மீதமிருந்தது காதல் – 5

 மீதமிருந்தது காதல் 5



இதுவரை...

தனக்கு திருமணமாகிவிட்டது என்பதை பேராசிரியரிடம் தெரிவித்தான் சரண்ராஜ்.

இனி...

“நிஜமாவே கல்யாணமாகிடுச்சா?” என உறுதிசெய்து கொள்வதற்காக மீண்டுமொருமுறை கேட்டார் லோகநாதன்.

“ஆமா சார்... என் பேரன்ட்ஸ்கூட விளையாட்டா இருக்காதே, பொறுப்போட இருக்க முயற்சி பண்ணுன்னு எப்பவும் உங்களை மாதிரியே சொல்லிட்டு இருப்பாங்க... நீங்க நலம்விரும்பியா அட்வைஸ் பண்ணுனீங்க, அவங்க பெத்தவங்க அப்படிங்கறதால ஆக்ஷன்ல இறங்கிட்டாங்க...” என்றான்.

தொடர்ந்தவன், “அப்பாவோட பேட்ச்மேட் கீர்த்தனாவுக்கும் எனக்கும் மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணி, மேடை வரைக்கும் வந்துடுச்சு... என்ன நினைச்சாளோ கடைசி நேரத்திலே கம்பி நீட்டிட்டா... அப்புறமா என்னோட ஸ்கூல் ஃப்ரெண்டை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...” என சுருக்கமாக முடித்தான்.

“அப்போ என் மருமகளையும் இங்கே அழைச்சிட்டு வந்துட்டியா? எங்கே தங்கியிருக்கிறீங்க? இந்த வீக்என்ட் எங்க வீட்டுக்கு விருந்துக்கு வாங்க...” என மகிழ்வுடன் அவனது தோளில் கைபோட்டவாறே நடக்க முற்பட, “இல்ல சார்... அவ ஒர்க்பிளேஸ்ல தனியா வீடு எடுத்து தங்கியிருக்கிறா...” என்றான்.

“ஒர்க் ஃபிரம் ஹோம் வாங்கிட்டு இங்கே உன்னோட வந்து தங்க சொல்ல வேண்டியதுதானே! கல்யாணமான புதுசுல ரெண்டுபேரும் ஒரே இடத்துல இருக்கவேண்டியது ரொம்ப அவசியம்... உடல்ரீதியான, மனரீதியான நெருக்கமும் அதைத்தாண்டி நேசமும் புரிதலும் ஏற்படுறதுக்கு இதுதான் அடித்தளம்... உன் பேரன்ட்ஸ் எதுவும் சொல்லலையா?” என லோகநாதன் அவன் முகம் நோக்க, அவனோ மறுப்பாக உதடுவளைத்தான்.

“அக்செப்ட் பண்ணிக்கிறதுக்கு டைம் வேணும், ஸ்பேஸ் கொடுங்கன்னு ரெண்டு பேர் வீட்டிலேயும் அடிச்சு விட்டிருக்கிறேன்... இல்லைன்னா ரெண்டு பேரையும் ஒண்ணா தங்கவச்சிருப்பாங்க...” என அவன் கண்ணடிக்க, “அவ உன் ஃப்ரென்ட்தானே? ரெண்டு பேருக்கும் பிடிக்காமலா கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? ஏன்ப்பா டிபிக்கலா இருக்கிற?” என ஆதங்கப்பட்டார்.

