முந்தைய அத்தியாயத்தை வாசிக்க....
மீதமிருந்தது காதல் – 3
கணிதப் பேராசிரியை தேவி மூவரையும் வெளியே செல்லுமாறு பணித்ததும், “ப்ரோ... வாங்க...” என அரவிந்தும் ஆதித்யாவும் சரண்ராஜை கெஞ்சி, வெளியே அழைத்து வந்தனர்.
“நீங்க ஏன்டா எப்பவும் என்னையே அமைதியாக்குறீங்க? நாம
அப்படி என்ன பண்ணிட்டோம்? வேணும்ன்னே டார்கெட் பண்ற மாதிரி தோணலையா?” என சரண்
அவர்களிடம் சீற, “ஏனோ அவங்களுக்கு உன்னை பிடிக்கலைன்னு நினைக்கிறேன்...” என்றான்
ஆதித்யா.
“அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? எப்பவும் வெளியே
அனுப்பிட்டா முடிஞ்சதா? இந்த முறை நான் சும்மா இருக்கப் போறதில்ல... கண்டிப்பா
டேரக்டர்கிட்டே கம்ப்ளெயின்ட் பண்ணத்தான் போறேன்...” என சரண்ராஜ்
அடுத்தகட்டத்திற்கு ஆயத்தமாக,
“ப்ரோ... தேவி மேம் பாவம்...” என உதடுபிதுக்கினான் அரவிந்த்.
“என்ன... பார்க்கிறதுக்கு உன் அக்கா மாதிரி இருக்கிறதால
உனக்கு அவங்க மேல சாஃப்ட் கார்னரா?” என இவன் அவனை முறைக்க, “என்னவோ பண்ணு ப்ரோ...” என
விட்டுவிட்டனர் தோழர்கள்.
அந்த பாடவேளை முடித்துவிட்டு
வகுப்பறையைவிட்டு வெளியே வந்த தேவி, “ஃபர்ஸ்ட் அவர் ஆப்சென்ட்ன்னா இன்னைக்கு முழுக்க ஆப்சென்ட்தான்... தெரியுமா
உங்களுக்கு?” என ஒற்றைப் புருவமுயர்த்தி வினவ, “ஸாரி மேம்... நீங்க உள்ளே வந்ததை
கவனிக்கல... அதனால்தான் பேசிட்டு இருந்துட்டோம்... இனி இது நடக்காது...” என
தாங்களாகவே கோரினர் அரவிந்தும் ஆதித்யாவும்.
அவர் சரணிடமிருந்து இதை
எதிர்பார்த்திருந்திருப்பார் போலும். எள்ளலுடன் அவனைப் பார்க்க, அவனோ பெரிதாக அலட்டிக்கொள்ளாமல்
வகுப்பறைக்குள் சென்றுவிட்டான்.
அவனது நடவடிக்கைக்காக தோழர்கள்
இருவரையும் முறைத்தவர், “எப்படி அட்டென்டன்ஸ் வாங்குறான்னு பார்க்கிறேன்...” என்கிற ரீதியில்
அவ்விடமிருந்து சென்றுவிட்டார்.
அவனைத் தொடர்ந்து உள்ளே வந்த
தோழர்கள், “ண்ணா...
நீ பண்றது உனக்கே நல்லாயிருக்கா? தேவி மேம் செம கோவத்துல இருக்கிறாங்க.. ப்ரேக்ல
போய் ஸாரி கேளுண்ணா...” என அவனிடம் அறிவுறுத்த, “அதெல்லாம் கேக்க வேணாம் ப்ரோ... அப்படியென்ன
பெருசா தப்பு பண்ணிட்டீங்க? ஒருநாள் அவங்க நடத்தப் போற விஷயத்தை அவங்களைவிட ஈஸியா
எங்களுக்கு சொல்லிக் கொடுத்தீங்க, இன்னொரு நாள் அவங்ககிட்டே பதில் சொல்ல முடியாத அளவுக்கு டவுட் கேட்டீங்க!
