைத் தயார்செய்தனர். உணவருந்திவிட்டு அவன் புறப்பட்ட பின்பே வீடு திரும்பினாள் சரண்யா.

“மீட்டிங் இருந்துச்சும்மா... அதான் லேட்டாகிடுச்சு...” என்றவாறே அவள் உள்ளே நுழைய, “குளிச்சிட்டு ட்ரெஸ் மாத்திட்டு வா... சாப்பிடலாம்...” என அழைத்தார்.

சரியென சென்று தனது அலமாரியைத் திறந்தவள், “ம்மா... என்னதிது?” எனக் கத்தினாள். “என்ன சரண்யா?” என அவர் அவ்விடம் வர, “இவர் எப்போ வந்தாரு? அவரோட ட்ரெஸ் ஏன் என்னோட கப்போர்டுல இருக்குது?” என வினவினாள் சரண்யா.

“அவர் உன்னோட புருஷன்தானே?! அப்போ ரெண்டு பேரும் ஒரே இடத்திலேதானே இருக்கணும்... அதனாலதான் அவரை வீடு காலிபண்ணி, இங்கே வர சொல்லிட்டேன்...” என அவர் தீர்க்கமாக உரைக்க, “இங்கே வந்துட்டானா? அப்படின்னா ரெண்டு பேரையும் ஒரே ரூம்ல தங்க சொல்லிடுவாங்களோ? ஏன் என்கிட்டே கேட்காம எல்லா முடிவையும் இவங்களே பண்றாங்க? ஏன்னு கேட்டா நீதானே கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சன்னு சொல்லி, வாயை அடைச்சிடறாங்க..” என தனக்குள் சிந்தனை பண்ணினாள்.

“நம்மை மாதிரிதானே அவனுக்கும்... அவன் ஏதாவது யோசிச்சு வச்சிருப்பான்... பார்த்துக்கலாம்...” என ஒருவாறாக தன்னைத்தான் சமாதானம் செய்துகொண்டவள், அமைதியாக உணவருந்தினாள்.

காதல் செலவு தொடரும்...

அடுத்த அத்தியாயம் – விரைவில்... 

ஏன்னு தெரியல டியர்ஸ்... எபிசொட் டைப் பண்ணினாலும் ரெகுலரா போஸ்ட் பண்றதுக்கு மனசு வரமாட்டேங்குது... கொஞ்சம் என்கரேஜ் பண்ணுங்க பா... ஸ்கூல்ல சொல்லுவாங்கள்ல, தினமும் ஒருத்தர் இடிச்சிட்டே இருக்கணும் போலன்னு... அப்படித்தான் இருக்குது... யாராவது நெக்ஸ்ட் எபிசொட் எப்போன்னு தினமும் கேக்கறீங்களா? அப்படியாவது பண்றேனான்னு பார்ப்போம்.. ஹிஹி... 


எனிஹவ் சப்போர்ட் பண்ற எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி டியர்ஸ்...

Reactions

Post a Comment

3 Comments

  1. Super dr interesting ga irunthathu dr😍😍😍 ivanga rendu perayum ore veetla vacha Nalla entertainment a irukum dr like tom and Jerry 😅 waiting for next ud dr,☺️☺️☺️

    ReplyDelete
  2. Superb sis 😍😍😍😍😍😍
    Intresting ah poguthu 😍😍😍😍😍

    ReplyDelete