“சார்ர்ர்... இது வேற... ஃப்ரென்ட்ன்னா கிளாஸ்மேட்... ஃபர்ஸ்ட் ஸ்டான்டர்ட்ல இருந்து ட்வெல்த் வரைக்கும் ரெண்டு பேருக்கும் எந்நேரமும் சண்டைதான்... ஃபர்ஸ்ட் ரேன்க் யாரு வாங்குறதுன்னு போட்டா போட்டியா இருக்கும்... இதிலே பியூட்டி என்னன்னா ரெண்டு பேரும் அடுத்தடுத்த ரோல் நம்பர்... எக்ஸாம் ஹால்லகூட விடாத போட்டி! அந்த காம்படீஷன்லேயே மைன்ட் ஃப்ரீசாகிடுச்சு... அவளைப் பார்த்தாலே முகத்தை உர்ர்ன்னு வச்சிக்கிட்டு சண்டை போடறதுதான் ஞாபகம் வரும்.. அதுக்காக பிடிக்காதுன்னுலாம் கிடையாது.. ரொம்ப நல்ல பொண்ணு, எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுவா, அன்பா பேசுவா.. அப்பா இறந்ததும் குடும்பத்தோட நிலைமையைப் புரிஞ்சிட்டு, தேவையில்லாத வழியில கவனத்தை சிதறவிடாம படிப்புல கான்சன்ட்ரேட் பண்ணுனா... ஒரு நாள் அமைதியா இதை யோசிச்சுப் பார்த்து லைட்டா ஸாஃப்ட் கார்னர் வந்துச்சு... அதை டெவலப்பாகவிடாம ஆஸிடை ஊத்திட்டா...” என அவன் தெரிவிக்க, சிரித்துவிட்டார் லோகநாதன்.

“ஸ்கூல் படிக்கும் போதுதான் முதல் மார்க்குக்கு சண்டை வந்திருக்கும்... இப்போதான் அதுக்கு அவசியமில்லைல்ல... பொறுமையா உக்கார்ந்து, ஆஸிட் மேல கொஞ்சம் தண்ணியை ஊத்தி, டைலூட் பண்ணிட்டு, அந்த விதைமேல உரத்தைப் போட்டு வளர்த்துவிடு... செடியாகி, மரமாகட்டும்... சரியா?” என அவர் குறும்பாக அவனது மார்பில் குத்த, புன்னகையுடன், “சரி சார்...” என தெரிவித்துவிட்டு வகுப்புக்குத் திரும்பினான்.

“என்ன பெரியவரே! சிரிச்சிட்டே இருக்கிறீங்க? ப்ரேக்ல அண்ணி கால் பண்ணி கிஸ் கொடுத்துட்டாங்களா?” என ஆதித்யா கிச்சுகிச்சு மூட்டியவாறே வினவ, “டேய்... சும்மா இருடா...” என சிணுங்கினான் சரண்.

“ப்ரோ.. நெசமாவே கல்யாணம் முடிஞ்சதா? இல்ல நாங்க வருத்தப்படக் கூடாதுன்னு ஃப்ரெண்டை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொல்றியா?” எனத் தொடங்கிய அரவிந்த் அவனது முறைப்பில், “இல்ல.. இப்பவரைக்கும் அண்ணியோட ஃபோட்டோ எதுவும் காட்டலையே! அதான் கேட்டேன்...” என முடித்தான்.

“ப்ராப்பரா அரேஞ் பண்ணின மேரேஜ்ன்னா ஃபோட்டோஸ் எடுத்திருப்பேன்... இது திடுதிப்புன்னு நடந்த கல்யாணம்... ஸ்டுடியோல இருந்து எப்போ வருதோ அப்போதான் கிடைக்கும்...” என சரண் தெரிவிக்க, “உன் ஃப்ரெண்டோட ஒரு ஃபோட்டோகூடவா உன் மொபைல்ல இல்ல?” என காதோரம் கிசுகிசுத்தான் ஆதித்யா.

“டேய்... நம்பாம கேள்வியா கேக்காதேடா! எங்க ரெண்டு பேருக்குள்ள என்ன சூழ்நிலைன்னு உனக்கு சொன்னாப் புரியாது... ஃபோட்டோஸ் வந்ததும் காட்டறேன்.. இப்போ அமைதியா கிளாசை கவனி...” என கட்டளையிட்ட சரணுக்கு, லோகநாதனின் கூற்று உள்ளுக்குள் ஒருவித குறுகுறுப்பைத் தோற்றுவித்திருந்தது.