நியாயமா பார்த்தா இதை அவங்க அப்ரிசியேட் பண்ணத்தான் செய்யணும்... அதைவிட்டுட்டு
டார்கெட் பண்ணினா தப்பு! ஆப்சென்ட் போட்டா போடட்டும்... பார்த்துக்கலாம்...” என
முன்பெஞ்சு தோழன் பேசினான்.
“டேய்... நீ வேற... சும்மா
இருடா...” என அவனை அடக்கிய அரவிந்த், “இப்போதான் உனக்கு கல்யாணமாகி இருக்குது... கொஞ்சம்
அமைதியா இருண்ணா... டிகிரி வாங்கினாத்தானே அண்ணியை நல்லா பார்த்துக்க முடியும்...”
என சரண்ராஜை அமைதிப்படுத்த முற்பட, “இந்த டிகிரி இல்லாமலே இலட்சங்கள்ல சம்பாதிச்சிட்டு இருந்தேன்டா...
போரடிச்சதினாலேதான் MBA சேர்ந்தேன்... எனக்கென்ன தலையெழுத்தா இப்படில்லாம் திட்டு வாங்கணும்ன்னு...
இந்தம்மா இவ்ளோ டார்கெட் பண்ணினாலும் இன்டர்னல் ஃபுல்மார்க்தானே?! எந்த
பாடத்திலேயாவது என்னை யாரும் அடிச்சிக்க முடியுமா? படிப்புல கேப்ன்னதும் ஏதோ ABCD தெரியாதவன் மாதிரி ட்ரீட்
பண்றாங்க?” என ஆதங்கப்பட்டான் அவன்.
“அவங்களுக்கு உன்னைப் பத்தி
தெரியாதுன்னு நினைக்கிறேன்ண்ணா... விடு... நம்ம மேம்தானே?!” என ஆதித்யாவும்
அரவிந்தும் பாவமாக உதடுபிதுக்க, “உங்க ரெண்டு பேருக்காகவும்தான் ஸாரி கேட்கப் போறேன்...” என ஒருவழியாக
ஒப்புக்கொண்டான்.
இடைவேளையில் தேவியிடம் மன்னிப்பு
கேட்பதற்காக கணிதத்துறைக்குள்
நுழைகையிலேயே சரண்ராஜிற்கு ஏகபோக வரவேற்புதான். “அடடே! சரண்... இந்த இயர் PG சேர்ந்திருக்கிறதா சொன்னாங்க...
நல்லா படிக்கிறியா? அவ்ளோ நல்ல ஜாப்ல உனக்கு போரடிச்சிடுச்சா? உன் பேரன்ட்ஸ்
எதுவும் சொல்லலையா? காலேஜ் மேல இருக்கிற மரியாதையில திரும்பவும் நம்ம காலேஜிலேயே
சேர்ந்திருக்கிற பார்த்தியா? அதுதான்ப்பா உன்னோட நல்ல குணம்...” என்னும்
புகழுரைகள் தனது இருக்கையில் அமர்ந்திருந்த தேவிக்கு நன்றாகவே கேட்டது.
இருப்பினும் கேளாதவர் போல அமர்ந்திருந்தார்.
“என்னப்பா இந்த பக்கம்?” என
பேராசிரியர்களுள் ஒருவர் வினவ, “தேவி மேமை பார்க்க வந்தேன்...” என்றான் பணிவுடன். “மேத்ஸ்ல டவுட்டா? உனக்கு
டவுட் வராதே!” என மற்றொருவர் கேட்க, “இல்ல... கிளாஸைவிட்டு வெளியே அனுப்பிட்டாங்க... அதான் அட்டென்டன்ஸ்க்கு ஸாரி
கேட்க வந்தேன்...” என அவன் தெரிவித்தது அனைவருக்கும் வியப்பாக இருந்தது.
“உன்னை வெளியே அனுப்பிட்டாங்களா?”
என்கிற ரீதியில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். “சரிப்பா.. போய் பேசு...” என
பணிக்க, தேவியின்
முன்னால் சென்று நின்றவன், “மேம்...” என்றான் எரிச்சலை விழுங்கியவாறே.
