மீதமிருந்தது காதல் - 2

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க...

     மீதமிருந்தது காதல் - 2

“உன்னை யாரும் நிர்பந்தப்படுத்தலை, சரண்யா... இது உன்னோட வாழ்க்கை தெளிவா யோசிச்சு முடிவெடு.. சரணை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா?” என உறவினர் மீண்டுமொரு முறை வினவ, கண்களை மூடி ஒரு கணம் சிந்தித்தவள், “சரி...” எனத் தலையசைத்துவிட்டிருந்தாள்.

தம்பதிகளாக மேடையில் நின்றிருந்த தங்களது மகன் மற்றும் மருமகளை மகிழ்ச்சியுடன் நோக்கிய அகல்யா, “சம்பந்தி... மேற்படி காரியங்கள்...” என இழுக்க, “சரணுக்கு ஓகேங்கற மாதிரிதான் ராஜேஷ் சொல்றான்... இருந்தாலும் சரண்யாவை பத்தியும் யோசிக்கணும்...” என்றார் ராஜாங்கம்.

“எனக்கும் அதேதான் தோணுச்சு அண்ணா... கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டா... ஆனா அடுத்தடுத்த விஷயங்களுக்கு அவ தயாரா இருக்கிறாளான்னு தெரியல... நாமளும் சம்பிரதாயம்ன்னு சொல்லி, அவளை சங்கடப்படுத்த வேணாம்ன்னு நினைக்கிறேன்...” என சகுந்தலா ஒரு தாய்க்கே உரித்தான பரிதவிப்புடன் தெரிவிக்க, “அதையேதான் நாங்களும் நினைச்சோம்... நீங்க பயப்படாதீங்க! ரெண்டு பேரும் கொஞ்சம் தங்களை ஆசுவாசப்படுத்திக்கட்டும்... அப்புறமா இதைப் பத்தி பேசுவோம்...” என்றுவிட்டனர் அவனது பெற்றோர்.

வரவேற்பு முடிந்து சோர்வாக அறைக்குத் திரும்பினான் சரண். கதவு தட்டப்பட, “திறந்துதான் இருக்குது... வாங்க...” என தெரிவிக்க, உள்ளே வந்தனர் அவனது பெற்றோர்.

“சரண்... இன்னைக்கு ராத்திரி...” என அவர்கள் முடிப்பதற்குள், “அதெல்லாம் இப்போதைக்கு வேணாம்ப்பா... அவளுக்கு மூச்சுவிடறதுக்கு கொஞ்சம் டைம் கொடுங்க...” என்றான் இயல்பாக.

தனது மனைவியின் நலனின் அக்கறைகொண்டு பேசும் மகனின் செய்கையில் மனம்குளிர்ந்த அவனது பெற்றோர், “நாங்களும் அதைத்தான்ப்பா சொல்ல வந்தோம்... சரண்யா நம்ம வீட்டிலே இருக்கட்டும்... நீ அங்கே போய் எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு வந்து அழைச்சிட்டுப் போ...” என்றனர்.

“வேலையை ரிசைன் பண்ணிட்டு வீட்டிலேயே இருக்க வேணாம்ப்பா... வேலைக்குப் போகட்டும்... எனக்கும் படிப்பு முடியணும்ல... படிச்சிட்டு இருக்கிறேன், கல்யாணம் வேணாம்ன்னு சொன்னாலும் நீங்க கேக்கல... இப்போ இவளையும் அங்கே அழைச்சிட்டுப் போனா எல்லாத்துக்கும் யோசிக்கணும்... சம்பாத்தியமில்லாம என்ன பண்றதுன்னு தெரியலை... என்னதான் நீங்க ஃபினான்ஷியலி சப்போர்ட் பண்ணினாலும் என்னை நம்பி கழுத்தை நீட்டின பொண்ணோட இயல்பான தேவைகளை நிறைவேத்துறதுக்காகவாவது சம்பாதிக்கணும்ல... ஏற்கனவே வேலை பார்த்தப்போ சேர்த்துவச்ச பணம் இருக்குதுதான்.. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் ஸ்டேபிளாகணும்ன்னு நினைக்கிறேன்...” என சரண் தனது நிலைப்பாட்டை தெளிவாக உரைக்க, “இப்போதானேப்பா ஃபர்ஸ்ட் செமஸ்டர் போகுது... இன்னும் ஒன்றரை வருஷம் சரண்யாவை தனியா தங்கிக்க சொல்றியா?” என சற்றே ஆதங்கத்துடன் வினவினார் அகல்யா.