“ரெண்டு பேரும்... ஒண்ணா... ஒரே இடத்திலே... ஒரு மாதிரி ஜாலியா இருக்கும்ல.. என்னைத் தவிர எல்லார்கிட்டேயும் நல்லாத்தானே நடந்துக்குவா... அப்படின்னா பேசிக்கா அவ நல்ல பொண்ணுன்னுதானே அர்த்தம்...” என தனக்குள் சிந்திக்கத் தொடங்கியிருந்தான்.

இவன் சூட்டியிருந்த நற்பெயரும் அமிலத்தின்மீது நீருற்றி காதல் வளர்க்கும் வைபவமும் மாலை வரைதான்; ஆறு மணிக்கெல்லாம் இவனது இல்லத்தின் கதவை விடாமல் தட்டிக்கொண்டிருந்தாள் சரண்யா.

புன்னகையுடன் கதவைத் திறந்தவனது முகம் அவளைக் கண்டதும் எரிச்சலை பூசிக்கொண்டது. “ஏய்.. என்ன? இன்னைக்கு சீக்கிரமாவே ஏழரையைக் கூட்டுறதுக்கு வந்துட்டியா?” என அவன் வினவ, “ஒழுங்கா என் அம்மாகிட்டே மூணு வேளைக்கும் நான்தான் சமைச்சு பரிமாறுறேன், ரெண்டு தடவை டீ போட்டுத் தர்றேன்னு சொல்லு...” என விரலையுயர்த்தி கட்டளையிடுவதைப் போலப் பேசினாள்.

அதில் அவனுக்கு மேலும் எரிச்சல் மூண்டது. “இல்ல... எனக்குப் புரியல... செய்யாத ஒண்ணை நான் ஏன் பொய்யா சொல்லணும்?” என இவனும் சற்றே எகத்தாளமாகக் கேட்டான்.

“தாலி கட்டினேல்ல... அப்போ எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணு...” என அவள் பேச, “பிடிக்கலைன்னா கழட்டிக் கொடுத்துட்டுப் போடி...” என ஏதோவொரு வேகத்தில் உரைத்துவிட்டான்.

அதைக் கூறிய பின்னரே தானுரைத்த வார்த்தையின் வீரியத்தை உணர்ந்தவன், “ஹையையோ... ஈகோ பிடிச்சவ கழட்டிக் கொடுத்துடுவாளோ? எல்லாருக்கும் என்ன பதில் சொல்றது? நான்தான் கழட்ட சொன்னேன்னு வேற சொல்லுவாளே!” என உள்ளுக்குப் பதறினான்.

இருப்பினும் பதற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “சரி... சரி...  நாய் வேஷம் போட்டா குரைச்சுத்தானே ஆகணும்... நீ கிளம்பு... உங்கம்மாகிட்டே சொல்லிடறேன்...” என போலியான சலிப்புடன் உரைத்தான்.

“ஹையடா... ஏதோ எனக்குப் பாவம் பார்க்கிற மாதிரி பேசுறீங்க... நானே உங்கம்மாவுக்கு கால் பண்ணி, டீயும் பஜ்ஜியும் எடுத்துப் போனேன் அத்தை... உங்க மகன் கடையில சாப்பிட்டுக்கறேன், வெளியே போடின்னு சொல்லிட்டார்ன்னு சொல்லிடறேன்...” என அவளும் பதிலுக்கு அவனது தொனியிலேயே பேசினாள்.

“ஹே... படுத்தாதேடி! இப்ப உனக்கு என்னதான் பிரச்சனை?” என அவன் தலையில் கைவைத்துவிட, “தள்ளு...” என உள்ளே வந்தவள், தான் கொண்டுவந்திருந்த ஃப்ளாஸ்க் மற்றும் கண்ணாடி கிண்ணத்தை வெளியில் எடுத்தாள்.