நிமிர்ந்து பார்த்தவர், ஏதும்
நடவாததைப் போல “சொல்லுங்கப்பா... என்ன வேணும்?” என வினவ, “ஸாரி மேம்... இனி இப்படி
நடக்காது...” என பெரிதாக வருந்தாமல் சொல்லளவில் உரைத்தான்.
“நான் உள்ளே வர்றேன்... அதைகூட
கவனிக்காம அப்படி என்ன பேச்சு?” என தேவி சற்றே கறாராக கேட்க, சூழல் கருதி, “இனி அப்படி நடக்காது... ஸாரி
மேம்...” என மீண்டும் உரைத்தான்.
என்ன நினைத்தாரோ, “ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்
வார்னிங்... போங்க...” என அவனை அனுப்பிவிட்டார். அவன் சென்ற பிற்பாடு தேவியிடம்
வந்தார் மூத்த பேராசிரியர்களுள் ஒருவர்.
“சரண் ஏதாவது பிரச்சினை பண்றானா?”
என அவர் தண்மையாக வினவ, “கிளாஸ்ல அப்பப்போ பசங்களோட பேசிட்டு இருப்பார்....” என பதில்தந்தார் தேவி.
“நீங்க தப்பா நினைச்சுக்கலைன்னா
நான் ஒண்ணு சொல்லலாமா?” என அவர் அனுமதிகோர, “ஹையோ சார்... இதென்ன கேள்வி?
தாராளமா கேளுங்க...” என்றார்.
“நீங்க புதுசா ஜாயின்
பண்ணியிருக்கிறதால உங்களுக்கு சரணை பத்தி தெரியாம இருக்கலாம்... அவன் UG பண்றப்போ அவனுக்கு M1 அண்ட் M2 ஹான்டில் பண்ணினது நான்தான்...
அந்த வகையில எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்... கேல்குலேஷன் அண்ட் கோடிங்ல சரணை மிஞ்ச
ஆளே கிடையாது... மேத்ஸ் இன்டர்னல்ல எப்பவும் ஃபுல்மார்க்தான்... செமஸ்டர்ல கேக்கவா
வேணும்? டாப்பர்தான்... டென்த், ட்வெல்த்ன்னு ரெண்டிலேயும் சென்டம்... JEEகூட கிளியர் பண்ணினான்னு அவங்க
அம்மா சொன்னாங்க... ஃப்ரெண்ட்ஸ் இங்கே சேர்ந்ததால தானும் வந்துட்டானாம்...
இல்லைன்னா IIT NITன்னு சேர்ந்து பெருசா சாதிச்சிருப்பான்... நாம கிளாஸ் எடுக்கும் போது
ஸ்டூடன்ட்ஸ் பேசினா எரிச்சல்வரும்தான்... நானுமே ஆரம்பத்தில் ரெண்டு மூணுதடவை
திட்டியிருக்கிறேன்.. அதுக்கு அப்புறமாத்தான் தெரிஞ்சது, நாம சொல்றதுக்கு முன்னாடியே இவன்
முடிச்சிட்டு ஆன்சர் கேட்பான்... அதுவும் ஈஸி ஸ்டெப்ஸ்ல... அப்புறம்தான் என்கரேஜ்
பண்ணத் தொடங்கினேன்... அவன் இங்கே UG பண்ணும்போது எல்லாருக்குமே அவனைத் தெரியும்... டான்ஸ்,
ஸ்போர்ட்ஸ்ன்னு எக்ஸ்ட்ரா-கரிக்குலர்ல கூட பின்னிடுவான்... நம்ம காலேஜ்லயே ஹைCTCல பிளேஸ் ஆனது சரண்தான்... பேரன்ட்ஸ்
ரெண்டு பேரும் பேங்க் மேனேஜர்ஸ், வீட்டுக்கு ஒரே பையன்ங்கறதால பணத்தைப் பத்தின கவலையும் வேலையைப் பத்தின
சீரியஸ்நெஸ்ம் இல்லாததால கேம்பஸ் இன்டர்வியூல செலக்ட் ஆகியும் ஜாயின்
பண்ணமாட்டேன்னு சொன்னான்... நம்ம ஃபேகல்டீஸ்தான் கம்பெல் பண்ணி ஜாயின் பண்ண
சொன்னோம்... அதுவுமே போரடிச்சிடுச்சுன்னு இப்ப திரும்பவும் MBA சேர்ந்திருக்கிறான்... நிறைய
திறமை இருக்குது அவன்கிட்டே... ஒருவேளை கிளாஸ் சமயத்திலே இதைத்தான் பேசியிருப்பான்னு
நினைக்கிறேன்... நான் சொல்றது ஒருவகையில் அதிகப்பிரசங்கித்தனம்தான் இருந்தாலும்
எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சொல்றேன்... பார்த்துக்கோங்க மேம்...” என மூத்தப்
பேராசிரியர் ஒருவர் எடுத்தியம்ப, “ஓகே சார்...” என முடித்துவிட்டார் தேவி.