“கீர்த்தனாவோட அப்பா காலேஜ் பக்கத்திலேயே வாடகை வீடு பார்த்து தர்றதா சொன்னார்.... இப்போ அதை நாம கேட்கமுடியாதுல்ல... ஃபர்ஸ்ட் செமஸ்டர் முடியறதுக்குள்ள தெளிவா யோசிச்சு முடிவு பண்றேன்ப்பா... அதுவரைக்கும் கொஞ்சம் டைம் கொடுங்க... சரண்யாவுக்கும் இதுதான் தோணும்ன்னு நினைக்கிறேன்...” என முடித்துவிட்டான்.

அவளிடம் சென்று சரணது கூற்றை விளக்க, அவளும் அதை ஆமோதித்தாள். “நடந்ததை ஏத்துக்கிட்டு ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு வாழறதுக்கு டைம் அண்ட் ஸ்பேஸ் கொடுங்க, அத்தை... ப்ளீஸ்...” என அவள் கெஞ்சும் தொனியில் பேச, “சரிப்பா... உங்க இஷ்டம்.. நல்லா இருந்தா சரி...” என விட்டுவிட்டனர்.

B.E (CSE) பட்டதாரியான சரண் கல்லூரியிலேயே முதல் மாணவனாகத் திகழ்ந்தான். பிரபலமான மென்பொருள் நிறுவனமொன்றில் கைநிறைய ஊதியத்துடன் பணிக்குத் தேர்வானவன், நான்காண்டுகள் பணிபுரிந்தான். ஒரு கட்டத்தில் செய்யும் வேலை சலித்துப் போய்விட, மேற்படிப்பு பயின்று வேறொரு கோணத்தில் வாழ்வை நகர்த்தலாமென முடிவுசெய்தவன் அதன் பொருட்டே தான் பயின்ற அதே கல்லூரியில் MBA சேர்ந்துவிட்டிருந்தான்.

அதற்கு முன்னரே அவனுக்கு பெண்தேடும் படலம் தொடங்கிவிட்டிருந்தது. “ம்மா... படிக்கும் போது கல்யாணம் பண்ணினா சிரிப்பாங்கம்மா...” என அவன் தவிர்க்க, “ஸ்கூல் படிக்கிற பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலை... செட்டிலான பின்னாடி, மேற்கொண்டு படிக்கிறவனுக்குத்தான் பொண்ணு பார்க்கிறோம்... அப்பாவும் அம்மாவும் திடகாத்திரமா இருக்கும்போதே உனக்கு கல்யாணம் பண்ணிடணும்ன்னு ஆசைப்படறோம்... அதனால அமைதியா இரு...” என கண்டிப்புடன் தெரிவித்துவிட்டார் அவனது அன்னை.

நன்றாகப் படித்து, மென்பொருள் நிறுவனமொன்றில் பணிபுரியும் கீர்த்தனாவின் ஜாதகமும் சரணின் ஜாதகமும் நன்றே பொருந்திப் போய்விட, அடுத்தக்கட்ட பேச்சுகளை நோக்கி நகர்ந்தனர். முதலில் அவன் சற்றே தயங்க, “கவலைப்படாதீங்க சரண்! ஒன்றரை வருஷம்தானே?! கீர்த்தனா வீட்டு செலவுகளை பார்த்துப்பா... நீங்க உங்களோட இலட்சியத்தை நோக்கி ஒடுங்க... அவ சப்போர்ட் பண்ணுவா... சறுக்கினா தாங்கிப் பிடிக்கத்தான் நாங்களும் உங்களை பெத்தவங்களும் இருக்கிறோமே! பெத்தவங்களுக்கு பசங்க சந்தோஷம்தானே முக்கியம்!” என்னும் கீர்த்தனாவின் தந்தையின் பேச்சு சற்றே நம்பிக்கையைத் தந்ததும் சரியென சம்மதித்துவிட்டான்.