“எங்கம்மா கால் பண்ணி, சரண் தம்பி வீட்டுல போய் டீ குடின்னு சொன்னாங்க...” என்றவாறே அங்கிருந்த நாற்காலியில் கால்மேல் கால் போட்டு அமர்ந்தவள், தேநீரைப் பருகியவாறே, பஜ்ஜியை ருசிக்கத் தொடங்கினாள்.

மார்பின் குறுக்கே கைவைத்தவன் அவளை முறைத்தவாறே நின்றிருக்க, மிச்சமின்றி பருகியவள், “என் அம்மா சொன்ன மாதிரியே உன் வீட்டுக்கு வந்து டீ குடிச்சாச்சு...” என எழுந்து சென்று அவனது சிங்கிலேயே பாத்திரங்களை கழுவி, எடுத்துச் சென்றுவிட்டாள்.

“இவளைப் போய் நல்லவிதமா நினைக்க ட்ரை பண்ணுவோம்ன்னு முடிவு பண்ணினது என்னோட தப்புதான்...” என தன்னைத்தான் நொந்து கொண்டவன், கட்டிலில் சென்று அமர்ந்தான்.

“கண்ணு முன்னாடி டீயையும் பஜ்ஜியையும் காட்டி, டெம்ப்ட் பண்ணிட்டுப் போனவளை சும்மா விடக்கூடாது... ஏதாவது பண்ணனுமே!” என சில நிமிடங்கள் சிந்தித்தவன் அலைபேசியை எடுத்து அவளது அன்னைக்கு அழைத்தான்.

பெருமகிழ்வுடன் அழைப்பை ஏற்றவர், “சரண் தம்பி! காலேஜ் போயிட்டு வந்துட்டீங்களா? சரண்யா டீ எடுத்துட்டு வந்தாளா? பஜ்ஜி எப்படி இருந்துச்சுப்பா?” என ஆர்வமுடன் விசாரிக்க, ‘முள்ளை முள்ளாலதான் எடுக்கணும்’ என தனக்குள் உறுதிபூண்டவன், “பஜ்ஜியா? புரியலையே அத்தை! நான் இப்போதான் வீட்டுக்கே வந்தேன்... ரெஸ்ட் எடுக்கிறதுக்கு முன்னாடியே உங்ககிட்டே பேசணும்ன்னுதான் கால் பண்ணினேன்...” என சரளமாகப் பொய்யுரைத்தான்.

“பார்த்தீங்களா அவளை... டீ எடுத்துட்டுப் போய் சேர்ந்து உக்கார்ந்து குடிச்சோம்ன்னு சொல்லிட்டா... ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க... அவகிட்டே என்னன்னு கேக்கறேன்...” என அவர் அழைப்பைத் துண்டித்துவிட, “யாஹூ...” என துள்ளிக்குதித்தவன், “இப்போ என்ன பண்ணுவ, இப்போ என்ன பண்ணுவ? என்னையவா வெறுப்பேத்துற! அனுபவி அனுபவி...” என தனக்குத்தான் சொல்லிக் கொண்டான்.

சற்று நேரத்திலேயே கதவு தட்டப்பட, அவள்தான் வந்திருக்கிறாள் என்பதை நன்கறிந்தவன், வேண்டுமென்றே திறக்காமல் உள்ளே நின்று குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தான். வெளியே நின்றிருந்தவள் அழைப்பிலிருந்த தனது தாயிடம், “ம்மா... தூங்கிட்டார்ன்னு நினைக்கிறேன்...” என உரைக்க, “அப்பவே நான் சொல்லும் போது வந்திருக்கணும்... சும்மா போகாமலேயே பொய் சொன்னா இப்படித்தான்... சரி, சரி.. நான் ஃபோனை கட் பண்றேன்... நீ அவருக்கு கால்பண்ணி கதவைத் திறக்க சொல்லு...” என வைத்துவிட்டார்.