மாலையில்...
தான் தங்கியிருக்கும் பேச்சிலர்
அறைக்குள் சோர்வாக நுழைந்த சரண்ராஜ் உடையை மாற்றிக்கொள்ளாமலேயே கட்டிலில்
விழுந்தான். சில மணிநேரம் துயிலில் கலந்து சோர்வு நீங்கப் பெற்றவன் அலைபேசியை
எடுத்துப் பார்க்க அவனது அன்னையிடமிருந்து தவறிய அழைப்புகள் வந்திருந்தன. உடன்
அவனது மாமியாரும் அழைத்திருக்க, கண்களைக் கசக்கியவாறே அழைப்பை மேற்கொண்டான்.
“தம்பி... நான் சரண்யாவோட அம்மா
பேசுறேன்ப்பா... காலேஜ் போயிட்டு வந்துட்டீங்களா? ரெஸ்ட் எடுத்துட்டு
இருந்தீங்களோ? தொந்தரவு பண்ணிட்டேனா?” என அவளது அன்னை சகுந்தலா விசாரிக்க, “தூங்கி எழுந்துட்டேன் ஆன்ட்டி...
தொந்தரவுலாம் இல்ல...” என்றான்.
“ஏன்ப்பா ஆன்ட்டின்னு பொதுப்படையா
சொல்றீங்க? அத்தைன்னு சொல்லலாமே!” என அவர் சற்றே இறைஞ்சுவதைப் போல பேச, இவனுக்கு சங்கடமாகிவிட்டது.
“இல்ல... வந்து... திடீர்ன்னு
பேசினீங்களா? அதனாலதான்... மத்தபடி எதுவுமில்ல அத்தை... நீங்க வேலை முடிச்சு
வந்துட்டீங்களா? சாப்பிட்டீங்களா? சதீஷ் கால் பண்ணினானா?” என இயல்பாக விசாரிக்க
விழைந்தான்.
“சாப்பிட்டேன்ப்பா... அவன்
அதிகாலையில்தான் பேசுவான்.. நீங்க டின்னர் சாப்பிட்டீங்களா? இல்ல இனிதான்
சமைக்கணுமா? நான் வேணும்ன்னா சாருவை வரசொல்லவா?” என அவர் முடிப்பதற்குள், “ஹையோ அத்தை... வேணாம்...” என
குறுக்கிட்டான்.
“ஏன்ப்பா... அவ வந்தா உங்களுக்கு
தொந்தரவா இருக்கும்ன்னு யோசிக்கிறீங்களா?”
“அப்படியெல்லாம் இல்ல அத்தை...
வேலைக்குப் போயிட்டு வந்து டயர்டா இருப்பா.. அதான் தொந்தரவு பண்ண வேணாமேன்னு
சொன்னேன்...”
“கட்டின புருஷனுக்கு சமைச்சு
கொடுக்கிறதிலே என்ன தொந்தரவுப்பா? இயல்பான வகையில் உங்க கல்யாணம் நடந்திருந்தா
இந்நேரம் அவதானே உங்களுக்கு சமைச்சு பரிமாறியிருக்கணும்?”
