மீதமிருந்தது காதல் – 4

முந்தைய அத்தியாயம்  

மீதமிருந்தது காதல் – 4



இதுவரை...

சரண்ராஜ் – சரண்யாவின் திருமணம்... சரணின் அறைக்கு வருகை தந்தாள் சாரு.

இனி...

அலட்சியமாக சாருவை நோக்கிய சரண், “என்ன?” என்கிற ரீதியில் புருவமுயர்த்தி வினவ, அவளும் முறைத்தவாறே நின்றிருந்தாள்.

அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த மகன் திடீரென மௌனமாக இருப்பதை உணர்ந்த ராஜாங்கம், “யாருடா வந்திருக்கிறாங்க?” என விசாரிக்க, இவனும் தன்போக்கில், “சரண்யா...” என்றுவிட்டிருந்தான்.

உரைத்த பின்னரே நாக்கைக் கடித்துக் கொண்டவன், “என்ன கேட்டீங்கப்பா?” என மீண்டும் கேட்க, “ஓ... உன் பொண்டாட்டி வந்திருக்கிறாளா? நடத்து நடத்து... நான் அப்புறமா பேசுறேன்...” என கேலிசெய்தவாறே அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

இருவரும் ஏதும் பேசாமல் வேறுபுறம் முகத்தைத் திருப்பியவாறே சிலநிமிடங்கள் நின்றிருந்தனர். முதலில் சரண்தான் அவளிடம் திரும்பி, “போஸ் கொடுக்கிறதுக்காகத்தான் கதவை தட்டினியா? சரி... நீ போஸ் கொடு... நான் தூங்கறேன்.. குட் நைட்...” என தெரிவித்துவிட்டு, உள்ளே செல்ல முற்பட, “ஓவரா ஸீன் போடாதே!” என்றாள் சிடுசிடுவென முகத்தை வைத்துக்கொண்டு.

“ஸீன் போடறது நீயா நானா?” என்னும் அவனது கேள்விக்கு பதிலளியாதவள், “எங்கம்மாகிட்டே என்ன சொன்ன?” என அடுத்தக் கேள்விக்குத் தாவ, “அதை அவங்ககிட்டேயே கேட்க வேண்டியதுதானே?!” என்றான் சற்றே திமிராக.

“நீ சொன்னதை உன்கிட்டேதானே கேட்பாங்க...”

“நான் என் அத்தைகிட்டே என்னவோ சொல்லிட்டுப் போறேன்... இப்போ உனக்கு என்ன?”

“நீ என்னவோ சொல்லிட்டுப் போ... ஆனா என்னைப் பத்தி என்ன சொன்ன?”

“உன்னைப் பத்தி பேசணும்ங்கற அவசியம் எனக்கில்ல...”

“அப்புறம் ஏன் உனக்கு என்னை சமைச்சு எடுத்துட்டுப் போகச் சொன்னாங்க? ஒருவேளை சமைக்கலைன்னா ரெண்டு பேரும் வெளியே போய் சாப்பிடுங்கன்னு சொல்றாங்க... நீ எதுவும் சொல்லாமலா என்னை கம்பெல் பண்றாங்க?”

“உன்னோட கற்பனைக்கு நான் பொறுப்பில்ல...” என்றவன், “குட் நைட்...” என கதவை மூடுவதற்கு முற்பட, கதவிடுக்கில் காலை வைத்து தடுத்தாள் சாரு.

“என்ன? ராத்திரி நேரத்திலே கலாட்டா பண்றியா?” என அவன் சற்றே எரிச்சலுடன் வினவ, “சப்பாத்தியும் குருமாவும் இருக்குது... சாப்பிட்டுட்டு பாத்திரத்தை கழுவி வச்சிடு... நாளைக்கு வந்து வாங்கிக்கறேன்...” என நீட்டினாள்.

“ஆஹான்... எனக்கு சமைச்சு கொடுக்க சொன்னதுதான் இப்போ பஞ்சாயத்தா?” என அவளை எள்ளலுடன் நோக்கினான். “நான் ஹோட்டல்ல போய் சாப்பிட்டுக்கறேன்.. தேவைப்பட்டா ஆப்ல ஆர்டர் பண்ணிக்கூட சாப்பிட்டுக்கறேன்... இவ்ளோ எரிச்சலோட ஒண்ணும் எடுத்துட்டு வந்து தரவேணாம்.. அதுவுமில்லாம அன்பினால செய்யறது வேற... நிர்பந்தத்தினால பண்றது வேற...” என அவன் முடிப்பதற்குள், “அன்பா??” என சற்றே நக்கலாக குறுக்கிட்டாள் சரண்யா.