“முருகா... என்னை ஏன் இப்படி சோதிக்கிற? இவன் நம்பர் வேற என்கிட்டே இல்லையே! இதுக்கும் அம்மாகிட்டே போட்டுத் தருவான்...” என தனக்குத்தான் நொந்துகொண்டவள், “டேய்... சரண்... கதவைத் திறடா...” என சற்று ஓங்கி, கதவைத் தட்டினாள்.

“சரண்... திமிரு பிடிச்சவனே!” என அவள் கூவிக்கொண்டிருக்க, உள்ளேயிருந்தவன் அவளது அன்னைக்கு அழைத்து, “அத்தை... சரண்யா வர்றேன்னு சொன்னாளா? வரலைன்னா பக்கத்து கடையில போய் டீ சாப்பிடணும்... தலைவலிக்குது, வயிறு பயங்கரமா பசிக்குது...” என அடுத்தகட்டமாக புகாரளிக்க, “உங்க வீட்டு வாசல்ல நிக்கறேன்னுதான் தம்பி சொன்னா... ஒருவேளை பொய் சொல்லிட்டாளோ? எதுக்கும் ஒரு தடவை திறந்து பாருங்களேன்...” என வேண்டிக்கொண்டார்.

இம்முறையும் அவளை தண்டிக்க மனமில்லாதவன், பெருந்தன்மையுடன் கதவைத் திறக்க, அனல் தெறிக்கும் பார்வையுடன் நின்றிருந்தாள் சாரு.

விறுவிறுவென உள்ளே வந்தவள், “உனக்கு என்னதான்டா பிரச்சனை?” என வினவ, “ஹே.. முதல்ல டா-ன்னு சொல்றதை நிறுத்து...” என்றான் கடுப்புடன். “நீ மட்டும் டி-ன்னு சொல்லலாம்... நான் டா-ன்னு சொல்லக்கூடாதா?” என அவளும் பதில்வாதம் செய்ய, “டீ....” என கையை நீட்டினான்.

எழுந்து சமையலறைக்குச் சென்றவள், தான் கொண்டுவந்திருந்தவற்றை பயன்படுத்தி தேநீர் தயாரித்து எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள். “இதிலே பஜ்ஜி இருக்குது... சாப்பிடு..” என அவன் முன்னால் எடுத்து வைக்க, “ஊட்டி விடேன்...” என கண்ணடித்தான்.

“என் குடுமி உன் கையிலே இருக்கிறதுனால ஆட்டம் போடறியா? உன்னை எங்கே கவனிக்கணுமோ அங்கே கவனிச்சுக்கறேன்...” என மனதிற்குள் கருவியவாறே பிய்த்து, நீட்டினாள்.

“நான் அந்தளவுக்கு ச்சீப்பான ஆளில்லை...” என்றவன் தானே பிய்த்து உண்ணத் தொடங்க, “கடைக்குப் போய் தோசை மாவு வாங்கிட்டு வா...” என்றவாறே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள் சரண்யா.

“அட! இங்கே சமைக்கப் போறியா? நீதான்ம்மா ISI முத்திரை குத்தாத அக்மார்க் பெண்டாட்டி...” என சற்றே நக்கலாகப் பார்த்தவன், “சட்னி அரைக்கிறதுக்கு என்கிட்டே மிக்ஸி இல்ல...” என்றான்.

“நீ மாவு வாங்கிட்டு வர்றதுக்குள்ள என் வீட்டுல போய் சட்னி அரைச்சிட்டு வந்துடுவேன்...” என வேறுபுறம் திரும்பியவாறே அவள் உரைக்க, “அப்படியே தோசை மாவையும் வாங்கிட்டு வந்துடலாம்ல...” எனப் புருவமுயர்த்தி வினவினான்.