“அது சரிதான் அத்தை... ஆனா
அவளுக்கும் டைம் வேணும்ல... எடுத்த எடுப்பிலேயே இவ்ளோ பொறுப்புகளையும் தலையில்
ஏத்தி வைக்கக்கூடாதுல்ல.. கொஞ்ச நாள் போகட்டும் அத்தை! அவளாவே எங்களுக்கான
விஷயங்களை யோசிச்சு செய்யுறதுக்கு முன்வருவா... எல்லாமே தானாகவே நடக்கட்டும்...
நீங்க அவளை தொந்தரவு பண்ணாதீங்க... ப்ளீஸ்...” என வெகுசிரமப்பட்டு பேசினான்.
“சரிப்பா... அடிக்கடி பார்த்து, பேசிக்கோங்க.. அப்போதான் நல்ல
முடிவா கிடைக்கும்...” என்றவர் அழைப்பைத் துண்டித்துவிட, மறுநிமிடமே அழைத்துவிட்டார் அவனது
அன்னை அகல்யா.
“மகனே! என்னடா பண்ற? உன்
பொண்டாட்டியோட பேசிட்டு இருந்தியா? இவ்ளோ நேரம் பிஸின்னு வந்துச்சு...” என அவர்
கேலியுடன் விசாரிக்க, “ஆமா
அவகிட்டே கடலை போடறாங்க... எனக்கு வேற வேலையை இல்லை பாருங்க...” என மனதிற்குள்
நினைத்தவன்,
“இல்லம்மா.. சகுந்தலா அத்தைதான் பேசிட்டு இருந்தாங்க...” என்றான்.
“பாருடா... மருமகன் மேல எவ்ளோ
பாசம்...” என சிலாகித்தவர், “சாப்பிட்டியா? சாருவை வரசொல்லவா?” என வினவ, “ம்மா... நீயும் ஆரம்பிக்காதே! இப்போதான்
லென்த்தி டயலாக் பேசி, அவங்களை
கன்வின்ஸ் பண்ணியிருக்கிறேன்...” என சலித்துக் கொண்டான் சரண்.
“என்னவாம்?”
“டைம் கொடுங்கம்மா... கம்பெல் பண்ணாதீங்க...
எங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் ஸ்பேஸ் தேவைப்படுது..”
“டேய்... நாங்க என்னவோ அடுத்த
பத்தாவது மாசத்திலேயே பேரக்குழந்தையை பெத்துக் கொடுன்னு கேட்டமாதிரி பேசுற?
ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருங்கன்னுதானே சொல்ல வந்தேன்...”
“ஓ.. உனக்கு பேரக்குழந்தை கேக்கற
ஆசை வேற இருக்குதா? ம்ம்மோவ்... அவ்ளோதான்... சொல்லிட்டேன்...”
“இப்போதைக்கு கேக்க மாட்டேன்... நீ
டிகிரி முடிச்சதும் கேட்பேன்... அதுவரைக்கும் நீயும் சாருவும் எவ்ளோ லவ் பண்ண
முடியுமோ அவ்ளோ லவ் பண்ணிக்கோங்க...” என அவர் பேசிக்கொண்டிருக்க, “அவகிட்டே மனுஷன் பேசவே
முடியாது... இதிலே லவ்வு வேற பண்றாங்களாம் லவ்வு...” என அவனது உள்மனம் கேலிசெய்து
கொண்டிருந்தது.
“சரிம்மா.. உன் லவ்வர் என்ன
பண்றாரு?” என தனது குறித்து விசாரிக்க, “டேய்... அவர் உன் அப்பாடா...” என நினைவுபடுத்தினார்
அகல்யா.
“அவர்கிட்டே போய் என் அப்பான்னு
சொல்றது பிடிச்சிருக்குதா இல்ல உன்னோட புருஷன்னு சொல்றது பிடிச்சிருக்குதான்னு
கேளு... அகல்யாவின் காதலன்னு சொன்னாதான் கெத்தா இருக்குதுன்னு சொல்லுவாரு...” என
கேலிசெய்தான் சரண்ராஜ்.