“பொதுவா சொன்னேனுங்க... உங்ககிட்டே அன்பெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? நீங்களாவே கொடுத்தாலும் எனக்கு அது வேணாம்...” என இவன் முறுக்கிக் கொள்ள, “நீங்க கெஞ்சிக் கேட்டாலும் நான் கொடுக்க மாட்டேன்...” என அவளும் விடாமல் பேசினாள்.

“அப்போ என்னத்துக்கு கல்யாணம் பண்ணிக்கிட்ட?” என்னும் கேள்வி வாய்வரை வந்துவிட்டாலும் கேளாமல் முறைத்து வைத்தவன், “ஹே... வாசல்ல நின்னு கத்திட்டு இருக்காதே! இந்த ஏரியாவுல மரியாதையா வாழ்ந்துட்டு இருக்கிறேன்... என் மானத்தை வாங்காதே! என்ன வேலைக்கு வந்தியோ அதை முடிச்சிட்டுப் போ!” என தெரிவித்துவிட்டு உள்ளேவர, அவனைப் பின்தொடர்ந்து உள்ளே வந்தாள் சாரு @ சரண்யா.

நேராக சமையலறைக்குள் நுழைந்தவள், “இதுதான் கிச்சனா?” என்கிற ரீதியில் அவனைப் பார்க்க, அவனோ பொருட்படுத்தாமல் ஆயாசமாக கட்டிலில் விழுந்துவிட்டான்.

“இவனெல்லாம் என்ன ஆளு? ரெண்டு தட்டு, ரெண்டு டம்ளர், ஒரு கெட்டில், ஒரு பானை, ஒரு பேன், ஒரு இன்டக்ஷன் ஸ்டவ், ரெண்டு பவுல்... இதை வைக்கிறதுக்கு தனி கிச்சனா? பொறுப்புங்கறது ஒரு சதவீதம்கூட கிடையாது போல... தன்போக்கிலே நினைச்சதை பண்ணிட்டு வாழ வேண்டியது...” என தனக்குள் திட்டியவாறே தான் கொண்டு வந்தவற்றை எடுத்துவைத்துவிட்டு படுக்கையறைக்குள் வந்தாள்.

அவளைக் கண்டதும் அவன் எழுந்து அமர, “கொண்டு வந்ததை எடுத்து வச்சிட்டேன்... சாப்பிடுடு...” என்பதைக்கூட தெரிவியாமல் முறைத்துவிட்டு கதவைத் தடாரென அடைத்துவிட்டு வெளியேறினாள்.

“ராங்கி...” என திட்டியவாறே எழுந்து சென்று உணவை எடுத்துவந்தவன், “பரவாயில்ல.. ஓரளவுக்கு சமையல் தெரிஞ்சிருக்குது... ஆனாலும் அவகிட்டே சொல்லக்கூடாது... அப்புறம் இதுக்கும் திமிரா நடந்துக்குவா...” என நினைத்தவாறே உணவருந்தி முடித்தான்.

மூக்கு வியத்தாற்போல அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே அழைத்துவிட்டார் சகுந்தலா. “சரண் தம்பி.. சாரு வந்தாளா? சாப்பிட்டீங்களா?” என அவர் விசாரிக்க, “வந்தா அத்தை! உக்காரவச்சு பரிமாறிட்டு, இப்போதான் கிளம்பினா... உங்க பொண்ணுக்கு உங்களை மாதிரியே கைப்பக்குவம்... ரொம்ப நல்லா இருந்துச்சு...” என தன்னால் இயன்றமட்டும் பொய்களை தூவிவைத்தான். இல்லையேல் இருவருக்கும் இடையில் சமாதானப் பாலம் கட்டுவதாக நினைத்து இருவரது பெற்றோரும் ஏதேனும் கட்டுமானப் பொருட்களை சுமந்து வந்துவிடுவர் என அஞ்சினான்.