இப்போதும் தனக்கு திருமணம் என்பதை நெருங்கிய ஓரிரு வகுப்புத் தோழர்களிடம் மட்டும் தெரிவித்திருந்தவன், வியாழன் மற்றும் வெள்ளியென இரு தினங்கள் மட்டுமே விடுப்பு பெற்றுவிட்டு வந்திருந்தான். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் விருந்தினரின் வருகையில் கழிந்துவிட, சரண்ராஜ் சரண்யா இருவரும் தத்தமது ஓடுபாதையில் ஓடுவதற்கு தயாராயினர்.

“மத்ததுக்குத்தான் டைம் வேணும்ன்னு சொன்ன, எங்களையும் அங்கே வரவேணாம்ன்னு சொல்லிட்ட... அட்லீஸ்ட் நீயாவது சாருவை பஸ்ஸ்டாப்பிலே கொண்டுவிடலாம்ல...” என அகல்யா கெஞ்சுதலுடன் வினவ, “சரி... வரசொல்லுங்க..” என்றான்.

*Paid Promotion*
 For Customized Gifts & Candles, Contact : 9600112747

தனது பைகளை எடுத்துவைத்துக் கொண்டிருந்த சரண்யாவிடம் வந்த அகல்யாவும் சகுந்தலாவும் அவளுக்கு உதவிசெய்யத் தொடங்க, “அட்லீஸ்ட் உன்னோடவாவது வந்து ரெண்டு மூணு நாள் தங்கணும்ன்னுதான் ஆசை சாரு! அவன் வேணாம்ன்னு சொல்றான்...” என்றார் அகல்யா.

“கல்யாணத்துக்கு போறேன்னு லீவ் வாங்கிட்டு வந்த இடத்திலே கல்யாணம் பண்ணிட்டு வந்ததை ஃபேஸ் பண்ண முடியாத தர்மசங்கடமான சூழ்நிலையை எனக்குத் தரவேணாம்ன்னு யோசிச்சிருப்பார் அத்தை...” என்றாள் அவளும் தன் கணவனை விட்டுத்தராமல்.

இடைப்பட்ட நாட்களில் இருவரும் ஒருவர் மற்றவரிடம் ஏதும் பேசிக்கொள்ளாவிடினும் தத்தமது தரப்பை காத்துக் கொள்ள, தங்களையும் அறியாமல் தமது இணைக்காகப் பரிந்து பேசிக் கொண்டிருந்தனர்.

“சரிம்மா..” என அகல்யா அரைமனத்துடன் சம்மதிக்க, “நானாவது வந்து ரெண்டு நாள் தங்கட்டுமா? எனக்கு உன்னை தனியா அனுப்புறதுக்கு சங்கடமா இருக்குது, சாரு...” என சகுந்தலா உரைக்க, “ம்மா... இவ்ளோ நாள் அங்கேதானே இருந்தேன்... இன்னைக்கு என்ன புதுசா? ஐ கேன் மேனேஜ்ம்மா... விடுங்க...” என்றாள் திடமாக.

“பார்த்துப் போயிட்டு வாம்மா...” என அவளது தாயும் மாமியாரும் நெற்றியில் முத்தமிட்டு அழைத்துவர, கையில் தீபாராதனை தட்டுடன் வந்தார் ராஜாங்கம். “சரண்... சாரு... அப்பா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோங்கப்பா...” என அகல்யா தெரிவிக்க, தம்பதியர்சகிதம் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினர்.

“பார்த்து பத்திரமா கொண்டுவிடுப்பா...” என கையசைத்து இருவரையும் வழியனுப்பி வைக்க, சற்று தூரம் சென்றதுமே, “நான் இறங்கிக்கறேன்...” என திருவாய் மலர்ந்தாள் திருமகள்.