“போதும்டா... நாங்க லவ் பண்ணி,
கல்யாணம் பண்ணி, இத்தனை
வருஷம் வாழ்ந்து முடிச்சாச்சு... இனி லவ் பண்ணி, குடும்பம் நடத்த வேண்டியது
நீங்கதான்...” என அகல்யா மீண்டும் அந்தப் புள்ளியிலேயே வந்து நிற்க, “சரிம்மா... எனக்கு
கல்யாணமாகிடுச்சுன்னு ஞாபகம் இருக்குது...” என சலித்துக் கொண்டான்.
“சரண்... உனக்கும் சரண்யாவுக்கும்
சின்ன வயசிலேயிருந்து எவ்ளோ சண்டை வரும், எப்படியெல்லாம் ரெண்டு பேரும் போட்டிபோட்டு படிப்பீங்கன்னு
எங்களுக்கு நல்லாவே தெரியும்.. அதனாலதான் சொல்றேன், ஈகோவை விட்டுட்டு லவ்
பண்ணுங்கன்னு... இப்போதான் ரெண்டு பேரும் வேறவேற ஃபீல்ட்ல ஓடிட்டு
இருக்கிறீங்கள்ல...” என எடுத்துரைத்தவர், அத்துடன் நிறுத்தாமல், “சாருவோட நம்பர் இருக்குதா இல்லை
நான் அனுப்பட்டுமா?” என விசாரித்தார்.
“மிசஸ்.ராஜாங்கம்... நீங்க லிஸ்ட்
அவுட் பண்ணித்தான் எல்லாத்தையும் ரியலைஸ் பண்ணனும்ன்னு இல்ல... அதெல்லாம் நானும்
என் பொண்டாட்டியும் பார்த்துக்கறோம்...” என இவன் பல நூறு எட்டுகளை அசால்டாக
எடுத்து வைத்துப் பேச,
“அடப்பாவி!” என்றிருந்தது அவருக்கு.
“அப்போ சரிடா... இவ்ளோ தூரம்
பேசுறன்னா ஓரளவுக்கு ரெண்டு பேருக்கும் செட்டாகிருச்சுன்னுதான் அர்த்தம்...” என
மனநிறைவுடன் பேசியவர், “இரு...
அப்பாகிட்டே கொடுக்கறேன்...” என தன் கணவனிடம் கொடுத்தார்.
இவ்வாறாக உரையாடல்
நீண்டுகொண்டிருக்க, சரண்ராஜ்
தங்கியிருக்கும் இல்லத்தின் அறைக்கதவு தட்டப்படும் ஓசைகேட்டது. “ஒன்பது
மணியாச்சுது... இந்நேரம் யாரு தட்டுறாங்க?” என்னும் சிந்தனையுடனே கதவைத் திறக்க, முறைத்தவாறே நின்றிருந்தாள்
சரண்யா.
காதல் செலவு தொடரும்...
எத்தனை பேர் வாசிக்கிறீங்கன்னு தெரியல டியர்ஸ்... அதனாலதான் பத்து எபிசோட் டைப் பண்ணியிருந்தாலும் போஸ்ட் பண்றதுக்கு யோசனையா இருந்துச்சு... வாசிக்கிறவங்க ஒரு தம்ப்ஸ் அப் டைப் பண்ணினாலும் கொஞ்சம் மோட்டிவேஷனா இருக்கும்... கீப் சப்போர்ட்டிங் டியர்ஸ்...

4 Comments
Super dr ❤️❤️❤️
ReplyDeleteSuper next ud waiting sis evlo days romba miss panitom so sikkarama podunga. ❤️❤️❤️❤️
ReplyDelete👍
ReplyDeleteOh no pls continue ah post pannunga onnga writing padikka three years ah Wait pannittu irrukken onnga words mathiri yarodathum ennaku attach aanathey illa pls sis Kandippa post pannunga
ReplyDeleteBy the way this episode also beautiful. Two three days ah post podathathu kastama irrunthuchu🥲