அவன் தெரிவித்த விஷயங்களை அப்படியே தன் மகளிடம் தெரிவித்த சகுந்தலா, “மாப்பிள்ளை உன்னைப் பத்தி எவ்ளோ பெருமையா சொல்றார் தெரியுமா? உன் சமையல் அவருக்கு ரொம்ப பிடிச்சிருக்குதுடி... தினமும் அவருக்கு சமைச்சுக் கொடுத்துடு... நீ கூடவே உக்கார்ந்து பரிமாறினதை ரொம்பவே மனநிறைவோட சொன்னார்... அம்மாவுக்கு சந்தோஷமா இருக்குது...” எனப் பேச, “யாரு? அவனா?? அப்படியே என்னை பெருமையா சொல்லிட்டாஆஆலும்ம்ம்... அவன் என்னைக்கு யாரை உயர்வா நினைச்சு அப்ரிசியேட் பண்ணியிருக்கிறான்? எல்லாத்திலேயும் தான்தான் உயர்ந்தவன்னு தலைக்கனம் அவனுக்கு... என்னோட மனசு கோணக்கூடாதுன்னு நீங்க சொல்றீங்கன்னு எனக்குத் தெரியும்மா...” என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் சாரு.

மறுநாள் கணித வகுப்பில்...

பேராசிரியர் கற்பித்த பாடங்களை நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொண்டிருந்தான் சரண். அப்போது ஒரு சுற்றறிக்கையை எடுத்துவந்த அலுவலக உதவியாளர், “மேம்... இதை கிளாஸ்ல எல்லார் முன்னாடியும் வாசிக்க சொல்லி, பிரின்சிபல் சார் சொன்னாங்க...” என்றார்.

“கொடுங்க...” எனப் பெற்று வாசிக்கத் தொடங்கினார். ‘அவர்களது கல்லூரி ஒருங்கிணைத்து நடத்தவிருக்கும் கல்லூரிகளுக்கு இடையேயான கல்ச்சுரல்ஸ் நிகழ்விற்கு மாணவர் ஒருங்கிணைப்பாளராக சரண்ராஜை நியமிக்கவிருப்பதாகவும் போட்டிகளினிடையே நிகழும் தனித்திறமை நிகழ்வுகளில் பங்குபெற விரும்புவோர் அவனிடம் தங்களது பெயர்களை பதிவுசெய்து கொள்ளலாம்’ என்பதை வாசித்த மாத்திரத்தில் அவரது முகம் இருண்டுபோனது.

“மேம்... இதிலே நீங்க கையெழுத்து போட்டுடுங்க... சரணை இந்த இடத்திலே சைன் பண்ண சொல்லுங்க...” என உதவியாளர் உரைக்க, நிமிர்ந்தவர் முகத்தில் எவ்வித சலனத்தையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், “மிஸ்டர்.சரண்ராஜ்... கம் அண்ட் சைன் ஹியர்...” என்றார்.

“யூ ஒன்லி அண்டர்எஸ்டிமேடட் மீ...” என்கிற தொனியில் அவரை ஏறிட்டுப் பார்த்தவன், கையொப்பமிட்டுவிட்டு நிமிர, அவரிடமோ அலட்சியப் பார்வை!

“சரண்... ப்ரேக்ல ஈவென்ட் கன்வீனரை மீட் பண்ணனுமாம்ப்பா...” என தெரிவித்துவிட்டு, வந்தவர் செல்ல, சற்று கெத்தாகவே தனது இடத்திற்கு திரும்பினான் சரண். அன்றைய தினத்திற்கான பாடங்களை கற்பித்துவிட்டு இறங்கிய கணிதப் பேராசிரியை தேவி, “கல்ச்சுலர்ஸ், காம்படீஷன்ஸ்லாம் வரும் போகும்... அது ஒருபக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் பாடத்திலேயும் கான்சன்ட்ரேட் பண்ணனும்... புரிஞ்சதா?” என பொத்தாம்பொதுவாக கூறிவிட்டு சென்றுவிட்டார்.