நிமிர்ந்து அவனை முறைத்தவள், “இரிட்டேட் பண்றியா சரண்? ஆம்பளையா இலட்சணமா வெளியே இருக்கிற வேலைகளை செய்...” என எரிச்சலுடன் தெரிவிக்க, “எனக்காக சமைச்சு சங்கடப்பட வேணாம்.. கடையில தோசை வாங்கிட்டு வந்து தர்றேன்... நீ உன் வீட்டுல போய் சாப்பிடு.. நான் இங்கே சாப்பிட்டுக்கறேன்...” என்றான்.

“ஏன்? இதை எனக்கு போய் வாங்கிக்கத் தெரியாதா? இல்ல ஆர்டர் பண்ண முடியாதா?” எனக் கேட்டவள், “நான் இங்கே உன்னோட உக்கார்ந்து சாப்பிட்டுட்டுதான் போவேன்...” என்றாள் பிடிவாதமாக.

“என்மேல அவ்ளோ பாசமா சாரு?” என அவன் ஆச்சரியமாகக் கேட்க, “அப்படியொரு நினைப்பு இருந்தா இப்பவே அதை அழிச்சிடு... நான் போனதுக்கு அப்புறமா என் அம்மாவுக்கு கால் பண்ணி, எதுவும் தெரியாத மாதிரி பேசி என்னை மாட்டிவிடுவ... எனக்கேன் வம்பு? அதுக்கு இங்கேயே சாப்பிட்டுட்டு ரெண்டு மூணு ஃபோட்டோஸ் எடுத்துட்டுப் போய்டறேன்...” என்றவள், “இப்ப டின்னருக்கு என்ன? தோசை வார்க்கணுமா? இல்ல கடையில போய் வாங்கிட்டு வர்றியா?” என அவனைப் பார்த்தாள்.

“சூட்சுமத்தைக் கண்டுட்டாளே!” என மனதிற்குள் நினைத்தவன், “வெயிட் பண்ணு... வாங்கிட்டு வர்றேன்...” என வெளியே சென்றான். அவன் சென்ற இடைவேளையில் அவன் தங்கியிருந்த அறை முழுவதையும் சுற்றிப் பார்க்க முற்பட்டாள் சரண்யா.

“ஒரு சதவீதம்கூட பொறுப்பேயில்ல... எல்லாத்தையும் அப்படி அப்படியே போட்டு வச்சிருக்கிறான்...” என தன்னால் இயன்றமட்டும் சுத்தம் செய்ய முன்வந்தாள். “ஒருவேளை இதெல்லாம் தெரிஞ்சுதான் கீர்த்தனா ஓடிப்போயிருப்பாளோ?” என சிந்தித்தவாறே படுக்கையை சரிசெய்தவள், சமையலறை மேடையை சுத்தம் செய்தாள்.

“பூனை தூங்குற அடுப்பு மாதிரி இருக்குது... காலேஜ் ஹாஸ்டல்ல இருக்க வேண்டியதுதானே?! பெரிய இவரு மாதிரி தனிரூம் எடுத்து ஸீன் போட்டுட்டு இருக்கிறான்...” எனத் திட்டியவாறே துடைத்துக் கொண்டிருக்க, கதவைத் தட்டினான் சரண்.

விறுவிறுவென கையிலிருந்த சுத்தம் செய்யும் துணியை வீசியவள், வியர்வையைத் துடைத்து தன்னை சமன்செய்துவிட்டு கதவைத் திறந்தாள்.

உணவருந்துவதற்காக தட்டுகளை எடுப்பதற்கு சமையலறைக்குச் சென்றவன் கண்களால் ஒருமுறை சுற்றும் அளந்தான்; அவளறியாவண்ணம் தனக்குள் புன்னகைத்துக் கொண்டவன், தட்டுகளை எடுத்து வந்தான்.

அவளுக்கான உணவை தட்டில் வைத்தவன், “சேர்ல உக்கார்ந்து சாப்பிடு...” என நீட்ட, “நீ சாப்பிடலையா?” என இயல்பாக வினவினாள் அவள்.