“எனக்கும் உன்னை பைக்ல வச்சிக்கிட்டு ஊர்வலம் வரணும்ன்னு ஆசையில்ல...” என தானும் சற்றே கடுப்பாக உரைத்தவன் ஓரிடம் வண்டியை நிறுத்த, “இப்படி பாதியிலேயே இறக்கிவிட்டா எப்படி?” என சீறினாள்.

“நீதானே இறக்கிவிட சொன்ன?” என இவனும் பதிலுக்கு சீற, “பக்கத்திலே இருக்கிற பஸ்ஸ்டாப்ல நிறுத்த சொன்னேன்...” என்றாள் எரிச்சலுடன்.

அதை தெளிவா சொல்லணும்... ஹீரோயின் மாதிரி பேசறேன் பேர்வழின்னு எதையாவது உளறினா இப்படித்தான் நடக்கும்...” என அவளுக்குக் கேட்கும்விதமாகவே முணுமுணுத்தவன் வண்டியை நகர்த்த, “ச்சே...” என முகத்தைத் திருப்பிக் கொண்டாள் சரண்யா.

அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் வண்டியை நிறுத்தியவன், அவள் இறங்கிக் கொண்டவுடன் “சேஞ் இருக்குதா?” என இயல்பாக விசாரித்தவாறே சட்டைப் பையைத் துழாவ, “எங்களுக்கு தெரியும்.. நீங்க ஒண்ணும் அக்கறை மழையைப் பொழிய வேணாம்...” என்றாள்.

“பாலைவனத்திலே பொழியறதுக்கு நான் ஒண்ணும் மாதிரி முட்டாளில்ல...” என அவன் முடிப்பதற்குள் எரித்து விடுவதைப் போல முறைத்தாள்.

“உன்னை பஸ் ஏத்திவிடும்போது கொடுக்கிறதுக்காக அம்மா பணம் கொடுத்தாங்க... அதனாலதான் கேட்டேன்... வேணாம்ன்னா விடு... எனக்கு ஆயிரம் ரூபாய் லாபம்...” என்றவன் அங்கிருந்து புறப்பட்டுவிட, இவளோ பேருந்தில் ஏறி பணியிடப் பகுதியில் தனது உறைவிடம் நோக்கிப் பயணிக்கலானாள்.

மறுநாள் சரண்ராஜ் பயிலும் கல்லூரியில்....

அவன் வகுப்பிற்குள் நுழைகையிலேயே புன்னகையுடன் வரவேற்ற தோழர்கள், “ப்ரோ... வாங்க... கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதா? நாலு நாளிலேயே வர்றதுக்கு அண்ணி கோச்சுக்கலையா?” என விசாரிக்க, அவர்களுக்குப் பதில்மொழியாமல் புன்னகையுடன் அமர்ந்தான்.

“என்ன ப்ரோ சிரிக்கிறீங்க? ட்ரீட்லாம் கேட்க மாட்டோம்...” என அரவிந்த் அவனது தோளில் தட்ட, “பெரிய கலாட்டாவாகிடுச்சு ப்ரோ...” என்றான்.

“கலாட்டா? பொண்ணு மாறிடுச்சா?” என தோழன் கேலியாகக் கேட்டுவிட, இவனோ ஆமெனத் தலையசைத்தான்.

“விளையாடாதீங்க ப்ரோ... நான் சும்மாதான் கேட்டேன்...” என தோழர்கள் மூவரும் அவனை உற்றுநோக்க, “நிஜம்தான்ப்பா... கல்யாணத்துக்கு முந்தின ராத்திரி வரைக்கும் அவ்ளோ நல்லா பேசிட்டு இருந்தா... காலையில பார்த்தா பொண்ணை காணோம், கல்யாணத்திலே விருப்பமில்லைன்னு சொல்லிட்டு ஓடிட்டான்னு சொல்றாங்க...” என தெரிவித்தான் சரண்.