அவர் சென்ற பிற்பாடு, “தேவி... ஸ்ரீதேவி... அவர் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிட்டாரம்மா!” என பாடியவாறே அருகில் வந்தான் ஆதித்யா. “உண்மைய சொல்லணும்ன்னா தேவி மேம்க்கு பெரியவர் சரண்மேல நிறையவே அக்கறை இருக்குது.. அதனாலதான் இவர் பேசுற கேப்ல பாடத்தை கவனிக்காம விட்டுடுவாரோன்னு பதட்டத்திலே கோபப்படறாங்க... இப்போகூட பாரு... கல்ச்சுரல்ஸ்ல கவனத்தை சிதறவிட்டுடாதேன்னு சொல்லிட்டுப் போறாங்க...” என ஆதித்யாவும் அரவிந்தும் ஹைஃபை செய்துகொள்ள, “உதைக்கப் போறேன்...” என இருவரது முதுகிலும் அடித்தான் சரண்.

“நிஜமாத்தான் ப்ரோ..” என முன்பெஞ்சில் அமர்ந்திருந்தவனும் அதை வழிமொழிய, ஒற்றைப் புருவமுயர்த்தி முறைத்தான் அவன்.

“நிஜமாத்தான்ண்ணா...” என உடன்பயிலும் ரக்ஷிதாவும் துணைக்குவர, “ஆகமொத்தத்திலே இது எல்லாரோட மாஸ்டர் ப்ளான்... இல்லையா?” எனக் கேட்டான்.

“மாஸ்டர் ப்ளான்? என்ன சொல்றீங்க பெரியவரே!” என அவர்களுள் ஒருவன் பேச, “நாலு வருஷம் கேப்ன்னதும் இதை சாக்கா வச்சு பெரியவராக்கிடறது...” என அவனது முதுகில் வலிக்காதவண்ணம் அடித்தவாறே பேசத் தொடங்கினான் சரண்.

“உங்க எல்லாருக்கும் அந்த மேம் ஃபேவரைட்... அவங்களோட கிளாஸ் என்னாலதான் தடைபடுது... அவங்க என்னை வெளியே போக சொல்றதுனால எங்களுக்குள்ள வர்ற க்ளாஷை நான் டேரக்டர்கிட்டே சொல்லிடக்கூடாது... நான் அவங்களை நல்லவிதமா நினைச்சிட்டா எந்த பிரச்சனையும் வராது... அவங்க என்னோட வெல்விஷ்ஷர், நல்லதுக்காகத்தான் பண்ணுவாங்கன்னு என்னை நம்ப வைக்கிறதுக்காக எல்லாரும் ஸ்க்ரிப்ட் எழுதி பேசிட்டு இருக்கிறீங்க... கரெக்டா?” என அவன் அச்சுப்பிறழாமல் கேட்டுவிட, அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“நீங்க படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா... நீங்க என்னை வயசால பெரியவன்னு சொன்னாலும் உங்களைவிட சில பல வருஷங்கள் எனக்கு அனுபவம் ஜாஸ்திடா... அதனால நான் கண்டுபிடிக்காத மாதிரி நல்ல ஸ்க்ரிப்டா எழுதி, எடுத்துட்டு வாங்க...” எனக் கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

கல்ச்சுலர்ஸ் கன்வீனரை சந்தித்துவிட்டு திரும்புகையில் எதிர்பட்டார் கணிதத்துறையின் மூத்தப்பேராசிரியரான லோகநாதன். அவரைப் பார்த்ததும் புன்முறுவல் பூக்க, “இன்டர்காலேஜியேட் கல்ச்சுலர்ஸ்க்கு ஸ்டூடன்ட் கோஆர்டினேட்டரா உன்னைத்தான் எல்லாரும் சஜெஸ்ட் பண்ணினாங்க, சரண்... PG ஸ்டூடன்ட்ன்னு ப்ரின்சிபல் யோசிச்சாரு... அப்புறமா எல்லாரும் கன்வின்ஸ் பண்ணிட்டாங்க... வழக்கம்போல தூள் கிளப்பிடுங்கப்பா... அப்பவே சொல்லணும்ன்னு நினைச்சேன்... கொஞ்சம் வாழ்க்கையை சீரியஸா அப்ரோச் பண்ண முயற்சி பண்ணு, சரண்... என்னதான் அப்பா அம்மாவோட அரவணைப்பிலே ராஜாவீட்டுக் கன்னுக்குட்டியா வளர்ந்தாலும் நமக்கும் தொழில், சம்பாத்தியம், சேமிப்புன்னு வேணும்ப்பா... விளையாட்டுத்தனமாவே வாழ்க்கையை நகர்த்திட முடியாது... நாளைக்கே கல்யாணம்ன்னு வர்றப்போ எல்லாத்தையும் யோசிப்பாங்க... அதனால போரடிக்குதுன்னு சொல்லாம இந்த டிகிரியை முடிச்சு உனக்குப் பிடிச்ச வேலையை நிரந்தரமா செய்ய முயற்சி பண்ணு... உன்னோட நலம்விரும்பியா இதை சொல்றேன்ப்பா...” என மெய்யான அக்கறையுடன் பேசினார்.