“நான் கலியுகத்தின் பத்தினக் கணவன்ம்மா... பெண்டாட்டி சாப்பிட்ட தட்டிலேதான் சாப்பிடுவேன்...” என அவன் பேச, “எதே... பத்தினக் கணவனா? என்ன லாங்குவேஜ்டா இது?” என்கிற ரீதியில் பார்த்தாள் சரண்யா.

“நீ என்ன ப்ளான் பண்றன்னு எனக்குத் தெரியும்டி.. ஃபோட்டோ எடுக்க விடமாட்டேன்...” என இவன் மனதிற்குள் நினைக்க, தரையில் அமர்ந்தவள், “உக்காரு... உனக்கும் சாப்பாடு எடுத்து வைக்கறேன்...” எனக் கூறிவிட்டு உண்ணத் தொடங்கினாள்.

அவனும் ஏதும் பேசாமல் அருகில் அமர்ந்து உண்ணத் தொடங்க, “அடிக்கடி ஃப்ரைடு ரைஸ் சாப்பிடாதே சரண்! உப்புமாவோ ஓட்ஸோ வீட்டிலேயே சமைச்சு சாப்பிடு...” என அவளாகவே பேசினாள்.

“உண்மையாவே அக்கறையில பேசுறாளா இல்ல வாய்ஸ் ரெகார்ட் ஆன் பண்ணி வச்சிருக்கிறாளா?” என சந்தேகத்துடன் அவளைப் பார்த்தவன், அமைதியாக உண்டுமுடிக்க, அவ்விடத்தை சுத்தம்செய்த பின்னர் பாத்திரங்களையும் கழுவிவைத்துவிட்டு புறப்படலானாள்.

ஏனோ லோகநாதனின் கூற்றும் அவளுடனான உரையாடல்களும் அவளிடம் இயல்பாகப் பழகவேண்டுமென்கிற எண்ணத்தை அவனுக்குள் விதைத்துவிட்டிருந்தது. இருப்பினும் வெளிக்காட்டிக்கொள்ள மனமில்லாதவன், “இனி வர்றதா இருந்தா சொல்லிட்டு வா... சொல்லாம கொள்ளாம வந்து கதவை உடைச்சிட்டு இருக்காதே!” என உரைக்க, தனது கைப்பையிலிருந்து ஐநூறு ரூபாய் நோட்டைக் கையிலெடுத்தவள், அவனிடம் நீட்ட முற்பட, “ச்சே! என்ன பொண்ணு நீ? எல்லாத்தையும் பணரீதியாத்தான் பார்ப்பியா? எல்லாத்துக்கும் விலை இருக்குதுல்ல...” என கத்தத் தொடங்கிவிட்டான்.

பதிலுக்கு ஏதும் பேசாமல் அவனை முறைத்தவள், விறுவிறுவென அங்கிருந்து சென்றுவிட, எரிச்சலுடன் படுக்கையறைக்குள் நுழைந்தான் சரண். சுத்தம் செய்யப்பட்டு, விரிப்புகள் ஒழுங்காக விரிக்கப்பட்டிருந்த அறையில் வெகுநாட்களாக உபயோகப்படுத்தாமல் வைத்திருந்த ரூம்ஸ்ப்ரேயின் நறுமணம் வீசியது. அதில் சற்றே சாந்தப்பட்டவன், அமைதியாக உறங்க முற்பட்டான்.

மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் சரண்யாவின் அலைபேசி ஒலித்தது. “இந்நேரத்திலே யார் கால் பண்றா?” என எடுத்துப் பார்க்க, அவளது அன்னைதான் அழைத்திருந்தார்.

அழைப்பை ஏற்று, என்னவென விசாரிக்க, தான் அவளது வீட்டின் வாசலில் நின்றிருப்பதாகத் தெரிவிக்க, திக்கென்றது அவளுக்கு.

காதல் செலவு தொடரும்...

அடுத்த அத்தியாயம்

 

Reactions

Post a Comment

2 Comments