“ஐயயோ... ஸாரி ப்ரோ... நாங்க இதை எதிர்பார்க்கலை... வீட்டுல எல்லாரும் ரொம்ப வருத்தப்பட்டிருப்பாங்கள்ல...” என அவர்கள் வருத்தத்துடன் தெரிவிக்க, “அதெல்லாம் இல்லப்பா... அதுக்கு அப்புறமா திடுதிப்புன்னு இன்ஸ்டன்டா பொண்ணு தேட, என்னோட ஸ்கூல் ஃப்ரென்ட் எதையும் யோசிக்காம என்னை கட்டிக்கறேன்னு சொல்லிட்டா... அவங்க எங்களோட ஃபேமிலி ஃப்ரென்ட்தான்... சோ எல்லாருக்குமே ரொம்ப சந்தோசம்...” என முடித்தான்.

“எல்லாருக்கும் சந்தோசம் ஓகே... நீ சந்தோஷமா இருக்கிறியா ப்ரோ? வேற மாதிரி ஒரு வாழ்க்கையை எதிர்பார்த்திருந்திருப்பல்ல... ஏமாற்றமா இல்லையா? எமோஷனல் ஃபூலா இருக்கக்கூடாதுன்னு சொல்லுவீங்களே! 90ஸ் கிட்க்கு இதைவிட்டா வாய்ப்பு கிடைக்காதுன்னு சரின்னு சொல்லிட்டியா?” என அரவிந்த் கேட்க, “டேய்... இதுதான்டா உங்க 2K கிட் கேல்குலேஷன்... நிஜமா நீ சொல்ற மாதிரி எந்த காரணமும் கிடையாது.. கல்யாணப் பொண்ணு ஓடிப்போயிட்டான்னு சொன்னப்போ உள்ளுக்குள்ள ஓடிட்டு இருந்த சோககானம், அவ கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டான்னு கேட்டப்போ டக்குன்னு மியூட்டாகி ஒரு மாதிரி Soothing Melodyஆ மாறினதை என்னால உணர முடிஞ்சது... சோ இதுதான் விதின்னு அமைதியா இருந்துட்டேன்....” என தன்னிலையை எடுத்தியம்பினான்.

“நீங்க விதிதான்னு விட்டுட்டீங்க! அண்ணிகிட்டே கேட்டீங்களா? அவங்க எதுக்காக சம்மதிச்சாங்கன்னு... ஒருவேளை அவமானத்திலேயிருந்து உங்களை காப்பாத்துறதுக்காக சரின்னு சொல்லியிருப்பாங்களோ?”

“அவளைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும்டா... இப்படியெல்லாம் யோசிக்கிற ஆளில்ல... தனக்கு சரின்னு தோணினதை தைரியமா செய்யறவ... அதனால அவகிட்டே எதையும் கேட்கல...”

“அண்ணியை அம்மாவோட ஊரிலேயே விட்டுட்டு வந்துட்டியா ப்ரோ? இங்கே அழைச்சிட்டு வந்திருக்கலாம்ல...”

“அவ வேலைக்குப் போயிட்டா... நான் ஃபினான்ஷியலி ஸ்டேபிலாகுற வரைக்கும் தனித்தனியா இருப்போம்ன்னு முடிவு பண்ணியிருக்கிறோம்...” என்ற சரண், “என்னோட கல்யாண விஷயம் வேற யாருக்கும் தெரிய வேணாம்... நம்மோட மென்டார்கிட்டேகூட சொல்ல வேணாம்...” என தெரிவிக்க, சரியென சம்மதித்தனர் தோழர்கள்.

அதற்குள் வழக்கமான வகுப்புகள் தொடங்குவதற்கான மணி ஒலிக்க, அனைவரும் ஆயத்தமாயினர்.