“இங்கே வந்த பின்னாடி கொஞ்சம் சீரியஸ்நெஸ் வந்திருக்குது, சார்... சில விஷயங்களை யோசிக்கத் தொடங்கியிருக்கிறேன்...”

“ரொம்ப நல்லதுப்பா... அப்புறம்... அன்னைக்கே கேக்க நினைச்சேன்... தேவி மேமோட அடிக்கடி கிளாஷ்ஷாகுதா?”

“சில சமயங்கள்ல திட்டுவாங்க, அப்புறமா கண்டுக்காம விட்டுடுவாங்க... நான் பெருசா எடுத்துக்கிறதில்ல... ஃபேகல்டியை மதிக்கணும்ல, சார்...”

“டீச்சிங்கு அவங்க புதுசுப்பா... ரொம்ப டேலன்டட் பர்சன்... மூணு வருஷத்திலே முடிக்க வேண்டிய PhDயை நல்ல Journalல்ல பேப்பர் பப்ளிஷ் பண்ணி, ரெண்டு வருஷத்திலேயே முடிச்சிட்டு நம்ம காலேஜ்ல ஜாயின் பண்ணியிருக்கிறாங்க... இன்னும் Doctorate அவார்ட் ஆகலைங்கறதுக்காக அவங்களை குறைச்சு மதிப்பிட்டுடாதேப்பா... அவங்களோட ஸ்கூல் அண்ட் காலேஜ் ரெகார்ட்ஸ் எடுத்துப் பார்த்தா அவ்ளோ ஆச்சரியப்படுவ! ஒருவேளை புதுசுங்கறதால எல்லாரையும் எப்படி ஹான்டில் பண்றதுன்னு பசங்க சைக்காலஜியை அடாப்ட் பண்ணிக்கிறதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும்... மத்தபடி அவங்க டீச்சிங் ஃபர்ஸ்ட் கிளாஸ்! இன்டர்வியூ பேனல்ல இருந்தவங்க அவ்ளோ அப்ரிசியேட் பண்ணினாங்க... இவங்க ஜாயின் பண்ணினப்போ இன்னொரு சீனியர் ஃபேகல்டி மெடிக்கல் லீவுல போனதால இவங்க PG ஹான்டில் பண்ண வேண்டியதாயிடுச்சு... இளரத்தம் அப்படிங்கறதால ரெண்டு பேருக்கும் அடிக்கடி முட்டிக்கும்ன்னு நினைக்கிறேன்... இதெல்லாம் பெருசா எடுத்துக்கிட்டு டேரக்டர்கிட்டே புகார் கொடுத்துடாதே!”

“புரியுது சார்...” என முடித்துவிட்டவன், அவர் ஏன் தேவிக்காக இத்தனை தூரம் பரிந்து பேசுகிறார் எனப் புரியாமல் புருவத்தை நெரிக்க, “மாணவனா தன்னோட ஆசிரியரை உயர்வா நினைக்கணும், அப்போதான் வாழ்க்கை நல்லாயிருக்கும்... அதனால்தான் சொன்னேன்... உன்மேல இருக்கிற அக்கறை மட்டும்தான்...” என அவராகவே முடித்துவிட்டார்.

“நீங்க இவ்ளோ தூரம் என்மேல அக்கறையெடுத்து சொல்றதுனால நானும் உங்ககிட்டே ஒண்ணு சொல்றேன், சார்...” எனத் தயங்கியவன், “எனக்கு கல்யாணமாகிடுச்சி...” என போட்டுடைத்துவிட, “என்னப்பா சொல்ற?” என கண்களை அகலவிரித்தார் லோகநாதன்.

 காதல் செலவு - தொடரும்...

அடுத்த அத்தியாயம் 

Reactions

Post a Comment

4 Comments

  1. Superb
    Raangi 😍😍😍😍

    ReplyDelete
  2. ராங்கிக்கு ஏற்ற மன்மதன் தான்... 😂🥺

    ReplyDelete