வகுப்பிற்குள் கணிதப் பேராசிரியை வருவதற்கான அறிகுறிகள் தென்பட மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்றனர். “ப்ரோ... உன்னோட ஃபேவரிட் மேம் வந்துட்டாங்க...” என அரவிந்த் சரணின் காதில் கிசுகிசுக்க, “ப்ரோ.. இனி மேம்கிட்டே வம்பு பண்ண மாட்டார்... ஏன்னா கல்யாணமாகிடுச்சுல்ல...” என அருகில் நின்றவாறே கிளுக்கிச் சிரித்தான் ஆதித்யா.

“டேய்... சும்மா இருங்கடா...” என சரண் இருவரையும் முறைப்பதற்குள், “குட் மார்னிங் மிஸ்டர்.சரண் ராஜை தவிர எல்லாரும் உக்காருங்க...” என்றுவிட்டிருந்தார் பேராசிரியை.

“அச்ச்சோ.... போச்சு போச்சு...” என நண்பர்கள் இருவரும் நாக்கைக் கடித்துக் கொண்டவாறே அவனை திகைத்து விழிக்க, இதர மாணவர்களோ, “திங்கள்கிழமை ஃபர்ஸ்ட் பீரியடே ரெண்டு பேரும் இவங்க போரைத் தொடங்கிட்டாங்க...” என தங்களுக்குள் முணுமுணுத்தனர்.

ஆனால், சரணோ ஏதும் நிகழாததைப் போல, மார்பின் குறுக்கே கைகளைக் கட்டி அவரை சட்டை செய்யாது நின்றிருக்க, அவரும் அவனைப் பொருட்படுத்தாமல் பயிற்றுவிக்கத் தொடங்கினார்.

பத்து நிமிடங்கள் கழிந்த பிற்பாடு, “புரிஞ்சது தானே! ஓகே... நோட் இட்....” என அவர் தெரிவிக்க, “நான் உக்காரலாமா மேடம்?” என சற்றே எள்ளல் கலந்த கடுமையுடன் குரலையுயர்த்தினான் சரண்.

“எப்போ உக்காரணும்ன்னு சொல்லுவேன்...” என அவரும் விட்டுத்தராமல் பேச, இவனோ “முதல்ல ஏன் நிற்க வச்சீங்கன்னு சொல்லுங்க..” என பதிலுக்கு வாதம் செய்தான்.

“டேய்... பெரியவரை அமைதியா இருக்க சொல்லுடா...” என முன்னிருக்கையில் அமர்ந்திருந்த மாணவியொருத்தி பின்னால் திரும்பி அரவிந்திடம் சைகை மொழியால் பேச, “சொன்னா கேட்டாதானே!?” என தோளைக் குலுக்கியவாறே அரவிந்தின் தொடையில் தட்டினான்.

“ப்ரோ.. அமைதியா இரு ப்ரோ... ப்ளீஸ்...” என அரவிந்த் அவனுக்கு மட்டும் கேட்கும்வண்ணம் கிசுகிசுக்க, முறைத்தவாறே அருகில் வந்த கணிதப் பேராசிரியை தேவி, “மிஸ்டர்.அரவிந்த்... உங்க ஃப்ரெண்டோட சேர்ந்து நீங்களும் வெளியே போவீங்கன்னு நினைக்கிறேன்...” என்றார் கறாராக.

“நீங்க இன்னும் என்னை ஏன் நிற்க வச்சீங்கன்னே சொல்லலை....” என சரண்ராஜ் அவரிடம் வாக்குவாதம் செய்வதற்கு முட்டிக்கொண்டு நிற்க, “நீங்க வெளியே போகலாம்... அரவிந்த், ஆதித்யா... நீங்களும்தான்... உங்க ஃப்ரெண்டை கூட்டிட்டு கிளம்புங்க.. நோ மோர் ஆர்கியூமென்ட்ஸ்...” என தீர்க்கமாக முடித்துவிட்டார்.

 காதல் செலவு - தொடரும்...

அடுத்த அத்தியாயம்

Reactions

Post a Comment

2 Comments

  1. வணக்கம்...


    சரண்யா முழு பெயர்... சரண்யா தேவி யா இருக்குமோ....🫣🫣

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாலா சிஸ்... கீப் சப்போர்ட்டிங்...

      Delete